தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – அறுபத்து ஆறாவது அத்தியாயம்
(ஸ்ரீக்ருஷ்ணன் பௌண்ட்ரகாதிகளை ஸம்ஹரித்தல்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பலராமன் நந்தகோகுலம் போகையில், கரூஷ தேசாதிபதியாகிய பௌண்ட்ரக மன்னவன் அறிவு கேடனாகி (கெட்டு), தானே வாஸுதேவனென்று நினைத்து, ஸ்ரீக்ருஷ்ணனுக்குத் தூதனை அனுப்பினான். அவன், “நீ ஷாட்குண்யபூர்ணனாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) வாஸுதேவனே; உலகங்களைப் பாதுகாக்கும் பொருட்டு இவ்வாறு அவதரித்திருக்கின்றாய்” என்று அறியாத மூடர்களால் துதித்து, உத்ஸாஹ மூட்டப்பெற்று, தன்னையே பக்தர்களைக் கைவிடாத மஹானுபாவனான வாஸுதேவனாக நினைத்துக்கொண்டான்.
சிறுவர்களால் “நீ மன்னவன்” என்று மன்னவனாக ஏற்படுத்தப்பட்ட ஒரு சிறுவன் போல அறியாத மூடர்களால் நீயே வாஸுதேவனென்று மொழியப்பெற்று, தன்னை வாஸுதேவனென்று ப்ரமித்து, மதிகெட்டு, ஒருவர்க்கும் அறிய முடியாத உண்மையுடைய ஸ்ரீக்ருஷ்ணனுக்கு “நீ வாஸுதேவனல்லை. நானே வாஸுதேவன்” என்னும் இவ்விஷயத்தை அறிவிக்கும் பொருட்டு த்வாரகைக்குத் தூதனை அனுப்பினான்.
அத்தூதனும் த்வாரகைக்குச் சென்று, தாமரைக்கண்ணனும், ப்ரபுவுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன் ஸபையில் வீற்றிருக்கக் கண்டு, தங்கள் அரசன் சொல்லியனுப்பின செய்தியை மொழிந்தான். “ப்ராணிகளுக்கு அருள்புரியும் பொருட்டு இப்பூமியில் அவதரித்த வாஸுதேவன் நானொருவனே. மற்றொருவனுமல்லன். நீ பொய்யாகவே வாஸுதேவனென்று பெயரிட்டுக் கொண்டிருக்கின்றாய். ஆகையால் அந்தப் பெயரைத் துறந்து விடுவாயாக. ஸாத்வதனே! (யாதவனே!) நீ என்னுடைய அடையாளங்களை மூடத்தனத்தினால் தரித்துக் கொண்டிருக்கின்றாய். அவற்றைத் துறந்து என்னைச் சரணம் அடைவாயாக. இல்லையாயின், எனக்கு யுத்தம் கொடுப்பாயாக என்று அவன் சொல்லியனுப்பின வசனங்களை அத்தூதன் மொழிந்தான்.
அப்பொழுது ஸபையிலிருந்த உக்ரஸேனன் முதலியவர்கள் மந்த புத்தியனாகிய (புத்தி குறைவான) பௌண்ட்ரகனுடைய அப்பிதற்றலைக் கேட்டு, உரக்கச் சிரித்து, பரிஹாஸம் (கேலி) செய்தார்கள். அவர்களுடைய பரிஹாஸ (கேலி) கதையின் முடிவில் மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், “மூடனே! நீ எந்தெந்த அடையாளங்களை ஏற்றுக்கொண்டாயோ, எவற்றைக் கொண்டு நீ இவ்வாறு பிதற்றுகின்றாயோ, அவற்றையெல்லாம் விடும்படி செய்கிறேன்.
அறிவு கெட்ட மூடனே! எந்த வாயினால் நீ இவ்வாறு பிதற்றுகின்றாயோ, அத்தகைய வாயை மூடிக் கொண்டு, மாம்ஸத்தை விரும்புகிற கங்கம், க்ருத்ரம், வளம் முதலிய பஷிகளால் சூழப்பட்டுப் படுக்கப் போகின்றாய். அவ்விடத்தில் நீ, நாய், நரி, முதலிய ஜந்துக்களுக்குச் சரணமாவாய். (என்னால் அடியுண்டு பூமியில் விழுந்திருக்கின்ற உன்னைச் சீக்ரத்தில் நாய், நரி, கழுதை முதலிய ஜந்துக்கள் பிடுங்கித் திண்ணப் போகின்றன)” என்று அத்தூதனைக் குறித்து மொழிந்தான்.
தூதனும் இவ்வாறு ஸ்ரீக்ருஷ்ணன் மொழிந்த வெசவுகளை (திட்டிய வார்த்தைகளை) எல்லாம் அப்படியே தன் ப்ரபுவிடம் கொண்டு போய்ச் சேர்த்தான். ஸ்ரீக்ருஷ்ணனும் ரதத்தில் ஏறிக் கொண்டு, காசிக்கு அருகாமையில் வந்து சேர்ந்தான். மஹாரதனான (10000 வில்லாலிகளுடன் தனித்துப் போர் செய்யும் திறமை உடையவன்) பெளண்ட்ரகனும் ஸ்ரீக்ருஷ்ணனுடைய முயற்சியை அறிந்து, பல அக்ஷௌஹிணி (தேர் 21870; குதிரை 65610; யானை 21870; காலாட் படை 109350 கொண்ட பெரும் படை அக்ஷௌஹிணி ஸைன்யம் எனப்படும்) ஸைன்யங்களோடு கூடி, பட்டணத்தினின்று புறப்பட்டான்.
அந்தப் பௌண்ட்ரகனுடைய நண்பனாகிய காசிராஜன், அவனைப் பின்புறத்தில் பாதுகாத்துக் கொண்டு, மூன்று அக்ஷௌஹிணி (தேர் 21870; குதிரை 65610; யானை 21870; காலாட் படை 109350 கொண்ட பெரும் படை அக்ஷௌஹிணி ஸைன்யம் எனப்படும்) ஸையன்யங்களுடன் பின் தொடர்ந்தான். அப்பொழுது, சங்கம், கத்தி, கதை, சார்ங்கம், ஸ்ரீவத்ஸம் இவை முதலியவற்றோடு கூடி, கௌஸ்துப மணியைத் தரித்து, வனமாலையை அணிந்து, பொன்னிறமுள்ள பட்டு வஸ்த்ரங்களை உடுத்து, கருடன் கொடி ஏற்றி, விலையில்லாத மேலான கிரீடத்தையும், திகழ்கின்ற மகரகுண்டலங்களையும் பூண்டு, ரதத்தினிடையில் உட்கார்ந்து வருகின்ற பெளண்ட்ரகனை ஸ்ரீக்ருஷ்ணன் கண்டான்.
தனக்கு இயற்கையில் இல்லாததும், ஸ்ரீக்ருஷ்ணனோடு ஒத்ததுமாகிய வேஷம் பூண்டு, ராமாதிகளின் வேஷம் பூண்டு, அரங்கில் புகுந்த கூத்தாடியைப் போன்றிருக்கிற அந்தப் பௌண்ட்ரகனைக் கண்டு, ஸ்ரீக்ருஷ்ணன் மிகவும் நகைத்தான். அப்பொழுது, சத்ருக்கள் சூலம், கதை, பரிகம், சக்தி, ப்ராஸம், தோமரம், கட்கம், பட்டஸம், பாணம் முதலிய பற்பல ஆயுதங்களால் ஸ்ரீக்ருஷ்ணனை அடித்தார்கள். ப்ரளய காலாக்னி ப்ராணிகளையெல்லாம் வருத்தி முடிப்பது போல ஸ்ரீக்ருஷ்ணன், யானைகளும், தேர்களும், குதிரைகளும், காலாட்களும் நிறைந்த பௌண்ட்ரகன், காசிராஜன் ஆகிய இருவருடைய ஸைன்யத்தையும் (படையையும்), கதை, கட்கம், சக்ரம், பாணம் இவைகளால் வருத்திப் பாழ் செய்தான்.
சக்ராயுதத்தினாலும், கதை, கட்கம் முதலிய மற்ற ஆயுதங்களாலும் துண்டிக்கப்பட்ட தேர், குதிரை, யானை, காலாள், கழுதை, ஒட்டகம் இவை முதலியவைகள் நிறைந்த அந்த யுத்த பூமி, சூரர்களுக்கு மிகவும் ஸந்தோஷத்தை விளைப்பதாகி, ப்ரளய காலத்தில் ருத்ரனுடைய க்ரீடா ஸ்தானம் போல் பயங்கரமாய் விளங்கிற்று.
அப்பால், ஸ்ரீக்ருஷ்ணன் பெளண்ட்ரகனைக் குறித்து, “ஓ, பெளண்ட்ரகனே! நீ தூதன் மூலமாய்ச் சொன்னபடி அந்த அஸ்த்ரங்களை உன் மேல் விடுகிறேன். அறிவு கெட்டவனே! எனக்கு அஸாதாரணமான நாமத்தை நீ பொய்யாக ஏற்றுக் கொண்டிருக்கின்றாயல்லவா? அதை இப்பொழுது விடும்படி செய்கிறேன். நான் யுத்தத்தை விரும்பாமல் பயந்து போவேனாகில், உன்னைச் சரணம் அடைகின்றேன்” என்று கோபத்துடன் வைது (திட்டி), கூரான பாணங்களால் அவனை விரதனாக்கி, (ரதமில்லாதவனாக்கி), இந்த்ரன் வஜ்ராயுதத்தினால் பர்வதத்தின் சிகரத்தை அறுப்பது போல, சக்ராயுதத்தினால் அவன் தலையை அறுத்தான். அவ்வாறே, காசிராஜன் தலையைத் தாமரை மொட்டைப் போல் பாணங்களால் அறுத்து, காசியில் விழும்படி கொண்டு போய்த் தள்ளினான்.
ஸ்ரீக்ருஷ்ணன், இவ்வாறு த்வேஷியாகிய (க்ருஷ்ணனை வெறுத்த) பௌண்ட்ரகனையும், அவனுடைய மித்ரனான (நண்பனான) காசிராஜனையும் கொன்று, ஸித்தர்களால் பாடப்பட்ட அம்ருதம் போன்ற இனிய கதைகளுடையவனாகி, த்வாரகையில் ப்ரவேஸித்தான். அந்தப் பௌண்ட்ரகன், ஓயாமல் ஸ்ரீக்ருஷ்ணனுடைய வேஷத்தைத் தரித்து, அவனை த்யானம் செய்கையால், கர்ம பந்தங்களெல்லாம் தொலையப் பெற்று, அவனோடு ஸாதர்ம்யத்தை (பகவானின் குணமான ஆனந்தத்தை) அடைந்தான் (முக்தியைப் பெற்றான்). காசியில் ராஜக்ருஹத்தின் வாசலில் குண்டலங்களுடன் விழுந்திருக்கின்ற தலையைக் கண்டு, “இது என்ன? யாருடைய முகம்” என்று ஜனங்கள் ஸந்தேஹப்பட்டார்கள்.
அப்பால், காசிராஜனான தங்கள் அரசனுடைய பட்டமஹிஷிகளும், பிள்ளை முதலிய பந்துக்களும், பட்டணத்து ஜனங்களும் தங்கள் அரசன் முடிந்தானாகையால், “நாத! நாத!” என்று கதறிக் கண்ணீர் பெருக்கினார்கள். அந்தக் காசிராஜனுடைய பிள்ளையாகிய ஸுதக்ஷிணனென்பவன், தந்தையின் உத்தர க்ரியையை (இறந்த பின் செய்ய வேண்டிய கர்மாவை) முடித்து, “என் தந்தையைக் கொன்றவனைக் கொன்று, தந்தையின் கடனைப் போக்குவேன்” என்று தனக்குள் நிச்சயித்துக் கொண்டு, உபாத்யாயருடன் கூடி, மிகுந்த த்யான யோகத்தினால் ருத்ரனை ஆராதித்தான்.
அவன் ப்ரஸன்னனாகிய ருத்ரனைக் கண்டு, தன் தந்தையைக் கொன்றவனைக் கொல்லுவதற்குரிய உபாயத்தையே (வழியையே) வரமாக வேண்டினான். அவனுடைய த்யான யோகத்தினால் ஸந்தோஷம் அடைந்த ருத்ரனும், ஏகாந்தத்தில் “ஸுதக்ஷிணனே! நீ ப்ராஹ்மணர்களுடன் கூடி, நல்ல திறமையுள்ள ருத்விக்குக்களை (யாகம் செய்விக்கும் ப்ராஹ்மணர்களை) முன்னிட்டு, அபிசார (பிறர்க்குத் தீங்க விளைவிக்கும்) ஹோமத்தினால் தக்ஷிணாக்னியை (தெற்குப் பக்கத்தில் இருக்கும் அக்னியை) ஆராதிப்பாயாக. அந்த அக்னியை, ப்ராஹ்மணர்களுக்கு வேண்டியவற்றை நிறைவேற்றிக் கொடுத்து, அவர்களிடத்தில் பக்தி செய்யும் தன்மையுள்ளவர் தவிர மற்ற எவரிடத்திலேனும் ப்ரயோகிப்பாயாயின், அது ப்ரமதகணங்களால் (சிவனுடைய பூத கணங்களால்) சூழப்பட்டு உன் மனவிருப்பத்தை நிறைவேற்றும்” என்று அவனுக்கு வரம் கொடுத்தான்.
கெடுமதியனாகிய (கெட்ட புத்தி உடைய) அந்த ஸுதக்ஷிணன், இவ்வாறு ருத்ரனால் மொழியப்பெற்று, ஸ்ரீக்ருஷ்ணனுக்கு த்ரோஹம் செய்ய முயன்று, அவ்வாறு தக்ஷிணாக்னியை ஆராதித்தான். அப்பால், அவ்வக்னி குண்டத்தினின்று அக்னி புருஷன் உருவத்துடன் தோன்றினான். அவன் காய்ச்சின தாம்ரம் போன்ற தலை மயிர்களும், தாடி மீசைகளும், நெருப்புத் துணுக்கைகளைக் கக்குகின்ற கண்களும் அமைந்து, கோரைப்பற்களாலும், பயங்கரமான புருவநெரிப்பினாலும், பற்களாலும், கடோரமான முகமுடையவனாகி, நாக்கினால் கடைவாய்களை நக்கிக்கொண்டு, அரையில் ஆடையின்றி, ஜ்வலிக்கின்ற த்ரிசூலத்தை அசைத்துக் கொண்டு, மிகவும் பயங்கரனாயிருந்தான்.
அவன், பனைமரங்கள் போன்ற பாதங்களால் பூமியை நடுங்கச் செய்பவனாகி, திசைகளை எல்லாம் தஹித்துக் (எரித்துக்) கொண்டு, ப்ரமதகணங்களால் (சிவனுடைய பூத கனங்களால்) சூழப்பட்டு, த்வாரகாபுரியை எதிர்த்துச் சென்றான். த்வாரகையிலுள்ளவர்கள் அனைவரும், அவ்வாறு வருகின்ற அவ்வபிசாராக்னியைக் (பிறர்க்குத் தீமை செய்யும் அக்னியைக்) கண்டு, காடு பற்றியெரியும் பொழுது மிருகங்கள் பயப்படுவது போலப் பயந்தார்கள். அவர்கள் பயத்தினால் வருந்தி, ஸபையில் பாசகைகளைக் (சொக்கட்டான்) கொண்டு விளையாடுகின்ற மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணனிடம் சென்று, “மூன்று லோகங்களுக்கும் நாதனே! பட்டணத்தைத் தஹிக்கின்ற அக்னியினின்று எங்களைப் பாதுகாப்பாயாக” என்று முறையிட்டார்கள்.
ரக்ஷணத்தில் (பாதுகாப்பதில்) ஸமர்த்தனாகிய (திறமையுடைய) அந்த ஸ்ரீக்ருஷ்ணன், அவ்வாறு ஜனங்கள் பயத்தினால் தழதழத்து மொழிவதைக் கேட்டும், தன்னுடையவர்கள் பயப்படுவதைப் பார்த்தும் சிரித்து, “நீங்கள் பயப்பட வேண்டாம். நான் பாதுகாக்கின்றேன்” என்று மொழிந்தான்.
ஸமஸ்த லோகத்தின் உள்ளும் புறமும் உள்ளதையெல்லாம் ஸாக்ஷாத்கரிப்பவனும் (நேராகப் பார்த்து அறிபவனும்), ப்ரபுவுமாகிய அம்மஹானுபாவன், ருத்ரனுடைய வரப்ரஸாதத்தினால் ஏற்பட்ட அபிசார தேவதை (பிறர்க்குத் தீங்கு செய்யும் தேவதை) என்று தெரிந்து கொண்டு, அதைத் தடுக்கும் பொருட்டுத் தன் பக்கத்தில் இருக்கிற ஸுதர்சன சக்ரத்தை ஆஜ்ஞாபித்தான் (கட்டளையிட்டான்). ஸ்ரீக்ருஷ்ணனுடைய திவ்ய அஸ்த்ரமாகிய (சிறந்த, ஒளி மிகுந்த ஆயுதமான) அந்த ஸுதர்சன சக்ரம், கோடி ஸூர்யர்களோடொத்ததும், ப்ரளயாக்னியொடொத்த ஒளியுடையதும், ஓயாமல் அமிதமாக (அளவற்று) ஜ்வலிப்பதும், தன் தேஜஸ்ஸினால் ஆகாசத்தையும் திசைகளையும் த்யாவா (விண்ணையும்) பூமிகளையும் விழுங்குவது போல் திகழ்வதுமாகி, அவ்வக்னியைப் பீடித்தது.
அந்த அபிசாராக்னி (பிறர்க்குத் தீமை செய்யும் அக்னி), ஸ்ரீக்ருஷ்ணனுடைய தேஜோமயமான ஸுதர்சன சக்ரத்தினால் முகம் முறிந்து தடுக்கப்பட்டு, திரும்பிக் காசிக்கு வந்து, ருத்விக்குக்களோடும் மற்ற ஜனங்களோடும் கூடின அந்த ஸுதக்ஷிணனையே தஹித்து விட்டது. அவன், தன் சத்ருவை அழிக்கும்படி செய்த அபிசாரம் (தீங்கு) அவனுக்கே பலித்து விட்டது.
ஸ்ரீக்ருஷ்ணனுடைய திவ்யாயுதமான அந்த ஸுதர்சன சக்ரமும், அவ்வக்னியோடு கூடவே காசியில் நுழைந்து, உப்பரிகைகளும், ஸபைகளும், க்ருஹங்களும், கடைகளும், கோபுரங்களும், மேற்கட்டடங்களும், யானைக் கொட்டாரம், குதிரைக்கொட்டாரம் முதலியவைகளும், கருவூலங்களும், யானைகளும், குதிரைகளும், தேர்களும், அன்னசாலைகளும் அமைந்த அந்தக் காசிப்பட்டணம் முழுவதையும் தஹித்து, மீளவும் எத்தகைய செயல்களையும் அனாயாஸமாக (எளிதாக) முடிக்கும் திறமையுடைய ஸ்ரீக்ருஷ்ணனுடைய பார்ச்வத்தில் (அருகில்) வந்து நின்றது.
உத்தம ஸ்லோகனான (புண்ணிய கீர்த்தி உடைய) ஸ்ரீக்ருஷ்ணனுடைய பராக்ரமத்தை உட்கொண்டிருக்கிற இந்த உபாக்யானத்தை (கதையை) எவன் பிறர்க்குச் சொல்லுகிறானோ, எவன் மன ஊக்கத்துடன் கேட்கிறானோ, அவ்விருவரும் ஸமஸ்த பாபங்களாலும் விடப்பட்டு வாழ்வார்கள். (பெரிய வாழ்வான மோக்ஷத்தைப் பெறுவார்கள்.)
அறுபத்தாறாவது அத்தியாயம் முற்றிற்று.