செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 271

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – ஐம்பத்தைந்தாவது அத்தியாயம்

(ப்ரத்யும்னன் பிறத்தலும், அவனைச் சம்பராஸுரன் கொண்டு போதலும், அவன் சம்பராஸுரனைக் கொன்று, தன் பார்யையாகிய (மனைவியாகிய) ரதிதேவியுடன் த்வாரகைக்குத் திரும்பி வருதலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- வாஸுதேவனுடைய அம்சமாகிய மன்மதன், முன்பு ருத்ரனுடைய கோபத்தினால் கொளுத்தப்பட்டானல்லவா. அவன் மீளவும் தேஹம் (உடல்) பெறுதற்காக அந்த வாஸுதேவனுடைய சரீரத்தை அடைந்திருந்தான். அந்த மன்மதனே, ஸ்ரீக்ருஷ்ணனுடைய வீர்யத்தினால் ருக்மிணியிடத்தில் பிறந்தான். அவன் ப்ரத்யும்னனென்று ப்ரஸித்தி பெற்றிருந்தான். எல்லாவிதத்திலும் தந்தையைக் காட்டிலும் சிறிதும் குறையாதிருந்தான். மன்மதனுக்குச் சத்ருவும் (எதிரியும்), காமரூபியுமாகிய (நினைத்த உருவத்தை எடுக்கும்) சம்பராஸுரன், நாரதர் மூலமாய் அந்த ப்ரத்யும்னன் தனக்குச் சத்ருவென்பதை அறிந்து, பிறந்து பத்து நாள் கழிவதற்கு முன்னமே அக்குழந்தையைக் கொண்டு போய் ஸமுத்ரத்தில் போட்டுத் தன் க்ருஹத்திற்குப் போனான். பலமுள்ள ஒரு மத்ஸ்யம் (மீன்), அக்குழந்தையை விழுங்கிற்று. 

அப்பால், ஒருகாலத்தில் சம்படவர்கள் வந்து, பெரிய வலையை விரித்து, அந்த மத்ஸ்யத்தையும் (மீனையும்), மற்றும் பல மத்ஸ்யங்களையும் (மீன்களையும்) பிடித்தார்கள். சம்படவர்கள், அந்த மத்ஸ்யத்தைக் (மீனைக்) கொண்டு போய், சம்பராஸுரனுக்கு உபஹாரமாகக் (பரிசாகக்) கொடுத்தார்கள். சமையற்காரர்கள், அந்த மத்ஸ்யத்தைப் (மீனை) பாகசாலைக்குள் (சமையல் அறைக்குக்) கொண்டு போய்க் கத்தியினால் சேதிக்க (வெட்ட), அம்மத்ஸ்யத்தின் உதரத்தில் (வயிற்றில்) அற்புதமான ஓர் பாலனைக் கண்டு மாயாவதிக்குத்  தெரிவித்தார்கள். அவள், அந்தப் பாலகனைக் கண்டு, “இப்பாலகன் யாவனோ? தெரியவில்லையே. இவன் என் பர்த்தாவைப் (கணவனைப்) போன்றிருக்கிறான். அல்லது அவன் தானோ இவன்?” என்று மனத்தில் சங்கித்துக் கொண்டிருக்கையில், நாரத மஹர்ஷி அவ்விடம் வந்து, அப்பாலகனுடைய உண்மையையும், அவனுடைய பிறவியையும், அவன் மத்ஸ்யத்தின் (மீனின்) வயிற்றில் புகுந்த விதத்தையும் ஆகிய இவையெல்லாவற்றையும் அவளுக்குச் சொன்னார். அவள், மன்மதனுடைய பத்னி ரதிதேவியென்னும் பெயருடையவள். அவள், ருத்ரனால் தஹிக்கப்பட்ட தன் கணவனுடைய தேஹோத்பத்தியை (உடல் பெறுவதை) எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். ஸம்பராஸுரன் அவளைப் பலாத்காரமாகக் கொண்டு வந்து, சமையற்காரர்களுக்குச் சமையலில் உதவியாயிருக்கும்படி பாகசாலையில் (சமையல் அறையில்) நியமித்திருந்தான். அவள், அந்தப் பாலகனை நாரதர் மூலமாய்க் காமதேவனென்று தெரிந்து கொண்டு, அவனிடத்தில் ஸ்னேஹம் செய்து வந்தாள். ஸ்ரீக்ருஷ்ணனுடைய குமாரனாகிய அந்த ப்ரத்யும்னன், ஸ்வல்ப (குறைந்த) காலத்திலேயே யௌவன (இளமை) வயது நேரப் பெற்று, தன்னைப் பார்க்கும் மடந்தையர்கள் அனைவர்க்கும் காம மோஹத்தை (காதல் மயக்கத்தை) விளைத்தான். 

மன்னவனே! அந்த ரதிதேவி, தாமரையிதழ்போல் மிளிர்ந்து, செவ்வரியோடி நீண்ட கண்களுடையவனும், திரண்டு உருண்டு நீண்ட புஜதண்டங்கள் (கைகள்) உடையவனும், மனுஷ்ய லோகத்தில் இணையெதிரில்லாத அழகனும், தன் கணவனுமாகிய அந்த ப்ரத்யும்னனை வெட்கம் அமைந்த புன்னகையுடன் புருவங்களை நெரித்து, ப்ரீதியினால் காமக்கருத்தை (காதல் என்ணத்தை) வெளியிடுகின்ற லீலாவிலாஸங்களுடன் (விளையாட்டுக் கண்ணோக்கங்களோடு) பார்த்துக் கொண்டு பணிந்து வந்தாள். 

ஸ்ரீக்ருஷ்ணனுடைய குமாரனும், மஹானுபாவனுமாகிய ப்ரத்யும்னன், அந்த ரதிதேவியைக் குறித்து, “தாயே! உன் மதி (புத்தி) விபரீதமாயிருக்கின்றது. ஏனென்றால், புதல்வனிடத்தில் தாயிருக்க வேண்டும் க்ரமத்தைக் கடந்து, நீ காமக் கலவியில் (காதல் புணர்ச்சியில்) மனவிருப்பமுடைய மடந்தை காதலனிடத்தில் நடக்குமாறு நடக்கின்றாயே?” என்றான். அதைக் கேட்டு, ரதிதேவி மொழிந்தாள்.

ரதி சொல்லுகிறாள்:- நீ நாராயணாவதாரமாகிய ஸ்ரீக்ருஷ்ணனுடைய புதல்வன். சம்பரனால் ஸ்ரீக்ருஷ்ண க்ருஹத்தினின்று கொண்டு வரப்பட்டாய். நான், உன்னுடைய பத்னி, ரதிதேவி. ப்ரபூ! நீ காமதேவன். இந்தச் சம்பராஸுரன், உனக்குச் சத்ரு (எதிரி). இவன், வெல்ல முடியாதவன். இவனை எவரும் எதிர்க்கவல்லரல்லர். இவன், பல மாயைகளை அறிந்தவன். நீ, மோஹனம் முதலிய மாயைகளைக் கொண்டு, இவனை வதிப்பாயாக. உன் தாயாகிய ருக்மிணி, தன் புதல்வனைக் காணாமல், குட்டியைக் காணாத மான்பேடு போலவும், தன் கன்றைக் காணாத பசு போலவும், பிள்ளையினிடத்தில் ஸ்னேஹத்தினால் வ்யாகுலமுற்று (வருத்தமுற்று) மனக்களிப்பின்றி வருந்துகின்றாள். ஆகையால், சீக்ரம் சத்ருவைக் (எதிரியைக்) கொன்று, தாயிடம் போய்ச் சேருவாயாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மாயாவதியென்னும் ரதிதேவி, இவ்வாறு மொழிந்து, மஹானுபாவனாகிய அந்த ப்ரத்யும்னனுக்குச் சத்ருவின் மாயையை அழிக்கவல்ல மோஹனம் முதலிய மஹா மாயாதி ரூபமான (சிறந்த மாயஜால) வித்யையைக் கொடுத்தாள். அந்த ப்ரத்யும்னனும், சம்பரனிடம் சென்று, பொறுக்க முடியாத வெசவுகளால் (கொடுஞ்சொற்களால்) அவனைத் திரஸ்கரித்து (அவமதித்து), சண்டையை மூட்டி, அவனை யுத்தத்திற்கு வரும்படி அழைத்தான். அச்சம்பரன், துர்ப்பாஷணங்களால் (கொடுஞ்சொற்களால்) திரஸ்கரிக்கப்பட்டு (அவமதிக்கப்பட்டு), காலால் உதைக்கப்பட்ட ஸர்ப்பம் போல் மிகவும் கோபமுற்று, கண்கள் சிவக்கப் பெற்று, கையில் கதையை ஏந்திக் கொண்டு, புறப்பட்டான். அவ்வஸுரன், பலமுள்ள வரையில் கதையைச் சுழற்றி ப்ரத்யும்னன் மேல் எறிந்து, இடி இடித்தாற் போல் கடோரமான (காதிற்கு நாராசமான) பெரிய கோஷம் உண்டாகும்படி ஸிம்ஹநாதம் (சிங்க கர்ஜனை) செய்தான். 

ப்ரத்யும்னன், ஆகாயத்தில் வருகின்ற அந்தச் சம்பரனுடைய கதையைத் தன் கதையால் தடுத்துக் கோபத்துடன் தானும் ஸிம்ஹநாதம் (சிங்க கர்ஜனை) செய்து, தன் கதையை அவன் மேல் ப்ரயோகித்தான். அச்சம்பராஸுரன், மயனால் உபதேசிக்கப்பட்ட அஸுரமாயையைக் கொண்டு, ஆகாயத்தில் இருந்து, ப்ரத்யும்னன் மேல் கற்களை மழை பெய்வது போல் பெய்தான். 

மஹாபலனாகிய (பெரும் பலசாலியான) ப்ரத்யும்னன், கல் மழையினால் பீடிக்கப்பட்டு, ஸத்வ குணத்தின் பரிணாமமாயிருப்பதும், அஸுரமாயைகளையெல்லாம் அழிப்பதுமாகிய மஹா வித்யையென்னும் மாயையை ப்ரயோகித்தான். அப்பால், மீளவும் அவ்வஸுரன், குஹ்யகர், கந்தர்வர், பிசாசர், உரகர், ராக்ஷஸர் ஆகிய இவர்களைச் சேர்ந்த பற்பல மாயைகளை ப்ரயோகித்தான். ப்ரத்யும்னன், அந்த மாயைகளையெல்லாம் அழித்து விட்டான். அப்பால், ப்ரத்யும்னன் கூரான கத்தியை ஏந்தி, மாயைகளெல்லாம் முடிந்தமையால், மேல் ஒன்றும் செய்ய முடியாதிருப்பவனும், சிவந்த மீசை - தாடிகளுடையவனுமாகிய அந்தச் சம்பராஸுரனுடைய சரீரத்தினின்று கிரீடத்தோடும், குண்டலங்களோடுங்கூடிய சிரத்தை (தலையை)  அறுத்துத் தள்ளினான். அப்பால், அந்த ப்ரத்யும்னன், தேவதைகளால் துதி செய்து பூமழை பொழியப் பெற்று, ஆகாயத்தில் ஸஞ்சரிக்கும் தன்மையுடைய தன் பார்யையாகிய (மனைவியாகிய) ரதிதேவியால் ஆகாய வழியாகப் பட்டணம் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டான். 

ராஜனே அந்த ப்ரத்யும்னன், மின்னலோடு கூடின மேகம் போல், பார்யையுடன் (மனைவியுடன்) ஆகாயத்தினின்று இறங்கி, மடந்தையர் மணிகளால் சூழப்பட்ட மேலான அந்தப்புரத்திற்குள் நுழைந்தான். கார் கொண்ட மேகம் போல் கறுத்த நிறமுடையவனும், பொன்னிறமுள்ள பட்டு வஸ்த்ரம் தரித்தவனும், முழந்தாள் வரையில் நீண்டு, திரண்டு உருண்ட பாஹு தண்டங்களும் (கைகளும்), சிவந்த கண்களும், அழகிய புன்னகையும், அத்தகைய முகமும் அமைந்து, கறுத்துச் சுருண்ட முன்னெற்றி மயிர்களால் அலங்கரிக்கப்பட்ட தாமரை மலர் போன்ற முகமுடையவனுமாகிய அந்த ப்ரத்யும்னனைக் கண்டு, அந்தப்புரத்து மடந்தையர்கள் அனைவரும் ஸ்ரீக்ருஷ்ணனென்று நினைத்து, வெட்கமுற்று, ஆங்காங்கு மறைந்து கொண்டார்கள். 

அனந்தரம் (பிறகு), அம்மடந்தையர்கள், ஸ்ரீவத்ஸம் முதலியன இல்லாமையாகிற சிறிது வேறுபாட்டைக் கண்டு, “இவன் ஸ்ரீக்ருஷ்ணன் அன்று” என்று மெல்ல மெல்ல நிச்சயித்துக் கொண்டு, மனக்களிப்புற்று, பரிசுத்தமான புன்னகையுடையவர்களாகி, பெண்மணியோடு கூடின அந்த ப்ரத்யும்னனைக் கிட்டினார்கள். 

அப்பால், இனிதாகப் பேசுந்தன்மையுடையவளும், கரிய கடைக்கண்களுடையவளுமாகிய ருக்மிணி, அவனைக் கண்டு, ஸ்னேஹத்தினால் ஸ்தனங்களில் பால் பெருகப் பெற்று, காணாது போன தன் புதல்வனை நினைத்துக்கொண்டாள். மற்றும், அவள் தனக்குள் “புருஷ ச்ரேஷ்டனாகிய இவன் யாவனோ? தாமரை மலர் போன்ற கண்களையுடைய இவன் யாருடையவனோ? எவள் இவனை வயிற்றில் தரித்திருந்தாளோ? இவனுக்கு, இப்பெண்மணி எவ்விடத்தில் கிடைந்தாளோ? என் புதல்வன், ப்ரஸவ க்ருஹத்தினின்று பறியுண்டு காணாது போனானே; அவன் தானோ இவன்? அவன் எங்கேனும் பிழைத்திருப்பானாயின், இவனோடொத்த வயதும், உருவமும், உடையவனாயிருப்பான். இவன் ஆகாரம் (உருவம், வடிவு), அவயவங்கள், நடை, குரல், சிரிப்பு, நோக்கம் இவைகளால், ஸ்ரீக்ருஷ்ணனோடு ஒத்திருக்கின்றான். இத்தன்மை, இவனுக்கு எப்படி நேர்ந்ததோ? எந்த மஹானுபாவன், ஸ்ரீக்ருஷ்ணனுடைய அம்சமாகி, என் கர்ப்பத்தில் சிசுவாயிருந்தானோ, அவனே இவன். இது நிச்சயம். இவனிடத்தில், எனக்கு ப்ரீதி அதிகமாயிருக்கின்றது. என்னுடைய இடப்புஜமும் துடிக்கின்றது” என்று சிந்தித்தாள். 

இவ்வாறு ருக்மிணி சிந்தித்துக் கொண்டிருக்கையில், உத்தமச்லோகனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், தேவகீ, வஸுதேவர்களோடு அவ்விடம் வந்தான். மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், ப்ரத்யும்னனைச் சேர்ந்த வ்ருத்தாந்தங்களையெல்லாம் அறிந்தவனாயினும், தான் பேசாதிருந்தான். அப்பொழுது நாரதர், அவ்விடம் வந்து, சம்பரன் கொண்டு போனது முதலிய வ்ருத்தாந்தங்களையெல்லாம் சொன்னார். ஸ்ரீக்ருஷணனுடைய அந்தப்புரத்திலுள்ள மாதர்கள் அனைவரும், அந்த அற்புதமான வ்ருத்தாந்தத்தை நாரதர் மொழியக் கேட்டு, பல ஆண்டுகளாய்க் காணாது போய் மீண்டு வந்திருக்கின்ற அந்த ப்ரத்யும்னனைக் கண்டு, மிகவும் ஸந்தோஷம் அடைந்தார்கள். 

தேவகீ, வஸுதேவர்களும், ஸ்ரீக்ருஷ்ண, ராமர்களும், மற்றுமுள்ள மடந்தையர்களும், ருக்மிணியும், அந்தத் தம்பதிகளை அணைத்து, களிப்புற்றார்கள். த்வாரகையிலுள்ள ஜனங்கள் அனைவரும் காணாது போன ப்ரத்யும்னன் திரும்பி வந்ததைக் கேட்டு, “மரணம் அடைந்த பாலகன் மீளவும் இவ்விடம் வந்தான். இது பெரிய ஆநந்தம். இது நம்முடைய பாக்யமே” என்று மொழிந்தார்கள். ப்ரத்யும்னன், தன் தந்தையாகிய ஸ்ரீக்ருஷ்ணனை நிகர்த்த உருவமும், ஸௌந்தர்யமும், சோபையும், நடை முதலிய மற்றவையும் உடையவனாய் இருந்தானாகையால், அவனுடைய தாய்மார்களாகிய ஸ்ரீக்ருஷ்ண பத்னிகள், ஏகாந்தத்தில் அவனைக் கண்டு, ஸ்ரீக்ருஷ்ணனென்னும் ப்ரமத்தினால் (மனக்கலக்கத்தினால்) மனவிருப்பத்துடன் பணிந்தார்களென்பது அற்புதமன்று, நினைத்த மாத்ரத்தில் மனத்தைக் கலக்கும் தன்மையுடைய மன்மதன், ஸ்ரீக்ருஷ்ணனுடைய திருமேனியின் ப்ரதிபிம்பம் (உருவத்தின் தோற்றம்) போல, அவனை நிகர்த்த புதல்வனாகப் பிறந்திருக்கையில், அவனைக் கண்டு மதி மயங்குவது அற்புதமோ?. தாய்மார்களின் கதை இதுவாயின், மற்ற மடந்தையர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? 

ஐம்பத்தைந்தாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக