தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – நாற்பத்து ஐந்தாவது அத்தியாயம்
(ஸ்ரீக்ருஷ்ணன் தாய் தந்தைகளை ஸமாதானப்படுத்தி, உக்ரஸேனனுக்கு ராஜ்யாபிஷேகம் செய்து, உபநயனம் செய்யப்பெற்று, ஸாந்தீபனியிடம் வித்யா அப்யாஸம் செய்து (கல்வி கற்று), குரு தக்ஷிணை கொடுத்து மீண்டு வருதல்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- புருஷோத்தமனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன், சிறந்த புருஷார்த்த ஸ்வரூபனாகிய தன்னுடைய உண்மையைத் தன் தாய் தந்தைகள் தெரிந்து கொண்டிருப்பதை அறிந்து, அவர்களுக்கு அத்தெளிவு தொடர்ந்து வரலாகாதென்று நினைத்து, ஜனங்களையெல்லாம் மதிமயங்கச் செய்வதாகிய தன் மாயையைப் பரப்பினான். பிறகு, ஸ்ரீக்ருஷ்ணன் தமையனுடன் தாய் தந்தைகளிடம் சென்று, வினயத்தினால் வணங்கி, ஆதரவுடன் “அம்மா! அண்ணா!” என்று மொழிந்து மனக்களிப்புறச் செய்து கொண்டு மேல்வருமாறு கூறினான்.
ஸ்ரீக்ருஷ்ணன் சொல்லுகிறான்:- அண்ணா! நீங்கள் எங்கள் விஷயத்தில் என்றும் ஆவலுற்றிருப்பினும், உங்கள் புதல்வர்களாகிய எங்கள் பால்யம், பௌகண்டம், கைசோரம் முதலிய
(பால்யம் - ஐந்து வயது வரையில். பௌகண்டம் - அதற்குமேல் பத்து வயது வரையில். கைசோரம் - அதற்கு மேல் பதினைந்து வயதுவரையில் என்றுணர்க. ஐந்துக்கு மேல் ஒன்பது வரையில் பௌகண்டம். அதற்குமேல் பதினாறுவரையில் கைசோரமென்று சிலர். இவ்விஷயம் பதினைந்தாவது அத்யாயத்தின் முதல் ச்லோக வ்யாக்யானத்தில் முனிபாவப்ரகாசிகையில் காண்க.)
இளம்பருவங்களெல்லாம் உங்களுக்கெட்டாத ஏதோ ஒரு இடத்தில் கடந்து போயின. பாக்யமற்றவர்களாகையால், நாங்கள் இதுவரையில் உங்களருகாமையில் வாஸம் செய்து வளரப்பெற்றிலோம். இளம்பிள்ளைகள், தாய் தந்தைகளின் க்ருஹத்தில் இருந்து, அவர்களால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்துச் சீராட்டப் பெற்று, எத்தகைய ஸந்தோஷத்தை அடைவார்களோ, அத்தகைய ஸந்தோஷத்தை நாங்கள் அடையப்பெற்றிலோம்.
தர்மம் முதலிய ஸமஸ்த புருஷார்த்தங்களுக்கும் விளை நிலமாகிய தேஹத்தைப் (உடலைப்) படைத்து, வளர்த்தவர்களான தாய் தந்தைகள் விஷயத்தில் பட்ட கடனை நூறாண்டுகள் சுஷ்ரூஷை (பணிவிடை) செய்யினும் தீர்த்துக்கொள்ள வல்லவனாக மாட்டான். எவன், தான் ஸமர்த்தனாயிருந்தும், அந்தத் தாய் தந்தைகளுக்குத் தேஹத்தினாலும், தனத்தினாலும், ஜீவனத்தைக் கல்பிக்காது போவானோ, அவன் லோகாந்தரம் (வேறு உலகம்) போகையில், யமதூதர்கள் அவனைத் தன் மாம்ஸத்தைத் தானே புசிக்கச் செய்வார்கள்; இது நிச்சயம்.
ஸமர்த்தனாயிருப்பவன், வயது முதிர்ந்த தாய் – தந்தைகளையும், பதிவ்ரதையான பார்யையையும் (மனைவியையும்), சிசுவான பிள்ளையையும், குருவையும், சரணம் அடைந்த அந்தணனையும் தன் திறமைக்கு உரியபடி போஷியாது போவானாயின், அவன் ஜீவித்துக்கொண்டிருப்பினும், மரணம் அடைந்தாற்போலவே. ஆகையால், கம்ஸனிடத்தினின்று பயந்த மனமுடையவர்களாகி, உங்களை ஆராதித்துக் கொண்டு, உங்களருகாமையில் இருக்க முடியாமல் மறைந்திருந்த எங்களுக்கு, இந்த நாள்களெல்லாம் வீணாகவே கடந்தன. மாதாவே! நாங்கள் இத்தனை காலம் பராதீனர்களும் (பிறர்க்கு உட்பட்டவர்களும்), பல வருத்தங்கள் நேரப்பெற்றுத் துக்கித்த மனமுடையவர்களுமாகி, உங்களுக்குச் சுச்ரூஷை (பணிவிடை) செய்ய முடியாதிருந்தோமாகையால், எங்களுடைய அந்த அபராதத்தைப் பொறுத்தருளவேணும்.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- தன்னைப் பற்றினவர்களுடைய மன வருத்தங்களைப் போக்கி விருப்பங்களை நிறைவேற்றும் பொருட்டுத் தன் ஸங்கல்பத்தினால் மானிட உருவம் பூண்ட பரமபுருஷனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், இவ்வாறு மொழிந்த வசனத்தைக் கேட்டு, மதி மயங்கின தேவகீ, வஸுதேவர்கள், பிள்ளைகளாகிய அந்த ராம க்ருஷ்ணர்களை மடியில் ஏறிட்டு, கட்டியணைத்துக் களிப்புற்றார்கள்.
ராஜனே! தாய் தந்தையர்களாகிய அந்தத் தேவகீ, வஸுதேவர்கள், ஸ்ரீக்ருஷ்ணனுடைய மாயையினால் மதிமயங்கி, ஸ்னேஹமாகிற பாசத்தினால் கட்டுண்டு, கண்ணீர்த்தாரைகளால் புதல்வர்களை நனைத்து, கண்ணீர்களால் கண்டம் தடைபடப்பெற்று, ஒன்றும் பேச முடியாதிருந்தார்கள். ஷாட்குண்ய பூர்ணனாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) தேவகியின் புதல்வன், தாய், தந்தைகளை ஆச்வாஸப்படுத்தி (ஆறுதல் சொல்லி), பாட்டனாராகிய உக்ரஸேனனை யாதவர்களுக்கு ப்ரபுவாக ஏற்படுத்தி, அவனைக் குறித்து இவ்வாறு மொழிந்தான்.
ஸ்ரீக்ருஷ்ணன் சொல்லுகிறான்:- மிகுந்த பாக்யமுடையவனே! மஹாமதீ (சிறந்த புத்தி உடையவனே)! உன் ப்ரஜைகளாகிய எங்களைக் கட்டளையிட்டு, ஆண்டு வருவாயாக. “ஸமர்த்தனாகிய நீயே ஆள வேண்டும்” என்ன வேண்டாம். ஏனெனில், யாதவர்களுக்கு யயாதியின் சாபமாகையால், யாதவனாகிய நான் ராஜ ஸிம்ஹாஸனத்தில் உட்காரலாகாது. (நீரும் யாதவரேயாயினும், என்னுடைய ஆஜ்ஞையினால், ஸிம்ஹாஸனத்தில் உட்கார்ந்து ஆண்டு வருவீராயின், உமக்குத் தோஷம் உண்டாகாது). “திறமையில்லாத நான் எப்படி ஆள்வேன்?” என்று கழிக்க வேண்டாம். உம்முடைய ப்ருத்யனாகிய (சேவகனாகிய) நான், உம்மை பணிந்து வருகையில், தேவச்ரேஷ்டர்களும் தலைவணங்கி, உமக்குக் கப்பம் கொடுப்பார்கள். மற்ற மன்னவர்கள் உம்மைப் பூஜிப்பார்களென்பதைப் பற்றிச் சொல்லவேண்டுமோ?
(குறிப்பு:- யயாதி யாதவர்களுக்கு கொடுத்த சாபம் ஒன்பதாவது ஸ்கந்தம் பதினெட்டாவது அத்யாயத்தில் இடம்பெற்றுள்ளதைக் காண்க)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பிறகு, ஸர்வஜ்ஞனாகிய ஸ்ரீக்ருஷ்ண பகவான், கம்ஸனிடத்தினின்று பயந்து திசைகளைப் பற்றியோடியிருந்த தன் பந்துக்களும், ஸம்பந்திகளுமாகிய யாதவர், வ்ருஷ்ணிகள், அந்தகர், மதுக்கள், தாசார்ஹர், குகுரர் முதலிய அனைவரையும் நல்வார்த்தைகளால் ஆச்வாஸப்படுத்தி (ஆறுதல் கூறி) வெகுமதித்து, பரதேச (வேறு இடத்தில்) வாஸத்தினால் (குடியிருந்ததால்) இளைத்திருக்கின்ற அவர்களுக்கு வேண்டிய அளவு பணத்தைக் கொடுத்து, மிகவும் த்ருப்தியை விளைத்து, அவரவர் க்ருஹங்களில் வஸிக்கும்படி ஏற்படுத்தினான்.
பிறகு, அந்த யாதவாதிகள் ஸ்ரீக்ருஷ்ண ராமர்களால் மனக்கவலைகளெல்லாம் தீர்ந்து, மனோரதங்களெல்லாம் கைகூடப் பெற்று, பூர்ணகாமர்களாகி, ஸ்ரீக்ருஷ்ண ராமர்களின் புஜங்களால் பாதுகாக்கப்பட்டு, தங்கள் க்ருஹங்களில் களிப்புற்றிருந்தார்கள்; இரக்கம், புன்னகை இவைகளோடு கூடிய கண்ணோக்கம் அமைந்து, மிகவும் அழகாகி, என்றும் களிப்புற்று மலர்ந்து, மனோஹரமாயிருக்கின்ற முகுந்தனுடைய முகார விந்தத்தைத் தினந்தோறும் பார்த்துக்கொண்டு மன மகிழ்ந்திருந்தார்கள். அப்பொழுது, வயது சென்றவர்களும், முகுந்தனுடைய முகார விந்தத்தில் பெருகுகின்ற அம்ருதத்தைக் கண்களால் பானம் செய்து கொண்டு, யௌவன (வாலிப) வயது வரப்பெற்று, பலம், ஒளி இவை மிகப் பெற்றிருந்தார்கள். ராஜேந்த்ரனே! பிறகு மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணனும் பலராமனும், நந்தனிடம் சென்று, அவனை அணைத்து, இவ்வாறு மொழிந்தார்கள்.
ஸ்ரீக்ருஷ்ண ராமர்கள் சொல்லுகிறார்கள்:- தந்தையே! நீங்கள் மிகுந்த அன்புடன் எங்களைச் சீராட்டி, வளர்த்து வந்தீர்கள். ஆனால், இது ஆச்சர்யமன்று. தாய், தந்தைகளுக்குத் தங்கள் சரீரத்தைக் (உடலைக்) காட்டிலும் புதல்வர்களிடத்தில் ப்ரீதி அதிகமாயிருக்குமல்லவா? பந்துக்களால் வளர்த்துக் காக்க முடியாமல் துறக்கப்பட்ட குழந்தைகளை எவர்கள் எடுத்துத் தங்கள் குழந்தைகளைப் போல் வளர்த்துப் பாதுகாக்கின்றார்களோ, அவர்களே தாய் தந்தைகளாவார்கள். அப்பனே! நீங்கள் இடைச் சேரிக்குப் போவீர்களாக. நாங்களோவென்றால், இங்குள்ள பந்துக்களுக்கும், நண்பர்களுக்கும் ப்ரியம் செய்து, எங்களிடத்தில் ஸ்னேஹத்தினால் எங்களை விட்டுப் பிரிந்திருக்க முடியாமல் வருந்துகின்ற உங்களைப் பார்க்க வருகின்றோம்.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- தன் பக்தர்களைக் கைவிடாமல் பாதுகாக்குத் தன்மையனும், ஷாட்குண்ய பூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) ஸ்ரீக்ருஷ்ணன், இவ்வாறு ஸபையில் இடையர்களோடு கூடிய நந்தனை நல்வார்த்தைகளால் ஸமாதானப்படுத்தி, ஆடையாபரணம், வெண்கலம் முதலிய பாத்ரங்கள் இவை முதலிய பல பரிசுகளால் ஆதரவுடன் பூஜித்தான். இவ்வாறு சொல்லி வெகுமதிக்கப்பட்ட நந்தன், ராம க்ருஷ்ணர்களை ஆலிங்கனம் செய்து, ப்ரீதியினால் தழதழத்து, கண்களை நீர்களால் நிரப்பிக்கொண்டு, கோபர்களுடன் கோகுலம் போய்ச் சேர்ந்தான்.
பிறகு, வஸுதேவன் புரோஹிதரான கர்காசார்யரையும், மற்றும் ப்ராஹ்மணர்களையும் வரவழைத்து வைத்துக்கொண்டு, ராம க்ருஷ்ணர்களிருவருக்கும் விதிப்படி உபநயனமென்னும் ஸம்ஸ்காரத்தை நன்றாக நடத்தினான். பிறகு, நன்றாக அலங்கரித்துக் கொண்டிருக்கின்ற அந்தணர்களைப் பூஜித்து, தக்ஷிணை கொடுத்து, பொற்சங்கிலியும் மற்றும் பல அலங்காரங்களும் செய்யப் பெற்று, கன்றோடு கூடியவைகளும் வெண்பட்டு வஸ்த்ரத்தினால் மாலையிடப் பெற்றவைகளுமாகிய கோக்களையும் (பசுக்களையும்) கொடுத்தான்.
கம்பீரமான மதியுடைய அவ்வஸுதேவன், ஸ்ரீ க்ருஷ்ண ராமர்களின் அவதார மஹோத்ஸவத்தினன்று எத்தனை பசுக்களைக் கொடுக்க வேண்டுமென்று மனத்தினால் நினைத்திருந்தானோ; கம்ஸன் அதர்மத்தினால் பறித்துக் கொண்டு போன அத்தனை பசுக்களையும் மனத்தில் மறவாது வைத்துக்கொண்டிருந்து, ப்ராஹ்மணர்களுக்குக் கொடுத்தான். அப்பால், வ்ரதங்களை நன்றாக நடத்தும் திறமையடைய அந்த ராம க்ருஷ்ணர்கள், உபநயன ஸம்ஸ்காரம் செய்யப்பெற்று, யது குலத்திற்கு ஆசார்யராகிய கர்க்கரிடத்தினின்று ப்ரஹ்மசர்ய வ்ரதத்தைப் பெற்றார்கள்.
ஸமஸ்த வித்யைகளுக்கும் விளை நிலமும், ஸர்வஜ்ஞர்களுமாகிய அந்த ராம க்ருஷ்ணர்கள், ஸ்வதஸ் ஸித்தமான (தங்களுக்கு இயற்கையாகவே ஏற்பட்ட) ஜ்ஞானத்தை மனுஷ்ய சேஷ்டைகளால் மறைத்துக்கொண்டு, ஒன்றுமறியாதவர்கள் போன்று குருகுல வாஸம் செய்ய விரும்பி, காச்யப கோத்ரத்தில் பிறந்தவரும், அவந்திபுரத்தில் வஸிப்பவருமாகிய, ஸாந்தீபனி என்னும் ஆசார்யரிடம் சென்றார்கள்.
பிறகு, அந்த ராம, க்ருஷ்ணர்கள் விதிப்படி அவரைக் கிட்டி, ஜிதேந்த்ரியர்களாகக் (புலன்களை அடக்கியவர்களாக) குருவினிடத்தில் நடத்த வேண்டிய நிர்துஷ்டமான (குற்றமற்ற) நடத்தையைத் தங்களுடைய ஆசாரத்தினால் பிறர்க்குத் தெரிவிக்க முயன்று, மிகுந்த ஆதரவுடன் தேவதையைப் போல் குருவைப் பணிந்து வந்தார்கள். பரிசுத்தமான மனக்கருத்துடன் அவர்கள் செய்த பணிவிடைகளால், ப்ராஹ்மண ச்ரேஷ்டராகிய அவ்வாசார்யர் ஸந்தோஷம் அடைந்து, சிக்ஷை, கல்பம் முதலிய ஆறு அங்கங்களோடும், உபநிஷத்துக்களோடும் கூடிய வேதங்களையெல்லாம் அந்த ராம க்ருஷ்ணர்களுக்குச் சொன்னார். ரஹஸ்யமான மந்த்ரம், தேவதை இவைகளின் ஞானத்தோடு கூடிய தனுர் வேதத்தையும் மனு முதலியவர்கள் இயற்றின தர்ம சாஸ்த்ரங்களையும், மீமாம்ஸா ந்யாயம் முதலியவற்றையும், தர்க்க வித்யையையும், ஸந்தி, விக்ரஹம் முதலிய ஆறு வகையான ராஜநீதியையும், அவர்களுக்குச் சொன்னார்.
மன்னவனே! தேவதைகளில் சிறந்தவர்களும், ஸமஸ்த வித்யைகளுக்கும் ப்ரவர்த்தகர்களுமாகிய (தோற்றுவித்தவர்களாகிய) அந்த ராம க்ருஷ்ணர்கள், குரு உபதேசித்தவற்றையெல்லாம் ஒரு தரம் சொன்ன மாத்ரத்தில், அப்படியே நன்றாகத் தெரிந்து கொண்டார்கள். மன்னவனே! அவர்கள், அறுபத்து நான்கு நாட்களில், அறுபத்து நான்கு வித்யைகளைக் கற்றார்கள். பிறகு, குரு தக்ஷிணைக்காக ஆசார்யரை வேண்டினார்கள்.
ராஜனே! ஸாந்தீபனி என்னும் அவ்வந்தணர், அறுபத்து நான்கு தினங்களில் அறுபத்து நான்கு வித்யைகளைக் கற்றமையாகிற அற்புதமான மஹிமையையும், மானிடவர்க்கு நேரக்கூடாத அவர்களுடைய சேஷ்டையையும் (செயலையும்) கண்டு, அவர்கள் மஹாபுருஷர்களென்று நிச்சயித்து, பத்னியுடன் ஆலோசித்து, மஹத்தான ஸமுத்ரத்தில் ப்ரபாஸ தீரத்தத்தில் மரணம் அடைந்த இளைஞனான தன் புதல்வனைக் கொண்டு வந்து கொடுக்கும்படி வேண்டினார். செத்தவனைத் திருப்பிக் கொண்டு வருவதுங்கூட, எங்கேனும் உண்டா, இதென்ன ஆச்சர்யம்!
அப்போது மஹாரதிகளாகிய அந்த ராம, க்ருஷ்ணர்கள், அப்படியே ஆகட்டுமென்று அங்கீகரித்து, அளவற்ற பராக்ரமமுடையவர்களாகையால், சிறிதும் அஞ்சாமல், ரதத்தின்மேல் ஏறிக்கொண்டு, ப்ரபாஸ தீர்த்தத்திற்குச் சென்று, அங்கு ஸமுத்ரக் கரையை அடைந்து, க்ஷணகாலம் உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது, ஸமுத்ரராஜன் இவர்கள் ஸர்வேச்வரர்களென்று தெரிந்து கொண்டு, அவர்களைப் பூஜித்தான். ஸ்ரீக்ருஷ்ணன், அந்த ஸமுத்ர ராஜனைப் பார்த்து, “நீ இந்த ஸமுத்ரத்தில் ப்ராஹ்மண புத்ரனைப் பெரிய அலையினால் அடித்துக் கொண்டு போய் மறைத்தாயல்லவா? அவன் எங்கள் குருவாகிய ஸாந்தீபனருடைய புதல்வன். அவனைச் சீக்ரம் கொண்டு வந்து கொடுப்பாயாக” என்றான். அதைக் கேட்ட ஸமுத்ரராஜனும், ஸ்ரீக்ருஷ்ணனை நோக்கித் “தேவனே! இந்த ப்ராஹ்மண குமாரனை நான் கொண்டு போகவில்லை. ஸ்ரீக்ருஷ்ணா! பஞ்சஜனனென்னும் ஒரு அஸுரன், சங்கத்தின் உருவந்தரித்து, என் ஜலத்திற்குள் ஸஞ்சரித்துக் கொண்டிருக்கிறான். அவ்வஸுரன், எனக்கு அடங்கினவனன்று; பெருங்கொடியன். சங்கின் உருவந்தரித்த அவ்வஸுரனை, சங்குகளினிடையில் இன்னவனென்று கண்டு பிடிக்கவும்கூட முடியாது. அவனே கொண்டு போயிருக்க வேண்டும் நிச்சயம்” என்றான்.
ஸமர்த்தனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், அந்த ஸமுத்ரராஜனுடைய வசனத்தைக் கேட்டு, விரைவுடன் ஸமுத்ர ஜலத்திற்குள் இழிந்து, அந்தப் பஞ்சஜனனைக் கொன்று, அவனுடைய வயிற்றில் அப்பாலகனைக் காணாமல், அவனுடைய அங்கத்தினின்று உண்டான பாஞ்சஜன்யம் என்னும் சங்கத்தை எடுத்துக்கொண்டு, ரதத்தின் மேல் ஏறினான். பிறகு, ஸ்ரீக்ருஷ்ணன் யமனுக்கு ப்ரியமான ஸம்யமனியென்னும் பட்டணத்திற்குச் சென்று, பாஞ்சஜன்யம் என்னும் சங்கத்தை ஊதினான்.
அப்பொழுது, சாஸ்த்ர மர்யாதைகளைக் கடக்கும் ப்ரஜைகளைத் தண்டிக்கும் அதிகாரத்திலிருப்பவனாகிய யமன், சங்கத்தின் த்வனியைக் (ஒலியைக்) கேட்டு வந்து, பக்தியுடன் அவர்களைப் பூஜித்தான். அந்த யமன், ஸமஸ்த ப்ராணிகளுடைய ஹ்ருதயங்களையும் வாஸஸ்தானமாகவுடைய ஸ்ரீக்ருஷ்ணனை வணங்கி “லீலைக்காக மானிட உருவம் கொண்டவனே! விஷ்ணு! (எங்கும் நிறைந்திருப்பவனே!) உங்களுக்கு எங்களால் என்ன ஆகவேண்டும்? உங்கள் ப்ருத்யர்களாகிய (சேவகர்களாகிய) எங்களை நியமிப்பாயாக” என்று மொழிந்தான்.
ஸ்ரீக்ருஷ்ணன் அதைக் கேட்டு, “எங்கள் குருபுத்ரனை அவன் கர்மங்களைப் பற்றி உன் ப்ருத்யர்கள் (சேவகர்கள்) இவ்விடம் கொண்டு வந்தார்களல்லவா? மஹாராஜனே! அவனை என் கட்டளையை முன்னிட்டு, எனக்குத் திருப்பிக் கொடுப்பாயாக” என்று யமனைக் குறித்து மொழிந்தான். அந்த யம தர்மராஜனும், அப்படியே ஆகட்டுமென்று கொண்டு வந்து கொடுக்க, ஸ்ரீக்ருஷ்ண, ராமர்களும், அந்த குருபுத்ரனைக் கொண்டு வந்து, தன் குருவுக்கு ஸமர்ப்பித்து, மீளவும் அவரை வேறு வரம் வேண்டும்படி தூண்டினார்கள்.
இவ்வாறு மொழியப்பட்ட அவ்வந்தணர் “குழந்தைகளே! நீங்கள் குரு தக்ஷிணையை நன்றாக நடத்தினீர்கள். உங்களைப் போன்றவர்க்கு நான் குருவான பின்பு, என்னுடைய விருப்பம் எதுதான் நிறைவேறாதிருக்கும். வீரர்களே! நீங்கள் உங்கள் க்ருஹத்திற்குப் போவீர்களாக. உங்கள் புகழ், உலகங்களையெல்லாம் புனிதம் செய்து நிரப்புமாக” என்று மொழிந்தார்.
அப்பனே! இவ்வாறு குருவால் அனுமதி கொடுக்கப்பட்ட அந்த ராம, க்ருஷ்ணர்கள், வாயு வேகமுடையதும், மேக கர்ஜனையோடொத்த கம்பீரமான த்வனி (ஒலி) உடையதுமாகிய ரதத்தின் மேல் ஏறிக் கொண்டு, க்ருஹத்திற்கு வந்து சேர்ந்தார்கள். வெகு நாளாக அவர்களைக் காணாதிருந்த மதுராபுரத்து ஜனங்கள், அப்பொழுது அந்த ராம, க்ருஷ்ணர்களைக் கண்டு, கெட்டுப் போன பணம் கை புகப் பெற்றவர்கள் போல மிகவும் ஸந்தோஷம் அடைந்தார்கள்.
நாற்பத்தைந்தாவது அத்தியாயம் முற்றிற்று.