திங்கள், 15 பிப்ரவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 274

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – ஐம்பத்தெட்டாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் காளிந்தி முதலிய ஐந்து பேர்களை மணம் புரிதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஒருகால் ஸ்ரீக்ருஷ்ணன், (பாண்டவர்கள் அரக்கு மாளிகையில் எரிக்கப்பட்டார்களென்று கேள்விப்பட்டிருந்தும், த்ருபதனுடைய க்ருஹத்தில் எல்லோர்க்கும் தென்பட்டார்களாகையால், அது பொய்யென்றும், அவர்கள் க்ஷேமமாயிருக்கிறார்கள் என்றும் தெரிந்து கொண்டு) அப்பாண்டவர்களைப் பார்ப்பதற்காக ஸாத்யகி முதலிய யாதவர்களால் சூழப்பட்டு, இந்த்ர ப்ரஸ்தத்திற்குப் போனான். 

ப்ருதையென்கிற குந்தியின் பிள்ளைகளும், வீரர்களுமாகிய அப்பாண்டவர்கள், ஸர்வேச்வரனும், போக மோக்ஷங்களைக் கொடுப்பவனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன் வரக் கண்டு, இந்திரியங்கள், போய் வந்த முக்ய ப்ராணனை (மூச்சுக்காற்றை) எதிர்கொள்வது போல, எல்லோரும் எழுந்து, அவனை எதிர் கொண்டார்கள். அந்தப் பாண்டவர்கள், ப்ரீதியுடன் அந்த ஸ்ரீக்ருஷ்ணனை ஆலிங்கனம் செய்து, அவனுடைய அங்கத்தின் ஸபர்சத்தினால் (உடல் பாகங்கள் பட்டதால்) பாபங்களெல்லாம் தொலையப் பெற்று, அனுராகம் (பரிவு) நிறைந்த புன்னகையோடு கூடின அவன் முகத்தைக் கண்டு ஸந்தோஷம் அடைந்தார்கள். 

ஸ்ரீக்ருஷ்ணன், யுதிஷ்டிரனுக்கும், பீமனுக்கும், பாத வந்தனம் செய்து (திருவடிகளை வணங்கி), அர்ஜுனனை ஆலிங்கனம் செய்து, நகுல, ஸஹதேவர்களால் வந்தனம் செய்யப்பெற்று, சிறந்த ஆஸனத்தில் உட்கார்ந்திருக்கையில், புதிதாக மணம் புரிந்தவளும் நிந்தைக்கு இடமாகாதவளுமாகிய த்ரௌபதி, சிறிது வெட்கத்துடன் மெல்ல மெல்ல வந்து ஸ்ரீக்ருஷ்ணனுக்கு வந்தனம் செய்தாள். அவ்வாறே, ஸாத்யகியும் பார்த்தர்களால் (ப்ருது என்கிற குந்தியின் புதல்வர்களால்) வெகுமதித்து வந்தனம் செய்யப் பெற்று, ஆஸனத்தில் உட்கார்ந்தான். கூட வந்த மற்ற யாதவர்களும், அவ்வாறே பார்த்தர்களால் பூஜிக்கப்பட்டு, ஸ்ரீக்ருஷ்ணனைச் சுற்றி உட்கார்ந்தார்கள். 

ஸ்ரீக்ருஷ்ணன், ப்ருதையிடம் சென்று வந்தனம் செய்து, ஸ்னேஹத்தின் மிகுதியால், கண்ணும் கண்ணீருமாயிருக்கின்ற அவளால் ஆலிங்கனம் செய்து, பந்துக்களின் க்ஷேமமும் நன்கு விசாரிக்கப் பெற்று, தந்தையின் உடன்பிறந்தவளும், நாட்டுப் பெண்ணோடு கூடியவளுமாகிய அவளைத் தானும் க்ஷேமம் விசாரித்தான். 

அந்த ப்ருதை, ப்ரேமத்தின் மிகுதியால் தழதழத்துக் கண்டம் (தொண்டை) தடைபடப் பெற்று, நீர் நிறைந்த கண்களுடன், தனக்கு நேர்ந்த பலவகை வருத்தங்களையும் நினைத்துக்கொண்டு, தன் காட்சி மாத்ரத்தினால் வருத்தங்களையெல்லாம் தீர்க்கவல்லனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணனைப் பார்த்து மொழிந்தாள்.

ப்ருதை சொல்லுகிறாள்:- ஸ்ரீக்ருஷ்ணா! நீ பந்துக்களாகிய எங்களை நினைத்து எப்பொழுது என் ப்ராதாவாகிய (ஸஹோதரனான) அக்ரூரனை எங்களிடம் அனுப்பினையோ, அப்பொழுதே எங்களுக்கு க்ஷேமம் உண்டாயிற்று. அப்பொழுதே நாங்கள் உன்னால் நாதனுடையவர்களாகச் செய்யப்பட்டோம். ஜகத்திற்கெல்லாம் நண்பனும், அந்தராத்மாவுமாகிய உனக்குத் தன்னுடையவனென்றும், பிறனென்றும் பேத (வேற்றுமை) புத்தி கிடையாது. ஆயினும், உன்னை நினைக்கின்ற உன் பக்தர்களுடைய ஹ்ருதயத்தில் இருந்து கொண்டு, ஸர்வ காலமும் அவர்களுடைய வருத்தங்களைப் போக்குகின்றனை.

யுதிஷ்டிரன் சொல்லுகிறான்:- ஜகதீச! (உலக நாயக!) நாங்கள் என்ன புண்யம் செய்தோமோ? எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், யோகேச்வரர்களுக்கும் கூடக் காணமுடியாத நீ சப்தாதி விஷயங்களில் (உலக இன்பங்களில்) ஆழ்ந்த கெடு (கெட்ட) மனமுடைய எங்களுக்குப் புலப்பட்டாயல்லவா?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸ்ரீக்ருஷ்ணன் இவ்வாறு மொழிகின்ற யுதிஷ்டிர மன்னவனால் வேண்டப் பெற்று, (மிகவும் அழகியதான தன்னுருவத்தினால்) இந்த்ர ப்ரஸ்தத்திலுள்ளவர்களின் நேத்ரங்களுக்கு (கண்களுக்கு) மஹாநந்தத்தை (பேரின்பத்தை) விளைத்துக் கொண்டு, மழைக்காலம் நான்கு மாதங்களும், ஸுகமாக அவ்விடத்தில் வஸித்திருந்தான். அப்பொழுது ஒருகால், சத்ரு (எதிரி) வீரர்களை அழிக்குந் தன்மையுள்ள அர்ஜுனன், வானர த்வஜமுடைய (கொடி உடைய) ரதத்தில் ஏறிக் கொண்டு, காண்டீவமென்னும் தனுஸ்ஸையும் (வில்லையும்), அக்ஷயமான (குறையாத) பாணங்கள் அமைந்த அம்புறாத்தூணிகளையும் எடுத்துக் கொண்டு, கவசம் பூண்டு, ஸ்ரீக்ருஷ்ணனுடன் கூடி, விளையாட விரும்பி, ஸர்ப்பங்களும், யானைகளும், துஷ்ட ஜந்துக்களும் (கொடிய பிராணிகளும்), மிருகங்களும் நிறைந்து, ஜனஸஞ்சாரமற்றதுமாகிய (மனித நடமாட்டம் இல்லாத) வனத்திற்குள் நுழைந்தான். 

அவ்வர்ஜூனன், அங்குக் கூருள்ள பாணங்களால் புலிகளையும், பன்றிகளையும், கிடாக்களையும், சரபம், கவயம், கட்கம் என்னும் மிருகங்களையும், ஸாதாரணமான மான்களையும், முயல்களையும், முள்ளம் பன்றிகளையும் அடித்தான். அப்பொழுது, பர்வம் நேர்ந்திருந்தமையால், அக்காலத்தில் செய்ய வேண்டிய வைதிகச் செயலை நிறைவேற்றும் பொருட்டு, அவற்றில் பரிசுத்தமான ம்ருகங்களை ராஜனாகிய யுதிஷ்டிரனிடம் பணியாளர்கள் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். அப்பால், பசி, தாஹங்களால் இளைப்புற்ற அர்ஜுனன், யமுனா நதிக்குச் சென்றான். 

மஹாரதிகர்களான (விற்போரில் திறமை உடையவனாய், 10000 வில்லாளிகளுடன் தனித்து ஒருவனாக எதிர்த்துப் போரிடும் வல்லமை பெற்றவன் மஹாரதன்) க்ருஷ்ணார்ஜுனர்களிருவரும் அங்கு ஸ்னானம் செய்து, நிர்லமான (அழுக்கற்ற) அந்த யமுனையின் ஜலத்தைப் பருகி, அவ்விடத்தில் உலாவிக்கொண்டிருப்பவளும், அழகிய கண்களுடையவளுமாகிய ஒரு கன்னிகையைக் கண்டார்கள். அர்ஜுனன், தன் ஸ்னேஹிதனாகிய ஸ்ரீக்ருஷ்ணனால் அனுப்பப்பட்டுச் சிறந்த நிதம்பம் (புட்டம்) உடையவளும், அழகிய பற்களும், அழகிய முகமும் அமைந்து, மடந்தையர்களில் சிறந்தவளுமாகிய அந்தக் கன்னிகையிடம் சென்று வினவினான்.

அர்ஜுனன் சொல்லுகிறான்:- பெண்ணே! நீ யாவள்? யாருடையவள்? அழகிய இடையின் பின்புறமுடையவளே! நீ எங்கிருந்து இவ்விடம் வந்தாய்? நீ இவ்விடத்தில் என்ன செய்ய விரும்புகின்றாய்? பெண்ணே! நல்லியற்கையுடையவளே! கணவனை விரும்பும் கன்னிகை போல, எனக்குத் தோற்றுகின்றாய். இதை எனக்குச் சொல்வாயாக.

காளிந்தி சொல்லுகிறாள்:- நான் தேவதைகளில் சேர்ந்த ஸூர்யனுடைய புதல்வி. நான் வரிக்கத் தகுந்தவனும், வரங்களைக் கொடுப்பவனுமாகிய ஸ்ரீமஹாவிஷ்ணுவைக் கணவனாகப் பெற விரும்பி, பெரிய தவம் புரிந்திருக்கின்றேன். வீரனே! ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு வாஸஸ்தானமாகிய (இருப்பிடமாகிய) அம்மஹாவிஷ்ணுவைத் தவிர, மற்றவனைப் பதியாக வரிக்க மாட்டேன். அநாதர்களுக்கு (புகல் அற்றவர்களுக்கு) ஆதாரனும், போக மோக்ஷங்களைக் (உலகியல் இன்பங்களையும், மோட்சத்தையும்) கொடுப்பவனும், ஷாட்குண்ய பூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) அம்மஹாவிஷ்ணு, என் விஷயத்தில் ஸந்தோஷம் அடைவானாக (எனக்கு அருள்புரிவானாக.) நான் காளிந்தியென்று பெயர் பெற்றவள். என் தந்தை, எனக்கு இந்த யமுனாஜலத்தில் வாஸம் செய்ய க்ருஹத்தை  நிர்மித்துக் கொடுத்திருக்கிறான். நான், தன் பக்தர்களைக் கைவிடாத மஹானுபாவனாகிய அம்மஹாவிஷ்ணுவின் காட்சி கிடைக்கும் வரையில், இங்கு வஸித்திருப்பேன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அதைக் கேட்ட அவ்வர்ஜுனனும், ஸ்ரீக்ருஷ்ணனிடம் வந்து, அதை அப்படியே மொழிய, அதை முதலிலேயே அறிந்த அம்மஹானுபாவனும், அப்பெண்மணியை ரதத்தில் ஏற்றிக்கொண்டு, தர்மபுத்ரனிடம் வந்தான். 

ஸ்ரீக்ருஷ்ணன், பாண்டவர்களால் வேண்டப் பெற்று, விச்வகர்மாவைக் கொண்டு மிகவும் அற்புதமாயிருப்பதும், அழகியதுமான ஒரு நகரத்தைச் செய்வித்தான். பந்துக்களுக்கு ப்ரியம் செய்ய விரும்பி அவ்விடத்தில் வஸித்துக்கொண்டிருக்கிற அந்த ஸ்ரீக்ருஷ்ணன், காண்டவமென்னும் அரண்யத்தை (காட்டை) அக்னிக்குக் கொடுக்க விரும்பி, அர்ஜுனனுக்கு ஸாரதியாயிருந்தான். 

மன்னவனே! அவ்வக்னி காண்டவ வனத்தினால் திருப்தி அடைந்து, அர்ஜுனனுக்குத் தனுஸ்ஸையும், வெளுத்த குதிரைகளையும், ரதத்தையும், அக்ஷயமான (குறைவற்ற) அம்புறாத் தூணிகளையும், ஆயுதம் பிடித்தவர்கள் அனைவராலும் பிளக்க முடியாத அபேத்ய (பிளக்க முடியாத) கவசத்தையும் கொடுத்தான். அப்பொழுது, அக்னியிடத்தினின்று விடுவிக்கப்பட்ட மயனென்னும் அஸுரன், தன் ஸ்னேஹிதனாகிய அவ்வர்ஜுனனுக்கு அற்புதமான ஒரு ஸபையை உபஹாரமாகக் (பரிசாகக்) கொடுத்தான். துர்யோதனன் அச்சபையில்தான் ஜலத்தைத் தரையென்றும், தரையை ஜலமென்றும், ப்ரமித்தான். 

அப்பால், ஸ்ரீக்ருஷ்ணன் அர்ஜுனனால் அனுமதி கொடுக்கப்பெற்று, நண்பர்களாலும் அனுமோதனம் (அனுமதி) செய்யப்பெற்று, ஸாத்யகி முதலிய யாதவர்களால் சூழப்பட்டு, மீண்டு த்வாரகைக்கு வந்தான். அப்பால், பரம மங்களனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன், ஞாயிறு, திங்கள் முதலிய க்ரஹங்களின் பலமுடையதும், மிகவும் புண்யமான ருதுவும், நக்ஷத்ரமும் அமைந்து மேன்மையுடையதுமாகிய நல்ல முஹூர்த்தத்தில், த்வாரகையிலுள்ள தன் ப்ரஜைகளுக்கு மஹாநந்தத்தை விளைத்துக்கொண்டு, காளிந்தியை மணம் புரிந்தான். 

விந்தனென்றும், அனுவிந்தனென்றும் பெயருடைய அவந்தி மன்னவர்கள், துர்யோதனனுக்கு உட்பட்டு, ஸ்வயம்வரத்தில் ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் மனவிருப்பமுடைய தன் பகினியைத் (ஸஹோதரியைத்) தடுத்தார்கள். ராஜனே! ஸ்ரீக்ருஷ்ணன், தனது தந்தையின் உடன் பிறந்தவளாகிய ராஜாதி தேவியின் புதல்வியும், மித்ரவிந்தையென்னும் பெயருடையவளுமாகிய அப்பெண்மணியை, பல ராஜாக்களும் பார்த்துக் கொண்டிருக்கையில், பலாத்காரமாகப் பறித்துக் கொண்டு போனான். 

கோஸல தேசத்தில் நக்னஜித்தென்னும் பெயருடைய மிகவும் தர்மிஷ்டனாகிய ஒரு மன்னவன் இருந்தான். அவனுக்கு ஸத்யையென்னும் பெயருடைய ஒரு புதல்வி இருந்தாள். அவள் மிகுந்த ஒளியுடையவள். மன்னவனே! அவள் நாக்னஜிதியென்றும் வழங்கி வந்தாள். (அம்மன்னவன் அப்பெண்மணியை மணம் புரிவதற்குப் பந்தயமாக ஏழு வ்ருஷபங்களை (எருதுகளை) வெல்ல வேண்டுமென்று ஏற்படுத்தியிருந்தான்). அவை மிகவும் துஷ்டத்தனமுடையவை. அவை வீரர்களின் நாற்றத்தையும் (வாசனையையும்) கூடப் பொறுக்க மாட்டா; ஒருவராலும் வெல்ல முடியாதவை; கூரான கொம்புடையவை. மன்னவர்கள் அனைவரும் அந்த வ்ருஷபங்களை (எருதுகளை) வெல்ல முடியாமல், அவளை மணம்புரிய முடியாதிருந்தார்கள். 

யாதவர்களுக்கு ப்ரபுவாகிய ஸ்ரீக்ருஷ்ண பகவான், வ்ருஷபங்களை (எருதுகளை) வென்றவனுக்குத் தான் அப்பெண்மணி கிடைப்பாளென்பதைக் கேள்விப்பட்டு, பெரிய ஸைன்யத்தினால் (படையால்) சூழப்பட்டு, கோஸல தேசத்தின் முக்ய பட்டணமாகிய அயோத்யைக்குச் சென்றான். கோஸல தேசாதிபதியாகிய அந்த நக்னஜித்து மன்னவன், ஸ்ரீக்ருஷ்ணனை எதிர்கொண்டு, ஆஸனம் அளித்து மேலான பூஜையினால் பூஜித்து, அவனால் தானும் அபிநந்தனம் செய்யப் பெற்று, இவ்வாறு மொழிந்தான். 

அம்மன்னவனுடைய கன்னிகையாகிய ஸத்யையும், தன் மனத்திற்கினிய வரனும் ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு நாதனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன் வந்திருப்பதைக் கண்டு, “இவனே எனக்குக் கணவனாவானாக. நான் உண்மையில் வ்ரதங்களை அனுஷ்டித்திருப்பேனாயின், என் விருப்பம் விக்னமின்றி (தடையின்றி) நிறைவேறும்படிக்குக் கடவுள் அருள் புரிவானாக” என்று விருப்பமுற்றிருந்தாள். அம்மன்னவன், நன்கு பூஜிக்கப்பட்ட அந்தப் பகவானைக் குறித்து இவ்வாறு மொழிந்தான்.

மன்னவன் சொல்லுகிறான்:- ஓ நாராயணனே! ஜகத்திற்கெல்லாம் நாதனே! ஆத்மாநந்தத்தினால் நிறைவாளனாயிருக்கின்ற உனக்கு, மிகவும் அற்பனாகிய நான் என்ன செய்யப்போகிறேன்? நான் உனக்கு எவ்வித ப்ரியத்தையும் செய்ய வல்லனல்லேன். நான் உனக்குக் கிங்கரன் (சேவகன்). ஆகையால், என்னை ஏவிக் கார்யம் கொள்வாயாக. ப்ரஹ்மதேவனும், ருத்ரனும், மற்றுமுள்ள லோகபாலர்களும், ஸ்ரீமஹாலக்ஷ்மியும் எவனுடைய பாதார விந்தங்களின் பராகத்தைச் (தூளை) சிரத்தினால் தரிக்கின்றார்களோ, எவன் தான் ஏற்படுத்தின தர்ம மர்யாதைகளை அவை அழியுங்காலத்தில் காக்கும் பொருட்டு, லீலையினால் திருவுருவங்களை ஏற்றுக்கொள்கிறானோ, அப்படிப்பட்ட ஸர்வேச்வரனாகிய நீ, என்னால் என்ன பணிவிடை கொண்டு ஸந்தோஷம் அடைவாய்? நிறைவாளனாகிய (அனைத்தும் நிறைவேறப்பெற்ற) உனக்கு ஒருவராலும் ஒன்றும் ஆக வேண்டியது இல்லையாகையால், எதைச் செய்து நான் உனக்கு ஸந்தோஷத்தை விளைப்பேன்?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- குருகுலத்தைக் களிக்கச் செய்யும் குமாரனே! கோஸல மன்னவன் அளித்த ஆஸனத்தில் வீற்றிருக்கின்ற ஸ்ரீக்ருஷ்ண பகவான், மேக கர்ஜனம் போல் கம்பீரமான குரலுடன் அம்மன்னவனைக் குறித்துப் புன்னகையுடன் இவ்வாறு மொழிந்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ராஜனே! தனக்கு ஏற்பட்ட தர்மத்தில் மனவூக்கமுற்றிருக்கின்ற க்ஷத்ரியன், யாசிப்பது நிந்தைக்கு (பழிக்கு) இடமாயிருக்கும். ஆயினும், உன்னுடைய ஸ்னேஹத்தை விரும்பி, உன் கன்னிகையை நான் வேண்டுகிறேன். நாங்கள், பணம் முதலிய பந்தயம் கொடுப்பவர்களல்லோம்.

மன்னவன் சொல்லுகிறான்:- நாதனே! என் கன்னிகைக்கு (பெண்ணிற்கு) இனிய வரன் உன்னைக் காட்டிலும் மேற்பட்டவன் எவன் இருக்கின்றான்? நீ ஸமஸ்த குணங்களுக்கும் முக்யமான ஆதாரமாயிருப்பவன். உன்னுடைய மார்பில் ஸ்ரீமஹாலக்ஷ்மி ஸர்வகாலமும் விடாமல் வஸித்துக் கொண்டிருக்கிறாள். ஆகையால், உன்னைக் காட்டிலும் மேற்பட்ட வரன் எவனுமே இல்லை. 

ஸாத்வதர்ஷப (யாதவ திலகமே)! நான் என் கன்னிகைக்குத் (பெண்ணிற்கு) தகுந்த வரன் கிடைக்க வேண்டுமென்று விரும்பி வரர்களாக வரும் மன்னவர்களின் வீர்யத்தைப் பரீக்ஷிக்கும் பொருட்டு (இந்த வ்ருஷபங்களை (எருதுகளை) எவன் வெல்லுகிறானோ அவனே என் புதல்வியை மணம் புரிய வேண்டுமென்று) ஒரு ஏற்பாடு வைத்துக் கொண்டேன். 

வீரனே! இந்த ஏழு வ்ருஷப எருதுகளும் அடக்கப்பட முடியாதவை; எவர்க்கும் அணுக முடியாதவை. பல ராஜகுமாரர்கள் வந்து, இந்த வ்ருஷபங்களால் அங்கங்களெல்லாம் முறிக்கப் பெற்று, தோல்வியடைந்து போனார்கள். எவன் இந்த வ்ருஷபங்களை அடக்குகிறானோ, அவனுக்கே இக்கன்னிகை (பெண்). ஆகையால், இந்த வ்ருஷபங்களை நீ அடக்குவாயாயின், நீயே என் புதல்விக்கு இஷ்டமான வரன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸமர்த்தனாகிய (திறமைசாலியான) ஸ்ரீக்ருஷ்ணன் இவ்வாறு அம்மன்னவனுடைய ஏற்பாட்டைக் கேட்டு, அரையில் (இடுப்பில்) உத்தரீயத்தை (மேல் துணியை) இழுத்துக் கட்டிக் கொண்டு, தன்னை ஏழு பேர்களாகச் செய்து, அந்த ஏழு எருதுகளையும் அவலீலையாகவே (விளையாட்டாகவே) அடக்கினான். ஸ்ரீக்ருஷ்ணன் அவற்றின் தந்தங்களை முறித்து, பலம் ஒடுங்கப்பெற்ற அந்த ஏழு வ்ருஷபங்களையும் (காளைகளையும்) கயிறுகளால் கட்டி, சிறுவன் மரத்தில் செய்த வ்ருஷபங்களைக் (எருதுகளைக்) கட்டியிழுப்பது போல இழுத்தான். அப்பால், அந்த நக்னஜித்து மன்னவன் மிகவும் ஸந்தோஷம் அடைந்து, வியப்புற்று, தன் புதல்வியை ஸ்ரீக்ருஷ்ணனுக்குக் கொடுத்தான். 

திறமையுள்ள அந்த ஸ்ரீக்ருஷ்ணனும் தனக்குத் தகுதியாகிய அப்பெண்மணியை விதிப்படி அங்கீகரித்தான்: ராஜ பத்னிகள், தங்கள் புதல்விக்கு ஸ்ரீக்ருஷ்ணனைப் பதியாகப் பெற்று, மிகவும் ஆநந்தம் அடைந்தார்கள். அப்பொழுது பெரிய உத்ஸவம் உண்டாயிற்று. சங்கம், பேரி, ஆனகம் முதலிய வாத்யங்கள் முழங்கின. கீதங்களோடு மற்றும் பல வாத்யங்களும் முழங்கின. ப்ராஹ்மணர்கள் ஓயாமல் ஆசீர்வாத கோஷங்களைச் செய்தார்கள். ஆண்களும், பெண்களும் மிகுதியும் ஸந்தோஷம் அடைந்து, சிறந்த ஆடைகளையும், பூமாலைகளையும், அணிந்திருந்தார்கள். நக்னஜித்து மன்னவன், தன் புதல்விக்குப் பரிசிலாகப் பதினாயிரம் பசுக்களையும், கழுத்தில் பொன்னலங்காரம் அணிந்து சிறந்த ஆடைகளை உடுத்தித் திகழ்கின்றவர்களும் யௌவனப் பருவமுடையவர்களுமாகிய மூவாயிரம் தாஸிகளையும் (பணிப்பெண்களையும்), ஒன்பதினாயிரம் யானைகளையும், யானையைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகமான ரதங்களையும், ரதத்தைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகமான குதிரைகளையும், குதிரையைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகமான காலாட்களையும் கொடுத்தான். 

அந்தக் கோஸல தேசத்து அரசன் ஸ்னேஹத்தினால் மனம் உருகப்பெற்று, பெரிய ஸைன்யத்தினால் (படையினால்) சூழப்பட்ட தன் புதல்வியும், ஸ்ரீக்ருஷ்ணனுமாகிய தம்பதிகளை ரதத்தில் ஏற்றி அனுப்பினான். யாதவர்களாலும், வ்ருஷப எருதுகளாலும், முன்பு பல தடவைகளில் வீர்யம் அழியப்பெற்ற பல மன்னவர்களும், ஸ்ரீக்ருஷ்ணன் இவ்வாறு நாக்னஜிதியை மணம் புரிந்து ஊருக்குப் போகிறானென்று கேள்விப்பட்டு, கன்னிகையைக் கொண்டு போகின்ற அந்த ஸ்ரீக்ருஷ்ணனை வழியில் தடுத்தார்கள். காண்டீவமென்னும் தனுஸ்ஸையுடைய அர்ஜுனன், அப்பொழுது தன் பந்துவாகிய ஸ்ரீக்ருஷ்ணன் முதலியவர்களுக்கு ப்ரியம் செய்ய முயன்று, பாணங்களை நிரைநிரையாகத் தொடுத்து விடுகின்ற அம்மன்னவர்களை, ஸிம்ஹம் அற்ப ம்ருகங்களைத் துரத்துவது போலத் துரத்தினான். மஹானுபாவனும், யாதவச்ரேஷ்டனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன், கோஸலன் பரிசாகக் கொடுத்த ஸைன்யம் (படை) முதலியவற்றையெல்லாம் பெற்றுக்கொண்டு, த்வாரகையில் சேர்ந்த நாக்னஜிதியுடன் க்ரீடித்துக்கொண்டு ஸுகமாயிருந்தான். 

கோஸல தேசத்தரசனுக்கு, தன் தந்தையின் உடன் பிறந்தவளாகிய ஸ்ருதகீர்த்தியிடத்தில் பத்ரையென்று ஒருபுதல்வி பிறந்திருந்தாள். அவளை அவளுடைய உடன் பிறந்தவர்களாகிய ஸந்தர்த்தனன் முதலியவர்கள் ஸ்ரீக்ருஷ்ணனுக்குக் கொடுக்க, அவனும் அவளை மணம் புரிந்தான். 

மத்ரதேசத்தரசனுக்கு லக்ஷ்மணையென்று ஒரு புதல்வி இருந்தாள். அவள், ஸாமுத்ரிக லக்ஷணங்களெல்லாம் (அழகிய அங்க அடையாளங்கள்) அமைந்தவள். முன்பு, கருடன் அம்ருதத்தைப் பறித்துக்கொண்டு வந்தாற்போல், ஸ்ரீக்ருஷ்ணன் அவளை ஸ்வயம்வரத்தில் (திருமணப் பருவம் வந்த ஒரு பெண் தன் கணவனைத் தானே தேர்ந்தெடுக்கும் வைபவத்தில்) பறித்துக் கொண்டு வந்தான்.

 ஸ்ரீக்ருஷ்ணனுக்கு இத்தகைய மற்றும் பலவாயிரம் பார்யைகளும் (மனைவிகளும்) இருந்தார்கள். அவர்கள், நரகாஸுரனைக் கொன்று, அவனுடைய அந்தப்புரத்தினின்று ஸ்ரீக்ருஷ்ணனால் கொண்டு வரப்பட்டவர்கள். 

ஏழு காளைகளை அடக்கிய வரலாறு

கண்ணனின் தாய்மாமனான கும்பனுக்கு நப்பின்னை என்றொரு மகள் இருந்தாள். தன்னிடம் உள்ள ஏழு காளைகளை யார் அடக்குகிறார்களோ, அவர்களுக்கே தன் மகளை மணம்முடித்துத் தரப்போவதாகக் கும்பன் அறிவித்தான்.

“விடையேழ் வென்று மென்தோள் ஆய்ச்சிக்கு அன்பனாய் 

நடையால் நின்ற மருதம் சாய்த்த நாதன் ஊர் 

பெடையோடு அன்னம் பெய்வளையார் தம் பின்சென்று 

நடையோடு இயலி நாணி ஒளிக்கும் நறையூரே!”

என்று திருமங்கையாழ்வார் பாடியபடி, கண்ணன் ஒருவனே அந்த ஏழு காளைகளையும் அடக்கி நப்பின்னையை மணந்து கொண்டான். 

இங்கே நப்பின்னை ஜீவாத்மா, கண்ணன் பரமாத்மா. ஜீவாத்மாவின் ஐம்புலன்கள், மனம், உடல் ஆகிய ஏழும் ஏழு காளைகள். இந்த ஏழு காளைகளும் ஜீவாத்மா பரமாத்மாவை அடைய ஒட்டாமல் தடுக்கின்றன. பரமாத்மாவான கண்ணன், ஐம்புலன்கள், மனம், உடல் ஆகிய ஏழு காளைகளையும் அடக்கி, ஜீவாத்மா தன்னை அடையும்படி அருள்புரிகிறார் என்னும் தத்துவத்தை இந்தச் சரித்திரம் உணர்த்துகிறது.

ஐம்பத்தெட்டாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக