ஶ்ரீமத் பாகவதம் - 260

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – நாற்பத்து  நான்காவது அத்தியாயம்

(சாணூரன், முஷ்டிகன், கூடன், தோஸலன், கம்ஸன் இவர்களை வதித்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மஹானுபாவனாகிய மதுஸூதனன், தான் ஸங்கல்பித்திருந்ததையே பிறர்வாயால் நிச்சயப்படுத்திக் கொண்டு, சாணூரனை எதிர்த்தான். பலராமனும் முஷ்டிகனை எதிர்த்தான். அப்பொழுது, அந்த ஸ்ரீக்ருஷ்ண-சாணூரர்களும், பலராம-முஷ்டிகர்களும் கைகளைக் கைகளாலும், பாதங்களைப் பாதங்களாலும் கட்டிக்கொண்டு, ஒருவரையொருவர் ஜயிக்க விரும்பி, ஒருவரையொருவர் பலாத்காரமாகப் பிடித்திழுத்தார்கள். அவர்கள், முட்டிகளால் முட்டிகளையும், முழங்கால்களால் முழங்கால்களையும், தலைகளால் தலைகளையும், மார்புகளால் மார்புகளையும், ஒருவர்க்கொருவர் அடித்துக் கொண்டார்கள். சுழற்றுவது, தள்ளுவது, எதிர்ப்பது, பின்னே நகருவது இவைகளால் அவர்கள் ஒருவரையொருவர் தகைந்தார்கள். ஒருவரையொருவர் ஜயிக்க விரும்புகிற அவர்கள், கீழ் விழுந்தவனைக் கால் கைகளை மடக்கி மேல் தூக்குதல், கைகளால் எடுத்துக் கொண்டு போதல், அப்புறம் தள்ளுதல், கைகால்களை நீட்டவொட்டாமல் மடக்குதல், இவைகளால் ஒருவர் தேஹத்தை (உடலை) ஒருவர் பீடித்தார்கள். ராஜனே! அப்பொழுது மடந்தையர்கள் எல்லாரும் கூட்டங்கூட்டமாய் ஒன்று சேர்ந்து, ராம க்ருஷ்ணர்களிடத்தில் மன இரக்கமுற்று, ஒரு பக்கத்தில் பலமும், ஒரு பக்கத்தில் துர்ப்பலமுமாய் (பலமின்றியும்) இருக்கிறதாகையால், “இது ஸமமான யுத்தமன்று. விஷம யுத்தம்” என்று மொழிந்தார்கள்.

மடந்தையர்கள் சொல்லுகிறார்கள்:- இந்த ராஜ ஸபையில் அதிகரித்தவர்களுக்குப் பெரிய அதர்மமே. ஆ! என்ன வருத்தம்? ஏனென்றால் இவர்கள், துர்ப்பலர்களான (பலம் குறைந்த) பாலர்களும், பலிஷ்டர்களான (பலம் மிகுந்த) மல்லர்களும், சண்டை செய்வதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். அரசன் இந்த விஷம யுத்தத்தைப் பார்ப்பானாயின், ஸபையினர் கூடாதென்று தடுக்கவேண்டும். அரசன் பார்த்துக் கொண்டிருக்கையில், தாங்களும் ஸம்மதித்திருக்கின்றார்களல்லவா? ஸமஸ்த அங்கங்களும் வஜ்ராயுதம் போல உறுதியாயிருக்கப் பெற்றவர்களும், பெரிய மலை போன்றவர்களுமாகிய இந்த மல்லர்கள் எங்கே? மிகவும் மென்மைக்கிடமான அங்கங்களுடையவர்களும், யௌவன (வாலிப) வயது நேரப் பெறாதவர்களுமாகிய இந்தக் குழந்தைகள் எங்கே? (ஆகையால், பலிஷ்டர்களையும் (பலம் மிகுந்தவர்களையும்), துர்ப்பலர்களையும் (பலம் குறைந்தவர்களையும்) சண்டைக்கு விட்டு வேடிக்கை பார்ப்பது யுக்தமன்று (ஸரியன்று)). ஆகையால், இந்த ஸபைக்குப் பெரிய அதர்மம் உண்டாகும். இது நிச்சயம். ஆனால், என்ன செய்யலாம்? எவ்விடத்தில் அதர்மம் உண்டாகுமோ, அவ்விடத்தில் ஒரு க்ஷணங்கூட இருக்கலாகாது. அப்புறம் போக வேண்டும். 

பண்டிதனாயிருப்பவன், ஸபையினருக்கு நேரும் தோஷங்களை நினைத்து, ஸபைக்குள் நுழையலாகாது. தெரிந்து சொல்லாதிருப்பினும், தெரியாமல் விபரீதமாகச் சொல்லினும், தெரிந்திருக்கையில் தெரியாதென்று சொல்லினும், பயத்தை அடைவான். ஆகையால், ஸபையில் நுழையலாகாது. சத்துருவைச் சுற்றிச் சுழன்று,  இந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய தாமரை முகம் வேர்வைத் துளிகளால் நிறைந்து, ஜலத்துளிகள் நிறைந்த கமலம் போல் திகழ்கின்றது, பாருங்கள். முழுவதும் சிவந்த கண்களுடையதும், முஷ்டிகன் மேல் கோபமுற்றிருப்பதும், சிரிப்பு, பரபரப்பு இவைகளால் அழகாயிருப்பதுமாகிய பலராமனுடைய முகத்தை நீங்கள் ஏன் பார்க்கலாகாது? பாருங்கள். 

தான் புராண புருஷனாகிய ஸ்ரீமந் நாராயணனாயிருந்தும், மானிட உருவத்தினால் தன் ஸ்வரூப குணாதிகளை மறைத்துக் கொண்டு, காட்டில் பூத்த அற்புதமான புஷ்பங்களால் தொடுக்கப்பட்ட பூமாலையை அணிந்து, ருத்ரன் முதலிய ஸகல தேவதைகளாலும், ஸ்ரீமஹாலக்ஷ்மியாலும் பூஜிக்கப்பட்ட பாதார விந்தங்களுடையவனாகிப் பலராமனுடன் கூடி வேணுகானம் (குழல் இசை) செய்வதும், பசுக்களை மேய்ப்பதும், விளையாடுவதுமாகி எவ்விடத்தில் ஸுகமாக உலாவிக்கொண்டிருந்தானோ, அத்தகைய கோகுலத்தின் ப்ரதேசங்களே புண்யமானவை. இவனை அவமதிக்கின்ற இந்த ஸபையோவென்றால், பாபிஷ்டமே (பாபம் மிகுந்ததே). ஆ! கோபிகைகள் என்ன தவம் செய்தார்களோ? அளவற்ற லாவண்யமுடையதும், இணையெதிரில்லாததும், ஆபரணம் முதலிய வேறு ஸம்ஸ்காரங்களை எதிர்பாராமல் தானே அழகாயிருப்பதும், கர்மாயத்தம் (முன்வினைப் பயனால்) ஆகாமல் ஸங்கல்ப ஸித்தமாயிருப்பதும், புகழ், செல்வம், ஐச்வர்யம் இவற்றிற்கு என்றும் மாறாத இடமாயிருப்பதும், எப்பொழுதும் புதிது புதிதாயிருப்பதும், புண்யம் செய்யாதவர்களுக்குக் கண்களால் காணவும் கூட நேராததுமாகிய இந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய திவ்யமங்கள விக்ரஹத்தைக் கண்குளிரக் காண்கின்றார்களல்லவா? அத்தகைய இவ்வுருவத்தை அஸமயத்தில் (ஸரியற்ற நேரத்தில்) காணப் பெற்ற நாம் பாக்யமற்றவர்களே. 

த்ரிவிக்ரமாவதாரம் செய்த மஹானுபாவனாகிய இந்த ஸ்ரீக்ருஷ்ணனையே அனுராகம் (அன்பு, பக்தி, பாசம்) நிறைந்த எண்ணத்துடன் சிந்தித்துக் கொண்டு, ஆனந்த பாஷ்பத்தினால் (கண்ணீரால்) தடுக்கப்பட்ட கண்டமுடையவர்களாகி, பசு கறப்பது, ஜலங்கொண்டு வருவது, தயிர் கடைவது, வீடு மெழுகுவது, ஊசலாடுவது, அழுகிற குழந்தைகளைத் தாலாட்டுவது, ஜலம் தெளிப்பது, வீடு விளக்குவது முதலிய கார்யங்களைச் செய்யும் பொழுதெல்லாம் இவனைப் பாடிக்கொண்டிருந்து, பொழுது போக்குகிற கோப ஸ்த்ரீகள், பாக்யவதிகளென்பதில் ஸந்தேஹம் என்ன? மற்றும், கோகுலத்திலுள்ள பெண்மணிகள், இந்த ஸ்ரீக்ருஷ்ணன் சாலையில் இடைச்சேரியினின்று பசுக்களை மேய்க்கப் போகும் பொழுதும், மாலையில் பசுக்களை ஓட்டிக்கொண்டு திரும்பி வரும் பொழுதும், வேணுகானம் (குழல் இசை) செய்வதைக் கேட்டு விரைந்தோடி வந்து, புன்னகையமைந்த முகமுடையவனும், அருள் நிறைந்த கண்ணோக்கம் உடையவனுமாகிய இவனை, வழியில் காண்கிறார்களாகையால் மிகவும் புண்யவதிகள். (இவனை இவ்வாறு கண்டனுபவிக்கப்பெற்ற அம்மாதரசிகளின் புண்ய மஹிமையை என்னென்று சொல்ல முடியும்?)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பரத குலாலங்காரனே! ஸ்த்ரீகள் இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கையில், யோகேச்வரனும், (அற்புத சக்திகள் அமைந்தவனும்) தன்னைப் பற்றினவர்களின் மன வருத்தங்களைப் போக்கும் தன்மையனுமாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ண பகவான், சத்ருவைக் (எதிரியை) கொல்ல மனங்கொண்டான். அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய தாய், தந்தையர்கள், ஸ்த்ரீகளின் வார்த்தைகளைக் கேட்டு, பிள்ளைகளிடத்திலுள்ள ஸ்னேஹத்தினால் இவர்களுக்கு என்ன கெடுதி வருமோ என்னும் சோகம் உண்டாகப் பெற்று வருந்தி, அவர்களுடைய பலத்தை அறியாமல் பரிதபித்தார்கள். ஸ்ரீக்ருஷ்ணனும் சாணூரனும் கைச் சண்டையில் ஏற்பட்ட அந்தந்த விதிகளின் படி எவ்வாறு சண்டை செய்தார்களோ, அவ்வாறே பலராமன் முஷ்டிகன் ஆகிய இவ்விருவர்களும் சண்டை செய்தார்கள். 

சாணூரன் இடி விழுவது போல மிகவும் கடோரங்களாயிருக்கின்ற (கடினமான) ஸ்ரீக்ருஷ்ணனுடைய முட்டி, முழங்கால் முதலிய அங்கங்களின் அடிகளால் அங்கங்களெல்லாம் முறியப் பெற்று, அடிக்கடி வாட்டம் அடைந்தான் (களைப்புற்றான்). பருந்தின் வேகம் போன்ற வேகமுடைய அந்தச் சாணூரன் உயரக் கிளம்பி, கோபமுற்று, இரண்டு கை விரல்களையும் முட்டியாக மடக்கிக்கொண்டு, வாஸுதேவனுடைய மார்பில் அடித்தான். மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், புஷ்ப மாலைகளால் அடிக்கப்பட்ட யானை போல அந்த அடிக்குச் சிறிதும் சலிக்காதிருந்தான். அன்றியும், அவன் சாணூரனை இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டு, பல தடவைகள் சுழற்றி, அவ்வளவில் உயிரையிழந்த அச்சாணூரனைப் பூமியில் வீசி அறைந்தான். அவன், அதனால் தலை மயிர்களும், ஆபரணங்களும், பூமாலையும் கலையப்பெற்று, இந்த்ர த்வஜம்போல (இந்த்ரனது கொடிமரம் போல) விழுந்தான். முஷ்டிகனும் அவ்வாறே பலராமனை முட்டியால் அடிக்க, அப்பலராமன் அவனைக் கையால் அறைந்தான். அவ்வாறு அடிக்கப்பட்ட அம்முஷ்டிகன் வருந்தி, நடுக்கமுற்று, முகத்தினால் ரக்தத்தைக் கக்கிக்கொண்டு, ப்ராணன்களை (உயிரை) இழந்து, பெருங்காற்றினால் வேருடன் பிடுங்கப்பட்ட வ்ருக்ஷம் (மரம்) போல, பூமியில் விழுந்தான். 

ராஜனே! அப்பால் கூடனென்னும் மல்லன் மேல்விழுந்து வர, யுத்தம் செய்பவர்களில் சிறந்த பலராமன், அவனை ஒரு பொருளாக நினைக்காமல், அவலீலையாக (விளையாட்டாக) இடக்கை முட்டியால் அடித்துக் கொன்றான். அவ்வாறே, சலனென்னும் மல்லன், ஸ்ரீக்ருஷ்ணனுடைய நுனிப்பாதத்தினால் தலையில் அடிக்கப்பட்டும், தோசலனென்பவன் இரு பிளவாகப் பிளக்கப்பட்டும், இருவரும் மாண்டு பூமியில் விழுந்தார்கள். இவ்வாறு சாணூரன், முஷ்டிகன், கூடன், சலன், தோசலன் என்னும் இவ்வைந்து மல்லர்களும் மாண்டு போகையில், மற்ற மல்லர்கள் அனைவரும், ப்ராணன்களைப் (உயிரை) பாதுகாத்துக் கொள்ள விரும்பி, ஓடிப் போனார்கள். 

அனந்தரம் (பிறகு), ராம க்ருஷ்ணர்கள் நண்பர்களான கோபர்களை அழைத்து, அவர்களுடன் கலந்து, வாத்யங்கள் முழங்கிக் கொண்டிருக்கையில், அழகிய தண்டைகளுடன் நர்த்தனம் முதலியன செய்து கொண்டு விளையாடினார்கள். அப்பொழுது, கம்ஸனைத் தவிர மற்ற ஜனங்கள் எல்லாரும் ராம க்ருஷ்ணர்கள் செய்த மல்ல யுத்தத்தைக் கண்டு மிகவும் ஸந்தோஷம் அடைந்தார்கள். அவ்வாறே ஸாதுக்களான ப்ராஹ்மண ச்ரேஷ்டர்களும் நல்லது நல்லதென்று மொழிந்தார்கள். இவ்வாறு மல்ல ச்ரேஷ்டர்களான சாணூராதிகள் முடிந்து போகையில், கம்ஸன் வாத்யகோஷங்களை நிறுத்தி, மேல் வருமாறு கூறினான். 

கம்ஸன் சொல்லுகிறான்:- கெடு நடத்தையுடையவர்களாகிய இந்த வஸுதேவ புத்ரர்களைப் பட்டணத்தினின்று துரத்தி விடுவீர்களாக. கோபர்களின் தனத்தைப் (செல்வத்தை) பறியுங்கள். துர்ப்புத்தியுடைய (கெட்ட புத்தி உடைய) நந்தனைச் சிறையில் அடையுங்கள். மிகவும் துஷ்டனாகிய (கொடியவனாகிய) வஸுதேவனை, சீக்கிரம் வதியுங்கள். அவ்வாறே நம் தந்தையாகிய உக்ரஸேனனும் சத்ரு (எதிரி) பக்ஷத்தில் உட்பட்டவனாகையால், அவனையும், அவனைச் சேர்ந்தவர்களையும், கொன்று விடுங்கள்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு கம்ஸன் பிதற்றிக்கொண்டிருக்கையில், நிர்விகாரனான ஸ்ரீக்ருஷ்ண பகவான் மிகவும் கோபமுற்று, லாகவத்தினால் (எளிதில்) உயரக் கிளம்பி, பலத்தினால் விரைந்து, கம்ஸன் உட்கார்ந்திருக்கின்ற உயர்ந்த மஞ்சத்தின் (ஆஸனத்தின்) மேல் ஏறினான். மன உறுதியுடைய அக்கம்ஸன், தன் ம்ருத்யுவாகிய (யமனாகிய) ஸ்ரீக்ருஷ்ணன் தன்மேல் எதிர்த்து வருவதைக் கண்டு, தத்காலத்திற்குத் (அந்த சமயத்திற்குத்) தகுந்தபடி செய்ய வேண்டியதை அறிந்தவனாகையால், ஆஸனத்தினின்று விரைவுடன் எழுந்து, கத்தி கேடயங்களை எடுத்துக் கொண்டான். 

பிறரால் பொறுக்க முடியாத வேகமுடையவனும், மஹானுபாவனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன், கருடன் ஸர்ப்பத்தைப் பலாத்காரமாகப் பிடித்துக் கொள்வது போல, கத்தியைக் கையில் பிடித்து, வலம், இடம், ஆகாயம் இவற்றில் பருந்து போல் ஸஞ்சரிக்கின்ற அக்கம்ஸனைப் பிடித்துக் கொண்டான். அப்பரமபுருஷன், கம்ஸனைத் தலை மயிர்களில் உறுதியாகப் பிடித்துக்கொண்டு, வேகத்தில் கழன்ற கிரீடத்தையுடைய அக்கம்ஸனை உயர்ந்த மஞ்சத்தினின்று யுத்தரங்கத்தினிடையில் விழத்தள்ளி, பத்மநாபனும், ஜகத்திற்கெல்லாம் (உலகிற்கு) ஆதாரனும் (அச்சாரமும்), ஸ்வதந்த்ரனும் (தன் இச்சைப்படி செயல்படுபவரும்), ஷாட்குண்ய பூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) தான் அவன்மேல் விழுந்தான். பிறகு, ஜனங்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், ஸிம்ஹம் யானையை இழுப்பது போல, ப்ராணன்களை (உயிரை) இழந்த கம்ஸனை, ஸ்ரீக்ருஷ்ணன் பிடித்திழுத்தான். 

மன்னவனே! அப்பொழுது ஜனங்கள் எல்லோரும் உரக்க ஆ! ஆ! என்று கோஷமிட்டார்கள். அந்தக் கம்ஸன், எப்பொழுதும் பயந்த மனமுடையவனாகி, பருகுவது, புசிப்பது, உலாவுவது, உறங்குவது, மூச்சு விடுவது முதலிய எல்லாக் காலங்களிலும், ஸர்வேஸ்வரனும், சக்ராயுதம் தரித்தவனுமாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணனையே எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தானாகையால், பிறர்க்குக் கிடைக்க முடியாத அவனுடைய ஸாரூப்யமாகிற (பகவானைப் போன்ற உருவத்தை அடையும்) முக்தியைப் பெற்றான். அனந்தரம் (பிறகு), அந்தக் கம்ஸனுடைய ப்ரதாக்களாகிய கங்கன், க்யக்ரோதன் முதலிய எண்மர் தங்கள் ப்ராதாவான கம்ஸன் விஷயத்தில் தாங்கள் நடத்த வேண்டிய கடமையை நடத்த முயன்று, மிகவும் கோபமுற்று, எதிர்த்து வந்தார்கள். அப்பொழுது, மிகுந்த வேகமும், முயற்சியும் கொண்டிருக்கின்ற அவர்களை, பலராமன் உழல் தடியை ஓங்கி, சிங்கம் பசுக்களை அடிப்பது போல, அடித்து முடித்தான். அப்போது, ஆகாயத்தில் துந்துபி வாத்யங்கள் முழங்கின. ஸ்ரீக்ருஷ்ணனுடைய பரிவாரங்களாகிய ப்ரஹ்ம, ருத்ராதிகள் புஷ்பங்களைப் பெய்து, மிகவும் களித்து, அவனைத் துதித்தார்கள். அப்ஸர மடந்தையர்கள், நர்த்தனம் (நடனம்) செய்தார்கள். 

மஹாராஜனே! அந்தக் கம்ஸன், கங்கன் முதலியவர்களின் மனைவிகள், தங்கள் அன்பர்களாகிய கணவர்கள் மரணம் அடைந்தமையால் துக்கித்து, தங்கள் தலைகளைப் புடைத்துக் கொண்டு, கண்ணும் கண்ணீருமாகி, அவ்விடம் வந்தார்கள். அம்மாதரசிகள், வீரர்களின் படுக்கையாகிய யுத்த பூமியில் விழுந்து முடித்திருக்கின்ற தங்கள் கணவர்களை எடுத்தணைத்து, சோகித்து, அடிக்கடி கண்ணீர்களைப் பெருக்கிக் கொண்டு, இனிய குரலுடன் புலம்பினார்கள்.

ஸ்த்ரீகள் சொல்லுகிறார்கள்:- ஓ நாதா! நண்பனே! தர்மங்களை அறிந்தவனே! மன இரக்கத்திற்கிடமான அநாதர்களிடத்தில் (தலைவன், காப்பாற்றுபவர் இல்லாதவரிடத்தில்) வாத்ஸல்யம் (பரிவு) உடையவனே! நீ முடிகையில், உன் க்ருஹங்களும், ப்ரஜைகளும், நாங்களும் உன்னுடன் கூடவே முடிந்தோம். புருஷ ச்ரேஷ்டனே! ப்ரபுவாகிய உன்னைப் பிரிந்த இப்பட்டணம், எங்களைப்போல உத்ஸவங்களும், ஸுகங்களும் தொலையப் பெற்றிருக்கின்றது. நாதனே! நீ நிரபராதிகளான பூதங்களுக்குப் பொறுக்க முடியாத த்ரோஹத்தைச் செய்தாயாகையால், இத்தசையை அடைந்தாய். பூதங்களுக்கு த்ரோஹம் செய்பவன் எவன்தான் ஸுகத்தை அடைவான்? எவனும் ஸுகத்தை அடையமாட்டான். துக்கத்தையே அடைவான். மற்றும், இந்த ஸ்ரீக்ருஷ்ணன் ஸமஸ்த பூதங்களுக்கும், ஸ்ருஷ்டி கர்த்தாவான பரமபுருஷன். கடைசியில், ஜகத்தையெல்லாம் ஸம்ஹாரம் செய்பவனும், இவனே; இடையில், பாதுகாப்பவனும் இவனே, ஆகையால், இவனை அவமதிக்கும் தன்மையுடையவன், எங்கும் ஸுகமாக வளரமாட்டான்; துக்கத்தையே அடைவான்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- உலகங்களுக்கெல்லாம் நன்மையை விளைப்பவனாகிய ஸ்ரீகிருஷ்ணன், இவ்வாறு சோகிக்கின்ற ராஜ பார்யைகளை (அரசனின் மனைவிகளை) ஸமாதானப்படுத்தி, மாண்டவர்களுக்கு நடத்த வேண்டிய தஹனாதி (எரித்தல் முதலிய) ஸம்ஸ்காரங்களை (சடங்குகளை) நடப்பித்தான். அப்பால், ராம க்ருஷ்ணர்கள், தாய், தந்தையர்களான தேவகி, வஸுதேவர்களை சிறையினின்று விடுவித்து, அவர்களுடைய பாதங்களில் விழுந்து நமஸ்காரம் செய்தார்கள். தேவகியும், வஸுதேவனும் அவ்வாறு வந்தனம் செய்கின்ற பிள்ளைகளை ஜகதீச்வரர்களென்று தெரிந்து கொண்டும், மனத்தில் சங்கையின்றி (ஸந்தேஹமின்றி) ஆலிங்கனம் செய்து (அணைத்துக்) கொண்டார்கள். 

நாற்பத்து நான்காவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை