சனி, 20 பிப்ரவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 277

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – அறுபத்தொன்றாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணனுடைய புத்ர, பௌத்ர (பேரன்) பரம்பரையும், அநிருத்த விவாஹமும், ருக்மியின் வதமும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய பார்யைகளில் (மனைவிகளில்) ஒவ்வொருத்தியும் பத்து பத்து பிள்ளைகளைப் பெற்றாள். அப்புதல்வர்கள், தங்களுடைய உருவம், குணம் முதலியவற்றின் ஸம்ருத்தியால் (நிறைவால்), தங்கள் தந்தையாகிய ஸ்ரீக்ருஷ்ணனைக் காட்டிலும் சிறிதும் குறையாதிருந்தார்கள். அந்த ராஜபுத்ரிகள், ஸ்ரீக்ருஷ்ணன் தங்கள் க்ருஹத்தை எப்பொழுதும் விடாமல் அவ்விடத்திலேயே நிலையாயிருப்பதைக் கண்டு, அந்தப் பகவானுடைய உண்மையை அறியாமல், ஒவ்வொருத்தியும் தன்னை அவனுக்கு மிகவும் அன்பிற்கிடமாக நினைத்துக் கொண்டாள். 

அம்மாதரசிகள், ஸ்ரீக்ருஷ்ணனுடைய அழகிய தாமரை மலர் போன்ற முகமும், நீண்ட புஜ தண்டங்களும் (கைகளும்), நீண்டு மலர்ந்த கண்களும், ப்ரீதியோடும், சிரிப்போடும் கூடிய கண்ணோக்கங்களும், அழகிய உரைகளும் ஆகிய இவைகளால் மதி (புத்தி) மயங்கினார்களேயன்றி, தங்கள் விலாஸங்களால் (உடல் நெளிவுகளால்), நிறைவாளனாகிய அவனுடைய மனத்தைப் பறித்து, வசப்படுத்திக் கொள்ள வல்லராகவில்லை. அந்தப் பதினாயிரம் பத்னிகளும், புன்னகையோடு கூடின கடைக்கண்ணோக்கத்தினால் கருத்தை வெளியிடுவதும், மனத்தைப் பறிக்கும் தன்மையதுமாகிய வளைந்த புருவ நெரிப்பினால் அனுப்பப்பட்ட, ஆண்களைக் கவர்ச்சியால் கவரும் மன்மத பாணங்களாலும் (காமக் கணைகளாலும்), காம சாஸ்த்ரங்களில் (காமக்கலவி பற்றி விவரித்துக் கூறும் நூல்களில்) ப்ரஸித்தங்களான மற்றும் பலவகைக் கருவிகளாலும், ஸ்ரீக்ருஷ்ணனுடைய மனத்தைக் கலக்க வல்லராகவில்லை. 

ப்ரஹ்மாதிகளும்கூட எவனுடைய உண்மையை அறிய வல்லரல்லரோ, அத்தகையனும், ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு வல்லபனுமாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணனை, அம்மடந்தையர்கள் கணவனாகப் பெற்று, ஸர்வகாலமும் வளர்ந்து வருகின்ற ஸந்தோஷமுடையவர்களாகி, அனுராகமும் (அன்பும்), புன்னகையும் அமைந்த கண்ணோக்கங்களாலும், புதுப்புதிய ஸம்போக (புணர்ச்சி) ஸுகங்களாலும், மேன்மேலும் பேராவலுற்று, அவனைப் பணிந்து வந்தார்களன்றி, அவனுடைய மனத்தை வசப்படுத்தச் சிறிதும் வல்லராகவில்லை. 

அம்மாதரசிகள், தாங்கள் நினைத்தபடி செய்யவல்ல அளவற்ற தாஸிகளுடையவர்களாயினும், எதிர்கொள்வது, சிறந்த ஆஸனம் அளிப்பது, பாதங்களை அலம்புவது, தாம்பூலங் கொடுப்பது, பாதங்களைப் பிடித்து இளைப்பாறச் செய்வது, சாமரம் வீசுவது, கந்தம் பூசுவது, பூமாலை சூட்டுவது, தலைவாரி முடிப்பது, படுக்கை அமைப்பது, ஸ்னானம் செய்விப்பது, உபஹாரம் கொடுப்பது முதலியவைகளால் தாங்களே நேரில் அவனுக்குப் பணிவிடை செய்தார்கள். 

பத்து பத்து பிள்ளைகளையுடைய அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய பார்யைகளில் (மனைவிகளில்), ருக்மிணி முதலியவர் எண்மர் ப்ரதான மஹிஷிகளென்று (பட்டத்து அரசிகள் என்று) முன்பு மொழிந்தேனல்லவா; அவர்களுடைய பிள்ளைகளான ப்ரத்யும்னன், முதலியவர்களைச் சொல்லுகிறேன்; கேட்பாயாக. 

ஸ்ரீக்ருஷ்ணனுக்கு, ருக்மிணியிடத்தில் சாருதேஷ்ணன், ஸுதேஷ்ணன், சாருதேஹன், ஸுசாரு, சாருகுப்தன், பத்ரசாரு, சாருசந்த்ரன், அதிசாரு, சாருமான் ஆகிய இவ்வொன்பதின்மரும், ப்ரத்யும்னனை முன்னிட்டுக்கொண்டு பிறந்தார்கள். இப்பதின்மரும், ஸ்ரீக்ருஷ்ணனோடொத்து விளங்கினார்கள். 

பானு, ஸுபானு, ஸ்வர்ப்பானு, ப்ரபானு, பானுமான், சந்த்ரபானு, ப்ருஹத்பானு, அதிபானு, ஸ்ரீபானு, ப்ரதிபானு ஆகிய இப்பதின்மரும், ஸத்யபாமையின் பிள்ளைகள். 

ஸாம்பன், ஸுமித்ரன், புருஜித்து, சதஜித்து; ஸஹஸ்ரஜித்து, விஜயன், சித்ரகேது, வஸுமான், த்ரவிணன், க்ரது ஆகிய இப்பதின்மரும், ஜாம்பவதியின் பிள்ளைகள். இந்த ஸாம்பன் முதலியவர்கள் பதின்மரும், தந்தையோடொத்தவர்கள். 

வீரன், சந்த்ரன், அச்வஸேனன், சித்ரகு, வேகவான், வ்ருஷன், ஆமன், சங்கு, வஸு, குந்தி ஆகிய இப்பதின்மரும் நாக்னஜிதியின் பிள்ளைகள்.

ச்ருதன், கவி, வ்ருஷன், வீரன், ஸுபாஹு, பத்ரன், சாந்தி, தர்சன், பூர்ணமாஸன், ஸோமகன் ஆகிய இப்பதின்மரும் காளிந்தியின் பிள்ளைகள். இவர்களில் பத்ரனென்பவனை ஏகலனென்றும் வழங்குவதுண்டு. 

ப்ரகோஷன், காத்ரவான், ஸிம்ஹன், பலன், ப்ரபலன், ஊர்த்வகன், மஹாசக்தி, ஸஹன், ஓஜஸ், அபராஜிதன் ஆகிய இப்பதின்மரும் லக்ஷ்மணையின் பிள்ளைகள். 

வ்ருகன், ஹர்ஷன், அனிலன், க்ருத்ரன், வர்தனன், அன்னாதன், மஹாசன், பாவனன், வஹ்னி, க்ஷுதி ஆகிய இப்பதின்மரும், மித்ரவிந்தையின் பிள்ளைகள். 

ஸங்க்ராமஜித்து, ப்ருஹத்ஸேனன், சூரன் , ப்ரஹரணன், அரிஜித்து, ஜயன், ஸுபத்ரன், வாமன், ஆயு, ஸத்யகன் ஆகிய இப்பதின்மரும், பத்ரையின் பிள்ளைகள். 

பலராமனுக்கு ரோஹிணியிடத்தில் தீப்திமான், தாம்ரஜித்து முதலியவர்கள் பிறந்தார்கள். 

ஸ்ரீக்ருஷ்ணனுடைய புதல்வனும், மஹாபலிஷ்டனுமாகிய (சிறந்த பலசாலியுமான) ப்ரத்யும்னன், ருக்மியின் புதல்வியாகிய ருக்மவதி என்பவளை மணம் புரிந்து, போஜகடமென்னும் பட்டணத்தில் வஸித்துக்கொண்டிருக்கையில், அவனுக்கு அந்த ருக்மவதியிடத்தில் அநிருத்தனென்னும் புதல்வன் பிறந்தான். ப்ரத்யும்னன், தவிர ஸ்ரீக்ருஷ்ணனுடைய பிள்ளைகளாகிய மற்றவர்களுக்குப் பிள்ளைகளும், பேரன்களும் கோடி கோடியாகப் பிறந்திருந்தார்கள். ஸ்ரீக்ருஷ்ணனுடைய பிள்ளைகளின் தாய்மார்கள் பதினாறாயிரம் பெயர்கள்.

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- ருக்மி, தன் சத்ருவாகிய ஸ்ரீக்ருஷ்ணனுடைய பிள்ளைக்குத் தன் புதல்வியை எப்படி கொடுத்தான்? அவன் ஸ்ரீக்ருஷ்ணனால் யுத்தத்தில் பரிபவிக்கப்பட்டு (அவமானப்படுத்தப்பட்டு), அந்த ஸ்ரீக்ருஷ்ணனை வதிப்பதற்கு ரந்தரம் (சந்து - அதாவது – அவகாசம்) பார்த்துக்கொண்டிருந்தானல்லவா? அறிஞரே! த்வேஷிகளாகிய (பகைவர்களான) ஸ்ரீக்ருஷ்ணன் ருக்மி இவ்விருவர்க்கும் ஒருவரோடொருவர்க்கு விவாஹ ஸம்பந்தம் எப்படி நேர்ந்தது? இதை எனக்குச் சொல்வீராக. எனக்குத் தெரியாதென்ன வேண்டாம். ஏனென்றால், உம்மைப்போன்ற யோகிகள், வரப்போகிறதையும், நடந்ததையும், நடந்து கொண்டிருப்பதையும், இந்திரியங்களுக்கு எட்டாததையும், தூரத்திலிருப்பதையும், மறைந்திருப்பதையும், நன்றாக அறிவார்களல்லவா? ஆகையால், இதை விசதமாக (விரிவாக) எனக்குச் சொல்வீராக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:– ருக்மி, ஸ்ரீக்ருஷ்ணனால் அவமதிக்கப்பட்டு, அந்த வைரத்தை (பகையை) நினைத்துக் கொண்டே இருந்தானென்பது வாஸ்தவமே (உண்மையே). ஆயினும், தன்னுடன் பிறந்தவளாகிய ருக்மிணிக்கு ப்ரியம் செய்வதற்காக, தன் புதல்வியைப் பாகினேயனாகிய (உடன் பிறந்தவளின் (பகினியின்) பிள்ளையாகிய) ப்ரத்யும்னனுக்குக் கொடுத்தான். ஆனால், ருக்மி ப்ரத்யும்னனை அழைத்து, தன் புதல்வியை அவனுக்குக் கொடுக்கவில்லை. பின்னை எப்படி நடந்ததென்றால், நேரே மன்மதனுடைய அவதாரமாகிய அந்த ப்ரத்யும்னன், ருக்மவதியின் ஸ்வயம்வரத்திற்குத் தானொருவனாகவே சென்று, அங்கு அவளால் ஸ்வயம்வரத்தில் வரிக்கப்பட்டு, தானும் அவளிடத்தில் அனுராகம் (அன்பு, ப்ரீதி) உடையவனாகையால், தன்னை எதிர்த்து வந்த மன்னவர்களை எல்லாம் யுத்தத்தில் தான் ஏகரதனாகவே (ஒருவனாகவே) ஜயித்து, அவளைப் பறித்துக்கொண்டு போனான். ருக்மி, தன்னுடன் பிறந்தவளைப் பார்த்து, அவனைத் தடுத்து யுத்தம் செய்யாமல், அதற்குச் சம்மதித்திருந்தானாகையால், அவன் தன் புதல்வியை ப்ரத்யும்னனுக்குக் கொடுத்தானென்று சொன்னேனன்றி வேறில்லை. 

ராஜனே! ருக்மிணியின் புதல்வியாகிய சாருமதியென்னும் கன்னிகையை, க்ருதவர்மாவின் பிள்ளையும், பலிஷ்டனுமாகிய (பலசாலியுமான) விசாலாக்ஷனென்பவன் மணம் புரிந்தான். மற்றும், ருக்மி ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் த்வேஷம் மாறப்பெறாதிருப்பினும், “சத்ருவோடு (எதிரியோடு) ஸம்பந்தம் செய்தால், போஜன (விருந்து), ப்ரதிபோஜனங்கள் (எதிர் விருந்து) நடத்த வேண்டி வரும். சத்ருவின் (எதிரியின்) அன்னத்தைப் புசிப்பதும், சத்ருவுக்கு (எதிரிக்கு) அன்னமிடுவதும், தர்மமன்று. அதை உலகத்தார்களும் பழிப்பார்கள். ஆகையால், சத்ருவோடு (எதிரியோடு) ஸம்பந்தம் செய்வது தர்மமன்று” என்று அந்த ஸம்பந்தத்தின் கெடுதியை அறிந்தவனாயினும், தன் பகினி (உடன் பிறந்தாள்) இடத்திலுள்ள ஸ்னேஹமாகிற பாசத்தினால் கட்டுண்டு, அவளுக்கு ப்ரியம் செய்ய விரும்பி, தன் தெளஹித்ரனாகிய (புதல்வியின் பிள்ளையாகிய) அநிருத்தனுக்கு, தன் பேத்தியாகிய ரோசனையென்னும் கன்னிகையைக் கொடுத்தான். 

ராஜனே! அந்த அநிருத்தனுடைய விவாஹ மஹோத்ஸவத்திற்காக ருக்மிணி, பலராமன், ஸ்ரீக்ருஷ்ணன் இவர்களும் ப்ரத்யும்னன் முதலிய மற்றவர்களும், போஜ கடகமென்கிற ருக்மியின் பட்டணத்திற்குச் சென்றார்கள். அந்த விவாஹம் முடிகையில், கொழுத்தவர்களாகிய களிங்கன் முதலிய மன்னவர்கள், ருக்மியைக் குறித்துப் “பலராமனைச் சூதாட்டத்தினால் ஜயிப்பாயாக. ராஜனே! பலராமனுக்குச் சூதாட்டம் தெரியாது. ஆயினும், அவனுக்கு அதில் அளவற்ற மனவிருப்பம். ஆகையால், அவனை அனாயாஸமாக (எளிதாக) ஜயித்து விடலாம்” என்றார்கள். ருக்மியும், அம்மன்னவர்களால் இவ்வாறு சொல்லப்பட்டு, பலராமனை அழைத்து, அவனோடு சூதாட்டம் ஆடினான். அதில் பலராமன், நூறு, ஆயிரம், பதினாயிரம் வீதம் பந்தயங்களை ஜயித்து, எடுத்துக் கொண்டான். பிறகு, அந்த ராமனை ருக்மி ஜயித்தான். 

அப்பொழுது, களிங்கன் பற்களைக் காட்டிக் கொண்டு, உரக்கச் சிரித்தான். பலராமன் அதைப் பொறுக்கவில்லை. அப்பால் ருக்மி, லக்ஷம் பொன் பந்தயம் வைத்தான். பலராமன் அதையும் ஜயித்தான். அப்பொழுது, ருக்மி வஞ்சனை செய்ய முயன்று, நான் ஜயித்தேனென்றான். ந்யாயம் தவறாமல் நடக்கும் தன்மையாகிற பெரும் செல்வமுடைய பலராமன், பர்வத்தில் ஸமுத்ரம் போல் கோபத்தினால் கலக்கமுற்று, கோபத்தின் மிகுதியால் கண்கள் மிகவும் சிவக்கப் பெற்று, முன்போலவே லக்ஷம் பொன் வைத்து ஆடினான். பலராமன் தர்மம் தவறாமலே அந்த ஆட்டத்திலும் ருக்மியை ஜயித்தான். ருக்மியோ என்றால் கபடத்தை ஏற்றுக்கொண்டு, “நான் ஜயித்தேன். இவ்விஷயத்தில் கேள்விக்கு ஸமாதானம் சொல்கிறவர்களாகிய களிங்காதிகளும், நான் ஜயித்ததாகவே சொல்லுகிறார்கள். ஆகையால், அவர்களைக் கேட்கலாம்” என்றான். 

அப்பால், “தர்மத்தின்படி பலராமன்தான் பந்தயத்தை ஜயித்தான். ருக்மியோவென்றால் கபடத்தில் (ஏமாற்றுவதில், வஞ்சனை செய்வதில்) இழிந்து, இவ்வாறு சொல்லுகிறான். ஆகையால், அவன் சொல்லுவது பொய்யே” என்று ஆகாசவாணி (விண்ணிலிருந்து குரல்) சொல்லிற்று. விதர்ப்ப ராஜ குமாரனாகிய ருக்மி, துர்ப்புத்திகளான (கெட்ட புத்தி உடைய) களிங்கன் முதலிய மன்னவர்களால் தூண்டப்பட்டு, அந்த ஆகாசவாணியை (விண் குரலை) அனாதரித்து (ஏற்காமல்), காலத்தினால் தூண்டப்பட்டு, பலராமனைப் பரிஹாஸம் செய்து கொண்டு, இவ்வாறு மொழிந்தான்.

ருக்மி சொல்லுகிறான்:- நீங்கள் வனத்தில் திரிந்து பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்தீர்கள். ஆகையால், நீங்கள் சூது, சதுரங்கம் முதலியவைகளில் திறமையற்றவர்கள். ராஜர்களன்றோ பாசகைகளாலும் (பகடைகளாலும்), பாணங்களாலும் விளையாடுவார்கள். உங்களைப் போன்றவர்கள், அந்த வழிக்கு வந்தவர்களல்லர். இப்படி இருக்க, நீ ஏன் வீணுக்குச் சூதாட்டத்திற்கு வந்தாய்? ஆகையால், நீ தோல்வி அடைந்தாய்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! ஸபை நடுவில் இவ்வாறு ருக்மியால் நிந்திக்கப்பட்டவனும், களிங்கன் முதலிய ராஜர்களால் பரிஹாஸம் (கேலி) செய்யப்பெற்றவனுமாகிய பலராமன் மிகவும் கோபமுற்று, இரும்புத் தடியை எடுத்துக்கொண்டு, அதனால் அவனைக் கொன்றான். களிங்கராஜன், பற்களைக் காட்டிக் கொண்டு சிறித்தானாகையால், பலராமன் அவனை வேகமாகத் தொடர்ந்து சென்று, பத்தாவது அடியில் பிடித்துக் கொண்டு, அவனுடைய பற்களை உதிர்த்து விட்டான். மற்ற ராஜர்களும் பலராமனின் இரும்புத் தடியால் பீடிக்கப்பட்டு, புஜங்களும், துடைகளும், தலைகளும், முறிந்து பயந்து ஓடிப்போனார்கள். ஸ்ரீக்ருஷ்ணனுடைய மைத்துனனாகிய ருக்மி, இவ்வாறு பலராமனால் வதிக்கப்படுகையில், ருக்மிணி ராமக்ருஷ்ணர்களின் ஸ்னேஹத்திற்கு என்ன கெடுதி வருமோவென்று பயந்து, நன்றென்றாவது, தீதென்றாவது ஒன்றும் பேசாதிருந்தாள். ஸ்ரீக்ருஷ்ணனை அவலம்பமாக (பற்றாக) உடைய பலராமன் முதலிய யாதவர்கள் புதிய மணப்பெண்ணுடன் அநிருத்தனை ரதத்தில் ஏற்றிக்கொண்டு, ப்ரயோஜனங்களெல்லாம் கைகூடப் பெற்று, த்வாரகைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். 

அறுபத்தொன்றாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக