தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – அறுபத்தெட்டாவது அத்தியாயம்
(குருக்கள் ஸாம்பனைக் கட்டிக் கொண்டு போகையில், பலராமன் அவனை விடுவித்துக்கொண்டு வருதல்.)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- சத்ருக்களை வெல்லும் திறமையுடையவனும், ஜாம்பவதியின் புதல்வனுமாகிய ஸாம்பன், துர்யோதனனுடைய பெண்ணாகிய லக்ஷ்மணை என்பவளை ஸ்வயம்வரத்தில் ஒருவனாகவே பறித்துக் கொண்டு போனான். கௌரவர்கள் கோபமுற்று, இந்தப் பையன் துஷ்டன் (கொடியவன்). கன்னிகை விருப்பமற்றிருக்கையில், நம்மைப் பொருள் செய்யாமல், பலாத்காரமாக அவளைப் பறித்துக்கொண்டு போனானல்லவா?
துஷ்ட (கெட்ட) ஸ்வபாவமுடைய இந்தப் பயலைத் பிடித்துக் கட்டுங்கள். வ்ருஷ்ணிகள் என்ன செய்யப் போகிறார்கள்? அவர்கள் நம் ப்ரதாபத்தினால் (மேன்மையால்) வளர்க்கப்பட்டதும், நம்மால் தொடுக்கப்பட்டதுமாகிய பூமியைப் பெற்று, ஜீவித்துக் கொண்டிருப்பவர்களல்லவா? (ஆகையால், அவர்கள் நம்மை என்ன செய்யமுடியும்?) “ஒருகால் வ்ருஷ்ணிகள் தங்கள் குமாரன் கட்டுண்டிருப்பதைக் கேட்டு, நம் மேல் எதிர்த்து வருவார்களாயின், ப்ராணாயாமம் (மூச்சை அடக்குதல்) முதலியவைகளால் அடக்கப்பட்ட இந்திரியங்கள் போல, நம்மால் கொழுப்படங்கப் பெற்று, சாந்தியை அடைவார்கள். மற்றொன்றும் செய்ய வல்லவரல்லர்” என்று தங்களுக்குள் தாங்களே, நிச்சயித்துக்கொண்டார்கள்.
அப்பால், கர்ணன், சலன், பூரி, யஜ்ஞகேது, துர்யோதனன் ஆகிய இவர்கள், குரு வ்ருத்தர்களான (குரு வம்சத்துப் பெரியவர்களான) த்ருதராஷ்ட்ரன் முதலியவர்களால் அனுமோதனம் செய்யப்பெற்று (அனுமதிக்கப்பட்டு), ஸாம்பனைப் பிடித்துக் கட்டத் தொடங்கினார்கள். ஸாம்பன், மஹா ரதர்களான (10000 வில்லாலிகளுடன் தனித்துப் போர் செய்யும் திறமை உடையவர்களான) த்ருதராஷ்ட்ர குமாரர்கள் தன்னைத் தொடர்ந்து வரக்கண்டு, அழகிய தனுஸ்ஸை ஏந்திக் கொண்டு, தானொருவனே ஸிம்ஹம்போல் யுத்தத்திற்கு ஸித்தமாய் நின்றான். அக்கௌரவர்கள், அந்த ஸாம்பனைப் பிடிக்க விரும்பி, கர்ணனை முன்னிட்டு, “நில் நில்” என்று மொழிந்து கொண்டு, தனுஸ்ஸுக்களை நாணேற்றி, பாணங்களை விடுத்து, அவனை மறைத்தார்கள்.
கௌரவச்ரேஷ்டனே! அந்த யாதவ குமாரன், குருக்களால் அடியுண்டு, அளவற்ற மஹிமைகள் அமைந்த பரமபுருஷனாகிய ஸ்ரீக்ருஷ்ணனுடைய குமாரனாகையால், தடியால் அடியுண்ட ஸர்ப்பம் போல், அந்த அடியைப் பொறாமல் கோபம் கொண்டான். வீரனாகிய அந்த ஸாம்பன், மிகவும் பெரிதான தனுஸ்ஸை நாணேற்றி, ஒலிப்பித்து, ஆறு பேர்களான கர்ணன் முதலிய அந்த ரதிகர்கள் அனைவரையும் அத்தனை பாணங்களால் தனித் தனியே அடித்தான். அவன், நான்கு குதிரைகளை நான்கு பாணங்களாலும், ஸாரதிகளையும், ரதிகர்களையும் ஒவ்வொரு பாணங்களாலும் அடித்தான். வில்லாளிகளில் சிறந்த அவ்வீரர்கள், அவன் செய்த அச்செயலைப் புகழ்ந்தார்கள். அவ்வறுவர்களில் நால்வர் நான்கு குதிரைகளையும், ஒருவன் ஸாரதியையும் அடித்தார்கள். மற்றொருவன், தனுஸ்ஸை அறுத்தான். இவ்வாறு அவ்வறுவர்களும் சேர்ந்து அந்த ஸாம்பனை விரதனாக்கினார்கள் (தேர் அற்றவன் ஆக்கினார்கள்).
குருக்கள் அவ்வாறு யுத்தத்தில் வருத்தி, அவனை விரதனாகச் செய்து (தேர் அற்றவனாகச் செய்து), ஜயம்பெற்று, அக்குமாரனையும் தங்கள் கன்னிகையையும் திருப்பிக் கொண்டு, ஹஸ்தினாபுரம் போய்ச் சோந்தார்கள்.
ராஜனே! வ்ருஷ்ணிகள் நாரதர் மூலமாய் அதைக் கேள்விப்பட்டுக் கோபமுற்று, உக்ரஸேனனால் தூண்டவும் பெற்று, குருக்களின் மேல் முயற்சி கொண்டார்கள். பலராமன், கலஹமாகிற (சண்டையாகிற) அழுக்கைப் போக்கும் தன்மையனாகையால், குருக்களுக்கும், வ்ருஷணிகளுக்கும் கலஹம் நேருவதை விரும்பாமல், கோபமுற்றிருக்கின்ற வ்ருஷ்ணிகளில் முக்யமானவர்களை அழைத்து, நல்வார்த்தைகளால் ஸமாதானப்படுத்தி அடக்கி, ப்ராஹ்மணர்களாலும், யாதவகுல வ்ருத்தர்களாலும் (பெரியவர்களாலும்) சூழப்பட்டு, நக்ஷத்ரங்களால் சூழப்பட்ட சந்திரன் போன்று ஸூர்யனோடொத்த ஒளியுடைய ரதத்தின்மேல் ஏறிக் கொண்டு, ஹஸ்தினாபுரம் சென்று, பட்டணத்திற்கு வெளியிலுள்ள உபவனத்தில் இறங்கி, அவர்களுடைய அபிப்ராயத்தை அறிய விரும்பி, உத்தவனை அனுப்பினான்.
அவன் பட்டணத்திற்குள் சென்று த்ருதராஷ்ட்ரனையும், பீஷ்மனையும், த்ரோணாசார்யரையும், பாஹ்லிகனையும், துர்யோதனனையும் விதிப்படி வணங்கி, பலராமன் வந்திருப்பதைச் சொன்னான். அவர்கள், மிகவும் நண்பனாகிய பலராமன் வந்திருப்பதைக் கேட்டு, மஹாநந்தம் அடைந்து, அவ்வுத்தவனைப் பூஜித்து, எல்லோரும் மங்கள வஸ்துக்களைக் கைகளில் ஏந்திக்கொண்டு, பலராமனை எதிர்கொண்டு சென்றார்கள்.
அவர்கள், அந்தப் பலராமனை விதிப்படி கிட்டிச்சென்று, பசுவையும், அர்க்யத்தையும், அவனுக்கு நிவேதனம் செய்தார்கள். அவர்களில் அந்த ராமனுடைய மஹிமையை அறிந்தவர்கள் எவரெவரோ அவர்கள், பூமியில் தலையைச் சாய்த்து, அவனை நமஸ்கரித்தார்கள். ஒருவர்க்கொருவர் பந்துக்கள் க்ஷேமமாயிருப்பதை விசாரித்து, ஆரோக்யத்தையும், சுபத்தையும் வினவின பின்பு, பலராமன் குருக்களை நோக்கி தழதழப்பின்றிக் கம்பீரமான மொழியை மொழிந்தான்.
பலராமன் சொல்லுகிறான்:- ராஜாக்களுக்கும் ராஜனும், ப்ரபுவுமாகிய உக்ரஸேனன், உங்களுக்கு எதை ஆஜ்ஞை (கட்டளை) செய்கிறானோ, நீங்கள் அதை மனவூக்கத்துடன் கேட்டுக் கால தாமதம் செய்யாமல் நடத்த வேண்டும். நீங்கள் பலராக வந்து மேல் விழுந்து, தனியனும், தர்மம் தவறாது யுத்தம் செய்பவனுமாகிய ஸாம்பனை, அதர்மத்தினால் ஜயித்துக் கட்டிக் கொண்டு போனீர்களே. அதை நான் பந்துக்களில் ஒருவரோடொருவர்க்கு ஸ்னேஹம் மாறாதிருக்க வேண்டுமென்று விரும்பிப் பொறுக்கின்றேன்.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- குருக்கள், வீர்யம், ஸௌர்யம், பலம் (வீர்யமாவது - யுத்தத்தில் சோர்வில்லாமை. ஸௌர்யமாவது தன்வீட்டில் நுழைவது போல் யுத்தத்தில் நுழைகை. பலமாவது தரிக்கும் திறமை.) இவைகளால் தடையின்றிச் செருக்குற்றிருப்பதும் (கர்வம் உடையதும்), தன் சக்திக்குத் தகுந்ததுமாகிய பலராமனுடைய வசனத்தைக் கேட்டு, மிகவும் கோபமுற்று மொழிந்தார்கள்.
குருக்கள் சொல்லுகிறார்கள்:- காலகதி எவர்க்கும் கடக்க முடியாதாகையால், இவ்வாறு பெரிய ஆச்சர்யம் உண்டாயிற்று. பாதரக்ஷை (காலணி) கிரீடத்தினால் அலங்கரிக்கத்தக்க சிரஸ்ஸின் (தலையின்) மேல் ஏற விரும்புகின்றது. (பாதரக்ஷை போன்ற யதுக்கள், கிரீடம் பூண்ட சிரஸ்ஸு போன்ற எங்களை ஆஜ்ஞாபிக்கிறார்கள் (கட்டளை இடுகிறார்கள்) என்பது மிகவும் ஆச்சர்யமாயிருக்கின்றது). இந்த வ்ருஷ்ணிகள் ப்ருதா (குந்தி) விவாஹமாகிற ஸ்த்ரீ மூலமான ஸம்பந்தத்தினால் பந்துக்களானார்கள். அதனால் சேரப்படுப்பது, சேர உட்காருவது, சேரப் புசிப்பது முதலியனவும் நேர்ந்தன.
நம்மால் கொடுக்கப்பட்ட ராஜாஸனத்தையுடைய இந்த வ்ருஷ்ணிகள், அதனால் நம்மோடொத்திருக்கையாகிற பதவியில் ஏற்றுவிக்கப் பட்டார்கள். நாம் உபேக்ஷித்திருக்கையால் (பொருட்படுத்தாமல் இருப்பதால்), சாமரம், விசிறி, சங்கம், வெண்கொற்றக் குடை, கிரீடம், ஆஸனம், படுக்கை ஆகிய இவற்றையெல்லாம் இவர்கள் அனுபவிக்கின்றார்கள். யதுக்களுக்குச் சாமரம் முதலிய ராஜசிஹ்னங்களைக் கொடுத்தது போதும். பாம்புக்குப் பால் வார்த்தாற்போல, அவையெல்லாம் கொடுத்த நமக்கே விபரீதங்களாயின. நம்முடைய அனுக்ரஹத்தினால் (கருணையால்) வளர்ந்தவர்களாகிய இந்த யாதவர்கள், இப்பொழுது வெட்கமின்றி நம்மையே ஆஜ்ஞாபிக்கிறார்கள் (கட்டளையிடுகிறார்கள்). ஆ! இதென்ன ஆச்சர்யம்! இந்த்ரன் தானேயாயினும், பீஷ்மன், த்ரோணன், அர்ஜுனன் முதலிய குருக்கள் ஸம்மதித்துக் கொடாததை எவ்வாறு உபயோகப்படுத்த வல்லனாவான்? ஸிம்ஹம் பிடித்துக் கொண்டதை, ஆடு மீட்டனுபவிக்க வல்லதோ?
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பிறவியாலும், பந்துக்களின் மிகுதியாலும், செல்வக் கிளர்த்தியாலும் (செழிப்பாலும்), மிகுந்த மதமுடையவர்களும், அஸப்யர்களும் (ஸபைக்குத் தகாதவர்களும் ) ஆகிய குருக்கள் இவ்வாறு பலராமனைக் குறித்துச் சொல்லத் தகாத பருஷ (கொடுமையான) வசனங்களைப் பேசி, பட்டணம் போய்ச் சேர்ந்தார்கள். பற்றினவர்களைக் கைவிடாத பெருந்தன்மையுடைய பலராமன், குருக்களுடைய துஷ்ட (கெட்ட) ஸ்வபாவத்தைக் கண்டு, அவர்கள் சொன்ன சொல்லத்தகாத பருஷ (கொடிய) வசனங்களையும் கேட்டு, கோபத்தினால் சிவந்து, பார்க்க முடியாமல் பயங்கரனாகி, அடிக்கடி சிரித்துக் கொண்டு, இவ்வாறு மொழிந்தான்.
பலராமன் சொல்லுகிறான்:- இந்தக் குருக்கள், பலவகை மதங்களால் கொழுத்து, கெடு நடத்தையுடையவர்களாகி இருக்கிறார்கள். ஆகையால், இவர்கள் சாந்தியை விரும்ப மாட்டார்கள். இது நிச்சயம். தவறான வழியில் போகின்ற பசுக்களுக்குத் தடியடி போல, துஷ்ட ஸ்வபாவர்களாகிய இவர்களுக்குத் தண்டனை தான் சாந்தியை விளைக்க வல்லது. ஆ! மிகவும் கோபாவேசமுற்ற யதுக்களையும், கோபித்துக் கொண்ட ஸ்ரீக்ருஷ்ணனையும், மெல்ல மெல்ல நல்வார்த்தைகளால் ஸமாதானப்படுத்தி, அடக்கி இந்தக் குருக்களின் சாந்தியை விரும்பி நான் இவ்விடம் வந்தேன். அவ்வாறு நினைக்கப்பட்டவர்களோ என்றால், மந்த மதிகளும் (புத்தி கெட்டவர்களும்), கலஹத்தில் மிக விருப்பமுற்றவர்களும், மூர்க்கர்களுமாயிருக்கிறார்கள்.
ஆகையால், அத்தகைய எண்ணங்கொண்டு வந்த என்னை அவமதித்துத் துரஹங்காரம் (கர்வம்) உடையவர்களாகித் துர்ப்பாஷைகளைப் (பேசத்தகாதவற்றைப்) பேசினார்கள். போஜர்களுக்கும், வ்ருஷ்ணிகளுக்கும், அந்தகர்க்களுக்கும் ஈச்வரனாகிய உக்ரஸேனன் ப்ரபுவன்றாமே? இந்த்ரன் முதலிய லோகபாலர்களும் (திசைகளைக் காப்பவர்கள்) எவனுடைய ஆஜ்ஞையை அனுஸரித்து நடக்கிறார்களோ, அத்தகைய உக்ரஸேனன் ப்ரபுவன்றாமே?
எவன் ஸதர்மை என்னும் தேவேந்த்ர ஸபையைக் கொண்டு வந்து அதில் வீற்றிருக்கிறானோ, எவன் ஸ்வர்க்க லோகத்தினின்று கல்ப வ்ருக்ஷத்தைக் கொண்டு வந்து அதை அனுபவிக்கிறானோ, அத்தகைய ஸ்ரீக்ருஷ்ணன் ஸிம்ஹாஸனத்திற்கு உரியவனல்லனாமே? ப்ரஹ்மதேவன் முதலிய ஸர்வர்க்கும் ஈச்வரியாகிய ஸ்ரீமஹாலக்ஷ்மி எவனுடைய பாதார விந்தங்களை உபாஸிக்கிறாளோ, ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு நாதனாகிய அத்தகைய ஸ்ரீக்ருஷ்ணன், சாமரம் முதலிய ராஜசிஹ்னங்களுக்கு (அரச அடையாளங்களுக்கு) உரியவனல்லனாமே? எவனுடைய பாதார விந்தங்களின் பராகத்தை (தூளை) ஸமஸ்த லோகபாலர்களும் சிறப்புடைய தங்கள் கிரீடங்களால் தரிக்கின்றார்களோ, கங்காதி புண்ய தீர்த்தங்களை உபாஸித்துப் பரிசுத்தர்களான யோகிகளுக்கும், குரு உபாஸனம் செய்த பெரியோர்களுக்கும், அனைவராலும் உபாஸிக்கப்படுகிற கங்காதி புண்ய தீர்த்தங்களுக்கும், எவனுடைய பாதார விந்தங்களின் பராகம் (தூள்) பாவனமாயிருக்கின்றதோ (தூய்மைப் படுத்துகிறதோ), எவனுடைய அம்சத்தின் அம்சங்களாகிய நான், ப்ரஹ்ம தேவன், ருத்ரன், ஸ்ரீமஹாலக்ஷ்மி ஆகிய நாங்களனைவரும் அந்தப் பாதார விந்தங்களின் பராகத்தைத் (தூளைத்) தலையால் தரிக்கின்றோமோ, அத்தகையனாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கு ராஜாஸனம் எங்கே? (அவனுக்கு ராஜாஸனத்தில் ஏற அதிகாரம் ஏது?)
குருக்கள் கொடுத்த பூமியின் கண்டத்தை வ்ருஷ்ணிகள் அனுபவித்து வருகின்றார்களாமே? நாம் பாதரக்ஷையாம் (காலணியாம்). குருக்கள் தாங்கள் தலையாம். ஐச்வர்ய மதத்தினால் (செல்வச் செருக்கினால்) மதித்தவர்களும், துரஹங்காரிகளும், மத்யபானாதிகளால் மதித்தவர்கள் போல விவேகமற்றவர்களுமாகிய இத்தக் குருக்கள், அஸம்பத்தமாகவும் (சேராச்சேர்த்தியாகவும்), க்ரூரமாகவும் மொழிந்த மொழிகளைத் தண்டனை செய்யும் திறமையுடையவன் எவன் தான் பொறுத்திருப்பான்? மிகவும் கோபமுற்றிருக்கின்ற நான் இப்பொழுது பூமியில் கௌரவர்களே இல்லாதபடி செய்து விடுகிறேன்.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பலராமன் இவ்வாறு மொழிந்து, கலப்பையை எடுத்துக் கொண்டு, மூன்று லோகங்களையும் தஹிப்பவன் போன்று எழுந்திருந்தான். அவன் ஹஸ்தினாபுரியைக் கலப்பையின் நுனியால் குத்திக் கிளப்பி, கோபவேகத்தினால் கங்கையில் போட்டு, முழுக்க முயன்று பிடித்திழுத்தான். அந்நகரம் அவ்வாறு பலராமனால் இழுக்கப்பட்டு, ஓடம் போல் சுழன்று கொண்டு, கங்கா ஜலத்தில் விழுவதைக் கண்டு, கௌரவர்கள் பயந்து, பிழைக்க விரும்பி, லக்ஷ்மணையோடு ஸாம்பனை முன்னிட்டுக் கொண்டு வந்து, குடும்பங்களோடு கூட அஞ்சலி செய்து, அவனையே சரணம் அடைந்தார்கள்.
குருக்கள் சொல்லுகிறார்கள்:– ஓ, ராம! ராம! ஸமஸ்த லோகங்களுக்கும் ஆதாரனே! உன் மஹிமையை நாங்கள் அறியோம். ஈச்வரர்களுக்கும் ஈச்வரனே! மூடர்களும், கெடுமதியர்களுமாகிய எங்களுடைய அபராதத்தைப் பொறுத்தருள்வாயாக. இந்த ப்ரபஞ்சத்தின் ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களுக்கு (அழித்தல்) ஒருவனே காரணன். உனக்கு நீயே காரணனன்றி, வேறொரு காரணம் கிடையாது.
ஜகதீசனே! விளையாட விருப்பமுற்ற உனக்கு, உலகங்களை விளையாட்டுக் கருவிகளென்று (பொம்மைகளென்று) உன்னுடைய உண்மையை உணர்ந்தவர்கள் சொல்லுகிறார்கள். அனந்தனே! ஆயிரந்தலைகளுடையவனே! நீ ஒருவனே இந்தப் பூமண்டலம் முழுவதையும் உன் தலையில் அவலீலையாகத் (விளையாட்டாகத்) தரிக்கின்றாய். ப்ரளய காலத்தில் இந்த ப்ரபஞ்சத்தையெல்லாம் உன்னிடத்தில் அடக்கிக்கொண்டு, நீ ஒருவனே மிகுந்து, இணையெதிரின்றிச் சயனிக்கப் போகின்றாய். பூமியைப் பாதுகாப்பதில் ஊக்கமுடையவனே! ஷாட்குண்ய பூர்ணனே! (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனே!) பலராமா! சுத்த ஸத்வ மயமான (ரஜஸ், தமஸ் கலப்பின்றி ஸத்வம் மட்டுமேயான) உருவத்தைத் தரித்துக் கொண்டிருக்கிற உன்னுடைய கோபம், கேவலம் சிக்ஷைக்காகவே (நல்வழிப்படுத்தவே)! த்வேஷத்தினாலாவது (பகைமையினாலாவது), கௌடில்யத்தினாலாவது (பொறாமையினாலாவது) கெடுதியை விளைப்பதற்கன்று. ஸமஸ்த பூதங்களுக்கும் அந்தராத்மாவாயிருப்பவனே! (ஸமஸ்த சக்திகளும் அமைந்தவனே! ராகம் (விருப்பு), த்வேஷம் (வெறுப்பு) முதலிய விகாரங்களற்றவனே (மாற்றங்கள் இல்லாதவனே)! (ஸமஸ்த பூதங்களுக்கும் நண்பனே!) ப்ரபஞ்சத்தையெல்லாம் படைத்தவனே! உனக்கு நமஸ்காரம். நாங்கள் உன்னைச் சரணம் அடைந்தோம்.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு பயந்து நடுக்கமுற்று, சரணம் அடைந்திருக்கின்ற குருக்களால் அருள் புரிவிக்கப் பெற்ற பலராமன், அவர்களை நோக்கி “நீங்கள் பயப்பட வேண்டாம்” என்று அபயம் கொடுத்தான். பெண்ணிடத்தில் வாத்ஸல்யமுடைய துர்யோதனன் அறுபது வர்ஷங்கள் சென்ற பன்னீராயிரம் யானைகளையும், பன்னிரண்டு பதினாயிரம் குதிரைகளையும், பொன்னலங்காரம் செய்யப் பெற்று ஸூர்யன் போல் திகழ்கின்ற ஆறாயிரம் தேர்களையும், கழுத்தில் பொன் பதகங்கள் அணிந்த ஆயிரம் தாஸிகளையும் கொடுத்தான்.
மஹானுபாவனும், ஸாத்வத ச்ரேஷ்டனுமாகிய பலராமன் அதையெல்லாம் பெற்றுக்கொண்டு, புதல்வனாகிய ஸாம்பனோடும், நாட்டுப் பெண்ணாகிய லக்ஷ்மணையோடும் கூடி, நண்பர்களால் அபிநந்தனம் செய்யப் (பாராட்டப்) பெற்று, தன் பட்டணத்திற்குச் சென்றான். அப்பால், அப்பலராமன் தன் பட்டணமாகிய த்வாரகைக்குச் சென்று, அனுராகம் (அன்பு) நிறைந்த மனமுடைய பந்துக்களாகிய யாதவர்களைக் கிட்டி, அவர்களுக்கு ஸபை நடுவில் குருக்கள் விஷயத்தில் தான் என்ன நடத்தினானோ, அந்த வ்ருத்தாந்தத்தை எல்லாம் சொன்னான்.
அறுபத்தெட்டாவது அத்தியாயம் முற்றிற்று.