சனி, 16 ஜனவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 258

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – நாற்பத்திரண்டாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் கூனியை அநுக்ரஹித்து, வில்லை முறித்து, அதைக் காக்கும் புருஷர்களையும் முடித்துக் கம்ஸனுக்குப் பயத்தை விளைவித்து, தன் விடுதிக்கு போதலும், கம்ஸன் மல்யுத்தத்திற்காக  சபை சேர்த்து  நந்தாதிகளை வரவழைத்தலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அனந்தரம் (பிறகு), ராஜமார்க்கத்தில் போய்க் கொண்டிருக்கின்ற மாதவன், பாத்ரத்தில் அங்கராகத்தை (உடலுக்கான நறுமணப்பூச்சுக்களை) எடுத்துக் கொண்டு போகின்றவளும், யௌவன (இளம்) வயதினால் விளக்கமுற்று அழகிய முகமுடையவளுமாகிய, ஒரு கூனியைக் கண்டு, புன்னகையுடன் மனக்களிப்பை விளைத்துக் கொண்டு, இவ்வாறு மொழிந்தான்.

ஸ்ரீக்ருஷ்ணன் சொல்லுகிறான்:- பெண்மணீ! அழகிய இடையுடையவளே! நீ யார்? இந்தப் பட்டணத்தில் இவ்வங்கராகம் (உடலுக்கான நறுமணப்பூச்சுக்களை) யாருக்குக் கொண்டு போகின்றனை? உண்மையை எனக்குச் சொல்வாயாக. அல்லது யாருக்காவது இருக்கட்டும். சிறந்த இந்த அங்கராகத்தை (உடலுக்கான நறுமணப்பூச்சுக்களை) எங்களுக்குக் கொடுப்பாயாக. அதனால் உனக்குச் சீக்ரத்தில் நன்மை உண்டாகும்.

கூனி சொல்லுகிறாள்:- அழகனே! நான் கம்ஸனுக்கு இஷ்டமான பணிக்காரி; த்ரிவக்ரை என்னும் பெயருடையவள். (கழுத்து, துடை, இடை இம்மூன்றும் கோணலாயிருக்கையால், த்ரிவக்ரை என்னும் பெயர் எனக்கு உண்மையாயிருக்கும்). நான், அக்கம்ஸனால் அங்கராகம் (உடலுக்கான நறுமணப்பூச்சுக்களை) கூட்டிக் கொடுக்கும் கார்யத்தில்  நியமிக்கப்பட்டிருக்கின்றேன். நான் கூட்டிக் கொடுக்கிற அங்கராகம் (உடலுக்கான நறுமணப்பூச்சுக்களை) கம்ஸனுக்கு மிகவும் ப்ரியமாயிருக்கும். அந்த அங்கராகத்தைப் (உடலுக்கான நறுமணப்பூச்சுக்களை) பூச உங்களைத் தவிர மற்ற எவன்தான் உரியவன்? எவனும் உரியவனன்று.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பகவானுடைய அங்க ஸௌஷ்டவம் (வடிவழகு), ஸௌகுமார்யம் (மென்மை), புன்னகை, பேச்சு, நோக்கம் இவைகளால் மனம் பறியுண்டு, ஈரமாயிருக்கின்ற அந்த அங்கராகத்தை (உடலுக்கான நறுமணப்பூச்சுக்களை) ராம க்ருஷ்ணர்கள் இருவர்க்கும் கொடுத்தாள். அனந்தரம் (பிறகு), அவர்கள் தங்கள் மேனியின் நிறத்தைக்காட்டிலும் வேறு நிறமுடையதாகையால் பரபாகத்துடன் (மாறுபட்ட வண்ணமுடைய – contrast ஆக இருக்கக்கூடிய) திகழ்கின்ற அந்த அங்கராகத்தைப் (உடலுக்கான நறுமணப்பூச்சுக்களை) பூசிக்கொண்டு மிகவும் விளங்கினார்கள். மஹானுபாவனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன் அருள் புரிந்து, தன் காட்சியின் பயனைக் காட்ட முயன்று, அழகிய முகமுடைய த்ரிவக்ரையென்னும் பெயர் பூண்ட அக்கூனியைக் கூன் நிமிர்த்து நேராகச் செய்ய மனங்கொண்டான். அப்பரமபுருஷன், அக்கூனியின் நுனிக்கால்களிரண்டையும் தன்பாதங்களால் மிதித்து, இரண்டு விரல்கள் உயரத்தூக்கப் பெற்ற தன் ஹஸ்தத்தினால் (கையினால்) அவளுடைய மோவாயைப் (முகவாய்க்கட்டையைப்) பிடித்துக் கொண்டு, அவள் தேஹத்தை (உடலை) நிமிரத் தூக்கினான். அவள், அப்பொழுதே சரீரம் நேராகி, ஏற்றக் குறைவுகளின்றி ஸமமாயிருக்கப் பெற்று, பருத்த நிதம்பங்களும் (புட்டங்களும்), ஸ்தனங்களுமுடையவளாகி, முகுந்தனுடைய ஸ்பர்சத்தினால் அந்த க்ஷணமே சிறந்த மடந்தையாய் விட்டாள். அப்பால், அழகும், குணங்களும், மேன்மையும் உடைய அம்மாதரசி,  மன்மத விகாரம் (காமக் கிளர்ச்சி) உண்டாகப் பெற்று, புன்னகை செய்து கொண்டே ஸ்ரீக்ருஷ்ணன் உத்தரீயத்தைப் பிடித்திழுத்து மொழிந்தாள்.

கூனி சொல்லுகிறாள்:- வீரனே! எங்கள் வீட்டிற்குப் போவோம்? வருவாயாக. நான் இவ்விடத்தை விட்டுப்போக முடியாதிருக்கின்றேன். புருஷ ச்ரேஷ்டனே! உன்னால் கலக்கப்பட்ட மனமுடைய என் மேல் அருள் புரிவாயாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு அப்பெண்மணியால் பலராமன் பார்த்துக் கொண்டிருக்கையில், வேண்டப்பெற்ற ஸ்ரீக்ருஷ்ணன், தன்னைத் தொடர்ந்து வருகின்ற கோபர்களின் முகத்தையும், ராமனுடைய முகத்தையும் பார்த்துச் சிரித்துக்கொண்டே, இவ்வாறு மொழிந்தான்.

ஸ்ரீக்ருஷ்ணன் சொல்லுகிறான்:- அழகிய புருவங்களுடையவளே! நான் ஒரு ப்ரயோஜனத்தை (பலனை) உத்தேசித்து வந்திருக்கின்றேன். அதை நிறைவேற்றிக் கொண்டு உன் க்ருஹத்திற்கு வருகின்றேன். இப்பட்டணத்தில் எங்களுக்குத் தங்குமிடம் கிடையாது. நாங்கள் வழிப்போக்கர்கள். ஆகையால், எங்களுக்கு நீயே முக்யமான புகுமிடம். கார்யத்தை முடித்துக் கொண்டு அவச்யம் வருகிறேன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸ்ரீக்ருஷ்ணன் இவ்வாறு தேன் போன்ற இனிய உரையினால் ஸமாதானம் சொல்லி, அவளை அனுப்பி, வழியில் தமையனுடன் கொஞ்ச தூரம் நடந்து சென்று, கடைத்தெருவில் நுழைந்து, அங்குப் பல உபஹாரங்களாலும், தாம்பூலம், பூமாலை, சந்தனம் முதலிய கந்தம் இவைகளாலும் பூஜிக்கப்பட்டான். கடைக்காரர்கள், பல காணிக்கைகளையும், தாம்பூலாதிகளையும் கொடுத்து, அந்த ராம க்ருஷ்ணர்களை ஆராதித்தார்கள். அப்பொழுது, பட்டணத்து மடந்தையர்கள், ஸ்ரீக்ருஷ்ணனைக் கண்டதனால் மன்மத விகாரமுற்று (காம கிளர்ச்சி அடைந்து), ஆடை, தலைச் சொருக்கு, கைவளை முதலியவை நழுவப்பெற்று, சித்ரத்தில் எழுதின ப்ரதிமைகள் (பொம்மைகள்) போன்று மெய் மறந்திருந்தார்கள். அப்பால், அவ்வச்சுதன், தனுஸ்ஸு (வில்) வைத்திருக்குமிடம் எதுவென்று பட்டணத்து ஜனங்களை வினவிக் கொண்டு சென்று, அவ்விடத்தில் நுழைந்து, இந்த்ர தனுஸ்ஸுபோல (இந்த்ரனின் வில் போன்று) அற்புதமாயிருக்கின்ற தனுஸ்ஸைக் (வில்லைக்) கண்டான். 

அதைப் பல புருஷர்கள் பாதுகாத்துக் கொண்டிருந்தார்கள். மற்றும், அது பூஜிக்கப்பட்டு,  ஸ்வர்ணாலங்காரம் முதலிய பல மேன்மைகள் அமைந்திருந்தது. அப்பொழுது, அதைப் பாதுக்காக்கும் புருஷர்கள் வேண்டாம் வேண்டாமென்று தடுத்துக் கொண்டிருப்பினும், ஸ்ரீக்ருஷ்ணன் அதைப் பொருள் செய்யாமல் பலாத்காரமாக அந்தத் தனுஸ்ஸை (வில்லை) எடுத்துக் கொண்டான். த்ரிவிக்ரமாவதாரம் செய்த மஹானுபாவனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ண பகவான், அந்தத் தனுஸ்ஸை நிமிஷத்திற்குள் இடக்கையால் அவலீலையாக (விளையாட்டாக) எடுத்து நாணேறிட்டு, ஜனங்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், மத்த கஜம் (மதம் கொண்ட யானை) கரும்பு தடியை முறிப்பது போல இழுத்து இடையில் முறித்தான். 

அப்பொழுது முறிகின்ற அந்தத் தனுஸ்ஸின் த்வனி (ஒலி), அந்தரிக்ஷ லோகத்தையும் (விண் உலகையும்), ஆகாசம், பூமி இவைகளையும், திசைகளையும் நிறைத்து விட்டது. அதைக் கேட்டுக் கம்ஸன் பயம் அடைந்தான். அந்தத் தனுஸ்ஸைக் காக்கும் புருஷர்களும், அவர்களைத் தொடர்ந்த மற்றுமுள்ள பணிக்காரர்களும், அவனை வதிக்க வேண்டுமென்னும் எண்ணத்தினால் ஆயுதங்களையேந்தி அவனைப் பிடிக்க விரும்பி, “பிடியுங்கள், கட்டுங்கள்” என்று மொழிந்து கொண்டே அவனைச்சுற்றிலும் சூழ்ந்தார்கள். அவர்கள் அவ்வாறு கொல்ல வேண்டுமென்னும் கெட்ட எண்ணத்துடன் வருவதைக் கண்டு, ராம-க்ருஷ்ணர்கள் கோபமுற்று, முறிந்து விழுந்திருக்கின்ற தனுஸ்ஸின் துண்டங்களை எடுத்துக்கொண்டு, அவர்களை அடித்து முடித்தார்கள். 

அச்செய்தியை அறிந்த கம்ஸன் ஸைன்யத்தை (படையை) அனுப்ப, அதையும் கொன்று, அப்பால் தனுர்யாகசாலையினின்று புறப்பட்டு, ஆங்காங்குப் பட்டணத்தின் செல்வப் பெருக்குகளைப் பார்த்து மனக் களிப்புற்றுத் திரிந்தார்கள். பட்டணத்து ஜனங்கள் அவர்கள் செய்த தனுர்ப்பங்கம் (வில் முறித்தல்) முதலிய செயலையும், தேஜஸ்ஸு, தைர்யம், உருவம் இவைகளையும் கண்டு, “இவர்கள் ஸாதாரண புருஷர்களன்று; தேவ ச்ரேஷ்டர்களே” என்று நினைத்தார்கள். அந்த ராம க்ருஷ்ணர்கள், அவ்வாறு யதேஷ்டமாகப் (விரும்பியபடி) பட்டணத்தில் உலாவிக் கொண்டிருக்கையில், ஸூர்யன் அஸ்தமித்தான் (மறைந்தான்).

அப்பால், அவர்கள் கோபர்களுடன் வண்டிகள் விட்டிருந்த இடம் போய்ச் சேர்ந்தார்கள். ஸ்ரீக்ருஷ்ணன் கோகுலத்தினின்று புறப்படும்பொழுது அவனைப் பிரிந்திருக்க முடியாமல் வருத்தமுற்ற கோபிகைகள் செய்த ஆசீர்வாதங்களெல்லாம் புருஷச்ரேஷ்டனாகிய ஸ்ரீக்ருஷ்ணனுடைய திருமேனியின் சோபையைக் (அழகைக்) காண்கின்ற மதுராப் புரத்து மடந்தையர்கள் விஷயத்தில் ஸத்யமாயின. ஸ்ரீமஹாலக்ஷ்மி தன்னைப் பணிகின்ற மற்றவர்களையெல்லாம் துறந்து, எவனை மேல்விழுந்து விரும்பினாளோ, அப்படிப்பட்ட புருஷோத்தமனைப் பிரிந்தவர்கள் வருந்துவதும், அவனைக் கண்டு அனுபவிப்பவர்கள் களிப்பதும், யுக்தமேயல்லவா (ஸரிதானே)? அதே ராம க்ருஷ்ணர்கள் விடுதிக்குச் சென்று, கால்களை அலம்பிக்கொண்டு, பால் விட்டுக் கலந்த அன்னத்தைப் புசித்து, மற்றை நாள் கம்ஸன் செய்ய நினைத்திருப்பதை அறிந்தும் சிந்தையின்றி, அவ்விரவு சுகமாகவே வசித்திருந்தார்கள். 

துர்ப்புத்தியுடைய கம்ஸனோவென்றால், ராம க்ருஷ்ணர்கள் அவலீயைாகத் (விளையாட்டாக) தனுர்பங்கஞ் செய்தது (வில்லை முறித்தது), அதைக் காத்துக்கொண்டிருந்த புருஷர்களை வதித்தது, தான் அனுப்பின ஸைன்யத்தையும் (படையையும்) முடித்தது ஆகிய இவையெல்லாவற்றையும் கேட்டு பயந்து, உறக்கமின்றி ஜாகரமே (விழிப்பே) தொடர்ந்து வரப்பெற்று, ம்ருத்யுவுக்குத் (யமனுக்கு, மரணத்திற்கு) தூது செய்பவை போன்ற இருவகை அவசகுனங்களைக் (தீய அறிகுறிகளைக்) கண்டான். (கண் விழித்துக் கொண்டிருக்கும் பொழுது, சில அவசகுனங்களையும் (தீய அறிகுறிகளையும்), தூங்கும்பொழுது சில அவசகுனங்களையும் (தீய அறிகுறிகளையும்) கண்டான்.  ஜாகரிதங்களென்றும் (விழித்திருக்கும் பொழுது ஏற்படுபவை என்றும்) ஸ்வாப்னங்களென்றும் (தூங்கும் பொழுது, கனவு காணும்பொழுது ஏற்படுபவை என்றும்) அவசகுனங்கள் (தீய அறிகுறிகள்) இரு வகைப்பட்டிருக்கும். 

ஜலம் முதலியவற்றில் தன் ப்ரதிபிம்பத்தைக் காணும் பொழுது, அதில் தன் தலையைக் காணாமை, சந்த்ரன் முதலிய சோதிகள் (ஒளிகள்) ஒன்றாயிருப்பினும், இரட்டையாகத் தோற்றுகை, தன் நிழலில் ரந்த்ரம் (ஓட்டை) புலப்படுகை, காது ரந்த்ரங்களை (த்வாரங்களை) மூடினால் கேட்கிற ப்ராண கோஷம் (மூச்சின் ஓசை) கேளாமை, வ்ருக்ஷங்களில் (மரங்களில்) பொன்னிறம் தோற்றுகை, பூமியில் கடக்கும் பொழுது தன் காலடிகள் தெரியாமை ஆகிய ஜாகரித (விழித்திருக்கும் போது ஏற்படும்) அவசகுனங்களையும் (தீய அறிகுறிகளையும்), பிணங்களைக் கட்டிக் கொள்கை, கழுதை மேல் ஏறிக்கொண்டு போகை, தாமரைத் தண்டுகளைப் புசிக்கை, ஜபா புஷ்ப மாலையை அணிந்து எண்ணெய் தேய்த்துக்கொண்டு, அரையில் ஆடையின்றித் தனியே போகை, ஆகிய ஸ்வாப்ன (தூங்கும் பொழுது, கனவு காணும் பொழுது ஏற்படும்) அவசகுனங்களையும் (தீய அறிகுறிகளையும்) கண்டான். மற்றும், இத்தகைய பற்பல காண்கின்ற அக்கம்ஸன், அவற்றால் தனக்கு மரணம் நேரிடுமென்பதை நன்றாக நிச்சயித்து, மிகவும் பயந்து, சிந்தையினால் நித்ரை (தூக்கம்) நேரப்பெறாதிருந்தான்.  

குருவம்சத்தரசர்களில் சிறந்தவனே! இவ்வாறு பெரு வருத்தத்துடன் இரவு பொழுது விடிகையில்,  ஸூர்யனும் ஜலத்தினின்று மேல் கிளம்பி, உதயமாகையில், கம்ஸன் மல்லர்கள் ஒன்று சேர்ந்து விளையாடுகையாகிற மஹோத்ஸவத்தை நடத்தினான். மல்லர்கள் விளையாடுமிடமாகிய அரங்கத்தைப் பணிக்காரர்கள் அலங்கரித்தார்கள். மங்கல வாத்யங்களும், பேரி வாத்யங்களும் முழக்கப்பட்டன. பார்க்க வருகிறவர்கள் உட்காரும் ஆஸனங்களாகிய மஞ்சங்கள், பூமாலைகளாலும், த்வஜங்களாலும் (கொடிகளாலும்) சித்ர வஸ்த்ரங்களாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. 

அப்பால், அந்த மஞ்சங்களில் (மேடையில்) ப்ராஹ்மணர், க்ஷத்ரியர், முதலிய பட்டணத்து ஜனங்களும், காட்டு ஜனங்களும், ஸுகமாக உட்கார்ந்தார்கள். தேசாந்தரங்களினின்று (வேறு தேசங்களிலிருந்து) வந்த ராஜாக்களும், ஸிம்ஹாஸனங்களில் வீற்றிருந்தார்கள். கம்ஸனோவென்றால், மண்டலேச்வரர்களின் இடையில் இருந்து கொண்டு, பரிதபிக்கின்ற மனத்துடன், மந்த்ரிகளால் சூழப்பட்டு, ராஜ மஞ்சத்தின்மேல் (அகண்ட மண்டலேச்வரனான மஹாராஜன் உட்கார வேண்டிய பெரிய ஸிம்ஹாஸனத்தின்மேல்) உட்கார்ந்தான். 

அப்பொழுது மல்லர்கள், தோள் தட்டும் த்வனிகளுடன் (ஒலிகளுடன்) கலந்து, வாத்ய கோஷங்கள் முழங்கிக் கொண்டிருக்கையில், மல்லர்கள் அனைவரும் நன்றாக அலங்கரித்துக்கொண்டு, மல்லாசார்யர்களுடன் அந்த அரங்கத்திற்குள் நுழைந்தார்கள். அவ்வாறே, சாணூரன், முஷ்டிகன், கூடன், சலன், தோசலன் ஆகிய இவர்களும் அழகிய வாத்ய கோஷங்களால் மனக் களிப்புற்று, அவ்விடம் வந்து சேர்ந்தார்கள். நந்தகோபன் முதலிய கோபர்களும், போஜராஜனால் அழைக்கப்பட்டு வந்து, உபஹாரங்களை அம்மன்னவனுக்கு ஸமர்ப்பித்து, ஒரு மஞ்சத்தில் (மேடையில்) உட்கார்ந்தார்கள்.

நாற்பத்திரண்டாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக