தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – ஐம்பத்தொன்றாவது அத்தியாயம்
(ஸ்ரீக்ருஷ்ணன் காலயவனனை முசுகுந்தனுடைய திருஷ்டியால் (பார்வையால்) தஹிப்பித்தலும் (எரித்தலும்), முசுகுந்தன் ஸ்ரீக்ருஷ்ணனைத் துதித்தலும், ஸ்ரீக்ருஷ்ணன் முசுகுந்தனுக்கு வரம் கொடுத்தலும்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அப்பொழுது, உயர்கின்ற சந்த்ரன் போல் பார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டும்படி அழகியனும், கறுத்துப் பொன்னிறமுள்ள பட்டு வஸ்த்ரம் தரித்து, மார்பில் ஸ்ரீவத்ஸமென்னும் அடையாளம் அமைந்து, கழுத்தில் திகழ்கின்ற கௌஸ்துப மணியை அணிந்து, திரண்டு உருண்டு நீண்ட நான்கு பாஹு தண்டங்களும் (கைகளும்), அப்போதலர்ந்த செந்தாமரை மலர்போல் சிவந்தழகிய திருக்கண்களும், என்றும் ஸந்தோஷமுற்று அளவற்ற ஸௌந்தர்யமும், அழகிய கபோலங்களும் (கன்னங்களும்) பரிசுத்தமான புன்னகையும், திகழ்கின்ற மகரகுண்டலங்களும் அமைந்த முகாரவிந்தமும் (திருமுகத் தாமரையும்) விளங்கப்பெற்று மிகவும் விளங்குகின்ற அந்த ஸ்ரீக்ருஷ்ணன், பட்டணத்து வாசலினின்று வெளிக் கிளம்பி வருவதைக் கண்டு காலயவனன், நாரதரிடத்தில் ஸ்ரீக்ருஷ்ணன் இத்தகைய அடையாளங்களுடையவன் என்று கேட்டிருப்பவனாகையால், “ஸ்ரீவத்ஸமென்னும் அடையாளமுடையவனும், நான்கு புஜ தண்டங்கள் (கைகள்) உடையவனும், செந்தாமரைக்கண்ணனும், வனமாலை அணிந்தவனும், பேரழகனுமாகிய இப்புருஷன் வாஸுதேவனேயாக வேண்டும். நாரதர் சொன்ன லக்ஷணங்களெல்லாம் இவனிடத்தில் அமைந்திருக்கின்றன. ஆகையால், இவன் மற்றொருவனுமல்லன். இவன் ஆயுதமில்லாதிருக்கின்றனன். இவனோடு நான் காலால் நடந்து கொண்டு, ஆயுதமில்லாமலே யுத்தம் செய்யவேண்டும்” என்று நிச்சயித்துக்கொண்டு, அம்மஹானுபாவன் தன்னை எதிர்க்காமல் பராங்முகனாய் (முகத்தைத் திருப்பிக்கொண்டு வேறு திசையில்) ஓடக் கண்டு, யோகிகளுக்கும் கூட எட்டாத அப்பரம புருஷனைப் பிடிக்க முயன்று, பின் தொடர்ந்தோடினான்.
ஸ்ரீக்ருஷ்ணன், அடிகள் தோறும் தன்னைக் கையில் அகப்படுகிறவன் போல் காட்டிக் கொண்டே, அந்த யவனனை வெகுதூரம் இழுத்துக் கொண்டு போய், பர்வத குஹையில் சேர்த்தான். “நீ யது குலத்தில் பிறந்தவன். நீ பலாயனம் செய்வது (போரில் பின் வாங்குவது) யுக்தமன்று (ஸரியன்று)” என்று பழித்துக்கொண்டே அந்த யவனன், வேகமாகத் தொடர்ந்து சென்றும், பாபங்கள் தொலையப் பெறாதவனாகையால், இவனைப் பெறவில்லை. மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணனோவென்றால், இவ்வாறு பழிக்கப் பெற்றும், பேசாமல் பர்வத குஹையில் நுழைந்தான். அக்காலயவனனும், அந்தப் பர்வத குஹையில் நுழைந்து, அங்கு வேறொரு மனுஷ்யன் படுத்திருக்கக் கண்டான். அவன், “வாஸுதேவன் என்னை இவ்வளவு தூரம் இழுத்துக்கொண்டு வந்துவிட்டு, இப்பொழுது ஸாதுவைப்போல் பேசாமல் படுத்திருக்கிறான். நிச்சயம். இவன் க்ருஷ்ணனே” என்று, மூடனாகையால், அம்மனிதனை ஸ்ரீக்ருஷ்ணனாகவே நினைத்து, அவனைப் பாதத்தினால் உதைத்தான். நெடுநாளாய்த் தூங்கிக்கொண்டிருக்கிற அப்புருஷன் எழுந்து, மெல்ல மெல்லக் கண்களை விழித்து, திசைகளையெல்லாம் பார்த்துக் கொண்டு, வந்து பக்கத்திலிருக்கின்ற அந்த யவனனைக் கண்டான்.
பரத வம்சாலங்காரனே! அந்த யவனன், கோபமுற்றிருக்கிற அப்புருஷனுடைய கண் பட்ட மாத்ரத்தில் பற்றி எரிகின்ற, தன் தேஹத்தினின்று (உடலிலிருந்து) உண்டான அக்னியால் தஹிக்கப்பட்டு (எரிக்கப்பட்டு), அந்த க்ஷணமே பஸ்மமானான் (சாம்பலானான்).
பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- ப்ரஹ்மர்ஷீ! யவனனைக் கொன்ற அப்புருஷன் யாவன்? யாருடைய வம்சத்தில் பிறந்தவன்? எத்தகைய வீர்யமுடையவன்? அவன் எந்தக் காரணத்தினால் குஹைக்குள் சென்று படுத்திருந்தான்? அவனுடைய தேஜஸ்ஸு (ஆற்றல்) எத்தகையது?
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அப்புருஷன் இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்தவன்; மாந்தாதாவின் புதல்வன்; மஹானுபாவன்; முசுகுந்தனென்னும் பெயர்பெற்றவன்; ப்ராஹ்மணர்களுக்கு வேண்டியவற்றையெல்லாம் நிறைவேற்றிக்கொடுப்பவன்; தர்மம் தவறாமல் யுத்தம் செய்யும் தன்மையுடையவன். அந்த முசுகுந்தன், அஸுரர்களிடத்தினின்று மிகவும் பயந்த இந்திரன் முதலிய தேவகணங்களால் தங்களைப் பாதுகாக்கும்படி வேண்டப் பெற்று, வெகுகாலம் அவர்களைப் பாதுகாத்து வந்தான். அப்பால், அவர்கள் ஸுப்ரஹ்மண்யனை ஸ்வர்க்கத்தைப் பாதுகாக்கும் ஸேனாபதியாகப் பெற்று, முசுகுந்தனைப் பார்த்து மொழிந்தார்கள்.
தேவதைகள் சொல்லுகிறார்கள்:- மன்னவனே! நீ எங்களைப் பாதுகாக்கையாகிற வருத்தத்தினின்று மீளுவாயாக. வீரனே! சத்ருக்களற்ற (எதிரிகள் இல்லாத) ராஜ்யத்தையும், மனுஷ்ய லோகத்தையும் துறந்து, எங்களையே பாதுகாத்துக் கொண்டிருக்கின்ற நீ, ஸமஸ்த போகங்களையும் கைவிட்டாய். உன்னுடைய பிள்ளைகளும், பட்ட மஹிஷிகளும், பந்துக்களும், அமாத்யர்களும் (அமைச்சர்களும்), மந்திரிகளும், உன் காலத்திலிருந்த மற்றுமுள்ள ப்ரஜைகளும், கால தர்மத்திற்கு உட்பட்டு, இப்பொழுதில்லை. காலத்தினால் விளையும் விகாரங்கள் (மாற்றங்கள்) அற்றவனும், ஸர்வ நியாமகனுமாகிய (எல்லோரையும் நியமிப்பவனுமான) பகவான், காலத்தைச் சரீரமாகவுடையவனாகி, இடையன் பசுக்களையெல்லாம் தன் வசத்தில் நடத்துவது போல விளையாடிக் கொண்டே, ப்ரஜைகளையெல்லாம் தன் வசத்தில் நடத்துகிறான். ஆகையால், அவர்கள் அனைவரும் கால ஸ்வரூபனான (வடிவான) பகவானுக்கு உட்பட்டு, மரணம் அடைந்தார்கள்.
நீ, பூமண்டலத்தையாளும் காலத்தில் இருந்தவர்களில் ஒருவரும் இப்பொழுதில்லை. உனக்கு க்ஷேமம் உண்டாகுக. இப்பொழுது நீ மோக்ஷம் தவிர மற்ற எந்த வரத்தையாயினும், எங்களிடத்தினின்று வேண்டுவாயாக. விகாரங்கள் (மாற்றங்கள்) அற்றவனும், ஷாட்குண்ய பூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) ஸ்ரீ மஹாவிஷ்ணு ஒருவனே, அந்த மோக்ஷம் கொடுக்க வல்லவன். எங்களால் அதைக் கொடுக்க முடியாது. ஆகையால், எங்களிடத்தில் மோக்ஷத்தை விரும்ப வேண்டாம். அதைத் தவிர மற்ற எதை விரும்பினும், நாங்கள் கொடுக்க ஸித்தமாயிருக்கின்றோம்.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அதைக் கேட்ட அம்மன்னவனும், “ஆனால் வெகுகாலமாக நித்ரையில்லாமல் இருக்கின்ற எனக்கு, படுத்துறங்கும்படி ஜன ஸஞ்சாரமில்லாத (மனித நடமாட்டம் இல்லாத) ஓரிடம் காட்டுவீர்களாக” என்று வேண்டுகையில், தேவதைகள் அப்படியே ஆகட்டுமென்று நிர்ஜனமான (மனிதர்கள் இல்லாத) இடத்தைக் காட்டி, “நீ இவ்விடத்தில் ஸுகமாகப் படுத்துறங்குவாயாக. உறங்குகிற உன்னை எவனேனும் தெரியாமல் எழுப்புவானாயின், அவன் அப்பொழுதே உன் கண் பட்ட மாத்ரத்தில் பஸ்மமாவானாக (சாம்பலாவானாக)” என்று இவ்வரத்தையும் கொடுத்தார்கள்.
இவ்வாறு தேவதைகளால் மொழிந்து விடை கொடுக்கப்பெற்ற அம்மன்னவன், உறங்குவதற்காகத் தேவதைகள் காட்டின குஹைக்குள் சென்று படுத்துக்கொண்டான். இவ்வாறு யவனன் பஸ்மமாகையில், யாதவ ச்ரேஷ்டனாகிய ஸ்ரீக்ருஷ்ண பகவான், மிகுந்த மதியுடைய முசுகுந்தனுக்குத் தன்னைக் காட்டினான். சிறந்த மதியுடைய அம்முசுகுந்த மன்னவன், அந்தப் பகவானுடைய தேஜஸ்ஸினால் (பேரொளியினால்) திகைத்து, இது யாருடைய தேஜஸ் (பேரொளி) என்று பலவாறு சங்கித்துக்கொண்டே, தேஜஸ்ஸினால் (பேரொளியினால்) எவர்க்கும் அணுக முடியாதவனும், மேகம் போல் கறுத்த நிறமுடையவனும், பொன்னிறமுள்ள பட்டு வஸ்த்ரம் தரித்தவனும், மார்பில் ஸ்ரீவத்ஸமென்னும் திருமறுவுடையவனும், ஜ்வலிக்கின்ற கௌஸ்துப மணியால் திகழ்கின்றவனும், நான்கு புஜதண்டங்கள் (கைகள்) உடையவனும், வைஜயந்தீ என்னும் வனமாலையால் (துளசி, முல்லை, மந்தாரை, பவழமல்லி, தாமரை என்கிற ஐந்து பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையே வைஜயந்தீ வனமாலை) ப்ரகாசிக்கின்றவனும், தெளிந்தழகிய முகமுடையவனும், திகழ்கின்ற மகரகுண்டலங்கள் அணிந்தவனும், மூன்று லோகங்களுக்கும் பார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டும்படி அனுராகமும் (கருணையும்), புன்னகையும் அமைந்த கண்ணோக்கமுடையவனும், அழகான யௌவன வயதுடையவனும், மதித்த மஹா கஜம் (பெரிய யானை) போல் கம்பீரமாக நடப்பவனுமாகிய, அந்தப் பகவானை மெல்ல மெல்லப் பார்த்து, மேல் வருமாறு வினவினான்.
முசுகுந்தன் சொல்லுகிறான்:- நுழைய முடியாத இந்த அரண்யத்தில் (காட்டில்) பர்வத (மலை) குஹைக்குள் வந்திருக்கின்ற நீ யாவன்? முள்ளுகள் அளவற்றிருக்கின்ற இவ்வரண்யத்தில் தாமரையிதழ் போன்ற பாதங்களால் ஸஞ்சரிக்கின்றாயே. நீ யாவன்? தேஜஸ் (ஒளி) உடையவர்களின் தேஜஸ்ஸெல்லாம் ஒன்று சேர்த்து மூர்த்தீகரித்து (வடிவெடுத்து) வந்தாற்போல் திகழ்கின்றாய். அத்தகைய தேஜஸ்ஸே தானோ? அல்லது, மஹானுபாவனாகிய அக்னியா? அல்லது, அத்தகைய ஸூர்யனா? அல்லது, சந்த்ரனா? அல்லது, மஹேந்தரனா? அல்லது, மற்ற லோக பாலர்களில் (திசைகளின் தலைவர்களில்) யாரேனுமொருவனா? இந்த்ரன் முதலிய தேவர்களுக்கும் தேவர்களாகிய ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ரர்களென்கிற மூவரில் நடுத்தேவனாகிய பரமபுருஷனே நீயென்று யான் நினைக்கின்றேன். ஏனென்றால், நீ விளக்கு போலத் தன்னொளியால் இக்குஹையிலுள்ள இருட்டையெல்லாம் பறக்கடிக்கின்றாய்.
புருஷச்ரேஷ்டனே! உன்னுடைய பிறவியையும், செயலையும், குலத்தையும் நான் கேட்க விரும்புகிறேன். உனக்கு ருசிக்குமாயின், அதையெல்லாம் ஒளிக்காமல் எனக்கு மொழிவாயாக. புருஷச்ரேஷ்டனே! நானோவென்றால் க்ஷத்ரியன்; இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்தவன்; யௌவனாஸ்வனுடைய பிள்ளை, முசுகுந்தனென்று ப்ரஸித்தி பெற்றவன். நான், நெடுநாள் கண்விழித்துக் கொண்டிருந்தமையால், இந்த்ரியங்களெல்லாம் நித்ரையினால் இழுக்கப்பட்டு, ஜன ஸஞ்சாரமில்லாத (மனித நடமாட்டம் இல்லாத) இவ்விடத்தில் ஸுகமாகப் படுத்துறங்கிக் கொண்டிருந்தேன். இப்பொழுது, எவனோ ஒருவன் வந்து, என்னை எழுப்பினான். அவனும் தன்னுடைய பாபத்தினாலேயே பஸ்மமாய் (சாம்பலாய்) விட்டான்.
நான் கண்ணைத் திறந்து பார்த்தது வ்யாஜமேயன்றி (சாக்கே அன்றி) வேறொன்றுமில்லை. இது நிச்சயம். அப்பால், சத்ருக்களைத் தண்டிப்பவனும், பேரழகனும், பெறும் சோபை (அழகு) உடையவனுமாகிய நீ புலப்பட்டாய். பொறுக்க முடியாத உன் தேஜஸ்ஸினால் (பேரொளியால்) கண்கள் தடைபடப் பெற்று உன்னை வெகு நேரம் உற்றுப் பார்க்க முடியாதிருக்கின்றோம். மஹானுபாவனே! கர்மத்தினால் அறிவு குறுகப்பெற்ற எங்களைப் போன்ற மூட ஜந்துக்களுக்கு, நீ மிகவும் பூஜிக்கத் தகுந்தவன். (பணியத்தகுந்தவன்.)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ப்ராணிகளைப் பாதுகாக்கும் தன்மையுடைய மஹானுபாவனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன், முசுகுந்த மன்னவனால் இவ்வாறு வெகுமதிக்கப்பட்டு, சிரித்துக் கொண்டே, மேக கர்ஜனம் (இடி முழக்கம்) போல் கம்பீரமான உரையுடன் மறுமொழி கூறினான்.
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ஓ முசுகுந்த மன்னவனே! என்னுடைய பிறவிகளும், செயல்களும், பெயர்களும் அளவற்றவைகளாயிருக்கின்றன. அவை அனந்தங்களாகையால் (எல்லையற்றிருப்பதால்), என்னாலுங்கூடக் கணக்கிட முடியாதவை. (உங்கள் பிறவி முதலியவை கர்மத்தினால் (முன் வினைகளால்) அறிவு குறுகப்பெற்ற உங்களுக்கு மறந்து போனமையாலும், பலவகையாலும் உங்களால் கணக்கிட்டுச் சொல்ல முடியாது. ஆயினும் ஸர்வஜ்ஞனாகிய என்னால் சொல்லக்கூடியவைகளே. என் பிறவி முதலியவைகளோவென்றால், அனந்தங்களாகையால் (எல்லையற்றிருப்பதால்) சொல்ல முடியாது. ஆயினும், அதனால் என்னுடைய அறிவுக்குக் குறையில்லை. அளவற்றவைகளை அளவற்றவைகளென்று அறிகையே ஸர்வஜ்ஞதைக்கு (எல்லாம் அறிதல் என்பதற்குப்) பொருந்துமன்றி, அவற்றை அளவுடையவைகள் என்றறிகை ஸர்வஜ்ஞதைக்குப் பொருந்தாது. அது உண்மையல்லாமையால், அவ்வாறு அறிகை அறிவின்மையையே தெரிவிக்கும்.)
ஒரு கால், ஸூக்ஷ்ம (கூர்மையான) புத்தியுடையவன், பல ஜன்மங்களால் பூமியிலுள்ள புழுதிகளையெல்லாம் எண்ணினாலும், எண்ணக்கூடுமேயன்றி, என்னுடைய குணங்களையும், செயல்களையும், பெயர்களையும், ஒரு நாளும் எண்ணமுடியாது.
மன்னவனே! ஸ்ரீபராசரர், வைசம்பாயனர், சௌனகர் முதலிய மஹர்ஷிகள் மூன்று காலங்களிலுமுள்ள என் பிறவி, செயல் முதலியவைகளை மொழியத் தொடங்கி, இன்னும் கரைகாணப் பெறாதிருக்கின்றார்கள். ஓ முசுகுந்தனே! ஆயினும், இப்பொழுதுள்ள என் பிறவி முதலியவைகளைச் சொல்லுகிறேன், கேட்பாயாக.
நான், தர்மத்தைப் பாதுகாப்பதற்காகவும், அஸுர ஸ்வபாவர்களாகி (தன்மை கொண்டு) பூமிக்குப் பாரமாயிருக்கின்ற மன்னவர்களை முடிப்பதற்காகவும், ப்ரஹ்ம தேவனால் வேண்டப் பெற்று, யதுகுலத்தில் வஸுதேவனுடைய பார்யையிடத்தில் (மனைவியிடத்தில்) அவதரித்தேன். வஸுதேவனுடைய பிள்ளையாகையால், என்னை வாஸுதேவனென்று சொல்லுகிறார்கள். என்னால் காலநேமியும், கம்ஸனும், ப்ரலம்பன் முதலிய மற்றும் பல சத்ருக்களும் (எதிரிகளும்), கொல்லப்பட்டார்கள்.
ராஜனே! தீக்ஷணமாயிருக்கின்ற (உக்ரமான) உன் பார்வையால், இந்த யவனனை நானே பஸ்மம் செய்தேன் (சாம்பலாக்கினேன்). அத்தகைய நான், உன்னை அனுக்ரஹிக்கும் பொருட்டு, இந்தக் குஹைக்கு வந்தேன். பக்தவத்ஸலனான நான், உன்னால் முன் ஜன்மத்தில் வெகுகாலம் வேண்டப் பெற்றேன். ராஜரிஷீ! உனக்கு இஷ்டமான வரங்களை வேண்டுவாயாக. உனக்கு நான் எல்லா விருப்பங்களையும் கொடுக்கின்றேன். என்னைச் சரணம் அடைந்தவன் எவனும் மீளவும் சோகிக்க உரியவனல்லன். (ஆகையால் உனக்கு மீளவும் இந்த ஸம்ஸாரமாகிற வருத்தம் நேராதபடி மோக்ஷம் கொடுக்கச் ஸித்தமாயிருக்கின்றேன். ஆயினும், மற்ற விருப்பங்கள் எவ்வெவை வேண்டுமோ, அவற்றையெல்லாம் வேண்டிப் பெறுவாயாக.)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு பகவானால் மொழியப்பட்ட முசுகுந்தன், அந்த ஸ்ரீக்ருஷ்ணனை அவனுடைய வார்த்தைகளால் தேவதையென்றும், அதிலும் ஸ்ரீமந்நாராயணனென்றும் தெரிந்து கொண்டு, “இருபத்தெட்டாவது யுகத்தில் பகவான் வஸுதேவனுடைய க்ருஹத்தில் அவதரிக்கப் போகிறான் என்று வ்ருத்த கர்க்கர் சொன்ன வசனத்தை நினைத்து ஸந்தோஷமுற்று, வணங்கி மேல்வருமாறு மொழிந்தான்.
முசுகுந்தன் சொல்லுகிறான்:- ஜகதீசனே! ஆணும் பெண்ணுமாயிருக்கின்ற இவ்வுலகத்திலுள்ள ஜந்துக்களெல்லாம் உன்னுடைய மாயையினால் மோஹிக்கப்பட்டு, தங்களுக்கு அனர்த்தத்தை (கெடுதியை) விளைவித்துக் கொள்வதிலேயே புத்தி செல்லப்பெற்று, வாஸ்தவத்தில் (உண்மையில்) அனர்த்தமாயிருப்பதையே (கெடுதியையே) அர்த்தமாக (நன்மை என) நினைத்து, துக்கங்களுக்கு விளை நிலமாகிய இல்லற வாழ்க்கையில் ஸுகத்தை அனுபவிக்க விரும்பி, கால் தாழ்கின்றனவேயன்றி உன்னை அடைகிறதில்லை. ஆகையால், ஜந்துக்களெல்லாம் உன்னால் வஞ்சிக்கப்பட்டிருக்கின்றன.
விஷயங்களை (உலக இன்பங்களை) அனுபவிக்க வேண்டுமென்னும் விருப்பமாகிற காரணத்தினால், நான் இத்தகைய ஸம்ஸாரமாகிற அனர்த்தத்தை (கெடுதியை) அடைந்திருக்கின்றேன். மீளவும் நீ விஷயங்களை (உலக இன்பங்களை) வேண்டும்படி தூண்டுவாயாயின், உன்னால் வஞ்சிக்கப்பட்டவனாவேன். ஆகையால், உன் பக்தர்களை இவ்வாறு வஞ்சிப்பது உனக்குத் தகுதியன்று.
நிர்தோஷனே (குற்றமற்றவனே)! உன்னைப் பணிந்தவர்கள் வருந்தமாட்டார்கள். இவ்வுலகத்திலுள்ள ஜந்துக்கள், கர்ம க்ஷேத்ரமாகிய (புண்யச் செயல்கள் செய்ய ஏற்றதான) இப்பூமண்டலத்தில் (பாரத வர்ஷத்தில்) கிடைக்க அரிதான மனுஷ்ய தேஹத்தைத் தங்கள் ப்ரயத்னம் (முயற்சி) இல்லாமல் கேவலம் உன்னுடைய அனுக்ரஹத்தினால் பெற்றும், தானே பரம புருஷார்த்த ஸ்வரூபனும், அதைக் கைகூடுவிக்கும் உபாய ஸ்வரூபனுமாய் (வழியாகவும்) இருக்கின்ற உன்னைப் பணிகிறதில்லை. பின்னையோவென்றால். ப்ரக்ருதியின் பரிணாமமாகிய தேஹத்தையே ஆத்மாவென்று ப்ரமித்து, பசு தெரியாமையால் புல் முதலியவற்றால் மறைந்திருக்கின்ற கிணற்றைக் கண்டு, அங்குப் புல் மேய விரும்பிச் சென்று, அதில் விழுவது போல, இல்லற வாழ்க்கையாகிற பாழுங்கிணற்றில் விழுகின்றன.
ஒருவராலும் வெல்லப்படாதவனே! நான் பூமண்டலத்திற்கெல்லாம் ப்ரபுவாகிச் சப்தாதி விஷயங்களை (உலகியல் இன்பங்களை) விரும்பும் மதியுடையவனாகி, ராஜ்ய ஸம்பத்தினால் பெருமதம் கொண்டு, மரணம் அடையும் தன்மையதான தேஹத்தையே ஆத்மாவாக நினைத்து, பிள்ளை, பெண்டிர், கருவூலம் (செல்வம்), பூமி, இவைகளில் அளவற்ற சிந்தையுடன் மனப்பற்று கொண்டிருந்தேனாகையால், இதுவரையில் கடந்த என் காலமெல்லாம் வீணாகவே கடந்து விட்டது. (நான் என் காலத்தையெல்லாம் அஹங்கார (நான்), மமகாரங்களோடு (எனது) வீணாகக் கழித்து விட்டேன்.)
மண் குடம், குட்டிச் சுவர் முதலியவை போன்று எளிதில் கரைந்து அழியக்கூடிய இந்தத் தேஹத்தில் (உடலில்), ஆத்மாவென்னும் ப்ரமம் (மனக்கலக்கம்) வேரூன்றப் பெற்று, என்னை நான் மனுஷ்யர்களுக்கெல்லாம் ப்ரபுவென்று அபிமானித்து, தேர்கள், யானைகள், காலாட்கள் இவற்றின் ஸைன்யங்களைப் (படைகளைப்) பாதுகாக்கின்ற ஸேனாபதிகளால் சூழப்பட்டு, பூமியெல்லாம் சுற்றிக்கொண்டு, உன்னை ஒரு பொருளாகவே நினையாமல், கொடு மதம் கொண்டிருந்தேன். நான் “இவ்வாறு செய்யவேண்டும் அவ்வாறு செய்யவெண்டும்” என்று மேன்மேலும் அலைகள் போல் கிளர்ந்தெழுகின்ற மனோரத பரம்பரைகளால் மிகவும் வளர்ந்த லோபம் (பேராசை) உடையவனாகி, சப்தாதி விஷயங்களில் (உலக இன்பங்களில்) பெரும் விருப்பமுற்றுத் திரிந்து கொண்டிருக்கையில், நீ உலகங்களின் விநாசத்திற்கு (அழிவிற்கு) ஹேதுவான கால ஸ்வரூபனாகி, பசியினால் நாக்கை நீட்டுகின்ற ஸர்ப்பம் (பாம்பு) எலியைப் பிடிப்பது போல், என்னைப் பிடித்திழுக்கின்றாய். மிகவும் கிடைக்க அரியதும், மங்களமுமாகிய மன்னவ சரீரத்தைப் பெற்றும் ஏன் இப்படி பழிக்கின்றாய்? என்றால், சொல்லுகிறேன்.
முன்பு ஸ்வர்ண மயமான அலங்காரங்கள் செய்யப் பெற்ற ரதங்களிலும், யானைகளிலும் ஏறித் திரிந்து கொண்டு, மனுஷ்யர்களுக்கெல்லாம் ப்ரபுவென்று பெயர்பெற்றிருந்ததுமாகிய அத்தேஹமே, காலத்தினால் தீண்டப்பட்டு, நாய், நரி முதலியவைகளால் பக்ஷிக்கப்படுமாயின், விஷ்டை (மலம்) என்றும், அவைகளால் பக்ஷிக்கப்படாமல் மண்ணில் மக்கிப் புழுக்குமாயின், புழுவென்றும், அதுவுமன்றித் தஹன ஸம்ஸ்காரம் செய்யப்பெறுமாயின் (எரிக்கப்படுமாயின்), பஸ்மமென்றும் (சாம்பல் என்றும்) பெயர்களைப் பெறுகின்றது. இத்தகைய தேஹத்தை, எவன் அபிமானிப்பான்?
ஜகதீசனே! திசைகளையெல்லாம் ஜயித்து, எங்கும் தன்னை எதிர்த்துச் சண்டை செய்பவன் நேரப் பெறாமல் ஸார்வ பௌம (பேரரசன்) ஸிம்ஹாஸனத்தில் வீற்றிருந்து, தனக்கு முன்னிருந்த தன்னோடொத்த ராஜாக்களாலும் பூஜிக்கப்பட்டு, மேன்மையுடனிருக்கும் புருஷனும், ஆணும், பெண்ணுமாய்க் கலக்கும் கலவியாகிற ஸுகத்திற்கிடமான இல்லறவாழ்க்கையில் அழுந்தி, ஸ்த்ரீகளுக்கு விளையாட்டு ம்ருகம் போன்று (விளையாட்டிற்காக வளர்க்கப்பட்ட வானரம் முதலிய ம்ருகம் போன்று) அவர்களால் இங்கும், அங்கும் சுற்றப்படுகிறான். (ஸர்வ ஸ்வதந்த்ரனாகிய (எதையும் தன் இச்சைப்படி செய்யவல்ல) உன்னைப் பணியாமல், தன்னைத் தானே ஸ்வதந்த்ரனாக (தன் இச்சைப்படி செய்யவல்லவன் என்று) நினைத்துக்கொள்வதின் பயனல்லவோ இது?)
ஸார்வபௌமனாய் (பேரரசனாய்) இருப்பவன், ஜன்மாந்தரத்திலும் (பின் பிறவியிலும்) நான் ஸார்வபௌமனாகப் (பேரரசனாகப்) பிறக்க வேண்டுமென்று பெரும் விருப்பங்கொண்டு, தரையில் படுப்பது, ஸ்த்ரீ ஸம்போகமில்லாதிருப்பது (பெண்ணுடன் சேர்க்கை இல்லாமல் இருப்பது) முதலிய தவங்களில் நிஷ்டையுடையவனாகி, ஜன்மாந்தரத்தில் வரப்போகிற போகங்களை அபேக்ஷித்து (வேண்டி), போகங்களையெல்லாம் துறந்து, தவங்களை அனுஷ்டித்துக்கொண்டு, தேஹதாரணத்திற்கு வேண்டிய போஜனாதி கர்மங்களை அனுஷ்டித்துக்கொண்டு வருவானாயின், அவன் ஸுகத்தை அனுபவித்தவனாக மாட்டான்.
ஜன்மாந்தரத்தில் (பின் பிறவியில்) ஸார்வபௌமனாகப் (பேரரசனாகப்) பிறந்தாலும், அதற்கு அடுத்த ஜன்மத்திலும் (பிறவியிலும்) தான் ஸார்வபௌமனாகப் (பேரரசனாகப்) பிறக்க வேண்டுமென்னும் விருப்பம் உண்டாகுமல்லவா? அப்பொழுதும், போகங்களைத் துறந்து, தவம் செலுத்துவானாயின், எப்பொழுது தான் அவன் ஸுகத்தை அனுபவிப்பான்? ஜன்மாந்தரத்தைப் (பின் பிறவியைப்) பற்றின நினைவின்றிப் போகங்களை அனுபவிப்பானாயின், ஜன்மாந்தரத்தில் (பின் பிறவியில்) அவன் ஸர்வபௌமனாய்ப் (பேரரசனாகப்) பிறக்க நேருமோ? நேராதல்லவா? ஸாதாரண ஜந்துவாய்ப் பிறப்பானாயின், அவன் என்ன ஸுகத்தை அனுபவிக்க முடியும்? ஆகையால், விஷயங்களை அனுபவிக்கையால் வரும் ஸுகத்தை, ஸுகமென்று நினைக்கலாகாது. அப்படி நினைக்கிலும், அது நீடித்து நிற்காது?
ஸம்ஸாரத்தில் ப்ரமித்துக்கொண்டிருக்கும் புருஷனுக்கு, ஸம்ஸார நிவ்ருத்தியாகிற (முடிவாகிற) மோக்ஷம் எப்பொழுது கிட்டுமோ, அப்பொழுதுதான் அவன் ஸுகத்திற்கு ஆளாவான். ஆனால், எப்பொழுது ஸம்ஸார நிவ்ருத்தி நேரிடுமென்றால், அச்சுதனே! இந்த ஸம்ஸாரி சேதனனுக்கு (ஜீவனுக்கு) எந்த ஜன்மத்தில் உன் பக்தர்களான ஸத்புருஷர்களோடு ஸஹவாஸம் (தொடர்பு) நேருமோ, அப்பொழுது மேன்மையுடைய இந்த்ராதி தேவதைகள் அனைவரும் தனக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படியான மேன்மையுடை ப்ரஹ்ம தேவனுக்கும் நியாமகனும் (நியமிப்பவனும்), அந்த ஸத்புருஷர்களுக்கு கதியுமாகிய உன்னிடத்தில் பக்தி உண்டாகும். பக்தி விளைந்து வளர்ந்து வருமாயின், அது ஸம்ஸார நிவ்ருத்தியை (முடிவை) விளைவிக்கும்.
ஜகதீசனே! திடீரென்று தேவதைகளுக்கு ஸஹாயம் (உதவி) செய்ய வேண்டுமென்னும் வ்யாஜத்தினால் (சாக்கினால்) ராஜ்யமாகிற பாசத்தினின்று விடுவித்து, எனக்குப் பெரிய அனுக்ரஹம் செய்தாயென்று யான் நினைக்கின்றேன். ஏனென்றால், விவேகமுடையவர்களும், தவம் செய்வதற்காக வனம் போக விருப்பமுற்றவர்களுமாகிய ஸார்வபௌமர்கள் (பேரரசர்கள்), வனத்தில் தனியே திரிவதற்காக இந்த ராஜ்ய பந்தத்தினின்று விடுபட வேண்டுமென்று உன்னை வேண்டுகிறார்களல்லவா? (அப்படிப்பட்ட ராஜ்ய பந்தத்தை எனக்கு நீயே விடுவித்தாயாகையால், என்னை முன்னமே அனுக்ரஹித்தாய்.)
ப்ரபூ! அனன்ய ப்ரயோஜனர்களால் (உன்னைத் தவிர வேறு பலன் கருதாதவர்களால்) மிகவும் விரும்பத்தக்கதாகிய உன் பாத ஸேவையைக்காட்டிலும் வேறான எந்த வரத்தையும் நான் விரும்ப மாட்டேன். தன்னைப் பற்றினவர்களுடைய வருத்தங்களைப் போக்கும் தன்மையனே! விவேகமுள்ள புருஷன் எவன்தான், ஒன்றான மோக்ஷங் கொடுப்பவனாகிய உன்னை ஆராதித்தும், ஆத்மாவுக்கு ஸம்ஸார பந்தத்தை விளைக்கும்படியான சப்தாதி விடியங்களை (உலக இன்பங்களை) விரும்புவான்? (மூர்க்கனாயின் விரும்புவானன்றி, விவேகமுடையவன் விரும்பமாட்டான்).
ஜகதீசனே! ரஜஸ்ஸு, தமஸ்ஸு, ஸத்வம் ஆகிய இவற்றின் கார்யமாகிய காம (ஆசை) க்ரோதாதிகளால் (கோபம்) தொடரப்பெற்ற விருப்பங்களையெல்லாம் துறந்து, புண்ய பாபங்களின் ஸம்பந்தமற்றவனும், ப்ரக்ருதிக்கு உட்பட்டிருக்கையாகிற அழுக்கற்றவனும் (முக்குணங்களாகிற அழுக்கு அற்றவனும்), எப்பொழுதும் ஸத்வாதி குணங்களின் ஸம்பந்தமற்றனும், இணையெதிரில்லாதவனும், ஸர்வஸ்மாத்பரனும் (எல்லாவற்றையும் விட மேலானவனும்), எல்லோரும் பணிந்து உஜ்ஜீவிக்கும்படி யதுகுலத்தில் மானிடனாய் வந்து அவதரித்திருப்பவனும் கேவல ஜ்ஞானஸ்வரூபனும், வாத்ஸல்யம் முதலிய பலகுணங்கள் அமைந்தவனுமாகிய உன்னையே சரணம் அடைகின்றேன்.
சரணங் கொடுப்பவனே! இந்த ஸம்ஸாரத்தில், ஆத்யாத்மிகம் முதலிய அளவற்ற தாபங்களால் {ஆத்யாத்மிகம் சரீரத்திற்கு ஏற்படும் தலைவலி, சளி முதலிய நோய்கள் மற்றும் மன நோய்களான காமம், கோபம், பயம் முதலியன) ஆதிதெய்விகம் (குளிர், சூடு, மழை முதலியவற்றால் ஏற்படும் துன்பங்கள்), ஆதிபௌதிகம் (ம்ருகம், பறவை, மனிதர் முதலியவற்றால் வரும் துன்பங்கள்) என்ற மூன்று வகையான துன்பங்களால்} தபிக்கப்பட்டு, நெடுநாளாய் துக்கத்தினால் பீடிக்கப்பட்டு, மனம் முதலிய ஆறு இந்திரியங்களாகிற ஆறு சத்ருக்களை (எதிரிகளை) வெல்ல முடியாமல் மனத்தெளிவற்றிருக்கின்ற நான், பல வருத்தங்களின் மேல் ஸம்ஸார பயமற்றதும், சோகம் தீண்டப்பெறாததும், நித்யமுமாகிய உன் பாதார விந்தங்களை அடைந்தேன். பரமாத்மனே! இவ்வாறு ஆபத்தில் அமுங்கியிருப்பவனும், இப்பொழுது உன்னைச் சரணம் அடைந்தவனுமாகிய, என்னைப் பாதுகாப்பாயாக.
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ஸமஸ்த பூமண்டலத்தையும் ஆண்டு வந்த மஹாராஜனே! உன் மதி (புத்தி), ராகம் (விருப்பு) முதலிய தோஷங்களாகிற மலங்கள் (அழுக்குகள்) எவையுமின்றி, நிவ்ருத்தி தர்மத்தில் (உலக வாழ்விலிருந்து விலகும் முயற்சியில்) மிகவும் உறுதியாயிருக்கின்றது. வரங்களை வேண்டச் சொல்லி ஆசை மூட்டி வஞ்சிக்கப் பார்க்கினும், உன் மதி (புத்தி) சப்தாதி விஷயங்களால் (உலக இன்பங்களால்) சிறிதும் தடைப்படாதிருக்கின்றதல்லவா? உன்னை நான் வரங்களால் ஆசை மூட்டி வஞ்சிக்கப் பார்த்தது, உன் புத்தி மயங்காதிருப்பதற்காகவேயென்று தெரிந்து கொள்வாயாக. என்னிடத்தில் மற்றொரு ப்ரயோஜனத்தையும் விரும்பாமல், மாறாத பக்தியுடையவர்களின் புத்தி, ஒரு காலும் சப்தாதி விஷயங்களைப் பற்றின விருப்பங்களால் தடைபடாது. என்னிடத்தில் பக்தியில்லாமல் ப்ராணாயாமம் முதலிய உபாயங்களால் மனத்தை அடக்க முயன்றவர்களின் மனம், வாஸனை ஒழியப் பெறாமையால், ஒருகால் சப்தாதி விஷயங்களில் (உலக இன்பங்களில்) தாழ்ந்திருக்கக் காண்கிறோம். (என்னிடத்தில் பக்தி செய்பவர்களின் மனம், அவ்வாறு ஒருகாலும் தாழாது).
நீ என்னிடத்தில் மனத்தை நிலை நிறுத்தி, பூமி முழுவதும் இஷ்டப்படி திரிவாயாக. உனக்கு என்னிடத்தில் மாறாத பக்தி ஏற்கனவே உண்டாயிருக்கின்றது. (உனக்கு நான் அனுக்ரஹம் செய்கின்றேன். நீ அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை.) க்ஷத்ரிய வர்ணத்திற்குரிய தர்மங்களை அனுஷ்டிக்க முயன்று, உலகங்களைப் பாதுகாக்கைக்கு உபயோகப்படாத வேட்டை முதலிய வீண் வ்யாபாரங்களால் ஜந்துக்களை வதித்தாய். ஆகையால் நீ என்னையே அவலம்பமாகப் (ஆதாரமாகப்) பற்றி, என்னிடத்தில் மாறாத பக்தியுடையவனாகி, தவம் செய்து, அந்தப் பாபத்தைப் போக்குவாயாக. அடுத்த ஜன்மத்தில், நீ ப்ராஹ்மண ச்ரேஷ்டனாகப் பிறந்து, ஸமஸ்த பூதங்களிடத்திலும் நட்புடையவனும், எல்லாவற்றையும் ஸமமாகப் பார்க்கும் தன்மையுடையவனுமாக ஆகி (ஜகத்தையெல்லாம் பரப்ரஹ்ம ஸ்வரூபமாகப் (பரம்பொருளாகப்) பார்க்கும் தன்மையனுமாக ஆகி), ப்ரக்ருதி மண்டலத்திற்கு அப்புறத்திலிருக்கின்ற என்னை அடையப்போகின்றாய்.
ஐம்பத்தொன்றாவது அத்தியாயம் முற்றிற்று.