ஶ்ரீமத் பாகவதம் - 262

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – நாற்பத்தாறாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் உத்தவனைக் கோகுலத்திற்கு அனுப்பி நந்தகோப, யசோதைகளையும், கோபிகைகளையும் ஸமாதானப்படுத்துதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மதுரையில் உத்தவனென்பவன் ஒருவன் உளன். அவன் வ்ருஷ்ணிகளில் (ஸ்ரீக்ருஷ்ணன் அவதரித்த குலம்) சிறந்தவன்; ஸ்ரீக்ருஷ்ணனுக்கு ப்ரியமுள்ள நண்பனும், மந்திரியுமாயிருப்பவன்; ப்ருஹஸ்பதிக்கு நேரே சிஷ்யன்; இயற்கையாகவே புத்தியுடையவர்களில் சிறந்தவன்; மிகவும் புகழத்தகுந்தவன்; ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் மாறாத பக்தியுடையவன். தன்னை சரணம் அடைந்தவர்களின் மன வருத்தங்களைப் போக்கும் தன்மையுள்ள ஸ்ரீக்ருஷ்ணன், அவனை ஒருகால் ரஹஸ்யத்தில் அழைத்து, தன் கையினால் அவன் கையைப் பிடித்துக் கொண்டு இவ்வாறு மொழிந்தான்.

ஸ்ரீக்ருஷ்ணன் சொல்லுகிறான்:- நல்லியற்கையுடையவனே! உத்தவா! நீ கோகுலத்திற்குப் போய் எங்கள் தாய் தந்தைகளாகிய நந்தகோப, யசோதைகளுக்கும், கோபிகைகளுக்கும் ப்ரீதியை விளைப்பாயாக. என்னைப் பிரிந்தமையால் உண்டான அவர்களுடைய மன வருத்தத்தை என் வார்த்தைகளால் போக்குவாயாக. கோபிகைகள் என்னிடத்திலேயே  நிலைநின்ற மனமுடையவர்கள்; என்னையே ப்ராணனாக (உயிராக) உடையவர்கள்; எனக்காகத் தேஹ (உடலைப்) போஷணத்தைத் (பராமரிப்பதைத்) துறந்தவர்கள்; மன இரக்கமுடையவனும், மிகுந்த அன்பனும், அந்தராத்மாவுமாகிய என்னையே எப்பொழுதும் மனத்தினால் சரணம் அடைந்திருப்பவர்கள். “எவர்கள் எனக்காக லோக தர்மங்களையெல்லாம் துறந்திருப்பவர்களோ, அவர்களை நான் போஷிப்பது வழக்கமாகையால், நீ கோகுலத்திற்குச் சென்று, என்னுடைய வார்த்தைகளால் கோபிகைகளின் மன வருத்தத்தைப் போக்குவாயாக.” 

உத்தவனே! அந்தக் கோபிகைகள், ப்ரீதிக்கிடமானவைகள் எல்லாவற்றிலும் மிகவும் ப்ரீதிக்கிடமாகிய நான் தூரத்தில் இருப்பினும், என்னையே நினைத்துக் கொண்டு, என்னைப் பிரிந்திருக்கையால் என்னைக் கண்டு அனுபவிக்க வேணுமென்னும் பேராவலுற்று, அதனால் தழதழத்து, மெய்மறந்து, மோஹித்திருப்பார்கள். நான் கோகுலத்தினின்று புறப்பட்டு வரும்பொழுது, “சீக்கிரத்தில் திரும்பி வருகிறேன்” என்று சொல்லியனுப்பின வார்த்தைகளை நம்பி, என்னுடையவர்களான கோபிகைகள், என்னிடத்தில் மனத்தை நிலை நிறுத்தி, விரஹ தாபத்தினால் தஹிக்கப்பட்டவர்களாகவே மிகவும் வருத்தத்துடன் பெரும்பாலும் ப்ராணன்களைத் (உயிரைத்) தரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால், அவர்களை அவச்யம் ஸமாதானப்படுத்த வேண்டும்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ராஜனே! இவ்வாறு சொல்லப்பட்ட உத்தவன், ஆதரவுடன் தன் ப்ரபுவான ஸ்ரீக்ருஷ்ணனுடைய வார்த்தையை எடுத்துக் கொண்டு, ரதத்தில் ஏறி நந்தகோகுலம் போனான். அந்த உத்தவன், ஸூர்யன் அஸ்தமிக்கும் ஸமயத்தில், ஸம்ருத்திகளெல்லாம் (வளங்களெல்லாம்) அமைந்த நந்தகோகுலம் போய்ச் சேர்ந்தான். அப்பொழுது பசுக்கள் நுழைந்து கொண்டிருந்தனவாகையால், அவற்றின் குளப்படிகளால் (காலடிகளால்) கிளம்பின தூட்களில் ரதம் மறையப் பெற்று, ஒருவர்க்கும் தெரியாமல் நந்தகோபனிடம் சேர்ந்தான். ஆதலால், அவன் வந்தது கோபிகைகளுக்குத் தெரியவில்லை. அப்பொழுது, கோகுலத்தில் மதித்த (சூடடைந்த) எருதுகள் யௌவனமுள்ள (பருவம் அடைந்த) பசுவுடன் ஸம்போகிப்பதற்காக (இணைவதற்காக) ஒன்றோடொன்று சண்டையிட்டுக்கொண்டிருந்தன. 

பசுக்கள் பாலின் மிகுதியால் பளுவுள்ள மடிகளுடன் கூடி, கன்றுகளைக் குறித்து ஓடிக்கொண்டிருந்தன. பெருத்த பசுக்களும், கன்றுகளும், இங்குமங்கும் கிளம்பிக் குதித்து, விளையாடிக் கொண்டிருந்தன. அதனால் அந்தக் கோகுலம் மிகவும் அழகாயிருந்தது. பசுக்களைக் கறக்கும் சப்தங்களுடன், “கன்றைவிடு, விடவேண்டாம், பாத்ரம் கொண்டுவா. கொண்டுபோ” என்னும் இவை முதலிய பல சப்தங்களும், வேணுகான (குழல் இசை) த்வனிகளும் (ஒலிகளும்), அக்கோகுலத்தை விளங்கச் செய்தன. கோபிகைகளும், கோபர்களும், நன்றாக அலங்கரித்து, ஸ்ரீக்ருஷ்ண, ராமர்களின் பரிசுத்தமான செயல்களைப் பாடிக்கொண்டிருந்தார்கள். அக்னி, ஸூர்யன், அதிதி, பசு, ப்ராஹ்மணன், பித்ருக்கள், தேவதை இவர்களின் பூஜை நடக்கப் பெற்ற கோபர்களின் வாஸஸ்தானங்களாலும் (இருப்பிடங்களாலும்), தீபம், தூபம், பூமாலை இவைகளாலும், கோகுலம் மிகவும் விளக்கமுற்று, அழகாயிருந்தது. அங்கு, எல்லாப் புறங்களிலும் வனங்கள் புஷ்பித்திருந்தன. பக்ஷிகளும், வண்டுகளும், சப்தித்துக் கொண்டிருந்தன. ஹம்ஸம், நீர்க்கோழி முதலிய பறவைகள் நிறைந்திருந்தன. தாமரையோடைகள் அளவற்றிருந்தன. அவற்றால் அக்கோகுலம் அலங்காரமுற்றிருந்தது. நந்தகோபன் ஸ்ரீக்ருஷ்ணனுடைய அனுசரனும் (ப்ருத்யன், வேலைக்காரன்) அன்பனுமாகிய உத்தவன் வந்திருப்பதைக் கேட்டு வந்து, ப்ரீதியுடன் அணைத்துக் கொண்டு, வாஸுதேவனென்னும் புத்தியுடன் அவனைப் பூஜித்தான். பிறகு, உத்தவனுக்கு அறுசுவைகளும் அமைந்து மிகவும் சிறந்த அன்னம் அளிக்க, அவனும் அதைப் புசித்துப் படுக்கையில், ஸுகமாக உட்கார்ந்திருக்கையில், கால்பிடிப்பது முதலிய உபசாரங்களால் வழி நடந்து வந்த ச்ரமங்களெல்லாம் தீரும்படி செய்துகொண்டே மேல்வருமாறு வினவினான்.

நந்தகோபன் சொல்லுகிறான்:- மிகுந்த பாக்யமுடையவனே! எங்கள் நண்பனாகிய வஸுதேவன் சிறையினின்று விடுபட்டு, நண்பர்களால் சூழப்பட்டு, குழந்தை முதலியவர்களோடு க்ஷேமமாயிருக்கின்றானா? தர்மத்தையே அனுஷ்டிக்கும் தன்மையரும், ஸாதுக்களுமாகிய யாதவர்களை எப்பொழுதும் த்வேஷித்துக் கொண்டிருந்த பாபிஷ்டனாகிய கம்ஸன், தன்னைச் சேர்ந்தவர்களுடன் தன்னுடைய பாபகர்மத்தினாலேயே மாண்டான். இது நமக்குப் பெரிய ஆனந்தம். ஸ்ரீக்ருஷ்ணன் என்னையும், தாயையும், ஸ்னேஹிதர்களையும், நண்பர்களையும், கோபர்களையும், தன்னையே நாதனாகவுடைய கோகுலத்தையும், பசுக்களையும், ப்ருந்தாவனத்தையும், கோவர்த்தனகிரியையும் நினைக்கிறானா? ஸ்ரீக்ருஷ்ணன் தன் ஜனங்களைப் பார்க்க வருவானா? வருவானாயின், அழகிய மூக்கும், அழகிய புன்னகையோடு கூடின கண்களும் அமைந்த அவனது முகத்தைக் காண்பேன். காட்டுத்தீ, காற்று, மழை, வ்ருஷாஸுரன், அகாஸுரன் இவற்றினின்றும் கடக்க முடியாத மற்றும் பலவகை ம்ருத்யுக்களினின்றும் (யமன்களிடமிருந்து) நாங்கள் மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணனால் பாதுகாக்கப்பட்டோம். 

ஓ உத்தவனே! ஸ்ரீக்ருஷ்ணனுடைய வீரச் செயல்களையும், லீலைகள் அமைந்த கடைக் கண்ணோக்கத்தையும், சிரிப்பையும், பேச்சையும் நினைக்கின்ற எங்களுக்கு வ்யாபாரங்களெல்லாம்  நழுவுகின்றன. ஸ்ரீக்ருஷ்ணனுடைய அடிவைப்புக்களால் அலங்கரிக்கப்பட்ட நதிகளையும், பர்வதங்களையும் (மலைகளையும்), வனப்ரதேசங்களையும், அவன் விளையாடின மற்றும் பல இடங்களையும் பார்த்துக்கொண்டிருக்கின்ற எங்கள் மனம், ஸ்ரீக்ருஷ்ணனைத் தவிர மற்ற எதையும் நினையாமல், அவனிடத்திலேயே நாடுகின்றது. ராம, க்ருஷ்ணர்களிருவரையும், தேவதைகளின் பெரிய ப்ரயோஜனத்தை நிறைவேற்றும் பொருட்டு இவ்வுலகத்தில் அவதரித்த தேவ ச்ரேஷ்டர்களென்று நினைக்கின்றேன். கர்க்கரும் அவ்வாறே மொழிந்தார். 

பதினாயிரம் யானை பலமுடைய கம்ஸனையும், மல்லர்களையும், குவலயாபீடமென்னும் யானையையும், ஸிம்ஹம் பசுக்களைக் கொல்லுவது போல அவலீலையாகக் (விளையாட்டாகவே) கொன்றார்கள். ஸ்ரீக்ருஷ்ணன் மூன்று பனை மரத்தளவுடையதும், இரும்பு போல் மிக்க உறுதியுடையதுமாகிய தனுஸ்ஸை, யானை கருப்பந்தடியை முறிப்பது போல முறித்தான்; ஒற்றைக்கையினால் கோவர்த்தனகிரியை ஏழுநாள் தரித்துக் கொண்டிருந்தான். தேவாஸுரர்களை வென்ற மஹாபலிஷ்டர்களான ப்ரலம்பன், தேனுகன், அரிஷ்டன், த்ருணாவர்த்தன், பகன் முதலிய அஸுரர்களை, இவன் இவ்விடத்தில் இருக்கும் பொழுது, அவலீலையாகக் (விளையாட்டாகக்) கொன்றான். ஆகையால், அவர்கள் ஸங்கர்ஷணனும், நாராயணனுமாகிய தேவ ச்ரேஷ்டர்களே என்பதில் ஸந்தேஹம் உண்டோ?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் மிகுந்த அனுராகம் (ப்ரீதி, அன்பு) அமைந்த மதியுடைய நந்தகோபன், இவ்வாறு நினைத்து நினைத்துக் கண்ணீர்கள் கண்டத்தில் தடைபடப் பெற்று, ப்ரீதியின் மிகுதியால் தழதழத்து, ஒன்றும் பேசாமல் வெறுமனேயிருந்தான். அப்பொழுது, யசோதையும் தன் பர்த்தாவினால் வர்ணிக்கப்பட்ட புதல்வனுடைய சரித்ரங்களைக் கேட்டுக்கொண்டிருந்து, ஸ்னேஹத்தினால் (அன்பினால்) ஸ்தனங்களில் பால் பெருகப் பெற்று, கண்ணீர் பெருக்கினாள். இவ்வாறு நந்தகோப, யசோதைகளுக்கு ஸ்ரீக்ருஷ்ண பகவானிடத்தில் அனுராகம் (ப்ரீதி, அன்பு) அளவற்றிருப்பதைக் கண்டு உத்தவன், ஸந்தோஷமுற்று, நந்தகோபனைப் பார்த்து மொழிந்தான்.

உத்தவன் சொல்லுகிறான்:- வெகுமதி அளிக்கும் தன்மையனே! பர்த்தாவும், பார்யையுமாகிய நீங்களிருவரும், தேவதைகளுக்கும் பூஜிக்கத் தகுந்தவர்கள். ஸகல ஜகத்திற்கும் குருவாகிய ஸ்ரீமந்நாரயணனிடத்தில் இவ்வாறு அனுராகம் (ப்ரீதி, அன்பு) நிறைந்த மதி உண்டாகப் பெற்றீர்களல்லவா? (ஹிதம் செய்கையாலும், நியாமகனாகையாலும் (நியமிப்பவனாகையாலும்), பிறப்பித்தவனாகையாலும், ஜகத்திற்கெல்லாம் தந்தையாகிய பரமபுருஷனிடத்தில் அனுராகம் (ப்ரீதி, அன்பு) அளவற்றிருக்கப் பெறுவானாயின், அம்மனிதன் அதைக்காட்டிலும் தன்னுடைய நன்மைக்காகச் செய்யவேண்டிய கார்யம் என்ன இருக்கின்றது? அவன் க்ருதக்ருத்யனே (செய்ய வேண்டியதைச் செய்து முடித்தவன்). அவன் தேவதைகளுக்கும் புகழத் தகுந்தவனென்பதில் ஸந்தேஹம் என்ன?) 

இந்த ராம, க்ருஷ்ணர்கள், ஜகத்திற்குக் காரணமான ப்ருதிவி முதலிய தத்வங்களையும் படைத்த காரண புருஷர்கள்; சேதனா சேதனங்களைச் (ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்கள் இவற்றை) சரீரமாகவுடையவர்கள்; புராண புருஷர்கள். இவர்கள், தேவ-மனுஷ்யாதி ரூபங்களாகி, பலவாறாயிருக்கின்ற பூதங்களுக்குள் ப்ரவேசித்து நியமித்துக்கொண்டு, சப்தாதி விஷயங்களைப் பற்றின அறிவை விளைக்கின்றார்கள். இவர்களே தன்னைப் பற்றின விலக்ஷண (சிறந்த) ஜ்ஞானத்தையும் (அறிவையும்) விளைக்கின்றார்கள். க்ஷணகாலமாயினும், வேறு விஷயங்களில் செல்லாமல், பரிசுத்தமான மனத்தை எவனிடத்தில் வைத்துக் கர்ம வாஸனையை அழித்து, ஜ்ஞானம்  நிறைந்து, அப்ராக்ருதமான (ஸத்வ, ரஜஸ், தமஸ் என்கிற முக்குணங்களின் கலப்பற்ற சுத்த ஸத்வ மயமான) திவ்யமங்கள விக்ரஹத்தைப் பெற்று, பராங்கதியைப் (உயர்ந்த இடத்தை, மோட்சத்தைப்) பெறுவானோ; அத்தகையனும், ஸாதுக்களைப் பாதுகாக்கையாகிற காரணத்தைப் பற்றித் தன் ஸங்கல்பத்தினால் மானிட உருவம் கொண்டவனும், சேதனா சேதன ரூபமான (ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்கள் இவற்றைக் கொண்ட) ஜகத்திற்கெல்லாம் அந்தராத்மாவும், காரணனும், மஹானுபாவனுமாகிய ஸ்ரீமந்நாராயணனிடத்தில் நீங்கள் அளவற்ற அனுராகம் (அன்பு, ப்ரீதி) உண்டாகப் பெற்றிருக்கின்றீர்களாகையால், நீங்கள் செய்ய வேண்டிய கார்யம் என்ன மிகுந்திருக்கின்றது? எதுவுமில்லை. நீங்களே க்ருதக்ருத்யர்கள் (செய்ய வேண்டியதை செய்து முடித்தவர்கள்). தன்னைப் பற்றினவர்களைக் கைவிடாமல் பாதுகாக்கும் தன்மையனாகிய ஸ்ரீக்ருஷ்ணன் அல்ப காலத்திற்குள்ளாகவே இந்தக் கோகுலத்திற்கு வரப்போகிறான். தன் பக்தர்களைப் பாதுகாக்கும் தன்மையுள்ள அந்த ஸ்ரீக்ருஷ்ணன், இங்கு வந்து, தாய் தந்தைகளாகிய உங்கள் ப்ரியத்தை நிறைவேற்றப் போகிறான். ஸமஸ்தமான யாதவர்களுக்கும், மற்றுமுள்ள தன் பத்னிகளுக்கும் ப்ரதிகூலனாகிய கம்ஸனை அரங்கத்தினிடையில் கொன்று, மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன் உங்களைக் குறித்து யாது மொழிந்தானோ, அதை அவன் இவ்விடம் வந்து உண்மையாகவே நடத்தப் போகிறான்.

மிகுந்த பாக்யமுடையவர்களே! நீங்கள் வருத்தப்பட வேண்டாம். ஸமீபத்திலேயே நீங்கள் ஸ்ரீக்ருஷ்ணனைக் காண்பீர்கள். மற்றும், அந்தப் பகவான் மதுரையில் மாத்ரமே இருக்கிறானென்பதில்லை. இவ்விடத்திலும் கூட இருக்கின்றான். ஆனால், அவன் எல்லோர்க்கும் ஏன் புலப்படவில்லையென்னில், அரணிக் கட்டையில் அக்னி மறைந்திருப்பது போல, ப்ராணிகளின் ஹ்ருதயத்திற்குள் மறைந்திருக்கின்றான். கடைவது முதலிய உபாயத்தினால் அவ்வக்னி புலப்படுவது போல, பகவானும் பக்தியுடையவர்களுக்குப் புலப்படுவான். மற்றவர்களுக்குப் புலப்பட மாட்டான். “ஸ்ரீக்ருஷ்ணன் வரப்போகிறான் என்கிறாய். அது எங்களுக்குத் தோன்றவில்லை. ஏனென்றால், எங்களைக் காட்டிலும் மிகவும் அன்பிற்கிடமான வஸுதேவாதிகளைத் துறந்து, எங்களைப் பார்ப்பதற்காக எவ்வாறு வருவான்” என்று நீங்கள் சங்கிக்க (ஸந்தேஹப்பட) வேண்டாம். 

இந்த ஸ்ரீக்ருஷ்ணனுக்கு மிகவும் அன்பிற்கிடமானவன் எவனுமே இல்லை. ப்ரீதிக்கிடமாகாதவனும் எவனும் கிடையாது. இவன் எதையும் என்னுடையதென்று அபிமானிக்கும் தன்மையனல்லன். இவன் எல்லார்க்கும் ஸமனாயிருப்பவன். இவன் ஒருவனை மேற்பட்டவனென்றாவது, ஒருவனைக் கீழ்ப்பட்டவனென்றாவது, ஒருவனைத் தனக்கு ஸமமானவன் என்றாவது நினைக்க மாட்டான். அவனுக்குத் தாயாவது, தந்தையாவது, பார்யையாவது, பிள்ளை முதலிய மற்ற பந்துக்களாவது, தன்னுடையவனாவது, பிறனாவது கிடையாது. இவர்களெல்லோரும் தேஹத்தைப் (உடலைப்) பற்றினவர்களல்லவோ? அவனுக்குத் தேஹமே கிடையாது. புண்ய பாப கர்மங்களைப் பற்றியல்லவோ தேவ மனுஷ்யாதி தேஹங்களெல்லாம் (உடல்களெல்லாம்) உண்டாகின்றன. அவனுக்கு அத்தகைய புண்ய பாபகர்மமே கிடையாது. 

இவ்வுலகத்தில் ஜீவாத்மாக்களுக்கு நேரும் பிறவி போன்ற பிறவி அவனுக்குக் கிடையாது. அவன் பிறவி அவதாரமே. பிறவி, செயல் முதலியவை அற்றவனாயினும், விளையாட்டிற்காகவும் ஸத் புருஷர்களைப் பாதுகாக்கையாகிற பெரிய ப்ரயோஜனத்திற்காகவும், அவன் இவ்வுலகத்தில் மேன்மையும், தாழ்மையும், நடுத்தரமுமாகிய தேவர், மனுஷ்யர், திர்யக்கு (விலங்கு) என்னும் யோனிகளில் (பிறவிகளில்) அவதரிக்கின்றான். ஜீவாத்மாக்களைப் போலப் புண்ய பாப கர்மங்களால் பிறப்பவனல்லன். ஆகையால், அவனுக்குத் தாய், தந்தை முதலியவர்கள் எவருமே கிடையாது. ஜீவனைப் போல ஸத்வம், ரஜஸ்ஸு, தமஸ்ஸு என்னும் ப்ராக்ருத (மூலப்ரக்ருதியின்) குணங்களுக்கு உட்படாதவனாயினும், ஸத்வாதி குணங்களைத் தன் விளையாட்டிற்குக் கருவியாக ஏற்றுக் கொண்டு, அவற்றிற்குத் தான் உட்படாமல், அவற்றை அடக்கி ஆள்கின்றான். 

ஜீவாத்மாக்களோ என்றால், அவற்றில் போக்யங்களென்னும் (அனுபவிக்கத் தக்கவை என்னும்) புத்தி உண்டாகப் பெற்று, அவற்றை அடக்கி ஆள முடியாமல் தொடர்கின்றார்கள். அந்தக் குணங்களைக் கருவியாகக் கொண்டு படைப்பதும், காப்பதும், அழிப்பதுமாகி விளையாடிக் கொண்டிருப்பினும், அவற்றால் பரிபவிக்கப்படாமலே (துன்புறுத்தப் படாமலே) விளக்கமுற்றிருக்கின்றான். அவன், பிறவி முதலிய விகாரங்கள் (மாற்றங்கள்) அற்றவன். சுழலமிடுகின்ற கண்ணுக்குப் பூமியும் சுழல்வது போலத் தோற்றுகின்றதல்லவா? அவ்வாறே, ஜீவன் தான் கர்த்தாவாயினும், ஆத்மாவல்லாததும் கர்த்தாவல்லாததுமாகிய தேஹத்தை (உடலை) ஆத்மாவாகவும், கர்த்தாவாகவும் நினைக்கின்றான். அஜ்ஞானத்தினால் அவனுக்குத் தேஹமே (உடலே) அவ்வாறே தோன்றுகிறது. பரமபுருஷன் அத்தகையனல்லன். மற்றும், சுழலும் கண்ணுக்குப் பூமியும் சுழல்வது போலத் தோன்றுவது போல இந்த ஸ்ரீக்ருஷ்ணன், ஜீவாத்மாக்களைக் காட்டிலும் விலக்ஷணனாயினும் (வேறுபட்டவனாயினும்), அவனுடைய உண்மையை அறியாதவர்களுக்குப் புண்ய பாப கர்மங்களைச் செய்கின்ற ஸாதாரண ஜீவன் போலத் தோன்றுகிறான். 

ஜ்ஞானம் முதலிய கல்யாண குணங்களையுடையவனும், தன்னைப் பற்றினவர்களுடைய ஸம்ஸார பந்தத்தைப் (உலகியல் வாழ்வு என்னும் கட்டைப்) போக்கும் தன்மையனுமாகிய இந்த ஸ்ரீக்ருஷ்ணன், உங்களுக்குத் தான் புதல்வனென்பதில்லை. எல்லார்க்கும் புதல்வனே; புதல்வன் மாத்ரமேயல்லன்; தந்தையும், தாயும், ஸ்வாமியுமாயிருப்பவன். ஏனென்றால், இவன் எல்லார்க்கும் அந்தராத்மாவாய் இருப்பவனல்லவா? ஆகையால், தாய், தந்தை, புதல்வன் முதலிய அனைவர்க்கும் அந்தராத்மாவாயிருந்து, அந்தந்த ஸுகங்களைக் கொடுப்பவன் அவனே. காணப்படுவது, கேட்கப்படுவது, கழிந்தது, இருப்பது, வரப்போகிறது, அசைவது, அசையாதது, பெரியது, சிறியது ஆகிய எந்த வஸ்துவும் அச்சுதனைத் தவிர்த்து வேறுபட்டிருப்பது கிடையாது. எல்லா வஸ்துக்களும் அவனே. அவன், மூன்று லோகங்களிலும் உள்ளே புகுந்து, நியமித்துத் தரித்துக் கொண்டிருக்கிறான். ஆயினும், அவன் அவற்றின் தோஷங்கள் தன்மேல் தீண்டப்பெறாமல் பரிசுத்தனாயிருக்கும் தன்மையன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ராஜனே! இவ்வாறு ஸ்ரீ க்ருஷ்ணனுடைய அனுசரனாகிய (ப்ருத்யன், வேலைக்காரன்) உத்தவனும், நந்தனும் பேசிக்கொண்டிருக்கையில், அவ்விரவு கடந்தது. இரவின் கடைசி ஜாமமாகிய அப்பொழுது கோபிகைகள் எழுந்து, விளக்குகளை ஏற்றி, வாசல் முதலிய இடங்களை மெழுகி கோலமிட்டு, புஷ்பம், கந்தம், முதலியவற்றால் அர்ச்சித்து (பூஜித்து) தயிர் கடைந்தார்கள். கடையும்பொழுது மத்தில் சுற்றப்பட்ட கயிற்றை இழுக்கின்ற புஜங்களில் அசைகின்ற வளைகளின் வரிசைகளையுடையவர்களும், நிதம்பங்களும் (புட்டங்களும்), ஸ்தனங்களில் அணிந்த ஹாரங்களும் சலிக்கவும் (அசையவும்), குண்டலங்களால் கபோலங்கள் (கன்னங்கள்) திகழவும் பெற்று, சிவந்த குங்குமம் பூசப்பெற்ற முகமுடையவர்களுமாகிய அந்தக் கோபிகைகள், ஆபரணங்களில் இழைக்கப்பட்ட ரத்னங்கள் விளக்கொளிகளால் ஜ்வலிக்கப்பெற்று மிகவும் விளங்கினார்கள். 

தாமரைக்கண்ணனாகிய ஸ்ரீக்ருஷ்ணனை உரக்கப்பாடுகின்ற அந்தக் கோபிகைகளின் குரல், தயிர் கடைகிற சப்தத்துடன் கலந்து, தேவலோகமெல்லாம் நிறைந்தது. அந்த த்வனியால் (ஒலியால்), திசைகளின் அமங்களமெல்லாம் (தீமைகளெல்லாம்) துரத்தப்பட்டது. பிறகு, ஸூர்யன் உதிக்கையில், கோபிகைகள் இடைச்சேரியின் ஓரத்தில் ஸ்வர்ணாலங்காரம் செய்யப்பெற்ற ரதம் விட்டிருப்பதைக்கண்டு, “இது யாருடையது” என்று கோபத்துடன் ஒருவர்க்கொருவர் பேசிக்கொண்டார்கள். “முன்பு கம்ஸனுடைய ப்ரயோஜனத்தை நிறைவேற்றும் பொருட்டுத் தாமரைக் கண்ணனாகிய ஸ்ரீக்ருஷ்ணனை மதுரைக்கு அழைத்துக் கொண்டு போன அவ்வக்ரூரன் வந்திருக்கிறானா என்ன? (முன்புதான் கம்ஸனைக் கொல்லுவதற்காக ஸ்ரீக்ருஷ்ணனை அழைத்துக் கொண்டு போக வந்தான். இப்பொழுது ஏதுக்காக வந்தான்?) 

மரணம் அடைந்த தன் ப்ரபுவாகிய கம்ஸனுக்கு நம்மைக்கொண்டு மேல்நடக்க வேண்டிய ப்ரேத கார்யங்களை நடத்தப் பார்க்கிறானா என்ன? (நமது மாம்ஸங்களால், பிண்டங்கள் செய்து, அவனுக்குக் கொடுக்கப்போகிறானா என்ன?)” என்று இவ்வாறு கோபிகைகள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டிருக்கையில், உத்தவன் ஸ்னானம் முதலிய தினக் கடன்களை முடித்துக் கொண்டு, அவ்வழியே வந்தான். 

நாற்பத்தாறாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை