வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 268

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – ஐம்பத்து இரண்டாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் யுத்தத்திற்கு வந்த ஜராஸந்தனிடத்தினின்று பயந்தாற் போல் ஓடி, ப்ரவர்ஷண பர்வதத்தில் ஒளிந்து கொண்டிருந்து, மீண்டு பட்டணம் போதலும், ருக்மிணீ ஸந்தேசமும் (செய்தியும்))

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்தவனாகிய அந்த முசுகுந்தன், ஸ்ரீக்ருஷ்ணனால் இவ்வாறு அனுக்ரஹம் செய்யப் பெற்று, அம்மஹானுபாவனை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்கரித்து, குஹையினின்று வெளிப்பட்டான். அந்த முசுகுந்தன், மனுஷ்யர்களும், பசுக்களும், செடி, கொடி, மரங்களும் முன்னிருந்த அளவைக் காட்டிலும் குறைந்து குள்ளமாயிருப்பதைக் கண்டு, கலியுகம் வந்திருப்பதை அறிந்து, தவம் செய்வதற்காக வடதிசையைக் குறித்துச் சென்றான். 

ஜிதேந்த்ரியனும் (புலன்களை வென்றவனும்), மனமலங்கள் கழியப்பெற்றவனும், நமக்குப் பேறு கை கூடுமோ கூடாதோ என்னும் ஸந்தேஹமற்றவனுமாகிய அந்த முசுகுந்த மன்னவன், ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் மனத்தை நன்றாக நிலை நிறுத்தித் தவம் செய்ய வேண்டுமென்னும் ச்ரத்தையுடன் கூடி, கந்தமாதன பர்வதத்திற்குப் போனான். 

அங்கு, நர, நாராயணர்களின் இருப்பிடமாகிய பத்ரிகாச்ரமத்திற்குச் சென்று, குளிர், வெய்யில் முதலிய த்வந்தங்களை (இரட்டைகளை) எல்லாம் பொறுத்து, மனத்தை அடக்கிக் கொண்டு, தன்னைப் பற்றினவர்களின் பந்தத்தைப் போக்கும் தன்மையனாகிய பகவானைத் தவத்தினால் ஆராதித்தான். 

பிறகு, ஷாட்குண்ய பூர்ணனாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) ஸ்ரீக்ருஷ்ணன், யவனர்களால் சூழப்பட்ட மதுராப்புரிக்குத் திரும்பி வந்து, அந்த ம்லேச்ச ஸைன்யங்களை (படைகளை) எல்லாம் வதித்து, அவர்களுடைய தனத்தையெல்லாம் ஸமுத்ர மத்யத்தில் (நடுவில்) தான் ஏற்படுத்தின ஜலதுர்க்கமாகிய (நீர்க்கோட்டையாகிய) த்வாரகாபுரிக்குக் கொண்டு போய்ச் சேர்த்தான். ஸ்ரீக்ருஷ்ணனால் தூண்டப்பட்ட மனிதர்கள், அந்தப் பணத்தை எருதுகளின் மேல் ஏற்றிக் கொண்டு போகையில், ஜராஸந்தன் இருபத்து மூன்று அக்ஷெளஹிணி ஸைன்யத்தைக் (தேர் 21870; குதிரை 65610; யானை 21870; காலாட் படை 109350 கொண்ட பெரும் படை அக்ஷௌஹிணி ஸைன்யம் எனப்படும்) கூட்டிக்கொண்டு வந்தான். 

ராஜனே! ராம, க்ருஷ்ணர்கள், ஜராஸந்தனுடைய ஸைன்யத்தின் (படையின்) வேகத்தையும், உத்ஸாஹத்தையும் கண்டு, மானிடவர்களின் செயலை அனுஸரிக்க முயன்று, வேகமாக ஓடிப்போனார்கள். அவர்கள், பயமற்றவர்களாயினும், மிகவும் பயந்தவர்கள் போன்று அளவற்றிருக்கிற தனத்தையும் துறந்து, தாமரையிதழ் போல் மிகவும் மெதுவான பாதங்களால் பல யோஜனைகள் கடந்து சென்றார்கள். பலிஷ்டனாகிய (பலசாலியான) ஜராஸந்தன், அந்த ராம, க்ருஷ்ணர்கள் அவ்வாறு ஓடுவதைக் கண்டு, ஸர்வேச்வரர்களான அந்த ராம, க்ருஷ்ணர்களின் ஸ்வரூப, குணங்கள் அளவற்றிருக்கையை அறியாதவனாகையால், பல ரதங்களுடன் கூடி, அவர்களைத் தொடர்ந்தோடினான். 

அந்த ராம, க்ருஷ்ணர்கள், வெகு தூரம் ஓடி இளைப்புற்றவர்கள் போன்று, மிகவும் உயர்ந்திருக்கின்ற ப்ரவர்ஷணமென்னும் பர்வதத்தின் மேல் ஏறினார்கள். மேகம் என்றும் ஓயாமல் மழை பெய்து கொண்டிருக்கையால் அப்பர்வதம், ப்ரவர்ஷணமென்று யதார்த்தமான பெயருடையது. 

மன்னவனே! அந்த ஜராஸந்தன், அந்த ராம, க்ருஷ்ணர்களின் அடிவைப்புக்களால் (கால் அடி) ஆங்காங்கு அடையாளம் செய்யப்பெற்ற இடங்களைக் கண்டு, அந்த அடையாளத்தினால் இவர்கள் ப்ரவர்ஷண கிரியில் மறைந்து கொண்டிருக்கிறார்களென்று தெரிந்து கொண்டு, அந்தப் பர்வதத்தைச் சுற்றி முழுவதும் பத்து யோஜனை (1 யோஜனை = 12.8 கி.மீ.) தூரம் வரையில் கட்டைகளை அடுக்கி, அதில் அக்னியை இட்டுக் கொளுத்தினான். 

அப்பொழுது, அந்த ராம, க்ருஷ்ணர்கள் இருவரும் அவ்வாறு தாழ்வரைகளெல்லாம் எரியப் பெற்றதும், பதினொரு யோஜனைகள் (1 யோஜனை = 12.8 கி.மீ.) உயர்ந்திருப்பதுமாகிய அந்த ப்ரவர்ஷண பர்வதத்தினின்று கிளம்பி, ஜராஸந்தன் முற்றுகையிட்டுக் கொண்டிருக்கிற இடத்திற்கு அப்புறத்தில் கீழ்பூமியில் குதித்தார்கள். யாதவச்ரேஷ்டர்களாகிய அந்த ராம, க்ருஷ்ணர்கள், சத்ருவாகிய (எதிரியாகிய) ஜராஸந்தனுக்கும், அவனைத் தொடர்ந்த மற்றவர்களுக்கும் புலப்படாமல், ஸமுத்ரத்தையே அகழியாகவுடைய தங்கள் பட்டணமாகிய த்வாரகைக்குத் திரும்பி வந்தார்கள். அந்த மாகதனும் (மகத நாட்டு மன்னவனும்), ராம, க்ருஷ்ணர்கள் கொளுத்தப்பட்டார்களென்று பொய்யாகவே நினைத்து, மிகவும் பெரிதான தன் ஸைன்யத்தை (படையை) அழைத்துக்கொண்டு, மகத தேசம் போய்ச் சேர்ந்தான். 

செல்வப் பெருக்குடைய ஆனர்த்த தேசத்து அரசனாகிய ரைவதனென்பவன், ப்ரஹ்மதேவனால் தூண்டப்பட்டு, தன் புதல்வியாகிய ரேவதியைப் பலராமனுக்குக் கொடுத்தானென்று முன்னமே மொழிந்தேன். குரு வம்சத்தை மேன்மைப்படுத்தும் திறமையுடையவனே! மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், ஸ்வயம்வரத்தில் ஸமஸ்த பூதங்களும் பார்த்துக்கொண்டிருக்கையில், சிசுபாலனுடைய பக்ஷத்திலுள்ள ஸால்வன் முதலிய அரசர்களையெல்லாம் வென்று, கருடன் அம்ருதத்தைப் பறித்துக்கொண்டு வந்தாற் போல், ஸ்ரீமஹாலக்ஷ்மியின் அம்சமும் பீஷ்மகனுடைய புதல்வியுமாகிய ருக்மிணியை, பறித்துக் கொண்டு வந்து மணம் புரிந்தான்.

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- ஸ்ரீக்ருஷ்ணன், அழகிய முகமுடையவளும், பீஷ்மக ராஜன் புதல்வியுமாகிய ருக்மிணியை, ராக்ஷஸ விவாஹத்தினால் மணம் புரிந்தானென்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். மஹானுபாவரே! அளவற்ற தேஜஸ்ஸையுடைய ஸ்ரீக்ருஷ்ணன், ஜராஸந்த, ஸால்வாதிகளைத் தானொருவனே ஜயித்து, மீண்டு வந்த வ்ருத்தாந்தத்தைக் கேட்க விரும்புகிறேன். ப்ரஹ்ம ரிஷீ! ஸ்ரீக்ருஷ்ணனுடைய கதைகள் புண்யமானவை; செவிக்கின்பமாயிருப்பவை; பாபங்களையெல்லாம் போக்க வல்லவை; என்றும் புதிது புதிதாயிருப்பவை. செவியினால் அனுபவிக்கப்படும் வஸ்துக்களால் உண்டாகும் ஸுகத்தின் தாரதம்யத்தை (ஏற்றத்தாழ்வை) அறிந்தவன் எவன் தான் இத்தகைய ஸ்ரீக்ருஷ்ண கதைகளைக் கேட்டு  “இது போதும்” என்று திருப்தி அடைவான்? ரஸமறிந்தவன் எவனும் திருப்தி அடைய மாட்டான்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- விதர்ப்ப தேசங்களுக்கு அதிபதியாக பீஷ்மகனென்னும் மன்னவன் இருந்தான். அவன் பெருங்குணமுடையவன். அவனுக்கு, ஐந்து பிள்ளைகளும், அழகிய முகமுடைய ஒரு புதல்வியும், பிறந்தார்கள். பிள்ளைகளில், ருக்மி என்பவன் ஜ்யேஷ்டன் (மூத்தவன்). ருக்மரதன், ருக்மபாஹு, ருக்மகேசன், ருக்மமாலி என்னும் இவர்கள் அவனுக்குப் பின் பிறந்தவர்கள். இவர்களின் உடன் பிறந்தவள் ருக்மிணியென்பவள். அவள் நல்லொழுக்கமுடையவள். அவள், தன் வீட்டிற்கு வரும் ஜனங்களால் பாடப்படுகிற ஸ்ரீக்ருஷ்ணனுடைய ரூப ஸௌந்தர்யத்தையும், வீர்ய குணத்தையும், காம்பீர்யம் முதலிய மற்றும் பல குணப் பெருக்குகளையும், செல்வப் பெருக்குகளையும் கேட்டு, அந்த ஸ்ரீக்ருஷ்ணனையே தனக்குத் தகுந்த கணவனாக நினைத்தாள். 

அவ்வாறே, ஸ்ரீக்ருஷ்ணனும் ருக்மிணியின் புத்தி குணத்தையும், ஸாமுத்ரிக லக்ஷணங்கள் (அங்க அடையாளங்கள்) அமைந்திருப்பதையும், ஒளதார்யத்தையும் (வள்ளல் தன்மையையும்), வடிவழகையும், நல்லொழுக்கத்தையும், மற்றும் பலகுணங்கள் நிறைந்திருப்பதையும் கேட்டு, இவள் தனக்குத் தகுந்த பார்யை (மனைவி) என்று நிச்சயித்து, அவளை மணம்புரிய மனம் கொண்டான். அவளுடைய பந்துக்கள் அனைவரும், அவளை ஸ்ரீக்ருஷ்ணனுக்குக் கொடுக்க இஷ்டப்பட்டிருக்கையில், ருக்மி ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் த்வேஷம் (பகைமை) கொண்டு, பந்துக்களைத் தடுத்து, சிசுபாலனுக்கே அவளைக் கொடுக்க நிச்சயித்தான். கரிய கடைக்கண்களுடைய ருக்மிணி, தன் ப்ராதாவான (அன்ணனான) ருக்மியின் அபிப்ராயத்தை அறிந்து, மிகவும் மனவருத்தமுற்று, தனக்குள் நிச்சயித்து, விச்வாஸ பாத்ரமாகிய (நம்பிக்கைக்குரிய) ஒரு அந்தணனை வேகமாக ஸ்ரீக்ருஷ்ணனிடம் அனுப்பினாள். 

அவ்வந்தணன், த்வாரகைக்குச் சென்று, அங்கு த்வாரபாலர்களால் உள்ளே விடப்பெற்று, ஸ்வர்ண மயமான ஸிம்ஹாஸனத்தில் வீற்றிருக்கின்ற ஆதிபுருஷனாகிய (ஜகத்காரணனாகிய) ஸ்ரீக்ருஷ்ணனைக் கண்டான். ப்ராஹ்மண குலத்திற்கு வேண்டியவற்றையெல்லாம் நிறைவேற்றிக்கொடுத்து, அவர்களையே தெய்வமாக ஆராதித்துக் கொண்டு வருபவர்களில் சிறந்தவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், அவ்வந்தணனைக் கண்டு, உடனே தன்னுடய ஆஸனத்தினின்றும் எழுந்து, தன்னைத் தேவதைகள் பூஜிப்பது போல, தான் அவனை உட்கார வைத்துப் பூஜித்தான். வழி நடந்து வந்த இளைப்பெல்லாம் தீரப்பெற்ற அவ்வந்தணனைக் கிட்டி, தான் ஸத்புருஷர்களுக்குக் கதியாகையால், ஸத்புருஷர்கள் இவ்வாறு ப்ராஹ்மணர்கள் விஷயத்தில் நடக்க வேண்டுமென்று தெரிவிப்பவன் போன்று, அவர் பாதத்தைத் தன் கையால் பிடித்துக்கொண்டு, மனவூக்கத்துடன் வினவினான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ப்ராஹ்மண ச்ரேஷ்டர்களிலும் ச்ரேஷ்டரே (சிறந்தவர்களிலும் சிறந்தவரே)! அனாயாஸமாய்க் கிடைத்ததைக் கொண்டு எப்பொழுதும் ஸந்தோஷமுற்ற மனமுடையவராகிய உம்முடைய தர்மம், பெரியோர்களால் புகழ்பட்டு நடந்து வருகின்றதா? ப்ராஹ்மணன், தேஹ தாரணத்திற்கு (உடல் உயிரோடு சேர்ந்து இருப்பதற்கு) வேண்டிய ஏதேனுமொன்று அனாயாஸமாகக் (எளிதாகக்) கிடைக்கப் பெற்று, தன்னுடைய தர்மத்தினின்று நழுவாதிருப்பானாயின், அந்நிலைமையே அவனுடைய விருப்பங்களையெல்லாம் கறக்கும். தேவேந்த்ரனாயினும், ஸந்தோஷம் (த்ருப்தி) அடையாதிருப்பானாயின், அவன் மனநிறைவு அடைய மாட்டான். ஒன்றுமில்லாத நித்ய தரித்ரனாயினும் (எப்பொழுதும் ஏழ்மையில் இருப்பவனாய் இருந்தாலும்) ஸந்தோஷமுற்றிருப்பானாயின் (த்ருப்தியுடன் இருப்பானாயின்), ஒரு அங்கத்திலும் தாபமின்றி, கவலையின்றி ஸுகமாகப் படுத்துறங்குவான். 

பரமாத்மாவுக்குத் தான் தாஸனென்றும், பரமாத்மா தனக்கு ப்ரபுவென்றும் நினைக்கையாகிற ஆத்ம லாபத்தினால் (ஆத்ம, பரமாத்ம தத்வங்களின் அறிவினால்) ஸந்தோஷமுற்றிருப்பவர்களும், பரோபகாரம் (பிறர்க்கு உதவி) செய்பவர்களும், தேஹாத்மாபிமானம் (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கம்) அற்றவர்களும், ஜிதேந்த்ரியர்களுமாகிய (புலனடக்கம் உடையவர்களுமாகிய) அந்தணர்களை, நான் அடிக்கடி சிரத்தினால் நமஸ்கரிக்கிறேன். அவர்கள், என்னிஷ்டத்தை நிரம்பவும் நடத்துபவர்களாகையால், அவர்களுக்குப் பதில் உபகாரம் செய்ய முடியாமல், கேவலம் நமஸ்காரம் செய்கின்றேன். 

ப்ராஹ்மணரே! உங்களுக்கு அரசனிடத்தினின்று க்ஷேமம் கிடைக்கின்றதா? எவனுடைய தேசத்தில், ப்ரஜைகள் நன்கு பாதுகாக்கப்பெற்று, ஸுகமாயிருக்கின்றார்களோ, அந்த மன்னவன் எனக்கு மிகவும் அன்பன். நீர், எந்தத் தேசத்தினின்று எந்த ப்ரயோஜனத்தை உத்தேசித்து, ஸமுத்ர ஜலமாகிய துர்க்கத்தைக் (அகழியைக்) கடந்து, இவ்விடம் வந்தீரோ, அதெல்லாம் ரஹஸ்யம் அல்லாதிருக்குமாயின், எங்களுக்குச் சொல்வீராக. நாங்கள் உமக்கு என்ன செய்ய வேண்டும்? (எங்களால் ஆகவேண்டிய ப்ரயோஜனம் ஏதேனும் உளதாயின், அதை உமது கிங்கரர்களாகிய (சேவகர்களாகிய) எங்களுக்கு நியமிப்பீராக).

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- லீலைக்காக மானிட உருவத்தை ஏற்றுக் கொண்டிருப்பவனும், நிகரற்ற தன் மஹிமையில் நிலைநின்றிருப்பவனும், பரமபதமென்கிற வைகுண்ட லோகத்தில் வஸிப்பவனும், மஹானுபாவனுமாகிய (மிகுந்த பெருமை பொருந்தியவனுமான) ஸ்ரீக்ருஷ்ணனால் இவ்வாறு வினவப்பெற்ற அவ்வந்தணன், அந்தப் பகவானுடைய கேள்விகளுக்கெல்லாம் மறுமொழி கூறினான். 

ப்ராஹ்மணன் சொல்லுகிறான்:- புருஷோத்தமா! நான் ருக்மிணியால் உன்னிடம் அனுப்பப்பட்டேன். அவள் சொல்லி அனுப்பின ஸங்கதியைக் (செய்தியைக்) கேட்டு, அதற்கு மேல் நடத்த வேண்டியவைகளை  நடத்துவாயாக!

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அவ்வந்தணன் இவ்வாறு மொழிந்து, ருக்மிணி எழுதின பத்ரிகையைப் பகவானுடைய பாதங்களில் வைத்து, அவனை நமஸ்கரித்தான். ஜகத்திற்கெல்லாம் நாதனும், புன்னகையினால் அழகிய கண்களுடையவனும், வேண்டினவற்றையெல்லாம் நிறைவேற்றிக் கொடுக்கையாகிற தர்மத்தில் நிலைநின்ற மனமுடையவனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன், தன் மனோரதத்தையெல்லாம் வெளியிடுபவன் போன்று, ஆவலுடன் அந்தப் பத்ரிகையை எடுத்து வாசித்தான்.

ருக்மிணி சொல்லுகிறாள்:- உலகங்களுக்கெல்லாம் அழகனே! கேட்கிறவர்களின் காது வழியாய் உள்ளே நுழைந்து, ஆத்யாத்மிகம் முதலிய தாபங்களையெல்லாம் {ஆத்யாத்மிகம் (சரீரத்திற்கு ஏற்படும் தலைவலி, சளி முதலிய நோய்கள் மற்றும் மன நோய்களான காமம், கோபம், பயம் முதலியன)  ஆதிதெய்விகம் (குளிர், சூடு, மழை முதலியவற்றால் ஏற்படும் துன்பங்கள்), ஆதிபௌதிகம் (ம்ருகம், பறவை, மனிதர் முதலியவற்றால் வரும் துன்பங்கள்) என்ற மூன்று வகையான துன்பங்களையெல்லாம்} போக்குகின்ற உன் குணங்களையும், கண்ணுடையவர்களின் கண்களுக்கு ப்ரயோஜனங்களையெல்லாம் கைகூடுவிக்கிற உன் வடிவழகையும் கேள்விப்பட்டு, அச்சுதனே! (பக்தர்களைக் கைவிடாதவனே!) என் மனம் வெட்கமின்றி உன்னிடத்தில் ஆஸக்தமாயிருக்கின்றது (பற்றியிருக்கிறது). (உன்னுடைய மஹிமை எங்கே? ரூப சீலாதி குணங்கள் எவையும் இல்லாத நான் எங்கே? ஆயினும், என் மனம் அதையெல்லாம் பாராமல், வெட்கமின்றி உன்னையே விரும்புகின்றது.) 

முகுந்தனே! (போக மோக்ஷங்களைக் கொடுக்க வல்லவனே!) மனுஷ்யர்களில் சிறந்தவனே! எந்தப் பெண்பிள்ளை தான் நற்குலத்தில் பிறந்து, நற்குணங்கள் பலவும் அமைந்து நிலைநின்ற மனமுடையவளுமாய் இருப்பாளாயின், விவாஹ காலம் நேர்ந்திருக்கும் பொழுது, குணங்கள், வடிவழகு, நல்லொழுக்கம், கல்வி, வயது, பணம், மேன்மை இவைகளால் தனக்குத் தகுந்தவனும், மானிட உலகில் உள்ள ஜீவர்கள் அனைவரும், பார்த்த மாத்திரத்தில் மகிழ்ச்சி அடையும்படியானவனுமான உன்னை வரிக்கமாட்டாள்? ஆகையால் “குலப்பெண் இப்படி ஸ்வதந்தரித்து (தானே) மேல் விழலாமோ!” என்று என் மேல் தோஷம் சங்கிக்க (ஸந்தேஹப்பட) வேண்டாம்.) 

ப்ரபூ! ஆகையால் நான் உன்னையே கணவனாக வரித்தேன். ஆத்மாவையும் உனக்கே அர்ப்பணம் செய்து விட்டேன். ஸ்ரீக்ருஷ்ணா! நீ இவ்விடம் வந்து, என்னை உன் பார்யையாகச் (மனைவியாகச்) செய்து கொள்வாயாக. தாமரைக்கண்ணனே! ஸிம்ஹத்தின் பலியை நரி தொடுவது போல, வீரனாகிய உன் பாகமான என்னைச் சிசுபாலன் தொடாதிருக்கும்படி சீக்ரம் ப்ரயத்னிப்பாயாக (முயற்சிப்பாயாக). ஸ்ம்ருதிகளில் விதித்த கர்மங்கள், குளம், கிணறு முதலியன வெட்டுவித்தல், வைதிகமான யாகாதி கர்மங்கள், தானம், புண்ய தீர்த்த ஸ்னானம் முதலிய நியமம், சாந்த்ராயணம் முதலிய வ்ரதம், தேவபூஜை, ப்ராஹ்மண பூஜை, குருபூஜை இவை முதலிய தர்மங்களால் மேன்மையுடையவர்களுக்கும் மேலான பகவானை நான் நன்றாக ஆராதித்திருப்பேனாயின், ஸ்ரீக்ருஷ்ணன் நாளைய தினம் வந்து என் கையைப் பிடிப்பானாக. என்னை மணம் புரிவானாக. சிசுபாலன் முதலிய மற்ற எவரும் என் கையைத் தொடாதிருப்பார்களாக. 

ஒருவராலும் ஜயிக்கப்படாத மஹாவீரனே! நாளைய தினம் விவாஹம் நடக்கப் போகிறதாயிருப்பினும், நீ மறைந்து வந்து, ஸேனாபதிகளால் சூழப்பட்டு, சிசுபாலன், ஜராஸந்தன் முதலியவர்களின் பலத்தை வென்று, வீர்யத்தையே பந்தயமாகத் தந்து (வீரத்தையே கன்னிகை தனமாகக் கொடுத்து) ராக்ஷஸ விவாஹத்தின்படி (எதிரிகளை வென்று, வலுவிலே பெண்ணை இழுத்துச் சென்று மணம் புரியும் முறை) பலாத்கரித்துக் கொண்டு போய், மணம் புரிவாயாக. “அந்தப்புரத்திற்குள் ஸஞ்சரித்துக் கொண்டிருக்கின்ற உன்னை, உன் பந்துக்களை வதிக்காமல் எப்படி கொண்டு போவேன்?” என்று சங்கிப்பாயாயின் (ஸந்தேஹப்படுவாயாயின்), அவ்விஷயத்தில் உபாயம் சொல்லுகிறேன். 

விவாஹம் நடப்பதற்கு முதல் நாள் பெரிய ஆரவாரத்துடன் குலதேவ யாத்ரை (குலதெய்வத்தின் ஆலயத்திற்குச் சென்று பூஜை செய்வதற்குப் போய் வருவது) ஒன்றுண்டு. அந்த யாத்ரையில், புதிய மணப் பெண்ணாகிய நான், அம்பிகையைத் தர்சனம் செய்ய அம்பிகாலயத்திற்குப் போவேன். அந்த அம்பிகாலயத்தினின்றே என்னை அனாயாஸமாகக் (எளிதாகக்) கொண்டு போகலாம். தாமரைக் கண்ணனே! உமாபதியாகிய ருத்ரனைப்போல், மற்றுமுள்ள மஹான்களும், தங்கள் அஜ்ஞானம் (அறியாமை) நீங்கும் பொருட்டு எவனுடைய பாதாரவிந்தங்களின் பராகங்களால் (தூள்களால்) ஸ்னானம் செய்வதை விரும்புகிறார்களோ, அப்படிப்பட்ட மஹானுபாவனாகிய உன்னுடைய அனுக்ரஹத்தை நான் பெறாது போவேனாயின், உபவாஸம் (உண்ணா நோன்பு) முதலிய வ்ரதங்களால் உடலை இளைக்கச் செய்து ப்ராணன்களைத் (உயிரைத்) துறப்பேன். நூறு ஜன்மங்கள் எடுக்கிலும், நான் உனக்கே பார்யை (மனைவி) ஆவேனாக.

ப்ராஹ்மணன் சொல்லுகிறான்:- யதுகுலதேவனே! மிகவும் ரஹஸ்யமான இத்தகைய ஸமாசாரங்களை (செய்திகளை) நான் கொண்டு வந்தேன். இவ்விஷயத்தில் என்ன செய்ய வேண்டுமோ, அதை ஆலோசித்து, உடனே நடத்துவாயாக. 

ஐம்பத்திரண்டாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக