திங்கள், 15 மார்ச், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 283

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – அறுபத்தேழாவது அத்தியாயம்

(ரைவதக பர்வதத்தில் ஸ்த்ரீகளோடு விளையாடிக்கொண்டிருந்த பலராமன், அங்கு உபரோதம் (தடை) செய்த த்விவிதனென்னும் வானரனைக் கொல்லுதல்)

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- அற்புதச் செயல்களுடையவனும், ஆதிசேஷனுடைய அவதாரமும், அபார மஹிமைகளுடையவனும், ஸமர்த்தனுமாகிய பலராமன், இன்னும் ஏதேது செய்தானோ அதை நான் மீளவும் கேட்க விரும்புகிறேன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- நரகாஸுரனுக்கு நண்பனாகிய த்விவிதனென்னும் ஒரு வானரன் இருந்தான். அவன், ஸுக்ரீவனுடைய மந்த்ரி; மைந்தனுடைய ப்ராதா (ஸஹோதரன்). மிகுந்த வீர்யமுடையவன். அந்த த்விவிதன், தன்னுடைய நண்பனாகிய நரகாஸுரனுக்கு ப்ரியம் செய்ய விரும்பி, தேசங்களெல்லாம் பாழாகும்படி பட்டணங்களையும், கிராமங்களையும், ஆகரங்களையும் (சேரிகள்), இடைச்சேரிகளையும் நெருப்பையிட்டுக் கொளுத்திக் கொண்டிருந்தான். மற்றும் அவன் ஒருகால், பர்வதங்களைப் (மலைகளைப்) பிடுங்கி, அவற்றால் தேசங்களைச் சூரணம் (பொடி) செய்து கொண்டிருந்தான். சத்ருக்களை அழிக்கும் தன்மையனான ஸ்ரீக்ருஷ்ணனுடைய வாஸஸ்தானமாகிய (இருப்பிடமான) ஆநர்த்த தேசங்களை இவ்வாறு பர்வதங்களையிட்டு, மிகவும் சூர்ணம் செய்து கொண்டிருந்தான். 

பதினாயிரம் யானை பலமுடைய அவ்வானரன் ஒருகால், ஸமுத்ரத்தினிடையில் இருந்து கொண்டு, இரண்டு கைகளாலும் அந்த ஸமுத்ர ஜலத்தை வாரியிறைத்து, ஸமுத்ரக்கரையிலுள்ள தேசங்களையெல்லாம் வெள்ளத்தில் முழுகும்படி செய்தான். 

துஷ்ட (கொடிய) ஸ்வபாவமுடைய அவ்வானரன், ரிஷிகளில் தலைமையுள்ள மஹர்ஷிகளின் ஆச்ரமங்களிலுள்ள வ்ருக்ஷங்களை (மரங்களை) முறித்து, அவற்றைப் பாழ் செய்து, மல மூத்ரங்களை விட்டு, யாக அக்னிகளை அசுத்தம் செய்தான். குளவி, புழுக்களை ரந்தரங்களில் (பொந்துகளில்) வைத்து மூடுவது போல, துர்ப்புத்தியாகிய அந்த த்விவிதன், கொழுத்துப் புருஷர்களையும், ஸ்த்ரீகளையும், பர்வதங்களின் (மலைகளின்) செறிவுகளிலும் (தாழ்வரைகளிலும்), குஹைகளிலும் அடைத்து, பர்வத (மலைச்) சிகரங்களால் மூடினான். 

இவ்வாறு தேசங்களைப் பீடிப்பதும், குல ஸ்த்ரீகளைக் கெடுப்பதுமாயிருக்கின்ற அந்த த்விவிதன், மிகவும் அழகியதான பாட்டைக் கேட்டு, ரைவதக பர்வதத்திற்குச் (மலைக்குச்) சென்றான். 

அங்கு உபவனத்தில் தாமரை மலர் மாலை அணிந்து, பார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டும்படி மிகவும் அழகான ஸமஸ்த அங்கங்களுடையவனும், ஸ்த்ரீகளின் கூட்டத்தினிடையில் இருப்பவனும், யாதவ ச்ரேஷ்டனுமாகிய பலராமன் மத்யபானம் செய்து, மதத்தினால் கண்கள் தழதழத்துப் பாடிக் கொண்டு, மதித்த (மதம் கொண்ட) யானை போல் கம்பீரமான உருவத்துடன் திகழ்வுற்றிருக்க அவ்வானரன் கண்டான். 

துஷ்டனாகிய அவ்வானரன் கிளை மேலேறி, மரங்களை அசைத்துக் கொண்டு, தான் வந்திருப்பதை அறிவிக்க முயன்று, கிலகிலா சப்தம் செய்தான். இயற்கையில் சாபலம் (சஞ்சலத்தன்மை) உடையவர்களும், பரிஹாஸம் (கேலிப்பேச்சில்) ப்ரியமாயிருக்கப் பெற்றவர்களும், பலராமனுடைய பரிக்ரஹங்களும் (கூட்டத்தைச் சேர்ந்தவர்களும்), யௌவன (இளம்) வயதுடையவர்களுமாகிய மடந்தையர்கள், அந்தக் குரங்கினுடைய துஷ்டத்தனத்தைக் கண்டு சிரித்தார்கள். 

அவ்வானரன், ராமன் பார்த்துக் கொண்டிருக்கையில், அவனைப் பொருள் செய்யாமல், புருவத்தை நெரிப்பது, எதிரே வருவது, பற்களைக் காட்டுவது, புட்டத்தைக் காட்டுவது முதலியவைகளால் அம்மடந்தையர்களை அவமதித்தான். சத்ருக்களை அடிப்பவர்களில் ஸமர்த்தனாகிய பலராமன் கோபமுற்று, அவ்வானரனைக் கல்லால் அடித்தான். அவன் அந்தக் கல்லடி தன் மேல் படாதபடி தப்பித்துக் கொண்டு, மத்ய கலசத்தை (மது பாத்ரத்தை) எடுத்துக் கொண்டு, துஷ்டனாகையால், பலராமனுக்குக் கோபம் வரும்படி அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, அவனை அவமதித்து, மத்ய கலசத்தை உடைத்து, ஸ்த்ரீகளின் வஸ்த்ரங்களை இழுத்து, மிகுந்த பலமுடையவனாகையால், கொழுத்து, ராமனைப் பொருள் செய்யாமல் பலவாறு அபகாரம் செய்தான்.

பலராமன், அவ்வானரனையும் அவனுடைய துஷ்டத்தனத்தையும் அவன் தேசங்களுக்கு உபத்ரவம் (தொந்தரவு) செய்ததையும் கண்டு, கோபமுற்று, சத்ருவாகிய அவ்வானரனை வதிக்க விரும்பி, உலக்கையையும், கலப்பையையும் எடுத்துக்கொண்டான். மஹாவீர்யமுடைய த்விவிதனும், கையால் ஒரு ஸால மரத்தைப் பிடுங்கிக் கொண்டு, எதிரே வந்து, அம்மரத்தினால் பலராமனைத் தலையில் அடித்தான். மஹானுபாவனாகிய பலராமன், பர்வதம் (மலை) போல் தலை மேல் விழுகின்ற அந்த வ்ருக்ஷத்தை அப்படியே ஏந்திக் கொண்டு, ஸுநந்தம் என்னும் பெயருடைய தன் ஆயுதமான உலக்கையினால் வானரனை அடித்தான். 

அவ்வானரன், உலக்கையின் அடியால் மூளை சிதறி, ரக்தம் தாரை தாரையாய்ப் பெருகப் பெற்று, கைரிகதாது (காவித்தூள்) பெருகப் பெற்ற பர்வதம் (மலை) போன்று அந்த அடியைச் சிறிதும் நினையாமல், மீளவும் வேறொரு வ்ருக்ஷத்தைப் (மரத்தைப்) பிடுங்கிக் கொண்டு வந்து, தன் பலத்தினால் அதை உதறி, இலைகளெல்லாம் உதிரும்படி செய்து, மிகுந்த கோபாவேசத்துடன் அதனால் பலராமனை அடித்தான். பலராமன், அந்த வ்ருக்ஷத்தைப் (மரத்தைப்) பல துண்டங்களாகும்படி அறுத்தான். அப்பால், அவ்வானரன் வேறொரு வ்ருக்ஷத்தைப் (மரத்தைப்) பிடுங்கிக் கொண்டு, அதனால் அடித்தான். பலராமன், அதையும் பல துண்டங்களாக அறுத்தான். 

இவ்வாறு மஹானுபாவனாகிய பலராமனோடு யுத்தம் செய்கிற அவ்வானரன், தான் கொண்டு வரும் வ்ருக்ஷங்கள் (மரங்கள்) முறிய முறிய, மீளவும் மீளவும் நாற்புறங்களினின்றும் வ்ருக்ஷங்களைப் (மரங்களைப்) பிடுங்கிக் கொண்டு வந்து போட்டு அவ்வனத்தில் ஒரு வ்ருக்ஷம் (மரம்) கூட இல்லாதபடி மொட்டையாக்கி விட்டான். அப்பால், அவ்வானரன் கோபாவேசமுற்று, அபாரமாகக் கற்களைக் கொண்டு வந்து, பலராமன் மேல் மழை பெய்வது போல் பெய்தான். உலக்கையை ஆயுதமாகவுடைய பலராமன், அதையெல்லாம் அவலீலையாகச் (விளயாட்டாகப்) சூர்ணம் (பொடி) செய்து விட்டான். 

அவ்வானர ச்ரேஷ்டன், பனை மரங்கள் போன்ற தன் புஜங்களை முஷ்டியாக மடித்து, எதிர்த்து வந்து, இரண்டு கைகளாலும் பலராமனை மார்பில் அடித்தான். யாதவ ச்ரேஷ்டனாகிய பலராமனும், உலக்கையையும், கலப்பையையும் எறிந்து, கோபமுற்று, அவ்வானரனைக் கழுத்தில் அடித்தான். அவ்வானரன், ரக்தத்தைக் கக்கிக் கொண்டு கீழே விழுந்தான்.

குருச்ரேஷ்டனே! வெள்ளத்தில் பெருங்காற்று வீசுகையில் ஓடம் நடுங்குவது போல், அவ்வானரன் விழும் பொழுது, செடி, கொடி, மரங்களோடு கூடிய பர்வதம் (மலை) முழுவதும் நடுங்கிற்று. ஆகாயத்தில், தேவதைகளும், ஸித்தர்களும், சிறப்புடைய முனிவர்களும், பலராமன் மேல் புஷ்பங்களைப் பெய்து “ஜய-விஜயீபவ” என்றும், “நமோ நம:” என்றும், “நல்லது, நல்லது” என்றும் பலவாறு சப்தங்களைச் செய்தார்கள். மஹானுபாவனாகிய பலராமன், இவ்வாறு உலகங்களுக்கெல்லாம் உபத்ரவம் (தொந்தரவு) செய்து கொண்டிருந்த த்விவிதனைக் கொன்று, ஜனங்களால் புகழப்பட்டு, தன் பட்டணமாகிய த்வாரகைக்குச் சென்றான்.

அறுபத்தேழாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக