ஞாயிறு, 24 ஜனவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 263

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – நாற்பத்தேழாவது அத்தியாயம்

(கோபிகைகளுக்கும், உத்தவனுக்கும் நடந்த ஸம்வாதத்தையும் (உரையாடலையும்), அவர்களுக்கு ஸ்ரீக்ருஷ்ணனிடத்திலுள்ள ப்ரேமாதியத்தையும் (அளவு கடந்த அன்பையும்) வர்ணித்தல்).

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- நீண்ட புஜ தண்டங்கள் (கைகள்) உடையவனும், அப்போதலர்ந்த செந்தாமரை இதழ் போன்ற கண்களுடையவனும், பொன்னிறமான ஆடை உடுத்தியிருப்பவனும், தாமரை மலர் மாலை அணிந்தவனும், தாமரை மலர் போல் திகழ்கின்ற முகமுடையவனும், நிர்மலமாய் விளங்குகின்ற குண்டலங்களுடையவனும், ஸ்ரீக்ருஷ்ணனுடைய ப்ருத்யனுமாகிய (சேவகனுமாகிய) அவ்வுத்தவனைக் கண்டு, பரிசுத்தமான புன்னகையுடைய கோபிகைகள் அனைவரும் “அழகிய காட்சியுடையவனும், ஸ்ரீக்ருஷ்ணனுடைய வேஷம் போன்ற வேஷமுடையவனுமாகிய இப்புருஷன் யாவன்? எங்கிருந்து வந்தான்? யாருடையவன்” என்று மொழிந்து கொண்டு, ஸ்ரீக்ருஷ்ணனுடைய பாதார விந்தங்களையே பணியும் தன்மையனான அவ்வுத்தவனை ஆவலுடன் சூழ்ந்துகொண்டார்கள். அந்தக் கோபிகைகள், வெட்கத்தோடு கூடின மந்தஹாஸத்தினாலும் (புன்னகையாலும்), கண்ணோக்கத்தினாலும், இனிய உரையினாலும், அர்க்யம் முதலிய மற்றும் பல உபசாரங்களாலும், அவ்வுத்தவனை நன்றாக அர்ச்சித்து, ஏகாந்தத்தில் (தனி இடத்தில்) ஆஸனம் அளித்து, ஸுகமாக உட்காரச்செய்து, ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு வல்லபனான ஸ்ரீக்ருஷ்ணனிடத்தினின்று ஸமாசாரம் (செய்தி) கொண்டு வந்தவனென்று தெரிந்துகொண்டு, நமஸ்காரம் செய்து, வணக்கத்துடன் மேல்வருமாறு வினவினார்கள்.

கோபிகைகள் சொல்லுகிறார்கள்:- நீ, யாதவர்களுக்கு ப்ரபுவாகிய ஸ்ரீக்ருஷ்ணனுடைய ப்ருத்யனென்றும் (சேவகன் என்றும்), அவனிடத்தினின்று ஸமாசாரம் (செய்தி) கொண்டு வந்தவனென்றும் நாங்கள் தெரிந்து கொண்டோம். ப்ரபுவாகிய ஸ்ரீக்ருஷ்ணன், தாய், தந்தைகளான யசோதா, நந்தர்களுக்கு ப்ரியம் செய்ய விரும்பி, உன்னை இவ்விடம் அனுப்பினான். இல்லாத பக்ஷத்தில், அவாப்த ஸமஸ்த காமனாகிய (விரும்பியது அனைத்தும் அடையப்பெற்றவனான) அந்த ஸ்ரீக்ருஷ்ணனுக்கு நிஹீனமாகிய (மிகவும் தாழ்ந்ததான) இந்தக் கோகுலத்தில் நினைக்கத்தகுந்த வஸ்துவொன்று இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. தாய், தந்தை முதலிய பந்துக்களிடத்தில் உண்டாகும் ஸ்னேஹமாகிற பாசத்தை எத்தகைய முனிவனாலும் கூடத் துறக்க முடியாதல்லவா? (ஆகையால் அவன் தாய் தந்தைகளிடம் நல்வார்த்தை சொல்லும் பொருட்டே உன்னை அனுப்பியிருக்க வேண்டுமன்றி வேறில்லை). 

பந்துக்களைத் தவிர மற்றவரிடத்தில் உண்டாகும் ஸ்னேஹம் (நட்பு, ப்ரியம், பாசம்) ப்ரயோஜனத்தைப் பற்றினது (ஒரு பலனைக் கருதி ஏற்படுவது). அந்த ப்ரயோஜனம் (பலன்) கைகூடும் வரையில் மாத்ரமே ஸ்னேஹித்திருப்பது (நட்புடன் இருப்பது) போலப் பாவிப்பார்கள். பரபுருஷனை (கணவனைத் தவிர வேறு ஆண்மகனைப்) புணரும் தன்மையுள்ள பெண்களிடத்தில் புருஷர்களின் ஸ்னேஹம் (நட்பு, ப்ரியம், பாசம்) போலவும், தேன் நிறைந்த புஷ்பங்களில் வண்டுகள் செய்யும் ஸ்னேஹம் (நட்பு, ப்ரியம், பாசம்) போலவும், ப்ரயோஜனத்தைப் பற்றி (ஒரு பலனைக் கருதி) வரும் ஸ்னேஹம் (நட்பு, ப்ரியம், பாசம்) உண்மையன்று. பணமில்லாதவனை விலைமாதர்களும் (வேசிகளும்), ரக்ஷிக்கும் திறமையற்ற மன்னவனை ப்ரஜைகளும், வித்யையைக் கற்ற சிஷ்யர்கள் ஆசார்யனையும், தக்ஷிணை கொடுத்த யஜமானனை ருத்விக்குகளும், பழங்கள் மாறின வ்ருக்ஷத்தைப் (மரத்தை) பக்ஷிகளும், போஜனம் (உணவு) அளித்தவனுடைய க்ருஹத்தை அதைப் புசித்த அதிதிகளும், நெருப்பு பற்றி எரிந்த அரண்யத்தை (காட்டை) ம்ருகங்களும் (விலங்குகளும்), அன்புடன் தொடர்கின்ற மாதைப் (பெண்ணை) புணர்ச்சி கூடப் பெற்ற (சேர்ந்து அனுபவித்த) கள்ளக் காதலனும் துறக்கின்றார்களல்லவா? ஆகையால், ப்ரயோஜனத்தைப் பற்றி (ஒரு பலனைக் கருதி) வரும் ஸ்னேஹம் (நட்பு, ப்ரியம், பாசம்) ப்ரயோஜனம் (பலன்) கைகூடும் வரையில் மாத்ரமே இருக்குமேயன்றி அதற்குமேல் தொடராது.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸ்ரீக்ருஷ்ணனுடைய தூதனாகிய உத்தவன், கோகுலத்திற்குப் போயிருக்கையில், கோபிகைகள் ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் ஆழ்ந்த வாக்கு, காயம் (உடல்), மனம் என்கிற மூன்று கரணங்கள் (புலன்கள்) உடையவர்களாகி, மஹானுபாவனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன் கைசோர (குழந்தைப் பருவம்) பால்யங்களில் (இளம் பருவத்தில்) நடத்தின செயல்களை அடிக்கடி நினைத்து, வெட்கத்தைத் துறந்து, கண்ணீர் பெருக்கிக் கொண்டு, உலக ரீதிகளெல்லாம் நழுவப்பெற்று, இவ்வாறு வினவினார்கள். அவர்களில் ஒரு கோபிகை, ஸ்ரீக்ருஷ்ணனுடைய கலவியை (சேர்த்தியை) நினைத்துக் கொண்டே, ஒரு மதுகரத்தைக் (வண்டைக்) கண்டு, அதை ஸ்ரீக்ருஷ்ணன் அனுப்பின தூதனாகப் பாவித்து, மொழிந்தாள். (வண்டைக் குறித்துச் சொல்வதுபோல, ஸ்ரீக்ருஷ்ணனுடைய தூதனாகிய உத்தவனையே உத்தேசித்து மொழிந்தாள்).

கோபிகை சொல்லுகிறாள்:- ஓ மதுகரமே (வண்டே)! துஷ்டனாகிய (கொடியவனான, எங்களை ஏமாற்றியவனான) ஸ்ரீக்ருஷ்ணனுடைய பந்துவே! சக்களத்தியின் (மதுரையில் வசிக்கும், ஸ்ரீக்ருஷ்ணனுடைய மற்ற ப்ரியமான பெண்களின்) கொங்கைகளில் உறைந்த பூமாலையின் குங்குமங்கள் படியப்பெற்ற மோவாய் மயிர்களால் என் பாதத்தை ஸ்பர்சிக்க வேண்டாம். (என்னை நல்ல வார்த்தை சொல்ல வேண்டாம். நமஸ்காரம் செய்யவேண்டாம்). யாதவர்களுக்கு ப்ரபுவாகிய ஸ்ரீக்ருஷ்ணன், எங்கள் சக்களத்திகளை (ஸ்ரீக்ருஷ்ணனுடைய மற்ற ப்ரியமான பெண்களை) நல்வார்த்தை சொல்லி, அவர்களுடைய அனுக்ரஹத்தையே (அன்பையே) பெறுவானாக. எங்களை நல்வார்த்தை சொல்லி, எங்கள் அனுக்ரஹம் (பரிவு, அங்கீகாரம்) பெற வேண்டிய நிலைமையில் அவன் இல்லை. ஏனென்றால், அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய ஸ்னேஹம் (நட்பு, ப்ரியம், பாசம்), பெரியோர்களின் ஸபையில் நிந்திக்கத்தக்க நிலைமையில் அல்லவோ இருக்கின்றது. முன்பு, தான் ப்ரேமத்துடன் அனுபவித்த மடந்தையர்களைத் துறந்து, வேறு மடந்தையர்களைத் தொடர்கின்ற அம்மஹானுபாவனுக்குத் தேன் பருகின புஷ்பங்களைத் துறந்து வேறு புஷ்பங்களைத் தேடும் தன்மையுடைய நீ தூதாக வந்தமை யுக்தமாகவே (ஸரியாகவே) இருக்கின்றது. 

தாபத்ரயத்தையும் {ஆத்யாத்மிகம் (சரீரத்திற்கு ஏற்படும் தலைவலி, சளி முதலிய நோய்கள் மற்றும் மன நோய்களான காமம், கோபம், பயம் முதலியன); ஆதிதெய்விகம் (குளிர், சூடு, மழை முதலியவற்றால் ஏற்படும் துன்பங்கள்); ஆதிபௌதிகம் (ம்ருகம், பறவை, மனிதர் முதலியவற்றால் வரும் துன்பங்கள்) என்ற மூன்று வகையான துன்பங்களான தாபத்ரயத்தையும்} போக்கி, மதி மயங்கச் செய்ய வல்லதும், தனக்கு அஸாதாரணமாயிருப்பதுமாகிய தன் வாயமுதத்தை எங்களுக்கு ஒருகால் பருகும்படி கொடுத்து, நீ தேனைப் பருகின பின்பு புஷ்பங்களைத் துறப்பது போல, அப்பொழுதே எங்களைத் துறந்தான். நீ அவனைப் போன்றவன். அவன் உன்னைப் போன்றவன். ஸ்வாமியும், ப்ருத்யனுமாகிய (சேவகனுமாகிய) உங்கள் தன்மை மிகவும் நன்றாக அமைந்திருக்கின்றது? ஆ! செய்த நன்றி அறியாத அவனுடைய பாதார விந்தத்தை ஸ்ரீமஹாலக்ஷ்மி எவ்வாறு பணிகின்றாள்? ஆம்; எனக்குத் தெரிந்தது. உத்தமச்லோகனாகிய (மிகுந்த பெருமை பொருந்தியவனான) அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய பொய் வார்த்தைகளால் மனம் பறியுண்டு அவன் கபடத்தை (சூழ்ச்சியை) அறியாமல் அவன் பாதார விந்தங்களைப் பணிந்து கொண்டிருக்கின்றாளன்றி வேறில்லை; இதென்ன வருத்தம்! நாங்களோவென்றால் அந்த ஸ்ரீ மஹாலக்ஷ்மியைப்போல ஒன்றும் தெரியாத மூடர்கள் அன்று. ஜங்காரஞ் செய்கின்ற (ஒலி எழுப்புகின்ற) அம்மதுகரத்தைப் (அந்த வண்டைப்) பார்த்து “நம்மை அருள் புரிவிக்கும் பொருட்டு ஸ்ரீக்ருஷ்ணனைப் பாடுகிறது” என்று நினைத்துச் சொல்லுகிறாள்.) 

வண்டே! க்ருஹமில்லாமல் இவ்வனத்தில் திரிந்து கொண்டிருக்கிற எங்களிடம் முன்பு பழகினவனான யதுக்களின் தலைவனைப் பற்றி ஏதுக்காகப் பாடுகின்றாய்? அதனால் உனக்கு ஒரு இஷ்டமும் ஸித்திக்காது. ஸ்ரீக்ருஷ்ணனுக்கு அன்பர்களும், அவனுடைய ஆலிங்கனத்தினால் கொங்கைகளின் நோய் தணியப் பெற்றவர்களுமாகிய (மதுராப்) பட்டணத்து மடந்தையர்களின் முன்பே சென்று அவனுடைய செய்தியைப் பாடுவாயாக. ஸ்ரீக்ருஷ்ணனுக்கு இனியர்களாகிய அம்மடந்தையர்கள் உன்பாட்டைக் கேட்டு உன் இஷ்டத்தை நிறைவேற்றுவார்கள். “ஆமாம்; நீ சொல்லுவது வாஸ்தவமே (உண்மையே). (மதுராப்) பட்டணத்து மடந்தையர்கள் அவனுக்கு வசப்பட்டு, அவனுடைய ஆலிங்கனத்தினால் தம் கொங்கை நோய் (காதல் வருத்தம்) தீரப்பெறுவார்களாயின், அவர்கள் என்னிஷ்டத்தை நிறைவேற்றுவார்கள். அவர்கள், அவனுக்குக் கிடைப்பதே அரிதாயிருக்க மற்ற செய்தியைப் பற்றி விசாரம் (பேசுவது) என்ன?” என்கிறாயோ? சொல்லுகிறேன், கேள். 

அழகான கள்ளச்சிரிப்பும், புருவ நெரிப்பும் உடைய மஹானுபாவனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணனுக்கு, ஸ்வர்க்கத்திலாவது, பூமியிலாவது, பாதாளத்திலாவது எந்த ஸ்த்ரீகள்தான் கிடைக்க முடியாதவர்கள்? அவனுடைய புன்னகைக்கும், புருவ நெரிப்புக்கும் தோற்று ஸ்ரீமஹாலக்ஷ்மியும் கூட அவனுடைய பாதார விந்தங்களின் பராகத்தைப் (தூள்களைப்) பணிகின்றாள். நாங்கள் யாவர்? யாவருமல்லோம். அவனுக்கு உட்பட்டவர்களில் சேர்ந்தவரல்லோம். 

உத்தம ச்லோகனான (மிகுந்த பெருமை பொருந்தியவனான) அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய செய்தியை வெளியிடுகிற சப்தங்களை அவன் குணங்களுக்குத் தோற்று, மனம் வாடி, நிற்பவர்களிடம் கொண்டு போய்ப் பாட வேண்டுமேயன்றி, எங்கள் முன்பு பாடுவதில் உபயோகமில்லை. நாங்கள் அத்தகையர்களல்லோம். (தன் தலைக்கு அருகாமையில் வந்து, ஸஞ்சரிக்கின்ற அம்மதுகரத்தைப் (அந்த வண்டைப்) பார்த்து, “காதருகில் ரஹஸ்யம் சொல்ல வந்து உலாவுகிறது” என்று நினைத்துச் சொல்லுகிறாள்.) என் சிரத்தில் வைத்த உன் பாதத்தை எடு. முகுந்தனிடத்தினின்று கற்றுக் கொண்டு வந்த உன் செயல்களாலும், இனிய உரைகளாலும் இங்கு ஒரு ப்ரயோஜனமும் உனக்குக் கை கூடாது.  நல்வார்த்தை சொல்லுவதில் ஸமர்த்தனாகிய நீ சொல்லப் போகிறதெல்லாம் எனக்குத் தெரியும்.  ஆகையால், நீ ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. முகுந்தனை போலவே நீயும் நம்பத் தகுந்தவனல்லை. “அவன் என்ன அபராதம் செய்தான்” என்கிறாயோ; சொல்லுகிறேன் கேள். 

குழந்தைகளையும், கணவர்களையும் தர்மங்களால் ஸாதிக்கக்கூடிய மற்றுமுள்ள ஸ்வர்க்காதி லோகங்களையும் துறந்து வந்த எங்களை உதறி விட்டுப் போனானே. இதைவிட வேறு அபராதம் என்ன வேண்டும்! ஆகையால், இவன், செய்த நன்றியை அறிந்தவனல்லன்; க்ருதக்னன் (செய்நன்றி கொன்றவன்). ஆதலால், இவனுடன் ஸந்தி பண்ணிக்கொண்டு (நட்பு, ஸமாதானம் செய்து) எங்களுக்கு ஆக வேண்டியது என்ன இருக்கிறது? க்ருதக்னனோடு (செய்நன்றி கொன்றவனோடு) ஸந்தி (நட்பு, ஸமாதானம்) செய்யலாகாதல்லவா? செய்தாலும், இஷ்டம் கைகூடாதல்லவா? மற்றும், இவன் வேடன் போல் வஞ்சனை செய்து வாலியைக் கொன்றான். ஆகையால், இவன் வேடனுக்குள்ள கொடுமை, மன இரக்கமில்லாமை முதலிய குணங்களெல்லாம் அமைந்தவன். இவனை வேடனோடு ஒத்தவனென்றும் கூடச் சொல்லலாகாது. வேடனிடத்தில் இல்லாத கெட்ட குணம் கூட இவனிடத்தில் இருக்கின்றது.

வேடன் மாம்ஸத்தை விரும்பி ம்ருகங்களை வதிக்கின்றான். இவன் அப்படியன்று. வீணாகக் கொடுமையைக் காட்டுகிறான். மற்றும், இவன் ஸ்த்ரீயால் வெல்லப்பட்டவன். காம விகாரத்தினால் (காதல் கிளர்ச்சியால்) வருந்தி, தன்னிடம் வந்த சூர்ப்பணகையின் காது, மூக்குகளை அறுத்து, அவளை விரூபமாக்கினான் (அலங்கோலமாக்கினான்). மற்றும், இவன் வாயஸம் (காக்கை) போல் பலி சக்ரவர்த்தி செய்த பலியைப் பெற்றுக் கொண்டு, அவனைப் பாசங்களால் கட்டினான். ஆகையால், கரியனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணனோடு ஸ்னேஹம் (நட்பு, ப்ரியம், பாசம்) செய்தது போதும். “ஆனால் அவனை ஏன் நித்யம் பாடுகிறீர்கள்?” என்கிறாயோ? 

ஆயினும், அந்தக் கரியனுடைய கதையாகிற பொருள் துறக்க முடியாததாக இருக்கின்றது. இவ்வுலகத்தில் பல ஜனங்கள் அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய விளையாட்டு நடத்தையாகிற கர்ணாம்ருதத்தின் (செவிகளுக்கு அம்ருதத்தின்) திவலையை (சிறு துளியை) ஒருகால் பானம் செய்து (அருந்தி), அதனால் ராகம், த்வேஷம் முதலிய (விருப்பு, வெறுப்பு முதலிய) த்வந்த தர்மங்கள் (இரட்டைகள்) கழியப் பெற்று, அசேதனம் போன்று, வருந்துகின்ற குடும்பத்தை அப்பொழுதே துறந்து, ஒரு இடத்தில் நிலை கொள்ளாமல் பறவைகள் போன்று சுற்றித்திரியும், மன இரக்கத்திற்கு உரிய, ஸன்யாஸிகளைப் போல் ப்ராணன்கள் (உயிர்) தங்குவதற்கு வேண்டிய ஆஹாரத்தை மாத்ரம் புசித்து, அவன் கதையைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள். மான் பேடுகள் (பெண் மான்கள்) வேடனுடைய பாட்டை உண்மையான கானம் என்று ப்ரமிப்பது போல, நாங்கள் குடிலனாகிய (கபடனான, வஞ்சகனான) அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய வார்த்தையை மெய்யென்று நம்பி, அவனுடைய நகம் பட்டதால் காம வேதனை உடையவர்களாகி, ஒருகால் அவனுடைய நட்பைக் கண்டோம். தூதனே! வேறு கதையைப் பேசுவாயாக. அவன் கதை வேண்டியதில்லை. (கொஞ்ச தூரம் போய்த் திரும்பி வருகின்ற அம்மதுகரத்தைப் (அந்த வண்டைப்) பார்த்து மீளவும் சொல்லுகிறாள்). 

எங்கள் அன்பனாகிய ஸ்ரீக்ருஷ்ணனுடைய நண்பனே! மீளவும் அந்த ஸ்ரீக்ருஷ்ணனால் அனுப்பப்பட்டு வந்தாயா என்ன? ஆனால், ஓ மதுகரமே (வண்டே)! நீ எனக்குப் பூஜிக்கத் தகுந்தவன்.  நீ எதையேனும் விரும்புவாயாயின், அதை வேண்டுவாயாக. ஸ்ரீ க்ருஷ்ணனுடைய கலவியை (சேர்த்தியை) எவ்விதத்திலும் துறக்க முடியாது. நாங்களோ இங்கு இருக்கின்றோம். அவனோ வெகு தூரத்தில் இருக்கின்றான். எங்களை எப்படி நீ அவனிடம் கொண்டு போய்ச் சேர்க்கப் போகின்றாய். ஸ்ரீமஹாலக்ஷ்மி மார்பில் இடம் கொடுக்கப் பெற்று, எப்பொழுதும் அவனோடு கூடவே இருக்கிறாளல்லவா? ஆகையால், அவனை ஒரு  நொடிப் பொழுதாயினும் துறந்திருக்க முடியாது. ஸ்ரீக்ருஷ்ணன், இப்பொழுது மதுராப்புரியில் இருக்கின்றானா? நல்லியற்கை உடையவனே! அவன் தாய், தந்தைகளையும், க்ருஹத்தையும், பந்துக்களையும், மற்ற இடையர்களையும் நினைக்கிறானா? தன் பணிக்காரிகளான எங்கள் வார்த்தையை எப்பொழுதாயினும் எடுக்கிறானா? அகில் போல் நல்ல மணமுடைய தன் புஜத்தை (கையை) எங்கள் சிரத்தில் எப்பொழுது வைக்கப் போகிறான்?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பிறகு உத்தவன், கோபிகைகள் ஸ்ரீக்ருஷ்ணனைக் காண வேண்டுமென்று பேராவலுற்றிருப்பதைக் கண்டு, அன்பனாகிய ஸ்ரீக்ருஷ்ணன் சொல்லியனுப்பின ஸமாசாரங்களால் (செய்திகளால்) அவர்களை ஸமாதானப்படுத்த முயன்று, மேல் வருமாறு கூறினான்.

உத்தவன் சொல்லுகிறான்:- நீங்கள் ப்ரயோஜனம் கைகூடப் பெற்றவர்கள்; நிச்சயம், நீங்கள் ஸமஸ்த லோகங்களாலும் பூஜிக்கப்பட்டவர்கள். ஏனென்றால், ஷாட்குண்ய பூர்ணனாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) ஸ்ரீவாஸுதேவனிடத்தில் உங்கள் மனம் இவ்வாறு ஊன்றியிருக்கின்றதல்லவா? தானம், வ்ரதம், தவம், ஹோமம், ஜபம், வேத அத்யயனம் (வேதம் கற்றல்), இந்த்ரிய நிக்ரஹம் (புலனடக்கம்) இவைகளாலும் மற்றும் பலவகை நன்னடத்தைகளாலுமல்லவோ ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் பக்தி ஸாதிக்க வேண்டும். இவ்வளவு செய்யினும், பக்தியைச் சாதிக்க முடிகிறதில்லை. 

மேலான பக்தி வர வேண்டுமென்றால், அது முனிவர்களுக்கும் கூடக் கிடைப்பதரிது. இப்படியிருக்க, நீங்கள் உத்தமச்லோகனான (மிகவும் பெருமை பொருந்திய) பகவானிடத்தில் அத்தகைய மேலான பக்தியை அனாயாஸமாக (எளிதாக) நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். இது உங்களுக்குப் பெரிய பாக்யத்தினால் நேர்பட்டதேயன்றி, வேறன்று. உங்கள் பக்தியைப்பற்றி எனக்கு மிகவும் ஆநந்தமாயிருக்கின்றது. நீங்கள் பிள்ளைகளையும், கணவர்களையும், தேஹங்களையும், பந்துக்களையும், வீடு, வாசல்களையும் துறந்து, ஸ்ரீக்ருஷ்ணனென்னும் பெயருடைய பரமபுருஷனைப் பாக்ய மஹிமையால் பற்றினீர்கள். ஆகையால், நீங்கள் ப்ரயோஜனம் கை கூடப் பெற்றவர்கள்; உலகங்களால் பூஜிக்கப்பட்டவர்கள். 

மிகுந்த மகிமையுடையவர்களே! உங்கள் பாக்யம் அளவற்றது. நீங்கள், இந்த்ரியங்களால் விளையும் அறிவுகளுக்கு விஷயமாகாத பரம புருஷனிடத்தில் மூன்று கரணங்களாலும் (உடல், வாக்கு, மனம் என்கிற மூன்று புலன்களாலும்) பக்தியைச் செய்தீர்கள். இதற்குக் காரணம், நீங்கள் பிரிந்திருக்கையே. (நீங்கள் அவனோடு கலந்திருப்பீர்களாயின், உங்களுக்கு இத்தகைய பக்தி உண்டாகாது.) உங்கள் பக்தியால், அந்த ஸ்ரீக்ருஷ்ணனை எனக்கு நினைவு மூட்டி, பெரிய அனுக்ரஹம் செய்தீர்கள். மங்கள ஸ்வபாவமுடையவர்களே! உங்கள் அன்பனாகிய ஸ்ரீ க்ருஷ்ணன் சொல்லியனுப்பின ஸமாசாரத்தைச் (செய்தியைச்) சொல்லுகிறேன்; கேட்பீர்களாக. அது உங்களுக்கு மிகவும் ஸுகத்தை விளக்கும். ப்ரபுவாகிய ஸ்ரீக்ருஷ்ணனுடைய ரஹஸ்யத்தை வெளியிடுபவனாகிய நான், அந்த ஸமாசாரத்தைச் (செய்தியைச்) சொல்லுவதற்காகவன்றோ இவ்விடம் வந்தேன்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- நான் ஸமஸ்த பூதங்களுக்கும் அந்தராத்மாவாகையால், உங்களுக்கு எப்பொழுதும் என்னோடு பிரிவு கிடையாது. ஆத்மாவைப் பிரிந்து சரீரம் தனியே இருப்பதுண்டோ? ஆகாயம், வாயு, அக்னி, ஜலம், பூமி என்னும் மஹா பூதங்கள் தங்கள் கார்யமாகிய தேவ, மனுஷ்யாதி சரீரங்களில் தொடர்ந்திருப்பது போல, நானும் ப்ராணிகளின் மனம், ப்ராணன், புத்தி, இந்திரியம், சப்தாதி விஷயம் (ஒலி, ஊறு, ஒளி, சுவை, நாற்றம்) ஆகிய இவற்றிற்கு ஆதாரமாயிருப்பவன். நான் மஹத்து முதல் பூமி வரையிலுள்ள அசேதன வர்க்கத்தை (அறிவற்ற ஜடப்பொருட்களை) சரீரமாகக்கொண்டு, ஸமஸ்த ப்ரபஞ்ச ரூபமாய் விரிந்திருக்கின்றேன். அதனாலும், உங்களுக்கு என்னோடு பிரிவு கிடையாது. உபாதான காரணத்தை விட்டு, அதன் கார்யம் தனியே பிரிந்திருக்குமோ? நான் தானே தன்னுடைய ஸங்கல்பத்தின் மஹிமையால், தன்னிடத்திலேயே தன்னைப் பஞ்ச பூதங்கள், இந்திரியங்கள், சப்தாதி விஷயங்கள் (ஒலி, ஊறு, ஒளி, சுவை, நாற்றம்) இவையாகப் படைப்பதும், அழிப்பதும், காப்பதுமாயிருக்கின்றேன். நான் ஜகத்தைப் படைக்கும் பொழுது, என்னைத் தவிர வேறொரு ஆகாரத்தையாவது (உருவத்தையாவது), வேறொரு உபகரணத்தையாவது, வேறொரு நிமித்த காரணத்தையாவது எதிர்பார்க்கிறதில்லை. ஸ்ருஷ்டியை நடத்துவது போல, ஸ்திதி, ஸம்ஹாரங்களையும் நானே நடத்துகின்றேன். ஆகையால், ஸர்வ காலத்திலும், ஸர்வ காரணனும் (எல்லாவற்றிற்கும் காரணமாய் இருப்பவனும்) ஸர்வ ஸ்வரூபனுமாகிய (எல்லாவற்றின் வடிவாய் இருப்பவனுமான) என்னோடும் உங்களுக்குப் பிரிவே கிடையாது. 

ஆத்மா, தேஹாதிகளைக் (உடல்) காட்டிலும் விலக்ஷணன் (வேறானவன்); இயற்கையில், ப்ராக்ருதமான (மூலப்ரக்ருதியின் குணங்களான) ஸத்வாதி குணங்களற்றவன்; ஆயினும், கர்மத்தினால் ஸத்வாதி குணங்களின் ஸம்பந்தமுடையவனாக இருக்கின்றான்; இயற்கையில் பரிசுத்தன்; ஜ்ஞான ஸ்வரூபன் (அறிவு வடிவானவன்); ப்ரக்ருதியின் (ஜடப்பொருட்களுக்கு மூலமன மூலப்ரக்ருதியின்) பரிணாமமான (மாற்றமான) மனத்தின் வ்யாபாரங்களாகிய (செயல்களான) ஸுஷுப்தி (ஆழ்ந்த உறக்கம்), ஸ்வப்னம் (கனவு), ஜாகரம் (விழிப்பு) இவைகளால் தீண்டப்பெற்று “நான் தேவன். நான் மனுஷ்யன்” என்றும், “நான் தூங்குகிறேன். நான் விழித்துக்கொண்டிருக்கிறேன்” என்றும் நினைத்துக் கொள்கிறான்; பிறர்க்கும் அவ்வாறே தோற்றுகிறான். ஸ்வப்னம் (கனவு) காண்கிறவன், விழித்துக் கொண்ட பின்பு, ஸ்வப்னத்தில் (கனவில்) கண்ட வஸ்துக்கள் அப்பொழுது புலப்படாமற்போயினும், ஸ்வப்னத்தில் இன்னின்ன வஸ்துக்களை அனுபவித்தோமென்று நினைப்பது போல, முன்பு அனுபவித்த வஸ்துக்களையும், அவற்றைப்போன்ற வேறு வஸ்துக்களையும், ஸ்வப்னத்தில் (கனவில்) கண்ட வஸ்துக்களைப் போல நினைத்து, அவை துர்லபங்களாயினும் (அடைய முடியாதவை என்றாலும்), அதை அறியாமல், எந்த மனத்தினால் தூண்டப்பட்டு நினைக்கிறானோ, அத்தகைய மனத்தையும், இந்திரியங்களையும், சோம்பலின்றி அந்த விஷயங்களினின்று அடக்க வேண்டும். 

சப்தாதி விஷயங்களை நினைப்பானாயின், அவற்றில் பற்றும், அதனால் காமமும் உண்டாகி, மேன்மேலும் ஸம்ஸாரத்தையே வளர்த்திக் கொள்வான். மனமே, மேன்மேலும் தேஹ ஸம்பந்தத்திற்குக் காரணமாயிருக்கின்றது. ஆகையால், அதை அடக்குவானாயின், மனம் பரிசுத்தமாகப் பெற்று, அதனால் என்னை உள்ளபடி அறிவான். 

பெரியோர்களிடத்தில் உபதேசம் பெறுதல், வேதார்த்தங்களை உணர்தல், வேதங்களில் விதிக்கப்பட்ட வர்ணாச்ரம (ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்ய, கீழ் ஜாதிகள் (வர்ணங்கள்), ப்ரஹ்மசாரி, க்ருஹஸ்தன், வனப்ரஸ்தன், ஸன்யாஸி ஆச்ரமங்கள்) தர்மங்களை அனுஷ்டித்தல், கர்மயோகம், ஆத்மாவின் உண்மையை அறிகையாகிற ஜ்ஞான யோகம், தானம், தவம், இந்த்ரிய நிக்ரஹம் (புலனடக்கம்) ஆகிய இவற்றையெல்லாம் பண்டிதர்கள் அனுஷ்டிப்பதற்கு ப்ரயோஜனம் மன அடக்கமே. பண்டிதர்கள் மனத்தை அடக்குவதற்காகவே இவற்றையெல்லாம் அனுஷ்டிக்கின்றார்கள். நதிகள் ஸமுத்ரத்தில் போய் முடிவது போல, இவையெல்லாம் மன அடக்கத்தில் போய் முடிகின்றன. நதிகள் ஸமுத்ரம் வரையில் போவது மாத்ரமே செய்ய வேண்டும். பிறகு, ஸமுத்ரத்தைப் பெறுவது ஸுலபமேயல்லவா? அவ்வாறே, மனத்தை வேறு விஷயங்களினின்றும் இழுத்து, என்னிடத்தில் நியமிக்க வேண்டும். பிறகு என்னுடைய ப்ராப்தி (என்னை அடைவது) அனாயாஸமாகக் (எளிதாகக்) கிடைக்கும். “நீ சொன்னபடி உன்னோடு எங்களுக்குப் பிரிவில்லை. ஆயினும் மஹானந்தத்தை விளைப்பதாகிய உன்னுருவத்தை எங்களுக்கு நீ ஏன் காட்டுகிறதில்லை” என்கிறீர்களோ? சொல்லுகிறேன், கேளுங்கள். 

அன்பர்களே! நான் உங்கள் கண்களுக்குப் புலப்படாமல் தூரத்தில் இருக்கிறேனென்பது உங்களுக்கு என் நினைவு மாறாதிருக்கைக்காகவே. அதனால் உங்கள் மனம் என்னிடத்திலேயே ஊன்றியிருக்கும். ஆகையால், நான் கண்ணுக்குப் புலப்படாமல் தூரத்திலிருக்கிறேனென்பதைப் பற்றி வருந்த வேண்டாம். அன்பிற்கிடமான காதலன் தூரத்தில் இருப்பானாயின், ஸ்த்ரீகளின் மனம் அவனிடத்தில் எப்படி நிலை  நின்றிருக்குமோ, அவ்வன்பன் ஸமீபத்திலிருந்து கண்ணுக்குப் புலப்பட்டுக் கொண்டிருப்பானாயின், அவர்கள் மனம் அவனிடத்தில் அப்படி நிலை நின்றிராது. நீங்கள் வேறு வ்யாபாரங்களை (செயல்களை) எல்லாம் துறந்து, மனத்தை முழுவதும் என்னிடத்தில் நிலை நிறுத்தி, என்றும் என்னையே த்யானித்துக் கொண்டிருப்பீர்களாயின், சீக்ரத்தில் என்னை அடைவீர்கள். 

மங்கள ஸ்பாவமுடையவர்களே! நான் ராஸ க்ரீடை நடத்தும் பொழுது, கோகுலத்தில் எவரெவர்கள் கணவன் முதலியவர்களால் தடுக்கப்பட்டுக் கோகுலத்திலேயே இருந்தார்களோ, அவர்கள் அனைவரும் என்னுடன் கலந்து ராஸ க்ரீடையின் ஸுகம் அனுபவிக்கப் பெறாமல் என் வீரச்செயல்களைச் சிந்தித்துக் கொண்டிருந்து என்னையே அடைந்தார்கள். (ஆகையால் நான் சொல்லுவது உண்மையே. நீங்கள் தூரத்தில் இருப்பதைப் பற்றி வருந்த வேண்டாம்).

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- கோபிகைள் இவ்வாறு ஸ்ரீக்ருஷ்ணனுடைய கட்டளையைக் கேட்டு, அவனுடைய வார்த்தையைக் கேட்டதனால் நினைவு வரப்பெற்று, மனக் களிப்புடன் உத்தவனைப் பார்த்து, இவ்வாறு மொழிந்தார்கள்.

கோபிகைகள் சொல்லுகிறார்கள்:- யாதவர்களுக்குச் சத்ருவாகி (எதிரியாகி) அவர்களுக்குத் துயரத்தை விளைத்துக் கொண்டிருந்த கம்ஸன், தெய்வாதீனமாய் முடிந்து போனானல்லவா? இது நமக்குப் பெரிய ஆநந்தம். ஸ்ரீக்ருஷ்ணன் இப்பொழுது விருப்பங்களெல்லாம் நிறைவேறப்பெற்ற நண்பர்களுடன் கூடி, க்ஷேமமாயிருக்கிறானல்லவா? இதுவும் நமக்குப் பெரிய ஆநந்தமே. 

நல்லியற்கையுடையவனே! ஸ்ரீக்ருஷ்ண ஸ்னேஹம் (நட்பு, ப்ரியம், பாசம்) நிறைந்திருப்பதும், வெட்கம், புன்னகை இவைகளோடு கூடியதும், கம்பீரமுமாகிய பட்டணத்து மடந்தையர்களின் கண்ணோக்கத்தினால் வெகுமதி செய்யப் பெற்று, அவர்களுக்கு உட்பட்டு எங்களிடத்தில் செய்யும் ப்ரீதியை அவர்களிடத்தில் செய்கின்றானா? “ஸ்வதந்த்ரனாகிய அப்பரமபுருஷன், அவர்களுக்கு எப்படி உட்படுவான்?” என்று சங்கிக்க வேண்டாம். ப்ரீதி விசேஷங்களின் ரஸமறிந்தவனும், பட்டணத்து மடந்தையர்களுக்கு அன்பனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன், அப்பட்டணத்து மடந்தையர்களின் இனிய உரைகளாலும், விலாஸங்களாலும் (விளையாட்டுக்களாலும்) இழுக்கப்பட்டு, எவ்வாறு அவர்களுக்கு உட்படாதிருப்பான்? 

ஸாதூ (நல்லவனே)! பட்டணத்து மடந்தையர்களுடன் கலந்து, அவர்கள் கூட்டத்துடன் இருக்கும் பொழுது, இடையில் க்ராமத்து ஜனங்களைப்பற்றி வேடிக்கையாகப் பேசும் தருணத்திலாவது அந்த ஸ்ரீக்ருஷ்ணன் எங்களை நினைக்கிறானா? (எங்களை முக்யமாக நினைக்க இடமில்லை; வம்பளப்பிலாவது, வேறு ஸமயத்திலோ எங்களை நினைக்கிறானா?) ஆம்பல், குறுக்கத்தி முதலிய புஷ்பங்களாலும், சந்த்ர கிரணங்களாலும் அழகாயிருக்கின்ற ப்ருந்தாவனத்தில் பாதங்களில் அணிந்த சிலம்புகள் ஒலிக்கப் பெற்ற ராஸக்ரீடையில் அன்பர்களான எங்களால் புகழப்பட்ட இனிய கதைகளுடையவனாகி எங்களுடன் அப்பொழுது விளையாடினானே, அந்த ராத்ரிகளை எப்பொழுதாயினும் ஸ்ரீக்ருஷ்ணன் ஒருகால் நினைக்கிறானா? 

உத்தவனே! ஸ்ரீக்ருஷ்ணன் தன்னைப் பிரிந்தமையால் விளைந்த சோகத்தினால் தபிக்கப்பட்டு வருந்துகின்ற எங்களை இந்த்ரன், மேகங்களைக் கொண்டு மழை பெய்வித்து, வனத்தைப் பிழைப்பிப்பது போல, தன் கர ஸ்பர்சம் (கையால் தொடுதல்) முதலியவற்றால் எங்களைப் பிழைப்பிக்க முயன்று, இவ்விடம் வருவானா? ராஜ்யம் கைகூடப் பெற்றுச் சத்ருக்களை (எதிரிகளை) அழித்து, ராஜ கன்னிகைகளை மணம் புரிந்து, மனக் களிப்புற்று, நண்பர்கள் அனைவராலும் சூழப்பட்டிருப்பவன் இங்கு எந்தக் காரணத்தைப் பற்றி வரப் போகிறான்? (வேறு சிலர் உண்மையைச் சொல்லுகிறார்கள்). 

ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு வல்லபனும் (மணவாளனும்), இயற்கையாகவே அவாப்த ஸமஸ்த காமனும் (விரும்பியது அனைத்தும் அடையப் பெற்றவனும்), ஜிதேந்த்ரியனும் (புலன்களை அடக்கியவனும்) மஹானுபாவனுமாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணனுக்கு, காட்டில் வாஸம் செய்கின்ற எங்களாலாவது, பட்டணத்தில் வாஸம் செய்கிற மற்ற மடந்தையர்களாலாவது என்ன ப்ரயோஜனம் ஆக வேண்டும்? (வேறு சிலர் சொல்லுகிறார்கள்). பரபுருஷர்களைப் (வேறு ஆண்மகனை) புணர்ந்து களிக்கும் தன்மையுடைய பிங்களையென்னும் வேசியும் கூட “ஆசையில்லாமையே மேலான ஸுகம் என்று சொல்லுகிறாள். அதை அறிந்தும், எங்களுக்கு ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் ஆசையைத் துறக்க முடியவில்லை. (வேறு சிலர் இது ஸரிதான் என்கிறார்கள்). உத்தம ச்லோகனாகிய (மிகுந்த பெருமை பொருந்திய) ஸ்ரீக்ருஷ்ணனுடைய வார்த்தையைத் துறக்க எவன் தான் வல்லனாவான்?

அந்த ஸ்ரீக்ருஷ்ணன், வேண்டாமென்று விரும்பாதிருப்பினும், ஸ்ரீமஹாலக்ஷ்மி அவனுடைய மார்பினின்று ஒருகாலும் நழுவ முடியாதிருக்கின்றாளல்லவா? அப்படிப்பட்ட அந்தப் பரம புருஷனுடைய வார்த்தையை எவனும் துறக்க முடியாது. ப்ரபூ! உத்தவனே! நதி, பர்வதம், வன ப்ரதேசங்கள், பசுக்கள், இதோ செவிப்படுகின்ற வேணுகானங்கள் (குழல் இசை) ஆகிய இவையெல்லாம், பலராமனோடு கூடின ஸ்ரீக்ருஷ்ணனால் அனுபவிக்கப்பட்டவை. இவையெல்லாம் அழகுக்கு விளை நிலமாயிருக்கின்ற அடி வைப்புக்களால், நந்தகோபனுடைய குமாரனாகிய ஸ்ரீக்ருஷ்ணனை அடிக்கடி நினைவு மூட்டுகின்றன. ஆகையால், நாங்கள் அவனை மறக்க முடியாதிருக்கிறோம். 

அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய அழகிய நடையாலும், கம்பீரமான புன்னகையினாலும், விலாஸங்கள் (விளையாட்டு) அமைந்த கண்ணோக்கங்களாலும், தேன் போன்ற இனிய உரையினாலும், இழுக்கப்பட்ட மதியுடைய நாங்கள், அவனை எப்படி மறப்போம்? (நாங்கள் அவனை மறப்போமாயின், இப்படி வருந்த மாட்டோம். எங்களுக்கு அவனை மறக்கவே முடியவில்லை). (அந்த ஸ்ரீக்ருஷ்ணனைப் புத்தியால் தியானித்து, அவனையே ப்ரார்த்திக்கின்றார்கள்). 

எங்கள் நாதனே! ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு நாதனே! (அந்த ஸ்ரீமஹாலக்ஷ்மி இரக்கமே ஒரு வடிவம் கொண்டாற் போலிருப்பவளல்லவா? அவளுடன் கூடி நீ உலகங்களையெல்லாம் பாதுகாக்கின்றாயென்று வேதாந்தங்கள் முறையிடுகின்றனவல்லவா) அவளோ உன்னை விட்டு எப்பொழுதும் பிரியாதிருக்கின்றாள். எங்கள் வருத்தமறிந்த அம்மாதரார் மணியும் கூட எங்களை மறந்தாள் போலும். அவளுடன் கூடிய உனக்கு, எங்களைக் காப்பதல்லவோ கடமை? ஆயினும், நான் சிலரைத் தண்டித்துக் கொண்டிருப்பது உங்களுக்குப் புலப்படவில்லையா? என்கிறாயோ? கோகுலத்திற்கு நாதனே! நீ எப்பொழுதும் கோகுலத்திற்கு அனுக்ரஹத்தையே செய்யும் தன்மையனல்லவா? நீ எங்களைப் பல ஆபத்துக்களினின்றும் பாதுகாத்தாயல்லவா? அப்படிப்பட்ட நீ இப்பொழுது உத்தரிப்பாயாக (கரையேற்றுவயாக).

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அந்தக் கோபிகைகள், ஸ்ரீக்ருஷ்ணன் சொல்லியனுப்பின வார்த்தைகளைக் கேட்டு, அவனைப் பிரிந்தமையாலுண்டான வருத்தம் தீரப்பெற்று, அவன் ஸர்வாந்தராத்மா (எல்லோர் உள்ளும் இருக்கும் ஆத்மா) என்பதை அறிந்து, உத்தவனைப் பூஜித்தார்கள். 

அந்த உத்தவன், கோபிகைகளின் சோகங்களைப் போக்கிக் கொண்டு, சில மாதங்கள் கோகுலத்தில் வஸித்திருந்தான். அவன் ஸ்ரீக்ருஷ்ணனுடைய கதைகளைப் பாடி, கோகுலத்தையெல்லாம் களிப்புறச் செய்துகொண்டிருந்தான். அவ்வுத்தவன் எத்தனை நாள் கோகுலத்தில் வாஸம் செய்தானோ, அந்த நாட்களெல்லாம் ஸ்ரீக்ருஷ்ணனுடைய ப்ரஸங்கம் (பேச்சே) நடந்து கொண்டிருந்தமையால், அவர்களுக்கு ஒரு க்ஷணம் போல் கடந்தன. 

தன்னைப் பற்றினவர்களுடைய மன வருத்தங்களைப் போக்கும் தன்மையனாகிய ஸ்ரீக்ருஷ்ணனுடைய தாஸனான அவ்வுத்தவன், புஷ்பித்த (மலர்ந்த) வ்ருக்ஷங்கள் (மரக்கள்) அடர்ந்திருக்கின்ற திசைகளையும், வனங்களையும், மலைச் சாரல்களையும் பார்த்து, ஆங்காங்கு ஸ்ரீக்ருஷ்ணனுடைய விளையாடல்களைப் பற்றி வினவுதல் முதலியவைகளால் அவர்களுக்கு ஸ்ரீக்ருஷ்ணனை நினைவு மூட்டிக் கொண்டு, மனக்களிப்புற்றிருந்தான். அவ்வுத்தவன், கோபிகைகளுக்கு ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் உண்டான ப்ரீதியின் மிகுதியால் நேர்ந்த (இவை கீழ் சொல்லப்பட்டவை) இவை முதலிய மனத் தழதழப்பைக் கண்டு ஸந்தோஷம் அடைந்து, அவர்களை நமஸ்கரித்து, இவ்வாறு மொழிந்தான்.

உத்தவன் சொல்லுகிறான்:- இந்தக் கோபிகைகள்தான் ஸபலமான ஜன்மமுடையவர்கள் (பிறவிப் பயன் அடைந்தவர்கள்). (இந்தக் கோபிகைகளின் ஜன்மமே பயன் பெற்ற ஜன்மமன்றி, மற்றவர்களுடைய ஜன்மம் ஜன்மமேயன்று.) ஏனென்றால், ஸர்வாந்தராத்மாவான பரம புருஷனிடத்தில் இவர்களுக்கு இப்படிப்பட்ட மாறாத மனோபாவம் உண்டாயிருக்கின்றதல்லவா? ஸம்ஸாரத்தினின்று பயந்து விடுபட வேண்டுமென்று விரும்பி, பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தை த்யானம் செய்கிற முனிவர்களும், பக்தர்களல்லாத எங்களைப் போன்ற ஸாதாரண ஜனங்களும், இந்த மனோபாவத்தை ஆசைப்படுகிறார்களல்லவா? அளவற்ற மஹிமையுடைய பரமபுருஷனுடைய கதைகளில் அனுராகம் (ப்ரீதி) உண்டாகப் பெற்றவனுக்கு, மூன்று வகையான (ஸெளக்லம் - நற்குடிப்பிறப்பு, ஸாவித்ரம் - உபநயனம் முதலிய சடங்குகள், யாஞ்ஞிகம் - வேள்விகளை நடத்துதல் என்கிற மூன்று வகையான) ப்ராஹ்மண ஜன்மங்களாலாவது, நான்முகனுடைய ஜன்மங்களாலாவது ஸாதிக்க வேண்டிய ப்ரயோஜனம் என்ன இருக்கின்றது. 

(பகவானுடைய கதைகளில் ப்ரீதி உண்டாகப் பெறுகையே எல்லா உபாயங்களாலும் ஸாதிக்க வேண்டிய மேலான புருஷார்த்தமாகையால், அது கை கூடப் பெற்றவனுக்கு, எதைச் செய்து என்ன ஆகவேண்டும்? ஒன்றும் ஆக வேண்டியதில்லை). 

இவர்கள் ஸ்த்ரீகள்; காட்டில் திரிகிறவர்கள்; கணவனைத் துறந்து, பர புருஷனைப் (வேறு ஆண்மகனை) புணர்ந்து களிக்குந்தன்மையாகிற வ்யபிசாரமுடையவர்கள். இத்தகைய இவ்விடைப் பெண்கள் எங்கே? பரமாத்மாவான ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் மாறாத மனோபாவம் உண்டாகப் பெறுகை எங்கே? இது ஒருகாலும் சேரக் கூடியதன்று. ஆயினும், சிறந்த மருந்தை எவன் உபயோகப்படுத்தினும், அது ஆரோக்யத்தைக் கொடுப்பது போல, ஸர்வேச்வரன், தன்னுடைய உண்மையை அறியாமல் ஏதோ ஒரு பாவத்தினால் தன்னைப் பணிகிறவர்களுக்கும், தானே நன்மைமையை விளைக்கின்றான். 

ராஸக்ரீடையில் ஸ்ரீக்ருஷ்ணனுடைய புஜதண்டங்களால் (கைகளால்) கண்டங்களில் (கழுத்தில்) அணைக்கப்பெற்று, அதனால் விருப்பங்களெல்லாம் நிறைவேறப்பெற்ற கோபிகைகளின் இடையில் அந்த ஸ்ரீக்ருஷ்ணன் பாடி, அவர்களைக் களிப்புறச் செய்தானல்லவா? இந்த அனுக்ரஹம் (பரிவு, அன்புடன் கூடிய ஆசி) அவனுடைய மார்பில் வஸிக்கிற, மிகுந்த அன்புடைய ஸ்ரீமஹாலக்ஷ்மிக்காவது, தாமரை மலரின் வாஸனை போன்ற வாஸனையும், ஒளி போன்ற ஒளியுமுடைய, ஸ்வர்க்க லோகத்து மடந்தையர்களான அப்ஸர ஸ்த்ரீகளுக்காவது, நேரவில்லை. மற்ற மடந்தையர்களுக்கு அவ்வனுக்ரஹம் நேரவில்லை என்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? 

ப்ருந்தாவனத்தில், இந்தக் கோபிகைகளுடைய பாதார விந்தங்களின் பராகங்கள் (தூள்கள்) படியப் பெற்ற புதர், கொடி, செடி இவற்றுள் ஏதேனுமொன்றாயிருப்பேனாக. (இந்த ப்ருந்தாவனத்தில் உள்ள செடி,கொடி முதலியவற்றில் ஏதேனுமொன்றாயிருந்து, இந்தக் கோபிகைகளின் பாத தூளி படப் பெறுவேனாயின், அதுவே எனக்கு மேலான புருஷார்த்தம்.) ஏனென்றால், இந்தக் கோபிகைகள் துறக்க முடியாத பந்துக்களையும், தர்மத்தையும் துறந்து, வேதங்களாலும் தேடத்தக்கதாகிய ஸ்ரீக்ருஷ்ணனுடைய பதவியைப் பெற்றார்களல்லவா? மற்றும், இந்தக் கோபிகைகள், ஸ்ரீமஹாலக்ஷ்மியால் பூஜிக்கப்பட்டதும், விருப்பங்களெல்லாம் நிறைவேறப்பெற்ற நான்முகன் முதலியவர்களாலும், மற்றுமுள்ள யோகீச்வரர்களாலும், தங்கள் மனத்தில் ஆராதிக்கப்பட்டதுமாகிய ஸ்ரீக்ருஷ்ண பகவானுடைய பாதார விந்தங்களை ராஸ கோஷ்டியில் தங்கள் ஸ்தனங்களின் மேல் வைத்து அணைத்து, சரீர (உடல்) தாபத்தையும் (வருத்தத்தையும்), மனஸ்தாபத்தையும் (மன வருத்தத்தையும்) துறந்தார்கள். நந்த கோகுலத்திலுள்ள மடந்தையர்களின் பாததூளியை அடிக்கடி நமஸ்கரிக்கின்றேன். இவர்கள், ஸ்ரீக்ருஷ்ணனுடைய கதைகளை எடுத்துப் பாடும் பாட்டு, மூன்று லோகங்களையும் புனிதம் செய்கின்றது. (ஆகையால், இவர்களுடைய பாததூளியைப் பணிந்து நானும் புனிதனாவேனாக).

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பிறகு அவ்வுத்தவன், கோபிகைகளும், யசோதை, நந்தன் இவர்களும் விடை கொடுக்கும்படி வேண்டிப் பெற்று, மற்றுமுள்ள கோபர்களிடத்திலும் போய் வருகிறேனென்று விடை பெற்றுக் கொண்டு, போவதற்காக ரதத்தில் ஏறிக்கொண்டான். நந்தன் முதலியவர்கள் பலவகை உபஹாரங்களைக் (பரிசுப் பொருட்களைக்) கைகளில் ஏந்திக் கொண்டு, கோகுலத்தினின்று புறப்பட்ட அவ்வுத்தவனைத் தொடர்ந்து சென்று, கண்ணும் கண்ணீருமாய் அனுராகத்துடன் (அன்புடன்) இவ்வாறு மொழிந்தார்கள்.

நந்தாதிகள் சொல்லுகிறார்கள்:- எங்கள் மனத்தின் வ்ருத்திகள் (எண்ணங்கள்) ஸ்ரீக்ருஷ்ணனுடைய பாதார விந்தங்களையே பற்றியிருக்குமாக. எங்கள் வாக்கெல்லாம், அவனுடைய நாமங்களைச் சொல்லுவதிலேயே உபயோகப்பட்டிருக்குமாக. எங்கள் தேஹங்கள், அவனுடைய நமஸ்காரம் முதலிய நற்செயல்களில் ஆழ்ந்திருக்குமாக. ஈச்வரனுடைய ஸங்கல்பத்தினால் தூண்டப்பட்டு, புண்ய, பாப கர்மங்களால் எங்கேனும் ஜன்ம மரணாதி ஸம்ஸாரத்தில் சுழன்று கொண்டிருக்கிற எங்களுக்கு, தானம் முதலிய நன்னடத்தைகள் எவையேனும் உளவாயின், அவற்றால் எங்களுக்கு ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் அனுராகம் (அன்பு) வளர்ந்து வருமாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ராஜனே! இவ்வாறு கோபர்களால் ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் பக்தியைக் காட்டி வெகுமதிக்கப்பட்ட அவ்வுத்தவன், ஸ்ரீக்ருஷ்ணனால் ஆதரவுடன் பாதுகாக்கப்பட்டு வருகின்ற மதுராப் புரிக்குத் திரும்பி வந்தான். அப்பால், அவன் ஸ்ரீக்ருஷ்ணனுக்கு நமஸ்காரம் செய்து, ஸந்தோஷத்துடன் கோபர்களுக்கு உண்டாயிருக்கின்ற பக்தியின் மிகுதியை மொழிந்து, ஸ்ரீ க்ருஷ்ணனுக்கும், பலராமனுக்கும் ராஜாவாகிய உக்ரஸேனனுக்கும், நந்தாதிகள் கொடுத்தனுப்பின உபஹாரங்களைக் (பரிசுப் பொருட்களைக்) கொடுத்தான். 

நாற்பத்தேழாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக