தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – அறுபத்து நான்காவது அத்தியாயம்
(ந்ருக உபாக்யானம் – ந்ருக மன்னனின் கதை)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ராஜனே! ஒருகால், ஸாம்யன், ப்ரத்யும்னன், சாருபானு, கதன் முதலிய யதுகுமாரர்கள் விளையாடுவதற்காக உபவனத்திற்குச் சென்றார்கள். அவர்கள், அவ்விடத்தில் வெகுநேரம் விளையாடித் தண்ணீர் தாஹம் உண்டாகப் பெற்று, ஜலத்தைத் தேடிக்கொண்டு திரியும் பொழுது, ஓரிடத்தில் ஜலமில்லாத கிணற்றில் இருப்பதும், பெரியதும், அற்புதமுமாகிய ஓணானென்னும் ஒரு ஜந்துவைக் (உயிரினத்தைக்) கண்டார்கள்.
அந்த யாதவ குமாரர்கள், பர்வதம் போன்ற ஓணானைக் கண்டு மனத்தில் வியப்புற்று, மன இரக்கத்துடன் அதை எடுக்க ப்ரயத்னம் (முயற்சி) செய்தார்கள். கிணற்றில் விழுந்திருக்கின்ற அவ்வோணானை, அப்பாலகர்கள் தோல் கயிறுகளாலும், நூல் கயிறுகளாலும் கட்டி, மேலெடுக்க முயன்றும் வல்லமையற்று, ஆவலுடன் அந்த வ்ருத்தாந்தத்தை ஸ்ரீக்ருஷ்ணனுக்குச் சொன்னார்கள்.
தாமரைக் கண்ணனும், ஷாட்குண்யபூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), உலகங்களைப் பாதுகாப்பவனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன், அவ்விடம் போய்ப் பார்த்து, அதை அவலீலையாகவே (விளையாட்டாகவே) இடக்கையினால் எடுத்தான். அவ்வாறு எடுக்கப்பட்ட அவ்வோணான், உத்தம ச்லோகனாகிய ஸ்ரீக்ருஷ்ணனுடைய கரம் (கை) பட்ட மாத்ரத்தில், தத்க்ஷணமே (அந்த நொடியே) அந்த ஓணான் உருவத்தைத் துறந்து, உருக்கி அழுக்கெடுத்த பொன் போன்ற அழகிய நிறத்துடன் அற்புதமான ஆபரணங்களும், ஆடைகளும், பூமாலையும் அணிந்து விளங்குகின்ற ஒரு தேவனாகத் தோற்றினான். ஸ்ரீக்ருஷ்ணன், அவனுக்கு ஒணான் ஜன்மம் வந்ததற்குக் காரணம் இன்னதென்பதை அறிந்தவனாயினும், அதை ஜனங்களுக்கு வெளியிட விரும்பி வினவினான்.
ஸ்ரீக்ருஷ்ணன் சொல்லுகிறான்:– மிகுந்த பாக்யமுடையவனே! சிறந்த உருவமுடைய நீ யாவன். நாங்கள் உன்னைத் தேவ ச்ரேஷ்டனென்று நிச்சமாய் நினைக்கின்றோம். நீ இத்தகைய நிஹீன ஜன்மம் (தாழ்ந்த பிறவி) பெறுதற்கு உரியவனல்லை. மிகுந்த மங்கள ஸ்வரூபனே! நீ எந்தக் கர்மத்தினால் இத்தசையை அடைந்தாய். எங்களுக்குச் சொல்லக்கூடுமென்று நீ நினைப்பாயாயின், உன்னைப்பற்றி அறிய விரும்புகிற எங்களுக்கு இதையெல்லாம் விசதமாகச் (விரிவாகச்) சொல்வாயாக.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- காண்போர் மனம் களிக்கும்படி மிகவும் அழகான உருவமுடைய ஸ்ரீக்ருஷ்ணனால் இவ்வாறு வினவப்பெற்ற மானிட ஜாதியாகிய அம்மன்னவன், ஸூர்யனோடொத்த ஒளியுடைய கிரீடத்துடன் வணங்கி, இவ்வாறு மொழிந்தான்.
ந்ருகன் சொல்லுகிறான்:- நான் ந்ருகனென்னும் பெயருடைய ராஜ ச்ரேஷ்டன், இக்ஷ்வாகுவின் புதல்வன். ப்ரபூ! கொடை வள்ளல்கள் குணத்தைப் புகழும் வரலாற்றில் என்னைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். நாதனே! நீ ஸமஸ்த ப்ராணிகளுடைய புத்தியையும் ஸாக்ஷாத்கரிப்பவன். உன்னறிவு, காலத்தினால் அழிகிறதில்லை. ஆகையால், உனக்கு எதுதான் தெரியாது? ஆயினும், உன்னுடைய ஆஜ்ஞையினால் (கட்டளையினால்) சொல்லுகிறேன்.
பூமியில் எவ்வளவு மணல்களோ, ஆகாயத்தில் எவ்வளவு நக்ஷத்ரங்களோ, மழைத்தாரைகள் எவ்வளவோ, அவ்வளவு பசுக்களைத் தானம் செய்தேன். அபாரமாகப் பால் கறப்பவைகளும், யௌவன (இளம்) வயதுடையவைகளும், அழகிய உருவமும் நல்லியற்கையும் மற்றும் பல குணங்களும் அமைந்து பொன்னிறமுடையவைகளும், கொம்புகளில் பொன்னலங்காரமும், குளம்புகளில் வெள்ளியலங்காரமும், செய்யப் பெற்று, ந்யாயத்தினால் ஸம்பாதிக்கப்பட்டவைகளும், கன்றோடு கூடியவைகளும், வெண்பட்டும், பூமாலையும், பல ஆபரணங்களும் இடப்பெற்றுத் திகழ்கின்றவைகளுமாகிய பசுக்களைக் கொடுத்தேன். நற்குணங்களும், நல்லொழுக்கமும் அமைந்து வருந்துகின்ற குடும்பமுடையவர்களும், வ்ரதங்களை உண்மையாக அனுஷ்டிப்பவர்களும், தவம், சாஸ்த்ர ஜ்ஞானம் இவை அமைந்து வேதமோதி உணர்ந்தவர்களும், யௌவன (இளம்) வயதுடையவர்களுமாகிய ப்ராஹ்மண ச்ரேஷ்டர்களுக்குக் கொடுத்தேன். பசு, பூமி, ஸ்வர்ணம், வீடு, குதிரை, யானை, தாஸிகளோடு கூடின கன்னிகைகள், எள்ளு, வெள்ளி படுக்கை, வஸ்த்ரம், ரத்னம், வீட்டிற்கு வேண்டிய கருவிகள், தேர் இவைகளையும் கொடுத்தேன். யாகங்களையும் செய்தேன். குளம், கிணறு வெட்டுவித்தல் முதலிய ஸ்மார்த்த கர்மங்களையும் நடத்தினேன்.
இப்படியிருக்கையில், ஒரு ப்ராஹ்மண ச்ரேஷ்டனுடைய பசு தவறி என் பசுமந்தையில் கலந்து போய்விட்டது. நான், இதை முன்னமே ஒருவருக்குக் கொடுத்தோமென்பதை அறியாமல், அதை மற்றொரு ப்ராஹ்மணனுக்குக் கொடுத்தேன். அதை அவன் கொண்டு போகையில், அந்தப் பசுவுக்குடைய அந்தணன் “இது என்னுடையது” என்றான். என்னிடத்தினின்று வாங்கிக்கொண்டு போன மற்றொருவன், “இது என்னுடையது, எனக்கு ந்ருகன் கொடுத்தான்” என்றான்.
அந்த ப்ராஹ்மணர்கள் இருவரும் ஒருவரோடொருவர் விவாதப்பட்டுக் கொண்டு, தத்தம் கார்யத்தை நிறைவேற்றிக் கொள்ள முயன்று, என்னிடம் வந்து, “நீயே கொடுத்தாய். நீயே அதை மீளவும் அபஹரித்துக் கொள்கின்றாய்” என்று சொன்னார்கள். அதைக் கேட்டு, எனக்கும் ப்ரமம் (மனக்கலக்கம்) உண்டாயிற்று. அப்பொழுது, தர்ம ஸங்கடத்தை அடைந்த நான், “அந்தணர்களே! மிகவும் சிறப்புடைய லக்ஷம் பசுக்களைக் கொடுக்கின்றேன். இந்தப் பசுவை எனக்குக் கொடுப்பீர்களாக. நான் உங்களுக்குக் கிங்கரன் (சேவகன்). அறியாமல் இவ்வாறு செய்து விட்டேன். ஆகையால், என்னிடத்தில் அனுக்ரஹம் செய்வீர்களாக. பாப தோஷத்தினால் அசுசியான (தூய்மையற்ற) நரகத்தில் விழுகின்ற என்னை இந்த வருத்தத்தினின்று கரையேற்றுவீர்களாக” என்று நல்வார்த்தைகளைச் சொல்லி, வேண்டினேன்.
அவர்களில் பசுவுக்குடையவராகிய ஒருவர், “ராஜனே! நீ கொடுத்த இந்தப் பசுவையே கொண்டு போவேனன்றி, வேறு லக்ஷம் பசுக்களைக் கொடுக்கிலும் பெற்றுக் கொள்ளமாட்டேன்” என்று சொல்லிப் போய் விட்டார்.
பிற்பாடு, என்னிடத்தில் அந்தப் பசுவை வாங்கிக்கொண்ட மற்றொருவரும், “நீ சொன்ன லக்ஷம் பசுக்களுக்கு மேல் பதினாயிரம் பசுக்களைக் கொடுக்கிலும், இந்தப் பசுவை விட்டு அவற்றைப் பெற்றுக்கொள்ளமாட்டேன்” என்று சொல்லி அதைத் துறந்து விட்டுப் போனார்.
பரமனே! அப்பால் உன்னுடைய ஸங்கல்பத்தின்படி சில காலம் செல்ல, நான் மரணம் அடைந்து, தேவனே! தெய்வச் செயலால் எவ்விடம் கொண்டு போகப் பெற்றேனோ அதை உன்னெதிரில் சொல்லுகிறேன். தேவர்களுக்கும் தேவனே! உலகங்களுக்கெல்லாம் நாதனே! நான் மரணம் அடைகையில், இதற்கு முன் என்னிடத்தில் பாபமில்லாமையால், என்னைக் கொண்டு போக இடமில்லாதிருந்த யமபடர்கள், இச்சமயம் பார்த்து என்னை யமனிடம் கொண்டு போனார்கள். அங்கு யமன் என்னைப் பார்த்து, “மன்னவனே! நீ முன்பு பாபத்தின் பலனை அனுபவிக்கிறாயா! அல்லது புண்யத்தின் பலனை அனுபவிக்கிறாயா! நீ செய்த தான தர்மத்தின் பலன் ஸமீபித்து வந்து விளங்குகின்றது. எனக்கு அதன் எல்லையே தெரியவில்லை. (உன்னுடைய புண்ய பலன் அபாரமாயிருக்கின்றது) என்றான். நான் அதைக்கேட்டுப் “பாபத்தின் பலனை முன்னம் அனுபவிக்கிறேன்” என்றேன். யமனும் அதற்கு, “ஆயின் நரகத்தில் விழுவாய்” என்றான்.
ப்ரபூ! அப்பொழுதே நான் விழத் தொடங்கி, என்னை ஓணானாயிருக்கக் கண்டேன். கேசவனே! ப்ராஹ்மண குலத்திற்கு வேண்டிய நன்மைகள் செய்பவனும், தானத்தில் புகழ் பெற்றவனும், உன்னுடைய தாஸனும், உன் காட்சியை விரும்புகின்றவனுமாகிய எனக்கு, இப்பொழுதும்கூட முன் ஜன்மத்தின் நினைவு மறையவில்லை.
ப்ரபூ! நான் எவனைக் காண வேணுமென்று நெடுநாளாய் விரும்பிக் கொண்டிருப்பினும் காணப்பெறாதிருந்தேனோ, அப்படிப்பட்ட நீ எப்படி என் கண்ணுக்குப் புலப்பட்டாய். நீ பரமாத்மன். கட் கண்ணுக்குத் (ஸாதாரண கண்களுக்குத்) தோற்றுபவனல்லை). மற்றும், நீ யோகீச்வரர்களால் உபநிஷத்துக்களாகிற கண்ணால் நிர்மலமான ஹ்ருதயத்தில் சிந்திக்கத் தகுந்தவனேயன்றி, அவர்களுடைய கண்களுக்கும் கூடத் தோற்றமாட்டாய். இந்த்ரியங்களால் விளையும் அறிவுகளுக்கு எட்டாதவனே! எவனுக்கு ஸம்ஸார பந்தம் அழியுங்காலம் அமைந்திருக்குமோ, அவன் அளவற்ற ஸம்ஸார துக்கங்களால் மதி (புத்தி) மயங்கியிருப்பினும், அவனுடைய ஹ்ருதயத்திற்குச் சாந்தியை விளைத்து, அதில் நீ தோற்றுந்தன்மையன்.
தேவர்களுக்கும் தேவனே! ஜகந்நாதனே! பூமியைப் பாதுகாப்பதற்காக அவதரித்தவனே! பசுக்களை மேய்த்துக் கோவிந்தனென்று பட்டாபிஷேகம் செய்யப்பெற்றவனே! புருஷோத்தம! நாராயணா! இந்த்ரியங்களுக்கு நியாமகனே (நியமிப்பவனே)! புண்யலோகனே! பக்தர்களை என்றும் கைவிடாதவனே! எவ்வித விகாரங்களும் தீண்டப் பெறாதவனே! ஸ்ரீக்ருஷ்ணா! ப்ரபூ! ஸ்வர்க்க லோகத்திற்குப் போக முயன்றிருக்கின்ற எனக்கு, அனுமதி கொடுப்பாயாக. நான் எங்கே இருப்பினும், என் மனம் உன் பாதார விந்தங்களில் ஊக்கமுற்றிருக்கும்படி அனுக்ரஹம் செய்வாயாக. எல்லாப் பொருள்களையும் சரீரமாகவுடையவனாகையால், எல்லாம் தானேயாயிருப்பவனே! ஸ்வரூபத்தினாலும், குணங்களாலும் அளவற்றவனும், எல்லையில்லாத சக்திகளுடையவனும், ஜகத்திற்கு க்ஷேமம் விளைப்பவனும், வஸுதேவ குமாரனாய்த் தோன்றி, வாஸுதேவனென்று பெயர் பெற்றவனும், யோகங்களுக்கு நிர்வாஹகனுமாகிய (நியமிப்பவனுமான) உனக்கு நமஸ்காரம்.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அம்மன்னவன் இவ்வாறு மொழிந்து, அந்த ஸ்ரீக்ருஷ்ணனை ப்ரதக்ஷிணம் செய்து (வலம் வந்து), தன் கிரீடத்தினால் அவனுடைய பாதங்களை ஸ்பர்சித்து, அவனால் விடை கொடுக்கப் பெற்று, ஜனங்கள் பார்த்துக் கொண்டிருக்கையில், சிறந்த விமானத்தில் ஏறிக்கொண்டான். ப்ராஹ்மண குலத்தையே தெய்வமாகவுடையவனும், தர்மத்தில் நிலைநின்ற மதியுடையவனும், ஷாட்குண்ய பூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), தேவகியின் குமாரனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன், க்ஷத்ரியர்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டு, தன் பரிஜனங்களைக் குறித்து இவ்வாறு மொழிந்தான்.
ஸ்ரீகிருஷ்ணன் சொல்லுகிறான்:- அக்னியைப் போன்ற மஹா தேஜிஷ்டனும் (சிறந்த ஒளி வீசுபவனும்), ப்ராஹ்மணனுடைய ஸொத்தைச் சிறிதாயினும் புசிப்பானாயின், அது அவனுக்கு வருந்தியும் ஜரிப்பித்துக்கொள்ள (ஜீரணிக்க) முடியாது. தங்களை ப்ரபுக்களென்று அபிமானித்துக் கொண்டிருக்கிற மன்னவர்களுக்கு, அது ஜரிக்காது (ஜீரணிக்காது) என்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? நான் ஹாலாஹல விஷத்தையுங்கூட (பாற்கடலை தேவர்களும் அஸுரர்களும் கடைந்த போது வெளிவந்த விஷம் ஹாலாஹல விஷம்; ருத்ரனால் பருகப்பட்டது.) விஷமென்று நினைக்கவில்லை. அதை ஒளஷதம் (மூலிகை) முதலியவைகளால் தடைசெய்ய முடியும். ப்ராஹ்மணர்களின் ஸொத்தே விஷமென்று கூறப்பட்டது. இந்த விஷத்திற்கு இப்புவியில் எவ்விதத்திலும் தடை செய்ய முடியாது.
விஷம், சாப்பிடுகிறவனை மாத்ரமே ஹிம்ஸிக்கும். அக்னி ஜலத்தினால் அணைந்து போய்விடும். ப்ராஹ்மணர் ஸொத்தாகிற அரணிக்கட்டையினின்று உண்டான அக்னியோ என்றால், குலத்தை அடியோடு தஹித்து (எரித்து) விடுகின்றது. ப்ராஹ்மணர் ஸொத்தை ஒருவன் தெரியாமல் புசிப்பானாயின், அது புசிக்கிறவன், அவன் பிள்ளை, அவன் பேரன் ஆகிய மூன்று புருஷர்களையும் அழிக்கும். தெரிந்தும் பலம் இருக்கிறதென்று ஹடத்தினால் (பலாத்காரமாக) பறித்துப் புசிப்பானாயின், அது அவனுக்கு முன்புள்ள பத்து தலைமுறைகளையும் மேல் வரப்போகிற பத்து தலைமுறைகளையும் அழித்துவிடும். எவர்கள் ப்ராஹ்மணர் ஸொத்தைத் தெரிந்தும் மேல் விழுந்து விரும்புகிறார்களோ, அத்தகைய மன்னவர்கள் ராஜ்ய லக்ஷ்மியால் விவேகமற்றுத் தாங்கள் நரகத்தில் விழுவதை ஆலோசிக்கிறதில்லை. ஆகையால், அவர்கள் கேவலம் ஒன்றுமறியாத மூடர்கள்.
தானசீலர்களும், குடும்பிகளுமாகிய (குடும்பத்தோடு இருப்பவர்களுமான) ப்ராஹ்மணர்கள், பணம் பறியுண்டு வருந்துவார்களாயின், அவர்களுடைய கண்ணீர்கள் பூமியில் விழுந்து எத்தனை தூட்களை நனைக்கின்றனவோ, அத்தனை வர்ஷங்கள் வரையில் அந்த ப்ராஹ்மணர் ஸொத்தைப் பறித்த மன்னவர்களும், அவர்களுடைய வம்சத்தில் பிறந்தவர்களும், எவ்விதத்திலும் தடையின்றி, கும்பீபாகமென்னும் நரகத்தில் விழுந்து வருந்துவார்கள்.
(குறிப்பு – ஐந்தாவது ஸ்கந்தம் 26வது அத்யாயத்தில் கும்பீபாகம் என்னும் நரகத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளதைக் காண்க.)
தன்னால் கொடுக்கப்பட்டதாயினும், பிறரால் கொடுக்கப்பட்டதாயினும், ப்ராஹ்மணனுடைய ஜீவனத்தை எவன் பறிக்கிறானோ, அவன் அறுபதினாயிரம் வர்ஷங்கள் விஷ்டையில் (மலத்தில்) புழுவாய்ப் பிறப்பான். ப்ராஹ்மணர்களின் ஸொத்து எனக்கு எவ்விதத்திலும் நேராதிருக்குமாக. ஏனென்றால், அதை ஆசைப்படுவார்களாயின், அம்மன்னவர்கள் ஆயுள் க்ஷணித்து (குறைந்து), தோல்வி அடைந்து, ராஜ்யத்தினின்று நழுவி, வருந்துவார்கள். ஆகையால், நாம் அவ்விஷயத்தில் பயந்திருக்க வேண்டும்.
நீங்கள் என்னுடையவர்களா இருப்பீர்களாயின், ப்ராஹ்மணன் அபராதம் செய்யினும், அவன் விஷயத்தில் நீங்கள் த்ரோஹம் செய்யவேண்டாம். அவன் அடிக்கினும், பலவாறு வையினும், அவனைத் தினந்தோறும் நமஸ்கரித்துக் கொண்டிருப்பீர்களாக. நான் எப்படி காலந்தோறும் மனவூக்கத்துடன் ப்ராஹ்மணர்களை நமஸ்கரிக்கிறேனோ, அவ்வாறே நீங்களும் நமஸ்கரித்து வருவீர்களாக.
எவன் இதற்கு விபரீதமாக நடக்கிறானோ, அவன் என்னிடத்தினின்று தண்டனையைப் பெறுவான். இந்த ந்ருக மன்னவன் தெரியாமல் ப்ராஹ்மணனுடைய பசுவைக் கைப்பற்றினும், அது இவனை நரகத்தில் தள்ளிவிட்டதல்லவா? ஆகையால், ப்ராஹ்மணர் ஸொத்தை ஒருவன் தெரியாமல் கைக்கொள்ளினும், அது அவனை நரகத்தில் தள்ளிவிடும். (தெரிந்து பறிப்பானாயின், அவன் நரகத்தில் விழுவதைப்பற்றிச் சொல்ல வேண்டுமோ?)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸமஸ்த பூதங்களுக்கும் சுத்தியை விளைப்பவனும், மஹானுபாவனும், போக மோக்ஷங்களைக் கொடுப்பவனுமாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன், தன் பரிஜனங்களாகிய த்வாரகா ஜனங்களுக்கு இவ்வளவும் மொழிந்து, தன் க்ருஹத்திற்குப் போனான்.
அறுபத்து நான்காவது அத்தியாயம் முற்றிற்று.