ஶ்ரீமத் பாகவதம் - 275

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – ஐம்பத்தொன்பதாவது அத்தியாயம்

(நரகாஸுர வதத்தின் வ்ருத்தாந்தம்)

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- எவன் உலகத்திலுள்ள ராஜர்களை எல்லாம் வென்று, அந்தந்த ராஜ கன்னிகைகளைப் பறித்துக் கொண்டு வந்தானோ, அப்படிப்பட்ட நரகாஸுரனை, ஸ்ரீக்ருஷ்ணன் எப்படி வதித்தான்? சார்ங்கமென்னும் வில்லைத் தரித்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய பராக்ரமத்தை வெளியிடுவதாகிய இந்த நரகாஸுர வதத்தை எனக்கு விவரித்துச் சொல்வீராக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- நரகாஸுரன், வருணனுடைய சத்ரத்தையும் (அஸாதாரணமான குடையையும்), இந்த்ரனுடைய மாதாவாகிய அதிதியின் குண்டலங்களையும், மேரு பர்வதத்திலுள்ள மணிபர்வதமென்கிற இந்த்ரனுடைய ஸ்தான விசேஷத்தையும், பறித்துக் கொண்டு போனான். (இந்தரன் லோகபாலர்களில் முக்யனாகையால், வருணனுக்கு நேர்ந்த பரிபவத்தையும் (அவமானத்தையும்) தன்னுடையதாகவே நினைத்தான்). இவ்வாறு பெளமனென்னும் நரகனால் பரிபவிக்கப்பட்ட (அவமானப்படுத்தப்பட்ட) தேவேந்திரன், த்வாரகைக்கு வந்து, அங்கு ஸத்யபாமையின் க்ருஹத்தில் இருக்கின்ற ஸ்ரீக்ருஷ்ணனுக்கு, பெளமன் செய்த சேஷ்டையை (செயலை) விண்ணப்பம் செய்தான். ஸ்ரீக்ருஷ்ணனும், பார்யையாகிய (மனைவியாகிய) ஸத்யபாமையுடன் கருடன் மேல் ஏறிக்கொண்டு, கிரி துர்க்கங்களாலும் (மலை அரண்களாலும்), சஸ்த்ர துர்க்கங்களாலும் (ஆயுத அரண்களாலும்), ஜலதுர்க்கம் (நீர் அரணாலும்), அக்னி துர்க்கம் (நெருப்பு அரணாலும்), வாயு துர்க்கம் (காற்று அரணாலும்) ஆகிய மற்றும் பல துர்க்கங்களாலும் (அரண்களாலும்) நுழைய முடியாதிருப்பதும், பயங்கரமாயிருப்பவைகளும், உறுதியுள்ளவைகளுமாகிய, அனேகமாயிரம் முரபாசங்களால் (முரன் என்கிற அசுரனின் திடமான வலைகளால்) நாற்புறத்திலும் சூழப்பட்டிருப்பதுமாகிய ப்ராக்ஜ்யோதிஷபுரத்திற்குப் போனான்.

அந்த ஸ்ரீக்ருஷ்ணன், கிரி (மலை) துர்க்கங்களைக் (அரண்களை) கதையினாலும், சஸ்த்ர (ஆயுத) துர்க்கங்களைப் (அரண்களை) பாணங்களாலும் பிளந்தான். அக்னி (நெருப்பு) துர்க்கம் (அரண்), ஜல (நீர்) துர்க்கம் (அரண்), வாயு (காற்று) துர்க்கம் (அரண்) இவைகளைச் சக்ரத்தினால் அழித்தான். முரபாசங்களைக் (முரன் என்கிற அசுரனின் திடமான வலைகளை) கத்தியினால் சேதித்தான் (வெட்டினான்). மன உறுதியுடைய முரன் முதலிய வீரர்களின் ஹ்ருதயங்களையும் (இதயங்களையும்), யந்த்ரங்களையும் (இயந்திரங்களையும்) சங்கநாதத்தினால் பிளந்தான். கதையைத் தரித்திருக்கின்ற அந்தப் பகவான், பெரிய கதையை விடுத்து, அப்பட்டணத்தின் கோட்டையைப் பிளந்தான். 

ஜலத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த ஐந்தலையுடைய முரனென்னும் அஸுரன், ப்ரளய காலத்திலுண்டாகும் இடி போல் பயங்கரமாயிருக்கிற பாஞ்சஜன்யத்தின் (பகவானிடம் இருக்கும் சங்கு) த்வனியைக் (ஒலியைக்) கேட்டு, ஜலத்தினின்று எழுந்திருந்தான். ப்ரளய காலத்து ஸூர்யனோடொத்த ஒளியுடையவனும், பொறுக்க முடியாதவனும், கண்ணெடுத்துப் பார்க்க முடியாதவனுமாகிய அந்த முராஸுரன், த்ரிசூலத்தை ஏந்திக் கொண்டு, ஐந்து முகங்களால் மூன்று லோகங்களையும் விழுங்குபவன் போன்று, ஸர்ப்பம் கருடனை எதிர்ப்பது போல, கருட வாஹனனாகிய (கருடனை வாகனமாக உடைய) ஸ்ரீக்ருஷ்ணனை எதிர்த்து வந்தான். 

அவ்வஸுரன், த்ரிசூலத்தைப் பலமுள்ள அளவும் சுழற்றி, கருடன் மேல் எறிந்து, ஐந்து முகங்களாலும் ஸிம்ஹநாதம் (சிங்க கர்ஜனை) செய்தான். பெரிதாயிருக்கின்ற அந்த ஸிம்ஹநாதம் (சிங்க கர்ஜனை), பூலோகத்தையும், அந்தரிக்ஷ (பூமிக்கும் ஆகாசத்திற்கும் இடைப்பட்ட) லோகத்தையும், அந்த லோகத்திற்கு மேலுள்ள ஆகாசத்தையும், ஸமஸ்த திசைகளையும், ப்ராணிகளின் காது ரந்தரங்களையும் (காது ஓட்டைகளையும்) நிறைத்து, ப்ரஹ்மாண்டம் (14 உலகம் கொண்ட அண்டம்) முழுவதும் நிரம்பி விட்டது. ஸ்ரீக்ருஷ்ணன், கருடன் மேல் வருகின்ற அந்த த்ரிசூலத்தை, பலத்தினால் இரண்டு பாணங்களை விடுத்து, மூன்று துண்டங்களாகச் சேதித்தான் (வெட்டினான்); அந்த முரனையும் முகங்களில் பாணங்களால் அடித்தான். அந்த முரனும் கோபமுற்று, ஸ்ரீக்ருஷ்ணன் மேல் கதையை ப்ரயோகித்தான். ஸ்ரீக்ருஷ்ணன் தன் மேல் வருகின்ற அந்தக் கதையை, தன் கதையால் ஆயிரம் துண்டங்களாகும்படி துண்டித்து விடுகையில், அவ்வஸுரன் புஜங்களை உயரத் தூக்கிக் கொண்டு, ஸ்ரீக்ருஷ்ணன்மேல் எதிர்த்து வந்தான். 

ஸ்ரீக்ருஷ்ணனும், அவ்வாறு தன்னை எதிர்த்து வருகின்ற அம்முராஸுரனுடைய தலைகளைச் சக்ராயுதத்தினால் அறுத்து விட்டான். தலையறுப்புண்ட அவ்வஸுரன், ப்ராணன்களை இழந்து, இந்திரன் ப்ரயோகித்த வஜ்ராயுதத்தினால் சிகரங்கள் அறுப்புண்ட பர்வதம் (மலை) போல, ஜலத்தில் விழுந்தான். அந்த முரனுக்கு ஏழு பிள்ளைகள். அவர்கள், தாம்ரன், அந்தரிக்ஷன், ச்ரவணன், விபாவஸு, வஸு, நபஸ்வான், அருணன் என்னும் பெயருடையவர்கள். அவர்கள், தந்தையின் வதத்திற்கு வருந்தி, அதற்கு ப்ரதீகாரம் செய்ய (பழிவாங்க) விரும்பி, கோபாவேசமுற்று, பெளமனால் அனுப்பப்பட்டு, ஆயுதங்களை ஏந்தி, பீடனென்னும் ஸேனாபதியை முன்னிட்டுக் கொண்டு, யுத்தத்திற்குப் புறப்பட்டார்கள். 

வீரர்களாகிய அந்தத் தாம்ரன் முதலியவர்கள் வந்து, கோபத்தினால் ஸ்ரீக்ருஷ்ணன் மேல் பாணங்களையும், கத்திகளையும், கதைகளையும், சக்திகளையும், இரும்புத்தடிகளையும், சூலங்களையும் ப்ரயோகித்தார்கள். வீணாகாத வீர்யமுடைய ஸ்ரீக்ருஷ்ணன், அந்தப் பாணம் முதலிய ஆயுதங்களின் ஸமூஹத்தை, தன் பாணங்களால் எள்ளளவு துண்டங்களாகத் துண்டித்து விட்டான். பீடனை முன்னிட்டுக் கொண்டு வந்த தாம்ரன் முதலிய அந்த முரனின் புத்ரர்களையும், தலை, துடை, புஜம் (கை), கால், தேஹம் (உடல்) இவை அறுப்புண்டவர்களாகச் செய்து, யமன் வீட்டிற்கு அனுப்பினான். 

அவ்வாறு தன்னுடைய ஸேனாதிபதிகள் ஸ்ரீக்ருஷ்ணனுடைய சக்ராயுதத்தினாலும், பாணங்களாலும், முடிக்கப்பட்டுத் தள்ளுண்டிருக்கக் கண்டு, நரகாஸுரன் மதம் பெருகப் பெற்றவைகளும், ஸமுத்ரத்தினிடைத் தீவுகளில் உண்டானவைகளுமாகிய யானைகளுடன் கூடி, ஒருவராலும் எதிர்க்க முடியாதவனாகிப் புறப்பட்டான். அவன், ஸூர்யன் மேல் மின்னலோடு கூடிய மேகம் இருப்பது போல, பார்யையுடன் (மனைவியுடன்) கருடன் மேல் வீற்றிருக்கின்ற ஸ்ரீக்ருஷ்ணனைக் கண்டு, அவன்மேல் சதக்னியென்னும் சக்தியாயுதத்தை ப்ரயோகித்தான். அவனுடன் வந்த மற்ற வீரர்களும், தத்தம் ஆயுதங்களை ஒரே தடவையில் அந்த ஸ்ரீக்ருஷ்ணன் மேல் ப்ரயோகித்தார்கள். 

மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், அந்த க்ஷணமே விசித்ரமான இறகுகள் கட்டப் பெற்ற கூருள்ள பாணங்களால் அந்த வீரர்களின் புஜங்களையும், துடைகளையும், தலைகளையும், கால்களையும் அறுத்து, குதிரைகளையும், யானைகளையும் முடித்து, அந்நரகாஸுரனுடைய ஸைன்யத்தை (படையை) எல்லாம் பாழ் செய்தான். 

குருகுலாலங்காரனே! சிறகுகளால் யானைகளை வதிக்கின்ற கருடன் மேல் வீற்றிருக்கின்ற பகவான், அந்த வீரர்கள் ப்ரயோகித்த ஆயுதங்கள் தன் மேல் வருவதற்கு முன்னமே அந்த ஸைன்யத்தை (படையை) எல்லாம் வதித்து, அப்பால் அந்த ஆயுதங்களை ஒவ்வொன்றையும் மும்மூன்று பாணங்களால் அறுத்துத் தள்ளினான். யானைகள் அனைத்தும், கருடனால் மூக்காலும், இறகுகளாலும், நகங்களாலும் ஹிம்ஸிக்கப்பட்டு (தாக்கப்பட்டு) வருந்தி, பட்டணத்திற்கே திரும்பிப் போயின. பிறகு, நரகாஸுரன் ஒருவன் மாத்ரமே யுத்த பூமியில் இருந்து யுத்தம்செய்தான். 

அந்த நரகன், தன் பலமெல்லாம் கருடனால் பீடிக்கப்பட்டு வருந்தி ஓடுவதைக் கண்டு, வஜ்ராயுதத்தையும் தடுத்த மிகுந்த உறுதியுள்ள சக்தியாயுதத்தினால் அந்தக் கருடனை அடித்தான். கருடன், அந்தச் சக்தியினால் அடிக்கப்பட்டுப் பூமாலையால் அடிக்கப்பட்ட யானை போலச் சிறிதும் சலிக்காதிருந்தான். நரகன், தன் முயற்சி வீணானதைக் கண்டு, ஸ்ரீக்ருஷ்ணனை அடிக்கச் சூலாயுதத்தை எடுத்தான். அந்த நரகன், அச்சூலத்தை ப்ரயோகிப்பதற்கு முன்னமே, கத்தியின் நுனி போன்ற நுனியுடைய சக்ராயுதத்தினால் யானையின் மேலிருக்கின்ற அவ்வஸுரனுடைய தலையை அறுத்தான். குண்டலங்களோடு கூடியதும், அழகிய கிரீடத்தினால் அலங்கரிக்கப்பட்டதுமாகிய அந்நரகனுடைய சிரஸ்ஸு (தலை) ஜ்வலித்துக் கொண்டு பூமியில் விழுந்தது. அதைக் கண்டு, நரகனைச் சேர்ந்தவர்கள் “ஆ! ஆ!” என்று முறையிட்டார்கள். ரிஷிகள், நல்லது, நல்லதென்றார்கள். தேவதைகள், ஸ்ரீக்ருஷ்ணன் மேல் புஷ்பங்களை இறைத்து, அவனைத் துதித்தார்கள். 

அப்பால், நரகனுடைய மாதாவாகிய பூமிதேவி, உருக்கி அழுக்கெடுத்த பொன்னில் இழைக்கப்பட்ட ரத்னங்களால் ஜ்வலித்துக்கொண்டிருக்கிற குண்டலங்களையும், வைஜயந்தியென்னும் வனமாலையையும், வருணனுடைய குடையையும், மஹாமணியையும் கொண்டு வந்து, ஸ்ரீக்ருஷ்ணனிடம் கொடுத்தாள். ராஜனே! அப்பூமிதேவி, தேவர்க்கும் தேவராயிருக்கத் தகுந்த மேன்மையுடைய ப்ரஹ்மாதிகளால் பூஜிக்கப்பட்டவனும், ஜகதீச்வரனுமாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணனை வணங்கி, கைகளைக் குவித்துக் கொண்டு, பக்தியினால் வணக்கமுற்ற மதியுடன் (புத்தியுடன்), ஸ்தோத்ரம் செய்தாள்.

பூமிதேவி சொல்லுகிறாள்:– தேவ தேவர்களான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் நியாமகனே (நியமிப்பவனே)! சங்க, சக்ர, கதாதாரனே! (சங்கம் சக்ரம் கதை என்னும் ஆயுதங்களை அணிந்திருப்பவனே!) உனக்கு நமஸ்காரம். பரமாத்மனே! பக்தர்களின் விருப்பங்களுக்குத் தகுந்தபடி திருவுருவங்களை ஏற்றுக்கொள்கின்ற உனக்கு நமஸ்காரம். தாமரை உந்தியனாகிய (தாமரை போன்ற தொப்புள் உடைய) உனக்கு நமஸ்காரம். தாமரை மலர்மாலை அணிந்த உனக்கு நமஸ்காரம். தாமரைக் கண்ணனாகிய உனக்கு நமஸ்காரம். தாமரைப் பாதங்களையுடைய உனக்கு நமஸ்காரம். ஷாட்குண்ய பூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), ஆதிகாரணனும் (முழு முதல் காரணனும்) வஸுதேவனுக்குப் பிள்ளையாகப் பிறந்தும், மனு முதலிய புருஷர்களிடத்தில் ஆவேசித்தும், ஸமஸ்த ஜகத்திற்கும் அந்தர்யாமியாயிருந்தும், ஜகத்தைப் பாதுகாப்பவனும், ப்ரளய தசையில் தனியனாகி ஜ்ஞானாநந்தமயனான தன்னைத் தானே அனுபவித்துக் கொண்டு மஹாநந்த பூர்ணனுமாகிய, உனக்கு நமஸ்காரம். இந்த ப்ரபஞ்சத்தையெல்லாம் நீயே படைத்தாய். ஸ்ருஷ்டிக்கு (படைப்புக்கு) முன்பு, ஸூக்ஷ்ம (பெயர், உருவம் அற்ற) சேதனா சேதனங்களைச் (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைச்) சரீரமாகக் கொண்டிருந்த நீ, ஸ்தூல (பெயர் மற்றும் உருவத்துடன் கூடிய) சேதனாசேதன ரூபமான (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக் கொண்ட) இந்த ப்ரபஞ்சமாக (உலகமாக) விரிந்தாய். (இந்த ப்ரபஞ்சத்திற்கு (உலகத்திற்கு) உபாதான காரணம் (மண் குடத்திற்கு மண் போல material cause) நீயே. நிமித்த காரணமும் (மண் குடத்திற்கு குயவன் போல efficient causeம் நீயே). ஆயினும், அந்த ப்ரபஞ்சத்தின் (உலகத்தின்) பிறவி முதலிய விகாரங்கள் (மாற்றங்கள்) எவையும் தீண்டப் பெறாமல் நீ பரிசுத்தனாயிருப்பவன். பிறவி முதலிய விகாரங்களெல்லாம் (மாற்றங்கள் எல்லாம்) உன் சரீரங்களாகிய சேதனா சேதனங்களைச் (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைச்) சேர்ந்தவைகளேயன்றி உனக்குக் கிடையாது. 

நீ அளவற்ற சக்திகளுடையவன். அந்தச் சக்திகள் உனக்கே அஸாதாரணங்களன்றி அவை மற்றெவர்க்கும் கிடையாது. நீ ஸ்வரூபத்தினாலும், குணங்களாலும் அளவற்றவன். அத்தன்மை எப்படி உன்னொருவனுக்கே அஸாதாரணமோ, அப்படியே உன் சக்தி முதலியவைகளும் உனக்கே அஸாதாரணமாயிருப்பவை. மேன்மையும், தாழ்மையுமான பலவகைச் சரீரங்களையுடைய ஸமஸ்த ஜீவாத்மாக்களுக்கும் அந்தராத்மாவாயிருப்பவனே! அசேதனத்திற்குள் (அறிவற்ற ஜடப்பொருட்களுக்குள்) புகுந்து, அதைத் தரித்துக்கொண்டிருப்பவனே! பரமாத்மனே! உனக்கு நமஸ்காரம். 

ப்ரபூ! நீ ஸ்ரூஷ்டிக்க (படைக்க) விரும்பி ரஜோ குணத்தை அதிகமாக ஏற்றுக்கொள்கின்றாய் (ரஜோகுணம் தலையெடுக்கப்பெற்ற நான்முகனென்னும் தேஹத்தில் ப்ரவேசித்து, ப்ரபஞ்சத்தின் (உலகத்தின்) ஸ்ருஷ்டியை (படைப்பை) நடத்துகின்றாய்.) ப்ரபஞ்சத்தை (உலகத்தை) ஸம்ஹரிக்கும்பொருட்டு, தமோ குணத்தை முக்யமாக ஏற்றுக் கொள்கின்றாய் (தமோகுணம் தலையெடுக்கப்பெற்ற ருத்ரன், அக்னி முதலியவர்களைச் சரீரமாகக்கொண்டு ப்ரபஞ்சத்தின் ஸம்ஹாரத்தை நடத்துகின்றாய்.) 

ஜகத்பதீ! ப்ரபஞ்சத்தைப் (உலகத்தைப்) பாதுகாக்கும் பொருட்டு, ஸத்வ குணத்தை முக்யமாக ஏற்றுக் கொள்கின்றாய். (ஸத்வகுணம் தலையெடுக்கப்பெற்ற மனு முதலியவர்களைச் சரீரமாகக் கொண்டு, ப்ரபஞ்சத்தைப் (உலகத்தைப்) பாதுகாக்கின்றாய்.) ஜீவாத்மாக்களைச் சரீரமாகக் கொண்டு, அவர் மூலமாய் ஸ்ருஷ்டி (படைத்தல்), ஸம்ஹாரங்களை (அழித்தலை) நடத்துவது போலவே, ஸ்திதியையும் (காத்தலையும்) நடத்துகிறாயென்பதில்லை. 

ஜீவாத்மாக்களைச் சரீரமாகக் கொண்டு மறைந்திருக்கையின்றித் தானே சுத்த ஸத்வமயமான திருவுருவங்ககளைக் கொண்டு, ஸ்திதியை (காத்தலை) நேரிலும் நடத்துகின்றாய். காலம், ப்ரக்ருதி, புருஷன் இவையெல்லாம் நீயே. (நீ இவற்றைச் சரீரமாகக்கொண்டு இவையெல்லாம் நீயே என்னும்படி அமைந்திருக்கின்றாய்.) நீ இவற்றைக் காட்டிலும் வேறுபட்டு விலக்ஷணமாய் (வேறாய்) இருக்கின்றாய். பூமியாகிய நான், ஜலம், அக்னி முதலிய தேஜஸ், வாயு, ஆகாசம், தன்மாத்ரங்கள் (மஹாபூதங்கள் உண்டாவதற்கு முந்தய நுட்பமான நிலை), இந்த்ரியங்களின் அதிஷ்டான (ஆதாரமான) தேவதைகள், மனம், ஜ்ஞானேந்த்ரிய, கர்மேந்திரியங்கள், மஹத்து, அஹங்காரம், ஜீவன் ஆகிய ஜங்கம (அசையும்), ஸ்தாவர (அசையாத) ரூபமான ஜகத்து (உலகம்) முழுவதும், ப்ரக்ருதி (அசேதனத்தின் மூலமான மூலப்ரக்ருதி), புருஷ (ஜீவாத்மாக்கள்), காலங்களைச் சரீரமாகவுடையவனும், இணையெதிரில்லாதவனுமாகிய உன்னிடத்திலேயே இருக்கின்றது. (மண்ணில் குடம் இருப்பது போல, இந்த ஜகத்தெல்லாம் உன்னிடத்தில் இருக்கின்றது. ஆகையால், மண்ணே குடமாயிருப்பது போல, இந்த ஜகத்தெல்லாம் நீயே.) 

பகவானே! இந்தப் பூமி முதலியவற்றை ஸ்வதந்தர (தன் விருப்பப்படி செயல்பட வல்ல) வஸ்துக்களென்று நினைப்பது ப்ரமமே (மனக்கலக்கமே). மற்றும், இவை தேஹங்களாகப் பரிணமித்து, ஜீவனென்னும் அபிமானத்தை விளைக்கின்றனவாகையால், ப்ரமமென்று (மனக்கலக்கம் என்று) கூறப்படுகின்றன. நாதனே! இவன் பகதத்தனென்னும் பெயருடையவன்; அந்த நரகாஸுரனுடைய புதல்வன். தன்னையே சரணம் அடைந்தவர்களின் வருத்தங்களைப் போக்கும் தன்மையனே! இவன், பயந்து உன் பாதார விந்தங்களைச் சரணம் அடைந்தான். இவனைப் பாதுகாப்பாயாக. ஸமஸ்த அசுபங்களையும் (தீமைகளையும்) போக்கவல்ல உன் தாமரைக் கையை இவன் தலை மேல் வைப்பாயாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பக்தியுடன் வணக்கமுற்றிருக்கின்ற பூமிதேவியால் இனிய உரைகளை மொழிந்து இவ்வாறு பூஜிக்கப்பட்ட ஸ்ரீக்ருஷ்ண பகவான், அவனுக்கு அபயம் கொடுத்து, ஸமஸ்த ஸம்ருத்திகளும் (வளங்களும்) அமைந்திருக்கப் பெற்ற பௌமனுடைய க்ருஹத்திற்குள் ப்ரவேசித்தான். அங்கு, நரகாஸுரன் அரசர்களிடத்தினின்று பராக்ரமித்துக் (அபகரித்துக்) கொண்டு வந்த பதினாறாயிரம் பெண்மணிகளைக் கண்டான். அப்பெண்மணிகள், விரும்பி வரிக்கத் தகுந்த குணமுடையவர்களில் சிறந்தவனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன், அவ்விடம் வந்திருக்கக் கண்டு மோஹித்து (மயங்கி), “நம்முடைய பாக்யம் இவனை நமக்கு ப்ரியமுள்ள கணவனாகக் கொண்டு வந்து விட்டது” என்று நினைத்து, மனத்தினால் அவனையே தங்களுக்குக் கணவனாக வரித்தார்கள். 

அம்மடந்தையர்கள் அனைவரும், “இந்த ஸ்ரீக்ருஷ்ணன் எனக்குப் பதியாவானாக. கடவுள் அதை அனுமோதனம் செய்வாராக (அங்கீகரிப்பாராக)” என்னும் பெரிய விருப்பத்துடன் தனித்தனியே ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் மணம் கொண்டார்கள். ஸ்ரீக்ருஷ்ணன், அவர்களுக்கு ஸ்னானம் செய்வித்து, அழுக்கின்றி நிர்மலமாயிருக்கின்ற ஆடை ஆபரணம் முதலியவைகளால் அலங்காரமும் செய்வித்து, சிவிகைகளில் (பல்லக்குகளில்) ஏற்றி, த்வாரகைக்கு அனுப்பினான். விலையுயர்ந்த ரதங்களையும், அளவற்ற பொக்கிஷத்தையும், நான்கு தந்தங்கள் அமைந்து மிகுந்த பலமுடையவைகளும், ஐராவதமென்னும் திக் கஜத்தின் (திசையைக் காக்கும் யானையின்) வம்சத்தில் பிறந்தவைகளும், வெண்மை நிறமுடையவைகளுமாகிய அறுபத்து நான்கு யானைகளையும், த்வாரகைக்கு அனுப்பினான். 

அந்த ஸ்ரீக்ருஷ்ணன், பார்யையுடன் (மனைவியுடன்) ஸ்வர்க்கத்திற்குச் சென்று, குண்டலங்களை அதிதியிடம் கொடுத்து, தேவேந்திரனாலும், பெருமையுள்ள இந்த்ராணியாலும் பூஜிக்கப்பட்டான். அப்பால், தன் பார்யையினால் (மனைவியினால்) தூண்டப்பட்டு, பாரிஜாத வ்ருக்ஷத்தைப் (மரத்தை) பிடுங்கிக் கருடன் மேல் வைத்துக்கொண்டு புறப்படுகையில், அதைக் கொண்டு போகலாகாதென்று தடுத்து யுத்தத்திற்கு வந்த இந்திரன் முதலிய தேவதைகளை வென்று, பாரிஜாத வ்ருக்ஷத்தைப் (மரத்தை) பட்டணம் கொண்டு சேர்த்தான். அந்தப் பாரிஜாத வ்ருக்ஷம் (மரம்), ஸத்யபாமையின் க்ருஹத்தினுடைய உத்யான வனத்தில் வைக்கப்பட்டு, அவ்வனத்திற்கு மிகவும் சோபையை விளைத்துக் கொண்டிருந்தது. அதன் பரிமளத்தையும் (வாசனையையும்), மகரந்தத்தையும் (தேனையும்) விரும்பி, ஸ்வர்க்கத்தினின்று வண்டுகள் அதைத் தொடர்ந்து வந்தன. 

இந்த்ரன், நரகாஸுரனைத் தான் வெல்ல முடியாமையால், அதற்கு ஸ்ரீக்ருஷ்ணன் வல்லனென்று அவனிடம் வந்து, அவனுடைய பாதார விந்தங்களைத் தன் கிரீடங்களால் ஸ்பர்சித்துக் கொண்டு, நமஸ்காரம் செய்து, நரகாஸுரனைக் கொன்று, அவன் பறித்துக் கொண்டு போன குண்டலம், முதலியவைகளைத் திருப்பிக் கொடுக்கும்படி வேண்டினான். ஸ்ரீக்ருஷ்ணனும், அவன் வேண்டினபடி கார்யங்களை நிறைவேற்றிக்கொடுத்து, ஸ்வர்க்கத்தில் முளைத்திருக்கும் பூண்டுகளாகிய கல்பகச் செடிகளில் ஒன்றைப் பிடுங்கிக்கொண்டு வருகையில், தேவேந்திரன் தன் கார்யத்தை நிறைவேற்றிக் கொடுத்ததையும் பாராமல், அதைக் கொண்டு போகலாகாதென்று அவனோடு யுத்தம் செய்ய வந்தான். 

ஆ! தேவதைகளின் அஹங்காரத்தையும், அவர்களுடைய பணக் கொழுப்பையும் என்னென்று சொல்லுவேன்? அவற்றைச் சுடவேண்டும். விகாரங்கள் (மாற்றங்கள்) அற்றவனும், மஹானுபாவனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன், அப்பால் ஒரே முஹூர்த்தத்தில் அந்தப் பெண்மணிகள் எத்தனை பேர்களோ, அத்தனை க்ருஹங்களில் அத்தனை உருவங்களை ஏற்றுக் கொண்டு, அந்தப் பதினாறாயிரம் பெண்மணிகளையும் விதிப்படி விவாஹம் செய்து கொண்டான். 

பிறர்க்கு நெஞ்சிலும் நினைக்க முடியாத செயல்களையும் நிறைவேற்றும் திறமையுடைய அப்பகவான், தான் மானிட உருவம் பூண்டும், தனக்கு அஸாதாரணமான மஹிமையைக் கைவிடாமல், நிறைவாளனாகவே (எல்லம் முழுமையக அடையப் பெற்றவனாக) இருந்தானாயினும், ஸமஸ்த ஸம்ருத்திகளும் (செல்வச் செழிப்பும்) நிறைந்திருக்கையால், இணையெதிரில்லாதவைகளான அம்மடந்தையர்களின் மாளிகைகளில் ஒரு நொடியும் பிரியாதிருந்து, ப்ராக்ருத ஜனம் (ஸாதாரண மனிதர்களைப்) போல் க்ருஹஸ்த தர்மங்களை அனுஷ்டித்துக் கொண்டு, அழகியர்களான அப்பெண்மணிகளுடன் விளையாடலுற்றிருந்தான். 

பக்தர்களின் மனத்தைத் தொடர்ந்து நடக்கும் தன்மையனும், அளவற்ற மஹிமைகளுடையவனும்,  இணையெதிரில்லாதவனுமாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன், தன் பார்யைகளிடத்தில் (மனைவிகளிடத்தில்) அவரவர் விரும்பினபடி உருவங்களை ஏற்றுக் கொண்டிருந்தமை என்ன அற்புதம்? அவனுடைய பெருமைக்கு இது ஒரு அற்புதமன்று. யோகேச்வரர்களுக்கும் ஈச்வரனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், இப்பொழுதும் தன் பக்தர்களுக்கு உள்ளேயும், வெளியிலும், நாற்புறத்திலும் நூறாகவும், ஆயிரமாகவும், தோற்றுகிறான். அப்பெண்மணிகள், ப்ரஹ்மாதிகளாலும் அறியமுடியாத மஹிமையுடைய ஸ்ரீக்ருஷ்ணனைக் கணவனாகப் பெற்று, இடைவீடின்றி வளர்ந்து வருகின்ற ஆநந்தமுடையவர்களாகி, அனுராகம் (பரிவு) அமைந்த புன்னகையோடு கூடின கண்ணோக்கத்தை முன்னிட்டுக் கொண்டிருக்கின்ற புதிய கலவிகளில் (சேர்த்திகளில்) பரிஹாஸ (கேலி) வசனங்களைப் பேசிக்கொண்டு, இடையிடையில் வெட்கத்தை அடைந்தார்கள். 

அம்மாதரசிகள், தாங்கள் நினைத்தபடி நடக்க ஸித்தமாயிருக்கின்ற அநேகமாயிரம் தாஸிகளை உடையவர்களாயினும், அந்த ஸ்ரீக்ருஷ்ணனை எதிர்கொள்வது, சிறந்த ஆஸனம் அளிப்பது, பாதங்களை விளக்குவது, தாம்பூலம் கொடுப்பது, பாதங்களைப் பிடிப்பது முதலிய உபசாரங்களால் ஸ்ரமம் தீர்ப்பது, சாமரம் வீசுவது, கந்தம் (சந்தனம்) பூசுவது, பூ மாலை சூட்டுவது, தலை வாரி முடிப்பது, படுக்கை அமைப்பது, உபஹாரங்களைக் கொடுப்பது, இவை முதலியவைகளால் அந்த ஸ்ரீக்ருஷ்ணனுக்குத் தாங்களே நேரில் பணிவிடை செய்தார்கள். 

ஐம்பத்தொன்பதாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துரையிடுக (0)
புதியது பழையவை