வியாழன், 18 பிப்ரவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 276

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – அறுபதாவது அத்தியாயம்

(ருக்மிணிக்கும், ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் ப்ரணயகலஹம்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஒருகால், ருக்மிணி ஜகத்குருவும் தன் படுக்கையில் ஸுகமாக வீற்றிருப்பவனும், தன் பதியுமாகிய ஸ்ரீக்ருஷ்ணனைத் தன் ஸகிகளுடன் சாமரம் வீசி உபசாரம் செய்து கொண்டிருந்தாள். எவன் ஜீவாத்மாக்கள் தன்னை ஆராதித்து உஜ்ஜீவிக்கும் பொருட்டு அதற்குரிய கரண (இந்த்ரியங்கள்) களேபராதிகளைக் (சரீரங்களைக்) கொடுக்கையாகிற ஸ்ருஷ்டியை நடத்துகிறான்? எவன் ஜன்ம (பிறப்பு), ஜரா (கிழத்தனம்), மரணாதி ரூபமான ஸம்ஸாரத்தில் விழுந்து அலைகிற ஜீவாத்மாக்களுக்கு ப்ரளயம் (அழிவு) என்னும் வ்யாஜத்தினால் (சாக்கால், excuse) இளைப்பாறுதலை விளைக்கிறான்? எவன் ஸம்ஸார தசையிலும் அந்த ஜீவாத்மாக்களுக்கு அனிஷ்டங்களைப் (தீமைகளைப்) போக்கி இஷ்டங்களைக் கொடுத்துக் காக்கிறான்? எவனுக்கு இந்த ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்கள் (அழித்தல்) கேவலம் விளையாடலாயிருக்கின்றன? அப்படிப்பட்ட ஸர்வேச்வரன் பிறவியற்றவனாயினும், தான் ஏற்படுத்தின தர்ம மர்யாதைகளை நிலைநிறுத்தும் பொருட்டு, தன் ஸங்கல்பத்தினால் யதுகுலத்தில் பிறந்தான். 

இவ்வாறு ஜகத்திற்கு (உலகிற்கு) வேண்டிய ஹிதங்களை நடத்துகிறானாகையால், அவனே ஜகத்குரு (உலகிற்கு ஆசான்). அத்தகையனான ஸ்ரீக்ருஷ்ணன், சிறந்த சயனத்தில் ஸுகமாக வீற்றிருக்கையில், பீஷ்மகனுடைய புதல்வியான ருக்மிணி, அவனுக்குச் சாமரம் வீசிக்கொண்டிருந்தாள். அந்தப் படுக்கையறை திகழ்கின்ற முத்துச்சரங்கள் தொங்கவிடப்பெற்ற மேல் கட்டினாலும், ரத்னமயமான தீபங்களாலும், விளக்கமுற்றிருந்தது. மற்றும் வண்டினங்கள் ஒலித்துக் கொண்டிருக்கிற திவ்யமான மல்லிப்பூமாலைகள் தொங்க விட்டிருந்தன. அப்பொழுதே உதித்த நிலவின் சிவந்திருக்கின்ற கிரணங்கள் ஜன்னல்கள் வழியாக நுழைந்து நிறைந்திருந்தன. 

உத்யானவனத்தில் வைத்து வளர்க்கப்பட்ட பாரிஜாத வ்ருக்ஷங்களின் வனத்தினின்று புஷ்பங்களின் வாஸனையை ஏந்திக்கொண்டு வருகின்ற மந்த மாருதத்தினாலும் (தென்றலினாலும்), சாளரத்தின் ரந்திரத்தினால் (ஜன்னல் ஓட்டைகள் மூலம்) வெளிவருகின்ற அகிற் புகைகளாலும் அந்தப் படுக்கையறை மிகவும் அழகாயிருந்தது. இத்தகைய படுக்கையறையில், பால் நுரையை நிகர்த்து வெளுத்திருக்கின்ற மஞ்சத்தின்மேல் அமைக்கப்பட்ட மேலான மெத்தென்ன பஞ்ச சயனத்தின் மேல் ஸுகமாக உட்கார்ந்திருக்கின்ற ஜகதீச்வரனான தன் கணவனை ருக்மிணி உபசரித்துக் கொண்டிருந்தாள். 

மிகுந்த ஒளியுடைய அம்மடந்தையர் மணியான ருக்மிணி, மணிக் காம்புடைய சாமரத்தைத் தன் ஸகியின் (தோழியின்) கையினின்று வாங்கி, அதனால் ஸர்வேச்வரனான ஸ்ரீக்ருஷ்ணனை வீசிக்கொண்டு அவனைப் பணிந்திருந்தாள். அந்த ருக்மிணி, ஸ்ரீக்ருஷ்ணனுடைய அருகாமையில் ரத்ன மயமான சிலம்பு தண்டைகளால் சப்தம் செய்து கொண்டு, மோதிரங்களையும், வளைகளையும் அணிந்த ஹஸ்தத்தின் (கையின்) நுனியில் சாமரத்தை ஏந்தி, வஸ்த்ரத்தின் நுனியால் மறைக்கப்பட்ட கொங்கைகளின் மேலுள்ள குங்குமக் குழம்பினால் சிவந்திருக்கின்ற முத்து மாலையின் ஒளியினாலும், நிதம்பங்களில் (இடுப்பில்) தரிக்கப்பட்ட மேலான அரைநாண் மாலையாலும் விளக்கமுற்றிருந்தாள். மானிட உருவம் பூண்ட மஹாலக்ஷ்மியும், அவதாரங்கள் தோறும் தன்னையொழிய வேறு கணவன் அற்றவளும், வேறு கதியற்றவளும், லீலையினால் மானிட உருவம் பூண்ட தனக்கு அனுரூபையும் (ஏற்றவளும்), முன்னெற்றி மயிர்களாலும், குண்டலங்களாலும், பதக்கத்துடன் கூடிய தங்க அட்டிகை அணிந்த கண்டத்தினாலும் (கழுத்தினாலும்) விளக்கமுற்று, முகத்தில் திகழ்கின்ற அம்ருதம் போன்ற புன்னகையுடையவளுமாகிய அந்த ருக்மிணியைப் பார்த்து ஸ்ரீக்ருஷ்ணன் ஸந்தோஷமுற்று, புன்னகை செய்து கொண்டு, இவ்வாறு மொழிந்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ராஜபுத்ரீ! லோக பாலர்களின் ஐச்வர்யம் போன்ற ஐச்வர்யமுடையவர்களும், மிகுந்த ப்ரபாவமுடையவர்களும் (போக்ய (அனுபவிக்கத்தக்க) வஸ்துக்கள் (பொருட்கள்), போகத்திற்கு வேண்டிய கருவிகள் முதலிய ஸம்ருத்திகள் (செல்வச் செழிப்பு) அமைந்தவர்களும்), செல்வப் பெருக்குடையவர்களும், ரூபம், ஒளதார்யம் (வள்ளல் தன்மை), பலம் இவைகளால் மேன்மையுற்றவர்களுமாகிய, பல மன்னவர்கள் உன்னை விரும்பினார்கள். உன் ப்ராதாவும், உன் தந்தையும், உன்னை அவர்களுக்கே கொடுத்தார்கள். அவர்கள், உன்னை மேல் விழுந்து விரும்பி, விவாஹத்திற்காக உங்கள் பட்டணத்திற்கு வந்து காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள், காம ஆவேசத்தினால் (காதல் கிளர்ச்சியால்) கொடிய மதமுடையவர்கள்; உனக்குத் தகுந்தவர்கள். அத்தகைய சிசுபாலன் முதலிய மன்னவர்களை நீ ஏன் வரிக்கவில்லை? அம்மன்னவர்களைத் துறந்து, உனக்குத் தகுதியில்லாத என்னை ஏன் வரித்தாய்? 

அழகிய புருவங்களுடையவளே! நானோவென்றால், ஜராஸந்தன் முதலிய ராஜாக்களிடத்தினின்று பயந்தவன்; அதைப் பற்றியே ஸமுத்ரத்தைச் சரணம் அடைந்திருக்கின்றேன். (ஸமுத்ரத்னிடையிலுள்ள தீவை இருப்பிடமாகக் கொண்டிருக்கின்றேன்). மிகுந்த பலமுடைய ஜராஸந்தாதிகளோடு த்வேஷத்தை (பகைமையை) ஏற்றுக்கொண்டிருக்கிறேன். நான் பெரும்பாலும் ராஜ ஸிம்ஹாஸனத்தைத் துறந்திருப்பவன். இத்தகையனான என்னை ஏன் வரித்தாய்? மற்றும், என் வழி இன்னதென்று ஒருவர்க்கும் ஸ்பஷ்டமாகத் (தெளிவாகத்) தெரியாது. (இவன் வஸுதேவனுடைய பிள்ளையாகையால், க்ஷத்ரியனா அல்லது நந்தனுடைய பிள்ளையாகையால் மூன்றாவது வர்ணத்தில் பிறந்தவனாவென்று என்னைப்பற்றி எல்லோரும் ஸந்தேஹிக்க வேண்டியதாயிருக்குமேயன்றி, இவன் இன்ன ஜாதியில் பிறந்தவனென்று ஸ்பஷ்டமாக (தெளிவாக) ஒருவரும் நிச்சயிக்கமுடியாது.)

நான் லோகத்திற்கிணங்காத வழியைப் பற்றி நடப்பவன். (லோக மர்யாதையைக் கடந்தவன்). அழகிய புருவங்களுடையவளே! இத்தகைய என்னைப் போன்ற புருஷர்களின் பதவியைத் தொடர்ந்த உன்னைப்போன்ற மடந்தையர்கள், பெரும்பாலும் வருந்துவார்கள். (நற்குலத்தில் பிறந்த உன்னைப் போன்ற பெண்மணிகள், குலம், கோத்ரம் தெரியாதவனும், துர்மார்க்கனும், வஞ்சகனுமாகிய என்னைப் போன்றவனைத் தொடர்வது வருத்தத்திற்கிடமாகும்). மற்றும், நான் ஒன்றுமில்லாதவன் (ஏழை); என்னைப் போன்ற ஒன்றுமில்லாத ஏழையர்களுக்கே, நான் அன்பனாயிருப்பவன். 

அழகிய இடையுடையவளே! அதைப் பற்றியே பணக்காரர்கள் பெரும்பாலும் என்னைப் பணிகிறதில்லை. (குரூபனாயினும் (அழகற்றவனாயினும்), பணக்காரனே பெண்டிர்களுக்கு இஷ்டனாவான் (விருப்பமானவன்). நானோவென்றால், ஏழையன்; உன்னைப் போன்றவளால் வரிக்கத் தகுந்தவனல்லேன்). பணம், பிறவி, ஐச்வர்யம், அழகு ஆகிய இவையெல்லாம் எவர்களுக்கு ஒருவரோடொருவர்க்கு ஒத்திருக்கின்றனவோ, அவர்களுக்கே விவாஹமும், மைத்ரியும் (நட்பும்) பொருந்துமன்றி, உத்தமர்களுக்கும் (உயர்ந்தவர்கட்கும்), அதமர்களுக்கும் (தாழ்ந்தவர்கட்கும்) அவை பொருந்தமாட்டா. 

விதர்ப்ப தேசத்தரசன் மகளே! நீ நன்றாக ஆலோசிக்கும் திறமையற்றவளாகையால், இதை ஆராய்ந்தறியாமல் வரிக்கத் தகுந்த நற்குணங்களற்றவனும், பிச்சைக்காரர்களால் வீணாகப் புகழப்பட்டவனுமாகிய, என்னை வரித்தாய். ஆகையால், நீ இப்பொழுதாயினும் உனக்குத் தகுதியான ஒரு க்ஷத்ரிய ச்ரேஷ்டனைப் பணிவாயாயின், இஹ (இந்த) லோகத்திலும், பர (வேறு) லோகத்திலும் நல்ல விருப்பங்களை அனுபவிப்பாய். 

அழகிய இடையுடையவளே! சிசுபாலன், ஸால்வன், ஜராஸந்தன், தந்தவக்ரன் முதலிய மன்னவர்களும், உன் தமையனாகிய ருக்மியும், என் மேல் த்வேஷிக்கிறார்கள் (பகைமை கொண்டுள்ளார்கள்). துஷ்டர்களின் தேஜஸ்ஸைப் போக்கும் தன்மையுடைய நான், வீர்ய மதத்தினால் கண் தெரியாதிருப்பவர்களும், கர்வமுற்றவர்களுமாகிய அந்தச் சிசுபாலன் முதலிய மன்னவர்களின் கர்வத்தை அடக்கும் பொருட்டு, உன்னைக் கொண்டு வந்தேனன்றி வேறில்லை. ஆகையால், நீ இப்பொழுது உன்னிஷ்டப்படி உனக்குத் தகுந்த மேலான மன்னவனைப் பணிந்து, இஹ, பரலோக ஸுகங்களை அனுபவிப்பாயாக. மற்றும், நான் மனையிலும், மனைவியிடத்திலும் விருப்பமின்றி, உதாஸீனமாயிருப்பவன் (ஒதுங்கி இருப்பவன்). ஸ்த்ரீ ஸம்போக ஸுகம் (பெண்களுடன் புணர்ச்சி), புத்ர ஸுகம், பணம் இவைகளில் விருப்பமுடையவனல்லேன். ஆத்மானுபவம் கைகூடப் பெற்றிருக்கையால், எதிலும் விருப்பமற்றவன். ஸ்வயம்ப்ரகாசமான (தானே தோன்றுகிற) ஆத்ம ஸ்வரூபத்தின் தோற்றத்தினால், ப்ராக்ருத சேஷ்டைகள் (ஸாதாரண உலகியல் செயல்கள்) எவையும் தீண்டப் பெறாதவன். (புருஷன் இல்லறவாழ்க்கையில் உதாஸீனமாயாவது (பொருட்படுத்தாமல் இருப்பது), காமம் (ஆசை) அற்றவனாயாவது இருப்பானாயின், ஸ்த்ரீகளுக்கு அது பொறுக்க முடியாது. ஆகையால், நீ இத்தகையனான என்னைத் தெரியாமல் வரித்தாய்; இப்பொழுதாயினும் வேறொரு மன்னவனைப் பணிந்து வாழ்வாயாக).

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன் தன்னை எப்பொழுதும் பிரியாதிருக்கையால் அவனுக்குத் தான் மிகவும் அன்பன் (பிரியமானவன்) என்று நினைத்துக் கர்வமுற்றிருக்கின்ற ருக்மிணியைக் குறித்து அவளுடைய கர்வத்தைப் போக்கும் பொருட்டு இவ்வாறு மொழிந்து பேசாதிருந்தான். மூன்று லோகங்களுக்கும் ப்ரபுவும், தனக்கு அன்பனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன், இவ்வாறு மொழிகையில், ருக்மிணி தான் என்றும் கேளாத அந்த அப்ரியமான (அன்பற்ற) வார்த்தையைக் கேட்டுப் பயந்து, மனத்தில் நடுக்கம் உண்டாகப் பெற்று, கண்ணும் கண்ணீருமாகி, அபாரமான சிந்தையில் ஆழ்ந்தனள். 

அந்த ருக்மிணி, நகங்களால் சிவந்த ஒளியுடையதும், அழகியதுமான பாதத்தினால் பூமியைக் கீறுவதும், மெய் கரைந்து வருகையால் கலங்கியிருக்கின்ற கண்ணீர்களால் சந்தனம் பூசப்பெற்ற கொங்கைகளை நனைப்பதுமாகி, துக்கத்தின் மிகுதியால் வாயைத் திறந்து பேசமுடியாமல் தலையைக் கவிழ்ந்து நின்றிருந்தாள். அப்ரியமான (அன்பற்ற) வார்த்தையைக் கேட்ட மஹாதுக்கத்தினாலும், நம்மைக் கைவிடுவனோ என்னவோ என்கிற பயத்தினாலும், சோகத்தினாலும், மதி மழுங்கப்பெற்ற அந்த ருக்மிணியின் ஹஸ்தத்தினின்று (கையிலிருந்து) வளைகள் நழுவின. அவள் கையில் தரித்திருந்த சாமரமும், அதினின்று நழுவிப் பூமியில் விழுந்தது. தழ தழத்த மதியுடைய அவளுடைய தேஹமும், மோஹத்தை (மயக்கத்தை) அடைந்து, தலைமயிர்கள் அவிழ்ந்து, விரியப் பெற்று, நிற்க முடியாமல் காற்றில் அடிபட்ட வாழைமரம் போல் பூமியில் விழுந்தது. 

மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், பரிஹாஸத்தின் (கேலிப் பேச்சின்) திறமையை அறியாத அன்பு நாயகியின் (மனைவியின்) ப்ரேம பாசத்தைக் (அன்புத்தளையைக்) கண்டு மன இரக்கமுற்றுப் பயந்தவன் போல, உடனே நடுங்கினான். சதுர்ப்புஜனாகிய (நான்கு தோள்கள் உடைய) அந்த ஸ்ரீக்ருஷ்ணன், மஞ்சத்தினின்று (கட்டிலிலிருந்து) வேகமாக இறங்கி, அந்த ருக்மிணியை எடுத்து, தலைமயிர்களை முடிந்து, தாமரை மலர் போன்ற ஹஸ்தத்தினால் (கையினால்) அவளுடைய முகத்தைத் துடைத்தான். அப்பரமன், நீர்த்துளிகள் பெருகப் பெற்ற கண்களையும், சோக நீர்களால் நனைந்த கொங்கைகளையும் துடைத்து, புஜங்களால் அணைத்து, நல் வார்த்தைகள் பேசத் தெரிந்தவனும், ஸத்புருஷர்களுக்குக் கதியுமாகிய அப்பகவான், பரிஹாஸத்தின் (கேலிப்பேச்சின்) ப்ரௌடியை (மிடுக்கை) அறியாமையால் ப்ரமித்த மனமுடையவளும், அவ்வாறு பரிஹாஸம் (கேலி) செய்யத் தகாதவளும், தன்னையொழிய வேறொரு விஷயம் அறியாதவளும், மன இரக்கத்திற்கு இடமாயிருப்பவளும், நல்லியற்கையுடையவளுமாகிய அந்த ருக்மிணியை மன இரக்கத்துடன் நல் வார்த்தைகளால் ஸமாதானப்படுத்தினான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- விதர்ப்பராஜன் புதல்வி! என் மேல் அஸூயைப் படவேண்டாம் (தவறாக நினக்க வேண்டாம்). நீ என்னையே பரம கதியாகப் பற்றியிருப்பவள் என்பது எனக்குத் தெரியும். அழகிய அங்கமுடையவளே! ஆயினும், உன் வார்த்தையைக் கேட்க விரும்பியும், ப்ரணய கோபத்தினால் (ஊடலினால்) உதடு துடிக்கப்பெற்றுக் கோபத்தினால் கண்ட ஸ்தலத்தில் (கழுத்தில்) பரவுகின்ற நோக்கத்தினால் சிவந்த கடைக் கண்களுடையதும், அழகிய புருவ நெரிப்புக்கள் அமைந்திருப்பதுமாகிய உன் முகத்தைப் பார்க்க விரும்பியும், நான் இவ்வாறு பரிஹாஸம் செய்தேனன்றி வேறில்லை. பயப்படும் தன்மையுடையவளே! கோபமுடையவளே! காதலியுடன் ப்ரணய கலஹங்களால் (ஊடலினால்) பொழுது போக்குகையே, க்ருஹஸ்தர்களுக்கு (இல்லறத்தார்க்கு) இல்லற வாழ்க்கையில் விளையும் மேலான லாபமல்லவா? (ஆகையால் “கலஹத்தில் என்ன குதூஹலம்? என்ன ஸுகம்” என்று சங்கிக்க (ஸந்தேஹப்பட) வேண்டாம்.)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ராஜனே! அந்த ருக்மிணி இவ்வாறு பகவானால் நன்கு ஸமாதானம் சொல்லப் பெற்று, அவன் சொன்னதெல்லாம் பரிஹாஸம் (கேலிப்பேச்சு) என்று தெரிந்து கொண்டு, நம்மை இவன் கைவிடுவானோ என்னவோ என்கிற பயத்தைத் துறந்தாள். பரத வம்சாலங்காரனே! அவள் வெட்கமும், சிரிப்பும் அமைந்து, ஸ்னேஹமும் (அன்பும்) நிறைந்து, அழகியதுமான கடைக்கண்ணோக்கத்தினால் புருஷச்ரேஷ்டனாகிய ஸ்ரீக்ருஷ்ணனுடைய முகத்தைப் பார்த்துக்கொண்டே, அவனைக் குறித்து இவ்வாறு மொழிந்தாள்.

ருக்மிணி சொல்லுகிறாள்:- தாமரைக் கண்ணனே! நான் உனக்குத் தகுந்தவள் அன்று என்று நீ மொழிந்தாய். இது இப்படிதான். (நீ மொழிந்தது வாஸ்தவமே (உண்மையே).) நீ ஸ்வரூபத்தினாலும், ஸ்வபாவத்தினாலும், அளவற்றவன். மற்றும், ஷாட்குண்யபூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), மூன்று லோகங்களுக்கும் ப்ரபுவும், தனக்கு அஸாதாரணமான (தனக்கே உரிய) நித்யவிபூதியில் (பரம பதத்தில்) களிப்புற்றிருப்பவனுமாகிய நீ எங்கே? உன் மனோபாவத்தைத் தொடர்ந்து உனக்குப் பரதந்தரையாய் (ஆட்பட்டு) இருப்பவளும், எனக்குள்ள இத்தன்மையை அறியாதவர்களால் உபாஸிக்கப்பட்ட பாதங்களுடையவளுமாகிய நான் எங்கே? (தெரிந்தவர்கள் என்னை ஸ்வதந்த்ரை (விருப்பப்படி செயல்பட வல்லவள்) என்று உபாஸிக்க மாட்டார்கள்; உனக்குப் பரதந்த்ரையாக (ஆட்பட்டவளாக) நினைத்து, என்னை உனக்குப் புருஷகாரமாகக் (உன்னை அடைய சிபாரிசு செய்பவளாகக்) கொண்டு, என்னோடு கூடிய உன்னையே உபாஸிப்பார்கள். ஆகையால், நான் உனக்குத் தகாதவளென்பது வாஸ்தவமே (உண்மையே)). 

மூன்று லோகங்களையும் உட்படுத்திக் கொள்ளவல்ல பெரிய அடிவைப்புக்களை (திருவடிகளை) உடையவனே! ராஜர்களிடத்தினின்று பயந்து தான் ஸமுத்ரத்தினிடையில் சயனித்துக் கொண்டிருக்கின்றாய். இது உண்மையே. (மூன்று அடிகளால் உலகங்களையெல்லாம் அளந்து கொண்ட மஹானுபாவனாகிய நீ, ராஜர்களிடத்தினின்று பயந்து ஸமுத்ரத்தைச் சரணம் அடைந்தாய் என்றால் இதை எவன் நம்புவான்?) ஆனால், ஸமுத்ரத்தில் வாஸம் செய்வது ஏதுக்காக வென்றால், என் தந்தையாகிய ஷீர ஸமுத்ரத்தினிடத்தில் ப்ரீதியுடையவனாகையால், அதை வெளியிடும் பொருட்டு, அதைப் போன்ற ஸமுத்ரமாகிய லவண (உப்பு) ஸமுத்ரத்தில் (கடலில்) வாஸம் செய்கின்றாயன்றி, வேறொன்றுமில்லை. 

நீ எனக்கு மிகவும் அன்பிற்கிடமானவன். ஆகையால், என்னிடத்திலும் உனக்கு ப்ரீதி அளவற்றிருக்கின்றது. அந்த ப்ரீதியின் மிகுதியால், என்னைச் சேர்ந்தவர்களிடத்திலும் நீ ப்ரீதி உடையவனாயிருக்கின்றாய். பலிஷ்டர்களோடு (பலசாலிகளோடு) விரோதம் ஏற்றுக்கொண்டிருக்கிறேன் என்றாய். இந்திரியங்களை வெல்ல முடியாமல், சப்தாதி விஷயங்களில் கால் தாழ்ந்த மூடர்கள், உன்னை ஓயாமல் த்வேஷிக்கிறார்கள் (வெறுக்கிறார்கள்) என்பதை இப்படி மாற்றிச் சொல்லுகின்றாய். 

நான் ராஜாஸனத்தைத் (சிம்ஹாஸனத்தைத்) துறந்திருப்பவனென்று மொழிந்தாய். அது உண்மையே. ஏனென்றால், உன்னுடைய ப்ருத்யர்களே (அடியார்களே) ஸிம்ஹாஸனத்தில் ஏறுவது பெரிய நரகத்திற்கிடமென்று அதைத் துச்சமாக நினைத்துத் துறக்கின்றார்கள். உபய விபூதி நாதனாகிய (லீலா விபூதியான இந்த ப்ராக்ருத உலகம் மற்றும் அதற்கு அப்பாற்பட்ட பரமபதம் என்கிற நித்ய விபூதி – இந்த இரண்டு ஐச்வர்யங்களையும் நியமிப்பவனான) நீ, ஸிம்ஹாஸனத்தைத் (ராஜ பதவியைத்) துறந்திருக்கிறாய் என்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? 

என்னுடைய ஜாதி முதலியவை இன்னவையென்று ஸ்பஷ்டமாகத் (தெளிவாகத்) தெரியாது என்று மொழிந்தாய். அதுவும் உண்மையே. உன் பாதார விந்தங்களின் மகரந்தத்தைப் (தேனைப்) பருகி, மனக்களிப்புற்றிருக்கின்ற முனிவர்களுக்கும்கூட உன்னுடைய உண்மை ஸ்பஷ்டமாகத் (தெளிவாகத்) தெரியாது. பசுக்களைப்போல ஆஹாரம், நித்ரை, பயம், மைதுனம் (ஆண், பெண் சேர்க்கை) இவற்றைத் தவிர மற்றொன்றையும் அறியாத மூடர்களுக்கு, உன்னுடைய உண்மை, வருத்தியும் அறிய முடியாதென்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? 

நான் லோக மர்யாதையைக் கடந்தவனென்றாய். அதுவும் உண்மையே. ஏனென்றால், உன்னை எவர் பணிகிறார்களோ, அவர்களுடைய நடத்தையும்கூட அலௌகிகமாயிருக்கின்றது (உலகியலுக்கு மாறாக இருக்கிறது). ஸர்வேச்வரனும் மஹானுபாவனுமாகிய உன் நடத்தை அலௌகிகம் (உலகியலுக்கு மாறானது) என்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? 

நான் ஒன்றுமில்லாதவன் என்றாய்; அது வாஸ்தவமே (உண்மையே). உனக்குக் கிடைக்கக் கூடாதது எதுவுமே இல்லையல்லவா? ப்ராணிகளிடத்தில் பூஜையைப் பெற்றுப் புசிக்கின்ற (பூஜிக்கத் தகுந்தவர்களான) ப்ரஹ்மாதி தேவதைகளும் கூட உனக்குப் பூஜையை அளிக்கின்றார்களென்றால், ஸர்வேச்வரனாகிய உனக்கு ஒன்றுமில்லாமையாகிற ஏழ்மை எப்படி அமையும்? 

ஒன்றுமில்லாத ஏழையர்களுக்கே நான் அன்பனாயிருப்பவன் என்றாய்; அதுவும் ஸத்யமே. உன்னையொழிய மற்றொன்றையும் உடையவரல்லாத நாரதர் முதலிய மஹரிஷிகளுக்கு, நீ அன்பனாயிருக்கின்றாய். அவர்களும் உனக்கு மிகவும் அன்பர்களாயிருக்கிறார்கள். தனம், குலம் முதலியவைகளால் நிறைந்தவர்கள் என்று தம்மைத் தாமே அபிமானித்து (கர்வத்துடன் நினைத்து) விவேகமற்றிருக்கும் (பகுத்தறிவு அற்றிருக்கும்) மூடர்கள், இந்த்ரியங்களின் திருப்தியை விரும்பி, அதற்காக முயன்று, கால ஸ்வரூபனாகி (கால வடிவாகி) ஆயுளைப்பறிக்கின்ற ஸர்வேச்வரனாகிய உன்னை அறிகிறதில்லை. ஆகையால், பணம் முதலியவைகளால் நிறைந்தவர்கள் என்னைப் பெரும்பாலும் பணிகிறதில்லை என்று நீ மொழிந்ததும் உண்மையே. 

ஆசைப்படத் தகுந்த ஸமஸ்த புருஷார்த்தங்களும் (புருஷர்களால் – ஜீவாத்மாக்களால் விரும்பி அடையப்படுவது புருஷார்த்தம்; அது அறம், பொருள், இன்பம், வீடு என்று நான்கு வகைப்படும்) நீயே. அவரவர் விரும்பும் பலன்களும் நீயே. (தவங்களால் ஸாதிக்கப்படுகிற இஷ்டமான பலனும் நீயே. அனைவர்க்கும் மிகவும் இஷ்டமான பலன் ஸுகமே. நீயோவென்றால், எல்லையில்லாத மஹாநந்த ஸ்வரூபன். தர்ம (அறம்), அர்த்த (பொருள்), காம (இன்பம்), மோக்ஷங்கள் (வீடு) என்கிற நான்கு வகைப் புருஷார்த்தங்களையும் நிறைவேற்றிக் கொடுப்பவனும், மஹாநந்த ஸ்வரூபனுமாகிய உனக்கு, அற்ப ஸுகங்களைக் கொடுப்பவைகளான பணம் முதலியவற்றால் தம்மை நிறைவாளர் (முழுமையானவர்) என்று அபிமானித்துக் (நினைத்துக்) கொண்டிருக்கிற மற்றவர்கள் எவ்வாறு இணையாவார்கள்? 

நல்ல மதியுடையவர்கள், உனக்குப் பணிவிடை செய்ய விரும்பி, மற்றவைகளை எல்லாம் துறக்கிறார்கள். அவர்கள் உனக்குத் தாழ்ந்தவர்களாயினும், அவர்களுக்கும், உனக்கும் சேர்த்தி உரியதேயாம். ப்ரபுவுக்கும், ப்ருத்யனுக்கும் (சேவகனுக்கும்) தாரதம்யம் (ஏற்றத்தாழ்வு) இருக்கிலும், அவர்களுக்குச் சேர்த்தி உரியதன்று என்று எவன் சொல்லுவான்? ஆகையால், உனக்குப் பணிவிடை செய்ய விரும்புகின்ற எனக்கும், உனக்கும் நேர்ந்த இந்த ஸம்பந்தம், மிகவும் உரியதேயாம். 

ஆணும் பெண்ணுமாய்க் கலக்கும் கலவியில் விருப்பமுற்று, அதனால் விளையும் ஸுக, துக்கங்களை அனுபவிக்கின்ற ஆண், பெண்களுக்கு, ஒருவரோடொருவர்க்கு நேரும் ஸம்பந்தம் உரியதன்றே அன்றி, ப்ரபுவும் பணிக்காரியுமாகிய நம்மிருவர்க்கும் நேர்ந்திருக்கிற ஸம்பந்தம் புகழத் தகுந்ததேயாம். நீ, ஸமஸ்த பூதங்களிடத்திலும் நட்புடையவர்களாகி எதற்கும் த்ரோஹம் (கெடுதி) செய்யாதிருக்கின்ற முனிவர்களால் புகழப்பட்ட மஹிமையுடையவன். நீ ஸமஸ்த லோகங்களுக்கும் அந்தராத்மாவாயிருப்பவன். வேண்டினவர்களுக்குத் தன்னையும் கொடுப்பவன். அந்த முனிவர்கள், இத்தகையனான உன்னைப் புகழ்வது, தாங்கள் ஸத்தை (இருப்பு, மேன்மை) பெறுதற்கேயன்றி, வேறொரு ப்ரயோஜனத்திற்காக அன்று. 

ஆகையால், பிச்சைக்காரர்களால் வீணாக நான் புகழப்பட்டவன் என்று நீ மொழிந்தது உண்மையே. ஸமஸ்த பூதங்களுக்கும் த்ரோஹம் (கெடுதி) செய்யாமல் நட்புடையர்களாய் இருக்கையாகிற பிச்சையை வேண்டுகிறவர்களே, நீ சொன்ன பிச்சைக்காரர்கள். இத்தகையனான உன்னை அறிந்து, உன்னுடைய புருவ நெரிப்பினால் தூண்டப்பட்ட காலத்தின் வேகத்தினால் தங்கள் மனோரதங்களெல்லாம் (விருப்பமெல்லாம்) த்வம்ஸமாகப் (அழியப்) பெற்ற ப்ரம்ஹன், இந்த்ரன் முதலிய தேவதைகளையும் துறந்து, உன்னை நான் வரித்தேன் (கணவனாகத் தேர்ந்தெடுத்தேன்). ப்ரஹ்மாதிகளைத் துறந்த நான், அற்பர்களான சிசுபாலாதிகளைத் துறந்தமையைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? இது நான் நன்றாக விசாரித்துச் செய்த கார்யமேயன்றி, விசாரிக்காமல் செய்த கார்யமன்று. 

நாதா! நீ சார்ங்கமென்னும் தனுஸ்ஸின் (வில்லின்) சப்தத்தினால், ஜராஸந்தன், சிசுபாலன் முதலிய ராஜர்களை ஓடத் துரத்தி, ஸிம்ஹம் மற்ற ம்ருகங்களைத் துரத்தி, தன் பாகத்தைப் பறிப்பது போல, நீ என்னைப் பறித்துக் கொண்டு வந்தாய். இப்படியிருக்க, நான் அந்த ராஜர்களிடத்தினின்று பயந்து, ஸமுத்ரத்தைச் சரணம் அடைந்தேன் என்று நீ சொன்ன வார்த்தை, அறியாத மூடர்களை வஞ்சிப்பதற்கேயன்றி, உண்மையன்று. 

உன் பதவியைத் தொடர்ந்த அங்கன், ப்ருது, பரதன், யயாதி, கயன் முதலிய ராஜச்ரேஷ்டர்கள், உனக்குப் பணிவிடை செய்ய விரும்பி, தங்களையொழிய வேறொரு அரசு நடையாடாமல் (இல்லாமல்) தாங்களே தனியரசாக அனுபவித்து வந்த ராஜ்யத்தைத் துறந்து, வனத்திற்குச் சென்றார்கள். அவர்கள் என்ன வருத்தம் அடைந்தார்கள்? இங்கேயே உன்னை அனுபவிக்கையாகிற ஸுகத்தை அடைந்து, கடைசியில் உன்னுடைய ஸாரூப்யத்தையும் (உன்னை ஒத்த உருவத்தைப்) பெற்றார்கள். ஆகையால், என் பதவியைத் தொடர்ந்தவர்கள் பெரும்பாலும் வருந்துவார்களென்று நீ மொழிந்தது உண்மையன்று. 

தன்னுடைய நன்மை தீமைகளை ஆராய்ந்தறியும் திறமையுடைய பெண்பிள்ளை எவள்தான் கல்யாண குணங்களுக்கு இருப்பிடமாயிருக்கின்ற உன்னுடைய பாதார விந்தங்களின் கந்தத்தை (வாஸனையை) அனாதரித்து (ஏற்காது), மரணம் அடையும் தன்மையனும், எப்பொழுதும் பெரும் பயமுடையவனுமாகிய மற்றொரு புருஷனை அடைவாள்? 

உன் பாதாரவிந்தங்களின் கந்தத்தை மோருவதே ஸமஸ்த ப்ராணிகளுக்கும் சிறந்த புருஷார்த்தம். அது ஸமஸ்த விதமான செல்வப் பெருக்குகளுக்கும் விளை நிலமாயிருக்கும். பெரியோர்கள் அதையே எப்பொழுதும் மோந்து கொண்டிருப்பார்கள். இத்தகைய உன் பாதார விந்தங்களின் பரிமளத்தைத் துறந்து, நான் மற்றொருவனை எப்படி வரிப்பேன்? 

ஆகையால், அத்தகையனும், எனக்கு அனுரூபனும் (ஏற்றவனும்), உலகங்களுக்கெல்லாம் நாதனும், அவற்றிற்கு அந்தராத்மாவாயிருப்பவனும், இஹத்திலும், பரத்திலும், விருப்பங்களெல்லாம் நிறைவேறப் பெற்றவனுமாகிய உன்னையே நான் பணிந்தேன். நீ அவதரிக்கும் பொழுதெல்லாம் உன்னுடன் பிறந்து, உன்னைப் பிரியாமல் உன்னோடு கூடவே ஸஞ்சரித்துக் கொண்டிருக்கிற எனக்கு, பாபத்திற்கிடமான ஸம்ஸாரத்தினின்று கரையேற்றுபவனும், தன்னைப் பணிகிறவர்களை அனுஸரிக்கும் தன்மையனுமாகிய உன்னுடைய பாதார விந்தங்களே சரணமாயிருக்கும்படி அருள்புரிவாயாக. 

தன்னைப் பற்றினவர்களைக் கைவிடாதவனே! சத்ருக்களை (எதிரிகளை) அழிப்பவனே! நீயும், ருத்ரன், ப்ரஹ்மன் முதலிய தேவ தேவர்களின் ஸபைகளில் பாடப்பட்ட உன் கதைகளும், எவளுடைய செவியில் படவில்லையோ, அத்தகைய பாக்யமற்றவளுக்கு, ஸ்த்ரீகளின் அதிகாரம் தலையெடுத்த வீடுகளில் கழுதைகளைப் போலப் பாரம் வஹிப்பவர்களும், எருதுகளைப் போல ஓயாமல் உழைப்பவர்களும், நாய்கள் போல அவமதிக்கப்பட்டு வீட்டைக்காக்கும் பொருட்டு த்வாரங்களில் இருப்பவர்களும், பூனைகள் போல மன இரக்கத்திற்கிடமாகிப் பாதத்தினால் உதைக்கப்பெற்றும் அடிக்கடி விடாமல் தொடர்ந்திருப்பவர்களும், பணிக்காரர்களுமாகிய நீ சொன்ன மன்னவர்கள், கணவர்கள் ஆவார்களாக. 

எவள், உன்னுடைய பாதார விந்தங்களின் மகரந்தத்தை (தேனை) என்றும் முகர்ந்து அறியாளோ, அவள் மதி மயங்கி, தோல், மீசை, தாடி, ரோமம், நகங்கள், கேசங்கள் இவைகளால் மறைக்கப்பட்டு, உள்ளே மாம்ஸம், எலும்பு, ரக்தம், புழு, அமேத்யம் (மலம்), கபம், வாதம், பித்தம் இவையுடையதுமான சரீரம் (உடல்) உடையவனும், ஜீவச்சவம் (நடைப்பிணம்) போன்றவனுமாகிய புருஷாதமனை (ஆண்களுக்குள் தாழ்ந்தவனை), “இவன் எனக்கு அன்புள்ள காதலன்” என்று மதித்து, பணிகின்றாள். 

தாமரைக்கண்ணனே! தன்னைத்தானே அனுபவிக்கையால் நிறைவாளனாகி, எல்லாவற்றிலும் உதாஸீனனும் (பொருட்படுத்தாது), என்னிடத்தில் காதலனுக்குக் காதலியிடத்திலுள்ள கண்ணோக்கம் போன்ற விலக்ஷணமான (வித்யாசமான) கண்ணோக்கம் அற்றவனுமாகிய உன்னுடைய பாதார விந்தங்களில் எனக்கு அனுராகம் (அன்பு) என்றும் உண்டாயிருக்குமாக.

நீ, இந்த ப்ரபஞ்சத்தின் ஸம்ருத்திக்காக (வளர்ச்சிக்காக) ரஜோ குணத்தை அதிகமாக ஏற்றுக்கொண்டு, என்னைப் பார்க்கின்றாயே; அதுவே எனக்கு நீ செய்யும் பேரருள் (நீ இல்லற வாழ்க்கையில் உதாஸீனன் (பொருட்படுத்தாதவன்) என்பதும், ப்ராக்ருதர்களைப் (ஸாதாரண மனிதர்களைப்) போல் காமுகன் (காதல் ஆசையில் விழுபவன்) அன்று என்பதும் உண்மையே. ஆயினும், நான் பாதார விந்தங்களில் ப்ரீதியை மாத்ரமே வேண்டுகிறேனன்றி, அதற்கு மேல் மற்றொன்றையும்  நான் விரும்பவில்லை. கேட்போர் இது நிச்சயமென்று நினைக்கும்படி நீ இப்படி என்னைக் கடோரமாகப் (கடினமாகப்) பேசினும், உனக்கு என்னிடத்தில் கருணை மாறாது. விசித்ரமான ப்ரபஞ்சத்தைப் படைத்து, அதை நான் கண்டு அனுமோதனம் செய்யும் (ஆமோதிக்கும்) பொருட்டு, நீ என்னைப் பார்க்கின்றாயே; அதுவே, எனக்கு நீ செய்யும் பெரிய கருணையாம்.)

மதுஸூதனா “உனக்குத் தகுந்த காதலனைக் கண்டு வரிப்பாயாக” என்றது முதலாக, நீ மொழிந்ததெல்லாம் உண்மையே. ஏனென்றால், உலகத்தில் மணப்பெண்களுக்கு, தன்னை மேல்விழுந்து வரிப்பவனிடத்தில் ப்ரீதியில்லாமல், வேறொருவனிடத்தில் ப்ரீதி உண்டாயிருப்பது உண்டு. காசிராஜன் புதல்வியாகிய அம்பையென்பவள், ஸால்வனிடத்தில் ப்ரீதியுற்றிருந்தாளல்லவா? விவாஹமான பின்பும், பரபுருஷனைப் (கணவனைத் தவிர மற்ற ஆணை) புணர (சேர) விரும்பும் வனிதையினுடைய (பெண்ணினுடைய) மனம், புதிய புதிய புருஷனையே தேடிக் கொண்டு செல்லும். புத்தியுடையவன், அத்தகைய மடந்தையைத் தன்னிடம் வைத்துக் கொண்டு போஷிக்கலாகாது. அப்படி போஷித்துக் கொண்டு வருவானாயின், இஹ (இந்த உலக) பரலோக (வேறு உலக) ஸுகங்கள் இரண்டினின்றும் நழுவுவான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- நல்லியற்கையுடையவளே! ராஜபுத்ரீ! இந்த உன் வார்த்தையைக் கேட்க விரும்பியே, நான் உன்னை இவ்வாறு பரிஹாஸம் (கேலி) செய்தேனன்றி, வேறில்லை. நான் சொன்னதை அனுஸரித்து, நீ ஏதேது மொழிந்தனையோ, அதெல்லாம் உண்மையே. என் கருத்தையெல்லாம் நீ நன்றாகத் தொகுத்து மொழிந்தாய். 

வெகுமதிக்கத் தகுந்த மனவுயர்த்தியுடையவளே! என்னைப்பிரியாதிருப்பதற்காக வேறு விருப்பங்களெல்லாம் இல்லாதிருக்கும்படி எந்தெந்த மனோரதங்களை விரும்புகின்றாயோ, அவையெல்லாம் என்னிடத்தில் மாறாத பக்தியுடைய உனக்கு, என்றும் ஸித்தமாகவேயிருக்கின்றன. மங்கள ஸ்வபாவமுடையவளே! (உனக்கு அவ்விஷயத்தில் ஒரு குறையும் இல்லை. அவற்றை நீ விரும்ப வேண்டியதுமில்லை; நான் கொடுக்க வேண்டியதுமில்லை) தோஷமற்றவளே! ஸ்த்ரீகளுக்குக் கணவனிடத்தில் எவ்வளவு ப்ரேமம் இருக்க வேண்டுமோ, அவ்வளவு ப்ரேமமும் உனக்குப் பூர்ணமாயிருக்கிறது என்பதையும், உன்னுடைய பதிவ்ரத்யத்தையும் (கணவனைத் தவிர வேறு ஆடவரை ஏறெடுத்தும் பார்க்காத தன்மையையும்) கண்டேன். உன்னை நான் இத்தகைய வாக்யங்களால் சலிக்கும்படி செய்யப் பார்க்கினும், உன் புத்தி என்னிடத்தினின்று சிறிதும் சலிக்கவில்லை. 

எவர்கள் க்ஷூத்ர (மிகத்தாழ்ந்த) மனோரதங்களால் (விருப்பங்களால்) மனம் கலங்கப்பெற்று, மோக்ஷம் கொடுக்கும் ப்ரபுவாகிய என்னை, ஆணும் பெண்ணுமாய்க் கலந்து அனுபவிக்கும் ஸம்போக (கலவி) ஸுகத்தை விரும்பி, தவத்தினாலும், வ்ரத அனுஷ்டானத்தினாலும் உபாஸிக்கிறார்களோ, அவர்கள் என்னுடைய மாயையினால் மோஹிக்கப்பட்டவர்கள். எவர்கள், மோக்ஷமாகிற பெருஞ்செல்வத்தையும், மற்ற செல்வங்களையும் கொடுக்கவல்ல என்னைத் தவம் முதலியவற்றால் அருள்புரிவித்து, என்னிடத்தினின்று மோக்ஷம் தவிர மற்ற செல்வங்களைப் பெற விரும்புகிறார்களோ, அவர்கள் மந்த பாக்யர்களே (பாக்கியம் குறைந்தவர்களே). 

ஏனென்றால், அவர்கள் விரும்பும் விஷயங்கள், அற்ப ஸுகங்களாகையால், நரகத்திலும் கிடைக்கக்கூடியவைகளே. ஆகையால் நன்றென்று தோற்றுகிற தம்பதிகளின் ஸங்கமம் (ஆண் பெண்களின் கலவி) நரகமே. ஆகையால், அதை என்னிடத்தினின்று பெற விரும்புகிறவர்கள் பாக்யஹீனர்களே (பாக்கியம் அற்றவர்களே). 

மனையாளே (மனைவியே)! நீ என்னிடத்தில் ஸம்ஸாரத்தினின்று விடுவிக்கும்படியான அனுவ்ருத்தி செய்தாய் (கீழ்படிந்த ஈடுபாடு கொண்டாய்). இத்தகைய அனுவ்ருத்தி துஷ்ட (கொடிய) ஜனங்களால் வருந்தியும் செய்ய முடியாது. துரபிப்ராயம் (கெட்ட எண்ணம்) உடையவளும், இந்திரியங்களின் திருப்தியில் ஊக்கமுடையவளும், வஞ்சனையில் (ஏமாற்றுவதில்) கண் வைத்தவளுமாகிய மடந்தைக்கோ என்றால், எவ்வளவு வருந்தியும் செய்ய முடியாது. 

சிறந்த மனவுயர்த்தியுடையவளே! உன்னைப் போன்ற அன்புள்ள மனைவியை நான் எந்த க்ருஹத்திலும் காணவில்லை. நீ உன் விவாஹ ஸமயத்தில் உன்னை மணம் புரிவதற்காக வந்திருக்கின்ற பெரிய பெரிய மன்னவர்களை எல்லாம் பொருள் செய்யாமல், உன்னுடைய நற்கதைகளைக் கேட்டிருக்கின்ற எனக்கு, ரஹஸ்ய ஸமாசாரத்தைக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்குரிய அந்தணனை அனுப்பினையல்லவா? மற்றும், நான் யுத்தத்தில் உன் ப்ராதாவை (ஸஹோதரனை) ஜயித்து, அவனை விரூபம் (அலங்கோலம்) செய்ததையும், அநிருத்தனுடைய விவாஹ மஹோத்ஸவத்தின் பொழுது, அக்ஷகோஷ்டி (சொக்கட்டான் ஆட்டம் நடக்கும் கோஷ்டி) நடந்து கொண்டிருக்கும் ஸமயத்தில், அந்த ருக்மியைக் கொன்றதையும் கண்டு, நீ என்னுடைய விரஹத்திற்குப் (பிரிவிற்கு) பயந்து, அந்த வருத்தங்களை எல்லாம் பொறுத்துக் கொண்டிருந்தாயன்றி, ஒன்றும் பேசவில்லை. இத்தகைய உன் குண ஸமூஹத்தினால் நான் உனக்குத் தோற்றேன். 

நீ என்னைப் பெறுதற்காக, “தாமரைக்கண்ணனே! உன்னுடைய அருள் பெறேனாயின், ப்ராணன்களை இழப்பேன். நூறு ஜன்மங்கள் பெறினும், உனக்கே நான் வாழ்க்கைப்படவேண்டும்” என்று ஸமாசாரத்தை விவரித்துச் சொல்லி, தூதனை அனுப்பினாயே, அப்பொழுது நான் வருவதற்குச் சிறிது விலம்பம் (கால தாமதம்) செய்கையில், நீ இந்த ஜகத்தையெல்லாம் சூன்யமாக நினைத்து, மற்றொருவனுக்குத் தகாத இந்தச் சரீரத்தை (உடலை) நான் துறக்க விரும்புகிறேனென்று நிச்சயித்திருந்தாயே, அதற்கு நான் உன்னிடத்தில் வெறுமனே ஸந்தோஷப்படுகிறேனன்றி, என்னால் அதற்கு எவ்விதத்திலும் ப்ரதி செய்ய முடியாது.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:– ஸ்ரீக்ருஷ்ணன், மனுஷ்ய லோகத்தை அனுஸரித்து நடக்க முயன்றிருக்கையால், இவ்வாறு ஸுரத பரிஹாஸ கோஷ்டிகளை (கேலிப் பேச்சுக்களை) நடத்திக்கொண்டு, ஆத்மானுபவத்தினால் நிறைவாளனாயினும், ஸ்ரீமஹாலக்ஷ்மியின் அவதாரமாகிய ருக்மிணியுடன் ஸர்வகாலமும் க்ரீடித்துக் கொண்டிருந்தான். 

அறுபதாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக