தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – அறுபத்து இரண்டாவது அத்தியாயம்
(பாணனுடைய புதல்வியாகிய உஷை, ஸ்வப்னத்தில் (கனவில்) அநிருத்தனைக் கண்டு, அவனிடம் மோஹம் கொண்டு (மயங்கி), தன் ஸகியாகிய சித்ரலேகையால் அவனை வரவழைத்து, அவனுடன் கலந்திருக்க, பாணன் அவனைக்கண்டு, சிறையில் அடைத்தல்)
பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- யாதவ ஸ்ரேஷ்டனாகிய அநிருத்தன், பாணனுடைய புதல்வியாகிய உஷை என்பவளை மணம் புரிந்தானென்றும், அப்பொழுது ருத்ரனுக்கும் ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் கோரமான மஹாயுத்தம் நடந்ததென்றும், கேள்விப்பட்டிருக்கிறேன். அதையெல்லாம் எனக்கு நன்றாகச் சொல்வீராக.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மஹானுபாவனாகிய பலி சக்ரவர்த்திக்கு நூறு பிள்ளைகள். அவர்களில் ஜ்யேஷ்டன், பாணனென்று ப்ரஸித்தனாயிருந்தான். பலி சக்ரவர்த்தி, வாமன ரூபியான ஸ்ரீமஹாவிஷ்ணுவுக்குப் பூமண்டலத்தை எல்லாம் தானம் செய்தானென்பது ப்ரஸித்தமே அல்லவா. அத்தகைய பலிசக்ரவர்த்தியின் ஒளரஸ (தன் மனைவியிடத்தில் பிறந்த) குமாரன், பாணனென்பவன். அவன், ஸர்வகாலமும் சிவனைப் பணிவதில் விருப்பமுடையவனாயிருந்தான். அவன், நல்லொழுக்கத்தினால் அனைவர்க்கும் புகழத் தகுந்தவனும், தானசீலனும், மிகுந்த மதியுடையவனும், ஸத்யம் தவறாது நடப்பவனும், ருத்ரனைப் பணிகையாகிற வ்ரதத்தைத் திடமாக நடத்தும் தன்மையனுமாய் இருந்தான். முன்பு, அவன் அழகியதான சோணிதபுரத்தில் ராஜ்யம் செய்துகொண்டிருந்தான்.
ருத்ரனுடைய அனுக்ரஹத்தினால் தேவதைகள் அவனுக்குப் பணியாளரைப் போன்றிருந்தார்கள். ஆயிரம் புஜங்களையுடைய (கைகளை உடைய) அப்பாணாஸுரன், ருத்ரன் தாண்டவம் (ஓர்வகை நர்த்தனம்) செய்யும் பொழுது, ஆயிரம் புஜங்களாலும் (கைகளாலும்) வாத்யம் வாசித்து அவனைக் களிப்புறச் செய்தான். மஹானுபாவனும், ஸமஸ்த பூதங்களுக்கும் ப்ரபுவும், சரணம் அடைந்தவர்களைக் காக்க வல்லவனும், பக்தர்களிடத்தில் வாத்ஸலயமுடையவனுமாகிய ருத்ரன், ஸந்தோஷம் அடைந்து, இஷ்டமான வரம் வேண்டும்படி அந்தப் பாணனைத் தூண்டினான். அவனும் “நீ என் பட்டணத்திற்குக் காவலனாயிருக்க வேண்டும்” என்று வரம் வேண்டினான். வீர்யத்தினால் கொடிய மதமுடைய அப்பாணாஸுரன், ஒருகால் பார்ச்வத்தில் (அருகில்) இருக்கின்ற ருத்ரனுடைய பாதார விந்தங்களை இரவியின் (ஸூர்யனின்) ஒளி போன்ற ஒளியுடைய கிரீடத்தினால் ஸ்பர்சித்துக் கொண்டு, அவனைக் குறித்து இவ்வாறு மொழிந்தான்.
பாணன் சொல்லுகிறான்:- மஹாதேவனே! நீ உலகங்களுக்கு எல்லாம் குருவும் ஈச்வரனுமாயிருப்பவன். உன்னையொழிய மற்ற புருஷர்கள் அனைவரும் விருப்பங்கள் நிறைவேறப் பெறாதவர்களே. உன் பாதார விந்தங்கள் அவர்களுடைய விருப்பங்களையெல்லாம் கல்ப வ்ருக்ஷம் போல் நிறைவேற்றுகின்றன. அத்தகைய மஹானுபாவனாகிய உன்னை நமஸ்கரிக்கின்றேன். தேவனே! நீ எனக்கு ஆயிரம் புஜங்களைக் (கைகளைக்) கொடுத்தாய். அவை எனக்குக் கேவலம் பாரத்தின் பொருட்டே இருக்கின்றன. மூன்று லோகங்களிலும் உன்னைத் தவிர என்னோடெதிர்த்து யுத்தம் செய்யத் தகுந்த இணையானவன் எவனும் அகப்படவில்லை. நான் நிரம்பவும் தினவு (அரிப்பு) எடுக்கப்பெற்ற புஜங்களால் (கைகளால்) யுத்தம் செய்ய விரும்பி, பர்வதங்களையெல்லாம் சூரணம் (பொடி) செய்து கொண்டு திக்கஜங்களை எதிர்த்துச் சென்றேன். அவையும் பயந்து ஓடிப்போயின.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மஹானுபாவனான ருத்ரன், அதைக் கேட்டுக் கோபமுற்று, பாணனைப்பார்த்து “உன் த்வஜம் (கொடி) எப்பொழுது முறிந்து விழுகின்றதோ, அப்பொழுது, மூடனே! உனக்கு என்னைக்காட்டிலும் மேற்பட்டவனாகிய புருஷோத்தமனோடு உன் கொழுப்பை அழிக்கவல்ல யுத்தம் நேரிடும்” என்றான். மன்னவனே! அற்ப புத்தியாகிய அந்தப் பாணன் இவ்வாறு மொழியப் பெற்று, ஸந்தோஷமுற்று, அவன் மொழிந்த படியே தன் வீர்யத்தை அழிக்கவல்ல த்வஜ பங்கம் (கொடி விழுவது) எப்பொழுது நேருமோவென்று அதையே எதிர்பார்த்துக் கொண்டு, தன் க்ருஹம் போய்ச் சேர்ந்தான்.
அவனுடைய புதல்வியாகிய உஷை என்னும் கன்னிகை, தான் என்றும் காணாதவனும், கேளாதவனுமாகிய ப்ரத்யும்ன குமாரனான அநிருத்தனை ஸ்வப்னத்தில் (கனவில்) கண்டு, அவனிடத்தில் மன விருப்பமுற்று, அவனை அவ்விடத்தில் காணாமல், “என் அன்பு நாயகனே! எங்கிருக்கின்றாய்?” என்று மொழிந்து கொண்டே ஸ்வப்னம் (கனவு) தெளிந்து, ஸகிகளினிடையில் (தோழிகளிடையில்) தழதழத்து, மிகவும் வெட்கமுற்று, படுக்கையினின்று எழுந்தாள். பாணனுக்குக் கும்பாண்டனென்னும் பெயருடைய ஒரு மந்த்ரி இருந்தான். அவனுக்குச் சித்ரலேகையென்னும் புதல்வி இருந்தாள். அவள் உஷைக்கு மிகவும் அன்பிற்கிடமான ஸகி (தோழி). அவள் அத்தகைய உஷையைக் கண்டு குதூஹலத்துடன் (மகிழ்ச்சியுடன்) இவ்வாறு வினவினாள்.
ஸகி சொல்லுகிறாள்:- அழகிய புருவங்களுடையவளே! உன் மனோரதம் எத்தகையது; (நீ விரும்புகிறவன் யாவன்? எத்தகையன்?). உனக்கு இன்னும் விவாஹம் நடக்கவில்லை. உன்னை மணம் புரிகிறவன் இன்னவனென்றும் தெரியவில்லை. (இப்படி இருக்க, நீ இவ்வாறு எவனைத் தேடுகின்றாயோ, தெரியவில்லை. அதைச் சொல்வாயாக).
உஷை சொல்லுகிறாள்:- ஸகி (தோழி)! நான் ஸ்வப்னத்தில் (கனவில்) ஒரு மனுஷ்யனைக் கண்டேன். அவன் கறுத்த நிறமுடையவனும், தாமரையிதழ் போன்ற கண்களுடையவனும், பொன்னிறமான வஸ்த்ரம் தரித்தவனும், திரண்டு உருண்டு நீண்ட புஜ தண்டங்கள் அமைந்தவனும், மடந்தையர்களின் மனத்திற்கினியனுமாயிருந்தான். அவன், தன்னுடைய செவ்வாயின் மதுவை எனக்குப் பானம் செய்வித்து, விருப்பமுற்றிருக்கின்ற என்னைத் துயரமாகிற ஸமுத்ரத்தில் விழத்தள்ளி எங்கோ போயினன். என் மனத்திற்கினியனாகிய அம் மஹானுபாவனை நான் தேடுகின்றேன்.
சித்ரலேகை சொல்லுகிறாள்:- உன் மனவருத்தத்தை நான் போக்கி விடுகிறேன். நீ எவனை ஸ்வப்னத்தில் (கனவில்) கண்டனையோ, அவனை இம்மூன்று லோகங்களுக்குள் இன்னவனென்று நிச்சயித்துச் சொல்லுவாயாயின், நான் கொண்டு வந்து விடுகிறேன். ஆகையால், உன் மனத்தைப் பறித்தவன் எவனோ, அவனை நிச்சயித்துச் சொல்லுவாயாக.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- சித்ரலேகை இவ்வாறு மொழிந்து, தேவர், கந்தர்வர், ஸித்தர், சாரணர், பன்னகர் (நாகர்கள்), தைத்யர் (திதியின் புத்ரர்கள்), வித்யாதரர் (இசை வல்லுனர்கள்), யக்ஷர் (குபேரனின் சேவகர்கள்), மனுஷ்யர் ஆகிய இவர்களெல்லோரையும் சித்ரத்தில் எழுதிக் காட்டினாள். அவள், மனுஷ்யர்களில் வ்ருஷ்ணிகளையும், வ்ருஷ்ணிகளில் சூரனையும், வஸுதேவனையும், ராம-க்ருஷ்ணர்களையும், ப்ரத்யும்னனையும் எழுதினாள். உஷை, அவர்களில் ப்ரத்யும்னனைக் கண்டு, வெட்கமுற்றாள். பிறகு, சித்ரலேகை அநிருத்தனை எழுதுகையில், உஷை அவனைக் கண்டு, தலை வணக்கமுற்று நின்றாள்.
மன்னவனே! அவள் புன்னகை செய்து கொண்டு, “இவனே இவனே” என்றாள். சித்ரலேகை இவன் ஸ்ரீக்ருஷ்ணனுடைய பேரனாகிய அநிருத்தனை விரும்பினாளென்று நிச்சயித்துத் தெரிந்து கொண்டு, யோக ப்ரபாவமுடையவளாகையால், ஆகாச மார்க்கத்தினால் த்வாரகைக்குச் சென்றாள்.
அங்கு, அழகிய படுக்கையில் படுத்துறங்குகின்ற அநிருத்தனை யோக மஹிமையினால் எடுத்துக் கொண்டு, மீண்டு சோணிதபுரத்திற்கு வந்து, தன் ஸகியின் (தோழியின்) அன்பனாகிய அப்புருஷனை அவளுக்குக் காட்டினாள். அந்த உஷையும், மிகவும் அழகியனான அவ்வநிருத்தனைக் கண்டு, ஸந்தோஷத்தினால் முகம் மலரப்பெற்று, வேறு புருஷர்களால் காண முடியாத தன் க்ருஹத்தில் அவனுடன் ஸுகமாக விளையாடிக் கொண்டிருந்தாள்.
அவ்வநிருத்தன், அவளால் தன் அந்தப்புரத்தில் மறைத்து வைத்துச் சிறந்த வஸ்த்ரம், பூமாலை, கந்தம், தூபம், தீபம், ஆஸனம் முதலியவைகளாலும், பானம், போஜனம், பக்ஷ்யம் இவைகளாலும், இனிய உரைகளாலும், சுச்ரூஷையாலும் (பணிவிடையாலும்) பூஜிக்கப்பட்டு, நாள்தோறும் ஸ்னேஹம் வளரப் பெற்ற அவ்வுஷையால் இந்திரியங்கள் பறியுண்டு, பல நாட்கள் கடந்தும் அதை அறியாதிருந்தான். அந்தப்புரத்துக் காவலர்கள் யதுகுலத்து வீரனாகிய அநிருத்தனால் அவ்வாறு அனுபவிக்கப்பட்டுக் கன்னித்தன்மையாகிற விரதம் அழியப்பெற்றிருக்கின்ற அந்த உஷையைக் கண்டு, மறைக்க முடியாத சிற்சில காரணங்களால் இவள் புருஷனால் தூஷிக்கப்பட்டவளென்று தெரிந்து கொண்டார்கள்.
அந்தப் படர்கள் மன்னவனிடம் சென்று “ராஜனே! கன்னித்தன்மையிலிருக்கின்ற உன் புதல்வி, குலத்தைக் கெடுக்கவல்ல நடத்தையிலிருப்பதாக எங்களுக்குத் தெரிய வருகின்றது. ப்ரபூ! நாங்கள் அந்தப்புரத்தில் எங்கும் அசையாதிருந்து, அவளைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம். புருஷர்கள் எவரும் அவளைக் கண்ணெடுத்துப் பார்க்கவும்கூட இடமில்லை. ஆயினும், அவளுக்குக் கெடு நடத்தை எப்படி நேர்ந்ததோ தெரியவில்லை” என்று விண்ணப்பம் செய்தார்கள்.
அப்பால், பாணன் தன் புதல்வியின் கெடு நடத்தையைக் கேட்டு மன வருத்தமுற்று, விரைவுடன் கன்னிகையின் அந்தப்புரத்திற்குச் சென்று, யதுச்ரேஷ்டனும் மன்மதனுடைய அவதாரமாகிய ப்ரத்யும்னனுடைய புதல்வனும், ஜதத்திற்கெல்லாம் இணையில்லாத தனியழகனும், கறுத்த நிறமுடையவனும், பீதாம்பரம் உடுத்திருப்பவனும், தாமரையிதழ் போன்ற அழகிய கண்களும், திரண்டு உருண்டு நீண்ட புஜதண்டங்களும் (கைகளும்) விளங்கப்பெற்றுக் குண்டலங்களின் காந்தியாலும், முன்னெற்றி மயிர்களின் ஒளியாலும், புன்னகை அமைந்த கண்ணோக்கத்தினாலும், அலங்கரிக்கப்பட்ட முகமுடையவனுமாகிய அநிருத்தனைக் கண்டான்.
அவன், அப்பொழுது அந்த உஷையின் ஆலிங்கனத்தினால் அவளுடைய கொங்கைகளின் குங்குமக் குழம்பு படியப்பெற்றதும், வஸந்த காலத்து மல்லிப் புஷ்பங்களால் தொடுக்கப்பட்டதுமாகிய மாலையை மார்பில் அணிந்து, மிக்க மங்கள ஸ்வரூபையும், அன்பிற்கிடமுமாகிய அக்காதலியுடன் அவளுக்கெதிரில் உட்கார்ந்து பாசகைகளை (சொக்கட்டான்) ஆடிக் கொண்டிருந்தான்.
பாணன், அத்தகையனான அவ்வநிருத்தனைக் கண்டு மிகவும் வியப்புற்றான். மதுவம்சத்தில் பிறந்தவனாகிய அவ்வநிருத்தன், ஆயுதம் ஏந்திக்கொண்டிருக்கிற படர்களால் சூழப்பட்டிருக்கின்ற அந்தப் பாணனைக் கண்டு, யமன் போன்று அவர்களை வதிக்க விரும்பி, அங்கு அருகாமையிலிருந்த இரும்புத் தடியை எடுத்துக்கொண்டு, தன்னைப் பிடிக்க முயன்று சுற்றிலும் சுழன்று வருகின்றவர்களும், ஆயுதம் ஏந்தினவர்களுமாகிய அவர்களை, கொழுப்புடைய பன்றி நாய்களைக் கொல்வது போலக் கொன்றான். அவர்கள், அவனால் அடிக்கப்பட்டு, தலைகளும், துடைகளும், புஜங்களும் முறியப்பெற்று, அந்தப்புரத்தினின்று வெளிப்பட்டு ஓடிப் போனார்கள். பலிஷ்டனாகிய (பலசாலியான) பாணன், தன் ஸைன்யத்தை (படையை) வதிக்கின்ற அவ்வநிருத்தனைக் கோபமுற்று, நாகபாசங்களால் பந்தனம் செய்தான் (கட்டினான்). உஷை அநிருத்தன் கட்டுண்டதைக் கேட்டு, சோகத்தினாலும், துக்கத்தினாலும் தழதழத்து, கண்ணும் கண்ணீருமாய்க் கதறினாள்.
அறுபத்திரண்டாவது அத்தியாயம் முற்றிற்று.