சனி, 13 மார்ச், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 281

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – அறுபத்து ஐந்தாவது அத்தியாயம்

(பலராமன் கோகுலம் போதலும், யமுனா நதியைக் கலப்பையினால் பிடித்திழுத்தலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- குருவம்சத்து அரசர்களில் சிறந்தவனே! மஹானுபாவனாகிய பலராமன் பந்துக்களைப் பார்க்க விரும்பி, மிகுந்த ஆவலுடன் ரதத்தில் ஏறிக்கொண்டு, கோகுலம் போனான். அவன் அவ்விடம் சென்று நெடுநாளாய்ப் பார்க்க வேண்டுமென்னும் பேராவலுற்ற கோபர்களாலும், கோபிகைகளாலும் அணைக்கப்பட்டு, தாய், தந்தைகளை நமஸ்கரித்து, அவர்களால் ஆசீர்வாதங்கள் செய்து, அபிநந்தனம் செய்யப்பெற்றான். 

தாய், தந்தைகளாகிய அந்த யசோதை - நந்தகோபன் இவர்கள், “தாசார்ஹனே (தசார்ஹன் என்கிற யாதவ மன்னனின் வம்சத்தில் உதித்தவனே)! உலகங்களை ஆள்பவனே! உன் தம்பியும் நீயுமாய் எங்களை நெடுங்காலம் பாதுகாத்து வருவாயாக” என்று மொழிந்து, அவனை மடியில் ஏறிட்டு, ப்ரேமத்தினால் அணைத்து, ஸந்தோஷத்தினாலுண்டான கண்ணீர்களால் அவனை நனைத்தார்கள். அப்பால், அந்த ராமன் கோபவ்ருத்தர்களையும் (இடையர்களில் வயது சென்றவர்களை) விதிப்படி நமஸ்கரித்து, சிறியவர்களால் நமஸ்காரம் செய்யப் பெற்று, தன்னுடைய வயது, ஸ்னேஹம், ஸம்பந்தம் இவைகளுக்குத் தகுந்தபடி பரிஹாஸம் (கேலி) செய்வது, கையைப் பிடிப்பது, ஆலிங்கனம் செய்வது முதலியவைகளால் கோபர்களோடு கலந்து, உட்கார்ந்தான். 

அந்தக் கோபர்கள், இளைப்பாறி ஸுகமாக உட்கார்ந்திருக்கின்ற ராமனைச் சுற்றிலும் சூழ்ந்து கொண்டு, ப்ரீதியினால் தழதழத்த உரையுடன், பந்துக்களின் க்ஷேமம் விசாரித்து, தாமரைக்கண்ணனாகிய ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் படிந்த மதியுடையவர்களாகி, “ராமா! நம் பந்துக்கள் அனைவரும், பெண்டிர்களோடும், பிள்ளைகளோடும் க்ஷேமமாயிருக்கிறார்களா? நீங்கள் எங்களை நினைக்கிறீர்களா? பாபிஷ்டனாகிய கம்ஸன் தெய்வாதீனமாய் மாண்டான். இது நமக்குப் பெரிய ஆநந்தம். நம் பந்துக்கள் அனைவரும் பெரிய வருத்தத்தினின்று விடுபட்டார்கள். இதுவும் நமக்குப் பெரிய ஆநந்தம். சில சத்ருக்களைக் கொன்று, சில சத்ருக்களை வென்று, நம் பந்துக்கள் ஜலதுர்க்கமான (நீர் அரணான) த்வாரகையை அடைந்து ஸுகமாயிருக்கிறார்களல்லவா? இது நம் பாக்யமே” என்றார்கள். 

கோபிகைகள், பலராமனைக் கண்டு களித்து, ஆதரவுடன் புன்னகை செய்து கொண்டு, “ஸ்ரீக்ருஷ்ணன் பட்டணத்து மடந்தையர்களுக்கு அன்பனாகி ஸுகமாயிருக்கிறானா? அவன் பந்துக்களையாவது, தாய், தந்தைகளையாவது நினைக்கிறானா? திரண்டு உருண்டு நீண்ட புஜ தண்டங்களையுடைய (கைகளை உடைய) ஸ்ரீக்ருஷ்ணன், எங்கள் பணிவிடையை நினைக்கிறானா? தாசார்ஹனே! “ப்ரபூ! தாய், தந்தைகளையும், ப்ராதாக்கள், கணவர்கள், பிள்ளைகள், பகினிகள் (உடன் பிறந்தவள்) முதலிய துறக்க முடியாத பந்துக்களையெல்லாம் எவனுக்காக நாங்கள் துறந்தோமோ, அந்த ஸ்ரீக்ருஷ்ணன், அப்படிப்பட்ட எங்களை அந்த க்ஷணமே துறந்து புறப்பட்டுப்போனான். ஆகையால், அவன் ஸ்னேஹத்தை வேரோடு அறுத்து விட்டவன். ஆனால், “நீங்கள் அவனை ஏன் தடுத்திருக்கலாகாது” என்கிறாயோ? அப்படிப்பட்ட அவன் போகும்போது “ கோபியர்களே! நாங்கள் உங்களுக்குக் கடன் பட்டிருக்கிறோம். உங்கள் அன்புக்கு எங்களால் ஈடு செய்ய முடியாது” என்று இனிக்க இனிக்கப் பேசிய வார்த்தையை ஒன்றுமறியாத மடந்தையர்கள் எவ்வாறு நம்பாதிருக்க முடியும்? (நம்பும்படி நல்வார்த்தை சொல்லி வஞ்சித்துப் போனான்.)

ஸ்ரீக்ருஷ்ணன், நிலையற்ற மனமுடையவன்; க்ருதக்னன் (பிறர் செய்த உபகாரத்தை நினையாமல் மறப்பவன்.) பட்டணத்து மடந்தையர்களோ என்றால், மிகவும் திறமையுடையவர்கள். அவர்கள் அத்தகையனான ஸ்ரீக்ருஷ்ணனுடைய வார்த்தைகளை எவ்வாறு நம்புகிறார்கள்? ஸ்ரீக்ருஷ்ணன் விசித்ரமான பேச்சுக்களையுடையவன் (அவன் தன் பேச்சின் ஒழுங்கினாலேயே மதிமயங்கும் படி செய்து விடுவான்). எத்தகைய திறமையுடைய மாதரார்களும் (பெண்களும்) அழகிய புன்னகை அமைந்த அவனுடைய கண்ணோக்கத்தினால், மன்மத விகாரம் (காதல் கிளர்ச்சி) தலைக் கொண்டு வருந்தி, அவனுடைய வார்த்தைகளை நம்புவார்களே அன்றி, நம்பாது போக மாட்டார்கள். இது நிச்சயம். 

ஓ, கோபிகைகளே! அவனுடைய கதையால் நமக்கு என்ன ப்ரயோஜனம்? ஒரு ப்ரயோஜனமும் இல்லை. ஆகையால், வேறு கதைகளைச் சொல்லுங்கள். அந்த ஸ்ரீக்ருஷ்ணனுக்கு நம்மை ஒழியக் காலம் செல்லுமாயின், நமக்கும் அப்படியே அவனை ஒழியக் காலம் செல்லும். (ஆனால் அவனுக்கு ஸுகமாகக் காலம் செல்லும், நமக்குத் துக்கமாகச் செல்லும். இவ்வளவே விசேஷம்.)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- கோபிகைகள் இவ்வாறு ஸ்ரீக்ருஷ்ணனுடைய புன்னகையையும், பேச்சையும், அழகிய கண்ணோக்கத்தையும், நடையையும் ப்ரீதியுடன் செய்யும் ஆலிங்கனத்தையும், நினைத்துக் கண்ணீர் பெருக்கினார்கள். பலவகையான நல்வார்த்தைகள் சொல்லி ஸமாதானப்படுத்துவதில் ஸமர்த்தனும், மஹானுபாவனுமாகிய பலராமன், ஸ்ரீக்ருஷ்ணன் சொல்லியனுப்பின மனத்திற்கினிய ஸமாசாரங்களைச் சொல்லி அந்தக் கோபிகைகளை ஸமாதானப்படுத்தினான். 

மஹானுபாவனாகிய அந்தப் பலராமன், இரவுகளில் கோபிகைகளுக்கு ஸந்தோஷத்தையும், ப்ரேமத்தையும் வளர்த்திக் கொண்டு, சித்திரையும் வைகாசியுமாகிய இரண்டு மாதங்கள் அவ்விடத்தில் வஸித்திருந்தான். பூர்ண சந்த்ரனுடைய கிரணங்களால் விளக்கமுற்றிருப்பதும், ஆம்பல் பூக்களின் வாஸனையை ஏந்திக் கொண்டு வருகின்ற காற்று வீசப்பெற்றதுமாகிய யமுனைக்கரையிலுள்ள உபவனத்தில் அப்பலராமன் கோபஸ்த்ரீகளின் கூட்டங்களால் சூழப்பட்டு, விளையாடிக்கொண்டிருந்தான். 

அம்ருதத்துடன் உண்டான தேவார்ஹமாகிய (தேவர்களுக்கு உரியதாகிய) வாருணியென்னும் மத்யம் (மது) வருணனால் அனுப்பப்பட்டு, ஒரு வ்ருஷத்தின் (மரத்தின்) பொந்தினின்று பெருகிக் கொண்டு, தன் வாஸனையால் அவ்வனம் முழுவதையும் மணங்கமழச் செய்தது. பலராமன் காற்றினால் கொண்டு வரப்பட்ட அந்த மத்ய தாரையின் (மதுவின் பெருக்கின்) மணத்தை மோந்து, அவ்விடம் வந்து, கோபஸ்த்ரீகளோடு கூட அம்மத்யத்தைப் (மதுவைப்) பானம் செய்தான். அவன், கோப ஸ்த்ரீகளின் அழகிய கூட்டத்தினிடையில் அவர்களால் பாடப்பட்டு, தானும் உரக்கப் பாடிக்கொண்டு, இந்த்ரனுடைய யானையாகிய ஐராவதம் பெண் யானைக்கூட்டத்தினிடையில் விளையாடுவது போல விளையாடினான். ஆகாயத்தில் துந்துபி வாத்யங்கள் முழங்கின. தேவதைகள், ஸந்தோஷமுற்று ராமன் மேல் பூமழை பொழிந்தார்கள். கந்தர்வர்களும், முனிவர்களும், அந்த ராமனுடைய வீர்யங்களை வெளியிடுகிற உரைகளால் அவனை ஸ்தோத்ரம் செய்தார்கள். 

பலராமன் இவ்வாறு பாடப்பட்ட வீரச் செயல்களுடையவனாகி, மத்ய பானத்தினால் (மது அருந்தியதால்) மதித்து (மயக்கமுற்று), மதத்தினால் கண்கள் தழதழக்கப்பெற்று, கோபஸ்த்ரீகளுடன் வனத்தில் உலாவினான். அம்மஹானுபாவன், பூமாலையைச் சூடி, ஒற்றைக்குண்டலம் அணிந்து, மதித்து வைஜயந்தியென்னும் மாலையைத் தரித்து, வியர்வை நீர்த்துளிகளால் அலங்கரிக்கப்பட்டு, புன்னகை அமைந்து, தாமரைமலர் போன்றதுமாகிய திருமுகத்துடன் விளக்கமுற்றிருந்தான். ப்ரபுவாகிய அந்த ராமன், ஜலக்ரீடை செய்ய விரும்பி, யமுனையை அழைத்தான். 

“இவன் மதித்திருக்கிறான்” (மது அருந்தி மயக்கமுற்றிருக்கிறான்) என்று தன் வார்த்தையை அனாதரித்து (மதிக்காமல்) வாராதிருக்கின்ற அந்நதியின் மேல் பலராமன் கோபமுற்று, கலப்பையின் நுனியால் பிடித்திழுத்தான். “பாவக்கருத்துடையவளே! நான் அழைக்கையில், என்னை அவமதித்து வாராதிருக்கின்றாய். ஆகையால், மனம் போனபடி திரியும் தன்மையனாகிய உன்னை என் கலப்பையின் நுனியால் பல துண்டங்களாகச் செய்கிறேன்” என்று விரட்டினான்.  

இவ்வாறு பலராமனால் விரட்டப்பட்ட யமுனை பயந்து, “இவன் அப்படியே செய்யவல்லவன்” என்று சங்கித்து, அவன் பாதங்களில் வந்து விழுந்து, யாதவ குமாரனாகிய அந்த ராமனைக் குறித்து, “ராம! ராம! நீண்ட புஜதண்டங்கள் (கைகள்) உடையவனே! உன் மஹிமையை நான் அறியேன். அதற்கு எல்லையே கிடையாது. உலகங்களுக்கு நாதனே! இவ்வுலகம் முழுவதும் உன்னுடைய ஆயிரந்தலைகளில் ஒரு தலையினால் தரிக்கப்பட்டிருக்கின்றது. மஹானுபாவனாகிய உன்னுடைய எல்லையில்லாத மஹிமையை அறியாமையால் அபசாரப்பட்டேன். இப்பொழுது நான் உன்னைச் சரணம் அடைந்தேன். அனைத்திற்கும் அந்தராத்மாவாயிருப்பவனே! என்னைப் பொறுத்து விடுவாயாக. நீ பக்தவத்ஸலனல்லவா! (பத்தர்களின் தோஷங்களையே குணமாகக் கொள்ளுதன்மையனல்லவா? ஆகையால், என்பிழையை நினையாமல் என்னை அருள்வாயாக)” என்று மொழிந்து வேண்டினாள். 

மஹானுபாவனாகிய பலராமன், இவ்வாறு யமுனையால் வேண்டப்பெற்று, பொறுத்து, முன்போலவே பாயும்படி விட்டு, தலைமையுள்ள மத்தகஜம் பெண்யானைகளுடன் ஜலத்தில் இறங்குவது போலக் கோபஸ்த்ரீகளுடன் அந்த யமுனா ஜலத்தில் இறங்கினான். அந்த யமுனா நதி, இவ்வாறு  இஷ்டப்படி இறங்கி விளையாடிக் கரையேறின பலராமனுக்கு இரண்டு நீல வஸ்த்ரங்களையும், விலையுயர்ந்த பூஷணங்களையும் (ஆபரணங்களையும்), மிகுந்த ஒளியுடைய மாலையையும், கொடுத்தாள். அவன் அந்த நீல வஸ்த்ரங்களை உடுத்து, ஸ்வர்ண (தங்க) மாலையையும் மற்றும் பல ஆபரணங்களையும் அணிந்து, சந்தனம் பூசி, நன்கு அலங்கரித்துக் கொண்டு, தேவேந்தரனுடைய கஜமாகிய (யானையான) ஐராவதம் போல் விளங்கினான்.

ராஜனே! யமுனை அளவற்ற வீர்யங்களையுடைய பலராமனுடைய வீர்யத்தை வெளியிடுவதாக அவன் கலப்பையினால் இழுத்த மார்க்கத்தினால் பெருகலுற்று இப்பொழுதும் புலப்படுகின்றது. இவ்வாறு பலராமன் கோகுலத்தில் கோபஸ்த்ரீகளின் இனிய விளையாட்டுக்களால் இழுக்கப்பட்ட மனமுடையவனாகி, விளையாடிக் கொண்டிருக்கையில் எல்லா இரவுகளும் ஓரிரவு போலக் கடந்தன. 

அறுபத்தைந்தாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக