ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 270

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – ஐம்பத்து நான்காவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் தன்மேல் எதிர்த்து வந்த சத்ருக்களை வென்று, ருக்மியை விரூபஞ் (அலங்கோலம்) செய்து, பட்டணம் சென்று, ருக்மிணியை மணம் புரிதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அம்மன்னவர்கள் அனைவரும் இவ்வாறு மொழிந்து பரிதபித்து, கோபாவேசமுற்று, கவசம் தரித்து, வில்லையும் ஏந்தி, தங்கள் தங்கள் ஸைன்யங்களால் (படைகளால்) சூழப்பட்டு, ஸ்ரீக்ருஷ்ணனைத் தொடர்ந்தார்கள். 

மன்னவனே! அப்பொழுது, யாதவ ஸேனாபதிகள் அவ்வாறு சத்ருக்கள் (எதிரிகள்) எதிர்த்து வருவதைக் கண்டு, தங்கள் தனுஸுக்களில் (வில்களில்) நாணை ஏற்றி ஒலிப்பித்து, அவர்களை எதிர்த்து நின்றார்கள். குதிரையின் மேல் ஏறிச் சண்டை செய்வதிலும், யானையின் கழுத்தில் இருந்து சண்டை செய்வதிலும், தேர்மேல் இருந்து சண்டை செய்வதிலும் ஸமர்த்தர்களான சத்ருக்கள் (எதிரிகள்), மேகங்கள் பர்வதங்களின் (மலைகளின்) மேல் ஜலங்களைப் பெய்வது போல, யாதவ ஸைன்யங்களின் (படைகளின்) மேல் பாண வர்ஷங்களைப் (அம்பு மழையைப்) பெய்தார்கள். அப்பொழுது அழகிய இடையுடைய ருக்மிணி, தன் பர்த்தாவின் (கணவனின்) ஸைன்யம் (படை) முழுவதும் சத்ருக்களின் (எதிரிகளின்) பாணங்களாகிற விடாமழைகளால் மூடப்பட்டிருப்பதைக் கண்டு, பயத்தினால் கண்கள் நடுங்கப்பெற்று, வெட்கத்துடன் அவனுடைய முகத்தை நோக்கினாள். 

அப்பொழுது, மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், அந்த ருக்மிணியைப் பார்த்துச் சிரித்து, “அழகிய கண்களுடையவளே! நீ பயப்பட வேண்டாம். இப்பொழுதே உன் ஸேனையிலுள்ளவர்களால், இந்தச் சத்ரு (எதிரி) ஸைன்யம் (படை) முழுவதும் அழியப்போகின்றது!” என்று மொழிந்தான். 

வீரர்களாகிய கதன், பலராமன் முதலிய யாதவர்கள், அந்தச் சிசுபாலன் முதலிய சத்ருக்களுடைய (எதிரிகளுடைய) அத்தகைய பராக்ரமத்தைப் பொறுக்காமல், நாராச (ரம்பம் போன்ற முனை உடைய) பாணங்களால் (அம்புகளால்) குதிரை மேலும், யானை மேலும், ரதத்தின் மேலும், ஏறிச் சண்டை செய்கின்ற அவர்களை, அடித்தார்கள். அப்பொழுது, ரதிகர்களின் (தேரில் இருப்பவர்களின்) தலைகளும், குதிரை வீரர்களின் தலைகளும், யானை வீரர்களின் தலைகளும், குண்டலம், கிரீடம், பாகை இவற்றுடன் கோடி கோடியாக அறுந்து பூமியில் விழுந்தன. மற்றும், அப்பொழுது கத்தி, கதை, தனுஸ்ஸு (வில்) இவற்றோடு கூடிய கைகளும், அடி பருத்து, நுனி சிறுத்து, அழகாயிருக்கின்ற துடைகளும், புஜங்களும், கால்களும், குதிரை, கோவேறு கழுதை, யானை கோடியாக அறுந்து விழுந்தன. ஜராஸந்தன் முதலிய அம்மன்னவர்கள், இவ்வாறு ஜயத்தை (வெற்றியை) விரும்புகின்ற யாதவர்களால் தங்கள் ஸைன்ய (படைக்) கூட்டமெல்லாம் வதிக்கப் பெற்று, யுத்தத்தினின்று திரும்பி ஓடிப் போனார்கள். அப்பால், அம்மன்னவர்கள் அனைவரும் பார்யையை (மனைவியைப்) பறி கொடுத்தவன் போல வருத்தமுற்று, ஒளி மயங்கி, உத்ஸாஹம் அற்று, முகம் வாடி நிற்கின்ற சிசுபாலனைக் கிட்டி, இவ்வாறு மொழிந்தார்கள்.

மன்னவர்கள் சொல்லுகிறார்கள்:- ஓ புருஷ ச்ரேஷ்டனே! மனவருத்தத்தைத் துறப்பாயாக. ப்ராணிகளிடத்தில் ஸுகமாவது, துக்கமாவது நிலை நின்றிருக்காது. ராஜனே! அவை போவதும், வருவதுமாயிருப்பவை. மரத்தினால் இயற்றப்பட்ட பிரதிமை, ஆட்டக்காரனுடைய இஷ்டப்படி ஆடுவதுபோல், இவ்வுலகத்திலுள்ள ப்ராணிகள் அனைவரும் ஈச்வரனுக்கு உட்பட்டு ஸுக துக்கங்களை விளைக்கவல்ல கார்யங்களைச் செய்கின்றார்கள். ஸுகத்தையாவது, துக்கத்தையாவது நாம் ஸ்வதந்தரித்துப் (தன் இச்சையாக வேண்டியபடி) பெற முடியாது. நாம் ஸுகத்தையே விரும்பி முயற்சி செய்யினும், ஈச்வரனுடைய இச்சையின்படி ஸுக, துக்கங்கள் இரண்டையும் பெறுகின்றோம். ஆகையால், அவ்விஷயத்தில் நம்மால் என்ன செய்ய முடியும்?

ஜராஸந்தன் சொல்லுகிறான்:- (சேதிராஜனே! இவ்விஷயத்தில் நீ என்னையே நிதர்சனமாகப் (உதாரணமாகப்) பார்க்கலாம் ) நான், இருபத்து மூன்று அக்ஷௌஹிணி ஸைன்யங்களுடன் (தேர் 21870; குதிரை 65610; யானை 21870; காலாட் படை 109350 கொண்ட பெரும் படை அக்ஷௌஹிணி ஸைன்யம் எனப்படும்) பதினெட்டுத் தடவைகள் யுத்தம்செய்து, அத்தனை தடவைகளிலும் தோல்வி அடைந்தேன். ஒரு தடவை யுத்தத்தில் மாத்ரம் நான் ஜயித்தேன். ஆயினும், நான் “ஜகத்தெல்லாம் தெய்வத்தோடு கூடிய காலத்தினால் துரத்தப்பட்டிருக்கிறது” என்பதை அறிந்து, ஒருகாலும் சோகிப்பதுமில்லை; களிப்பதுமில்லை. ஆகையால், இப்பொழுதும் நாம் அனைவரும் வீரக்கூட்டங்களை நடத்தும் திறமையுள்ள மஹா வீரர்களின் கூட்டங்களை அடக்கியாளும் திறமையுடையவர்களாயினும், அற்ப பலமுடையவர்களும், ஸ்ரீக்ருஷ்ணனால் பாதுகாக்கப்பட்டவர்களுமாகிய யாதவர்களால் தோற்பிக்கப் பட்டோம். (இது கால ஸ்வரூபனாகிய ஈச்வரனுடைய செயலேயன்றி வேறன்று). இப்பொழுது, நம்முடைய சத்ருக்கள் (எதிரிகள்) தங்களுக்குக் காலம் அனுகூலமாய் (சாதகமாய்) இருக்கப்பெற்று, நம்மை ஜயித்தார்கள். நாமும் நமக்குக் காலம் அனுகூலமாய் (சாதகமாய்) வரும்பொழுது, சத்ருக்களை (எதிரிகளை) ஜயிப்போமன்றி, ஜயிக்காது போகமாட்டோம்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- சிசுபாலன் இவ்வாறு நண்பர்களால் போதிக்கப்பட்டு, தன்னைத் தொடர்ந்து வந்தவர்களுடன் பட்டணம் போய்ச் சேர்ந்தான். அடிப்பட்டவர் போக மிகுந்திருக்கின்ற ஜராஸந்தன் முதலிய மன்னவர்களும், தங்கள் தங்கள் பட்டணம் போய்ச் சேர்ந்தார்கள். ஸ்ரீக்ருஷ்ணனுக்கு த்வேஷியாகிய (பகைவனாகிய) ருக்மியோவென்றால், தன்னுடன் பிறந்தவளாகிய ருக்மிணியின் ராக்ஷஸ விவாஹத்தைப் (எதிரிகளை வென்று, வலுவிலே பெண்ணை இழுத்துச் சென்று மணம் புரிவதைப்) பொறுக்க முடியாமல், அக்ஷௌஹிணி ஸைன்யத்துடன் (தேர் 21870; குதிரை 65610; யானை 21870; காலாட் படை 109350 கொண்ட பெரும் படை அக்ஷௌஹிணி ஸைன்யம் எனப்படும்) ஸ்ரீக்ருஷ்ணனைத் தொடர்ந்து சென்றான். 

ருக்மி பெரும் கோபமுற்றுக் கவசம் அணிந்து, வில்லுடன் கூடி, ஸமஸ்த ராஜர்களும் கேட்டுக்கொண்டிருக்கையில் இவ்வாறு ப்ரதிஜ்ஞை (சபதம்) செய்தான். நான் யுத்தத்தில் ஸ்ரீக்ருஷ்ணனைக் கொல்லாமலும், ருக்மிணியைத் திருப்பிக் கொண்டு வராமலும், குண்டினபுரத்திற்குள் நுழைகிறதில்லை. உங்களிடையில் நான் இதை உண்மையாகச் சொல்லுகிறேன் என்று மொழிந்து, த்வரையுடன் (வேகமாக) ரதத்தில் ஏறிக்கொண்டு, ஸாரதியைப் பார்த்து “ஸ்ரீக்ருஷ்ணன் எவ்விடத்தில் இருக்கிறானோ, அவ்விடத்திற்குக் குதிரைகளை விரைவுடன் ஓட்டுவாயாக. எனக்கு அவனோடு யுத்தம் நடக்க வேண்டும். மிகவும் துர்ப்புத்தியாகிய (கெட்ட புத்தி உடைய) அந்த இடைப்பையனுடைய (மாடு மேய்ப்பவனுடைய) வீரமதத்தைப் (நானே வீரனென்னும் கொழுப்பைப்) போக்கிவிடுகிறேன். அவன், என் பகினியைப் (ஸஹோதரியை) பலாத்காரமாக எடுத்துக்கொண்டு போனானல்லவா” என்று மொழிந்தான். 

அவன் ஸர்வேச்வரனான ஸ்ரீக்ருஷ்ணனுடைய ஜ்ஞான (அறிவு), சக்தி (திறமை), பலாதிகள் (பலம்) அளவற்றவையென்பதை அறியாத கெடு மதியன் (கெட்ட புத்தி உடையவன்) ஆகையால் இவ்வாறு பிதற்றி, ஸ்ரீக்ருஷ்ணனை “நில், நில்” என்று மொழிந்து கொண்டே, ஒரு ரதத்துடன் அவனைப் பின் தொடர்ந்தோடினான். 

அவன், ஸ்ரீக்ருஷ்ணனைக் கிட்டி, தனுஸ்ஸைப் (வில்லை) பலமுள்ளவளவும் நன்றாக இழுத்து, அந்த ஸ்ரீக்ருஷ்ணனை மூன்று பாணங்களால் மார்பில் அடித்து, “அட! திருடா! யாதவர்களின் குலத்தைக் கெடுக்க வந்த பாபிஷ்டனே! என்னெதிரில் ஒரு க்ஷண காலம் (நொடி) நிற்பாயாக. காக்கை ஹவிஸ்ஸைக் (யாகத்தில் தேவதைகளுக்கு அக்னியில் இடப்படும் பொருள்) கொண்டு போவது போல, என்னுடன் பிறந்தவளைத் திருடிக் கொண்டு எங்கு போகின்றனை. மந்த புத்தியுடையவனே! தனியே நின்று சண்டை செய்ய முடியாமையால், கூட்டம் கூடிச் சண்டை செய்பவனாகிய உன் கொழுப்பைப் போக்கி விடுகிறேன். என் பாணங்களால் அடியுண்டு பூமியில் விழுவதற்கு முன்னமே, கன்னிகையை விடுவாயாக” என்றான். 

ஸ்ரீக்ருஷ்ணன் புன்னகை செய்துகொண்டே, ருக்மியின் தனுஸ்ஸை (வில்லை) அறுத்து, ஆறு பாணங்களால் அவனையும், எட்டு பாணங்களால் நான்கு குதிரைகளையும், இரண்டு பாணங்களால் ஸாரதியையும், மூன்று பாணங்களால் த்வஜத்தையும் (கொடியையும்) அடித்தான். அந்த ருக்மியும், வேறு தனுஸ்ஸை எடுத்துக் கொண்டு, ஸ்ரீக்ருஷ்ணனை ஐந்து பாணங்களால் அடித்தான். ஸ்ரீக்ருஷ்ணன், அந்த பாணங்களின் நுனிகளால் அடிக்கப்பட்டு, அந்த தனுஸ்ஸையும் அறுத்தான். மீளவும் அவன் வேறொரு தனுஸ்ஸை எடுக்க, அழிவற்ற ஸ்ரீக்ருஷ்ணன், அதையும் அறுத்தான். அவன், இரும்புத்தடி, பட்டயம், சூலம், கேடயம், கத்தி, சக்தி, ஈட்டி இவை முதலிய எந்தெந்த ஆயுதத்தை எடுத்தானோ அதையெல்லாம் அந்த ஸ்ரீக்ருஷ்ணன், அறுத்துக் கொண்டிருந்தான். அப்பால் ருக்மி, ரதத்தினின்று கத்தி கேடயங்களை எடுத்துக்கொண்டு குதித்து, விட்டில் பூச்சி அக்னியை எதிர்ப்பது போல ஸ்ரீக்ருஷ்ணனை எதிர்த்தோடினான். 

ஸ்ரீக்ருஷ்ணன் அவ்வாறு தன்னை எதிர்த்து வருகின்ற அந்த ருக்மியின் கையிலிருக்கிற கத்தி, கேடயங்களை எள்ளளவு துண்டங்களாகத் துண்டித்து, அவனைக் கொல்லுவதற்காகக் கத்தியை எடுத்தான். ருக்மிணி, ஸ்ரீக்ருஷ்ணன் தன் ப்ராதாவை (ஸஹோதரனை) வதிப்பதற்காக முயன்றிருப்பதைக் கண்டு, பயத்தினால் தழதழத்து, பர்த்தாவின் (கணவனின்) பாதங்களில் விழுந்து, நல்லியற்கையுடையவள் ஆகையால், மன இரக்கத்துடன் மொழிந்தாள்.

ருக்மிணி சொல்லுகிறாள்:- யோகேச்வரனே! (உன் சக்திகளுக்கு எல்லை இல்லை. நீ யோக பரிசுத்தமான மனத்தினால் அறியத் தகுந்தவன். உன் விபவ (பெருமை), ரூப (உருவம்), ஸ்வபாவாதிகளைத் (குணங்கள்) தேஹாபிமானியாகிய (இந்த உடலே ஆத்மா என்று மனம் கலக்கம் உடைய) இவன் எப்படி அறிவான்? உன் ஸ்வரூப (இயற்கைத் தன்மை), ஸ்வபாவாதிகள் (குணங்கள்) அளவற்றவை. நீ தேவர்களுக்கும் தேவன். நீ ஜகத்தைப் பாதுகாப்பதற்காக அவதரித்திருக்கின்றாய். மங்கள ஸ்வபாவனே! மஹாபுஜனே (நீண்ட கைகளை உடையவனே)! நீ என் ப்ராதாவை (ஸஹோதரனை) வதிக்கலாகாது. (ஆரம்பித்த விவாஹ ரூபமான கார்யம் முடியாதிருக்கையில், இடையில் என் ப்ராதாவை (ஸஹோதரனை) வதிப்பது யுக்தமன்றல்லவா?) கத்தியும் கையுமாயிருக்கின்ற உன்னழகைக் கண்டு, ஸந்தோஷம் அடைந்தேன். நீ இவன் விஷயத்தில் இரங்குவாயாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மிகுதியும் பயத்தினால் உடம்பெல்லாம் நடுங்கப்பெற்று, சோகத்தினால் முகம் உலர்ந்து, துக்கத்தினால் கண்டம் தடைபட்டு, தழதழப்பினால் பொன்மாலை நழுவப்பெற்றிருக்கின்ற அந்த ருக்மிணியால் பாதங்களைப் பிடித்துக்கொண்டு வேண்டப்பெற்ற பகவான், மன இரக்கம் உடையவனாகையால், ருக்மியின் வதத்தினின்று மீண்டான். 

அப்பால், ஸ்ரீக்ருஷ்ணன் கெடு (கெட்ட) நடத்தையுடைய அந்த ருக்மியை, அவனுடைய வஸ்த்ரத்தினால் கட்டிக்கொண்டு வந்து, அதே கத்தியினால் அவனுடைய மீசை, தாடிகளையும், தலை மயிர்களையும் விட்டு விட்டுச் சரைத்து, அவனை விரூபமாக்கினான் (அலங்கோலமாக்கினான்). 

அவ்வளவில், வீரர்களான யாதவர்கள், யானைகள் தாமரை ஓடையை அழிப்பது போல, கொழுத்திருக்கின்ற சத்ரு ஸைன்யத்தை (எதிரி படையை) அழித்து விட்டார்கள். அந்த யாதவர்கள் சத்ரு ஸைன்யத்தை (எதிரி படையை) வென்று, ஸ்ரீக்ருஷ்ணனிடம் வந்து, ருக்மியைக் கண்டார்கள். மஹானுபாவனும், மன இரக்கமுடையவனுமாகிய பலராமன், அவ்வாறு விரூபம் (அலங்கோலம்) செய்யப் பெற்று, முடிந்தாற் போலிருக்கிற ருக்மியைக் கண்டு, அவனைக் கட்டினின்று விடுவித்து, ஸ்ரீக்ருஷ்ணனைக் குறித்து மொழிந்தான்.

பலராமன் சொல்லுகிறான்:- க்ருஷ்ணா! நீ நமக்குத் தகாத கார்யம் செய்தாய். இது நிந்தைக்கு (பழிக்கு) இடமான கார்யம். (பந்துவை வதிக்கலாகாதல்லவா? பந்துவை வதிக்கவில்லையே என்கிறாயோ?) பந்துவை வதிக்கையாவது, தலைமயிர்களையும், மீசை, தாடிகளையும் சரைத்து விரூபம் (அலங்கோலம்) செய்கையும், மற்றும் எவ்விதத்திலாயினும் விரூபம் (அலங்கோலம்) செய்கையுமே. (ருக்மிணியைக் குறித்துச் சொல்லுகிறான்) நல்லியற்கையுடையவளே! ப்ராதாவை விரூபம் (அலங்கோலம்) செய்தோமென்னும் சிந்தையால், நீ எங்கள் மேல் அஸுயைப் பட வேண்டியதில்லை (தவறாக எண்ணாதே). ஸுகத்தையாவது, துக்கத்தையாவது நமக்குப் பிறன் விளைக்கிறானென்பதில்லை. புருஷன் தான் செய்த புண்ய பாப கர்மங்களுக்குப் பலனாக ஸுகதுக்கங்களை அனுபவிக்கிறானன்றி, வேறில்லை. (மீளவும், ஸ்ரீக்ருஷ்ணனைக்குறித்துச் சொல்லுகிறான்) 

பந்துவே! பந்துவாய் (உறவினனாய்) இருப்பவன் வதிப்பதற்குரிய தோஷம் செய்திருப்பினும், அவன் வதிக்கத் தகுந்தவனல்லன். அவனை வெறுமனே விட்டுவிட வேண்டும். அவன் வதம் செய்வதற்குரிய தன் தோஷத்தினால் தானே முடிந்திருக்கையில், அவனை மீளவும் எதுக்காக வதிக்க வேண்டும்? (மீளவும் ருக்மிணியைக் குறித்துச் சொல்லுகிறான்). 

ஸகோதரனை ஸஹோதரனே வதிக்க வேண்டுமென்று ப்ரஹ்ம தேவன் க்ஷத்ரியர்களுக்கு மிகவும் கொடிய தர்மத்தை ஏற்படுத்தினான். இதுவே, அவர்களுக்கு மேலான தர்மம். (ஆகையால், எங்கள் மேல் அபராதம் ஒன்றும் இல்லை) (மீளவும் ஸ்ரீக்ருஷ்ணனைக் குறித்துச் சொல்லுகிறான்.) 

துரஹங்காரமுடைய (வீண் பெருமை உடைய) ஜனங்கள், செல்வப் பெருக்கினால் கொழுத்து விவேகமற்று, ராஜ்யம், பூமி, பணம், செல்வம், நாமே வீரர்களென்னும் அபிமானம் (கர்வம்), பராக்ரமம் ஆகிய இவற்றிற்காகவும், மற்றும் சில காரணத்திற்காகவும், பந்துக்களை (உறவினர்களை) அவமதிக்கிறார்கள். (நமக்கு இது யுத்தமன்று). (மீளவும் ருக்மிணியைக் குறித்துச் சொல்லுகிறான் ) 

தம்மை ஸ்வதந்த்ரர்களாக (தம் விருப்பப்படி செயல்பட வல்லவர்கள் என்று) நினைப்பவர்களும், தேஹத்தையே ஆத்மாவாக நினைப்பவர்களுமாகிய மூடர்களைப் போல் நீ ஸர்வ காலமும் நண்பர்களுக்கு நன்மையையும், சத்ருக்களுக்குத் (எதிரிகளுக்குத்) தீமையையும் நினைக்கின்றாயாகையால், அந்த உன் புத்தி, ஸமஸ்த பூதங்கள் விஷயத்திலும் விஷமமாயிருக்கின்றது (ஒருவாறாயில்லை.) தேஹத்தையே ஆத்மாவாக ப்ரமித்து நண்பனென்றும், சத்ரு (எதிரி) என்றும், உதாஸீனன் (பொருட்படுத்த வேண்டாதவன்) என்றும் நினைக்கைக்கிடமான இந்த மதி மயக்கம் (புத்தி கலக்கம்), ப்ராணிகளுக்குப் பகவானுடைய மாயையினால் விளைக்கப்படுகின்றது. 

ஸமஸ்தப்ராணிகளுக்கும் அந்தராத்மாவாகிய பரம புருஷன் ஒருவனே. அவன் காஷ்டங்களில் (கட்டைகளில்) அக்னி போல் ப்ராணிகளிடத்தில் மறைந்திருக்கின்றான். ஆகாயம் எங்கும் நிறைந்திருப்பினும், அவ்வவற்றின் தோஷங்கள் தன் மேல் தீண்டப் பெறாதிருப்பது போல, அப்பரமபுருஷனும், ப்ராணிகளின் தோஷங்கள் தீண்டப்பெறாமல் பரிசுத்தமாயிருக்கின்றான். இவ்வாறு ஜகத்தெல்லாம் ஒருவனாகிய பரம புருஷனுக்குச் சரீரமாகையால், ஒரு சரீரத்திலுள்ள கை, கால் முதலிய அவயவங்களுக்குள் ஒன்றில் ப்ரீதியும், ஒன்றில் த்வேஷமும், கூடாதது போல, பரம புருஷனுடைய சரீரமாகிய ஜகத்திற்குள் சத்ரு (எதிரி) என்றும், மித்ரன் (நண்பன்) என்றும் பேத (வேற்றுமை) புத்தி கூடாது. 

ஜகத்தெல்லாம் பரமாத்மாவுக்குச் சரீரமென்கிற இவ்வுண்மையை அறியாத மூடர்கள், ஜகத்தைச் சத்ரு (எதிரி) என்றும், மித்ரன் (நண்பன்) என்றும் பலவாறு நினைக்கிறார்கள். (தேஹத்தைக் காட்டிலும் வேறுபட்ட ஜீவனென்பவன் யாவன்? அவன் எத்தகையன்? தேஹம் எத்தகையது? தேஹத்தைக்காட்டிலும் வேறுபட்ட ஆத்மாவுக்கு ஸுகதுக்கானுபவம் எப்படி உண்டாகின்றது? என்றால், சொல்லுகிறேன்). 

தேஹமாவது (உடலாவது), ப்ருதிவி முதலிய பஞ்ச பூதங்கள், இந்த்ரியங்கள், கந்தம் (வாசனை) முதலிய பஞ்ச பூதங்களின் குணங்கள் ஆகிய இவையெல்லாம் ஒன்று சேர்ந்த ஒருவகைப் பொருளாம். அது ஆதி அந்தங்களுடையது. (பிறப்பும் அழிவும் உடையது) ஆத்மாவோவென்றால், ஜ்ஞான ஸ்வரூபன்; என்றும் அழிவில்லாதவன். அத்தேஹம், அவித்யையினால் (அறியாமையால்) ஆத்மாவிடத்தில் உண்டாகி, அவ்வாத்மாவை ஜன்ம (பிறப்பு), ஜரா (கிழத்தனம்), மரணாதி (இறப்பு முதலிய) துக்கங்களை அனுபவிக்கும்படி செய்கின்றது. தேஹம், தன்னுடைய ஸம்பந்த மாத்ரத்தினால் ஜீவாத்மாவுக்கு ஜன்ம (பிறப்பு), ஜரா (கிழத்தனம்), மரணாதி (இறப்பு முதலிய) ரூபமான ஸம்ஸாரத்தை விளைக்குமாயின், பரமாத்மாவுக்கும் அதை விளைக்குமல்லவாவென்று சங்கிக்க (ஸந்தேஹப்பட) வேண்டாம்). 

நல்லியற்கையுடையவளே! ஜீவனுக்கு தேஹ ஸம்பந்தமும், தேஹ வியோகமும் (உடல் நீங்குவது) உண்டாவது போல, பரமாத்மாவுக்கு அவை உண்டாகிறதில்லை. ஏனென்றால், அத்தேஹத்தின் உத்பத்தியும், அதன் ஸம்பந்த வியோகங்களும் (நீங்குதல், விலகுதல்), பரமாத்மாவின் ஸங்கல்பத்தைத் தொடர்ந்திருப்பவை. ஆகையால், அத்தேஹம் அவனுக்குப் பந்தத்தை விளைக்க வல்லதன்று. ஸூர்யன் தன் வெளிச்சத்தினால் சக்ஷுர் இந்தரியத்திற்கு (கண்ணிற்கு) உதவி செய்து, கறுமை, வெளுமை, முதலிய நிறங்களை ப்ரகாசம் செய்கின்றான். ஆயினும், வெகு தூரத்திலிருக்கின்ற அந்த ஸூர்யனுக்கு, அவ்விந்தரியத்தோடாவது, அந்நிறங்களோடாவது என்ன ஸம்பந்தம் இருக்கின்றது?

பரமாத்மா தேஹத்திற்குள் இருப்பினும், அது அவனுக்கு உட்பட்டதாகையால், எவ்வித தோஷத்தையும் விளைக்கவல்லதன்று. ஜன்மம் முதலிய விகாரங்கள் (மாற்றங்கள்) தேஹத்திற்கே (உடலுக்கே) அன்றி, ஆத்மாவுக்கு அவை எப்பொழுதும் கிடையாது. வளர்தல், தேய்தல் முதலிய விகாரங்கள் (மாற்றங்கள்) சந்த்ரனுடைய கலைகளுக்கேயன்றி, சந்த்ரனுக்குக் கிடையாதல்லவா? சந்திர கலைகளின் நாசத்தை அமாவாஸ்யையென்றும், சந்த்ரக்ஷய மென்றும் சொல்லுவது போல, ஆத்மாவுக்கு தேஹ வியோகத்தையே (நீங்குதலையே) மரணமென்று சொல்லுகிறார்கள். {அமாவாசை அன்று சந்திரன் தேய்வதில்லை. ஆனால் மக்கள் சந்திரன் தேய்வதாகக் கூறுகிறார்கள்}

ஸ்வப்னம் (கனவு) காண்கிறவன், தன்னையும் ஸ்வப்னத்திற்கு (கனவிற்கு) முன்னம் இல்லாத வஸ்துக்களையும், அவற்றின் போகங்களையும், இவை ஸாஸ்வதம் (நிலையானவை) என்னும் புத்தியுடன் அனுபவிப்பது போல, ஜீவன் சப்தாதி விஷயங்களைச் ஸாஸ்வதம் (நிலையானவை) என்னும் புத்தியுடன் எதுவரையில் அனுபவித்துக் கொண்டிருப்பானோ, அதுவரையில் ஜன்ம (பிறப்பு), ஜரா (கிழத்தனம்), மரணாதி (இறப்பு முதலிய) ரூபமான ஸம்ஸாரத்தை அனுபவித்துக் கொண்டிருப்பான். இவை நச்வரங்கள் (அழிபவை) என்று தெரிந்துகொண்டவன், இதினின்று விடுபடுவான். 

பரிசுத்தமான புன்னகையுடையவளே! உண்மை இதுவாகையால், மனத்தை உலர்த்துவதும், மயக்குவதும், அஜ்ஞானத்தினால் விளைவதுமாகிய சோகத்தைத் தத்வ ஜ்ஞானத்தினால் (ஆத்ம, பரமாத்ம அறிவினால்) போக்கி, ஸூகித்திருப்பாயாக. (நண்பனென்றும் எதிரி என்றும் பேதபுத்தி அஜ்ஞானத்தினால் (அறியாமையினால்) உண்டாகின்றது. ஜகத்தெல்லாம் பரமாத்மாவின் சரீரமென்று பாவிக்கையாகிற தத்வ ஜ்ஞானத்தினால் (ஆத்ம, பரமாத்ம அறிவினால்), அதை அறுத்து, ஜ்ஞானாநந்த ஸ்வரூபனான (அறிவு, இன்ப வடிவான) ஆத்மாவின் உண்மையை ஆராய்வதில் உற்றிருப்பாயாக).

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- லக்ஷணங்கள் அமைந்து அழகாயிருக்கின்ற அவயவங்களையுடைய அந்த ருக்மிணி, இவ்வாறு பலராமனால் அறிவிக்கப்பெற்று, மன வருத்தத்தைத் துறந்து, தத்வ ஜ்ஞானத்தினால் (ஆத்ம, பரமாத்ம அறிவினால்) மனத்தை ஸமாதானப்படுத்திக் கொண்டாள். ருக்மியோவென்றால், சத்ருக்களால் (எதிரிகளால்) பலமும், தேஜஸ்ஸும் (பெருமையும்) பாழாகி, ப்ராணன்கள் (உயிர்) மாத்ரமே மிகுந்திருக்கும்படி விடப்பட்டு, தன் மனோரதம் வீணாகப்பெற்று, தன்னை விரூபம் (அலங்கோலம்) செய்ததை நினைத்துக்கொண்டே, ஊருக்குப் போகாமல், தான் வாஸம் செய்வதற்காகப் போஜகடமென்னும் பெயருடைய பெரிய பட்டணத்தை நிர்மித்தான். துர்ப்புத்தியுடைய அந்த ருக்மி, “ஸ்ரீக்ருஷ்ணனைக் கொன்று தங்கையாகிய ருக்மிணியை மீட்டுக்கொண்டு போகாமல், குண்டினபுரிக்குள் நுழைகிறதில்லை” என்று ப்ரதிஜ்ஞை (சபதம்) செய்து, கோபத்துடன் போஜகடமென்கிற அந்தப்பட்டணத்தில் வஸித்திருந்தான்.

ருக்மிணி விவாஹம்

யாதவ குலத்தை மேன்மைப்படுத்தும் தன்மையனும், மஹானுபாவனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன், இவ்வாறு ராஜர்களையெல்லாம் வென்று, பீஷ்மகனுடைய புதல்வியாகிய ருக்மிணியை, தன்  பட்டணத்திற்குக் கொண்டுபோய், விதிப்படி விவாஹம் செய்துகொண்டான். 

மன்னவனே! அந்த நகரத்திலுள்ள ஜனங்கள் அனைவரும், யாதவர்களுக்கு நாதனாகிய ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் என்றும் மாறாத மிகுந்த மனோபாவமுடையவர்களாகையால், அப்பொழுது அந்த விவாஹ தினங்கள் முழுமையும் அவர்களுக்கு மஹோத்ஸவமாயிருந்தன. ஆண், பெண்கள் அனைவரும் மிகவும் ஸந்தோஷம் அடைந்து, அழுக்கெடுத்து நிர்மலமாயிருக்கின்ற ரத்ன குண்டலங்களை அணிந்து, விசித்ரமான வஸ்த்ரங்களைத் தரித்திருக்கின்ற மணப்பெண், பிள்ளைகளுக்கு உபஹாரங்களைக் கொண்டு வந்தார்கள். அப்பொழுது, அந்நகரம் யாதவர்களால் உயர்வெடுத்து நாட்டப்பட்ட இந்த்ர த்வஜங்களாலும் (கொடிகளாலும்), விசித்ரமான பூமாலைகளாலும், அத்தகைய வஸ்த்ரங்களாலும், ரத்ன மயமான தோரணங்களாலும், வீட்டு வாசல்கள் தோறும் அமைக்கப்பட்ட பொரி, மாந்தளிர், புஷ்பம் முதலிய மங்கள வஸ்துக்களாலும், பூர்ண கும்பங்களாலும், அகிற் புகைகளாலும், தீபங்களாலும் விளக்கமுற்றிருந்தது. 

விவாஹத்திற்காக அழைக்கப் பெற்று வந்திருக்கின்ற மிகவும் அன்பிற்கிடமான மஹா ராஜர்களின் மத்தகஜங்களுடைய (மதம் கொண்ட யானைகளின்) மதஜலங்களால் (மத நீர்) வீதிகள் முழுவதும் நனைந்திருந்தன. மற்றும், வீட்டு வாசற்களில், வாழை மரங்களும், பாக்கு மரங்களும் கட்டப்பட்டு, அந்நகரம் அழகாயிருந்தது. அப்பொழுது, ஆவலின் மிகுதியால், வீதிகளில் நாற்புறத்திலும் விரைந்தோடுகின்ற பந்துக்களினிடையில் கௌரவர்களும், ஸ்ருஞ்சயர்களும், கேகயர்களும், விதர்ப்பர்களும், யாதவர்களும், குந்திகளும் ஒருவரோடொருவர் கலந்து, ஸந்தோஷம் அடைந்தார்கள். 

ஸ்ரீக்ருஷ்ணன், ருக்மிணியைப் பறித்துக் கொண்டு வந்த வ்ருத்தாந்தத்தை ஆங்காங்கு ஜனங்கள் பாடுவதைக் கேட்டு, ராஜர்களும் ராஜ கன்னிகைகளும் மிகவும் வியப்படைந்தார்கள். ராஜனே! த்வாரகையில் உள்ளவர்கள் அனைவரும், ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு வல்லபனாகிய (கணவனான) ஸ்ரீக்ருஷ்ணன், ஸ்ரீமஹாலக்ஷ்மியின் அவதாரமாகிய ருக்மிணியுடன் சேர்ந்திருப்பதைக் கண்டு மஹாநந்தம் அடைந்தார்கள். 

ருக்மிணி திருக்கல்யாணம் பற்றிய குறிப்பு

பீஷ்மக ராஜாவின் மகளான ருக்மிணி கண்ணனையே மணந்து கொள்ள விரும்பினாள். ஆனால் அவளது ஐந்து உடன்பிறந்த சகோதரர்களான ருக்மி, ருக்மரதன், ருக்மகேசன், ருக்மபாகு, ருக்மமாலி ஆகியோர் அவளை சிசுபாலனுக்கு மணம் முடிக்கத் திட்டமிட்டார்கள். அப்போது ருக்மிணி ஓர் அந்தணரிடம் ஒரு காதல் கடிதத்தைக் கொடுத்து, அதைத் துவாரகையில் இருக்கும் கண்ணனிடம் சென்று கொடுக்கும்படிச் சொன்னாள். அவரும் கடிதத்தைக் கண்ணனிடம் சேர்த்தவாறே, கண்ணன் வந்து அவளது சகோதரர்களை வீழ்த்தி ருக்மிணியை மணந்து கொண்டான். 

இதில் ருக்மிணி தான் ஜீவாத்மா, கண்ணன் பரமாத்மா, சிசுபாலன் உலகியல் வாழ்வு. ஜீவாத்மாவுக்கு உடன்பிறந்தவர்கள் ஐவர் உள்ளார்கள், அதாவது மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்கள். ருக்மிணியாகிய ஜீவாத்மா பரமாத்மாவை அடைய விரும்பினாலும், உடன்பிறந்த ஐம்புலன்களும் சிசுபாலனாகிய உலகியல் வாழ்வில் ஜீவாத்மாவைத் தள்ளுகிறார்கள். 

அப்போது ருக்மிணிக்காக ஓர் அந்தணர் கண்ணனிடம் தூது சென்றது போல், ஜீவாத்மாவின் குரு ஜீவாத்மாவுக்காக இறைவனிடம் தூது பேசி இறையருளைப் பெற்றுத் தருகிறார். ருக்மிணியின் உடன்பிறந்தவர்களை வென்று அவளை மணந்து கொண்டது போல், இந்தப் புலன்களை வீழ்த்தி ஜீவாத்மாவை இறைவன் மீட்டுச் செல்கிறார். இதுபோல் தான் செய்த ஒவ்வொரு லீலையிலும் எத்தனையோ வேதாந்தக் கருத்துகளை நமக்கு விளக்கினான் கண்ணன். 

ஐம்பத்து நான்காவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக