சனி, 13 பிப்ரவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 273

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – ஐம்பத்தேழாவது அத்தியாயம்

(சத்தன்வன் ஸத்ராஜிதனைக் கொன்று, மணியைக் கொண்டு போய் அக்ரூரனிடம் வைத்து பயந்தோட, ஸ்ரீக்ருஷ்ணன் அவனைத் தொடர்ந்து வதித்தும், அவனிடத்தில் மணியைக் காணாமல் அக்ரூரனிடம் இருப்பதைக் கண்டுபிடித்து, அவனை வரவழைத்து மணியைப் பந்துக்களுக்குக் காட்டி, அதை அவனுக்கே கொடுத்தனுப்புதல்.) 

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், பாண்டவர்களும், குந்தியும், அரக்கு மாளிகையில் எரிக்கப்பட்டார்களென்று கேள்விப்பட்டு, அவர்கள் சுரங்கப்பாதை வழியாக தப்பித்துக் கொண்டார்களென்கிற உண்மையை அறிந்தவனாயினும், ஒன்றுமறியாதவன் போல், தங்கள் குலத்தில் ஏற்பட்ட வழக்கத்தின்படி நடத்த முயன்று, பலராமனுடன் குருதேசத்திற்குச் சென்றான். 

அந்த ராம, க்ருஷ்ணர்கள், தங்களோடொத்த மன வருத்தமுடையவர்களாகிய பீஷ்மர், க்ருபர், விதுரர், காந்தாரி, த்ரோணாசார்யர் இவர்களைக் கிட்டி, “ஆ, என்ன கஷ்டம் நேர்ந்தது!” என்று உபசார வார்த்தைகளால் ஸமாதானப்படுத்தினார்கள். ராஜனே! அப்பொழுது, அக்ரூரனும், க்ருதவர்மனும் “இதுவே ஸமயம்” என்று தெரிந்து கொண்டு, சத்தன்வனைப் பார்த்து மொழிந்தார்கள்.

அக்ரூர, க்ருதவர்மர்கள் சொல்லுகிறார்கள்:- நீ இப்பொழுது ஸத்ராஜிதனிடத்தினின்று ஏன் மணியைப் பிடுங்கிக் கொள்ளலாகாது. இந்த ஸத்ராஜிதன், நமக்குத் தன் புதல்வியைக் கொடுக்கிறேனென்று சொல்லி, நம்மை அனாதரித்து (அவமரியாதை செய்து), ஸ்ரீக்ருஷ்ணனுக்குக் கொடுத்தானல்லவா? ஆனால், பிழைத்திருக்கும் வரையில் மணியை எப்படி கொடுப்பானென்கிறாயோ? அவன், தன் ப்ராதாவை (ஸஹோதரனை) ஏன் பின் செல்லமாட்டான். (ஸிம்ஹம் அவன் ப்ராதாவைக் (ஸஹோதரனை) கொன்றாற் போல், நீ அவனைக் கொன்று, ஏன் மணியைப் பெறலாகாது?)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு சத்தன்வன் அக்ரூர, க்ருதவர்மர்களால் மதி (புத்தி) கலங்கும்படி போதிக்கப் பெற்று, மிகவும் பாபிஷ்டனும், ஆயுள் க்ஷீணிக்கப் (குறையப்) பெற்றவனுமாகையால், மணியிடத்தில் பேராசை கொண்டு, படுத்து உறங்குகின்ற ஸத்ராஜிதனை வதித்தான். ஸ்த்ரீகள், அநாதைகள் போலக் கூக்குரலிட்டுப் புலம்பிக் கொண்டிருக்கையில், பசுக்களை ஹிம்ஸிப்பவன் பசுவைக் கொல்லுவது போல, அவன் ஸத்ராஜிதனைக் கொன்று, மணியை எடுத்துக் கொண்டு போனான். அப்பொழுது, ஸத்யபாமையும், தந்தை மாண்டதைக் கண்டு சோகமுற்று, இடையிடையில் மூர்ச்சை அடைந்து, “அப்பா, அப்பா! ஐயோ நான் பாழானேன்” என்று புலம்பினாள். 

அப்பால், அந்த ஸத்யபாமை மரணம் அடைந்த தன் தந்தையை எண்ணெய்க் கடாஹத்தில் (கொப்பரையில்) வைத்து, ஹஸ்தினாபுரத்திற்குச் சென்று, அங்கு முன்னமே இந்தச் செய்தியை அறிந்தும் அறியாதவன் போன்றிருக்கிற ஸ்ரீக்ருஷ்ணனுக்கு, தன் தந்தையைச் சத்தன்வன் கொன்ற கதையைச் சொன்னாள். 

ராஜனே! ஸர்வேச்வரர்களாகிய ராம, க்ருஷ்ணர்கள், அந்த வ்ருத்தாந்தத்தைக் கேட்டு, மானிடர்களின் நிலைமையை அனுஸரித்து, சோகத்தினால் கண்ணும் கண்ணீருமாகி, “ஆ! நமக்குப் பெரிய ஆபத்து நேர்ந்ததே!” என்று புலம்பினார்கள். அப்பால், ஸ்ரீக்ருஷ்ணன் ஸத்யபாமையோடும், தமையனோடும், ஹஸ்தினாபுரத்தினின்று புறப்பட்டு, த்வாரகைக்கு வந்து, சத்தன்வனைக் கொன்று, மணியைப் பறிக்கத் தொடங்கினான். அந்தச் சத்தன்வனும், ஸ்ரீக்ருஷ்ணனுடைய முயற்சியைக் கேள்விப்பட்டு பயந்து, ப்ராணன்களைப் (உயிரைப்) பாதுகாத்துக் கொள்ள விரும்பி, க்ருதவர்மனைத் தனக்கு ஸஹாயமாய் (உதவியாய்) இருக்கும்படி வேண்டினான். அவன், சத்தன்வனைக் குறித்து மொழிந்தான்.

க்ருதவர்மன் சொல்லுகிறான்:- ஜகதீச்வரர்களாகிய ராம, க்ருஷ்ணர்களுக்கு நான் ப்ரதிகூலம் (விரோதம்) செய்ய மாட்டேன். எவன் தான் அவர்களுக்கு அபராதம் செய்து க்ஷேமம் பெறுவான்? கம்ஸன், இந்த ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் த்வேஷத்தினால் (பகைமையினால்) அல்லவோ தானும், தன்னைச் சேர்ந்தவர்களுமாகச் சேர்ந்து, ராஜ்ய ஸம்பத்தையும், ப்ராணன்களையும் (உயிரையும்) இழந்தான்? ஜராஸந்தன், இவனை எதிர்த்துப் பதினேழு தடவைகள் யுத்தத்தில் தோல்வி அடைந்து, சரீரம் (உடல்) மாத்ரமே மிகப்பெற்று, போனானல்லவா? (ஆகையால், அந்த ஸ்ரீக்ருஷ்ணனுக்கு விரோதமாக உனக்கு ஸஹாயம் (உதவி) செய்யமாட்டேன்).

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு க்ருதவர்மனால் திரஸ்கரிக்கப்பட்ட (அவமதிக்கப்பட்ட, நிந்திக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட) சத்தன்வன், அக்ரூரனைத் தனக்கு ஸஹாயமாய் ( உதவியாய்) இருக்கும்படி வேண்டினான். அவனும், சத்தன்வனைப் பார்த்து இவ்வாறு மொழிந்தான்.

அக்ரூரன் சொல்லுகிறான்:- ஜகதீச்வரர்களான ராம, க்ருஷணர்களின் பலத்தை அறிந்தவன் எவன் தான் அவர்களோடு விரோதித்துக் கொள்வான்? அவன், பிறவி முதலிய விகாரங்கள் (மாற்றங்கள்) அற்றவன். அவன் விளையாட்டிற்காக இந்த ப்ரபஞ்சத்தையெல்லாம் படைப்பதும், காப்பதும், அழிப்பதுமாயிருக்கின்றான். ஜனங்கள் அவனுடைய மாயையினால் மோஹித்து, அவனுடைய ஜகத் ஸ்ருஷ்டி (உலகின் படைப்பு) முதலிய லீலையை அறிகிறதில்லை. இவன் ஏழு வயதுள்ள பாலனாயிருக்கும் பொழுது, சிறுவன் நாய்க்குடையைப் பிடுங்கிக் கையில் ஏந்திக் கொண்டிருப்பது போல, கோவர்த்தன பர்வதத்தை ஒற்றைக் கையினால் பிடுங்கி, அவலீலையாக (விளையாட்டாக) ஏந்திக் கொண்டிருந்தான். 

ஷாட்குண்ய பூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), அமானுஷமான (மனித சக்திக்கு அப்பாற்பட்ட) செயல்களையுடையவனும், அளவிட முடியாத ஸ்வரூப (இயற்கையான தன்மை), ஸ்வபாவங்கள் (குணங்கள்) உடையவனும், ஜகத்காரணனும் (உலகைப் படைத்தவனும்), ஸ்வரூபத்தினாலும், ஸ்வபாவத்தினாலும் விகாரம் (மாற்றங்கள்) அற்றவனும், ஸர்வாந்தராத்மாவுமாகிய (எல்லா பொருட்களிலும் ஆத்மாவாக உள்ளே இருப்பவனும்) அந்த ஸ்ரீக்ருஷ்னனுக்கு நாம் நமஸ்காரம் செய்ய வேண்டுமேயன்றி மற்றொன்றும் செய்ய முடியாது.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அக்ரூரனாலும் இவ்வாறு திரஸ்கரிக்கப்பட்ட (அவமதிக்கப்பட்ட, நிந்திக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட) அந்தச் சத்தன்வன், ஸ்யமந்தக மஹாமணியை அக்ரூரனிடம் வைத்து ஒரு தினத்தில் நூறு யோஜனை தூரம் நடக்கவல்ல குதிரையின் மேல் ஏறிக் கொண்டு, நூறு யோஜனை தூரத்திற்கு அப்புறத்திலுள்ள தேசம் போய்ச் சேர்ந்தான். 

ராஜனே! அப்பொழுது ஸ்ரீக்ருஷ்ண, ராமர்கள், கருடக் கொடியுடைய ரதத்தின் மேல் ஏறிக்கொண்டு, மிகுந்த வேகமுடைய குதிரைகளால் வழியைக் கடந்து, தங்கள் குருவாகிய ஸத்ராஜிதனுக்கு த்ரோஹம் (கெடுதல்) செய்த சத்தன்வனைத் தொடர்ந்து சென்றார்கள். சத்தன்வன், நூறு யோஜனைக்கு மேல் போக முடியாமையால், மிதிலைப்புரியின் உபவனத்தில் ஓய்ந்து விழுந்த தன் குதிரையைத் துறந்து, பயந்து பாதங்களாலேயே நடந்தோடினான். 

இவ்வாறு ஓடுகின்ற அந்தச் சத்தன்வனை ஸ்ரீக்ருஷ்ணனும் கோபத்தினால் தொடர்ந்தோடினான். கேவலம் பாதங்களால் நடந்தோடுகின்ற அவனைத் தானும் பாதங்களால் நடந்து தொடர்கின்ற ஸ்ரீக்ருஷ்ணன், கூரிய நுனியுடைய சக்ரத்தினால் அவன் தலையை அறுத்து, அவனுடைய அரைத்துணி மேல் துணிகளில் மணியைத் தேடினான். அக்ரூரனிடத்தில் மணி இருக்கிறதென்று தெரியுமாயினும், பலராமனுடைய வசனத்தை ஏற்றுக்கொண்டு, அவ்வாறு அறியாதவன் போல் தேடினான். 

ஸ்ரீக்ருஷ்ணன் தேடியும் மணி அகப்படாமல், தமையனிடம் வந்து, “சத்தன்வனை வீணுக்கு வதித்தோமன்றி, அவனிடத்தில் மணி அகப்படவில்லை” என்றான். பலராமனும் அதைக் கேட்டு, “சத்தன்வன் நிச்சயமாய் மணியை வேறொரு புருஷனிடத்தில் வைத்திருக்கிறான். ஆகையால், பட்டணத்திற்குச் சென்று, அதைத் தேடுவாயாக. நான் எனக்கு மிகவும் நண்பனாகிய வைதேஹ ராஜனைப் பார்க்க விரும்புகிறேன்” என்று மொழிந்து, ராஜனே! மிதிலைக்குச் சென்றான். 

மிதிலைக்கு நாதனாகிய வைதேஹன், அந்தப் பலராமனைக் கண்டு விரைவுடன் எழுந்து, மனக்களிப்புற்று, பூஜிக்கத் தகுந்தவனாகிய அப்பலராமனைப் பூஜைக்குரிய வஸ்துக்களால் விதிப்படி பூஜித்தான். ப்ரபுவாகிய பலராமன், மிதிலையில் சில வர்ஷங்கள் வஸித்திருந்தான். அப்பொழுது த்ருதராஷ்ட்ரனுடைய பிள்ளையாகிய துர்யோதனன் மிதிலைக்கு வந்து, மஹானுபாவனாகிய ஜனக மன்னவனால் வெகுமதிக்கப்பெற்று, பலராமனிடத்தில் கதாயுத்தத்தை அப்யஸித்தான் (பயின்றான்). ஸமர்த்தனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், த்வாரகைக்குச் சென்று, அன்பிற்கிடமான பார்யையாகிய (மனைவியாகிய) ஸத்யபாமைக்கு ப்ரியம் செய்ய விரும்பி, சத்தன்வனைக் கொன்றதையும், தேடிப்பார்த்தும் அவனிடத்தில் மணி அகப்படாததையும் அவளுக்குச் சொன்னான். 

அப்பால், அந்தப் பகவான் நண்பர்களோடு கூடி, சத்தன்வனால் வதிக்கப்பட்ட பந்துவாகிய (மாமனாராகிய) ஸத்ராஜிதனுக்குப் பரலோகத்து நன்மைக்கு ஹேதுவாகச் செய்ய வேண்டிய கார்யங்களையெல்லாம் செய்வித்தான். அக்ரூரனும், க்ருதவர்மனும், சத்தன்வனுடைய வதத்தைக் கேள்விப்பட்டு, சத்தன்வனை மணியைப் பறிக்கும்படி தூண்டினவர்களாகையால், நமக்கு என்ன வருமோவென்று பயந்து, த்வாரகையினின்று புறப்பட்டுப் போனார்கள். “அக்ரூரன் வெளிப்பட்டுப் போகையில், த்வாரகையிலுள்ள ஜனங்களுக்குச் சரீர வியாதிகளும், மனோவியாதிகளுமாகிய ஆத்யாத்மிக தாபங்களும், ஆதி தைவிக, ஆதி பௌதிக தாபங்களும் {ஆத்யாத்மிகம் (சரீரத்திற்கு ஏற்படும் தலைவலி, சளி முதலிய நோய்கள் மற்றும் மன நோய்களான காமம், கோபம், பயம் முதலியன)  ஆதிதெய்விகம் (குளிர், சூடு, மழை முதலியவற்றால் ஏற்படும் துன்பங்கள்), ஆதிபௌதிகம் (ம்ருகம், பறவை, மனிதர் முதலியவற்றால் வரும் துன்பங்கள்) என்று மூன்று வகையான துன்பங்கள்} அடிக்கடி உண்டாகிக் கொண்டிருந்தன. ஆகையால், ஸ்ரீக்ருஷ்ணன் அக்ரூரனை வரவழைத்தான்” என்று சில ரிஷிகள் சொல்லுகிறார்கள்.

அவர்கள், முன்பு சொல்லப்பட்ட ஸ்ரீக்ருஷ்ணனுடைய மஹிமையை மறந்தார்கள் போலும். அந்த ஸ்ரீக்ருஷ்ணனை மனத்தில் த்யானம் செய்கிற முனிவர்கள் எங்கு வஸிக்கின்றார்களோ, அவ்விடத்தில் எவ்வகைக் கெடுதிகளும் உண்டாகிறதில்லையாயின், அம்முனிவர்களுக்கும் ஆதாரனாகிய ஸ்ரீக்ருஷ்ணன் நேரே வஸித்திருக்குமிடத்தில் ஜனங்களுக்கு ஆத்யாத்மிகம் முதலிய தாபங்கள் உண்டாயினவென்பது எவ்வாறு பொருந்தும்? 

முன்பு, காசி தேசத்தில் பர்ஜன்யன் (மழை தேவதை), மழை பெய்யாதிருக்கையில், அந்தத் தேசாதிபதியான மன்னவன், அவ்விடம் வந்த ச்வபல்கனுக்குக் காந்தினியென்னும் தன் புதல்வியைக் கொடுத்தான். அப்பால், அத்தேசத்தில் பர்ஜன்யன் மழை பெய்தான். அவனுடைய பிள்ளையாகிய அக்ரூரன், அவனோடொத்த மஹிமையுடையவன். அவன் எங்கெங்கு வாஸம் செய்கிறானோ, அவ்வவ்விடங்களில் மழை பெய்கின்றது. அங்கு வியாதிகளாவது, அகால மரணங்களாவது உண்டாகிறதில்லை என்று பெரியோர்கள் மொழிவதைக் கேட்டு, ஸ்ரீகிருஷ்ணன் அக்ரூரனை வரவழைத்தானென்று சிலர் சொல்லுகிறார்கள். இது வாஸ்தவமே (உண்மையே). ஆயினும், அக்ரூரன் இருப்பது மாத்ரமே மழை பெய்வதற்கும், கெடுதிகள் உண்டாகாமைக்கும் காரணமன்று. மணி இருப்பதும், அதற்குக் காரணமாக வேண்டும். இவ்வாறு அக்ரூரன் தேசாந்தரம் (வேறு இடம்) போயிருக்கையில், ஸ்ரீக்ருஷ்ணன் தூதர்களை அனுப்பி, அவனை வரவழைத்துப் பூஜித்து, யோக க்ஷேமங்கள் விசாரித்து, மனத்திற்கினிய கதைகளைச் சொல்லி, அறிஞர்களின் மனக்கருத்தையும் அறிந்தவனாகையால், புன்னகை செய்து கொண்டு, இவ்வாறு மொழிந்தான்.

ஸ்ரீக்ருஷ்ணன் சொல்லுகிறான்:- தானபதீ! சத்தன்வன் செல்வப்பெருக்குடைய ஸ்யமந்தக மணியை உன்னிடத்தில் வைத்தான். அது இப்பொழுது உன்னிடத்தில் இருக்கின்றது. இது எனக்கு முன்னமே தெரியும். ஸத்ராஜிதனுக்குப் பிள்ளை இல்லையாகையால், அவனுடைய பெண் வயிற்றில் பிறந்த பேரன்மார்கள் அவனுக்கு எள்ளும், ஜலமும், பிண்டமும் கொடுத்துக் கடனைத் தீர்த்து, மிகுந்த பணத்தையெல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டியவர்கள். ஆயினும், அந்த மணி உன்னிடத்திலேயே இருக்கட்டும். அது மற்றவர்களால் தரிக்க முடியாது. நீ நல்லொழுக்கமுடையவனாகையால், உன்னிடத்தில் தான் இருக்கவேண்டும். ஆனால், தமையனாகிய பலராமன் மணியை நான் ஒளித்துவிட்டேனென்று நினைக்கிறான். நான் எவ்வளவு சொல்லினும், மணி விஷயத்தில் என்னை நன்றாக நம்பமாட்டேனென்கிறான். 

மஹாபாகனே! (பெரிய தோள்களை உடையவனே!) ஆகையால், உன்னிடத்திலிருக்கின்ற மணியைக் காட்டி, பந்துக்களுக்கு என்னிடத்திலுள்ள ஸந்தேஹம் தெளியும்படி செய்வாயாக. இப்பொழுது உனக்கு ஸ்வர்ணமயமான வேதிகளுடன் (யாக குண்டம்) கூடின யாகங்கள் பலவும் ஓயாமல் நடக்கின்றனவல்லவா? (அது மணியின் மஹிமையே. ஆகையால் என்னிடத்தில் மணி இல்லையென்று சொல்லாமல் அதை எடுத்துக் காண்பிப்பாயாக.)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு நல்வார்த்தைகளால் மனத்தில் உறுத்தும்படி உரைக்கப்பட்ட அக்ரூரன், வஸ்த்ரத்தில் மறைக்கப்பட்டிருப்பதும், ஸூர்யனோடொத்த ஒளியுடையதுமாகிய ஸ்யமந்தக மணியை எடுத்து ஸ்ரீக்ருஷ்ணனிடம் கொடுத்தான். ப்ரபுவாகிய ஸ்ரீக்ருஷ்ணன், அந்த ஸ்யமந்தக மணியை வாங்கிப் பந்துக்களுக்குக் காட்டி, தன் மேல் வந்த பழியைப் போக்கி, தன் கையால் மீளவும் அந்த மணியை அக்ரூரனுக்கே திருப்பிக் கொடுத்துவிட்டான். 

இந்த ஸ்யமந்தக மணியின் உபாக்யானம் (கதை) ஷாட்குண்ய பூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), ஸர்வேச்வரனுமாகிய ஸ்ரீமஹாவிஷ்ணுவின் வீரச்செயலை உட்கொண்டிருக்கின்றது. (அவனுடைய மஹிமை இதில் நன்கு வெளியாகின்றது). இது, சொல்லுகிறவர்கள், கேட்கிறவர்கள், நினைக்கிறவர்கள் ஆகிய இம்மூவர்களுடைய பாபத்தையும் போக்கும்; ஸமஸ்த மங்களங்களையும் விளைக்கும். இத்தகைய இந்த உபாக்யானத்தைக் (கதையைக்) கேட்கிறவன், சொல்லுகிறவன், நினைக்கிறவன் ஆகிய மூவரும் அபகீர்த்தியையும் (பழியையும்), பாபத்தையும் போக்கி, மோக்ஷத்திற்கு ஹேதுவான (காரணமான) சாந்தியைப் பெறுவார்கள். 

ஐம்பத்தேழாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக