ஶ்ரீமத் பாகவதம் - 259

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – நாற்பத்து மூன்றாவது அத்தியாயம்

(ஸ்ரீராம க்ருஷ்ணர்கள், குவலயாபீடமென்னும் கஜத்தையும் (யானையையும்), பாகனையும் வதித்து, மல்லரங்கத்திற்குள் நுழைதலும், ஜனங்கள் அவர்களைப் பற்றிப் பேசுதலும், சாணூரனுக்கும் ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் ஸம்பாஷணமும் (உரையாடலும்))

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- சத்ருக்களைஅழிப்பவனே! பிறகு, மற்றை நாள் காலையில் ராமனும், க்ருஷ்ணனும் ஸ்னானாதி கர்மங்களை முடித்துக் கொண்டு, மல்லர்களின் கோஷத்தையும் துந்துபி வாத்யங்களின் முழக்கத்தையும் கேட்டு, அதைப் பார்க்க வந்தார்கள். ஸ்ரீக்ருஷ்ணன், மல்லரங்கத்தின் வாசலில் வந்து அங்கு யானைப் பாகனால் தூண்டப்பட்டு நின்றிருக்கின்ற குவலயாபீடமென்னும் கஜத்தைக் (யானையைக்) கண்டான். ஸ்ரீக்ருஷ்ணன், அரைத்துணியை இழுத்துக் கட்டிச் சுருண்டு இருண்ட முன்னெற்றிக் குழல்களை ஒதுக்கி, மேக கர்ஜனம் போல் கம்பீரமான ஒலியுடன் யானைப் பாகனைப் பார்த்து மொழிந்தான்.

ஸ்ரீக்ருஷ்ணன் சொல்லுகிறான்:- ஓ, யானைப்பாகனே! யானைப்பாகனே! வழிவிட்டு ஒதுங்கிப் போவாயாக. கால தாமதம் செய்ய வேண்டாம். வழி விட மாட்டாயாயின், இப்பொழுது யானையுடன் உன்னைக் கொன்று யமலோகத்திற்கு அனுப்பி விடுகிறேன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு விரட்டப்பட்ட அந்த யானைப் பாகன் கோபமுற்று, கோபமுற்றிருப்பதும், மிருத்யு, காலன், யமன் இவர்களை நிகர்த்திருப்பதுமாகிய யானையை ஸ்ரீக்ருஷ்ணன் மேல் தூண்டினான். யானைகளில் சிறந்த அந்தக் குவலயாபீடம், க்ருஷ்ணனை எதிர்த்துப் பலாத்கரித்துத் (பலத்துடன்) துதிக்கையினால் அவனைப் பிடித்துக் கொண்டது. அந்த ஸ்ரீக்ருஷ்ணன், அதன் துதிக்கையினின்று நழுவி, அதை அடித்து, அதன் கால்களில் மறைந்து கொண்டான். யானை அவனைக் காணாமல் மிகவும் கோபாவேசமுற்று, க்ராணேந்த்ரியத்தினால் (மோப்பத்தால்) கண்டறியும் தன்மை உடையதாகையால், மோந்து பார்த்து, அவனிருக்குமிடம் தெரிந்து கொண்டு, அவனைத் துதிக்கையால் ஸ்பர்சித்தது (தொட்டது). அந்த ஸ்ரீக்ருஷ்ணன், பலாத்காரமாக வெளிப்பட்டு, மிகுந்த பலமுடைய அந்த யானையை வாலில் பிடித்துக் கொண்டு, கருடன் ஸர்ப்பத்தை அவலீலையாக (விளையாட்டாக) இழுப்பது போல, இருபத்தைந்து வில்லளவு தூரம் பிடித்திழுத்தான். அப்பகவான், வாலைப் பிடித்துக் கொண்டிருக்கின்ற தன்னைப் பிடித்துக் கொள்ள, யானை வலப்புறத்தில் திரும்பும் பொழுது இடப்புறத்தில் இழுப்பதும், இடப்புறத்தில் திரும்பும் பொழுது வலப்புறத்தில் பிடித்திழுப்பதுமாகி, தான் குழந்தையாயிருக்கும் பொழுது பசுவின் கன்றின் வாலைப் பிடித்திழுத்து அத்துடன் சுற்றுவது போல இருபுறமும் தன்னைப் பிடிப்பதற்காகச் சுழல்கின்ற அந்த யானையுடன் தானும் சுழன்று கொண்டிருந்தான். 

அப்பால் அந்த ஸ்ரீக்ருஷ்ணன், யானைக்கு எதிரே வந்து, அதைக் கையால் அடித்து ஓடிப் போனான். ஓடும் பொழுது, அடிகள் தோறும் யானையால் ஸ்பர்சிக்கப்பட்டு (தொடப்பட்டு), அதன் கையில் அகப்படுகிறது போலவேயிருந்து, அகப்படாமலே அதை ஏமாற்றி, ஓடிக் கீழ் விழச் செய்தான். அந்த யானை விழும் பொழுது, ஸ்ரீக்ருஷ்ணனும் ஓடிக் கொண்டேயிருந்து, விளையாட்டிற்காகக் கீழ் விழுவதும், கீழ் விழுந்ததைக் கண்டு அது எதிர்த்தோடி வருகையில், அங்கிருந்து விரைந்தெழுந்து ஓடுவதுமாயிருந்தான். யானையோவென்றால், அவன் அதே இடத்தில் விழுந்திருக்கிறானென்று நினைத்து, கோபத்தினால் மெய் மறந்து, தந்தங்களால் பூமியை இடித்துக் கொண்டிருந்தது. அந்த யானை, இவ்வாறு தன் பராக்ரமம் (தாக்குதல்) வீணாவதைக் கண்டு கோபம் மாத்ரமே மிகப்பெற்று, பின்னால் பலாத்காரமாகத் தூண்டப்பட்டு, ஸ்ரீக்ருஷ்ணன் மேல் கோபத்துடன் எதிர்த்து வந்தது. 

அப்பொழுது, மஹானுபாவனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன், தன்மேல் எதிர்த்து வருகின்ற யானையைக் கிட்டி, தன் கையினால் அதன் துதிக்கையைப் பிடித்துக் கொண்டு, அதைப் பூமியில் விழத் தள்ளினான். விழுந்திருக்கின்ற அந்த யானையைப் பாதத்தினால் அமுக்கி, ஸிம்ஹம் போல அவலீலையாக (விளையாட்டாக) அதன் தந்தத்தைப் பிடுங்கிக் கொண்டு, அந்தத் தந்தத்தினாலேயே யானைப் பாகனை அடித்தான். கையில் தந்தத்தை ஏந்தின அந்த ஸ்ரீக்ருஷ்ணன், மரணம் அடைந்த யானையைத் துறந்து, அப்பால் அந்த யானையின் தந்தக் கொம்பைத் தோள் மேல் சாய்த்துக் கொண்டு, உள்ளே நுழைந்தான். அப்பரமபுருஷன், யானையின் ரக்தம், மதஜலம் இவற்றின் பிந்துக்களால் (துளிகளால்) அடையாளமுடையவனும், தாமரை மலர் போன்ற முகத்தில் வியர்வைத் துளிகள் உண்டாகப் பெற்றவனுமாகி விளங்கினான். 

மன்னவனே! ராம க்ருஷ்ணர்கள், சில கோபர்களால் சூழப்பட்டு, யானையின் தந்தங்களையே சிறந்த ஆயுதங்களாகக் கொண்டு, மல்லர்கள் விளையாடுமிடமாகிய அரங்கத்திற்குள் நுழைந்தார்கள். மல்லர்களால் இடியென்றும், ஸாதாரண மனுஷ்யர்களால் மனுஷ்ய ச்ரேஷ்டனென்றும், ஸ்த்ரீகளால் உருவங்கொண்ட மன்மதனென்றும், கோபர்களால் பந்துவென்றும், துஷ்டர்களான மன்னவர்களால் நம்மை அடக்க வந்தவனென்றும், தாய் தந்தைகளால் குழந்தையென்றும், கம்ஸனால் ம்ருத்யுவென்றும், மூடர்களால் கேவல தேஹமென்றும் (வெறும் உடல் என்றும்), யோகிகளால் பரதத்தவமென்றும், வ்ருஷ்ணிகளால் பரதேவதையென்றும் அறியப்பட்ட அந்த ஸ்ரீக்ருஷ்ணன், தமையனோடு கூட அரங்கத்திற்குள் நுழைந்தான். 

மன்னவனே! கம்ஸன் குவலயாபீடம் கொல்லப்பட்டதைக் கண்டு, அதனால் அந்த ராம-க்ருஷ்ணர்கள் ஜயிக்க முடியாதவர்களென்று தெரிந்து கொண்டு, தீரனாயினும் மிகவும் பயமுற்றான். விசித்ரமான வேஷமும், ஆபரணங்களும், பூமாலையும், ஆடைகளும் தரித்து, நீண்ட புஜ தண்டங்களை உடையவர்களுமாகிய அந்த ராம க்ருஷ்ணர்கள், யுத்தரங்கத்திற்குள் நுழைந்து, தங்கள் தேஹ காந்தியால் (உடல் ஒளியினால்) காண்போர்களின் மனத்தைக் கலக்கச் செய்து கொண்டு, சிறந்த வேஷந்தரித்த நடராஜர்கள் போல விளங்கினார்கள்.

மன்னவனே! பட்டணத்து ஜனங்களும், நாட்டுப் புறத்து ஜனங்களும், புருஷோத்தமர்களாகிய அந்த ராம க்ருஷ்ணர்களைக் கண்டு, ஸந்தோஷத்தின் மிகுதியால் முகமெல்லாம் கண்களேயென்னும்படி கண்கள் மலரப் பெற்று, கண்களாகிற பாத்ரங்களால் அவர்கள் முகத்தின் அழகாகிற அம்ருதத்தைச் சிறிதும் த்ருப்தியின்றிப் பானம் செய்தார்கள். ஜனங்கள், அந்த ராம க்ருஷ்ணர்களைக் கண்களால் பருகுபவர் போலவும், நாக்கினால் நக்குபவர் போலவும், புஜங்களால் (கைகளால்) அணைப்பவர்கள் போலவும் தோன்றினார்கள். அவர்கள், அந்த ராம க்ருஷ்ணர்களின் அழகிய உருவம், குணங்கள், இனிமை, தைரியம் இவைகளால் நினைவு மூட்டப்பட்டவர்கள் போன்று தாங்கள் எதை எவ்வாறு பார்த்தார்களோ, எவ்வாறு கேட்டார்களோ, அதையெல்லாம் அவ்வாறே ஒருவர்க்கொருவர் மொழிந்து கொண்டார்கள்.

ஜனங்கள் சொல்லுகிறார்கள்:- ஒன்றான ஸ்ரீமந்நாராயணனே வஸுதேவனுக்கு அவன் பத்னியாகிய தேவகியிடத்தில் தன் ஸங்கல்பத்தினால் இந்த ராம க்ருஷ்ணர்களாக அவதரித்தான். இந்த ஸ்ரீக்ருஷ்ணன், தேவகியிடத்தில் பிறந்தவுடனே, வஸுதேவனால் கோகுலத்தில் கொண்டு விடப்பட்டான். இவன், இதுவரையில் நந்தனுடைய க்ருஹத்தில் மறைந்து வளர்ந்து வந்தான். இவன், பூதனையை வதித்தான்; சுழல் காற்றினுருவம் கொண்டு வந்த த்ருணாவர்த்தனென்னும் அஸுரனையும் இவன் வதித்தான்; மருத மரங்களை வேரோடு முறித்து விழத் தள்ளினான்; தேனுகன், கேசி, சங்கசூடன் இவர்களும், இவர்களைப் போன்ற மற்றும் பலர்களும் இவனால் முடிக்கப்பட்டார்கள். இவனே கோக்களையும், கோபாலர்களையும் காட்டுத் தீயினின்று விடுவித்தான். காலியனென்னும் ஸர்ப்பத்தைச் சிக்ஷித்தான் (தண்டித்தான்); இந்த்ரனுடைய கர்வத்தை அடக்கினான். இவன், பர்வதங்களில் சிறந்த கோவர்த்தன கிரியை ஏழு நாள் வரையில் ஒற்றைக் கையால் தாங்கிக் கொண்டிருந்து, மழை, காற்று, இடி இவற்றினின்று கோகுலத்தைக் காத்தான். 

கோபிகைகள் என்றும் ஸந்தோஷமுற்ற புன்னகையும், நோக்கமும் அமைந்த இந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்து, ஆத்யாத்மிகம் முதலிய தாபங்களையெல்லாம் {ஆத்யாத்மிகம் (சரீரத்திற்கு ஏற்படும் தலைவலி, சளி முதலிய நோய்கள் மற்றும் மன நோய்களான காமம், கோபம், பயம் முதலியன) ஆதிதெய்விகம் (குளிர், சூடு, மழை முதலியவற்றால் ஏற்படும் துன்பங்கள்), ஆதிபௌதிகம் (ம்ருகம், பறவை, மனிதர் முதலியவற்றால் வரும் துன்பங்கள்) என்று மூன்று வகையான துன்பங்களையெல்லாம்} அனாயாஸமாகக் கடந்தார்கள். இந்த யதுவின் வம்சம் இவனால் பாதுகாக்கப்பட்டு, மிகவும் பரந்த செல்வம், புகழ், பெருமை இவைகளை அடையப் போகின்றதென்று சொல்லுகிறார்கள். இவனுடைய தமையனாகிய இந்தப் பலராமன், தாமரையிதழ் போன்ற கண்களுடையவன்; கல்யாண குணங்களெல்லாம் அமைந்தவன். ப்ரலம்பன், வத்ஸன், தேனுகன் முதலியவர்களை இவன் கொன்றான்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஜனங்கள் இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கையில், வாத்யங்களும் முழங்கப்பட்டிருக்கையில், சாணூரன் ஸ்ரீக்ருஷ்ணனையும், பலராமனையும் அழைத்து மொழிந்தான்.

சாணூரன் சொல்லுகிறான்:- ஓ நந்த குமாரர்களே! க்ருஷ்ணா! ஓ பலராமா! நீங்கள், வீரர்களால் மிகவும் புகழப்பட்டவர்கள். நீங்கள், மல்ல யுத்தத்தில் ஸமர்த்தர்களென்று கேள்விப்பட்டு, உங்கள் யுத்தத்தைப் பார்க்க விரும்பி, மன்னவன் உங்களை வரவழைத்தான். ப்ரஜைகள், மனம், செயல், வாக்கு என்னும் இம்மூன்று கரணங்களாலும், அரசனுக்கு ப்ரியம் செய்வார்களாயின், நன்மையைப் பெறுவார்கள்; அப்ரியம் (விரும்பாததை) செய்யின், துக்கத்தைப் பெறுவார்கள். இடையர்கள் என்றும் களிப்புற்றுக் கன்று மேய்க்கும் நாள் முதல் பசுக்களை மேய்க்கும் நாள் வரையில், வனத்தில் மல்ல யுத்தம் செய்து விளையாடிக் கொண்டே பசுக்களை மேய்ப்பது வழக்கமல்லவா? (ஆகையால், நீங்கள் கைச் சண்டையில் வல்லவர்களேயென்பதில் ஸந்தேஹம் என்ன?) ஆகையால், நீங்களும் நாங்களும் மன்னவனுக்கு ப்ரியம் செய்வோம். மன்னவன் ஸந்தோஷம் அடைவானாயின், ஸமஸ்த பூதங்களும் நமக்கு அருள்புரியும். ஏனென்றால், மன்னவன் ஸர்வபூத ஸ்வரூபனல்லவா (எல்லா பிராணிகளின் வடிவம் அல்லவா)?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸ்ரீக்ருஷ்ணன் அதைக் கேட்டு, மல்ல யுத்தத்தைத் தனக்கு இஷ்டமாகவே ஒப்புக் கொண்டு, அவன் வார்த்தையைப் புகழ்ந்து, தேச காலங்களுக்கு உரியபடி மொழிந்தான்.

ஸ்ரீக்ருஷ்ணன் சொல்லுகிறான்:- காட்டில் திரிகிற நாங்களும், இந்த மன்னவனுக்கு ப்ரஜைகளே. நாங்களும், அவனுக்கு என்றும் பிரியம் செய்ய வேண்டியவர்களே. எங்கள் செயலால் மன்னவன் ப்ரீதி அடைவானாயின், அது எங்களுக்கு மேலான அனுக்ரஹம். ஆனால், நாங்கள் அறியாத இளைஞர்கள். ஆகையால், எங்களோடொத்த பலமுடையவர்களோடு  நாங்கள் விளையாடுகிறோம். எங்களுக்குத் தகுந்தபடி மல்ல யுத்தம் நடக்கட்டும். மல்லனே! அதர்ம யுத்தம் நடக்குமாயின், அதைப் பார்க்கிற ஸபையோர்களுக்கும் அதர்மம் நேரிடும். அது வேண்டாம்.

சாணூரன் சொல்லுகிறான்:- குழந்தையுமன்று; குட்டியுமன்று; நீ, நல்ல யௌவன (இளம்) வயதுடையவன் தான். அதிலும் மிகுந்த பலமுடையவர்களில் சிறந்தவன். ஆயிரம் யானைகளின் பலமுடைய குவலயாபீடமென்னும் யானையை நீ அனாயாஸமாகக் கொன்றாயல்லவா? உன் தமையனாகிய பலராமனும், உன்னைப் போன்ற பலசாலியே. ஆகையால், பலிஷ்டர்களான (பலசாலிகளான) நீங்கள், பலிஷ்டர்களான (பலசாலிகளான) என்னைப் போன்றவர்களோடு தான் யுத்தம் செய்ய வேண்டும். இந்த யுத்தத்தில் அதர்மம் கிடையாது. இது நிச்சயம். வ்ருஷ்ணி வம்ச குமாரனே! நீ என்னுடன் யுத்தம் செய்வாயாக. முஷ்டிகன், பலராமனோடு யுத்தம் செய்யட்டும். 

நாற்பத்து மூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை