புதன், 10 மார்ச், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 279

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – அறுபத்து மூன்றாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் யாதவ ஸைன்யத்துடன் சென்று, பாணனோடு யுத்தம் செய்கையில், ருத்ரன் ஸஹாயமாக வந்து, தோல்வியடைந்து, ஜ்வரத்தை (ஒரு வகை அஸ்த்ரம்) ப்ரயோகிக்க, ஸ்ரீக்ருஷ்ணன் அதைத் தடுக்க, அந்த ஜ்வரமும், ருத்ரனும் ஸ்ரீக்ருஷ்ணனை ஸ்தோத்ரம் செய்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பாரதனே! அநிருத்தனுடைய பந்துக்கள், அவனைக் காணாமல் வருந்திக் கொண்டிருக்கையில், வர்ஷா (மழைக்) காலமாகிய நான்கு மாதங்கள் கடந்தன. அவனுடைய பந்துக்களாகிய அந்த வ்ருஷ்ணிகள், நாரதர் மூலமாய் அவன் காணாது போன வ்ருத்தாந்தத்தின் விவரத்தையும், அவன் சத்ருக்களை வதித்தது முதலிய வ்ருத்தாந்தத்தையும், பாணனால் கட்டுண்டிருப்பதையும் கேள்விப்பட்டு, ஸ்ரீக்ருஷ்ணனால் பாதுகாக்கப்பட்டு, சோணிதபுரத்திற்குப் போனார்கள். 

ப்ரத்யும்னன், யுயுதானன், கதன், ஸாம்பன், ஸாரணன், நந்தன், பநந்தன், பத்ரன் ஆகிய இவர்கள் ராம, க்ருஷ்ணர்களைத் தொடர்ந்து பன்னிரண்டு அக்ஷௌஹிணி (தேர் 21870; குதிரை 65610; யானை 21870; காலாட் படை 109350 கொண்ட பெரும் படை அக்ஷௌஹிணி ஸைன்யம் எனப்படும்) ஸைன்யத்துடன் சென்று, பாணனுடைய நகரமாகிய சோணிதபுரத்தைச் சுற்றிலும் சூழ்ந்து, எல்லா திசைகளிலும் தகைந்தார்கள். 

அவர்கள், பட்டணத்து உத்யானங்களையும் (தோட்டங்களையும்), கோட்டைகளையும், கோட்டை மேல் கட்டடங்களையும், கோபுரங்களையும் முறித்துப் பாழ் செய்வதைக் கண்டு, பாணன் கோபமுற்று,  தானும் அவர்களைப் போலவே பன்னிரண்டு அக்ஷௌஹிணி ஸைன்யத்துடன் கூடிப் புறப்பட்டான். அப்பொழுது ருத்ரன், பாணனுக்கு உதவி செய்யும் பொருட்டு, தன் புதல்வனாகிய ஸுப்ரஹ்மண்யனோடு கூடி, ப்ரமதகணங்களால் (சிவனின் சேவகர்கள்) சூழப்பட்டு, நந்தியென்னும் வ்ருஷபத்தின் மேல் ஏறிக்கொண்டு வந்து, ராம, க்ருஷ்ணர்களோடு யுத்தம் செய்தான். ஸ்ரீக்ருஷ்ணன், ருத்ரன் இவர்களுக்கும், ப்ரத்யும்னன் - ஸுப்ரஹ்மண்யன் இவர்களுக்கும், மிகவும் துமுலமான (ஆரவாரம், குழப்பத்துடன் கூடிய) யுத்தம் நடந்தது. 

பலராமன், கும்பாண்டன் கூபகர்ணன் இவ்விருவரோடும், ஸாம்பன் பாணபுத்ரனோடும், ஸாத்யகி பாணனோடும் யுத்தம் செய்தார்கள். அந்த யுத்தம், மிகவும் அற்புதமாகிக் காண்போர்களுக்கும், கேட்போர்களுக்கும், மயிர்க்கூச்சலை விளைக்கக் கூடியதாயிருந்தது. ப்ரஹ்மதேவன் முதலிய தேவச்ரேஷ்டர்களும், ஸித்தர், சாரணர், கந்தர்வர், அப்ஸர மடந்தையர், யக்ஷர் ஆகிய இவர்களும் விமானங்களில் ஏறிக்கொண்டு, யுத்தம் பார்க்க வந்தார்கள். 

ஸ்ரீக்ருஷ்ணன், ருத்ரனைத் தொடர்ந்து வந்த பூதர், ப்ரேதர், குஹ்யகர், டாகினிகள், யாதுதானர், யக்ஷர், ராக்ஷஸர், விநாயகர், பூதங்கள், மாத்ரு தேவதைகள், பிசாசர், கூச்மாண்ட கணங்கள், ப்ரஹ்ம ராக்ஷஸர் ஆகிய இக்கூட்டங்களையெல்லாம் தன்னுடைய சார்ங்கமென்னும் தனுஸ்ஸினின்று புறப்படுகின்ற கூரிய நுனியுள்ள பாணங்களால் பறந்தோடத் துரத்தினான். பினாகமென்னும் தனுஸ்ஸை (வில்லை) ஏந்தின ருத்ரன், ஸ்ரீக்ருஷ்ணன் மேல் பலவிதமான அஸ்த்ரங்களை ப்ரயோகித்தான். சார்ங்கம் என்கிற வில்லை ஏந்திய அப்பரமன், வியப்பின்றி அவற்றையெல்லாம் உரிய பதில் அஸ்த்ரங்களால் தடுத்து விட்டான். அம்மஹானுபாவன், ப்ரஹ்மாஸ்த்ரத்திற்கு ப்ரஹ்மாஸ்த்ரத்தையும், வாயவ்யாஸ்த்திரற்குப் பர்வதாஸ்த்ரத்தையும், ஆக்னேயாஸ்த்ரத்திற்குப் பர்ஜன்யாஸ்த்ரத்தையும், பாசுபதாஸ்த்ரத்திற்கு நாராயணாஸ்த்ரத்தையும், ப்ரயோகித்தான். மற்றும், அந்த ஸ்ரீக்ருஷ்ணன் ருத்ரனை ஜ்ரும்பண (கொட்டாவி) அஸ்த்ரத்தினால் கொட்டாவி விட்டு உறக்கம் தலையெடுத்து, மதி மயங்கும்படி செய்து, பாணனுடைய ஸைன்யத்தைக் (படையை) கத்தி, கதை, பாணம், இவைகளால் அடித்தான். 

ஸுப்ரஹ்மண்யன் ப்ரத்யும்னனுடைய பாண ஸமூஹங்களால் நாற்புறத்திலும் பீடிக்கப்பட்டு, அவயவங்களினின்று ரத்தத்தைப் பெருக்கிக் கொண்டு, மயில் வாஹனத்துடன் யுத்த பூமியினின்று புறப்பட்டுப் போனான். 

கும்பாண்டன், கூபகர்ணன் இவ்விருவரும், பலராமனுடைய உலக்கையினால் அடியுண்டு, பூமியில் விழுந்தார்கள். அவனுடைய ஸைன்யங்களெல்லாம் (படைகளெல்லாம்), நாதன் மாண்டமையால் பயந்து, நாற்புறத்திலும் பறந்தோடின. பாணன், தன் ஸைன்யமெல்லாம் (படைகள்) நாற்புறத்திலும் சிதறியோடுவதைக் கண்டு, மிகவும் கோபாவேசமுற்று, ஸாத்யகியைத் துறந்து, ரதத்துடன் ஸ்ரீக்ருஷ்ணனை எதிர்த்துச் சென்றான். 

யுத்தத்தில் கொடிய மதமுடைய பாணன், ஒரே தடவையில் ஐந்நூறு தனுஸ்ஸுக்களையும் (வில்களை) இழுத்து வளைத்து, நாணேறிட்டு, ஒவ்வொன்றிலும் இரண்டு பாணங்களைத் தொடுத்து விடுத்தான். மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், ஒரே தடவையில் அந்தத் தனுஸ்ஸுக்களை (வில்லை) எல்லாம் அறுத்து, ஸாரதியையும், ரதத்தையும், குதிரைகளையும் அடித்து, சங்க நாதம் செய்தான். 

அந்தப் பாணனுடைய தாயாகிய கோடரையென்பவள், தன் பிள்ளையின் ப்ராணன்களைப் (உயிரைப்) பாதுகாக்க விரும்பி, அரையில் ஆடையின்றி, தலைமயிர்களை விரித்துக் கொண்டு, ஸ்ரீக்ருஷ்ணனுக்கு எதிரில் வந்து நின்றாள். அப்பால், ஸ்ரீக்ருஷ்ணன் அரையில் ஆடையின்றி இருக்கின்ற அந்தக் கோடரையைப் பார்க்கப் பொறாமல், முகத்தைக் குறுக்கே திருப்பிக்கொண்டான். ரதம் முறிந்து, தனுஸ்ஸுக்களும் அறுந்து, வருத்தமுற்றிருக்கின்ற பாணன், அந்த ஸமயம் பார்த்துப் பட்டணத்திற்குள் நுழைந்தான். 

பூதகணங்களெல்லாம் ஓடிப்போகையில், ருத்ரன் பயங்கரமான உருவமும், மூன்று தலைகளும், மூன்று பாதங்களும் உடைய பயங்கரமான ஜ்வரத்தை (ஒரு வகை அஸ்த்ரத்தைப்) ப்ரயோகித்தான். அந்த ஜ்வரம், பத்துத் திசைகளையும் தஹித்துக் கொண்டு, ஸ்ரீக்ருஷ்ணன் மேல் எதிர்த்து வந்து, சார்ங்கம் என்கிற வில்லை ஏந்திய அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய முன்னே நின்றது. அப்பால், தேவ தேவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், அந்த ஜ்வரத்தைக் கண்டு, வைஷ்ணவமான சீதஜ்வரத்தை ப்ரயோகித்தான். மாஹேஸ்வர ஜ்வரம், வைஷ்ணவ ஜ்வரம் ஆகிய அவ்விரண்டு ஜ்வரங்களும் ஒன்றோடொன்று யுத்தம் செய்தன. அப்பால், மாஹேச்வரஜ்வரம் வைஷ்ணவ ஜ்வரத்தினால் மிகவும் பீடிக்கப்பட்டு, ரோதனம் செய்தது (அழுதது). அந்த மாஹேஸ்வர ஜ்வரம் பயந்து, மற்ற எவ்விடத்திலும் அபயம் நேரப்பெறாமல், சரணம் பெற விரும்பிக் கைகளைக் குவித்துக் கொண்டு ஸ்ரீக்ருஷ்ணனை ஸ்தோத்ரம் செய்தது.

ஜ்வரம் சொல்லுகிறது:- ப்ரபஞ்சத்தின் ஸ்ருஷ்டி (படைத்தல்), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களுக்குக் (அழித்தல்) காரணனும், வேதமாகிற ப்ரமாணத்தினால் அறியப்படுகிறவனுமாகிய உன்னை, நான் சரணம் அடைகின்றேன். வேதாந்தங்களில் எது பரப்ரஹ்மமென்று கூறப்படுகிறதோ, அத்தகைய பரவஸ்து நீயே. உனக்குப் பசி, தாஹம் முதலிய ஊர்மிகள் (துன்ப அலைகள்) எவையும் கிடையாது. நீ மேன்மையுடைய ப்ரஹ்மாதிகளுக்கும் நியாமகன் (நியமிப்பவன்); அனைவர்க்கும் அந்தராத்மாவாயிருப்பவன். நீ அவயவங்களின்றிக் கேவல ஜ்ஞானாநந்தங்களே வடிவமாய் இருக்கப் பெற்றவன்; அளவற்ற சக்திகளுடையவன். காலம், தைவம் (விதி), கர்மம், ஜீவன் அந்தந்த வஸ்துக்களின் ஸ்வபாவம் (இயற்கைத் தன்மை), ப்ருதிவி முதலிய பஞ்ச பூதங்கள், ப்ரக்ருதி, ப்ராணன், புத்தி, அவஸ்தை, தேவ மனுஷ்யாதி சரீரம், கார்யகாரணங்களின் பரம்பரை ஆகிய இவையெல்லாம் உன்னுடைய ஸங்கல்ப ரூப ஜ்ஞானத்திற்கு அதீனமாய் (உட்பட்டு) இருப்பவை. நீ இவற்றின் ப்ரகாரங்களின்றி விலக்ஷணமாய் (வேறாய்) இருப்பவன். அத்தகைய உன்னை, நான் சரணம் அடைகின்றேன். 

லீலையாகிற காரணத்தினால், உன்னிடத்தில் பொருந்துகின்ற பற்பல பிறவிகளால் தேவதைகளையும், ஸத்புருஷர்களையும், தர்ம மர்யாதைகளையும் காக்கின்றாய். மற்றும், தவறான வழியில் இழிந்து ஸத்புருஷர்களுக்கு ஹிம்ஸை செய்கின்ற துஷ்டர்களை அழிக்கின்றாய். உன் பிறவிகளெல்லாம், பூமியின் பாரமாகிய துஷ்டர்களை அழிப்பதற்காகவே. 

நீ இப்பொழுது அவதரித்திருப்பதும், பூமியின் பாரத்தை நீக்கும் பொருட்டே. முதலில் சாந்தமாயிருப்பினும், கடைசியில் உக்ரமாகிப் பொறுக்க முடியாததும், உன் தேஜஸ்ஸினால் உதவி செய்யப்பெற்றதுமாகிய ஜ்வரத்தினால் (ஒரு வகை அஸ்த்ரம்) நான் தஹிக்கப்பட்டு வருந்துகிறேன். ஆகையால், சரணம் அடைந்திருக்கின்ற என்னைப் பாதுகாப்பாயாக. ப்ராணிகள் வருத்தமுற்று, வேறொரு ரக்ஷகன் கிடைப்பனோ என்னும் ஆசை தொடரப்பெற்று, எதுவரையில் உன் பாதங்களைப் பணியாதிருப்பார்களோ, அதுவரையிலுமே அவர்களுக்கு அவ்வருத்தம் தொடர்ந்து வருமன்றி, உன்னைப் பணிய முயன்றவர்களுக்கு அது நேராது. (ஆகையால், உன்னைச் சரணம் அடைந்த நான் இன்னம் வருந்துவது யுக்தமோ?). என்னைக் காப்பாயாக.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- தரிசிரனே! (மூன்று தலைகளையுடைய சைவஜ்வரமே!) உனக்கு நான் அருள் புரிந்தேன். உனக்கு, என் ஜ்வரத்தினிடத்தினின்று பயம் நீங்குமாக. எவன் நம்முடைய இந்த ஸம்வாதத்தை (உரையாடலை) நினைக்கிறானோ, அவனுக்கு உன்னிடத்தினின்று பயம் உண்டாகாதிருக்குமாக. (அவனை நீ வருத்திப் பயப்படுத்தலாகாது).

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மாஹேஸ்வர ஜ்வரம் (சிவனுடைய அஸ்த்ரம்) இவ்வாறு பகவானால் மொழியப் பெற்று, தன்னைப் பற்றினவர்களைக் கைவிடாமல் பாதுகாக்கும் தன்மையனான அந்த ஸ்ரீக்ருஷ்ணனுக்கு நமஸ்காரம் செய்து, மீண்டு போயிற்று. பாணனோவென்றால், மீளவும் யுத்தம் செய்ய முயன்று, ரதத்தில் ஏறிக்கொண்டு, ஸ்ரீக்ருஷ்ணனை எதிர்த்து வந்தான். மன்னவனே! அப்பால் ஆயிரம் புஜங்களால் பல ஆயுதங்களைத் தரித்திருக்கின்ற பாணாஸுரன் கோபமுற்று, சக்ராயுதந்தரித்த ஸ்ரீக்ருஷ்ணன் மேல் இரும்புத்தடியை எறிந்தான். மஹானுபாவனாகிய, வ்ருக்ஷத்தின் (மரத்தின்) கிளைகளைச் சேதிப்பது (வெட்டுவது) போல, அஸ்த்ரங்களை ஓயாமல் ப்ரயோகிக்கின்ற அந்தப் பாணனுடைய புஜங்களைச் (கைகளைச்) சக்ராயுதத்தினால் சேதித்தான் (வெட்டினான்). இவ்வாறு பாணனுடைய புஜங்கள் சேதிக்கப்படுகையில் (வெட்டப்படுகையில்), மஹானுபாவனும், பக்தர்களிடத்தில் மன இரக்கமுடையவனுமாகிய ருத்ரன், ஸ்ரீக்ருஷ்ணனிடம் வந்து, மேல்வருமாறு கூறினான்.

ருத்ரன் சொல்லுகிறான்:- வேதாந்தங்களில் மறைக்கப்பட்டிருக்கின்ற பரப்ரஹ்மம் நீயே. நீ ஜ்ஞான ஸ்வரூபன்; ஸ்வயம்ப்ரகாசன். யோக அப்யாஸத்தினால் (யோகப் பயிற்சியால்) பரிசுத்தமான மனமுடைய பெரியோர்கள், உன்னை அறிவார்கள் அன்றி, மற்றவர் அறியமாட்டார்கள். நீ, ஆகாயம் போல் எவ்வகை விகாரங்களும் தீண்டப் பெறாதவன். ஆகாசம், உன்னுடைய நாபி (தொப்புள்). அக்னி, உன் முகம். ஜலம் உன்னுடைய ரேதஸ்ஸு (விந்து). த்யுலோகம் உன் சிரஸ்ஸு. திசைகள், உன் காது. பூமி உன் பாதம். சந்திரன் உன் மனம். ஸூர்யன் உன்னுடைய நேத்ரம். நான் உன்னுடைய அஹங்காரம். ஸமுத்ரம் உன் வயிறு. இந்த்ராதிகள் உன் புஜங்கள் (கைகள்). ஓஷதிகள் (செடி, கொடிகள்) உன் ரோமங்கள். மேகங்கள் உன் கேசங்கள் (கூந்தல்). ப்ரஹ்மதேவன் உன் புத்தி. ப்ரஜாபதி உன்னுடைய ஆண் குறி. தர்மம் உன் ஹ்ருதயம். இவ்வாறு நீ உலகங்களால் ஏற்பட்ட அவயவங்களையுடையவன். நீயே புருஷன். 

எங்கும் தடைபடாத ஒளியுடையவனே! தர்மத்தைப் பாதுகாப்பதற்காகவும், உலகத்தின் க்ஷேமத்திற்காகவும், நீ இவ்வாறு அவதரித்திருக்கின்றாய். லோக பாலர்களாகிய நாங்கள், அனைவரும் உன்னால் படைத்துப் பாதுகாக்கப்பட்டு, ஏழு உலகங்களையும் பாதுகாத்து வருகின்றோம். இந்த உலகங்களுக்கு நீயே காரணன். நீ இந்த உலகங்களைப் படைப்பதற்கு முன்பு, நாம (பெயர்) ரூப (உருவம்)  விபாகங்களுக்கு (வேற்றுமைகளுக்கு)  இடமல்லாத ஸூக்ஷ்ம (கண்ணுக்குப் புலனாகாத நுட்பமான) சேதனாசேதனங்களைச் (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைச்) சரீரமாகக் கொண்டு, ஒருவனேயாய் இருந்தாய். ஜகத்திற்கு உபாதான காரணனான  (மண் குடத்திற்கு மண் போல் material cause) பரம புருஷன் நீயே. உன்னை உபாதான காரணமாகக் கொண்டு வேறொருவன் உலகங்களைப் படைக்கிறானென்பது இல்லை. நீயே உபாதான காரணமும், நிமித்த காரணமுமாய் (மண் குடத்திற்கு குயவன் போல் efficient cause) இருந்து உலகங்களைப் படைக்கின்றனையன்றி, உன்னையொழிய வேறொரு நிமித்த காரணன் இல்லை. (ஜ்ஞான, சக்தி முதலிய குணங்களையுடைய நீ, நிமித்த காரணமாயிருந்து, ஸூக்ஷ்ம சேதனாசேதனங்களைச் (கண்ணுக்குப் புலனாகாத நுட்பமான, அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைச்) சரீரமாகவுடைய உன்னையே உபாதான காரணமாகக் கொண்டு, ஸ்தூல சேதனாசேதன ரூபமான (பெயர், உருவம் உடைய  அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக் கொண்ட) இந்த உலகங்களைப் படைக்கின்றாய். 

நீ ஜ்ஞான ஸ்வரூபன்; ஸ்வயம்ப்ரகாசன்; ஜாகர (விழிப்பு), ஸ்வப்ன (கனவு) ஸுஷுப்தி (ஆழ்ந்த உறக்கம்) என்கிற மூன்று அவஸ்தைகளின் ஸம்பந்தமற்றவன். ஆகையால், ப்ரக்ருதி, ஜீவன் இவ்விரண்டைக் காட்டிலும் விலக்ஷணமாக (வேறாக) இருப்பவன். ஆகையால், நீயே அனைத்திற்கும் காரணன். உனக்கு வேறொரு காரணம் கிடையாது. நீயே ஸர்வேச்வரன். ஒரே வஸ்துவுக்கு உபாதான காரணமாயிருக்கை, நிமித்த காரணமாயிருக்கை ஆகிய இவ்விரண்டு தன்மைகளும் சேரமாட்டாது. ஆயினும், உன் குணங்கள் போல் உன்னை விட்டுப்பிரியாதிருக்கின்ற ப்ரக்ருதி, புருஷாதிகளுக்குத் தேவத்வம், மனுஷ்யத்வம் முதலிய ஆகாரங்கள் ஸித்திக்கும் பொருட்டு, தன் ஸங்கல்பத்தினால் அந்த ப்ரக்ருதி புருஷர்களின் ஸ்வரூபம் (இயற்கைத் தன்மை), மாறுதல், ஸ்வபாவம் (குணங்கள்) மாறுதல் ஆகிய விகாரங்களுக்குத் தகுந்தபடி அவற்றிற்கு அந்தராத்மாவாகவும் நாம ரூபங்களுக்கு நிர்வாஹகனாகவும் (நியமிப்பவனாயும்) இருக்கின்றாய் என்று வேதாந்த வாக்யங்களாகிற ப்ரமாணங்களால் அறியப்படுகின்றாய். (உன்னிடத்தில், பொருந்தாத் தன்மைகளும் பொருந்துகின்றன என்று வேதாந்தங்கள் கூறுகின்றனவாகையால், இவை எப்படி ஓரிடத்தில் சேருமென்று ஸந்தேஹிக்க இடம் இல்லை. இந்திரியங்களுக்கு எட்டாத விஷயத்தில், சப்த ப்ரமாணம் (வேதம்) எப்படி சொல்லுகிறதோ அப்படியே ஒப்புக் கொள்ள வேண்டுமல்லவா?) 

அளவற்ற மஹிமையுடையவனே! ஸூர்யன் மேகாதிகளால் தன் ஸ்வரூப, ஸ்வபாவங்கள் மறைக்கப்படாதவனாகி, அந்த மேகாதிகளையும் அவற்றால் மறைக்கப்பட்ட மற்ற உருவங்களையும், நன்கு விளங்கச் செய்வது போல, நீயும் ஸத்வாதி குணமயமான ப்ரக்ருதியினால் (அறிவற்ற ஜடப்பொருட்களுக்கு மூலமான மூலப்ரக்ருதி) தன் ஸ்வரூப (இயற்கைத் தன்மை), ஸ்வபாவங்கள் (குணங்கள்) மறைக்கப்படாதவனாகி, ப்ரக்ருதியையும், அதன் கார்யங்களையும், அவற்றின் குணங்களையும் விளங்கச் செய்கின்றாய். நீ ஸ்வயம் ப்ரகாசன். ப்ராணிகள் அனைவரும் உன் மாயையினால் மதிமயங்கி, மகன், மனைவி, மனை முதலியவற்றில் மனவிருப்பமுற்று, துயரமாகிற ஸமுத்ரத்தில் மிதப்பதும், முழுகுவதுமாய் இருக்கின்றார்கள். 

அளவற்ற அருளுடைய உன்னால் கொடுக்கப்பட்டதும், உன்னுடைய ஆராதனத்திற்கே உரியதும், உன் மாயையைக் கடப்பதற்கு ஸாதனமுமாயிருக்கின்ற இந்த மனுஷ்ய தேஹத்தைப் பெற்றும் எவன் உன் பாதங்களைப் பணியாதிருக்கிறானோ, அவன் ஆத்ம வஞ்சகனல்லவா (தன்னைத் தானே ஏமாற்றுபவன் அல்லவா)? (அவன் தன்னுடைய தோஷத்தினால் தான் துக்கிக்கிறானாகையால், அதில் உன்னுடைய தோஷம் ஒன்றும் இல்லை). எவன், தான் மரணம் அடையும் தன்மையனாகித் தனக்கு அந்தராத்மாவும், அன்பனும், ஈச்வரனுமாகிய உன்னைப் பணியாமல் துறந்து, உனக்கு நேர் விபரீதங்களான சப்தாதி விஷயங்களில் (உலக இன்பங்களில்) விருப்பமுற்று, அவை நேரப்பெறாமல், வருந்துகிறானோ, அவன் விஷமென்னும் புத்தியால் அம்ருதத்தைத் துறந்து, அம்ருதமென்று விஷத்தைக் கைப்பற்றுகிறான் (அவன் பெரியோர்களால் மிகவும் சோகிக்கத் தகுந்தவன்). 

ருத்ரனென்று பெயர் பெற்ற நானும், ப்ரஹ்ம தேவனும், தேவதைகளும், தூய மனத்தரான முனிவர்களும், அந்தராத்மாவும் மிகுந்த நண்பனும் ஈச்வரனுமாகிய உன்னையே ஸர்வ ப்ரகாரத்தாலும் சரணம் அடைந்திருக்கின்றோம். 

தேவனே! அத்தகைய குணங்கள் அமைந்தவனும், ஜகக்தின் ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களுக்குக் (அழிவு) காரணனும், வைஷம்யம் அற்றவனும் (சம நோக்கு உள்ளவனும்), பசி, தாஹம் முதலிய ஊர்மிகள் (துன்ப அலைகள்) தீண்டப்பெறாதவனும், தன்னைப் பணிந்தவர்களுக்கும் (அந்தப் பசி தாஹம் முதலிய ஊர்மிகள் தீண்டப் பெறாதிருக்கும் தன்மையை) அத்தன்மையை விளைப்பவனும், ஸமஸ்த பூதங்களுக்கும் நண்பனும், ஸ்வதந்த்ரனும், தன்னைப் போன்ற வேறொரு வஸ்துவும், தனக்கு மேற்பட்ட வஸ்துவும் இல்லாதவனும், ஜகத் ஸ்வரூபனும், எங்களுக்கு அவலம்பமாய் (பற்றாய்) இருப்பவனும், தனக்குத் தானே ஆதாரனுமாகிய உன்னை நாங்கள் இஹ (இந்த உலக), பரலோக (வேறு உலக) ஸுகங்களுக்காகவும், மோக்ஷத்திற்காகவும் பணிகின்றோம். 

இந்தப் பாணன், உன் பக்தனாகிய எனக்குப் பக்தன்; அன்பிற்கிடமானவன். என்னையே தொடர்ந்திருப்பவன். தேவனே! இந்த பாணனுக்கு நான் அபயம் கொடுத்திருக்கிறேன். அதை நீ நிறைவேற்ற வேண்டும். இதுவே நீ செய்யவேண்டிய அனுக்ரஹம். நீ ப்ரஹ்லாதனுக்கு உன் வம்சத்தில் பிறந்தவனை நான் வதிக்கிறதில்லையென்று அருள்புரிந்தாய் அல்லவா?அதைத் தொடர்ந்து, இவனைக் காப்பாயாக.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- மஹானுபாவனே! நீ என்ன மொழிந்தாயோ, அதை அப்படியே செய்கிறேன். உனக்கு எது ப்ரியமோ, அது எனக்கும் ப்ரியமே. நீ எதைச் செய்ய வேண்டுமென்று நிச்சயித்திருக்கின்றனையோ, அதை நான் நல்லதென்று அனுமோதனம் செய்தேன் (ஆமோதிக்கிறேன்). உன் வம்சத்தில் பிறந்தவனை நான் வதிக்கிறதில்லை என்று நான் ப்ரஹ்லாதனுக்கு வரம் கொடுத்திருக்கிறேனாகையால், பலியின் புத்ரனாகிய இந்தப் பாணாஸுரன் எனக்கும் வதிக்கத் தகுந்தவனல்லன். இவனுடைய கொழுப்பை அடக்கும் பொருட்டு, புஜங்களைச் (கைகளை) சேதித்தேன் (வெட்டினேன்). பூமியின் பாரத்தை நீக்கும் பொருட்டு, அளவற்றதாகிய இவனுடைய ஸைன்யத்தையும் பாழ்செய்தேன். இவனுக்கு நான்கு புஜங்களை மிகுத்தி விட்டேன். இவன் இந்தப் புஜங்களோடு ஜரா (கிழத்தனம்), மரணங்கள் (இறப்பு) அற்றிருப்பான். மற்றும், உன் ப்ருத்யர்களில் (சேவகர்களில்) முக்யனாகிய இவன், எவ்விதத்திலும் பயமற்றிருப்பான்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:– அந்தப் பாணாஸுரன், இவ்வாறு அபயம் பெற்று, ஸ்ரீக்ருஷ்ணனைச் சிரத்தினால் வணங்கி, பட்டணம் சென்று, அநிருத்தனையும் அவன் பார்யையாகிய தன் புதல்வியையும் ரதத்தில் ஏற்றிக் கொண்டு வந்தான். அழகிய ஆடைகளை உடுத்து, சிறந்த ஆபரணங்களை அணிந்து, அக்ஷௌஹிணி ஸைன்யத்தினால் சூழப்பட்டு, காதலியுடன் திகழ்கின்ற அநிருத்தனை முன்னிட்டுக் கொண்டு, ருத்ரனால் அபிநந்தனம் செய்யப்பெற்று (மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டு), பாணாஸுரன் பின் தொடர்ந்து வந்தான். இவ்வாறு பாணாஸுரன் கொண்டு வந்து சேர்த்த அநிருத்தனுடன் கூடி ஸ்ரீக்ருஷ்ணன், சங்கம், கனகத்தம்பட்டை, துந்துபி முதலிய வாத்ய கோஷங்களுடன், பட்டணத்து ஜனங்களும், நண்பர்களும், ப்ராஹ்மணர்களும் எதிர் கொண்டு வரப் பெற்று, தோரணங்களோடு கூடிய த்வஜங்களால் (கொடிகளால்) அலங்காரம் செய்து ராஜமார்க்கங்களும், நாற்சந்தி வீதிகளும் ஜலம் தெளித்து விளக்கப் பெற்றிருப்பதுமாகிய த்வாரகாபுரிக்குச் சென்றான். எவன் ஸ்ரீக்ருஷ்ணனுக்கு ருத்ரனோடு நடந்த இந்த வ்ருத்தாந்தத்தையும், ஸ்ரீக்ருஷ்ணனுடைய விஜயத்தையும், காலையில் எழுந்து நினைக்கிறானோ, அவனுக்கு எங்கும் எப்பொழுதும் பராஜயம் (தோல்வி) உண்டாகாது. 

அறுபத்து மூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக