சனி, 6 பிப்ரவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 269

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – ஐம்பத்து மூன்றாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் ருக்மிணியைப் பறித்துக்கொண்டுபோதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- யாதவ குமாரனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன், ருக்மிணி சொல்லியனுப்பின ஸமாசாரத்தைக் (செய்தியைக்) கேட்டு, தன் கையினால் அந்த ப்ராஹ்மணனைக் கையில் பிடித்து, சிரித்து மொழிந்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- மிகவும் நல்லியற்கையுடைய அந்த ருக்மிணி எப்படி ஸர்வ காலமும் என்னிடத்தில் நிலைநின்ற மனமுடையவளாயிருக்கிறாளோ, அவ்வாறே நானும் அவளிடத்தில் நிலை நின்ற மனமுடையவனாகி, இரவில் நித்ரையும்கூட நேரப் பெறாதிருக்கின்றேன். ருக்மி, என்னிடத்தில் த்வேஷத்தினால் (பகைமையினால்) ருக்மிணியை எனக்குக் கொடுத்து விவாஹம் செய்வதைத் தடுத்து விட்டானென்பது எனக்குத் தெரியும். அதைப்பற்றியும் நான் உறக்கம் பிடிக்காதிருக்கின்றேன். இப்பொழுது, நான் சிசுபாலன் முதலிய அற்ப ராஜர்களை யுத்தத்தில் ஜயித்து, சிறிதும் தோஷங்களுக்கிடமாகாமல் ரமணீயமான (அழகிய) அங்கங்களுடையவளும், என்னையே முக்யமாகக் கொண்டு எப்பொழுதும் என்னிடத்திலேயே நிலைகின்ற மனமுடையவளுமாகிய, அந்த ருக்மிணியை அரணிக்கட்டையினின்று அக்னி ஜ்வாலையைக் கொண்டு வருவது போலக் கொண்டு வருகிறேன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸ்ரீக்ருஷ்ணன், அந்த ப்ராஹ்மணனுக்கு இவ்வாறு மொழிந்து, ருக்மிணியின் விவாஹத்திற்கு ஏற்பட்டிருக்கும் நக்ஷத்ரம் இன்னதென்பதைத் தெரிந்து கொண்டு, “தாருக! ரதத்தில் குதிரைகளைப் பூட்டிக்கொண்டு வருவாயாக” என்று ஸாரதியைப் பார்த்து மொழிந்தான். அவனும், சைப்யம், ஸுக்ரீவம், மேகபுஷ்பம், வலாஹகம் என்னும் பெயருடைய நான்கு குதிரைகள் பூட்டின ரதத்தைக் கொண்டு வந்து நிறுத்தி, அஞ்சலித்துக் கொண்டு, முன்னே வந்து நின்றான். ஸ்ரீக்ருஷ்ணன், ப்ராஹ்மணனை ரதத்தில் ஏற்றி, தானும் ஏறிக்கொண்டு, குதிரைகள் மிகுந்த வேகமுடையவைகளாகையால், ஒரு ராத்ரியில் ஆனர்த்த தேசத்தினின்று விதர்ப்ப தேசம் போய்ச் சேர்ந்தான். 

குண்டின புரத்தை ஆள்கின்ற பீஷ்மக மன்னவன், தன் பிள்ளையாகிய ருக்மியிடத்தில் ஸ்னேஹத்தினால் அவனுக்கு உட்பட்டு, தன் புதல்வியான ருக்மிணியைச் சிசுபாலனுக்குக் கொடுக்க முயன்று, பட்டணத்தை அலங்கரிப்பது, பித்ருக்களையும், தேவதைகளையும் பூஜிப்பது முதலிய கார்யங்களை நடத்தினான். அந்தக் குண்டினபுரத்தில், ராஜவீதிகளும், ஸாதாரண மார்க்கங்களும், நாற்சந்தி வீதிகளும், நன்கு விளக்கி ஜலந்தெளித்து, விசித்ரமான த்வஜங்களாலும் (கொடிகளாலும்), பதாகைகளாலும் (திரைச்சீலைகளாலும்), தோரணங்களாலும் அலங்காரம் செய்யப் பெற்றிருந்தன. 

அந்நகரத்தில், வீடுகள் அனைத்தும், அகில் புகையிடப்பெற்று, மிகவும் அழகாயிருந்தன. வீடுகள் தோறும், ஆண், பெண்கள் அனைவரும் நிர்மலமான ஆடைகளை உடுத்தி, பூ மாலைகள், சந்தனம், அகில், குங்குமம் முதலிய அங்காரகங்கள் (உடலில் பூசும் வாசனைப் பொருட்கள்), புஷ்ப ஸரங்கள், ஆபரணங்கள் இவைகளை அணிந்து, மிகவும் உத்ஸாஹமுற்றிருந்தார்கள். இத்தகைய ஸ்த்ரீ, புருஷர்களாலும், செல்வப் பெருக்குகள் அமைந்த அழகிய க்ருஹங்களாலும், அந்நகரம் மிகவும் அழகாயிருந்தது. 

பீஷ்மக மன்னவன், பித்ருக்களையும், தேவதைகளையும் நன்றாகப் பூஜித்து, ப்ராஹ்மணர்களை விதிப்படி புஜிப்பித்து, நன்றாக ஆராதித்து, அவர்களைக் கொண்டு ருக்மிணியைக் குறித்து ஸ்வஸ்தி வாசனம் (மங்கள நல்வாழ்த்துக்கள்) நடத்தினான். அப்பெண்மணி, நன்கு ஸ்னானம் செய்து, கங்கண பந்தனமாகிற (கையில் கட்டும் காப்பு நாண்) மங்களம் செய்யப் பெற்று, புதியவைகளான இரண்டு வஸ்த்ரங்களை உடுத்து, மேலான ஆபரணங்களை அணிந்து, அழகிய பற்களுடன் விளக்கமுற்றிருந்தாள். 

ப்ராஹ்மண ச்ரேஷ்டர்கள், ஸாம வேத மந்த்ரங்களாலும், ருக்வேத மந்திரங்களாலும், யஜுர்வேத மந்திரங்களாலும் அக்கன்னிகைக்கு ரக்ஷை (காப்பு) செய்தார்கள். புரோஹிதர், க்ரஹ சாந்தியின் பொருட்டு (கோள்களின் த்ருப்திக்காக), அதர்வ வேத மந்திரங்களால் ஹோமம் செய்தார்கள். கார்ய காலங்களில் செய்ய வேண்டியவற்றை அறிந்தவர்களில் சிறந்தவனாகிய அப்பீஷ்மக மன்னவன், பொன், வெள்ளி, வஸ்த்ரம் இவைகளையும் வெல்லம் கலந்த எள்ளையும், பசுக்களையும், ப்ராஹ்மணர்களுக்குக் கொடுத்தான். 

இவ்வாறு ருக்மிணிக்குச் செய்தாற் போலவே, சேதி தேசங்களுக்கு ப்ரபுவாகிய தமகோஷ மன்னவன், தன் பிள்ளையான சிசுபாலனுக்கு மந்த்ரங்களை அறிந்த ப்ராஹ்மணர்களைக் கொண்டு மங்கள கார்யங்களையெல்லாம் நடத்தினான். அப்பால், அம்மன்னவன் மதத்தைப் பெருக்குகின்ற யானைகளின் கூட்டங்களோடும், பொற்சங்கிலி முதலிய பொன்னலங்காரங்கள் செய்யப்பெற்ற ரதங்களோடும், அளவிறந்த காலாட்களோடும், குதிரைகளோடும் கூடின ஸைன்யங்களால் சூழப்பட்டு, குண்டினபுரம் போய்ச் சேர்ந்தான். 

விதர்ப்ப தேச ராஜனாகிய பீஷ்மகன், அந்தச் சேதிராஜனை எதிர்கொண்டு, நன்றாகப் பூஜித்து, மனக்களிப்புடன் அவனுக்காகத் தனியே ஏற்படுத்தப்பட்ட க்ருஹத்தில் ப்ரவேசிப்பித்தான் (தங்கச் செய்தார்). க்ருஷ்ண, ராமர்களை த்வேஷிப்பவர்களும் (வெறுப்பவர்களும்), சிசுபாலனுடைய பக்ஷத்தை (பக்கத்தை) அனுஸரிப்பவர்களுமாகிய ஸால்வன், ஜராஸந்தன், விதூரதன் இவர்களும், பௌண்ட்ரகன் முதலிய மற்றும் பலவாயிர மன்னவர்களும் “ஸ்ரீக்ருஷ்ணன், பலராமன் முதலிய யாதவர்களால் சூழப்பட்டு வந்து, ருக்மிணியைப் பறித்துக் கொண்டு போவானாயின், நாமெல்லோரும் சேர்ந்து அவனுடன் யுத்தம் செய்ய வேண்டும்” என்று மனத்தில் நிச்சயித்துக்கொண்டு, வெகு முயற்சியுடன் சிசுபாலனுக்கு அக்கன்னிகையைக் கொடுப்பிக்கும் பொருட்டு அவ்விடம் வந்தார்கள். மற்றும், பலராஜர்களும் அளவற்ற ஸைன்யங்களோடும், யானை, குதிரை, தேர் முதலிய பல வாஹனங்களோடும் கூடி அவ்விடம் வந்தார்கள்.  

மிகுந்த பலமுடைய பலராமன், சத்ரு (எதிரி) பக்ஷத்தில் சேர்ந்த மன்னவர்கள் இவ்வாறு பெரிய முயற்சியுடன் வருவதைக் கேட்டு, கன்னிகையைப் பறித்துக் கொண்டு வருவதற்காக ஸ்ரீக்ருஷ்ணன் தனியே போயிருப்பதையும் அறிந்து, “அவ்விடத்தில் நிச்சயமாய்க் கலஹம் நடக்கும்” என்று சங்கித்து, ப்ராதாவிடத்தில் (சகோதரனிடத்தில்) மிகுதியும் ஸ்னேஹமுடையவனாகையால், யானை, குதிரை, தேர், காலாட்கள் நிறைந்த பெரிய ஸைன்யத்துடன் (படையுடன்) கூடி, வேகமாகக் குண்டினபுரிக்குப் போனான். ஸ்ரீக்ருஷ்ணனுடைய வரவை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்ற ருக்மிணி, தான் அனுப்பின ப்ராஹ்மணன் திரும்பிவரக் காணாமல், இவ்வாறு சிந்தித்தாள். 

“ஆ! என் விவாஹத்திற்கு ஏற்படுத்தியிருக்கிற முஹூர்த்தம் இந்த ராத்ரி கடந்தவுடனே வரப்போகின்றது. நான் மிகவும் மந்த பாக்யமுடையவள் (அத்ருஷ்டம் இல்லாதவள், பாக்கியம் இல்லாதவள்). ஸ்ரீக்ருஷ்ணன் இன்னும் வரவில்லை. இதற்குக் காரணம் என்னவோ தெரியவில்லை. என்னுடைய ஸமாசாரம் (செய்தி) கொண்டு போன அந்தணரும் இன்னும் திரும்பி வரவில்லை. ஸ்ரீக்ருஷ்ணன் என்னுடைய தைர்யம் முதலிய கெட்ட நடத்தையைக் கண்டு, என் விவாஹத்திற்கு முயற்சியுடன் வருவதை நிறுத்திவிட்டான். இது நிச்சயம். அல்லது ஜகத் ஸ்ருஷ்டிகர்த்தாவான ஸர்வேச்வரன், துர்ப்பாக்யமுடைய (அத்ருஷ்டம் இல்லாத) என் விஷயத்தில் அனுகூலனாயில்லையோ? அல்லது, ருத்ரனுடைய பார்யையும், ஹிமவத் பர்வதத்தின் (இமய மலையின்) புத்ரியும் (பெண்ணும்), நல்லியற்கையுடையவளுமாகிய பார்வதி, என்னிடத்தில் விமுகமாய் (பாராமுகமாய்) இருக்கின்றாளோ?” என்று இளம்பருவமுடைய ருக்மிணி, ஸ்ரீக்ருஷ்ணனால் பறியுண்ட மனமுடையவளாகி, இவ்வாறு சிந்தித்துக் கொண்டு, இன்னும் கோவிந்தன் வருங்காலம் ஆகவில்லையேயென்று நினைத்துக் கண்ணீர்களால் தடுக்கப்பட்ட கண்களை மூடினாள். 

மன்னவனே! ஸ்ரீக்ருஷ்ணனுடைய வரவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்ற அந்த ருக்மிணியின் இடத்துடையும், இடக்கையும், இடக்கண்ணும் ஸ்ரீக்ருஷ்ணனுடைய வரவாகிற ப்ரியத்தை அறிவித்துக் கொண்டு துடித்தன. அனந்தரம் (பிறகு), முன்பு தான் அனுப்பியிருந்த அவ்வந்தணன் ஸ்ரீக்ருஷ்ணனால் அனுப்பப்பட்டு வந்து, அந்தப்புரத்தில் உலாவிக் கொண்டிருக்கின்ற ருக்மிணியைக் கண்டான். 

நல்லியற்கையுடைய அந்த ராஜபுத்திரி, ஸந்தோஷத்தினால் மலர்ந்த முகமுடையவனும், உத்ஸாஹத்தினால் தடைபடாமல் விரைந்து நடந்து வருகின்றவனுமாகிய அவ்வந்தணனைக் கண்டு, தூத லக்ஷணங்களை (தூதனின் அடையாளங்களை) அறிந்தவளாகையால், அவன் கார்ய ஸித்தியுடன் வருகிறானென்பதைத் தெரிந்து கொண்டு, பரிசுத்தமான புன்னகையுடன், அவ்வந்தணனை வினவினாள். அவன், பலராமனோடு ஸ்ரீக்ருஷ்ணன் வந்திருப்பதையும், அவளைத் தன்னிடம் கொண்டு போய்ச் சேர்த்துக் கொள்ளுகிறேனென்று மொழிந்த உண்மையான வசனத்தையும், ருக்மிணிக்கு மொழிந்தான். பிறகு, ருக்மிணி ஸ்ரீக்ருஷ்ணன் வந்திருக்கிறானென்பதை அறிந்து, மனக் களிப்புற்று, ப்ராஹ்மணனுக்குப் பரிசு கொடுக்க, ப்ரியமும் உரியதுமாகிய ஒரு வஸ்துவையும் காணாமல், வெறுமனே நமஸ்காரம் செய்தாள். தன் புதல்வியின் விவாஹ (திருமணப்) மஹோத்ஸவத்தைப் (பெருவிழாவைப்) பார்க்க விரும்பி ராம, க்ருஷ்ணர்கள் வந்திருக்கிறார்களென்று கேள்விப்பட்டு, பீஷ்மக மன்னவன் பெரிய வாத்ய கோஷத்துடன் பூஜைக்கு வேண்டிய வஸ்துக்களையெல்லாம் எடுத்துக்கொண்டு, அம்மஹானுபாவர்களை எதிர்கொண்டான். 

அப்பால், அந்த பீஷ்மகன் ராம, க்ருஷ்ணர்களுக்கு மதுவர்க்கமும் (தேன் கலந்த பழம்), அழகான வஸ்த்ரங்களும், இஷ்டமான உபஹாரங்களும் (அன்புக் காணிக்கைகளும்) கொடுத்து, விதிப்படி பூஜித்தான். மிகுந்த மதியுடைய அப்பீஷ்மக மன்னவன், போக்ய (அனுபவிக்கத்தக்க) வஸ்துக்களும் (பொருட்களும்), போகத்திற்கு (அனுபவிப்பதற்கு) வேண்டிய கருவிகளும் ஸம்ருத்தமாய் (நிறைந்து) இருக்கப் பெற்று, மிகவும் அழகாயிருக்கின்ற ஒரு விடுதியை அந்த ராம, க்ருஷ்ணர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து, அவர்களுடைய ஸைன்யங்களுக்கும், அவர்களுடன் வந்த மற்றவர்களுக்கும், அவர்களுக்கும் உரியபடி அதிதி ஸத்காரம் (விருந்தோம்பல்) செய்தான். 

இவ்வாறே அங்கு வந்திருக்கின்ற மற்ற மன்னவர்களையும் அவரவர்களுடைய வீர்யத்திற்கும், வயது, பலம், நடத்தை இவைகளுக்கும் தகுந்தபடி வேண்டிய விருப்பங்களையெல்லாம் கொடுத்துப் பூஜித்தான். விதர்ப்ப பட்டணத்தில் வாஸம் செய்கின்ற ஜனங்கள், ஸ்ரீக்ருஷ்ணன் வந்திருப்பதைக் கேட்டு, இங்குமங்கும் இருந்து, அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய தாமரை முகத்திலுள்ள லாவண்யமாகிற (அழகாகிற) அம்ருதத்தை நேத்ரங்களாகிற (கண்களாகிற) அஞ்சலிகளால் (கைகளால்) பானம் செய்தார்கள் (அருந்தினார்கள்). மற்றும், அந்தப் பட்டணத்து ஜனங்கள், ப்ரீதியின் மிகுதியால் கட்டுண்டு, ஸந்தோஷத்தினாலுண்டான கண்ணீர்களால் வாக்கு தழதழக்கப்பெற்று, “ருக்மிணி இந்த ஸ்ரீக்ருஷ்ணனுக்கே பார்யையாகத் (மனைவியாகத்) தகுந்தவளன்றி, மற்ற எவர்க்கும் தகுந்தவளன்று. இவனுக்கு இவள் தகுந்தவளேயன்றி, மற்ற எவளும் தகுந்தவளன்று. 

இந்த ஸ்ரீக்ருஷ்ணனும், அழகான திருமேனியுடையவன். இவனுடைய திருமேனியில் ஒரு தோஷமும் தெரியவில்லை. ஆகையால், இவன் நமது ருக்மிணிக்குத் தகுந்த கணவனே. இவனே தகுந்தவன். இவன் ருக்மிணிக்கே தகுந்தவனன்றி, மற்ற எவளுக்கும் தகுந்தவனன்று. நாம் ஏதேனும் சிறிது புண்யம் செய்திருப்போமாயின், அந்தப் புண்யத்தினால் மூன்று லோகங்களையும் படைக்கின்ற ப்ரஹ்ம தேவன் ஸந்தோஷம் அடைந்து, ஸ்ரீக்ருஷ்ணன் ருக்மிணியைப் பாணிக்ரஹணம் செய்யும்படி (கைப்பிடிக்கும்படி) அனுக்ரஹிப்பானாக” என்று மொழிந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது, ராஜ கன்னிகையாகிய அந்த ருக்மிணியும், படர்களால் (படை வீரர்களால்) பாதுகாக்கப்பெற்று, அந்தப்புரத்தினின்று அம்பிகாலயத்திற்குச் சென்றாள். 

அவள், பார்வதியின் பாத பல்லவங்களை (திருவடி மலர்களை) தர்சனம் செய்ய வேண்டுமென்று பாதங்களாலேயே நடந்தாள். அவள், ஸ்ரீக்ருஷ்ணனுடைய பாதார விந்தங்களை நன்கு த்யானம் செய்து கொண்டு, மௌன வாதத்துடன் கூடி, தாதிமார்களாலும் (பணிப்பெண்களாலும்), தோழிகளாலும் சூழப்பட்டு, ஆயுதங்களை ஏந்தி முயற்சியுடைய சூரர்களான ராஜபடர்களால் பாதுகாக்கப்பட்டு, அம்பிகாலயத்திற்குச் சென்றாள். அப்பொழுது, ம்ருதங்கம், சங்கம், பணவம், உடுக்கை இவைகளையும், மற்றும் பல வாத்யங்களையும், பேரி வாத்யங்களையும் முழக்கினார்கள். ப்ராஹ்மண பத்னிகளும், சிறந்த பணிப்பெண்களும், பூமாலைகளாலும், சந்தனம், குங்குமம் முதலிய கந்தங்களாலும், ஆடையாபரணங்களாலும், நன்றாக அலங்கரித்துக்கொண்டு பலவகை நைவேத்யங்களோடும், பூஜைக்கு வேண்டிய வஸ்துக்களோடும், அந்த ராஜகன்னியைச் சுற்றிலும் சூழ்ந்து கொண்டு சென்றார்கள். 

பாட்டுப் பாடுகிறவர்களும், வாத்யம் வாசிக்கிறவர்களும், ஸுதர்களும் (புராணக்கதை கூறுபவர்களும்), மாகதர்களும் (வம்சப் பெருமை கூறுபவர்களும்), வந்திகளும் (சமயத்திற்கேற்ப நல்வாழ்த்து கூறுபவர்களும்), பாட்டுப் பாடுவதும் ஸ்தோத்ரம் செய்வதுமாகி, மணப்பெண்ணைச் சூழ்ந்து கொண்டு சென்றார்கள். அப்பெண்மணி, தேவாலயத்தின் அருகே சென்று, தாமரை மலர் போன்ற பாதங்களையும், கரங்களையும் அலம்பிக்கொண்டு, ஆசமனம் செய்து, பரிசுத்தையாகி, மனவூக்கத்துடன் அம்பிகாலயத்திற்குள் நுழைந்தாள். வயது சென்றவர்களும், நடத்தவேண்டும் க்ரமத்தை அறிந்தவர்களுமாகிய ப்ராஹ்மண ஸ்த்ரீகள், அந்த இளம் கன்னிகையைக் கொண்டு, ருத்ரபத்னியும், ருத்ரனோடு கூடித் திகழ்கின்றவளுமாகிய பார்வதிக்கு, நமஸ்காரம் செய்வித்தார்கள். 

அந்த ருக்மிணி, ப்ராஹ்மண பத்னிகளால் பார்வதியின் முன்னே நிறுத்தப்பட்டு, “அம்பிகே! கணேசன் முதலிய ஸந்தானங்களோடு கூடியவளும், மங்கள ஸ்வரூபையுமாகிய (வடிவானவளான) உன்னை அடிக்கடி நமஸ்காரம் செய்கிறேன். மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், எனக்குப் பதியாக வேண்டும். அவன் அதை அனுமோதனம் செய்வானாக (விரும்பி ஏற்றுக்கொள்வானாக). இவ்வாறு நீ எனக்கு அருள் புரிய வேண்டும்” என்னும் வேண்டுகோளுடன் தேவ தேவனுடைய பத்னியாகிய பார்வதியையும், தேவதேவனும் பரிசுத்தனுமாகிய ருத்ரனையும், ஜலம், கந்தம், அக்ஷதை, தூபம், வஸ்த்ரம், மாலை, விடுதிப்புஷ்பம், ஆபரணம் இவைகளாலும், பலவகை நைவேத்யங்களாலும், பலிகளாலும், கொடி விளக்குகளாலும் நன்றாகப் பூஜித்தாள். மற்றும், அவள் அந்த ஜலம் முதலியவைகளாலும், உப்பு அடை, தாம்பூலம், மங்களஸூத்ரம், பழங்கள், கரும்புத்தடி இவைகளாலும் ஸுமங்கலிகளான ப்ராஹ்மண ஸ்த்ரீகளையும், நன்றாகப் பூஜித்தாள். 

அனந்தரம் (பிறகு), அந்த ப்ராஹ்மண பத்னிகள், அம்பிகையின் நிர்மால்யமாகிய (பூசித்துக் களையப்பட்ட) புஷ்பாதிகளை அந்த ருக்மிணிக்குக் கொடுத்து, ஆசீர்வாதங்களைச் செய்தார்கள். மணப்பெண்ணாகிய அந்த ருக்மிணியும், அந்த ப்ராஹ்மண பத்னிகளுக்கும், அம்பிகைக்கும் நமஸ்காரம் செய்து, புஷ்பம் முதலிய நிர்மால்யத்தைப் (பூசித்துக் களையப்பட்ட ப்ரஸாதங்களைப்) பெற்றுக்கொண்டாள். அப்பால், அப்பெண்மணி மௌன வ்ரதத்தை முடித்து, ரத்னங்கள் இழைத்த மோதிரங்களால் திகழ்கின்ற ஸகியின் (தோழியின்) கையைத் தன்கையினால் பிடித்துக்கொண்டு, அம்பிகையின் ஆலயத்தினின்று புறப்பட்டாள். அந்த ருக்மிணி, அனைவர்க்கும் ஆச்சர்யத்தை விளைக்கின்ற தேவமாயையே ஒரு வடிவம் கொண்டாற் போல் மிகவும் அற்புதமான அழகுடையவளாயிருந்தாள். 

வீரர்களை மதிமயங்கச் செய்கின்றவளும், சிறுத்தழகிய இடையுடையவளும், குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட முகமுடையவளும், கன்னித்தனம் கழியப்பெறாதவளும், நிதம்பத்தில் (இடுப்பில்) ரத்னங்கள் இழைத்த அரைநாண்மாலை அணிந்தவளும், யௌவன (இளமை) வயதின் ஆரம்பமாகையால் எழுகின்ற கொங்கையுடையவளும், முன்னெற்றி மயிர்கள் படுகையால் சஞ்சலமான கண்களுடையவளும், பரிசுத்தமான புன்னகை அமைந்தவளும், கொவ்வைக் கனிவாயின் ஒளிகளால் சிவந்திருப்பவைகளும், குந்த (முல்லை) மொட்டு போன்றவைகளுமான பற்களுடையவளும், அவ்யக்த மதுரமாய் (கொஞ்சும் ஒலி போன்று) ஒலிப்பவைகளும், மிக்க ஒளியுடன் திகழ்கின்றவைகளுமாகிய சிலம்பு தண்டைகளின் சோபையால் அழகாயிருக்கின்ற பாதங்களால் ஸஞ்சரிக்கின்றவளும், கலஹம்ஸம் (அன்னம்) போல் நடப்பவளுமாகிய அப்பெண்மணியைக் கண்டு, ஸ்வயம்வரத்திற்காக (திருமண வயது வந்த பெண் தன் கணவனைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி) வந்த பெரும்புகழுடைய மன்னவர்கள் அனைவரும், அவளைக் கண்டமாத்ரத்தில் காம விகாரம் (காமத்தால் உள்ளக்கிளர்ச்சி) உண்டாகப்பெற்று, வருந்தி மோஹித்தார்கள் (மயங்கினார்கள்). மோஹித்தமை (மயங்கியது) மாத்ரமே அன்று. யானைகளிலும், ரதங்களிலும், குதிரைகளிலும் ஏறிக்கொண்டிருக்கிற அம்மன்னவர்கள், அம்பிகாலயத்திற்குப் போய் வருகையாகிற யாத்ரையின் வ்யாஜத்தினால் (சாக்கால், சிறு செயலால்), ஸ்ரீக்ருஷ்ணனுக்குத் தன்னுடைய லாவண்யத்தை (அழகை) அர்ப்பணம் செய்கின்ற அப்பெண்மணியைக் கண்டு, அவளுடைய கம்பீரமான புன்னகையினாலும், வெட்கம் வழியப் பெற்ற கண்ணோக்கத்தினாலும், மனம் பறியுண்டு மோஹித்து, ஆயுதங்களைத் துறந்து, பூமியில் விழுந்தார்கள். அந்த ருக்மிணி, ஸ்ரீக்ருஷ்ணனுடைய வரவை எதிர்பார்த்து, தாமரை மொட்டுக்கள் போன்ற தன் பாதங்களை மெல்ல மெல்ல எடுத்து, இடக்கை விரல்களால் முன்னெற்றி மயிர்களை ஒதுக்கி, கடைக்கண்ணால் வெட்கத்துடன் மன்னவர்களைக் கண்டாள். 

அப்பொழுதே, அவ்விடத்தில் ஸ்ரீக்ருஷ்ணனையும் கண்டாள். அப்பொழுது, ஸ்ரீக்ருஷ்ணன் தன் ரதத்தில் ஏற விரும்புகின்ற அந்த ராஜபுத்ரியை, சிசுபாலன் முதலிய சத்ருக்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், அவர்களைப் பொருள் செய்யாமல், கூட்டங்கூட்டமாய் வந்திருக்கின்ற ராஜர்களையெல்லாம் அவமதித்து, கருட த்வஜமுடைய (கருடக் கொடி உடைய) ரதத்தில் ஏற்றிக்கொண்டு, பலராமனை முன்னிட்டு, ஸிம்ஹம் நரிகளிடையினின்று தன் பாகத்தை எடுத்துக்கொண்டு மெல்ல மெல்லப் போவது போல், பயமின்றி மெல்ல மெல்லப் போனான். 

துரஹங்காரமுடைய (வீண் பெருமை உடைய) ஜராஸந்தன் முதலிய சத்ருக்கள், தங்கள் புகழை பாழ்செய்வதாகிய அந்தப் பரிபவத்தைப் (அவமானத்தைப்) பொறுக்க முடியாமல், “நம் கீர்த்தியைச் (புகழைச்) சுடவேண்டும். ஏனென்றால், ஸிம்ஹங்களின் பாகத்தைச் செந்நாய்கள் பறித்துக்கொண்டு போவது போல், வில்லாளிகளாகிய நமது ஸொத்தைக் கோபர்கள் பறித்துக் கொண்டு போனார்களே. (இதைவிட நமக்கு வேறு பரிபவம் (அவமானம்) என்ன வேண்டும்?)” என்று பரிதபித்தார்கள். 

ஐம்பத்து மூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக