புதன், 10 பிப்ரவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 272

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – ஐம்பத்தாறாவது அத்தியாயம்

(ஸ்யமந்தக மணியின் உபாக்யானமும் (கதையும்), ஜாம்பவதீ, ஸத்யபாமைகளின் விவாஹமும்) 

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸத்ராஜிதன் ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் அபராதப்பட்டானாகையால், அதைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு,  தன் புதல்வியாகிய ஸத்யபாமையையும், ஸ்யமந்தகமென்னும் மணியையும் அந்த ஸ்ரீக்ருஷ்ணனுக்குத் தானே முயன்று கொடுத்தான்.

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- ப்ரஹ்ம ரிஷீ! ஸத்ராஜிதன் ஸ்ரீக்ருஷ்ணனுக்கு என்ன அபராதம் செய்தான்? அவனுக்கு ஸ்யமந்தகமணி எங்கிருந்து கிடைத்தது? அவன் எந்த காரணத்தினால் தன் புதல்வியை ஸ்ரீக்ருஷ்ணனுக்குக் கொடுத்தான்?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸத்ராஜிதனென்று ஒரு மன்னவன் இருந்தான். அவன், ஸூர்யனிடத்தில் மிகுந்த பக்தியுடைவனாயிருந்தான். ஸூர்யன் அவனுடைய பக்திக்கு ஸந்தோஷம் அடைந்து, ப்ரீதியுடன் அவனுக்கு ஸ்யமந்தகமென்னும் மணியைக் கொடுத்தான். ராஜனே! அந்த ஸத்ராஜிதன், அம்மணியைக் கழுத்தில் தரித்து, ஸூர்யன் போல் விளக்கமுற்று, மணியின் தேஜஸ்ஸினால் சரீரம் தெரியாமல் மறைந்து, த்வாரகைக்குள் நுழைந்தான். பட்டணத்து ஜனங்கள் அவனைக் கண்டு, தூரத்திலேயே அவனுடைய தேஜஸ்ஸினால் கண்கள் பறியுண்டு, இவன் ஸூர்யனேயென்று நினைத்து, சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருக்கின்ற ஸ்ரீக்ருஷ்ணனிடம் வந்து மொழிந்தார்கள்.

ஜனங்கள் சொல்லுகிறார்கள்:- நாராயணா! சங்கசக்ரகதாதரா! தாமோதரா! தாமரைக்கண்ணா! யதுகுலகுமாரா! நீ ஸமஸ்த லோகங்களுக்கும் ஆதாரன்; ஸர்வாந்தராத்மா; ஸர்வரக்ஷகன்; ஸமஸ்த லோகங்களின் ஸ்ருஷ்டி (படைத்தல்), ஸ்திதி (காத்தல்), ஸமஹாரங்களை (அழித்தல்) நடத்துபவன். நீ உலகங்களைப் படைக்கும் பொழுது, முதலில் ஜலத்தைப் படைத்து, அதன் மேல் சயனித்துக் கொண்டிருந்தாயாகையால், நாராயணனென்று பெயர் பெற்றாய். நீ உன் பக்தர்களின் விரோதிகளை (எதிரிகளை) அழிப்பதற்காக, சங்கு, சக்கரம், கதை ஆகிய இவ்வாயுதங்களைத் தரித்துக் கொண்டிருக்கின்றாய். நீ தாமரையிதழ் போன்ற கண்களையுடைய பரமபுருஷன். அத்தகைய நீ, யாதவ குலத்தில் வந்து அவதரித்து, நந்தகோப க்ருஹத்தில் வளர்ந்து, யசோதையால் கட்டுண்டு, தாமோதரனென்று பெயர் பெற்றாய். பசுக்களை மேய்த்தாயாகையால், கோவிந்தனென்று பெயர் பெற்றாய். உலகங்களுக்கெல்லாம் நாதனே! உஷ்ணமான கிரணங்களையுடைய ஸூர்யன், தன் கிரண ஸமூஹத்தினால் மனுஷ்யர்களின் கண்களைப் பறித்துக்கொண்டு, உன்னைப் பார்க்க விரும்பி இதோ வருகின்றான். தேவச்ரேஷ்டர்கள் மூன்று லோகங்களிலும் உன்னுடைய மார்க்கத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ப்ரபூ! ஆகையால், இப்பொழுது நீ யதுகுலத்தில் யாதவனாய் மறைந்திருப்பதை அறிந்து, ஸூர்யன் உன்னைப் பார்க்க வருகின்றான். 

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- வருகிறவன் இன்னவனென்று தெரிந்து கொள்ளாமல் ப்ரமிக்கின்ற அந்த ஜனங்களின் வசனத்தைக் கேட்டு, தாமரைக் கண்ணனாகிய ஸ்ரீக்ருஷ்ணன் சிரித்து, அவர்களைக் குறித்து மொழிந்தான்.

ஸ்ரீக்ருஷ்ணன் சொல்லுகிறான்:- இவன் தேவனாகிய ஸூர்யனல்லன். இவன் ஸத்ராஜிதன். இவனுக்கு இப்படிப்பட்ட ஒளி ஏதென்றால், சொல்லுகிறேன் கேளுங்கள். ஸ்யமந்தகமென்னும் மணியின் தேஜஸ்ஸினால் இவன் இவ்வாறு ஜ்வலித்துக்கொண்டு வருகின்றான். இதுவேயன்றி வேறில்லை.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸூர்யனிடத்தினின்று மணியைப் பெற்ற ஸத்ராஜிதன், பாக்யமுடையவனாகி, உத்ஸவத்திற்குரிய மங்களங்கள் செய்யப் பெற்ற தன் க்ருஹத்திற்குள் நுழைந்து, தேவாலயத்தில் (பூஜை அறையில்) ப்ராஹ்மணர்களைக் கொண்டு அந்த மணியை ஸ்தாபிதம் செய்தான். 

மன்னவனே! அந்த மணி தினந்தோறும் எட்டு பாரம் (746 கிலோ; 1 பாரம் = 93.25 கிலோ) தங்கத்தை விளைத்துக் கொண்டிருந்தது. அந்த மணி, எந்த ராஜ்யத்தில் பூஜிக்கப்பட்டிருக்கின்றதோ, அந்த ராஜ்யத்தில் துர்ப்பிக்ஷமும் (பஞ்சமும்), அகால மரணமும் இளம் வயதில் இறப்பும்), அமங்களங்களும் (தீமைகளும்), ஸர்வவிதமான மனவருத்தங்களும், வ்யாதிகளும், மற்றும் பல துக்க ஹேதுக்களும் (காரணங்களும்), திருடர்களும், ஒருகாலும் உண்டாக மாட்டார்கள். ஒருகால், ஸ்ரீக்ருஷ்ணன் உக்ரஸேனனுக்காக அந்த மணியை வேண்டுகையில், ஸத்ராஜிதன் பணத்தாசையால் ஸ்ரீக்ருஷ்ணனுடைய வேண்டுகோளைத் தடுக்க வேண்டி வருகிறதேயென்பதை ஆலோசிக்காமல் கொடுக்காமலே இருந்து விட்டான். 

இப்படியிருக்கையில் ஒருகால், பேரொளியுடைய அந்த மணியை அவனுடைய ப்ராதாவாகிய (ஸஹோதரனான) ப்ரஸேனனென்பவன் கழுத்தில் தரித்து, குதிரையின் மேல் ஏறி, வனத்தில் வேட்டைக்காகத் திரிந்தான். அப்பொழுது, ஒரு ஸிம்ஹம் குதிரையையும், ப்ரஸேனனையும் கொன்று, மணியை எடுத்துக்கொண்டு, பர்வதத்தில் ப்ரவேசிக்க, கரடிகளுக்கு ராஜனாகிய ஜாம்பவான் மணியை விரும்பி, அந்த ஸிம்ஹத்தைக் கொன்றான். அந்த ஜாம்பவானும், தன் வாஸஸ்தானமாகிய (இருப்பிடமாகிய) குஹைக்குள் சென்று, அந்த மணியைத் தன் குமாரனுக்கு விளையாட்டுக் கருவியாகக் கொடுத்து வைத்தான். 

ஸத்ராஜிதன், ப்ராதா வரக்காணாமையால் பரிதபித்து (வருந்தி), “என் ப்ராதா கழுத்தில் மணியைத் தரித்து வனத்திற்குச் சென்றான். அங்கு பெரும்பாலும் அவன் ஸ்ரீக்ருஷ்ணனால் மணிக்காகக் கொல்லப்பட்டிருப்பான். இது நிச்சயம்” என்றான். அதைக் கேட்டு ஜனங்கள் ஒருவர்க்கொருவர் காதோடு ஏகாந்தமாக இப்படியாமேயென்று பேசிக்கொண்டார்கள். ஸ்ரீக்ருஷ்ண பகவானும், க்ரமமாக (முறையாக) அந்த வசனத்தைக் கேட்டு, தன்னிடத்தில் பூசப்பட்ட பழியைப் போக்கிக்கொள்ள விரும்பி, பட்டணத்து ஜனங்களுடன் ப்ரஸேனன் போன வழியைத் தொடர்ந்து சென்றான். 

அவர்கள் அங்கு வனத்தில் ஸிம்ஹத்தினால் அடியுண்ட ப்ரஸேனனையும், குதிரையையும் கண்டு, அப்புறம் மலையின் மேல் ஏறி, அங்கு ஜாம்பவானால் அடிக்கப்பட்ட ஸிம்ஹத்தையும் கண்டார்கள். பிறகு, கரடிகளுக்கு ராஜனாகிய ஜாம்பவானுடைய குஹைக்குச் சென்று, அங்கு த்வாரத்தில் (குஹை வாசலில்) பட்டணத்து ஜனங்களை நிறுத்தி, பேரிருள் மூடப் பெற்றுப் பயங்கரமாயிருக்கின்ற அந்தக் குஹைக்குள் ஸ்ரீக்ருஷ்ணன் தானொருவன் மாத்ரமே நுழைந்தான். 

அந்தக் குஹைக்குள் ஸ்ரீக்ருஷ்ணன் குழந்தைக்கு விளையாட்டுக் கருவியாக ஏற்படுத்தி வைக்கப்பட்டிருக்கிற மேலான மணியைக் கண்டு, அதைப் பறித்துக்கொண்டு போக மனத்தில் நிச்சயித்துக் கொண்டு, அந்தக் குழந்தையின் அருகாமையில் நின்றிருந்தான். என்றும் காணாத புதிய புருஷனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன் வந்திருப்பதைக் கண்டு, குழந்தையின் மாற்றாந் தாய் பயந்து முறையிட்டாள். பலிஷ்டர்களில் (பலசாலிகளில்) சிறந்த ஜாம்பவான் அதைக் கேட்டு, கோபமுற்று விரைந்தோடி வந்தான். 

அவன், பகவானுடைய மஹிமையை அறியாமல், அவனைக் கேவலம் ப்ராக்ருத (சாதாரண) புருஷனாக நினைத்துக் கோபித்து, தன் ஸ்வாமியாகிய அந்தப் பகவானோடு யுத்தம் செய்தான். மாம்ஸத்திற்காக இரண்டு பருந்துகள் சண்டை செய்வது போல, ஒருவரையொருவர் ஜயிக்க விரும்புகிற அவ்விருவரும், ஆயுதங்களாலும், கற்களாலும், மரங்களாலும், கைகளாலும் ஒருவரையொருவர் அடித்து மிகவும் கோரமாக த்வந்த்வ (இருவர் செய்யும் சண்டை) யுத்தம் செய்தார்கள். 

வஜ்ராயுதத்தின் அடிபோல் கடோரமாயிருக்கின்ற (கடினமான) முஷ்டிகளால் ஒருவரோடொருவர் சண்டை செய்கின்ற அவ்விருவர்க்கும், அந்த த்வந்த்வ யுத்தம் (இருவர் செய்யும் சண்டை), பகலுமிரவும் ஓயாமல் இருபத்தெட்டு நாட்கள் நடந்தது. அப்பால், ஸ்ரீக்ருஷ்ணனுடைய இடி போன்ற முட்டியடிகளால் அங்கங்களும், மிகவும் உறுதியுள்ள ஸந்தி பந்தங்களும் (மூட்டுக்களும், எலும்பும்) முறிந்து, தளர்ந்து, பலம் க்ஷீணித்து (குன்றி), உடம்பெல்லாம் புழுங்கவும் பெற்று, “ஒரு காலும் என் பலம் க்ஷீணித்ததில்லை (குறைந்ததில்லை). ஆ! இப்பொழுது செத்தாற் போலாய் விட்டேன் இதென்ன!” என்று மிகவும் வியப்புற்று, அப்பால் தனக்குள் விசாரித்து நிச்சயித்துக் கொண்டு, அந்த ஸ்ரீக்ருஷ்ணனைப் பார்த்து மொழிந்தான்.

ஜாம்பவான் சொல்லுகிறான்:- நீ ஸமஸ்த பூதங்களின் ப்ராணன். ஓஜஸ்ஸு, ஸஹஸ்ஸு, பலம் (ஓஜஸ்ஸு – ப்ரவ்ருத்தி ஸாமர்த்யம். அதாவது - முயற்சியின் திறமை, மன வலிமை. ஸஹஸ்ஸு – இந்த்ரியங்களின் வலிமை, வேகம். பலம் – தாரண ஸாமர்த்யம் – தரிக்கும் திறமை உடல் வலிமை), இவற்றிற்கு நிர்வாஹகன் (நியமிப்பவன்); ஜகத்காரணனான புராண புருஷன். நீ சேதனாசேதன ரூபமான (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக் கொண்ட) இவ்வுலகமாய் விரியும் தன்மையன். உன் திறமை அளவற்றது. நீ ஸர்வஜ்ஞன், ஸர்வசக்தி, ஸர்வாந்தராத்மா. நீ மஹாவிஷ்ணு. இத்தகைய உன்னுடைய உண்மையை நான் அறிந்து கொண்டேன். 

உலகங்களைப் படைக்கின்ற மஹத்து முதல் ப்ருதிவி வரையிலுமுள்ள தத்வங்களையெல்லாம் நீயே படைக்கின்றாய். ஸ்ருஷ்டிக்கு (படைப்புக்கு) விஷயமான அந்த மஹத்து முதலிய தத்வங்களுக்கு உபாதான காரணமும் (மண்குடத்திற்கு மண் போல) நீயே. (நீயே மஹத்து முதலிய தத்வங்களாய் விரிந்தாய்). எல்லாவற்றையும் தங்களுக்கு வசப்படுத்திக்கொண்டு நடக்கும் திறமையுள்ளவர்களையும் தன் வசப்படுத்திக்கொள்கின்ற காலமும் நீயே. ஜீவாத்மாக்களுக்கு அந்தராத்மாவாகித் தரித்துக் கொண்டிருப்பவனும் நீயே. நீ சேதனா சேதனங்களில் (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களில்) உட்புகுந்து, நியமித்துக்கொண்டிருப்பினும், அவற்றின் தோஷங்கள் எவையும் தன்மேல் தீண்டப்பெறாமல் பரிசுத்தனாயிருப்பவன். எவன் சிறிது கோபித்துக் கடைக் கண்ணோக்கம் செய்கையில் ஸமுத்ரம், முதலைகளும், திமிங்கிலங்களும் கலங்கப் பெற்று வழி கொடுத்ததோ, எவன் தன் புகழ் நிரம்புவதற்காக ஸமுத்ரத்தில் அணை கட்டினானோ, எவன் லங்கையை நீறு (சாம்பல்) செய்தானோ, எவனுடைய பாணங்களால் அடியுண்டு ராவணனுடைய தலைகள் பூமியில் விழுந்தனவோ, அப்படிப்பட்ட பரமபுருஷன் நீயே என்று தெரிந்துகொண்டேன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஜ்ஞான சக்த்யாதி குணங்கள் நிறைந்த மஹானுபாவனும், தன்னைப் பற்றினவர்களைக் கைவிடாது காக்கும் தன்மையனும், தேவகியின் புதல்வனும், தாமரைக் கண்ணனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன், இவ்வாறு அறிய வேண்டியவைகளில் முக்யனாகிய தன்னை உள்ளபடி அறிந்த ருக்ஷராஜனாகிய (கரடிகளின் அரசனாகிய) ஜாம்பவானை, மங்களமான தன் ஹஸ்தத்தினால் (கையினால்) தடவிக் கொடுத்து, மிகுந்த மன இரக்கத்துடன், தன் பக்தனாகிய அவனைக் குறித்து, மேக கர்ஜனம் போல் கம்பீரமான குரலுடன் மொழிந்தான்.

ஸ்ரீக்ருஷ்ணன் சொல்லுகிறான்:- ருக்ஷராஜனே (கரடிகளின் அரசனே)! நான் மணிக்காக இந்தக் குஹைக்கு வந்தேன். எனக்கு, இந்த மணி நிமித்தமாக வீண் அபவாதம் (பழி) நேர்ந்திருக்கின்றது. நான், இந்த மணியைக் கொண்டு, அதைப் போக்க விரும்புகிறேன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பகவானால் இவ்வாறு மொழியப்பெற்ற அந்த ஜாம்பவான், ஜாம்பவதியென்னும் தன் புதல்வியை, அந்த மணியுடன் ஸ்ரீக்ருஷ்ணனுக்கு உபஹாரமாகக் (பரிசாகக்) கொடுத்தான். பக்த வத்ஸலனாகிய (அடியார்களிடம் பரிவு உடைய) ஸ்ரீக்ருஷ்ணன், கன்யா ரத்னத்தினாலும், ரத்ன ச்ரேஷ்டமான (சிறந்த மணியான) ஸ்யமந்தகமணியாலும், மற்றும் பல மேலான ரத்னங்களாலும் பூஜிக்கப்பட்டு, அந்த ஜாம்பவானுக்கு மீளவும் இந்த ஸம்ஸாரத்திற்குத் திரும்பி வருதலின்றி மஹாநந்தத்தை அனுபவிக்கையாகிற மேலான மோக்ஷத்தைக் கொடுத்தான். பட்டணத்து ஜனங்கள் குஹையின் த்வாரத்தில் பன்னிரண்டு தினங்கள் எதிர்பார்த்தும், ஸ்ரீக்ருஷ்ணன் திரும்பி வரக் காணாமல் வருந்தி, பட்டணம் போய்ச் சேர்ந்தார்கள். 

தேவகியும், ருக்மிணியும், வஸுதேவனும், நண்பர்களும், பந்துக்களும், குஹைக்குள் நுழைந்த ஸ்ரீக்ருஷ்ணன் வெளிப்படவில்லை என்பதைக் கேட்டுச் சோகித்தார்கள். அவ்வாறு துக்கித்திருக்கின்ற த்வாரகையிலுள்ளவர்கள் அனைவரும், ஸத்ராஜிதனைச் சபித்துக்கொண்டு, ஸ்ரீக்ருஷ்ணனைப் பெறுதற்காக மஹாமாயையென்னும் துர்க்கையைப் பணிந்தார்கள். அவர்கள் துர்க்காதேவியைப் பணிந்து, “நீங்கள் சீக்ரத்தில் ஸ்ரீக்ருஷ்ணனைக் காண்பீர்கள்” என்று ஆசீர்வாதங்கள் செய்யப் பெற்றிருக்கையில், ஸ்ரீக்ருஷ்ணன் மணியைக் கொண்டு வருகையாகிற தன் ப்ரயோஜனம் கைகூடப் பெற்று, ஜாம்பவதியென்னும் பார்யையுடன் (மனைவியுடன்), அவர்களை மனக்களிப்புறச் செய்துகொண்டு வந்து தோன்றினான். 

உலகத்தில், பந்துக்கள் மரணம் அடைந்தவன் மீண்டு பிழைத்து வரப் பெறுவது போல, ஸ்ரீக்ருஷ்ணன் பார்யையுடன் (மனைவியுடன்) கூடி, கழுத்தில் மணியை அணிந்து வந்து சேரக் கண்ட த்வாரகையில் உள்ளவர்கள் அனைவரும், மஹோத்ஸவம் (பெரு மகிழ்ச்சி) உண்டாகப் பெற்றார்கள். 

மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், ஸத்ராஜிதனை வரவழைத்து, சபையில் ராஜனாகிய உக்ரஸேனனுடைய ஸந்நிதானத்தில் மணி கிடைத்த விதத்தை மொழிந்து, அவனிடம் அந்த மணியைக் கொடுத்துவிட்டான். அந்த ஸத்ராஜிதனும், மணியை வாங்கிக்கொண்டு மிகவும் வெட்கமுற்று, தலையை வணங்கி, ஸ்ரீக்ருஷ்ணன் மணியை வேண்டினதற்குக் கொடாமையும், அவன்மேல் வீண்பழி சுமற்றினதுமாகிய தான் செய்த பாபத்தினால் பரிதபித்துக்கொண்டே, தன் க்ருஹத்திற்குப் போனான். 

அவன், அந்தத் தன் பாபத்தையே சிந்தித்துப் பலிஷ்டனாகிய (பலசாலியன) பகவானோடு விரோதம் நேர்ந்ததைப்பற்றி வியாகுலமுற்று (வருந்தி), “என்னுடைய அபராதத்தை எப்படி போக்கிக்கொள்வேன்? ஸ்ரீக்ருஷ்ணன் என்னிடத்தில் எப்படி அருள்புரிவான்? என்ன கார்யம் செய்தால், எனக்கு க்ஷேமம் உண்டாகும்? எப்படி செய்தால், ஜனங்கள் என்னைப் பழியாதிருப்பார்கள். மேல்வரும் நன்மை, தீமைகளைப்பற்றி ஆலோசனையற்றவனும், மந்த புத்தியனும் (அறிவு குறந்தவனும்), கேவலம் பணத்தில் பேராசையுற்றவனுமாகிய என்னைச் சுடவேண்டும். ஸ்த்ரீகளில் சிறந்த என் புதல்வியையும், இந்த ஸ்யமந்தக ரத்னத்தையும் ஸ்ரீக்ருஷ்ணனுக்குக் கொடுத்து விடுகிறேன். இது தான் நல்ல உபாயம். இல்லாத பக்ஷத்தில், அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய மனத்தில் ஸமாதானம் உண்டாகாது” என்று புத்தியில் ஆலோசித்து, நிச்சயித்து, மங்கள ஸ்வபாவமுடையவளும், பேரழகியுமாகிய தன் புதல்வியையும், ரத்னத்தையும், தானே கொண்டு போய், ஸ்ரீக்ருஷ்ணனுக்கு ஸமர்ப்பித்தான். 

பல மன்னவர்களால் வேண்டப்பெற்றவளும், ஒழுக்கம் அழகு, மேன்மை முதலிய குணங்கள் நிறைந்தவளுமாகிய அந்த ஸத்யபாமையை, ஸ்ரீக்ருஷ்ணன், விதிப்படி விவாஹம் செய்து கொண்டான். அவன் மணியைக் கொடுக்க வந்த ஸத்ராஜிதனைப் பார்த்து மன்னவனே! ஸத்ராஜித! மணியை வாங்கிக் கொள்ள மாட்டேன். அது தேவபக்தனாகிய உனக்கே இருக்கட்டும். அதனால் விளைகிற துர்ப்பிக்ஷ சாந்தி (பஞ்சத்தின் தீர்வு) முதலிய பயன்களெல்லாம் எங்களைச் சேர்ந்தவைகளே (மற்றும், பிள்ளையில்லாத உனக்கு, வரும் பணமெல்லாம் எங்களுடையதே) என்று மொழிந்து விட்டான். 

ஐம்பத்தாறாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக