தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – அறுபத்தொன்பதாவது அத்தியாயம்
(நாரத முனிவர் வந்து, ஸ்ரீக்ருஷ்ணன் தன் பத்னிகளின் க்ருஹங்களில் ஒவ்வொன்றிலும் அமைந்து, இல்லற வாழ்க்கையில் ஊன்றியிருப்பதைக் கண்டு வியப்புறுதல்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- நரகாஸுரன் ஸ்ரீக்ருஷ்ணனால் அடியுண்டு மாண்டதையும், ஸ்ரீக்ருஷ்ணனொருவன் பல மடந்தையர்களை மணம் புரிந்ததையும் கேட்ட நாரதர், அவனைப் பார்க்க விரும்பினார். ‘‘ஸ்ரீக்ருஷ்ணன் ஒருவனே பதினாறாயிரம் ஸ்த்ரீகளை ஒரே சரீரத்துடன் (திருமேனியோடு), ஒரே காலத்தில், தனித்தனியே அந்தந்த க்ருஹங்களில் மணம் புரிந்தானென்பது மிகவும் அற்புதம்” என்று அந்தத் தேவர்ஷியாகிய நாரதர் வியப்புற்று, அவனைப் பார்க்க விரும்பி, த்வாரகாபுரிக்கு வந்தார்.
அப்புரியிலுள்ள உபவனங்களும், உத்யானவனங்களும் (தோட்டங்களும்), பலவகைப் பறவைகளும், வண்டுகளும் இனமினமாய் ஒலிக்கப் பெற்றிருந்தன. மற்றும், அப்புரியிலுள்ள தடாகங்கள், கரு நெய்தல்களும், தாமரைகளும், செங்கழுநீர்களும், ஆம்பல்களும், நெய்தல்களும் மலர்ந்து நிறைந்து, ஹம்ஸங்களும் (அன்னப்பறவகளும்), ஸாரஸங்களும் (நாரைகளும்), உரக்கக் கூவப் பெற்றிருந்தன. அங்கு ஸ்படிகங்களாலும், வெள்ளியாலும் இயற்றப்பட்டவைகளும், சிறந்த மரகத ரத்னங்களாலும், ஸ்வர்ணத்தினாலும், மற்றும் பல ரத்னங்களாலும் இயற்றின கருவிகள் அமைந்தவைகளுமாகிய ஒன்பது லக்ஷம் மாளிகைகள் அமைந்திருந்தன. தெருக்களும், ஸாதாரண மார்க்கங்களும், நாற்சந்தி வீதிகளும், கடைகளும், ஸத்ரங்களும், சாலைகளும், ஸபைகளும், தேவாலயங்களும் தனித்தனியே அமைக்கப்பெற்று, அந்நகரம் மிகவும் அழகாயிருந்தது. மற்றும், ராஜ வீதிகளும், முற்றங்களும், ஸாதாரண வீதிகளும், வீட்டு வாசற்களும், ஜலம் தெளித்து விளக்கி, பதாகைகளும் (விருதுக் கொடிகளும் banner), த்வஜங்களும் (கொடிகளும்) கட்டி, அவற்றால் வெயில் தடுக்கப் பெற்று, மிகவும் ஸுகமாயிருந்தன.
அந்தப் பட்டணத்தில், ஸ்ரீக்ருஷ்ணனுடைய அந்தப்புரம், ஸமஸ்த ஸம்பத்துக்களும் அமைந்து, ஸமஸ்த லோகபாலர்களாலும் புகழப் பெற்று, மிகவும் அழகாயிருந்தது. அவ்வந்தப்புரம், த்வஷ்டாவென்னும் விஸ்வகர்மாவினால் தன் திறமைகளையெல்லாம் காட்டி நிர்மிக்கப்பட்டதாகையால், மிகவும் அற்புதமாயிருந்தது. ஸ்ரீக்ருஷ்ணனுடைய பத்னிகளின் பதினாறாயிரம் மாளிகைகளால் அலங்காரமுற்று மிகவும் பெரிதாயிருந்தது. நாரதர் அவற்றில் ஒரு மாளிகைக்குள் நுழைந்தார். அம்மாளிகை, பவழங்களால் இயற்றின ஸ்தம்பங்களும், வைடூர்ய ரத்ன மயமான ஸ்தம்பத்தின் மேல் பலகைகளும், இந்த்ர நீல ரத்ன மயமான சாளரங்களும், மரகத ரத்ன மயமான சிறந்த ஸ்தம்பங்களும், விஸ்வகர்மாவினால் நிர்மிக்கப்பட்டவைகளும், முத்துச் சரங்கள் தொங்கி விடப் பெற்றவைகளுமாகிய மேல் கட்டுக்களும், தந்தத்தினால் இயற்றிச் சிறந்த ரத்னங்கள் இழைத்த ஆஸனங்களும், அத்தகைய மஞ்சங்களும் அமைந்து, கழுத்தில் பொன் பதகங்கள் பூண்டு சிறந்த வஸ்த்ரங்களை உடுத்தின தாஸிகளாலும், சொக்காயும், தலைப்பாகையும், சிறந்த வஸ்த்ரங்களும், ரத்னமயமான குண்டலங்களும் அணிந்த புருஷர்களாலும் அலங்கரிக்கப்பட்டு, ரமணீயமாயிருந்தது.
அவ்விடத்தில் ரத்ன தீபங்களின் கிரண ஸமூஹத்தினால் இருள் முழுவதும் துரத்தப்பட்டிருந்தது. மற்றும், அங்குக் கொடுங்கைகளில் உட்கார்ந்திருக்கின்ற மயில்கள், சாளரங்களின் (ஜன்னல்களின்) ரந்தர மார்க்கங்களால் (இடைவெளிகளில்) வெளி வருகின்ற அகிற்புகையைக் கண்டு, நீர்கொண்ட மேகமென்று நினைத்து, கேகாவென்று சப்தித்துக் கொண்டு, நர்த்தனம் (நடனம்) செய்கின்றன. நாரத முனிவர், அத்தகைய மாளிகையில் தன்னோடொத்த குணமும், உருவமும், வயதும், அழகிய வேஷமும் உடைய அனேகமாயிரம் தாஸிகளோடு கூடிப் பொற்பிடி இடப்பெற்ற சாமரத்தினால் ஸர்வ காலமும் விசிறிக் கொண்டிருக்கின்ற பார்யையாகிய ருக்மிணியோடு கூடிய ஸ்ரீக்ருஷ்ணனைக் கண்டார்.
தர்மத்தை அனுஷ்டிப்பவர்கள் அனைவரிலும் சிறந்தவனும், மஹானுபாவனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன், அந்த நாரதரைக் கண்டவுடனே, ருக்மிணியின் படுக்கையினின்று விரைவுடன் எழுந்து, கிரீடத்தினால் அலங்கரிக்கப்பட்ட சிரஸ்ஸினால் அவருடைய இணைப் பாதங்களை வணங்கி, கைகூப்பிக் கொண்டு, அவரைத் தன்னுடயை ஆஸனத்தில் உட்கார வைத்தான். அப்பகவான், ஸமஸ்த லோகங்களுக்கும் பரமகுருவாயினும், ஸத்புருஷர்களுக்குத் தன்னுடைய ஆசாரத்தினால் (நடத்தையால்) தர்ம மார்க்கத்தை அறிவித்து அவர்களைப் பாதுகாக்கும் தன்மையனாகையால், அந்நாரத மஹர்ஷியின் ஸ்ரீபாதங்களை அலம்பி (கழுவி), அந்த ஜலங்களைத் தன் சிரஸில் தரித்தான். (ப்ரோக்ஷித்துக்கொண்டான்).
அவன் ப்ராஹ்மண குலத்திற்கு வேண்டியவைகளை நிறைவேற்றிக் கொடுத்து ஆதரிக்கும் தன்மையுடையவர்களில் சிறந்தவனாகையால், அவனுக்கு ப்ரஹ்மண்ய தேவனென்னும் திருநாமம் அன்வர்த்தமாயிருக்கும் (பொருளுடையதாய் இருக்கும். வாஸ்தவமாயிருக்கும்). மற்றும், அந்நாமம் அவனுக்கே அஸாதாரணமாயிருக்கும். ஆகையால், அவன் செய்தது அவனுக்குத் தகுந்ததே.
கங்கை முதலிய புண்ய தீர்த்தமெல்லாம் எவனுடைய பாதார விந்தத்தினுடைய ஸம்பந்தத்தினால் பாவனமாய் (தூய்மையாய்) இருக்கின்றனவோ, அத்தகையன் மற்றொருவருடைய ஸம்பந்தத்தினால் பாவனனாக (தூய்மையாக) வேண்டியதில்லை. ஆயினும், அவன் ப்ரஹ்மண்ய தேவனானது பற்றியே அவ்வாறு செய்தான். நரனுக்கு நண்பனாகிய அந்த நாராயணன், தான் புராண ரிஷியாயினும், தேவரிஷியான நாரதரைச் சாஸ்த்ரங்களில் சொன்ன விதியின்படி பூஜித்து, அம்ருதத்தைப் பெய்வதும், மிதமுமாகிய மொழியுடன் அவரைக் குறித்து, “ப்ரபூ! மஹானுபாவராகிய உமக்கு நாங்கள் என்ன செய்யவேண்டும். உமது கிங்கரர்களான (சேவகரான) எங்களை இஷ்டப்படி நியமித்து, கார்யம் கொள்வீராக” என்று மொழிந்தான். (அதைக் கேட்டு நாரதர் இவ்வாறுமொழிந்தார்).
நாரதர் சொல்லுகிறார்:- ப்ரபூ! ஸமஸ்த லோகங்களுக்கும் நாதனே! ஸமஸ்த பூதங்களிடத்திலும் உனக்கு நட்பு உண்டாயிருப்பது ஆச்சர்யமன்று. நீ கம்ஸாதி துஷ்டர்களைத் தண்டிப்பதும் ஆச்சர்யமன்று. பெரும்புகழனே! நீ உலகங்களைத் தரிப்பதற்காகவும், அதைக் காப்பதற்காகவும், மோக்ஷம் கொடுப்பதற்காகவும், இஷ்டப்படி அவதாரங்களைக் கொள்கிறாயென்று நாங்கள் நன்றாக அறிந்திருக்கின்றோம். (ஆகையால் துஷ்டர்களைத் (கொடியவர்களைத்) தண்டிப்பதும், சிஷ்டர்களை (நல்லோர்களை) வெகுமதிப்பதும், உனக்கு யுக்தமே (ஏற்றதே)). தன்னையே கதியாகப் பற்றின ஜனங்களுக்கு மோக்ஷத்தைக் கொடுப்பதும், ப்ரஹ்மதேவன் முதலிய யோகீச்வரர்களாலும் ஹ்ருதயத்தில் நிறுத்திக்கொண்டு த்யானிக்கத் தக்கதும், ஆழ்ந்த அறிவை விளைப்பதும், ஸம்ஸாரமாகிற பாழுங்கிணற்றில் விழுந்து வருந்தும் ப்ராணிகளைக் கரையேற்றும் அவலம்பமுமாகிய (பற்றுமாகிய) உனது இணைப் பாதங்களைக் கண்டு, க்ருதார்த்தனானேன் (வேண்டியதைப் பெற்று நிறைவுற்றவனானேன்). இனி, அவற்றையே த்யானித்துக் கொண்டு திரியும்படி எனக்கு அருள்புரிவாயாக.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அந்த நாரத மஹர்ஷி இவ்வாறு மொழிந்து விடைபெற்றுக் கொண்டு, யோகேச்வரர்களுக்கும் ஈச்வரனான பகவானுடைய யோக மாயையை அறிய விரும்பி, மற்றொரு க்ருஹத்திற்குள் நுழைந்தார். அந்த க்ருஹத்திலும், அன்பிற்கிடமான பார்யையோடும், உத்தவனோடும் கூடிப் பாசகைகளால் (சொக்கட்டான்) விளையாடுகின்ற ஸ்ரீக்ருஷ்ணனைக் கண்டு, அவனால் மிகுந்த பக்தியுடன் எதிர்கொண்டு ஆஸனமளிப்பது முதலிய உபசாரங்களைச் செய்து பூஜிக்கப்பட்டார். மற்றும், அந்த ஸ்ரீக்ருஷ்ணன் அறியாதவன் போல், “நீர் எப்பொழுது வந்தீர்? நிறைவாளர்களல்லாத (அனைத்தும் பெற்று முழுமை அடையாத) என்னைப் போன்றவர்களால் நிறைவாளர்களான (அனைத்தும் பெற்று முழுமை அடைந்த) உங்களுக்குச் செய்யக் கூடியது என்ன இருக்கின்றது. நீங்கள் எதிலும் அபேக்ஷை (தேவை) அற்றவர்களாகையால், உங்களுக்கு எங்களால் ஆகக்கூடியது எதுவுமே இல்லை. அந்தணரே! ஆயினும், நீர் எதைப்பற்றி வந்தீரோ அதைச் சொல்வீராக. இந்த எங்கள் ஜன்மத்தைப் பயன் பெறும்படி செய்வீராக” என்று வினவவும் வினவினான்.
அம்முனிவர் அதைக் கேட்டு வியப்புற்று, ஒன்றும் பேசாமல் எழுந்து, மற்றொரு க்ருஹத்திற்குச் சென்றார். அங்கும், சிசுக்களான புதல்வர்களைச் சீராட்டிக் கொண்டிருக்கின்ற ஸ்ரீக்ருஷ்ணனைக் கண்டார். மற்றொரு க்ருஹத்தில், ஸ்னானம் செய்ய முயன்றிருக்கக் கண்டார். மற்றோரிடத்தில் ஆஹவனீயம் முதலிய யாக அக்னிகளில் ஹோமம் செய்வதும், (இல்லறத்தில் இருப்பவன் வேதத்தில் விதிக்கப்பட்ட ஹோமம் முதலிய அக்னி கார்யங்களைச் செய்வதற்கு மூன்று அக்னிகளை எப்பொழுதும் இல்லத்தில் வைத்து வளர்த்து பூஜிக்க வேண்டும்.
கார்ஹபத்ய அக்னி என்பது மேற்கு திசையில் இருக்கும் அக்னி; ஹோமம் செய்யும் போது மனைவி கார்ஹபத்ய அக்னியின் அருகில் அமர்ந்து கொள்ள வேண்டும்;
ஆஹவனீய அக்னி என்பது கார்ஹபத்ய அக்னியிலிருந்து எடுக்கப்பட்டு புனிதப்படுத்தப்பட்ட, ப்ரதான ஹோமம் செய்வதற்கான, கிழக்கு திசையில் இருக்கும் அக்னி;
தக்ஷிணாக்னி என்பது தெற்கு திசையில் இருக்கும் அக்னி)
மற்றோரிடத்தில் பஞ்ச மஹாயஜ்ஞங்களை அனுஷ்டிப்பதும், {(ப்ரஹ்ம யஜ்ஞ (வேதம் சொல்லுதல்), பித்ரு யஜ்ஞ (தர்ப்பணம்), தேவ யஜ்ஞ (ஹோமம்), பூத யஜ்ஞ (பறவை, விலங்குகளுக்கு பலியிடுதல்), நர யஜ்ஞ (விருந்தோம்பல்) என்பவை பஞ்சமஹாயஜ்ஞங்கள்} மற்றோரிடத்தில் ப்ராஹ்மணர்களைப் புசிப்பிப்பதும், மற்றோரிடத்தில் ப்ராஹ்மணர்கள் புசித்து மிகுந்த அன்னத்தைப் புசிப்பதும், மற்றோரிடத்தில் ஸந்த்யாவந்தனம் செய்வதும், மற்றோரிடத்தில் ப்ரணவத்தை ஜபிப்பதும், மற்றோரிடத்தில் மௌனமாயிருப்பதும், மற்றோரிடத்தில் கத்தியையும், கேடயத்தையும் கொண்டு கத்தியைச் சுழற்றும் வழிகளில் திரிவதும், மற்றோரிடத்தில் குதிரைகளின் மேல் ஏறித் திரிவதும், ஓரிடத்தில் ரதங்களின் மேல் ஏறித் திரிவதும், ஒரிடத்தில் யானைகளின் மேல் ஏறித் திரிவதும், ஓரிடத்தில் படுக்கையில் படுத்து ஸ்துதி பாடகர்களால் துதிக்கப் பெறுவதும், ஓரிடத்தில் உத்தவன் முதலிய மந்திரிகளோடு ஆலோசிப்பதும், ஓரிடத்தில் சிறந்த விலை மாதுகளுடன் கூடி ஜலக்ரீடை செய்வதும், ஓரிடத்தில் ப்ராஹ்மண ச்ரேஷ்டர்களுக்கு நன்கு அலங்காரம் செய்யப் பெற்ற பசுக்களைக் கொடுப்பதும், ஓரிடத்தில் இதிஹாஸ புராணங்களையும், மங்களமான மற்றவைகளையும் கேட்பதும், ஓரிடத்தில் அன்பிற்கிடமான பார்யையுடன் சிரிப்பு மூட்டுகிற கதைகளைச் சொல்லிச் சிரிப்பதும், ஓரிடத்தில் தர்மத்தை அனுஷ்டிப்பதும், ஓரிடத்தில் அர்த்த (பொருள்), காமங்களைப் (இன்பம்) பணிவதும், ஓரிடத்தில் ப்ரக்ருதி (அறிவற்ற ஜடப்பொருட்களின் மூலமான மூலப்ரக்ருதி), புருஷர்களைக் (ஜீவாத்மாக்கள்) காட்டிலும் விலக்ஷணனும் (வேறானவனும்), இணையற்றவனும், பரமபுருஷனுமாகிய தன்னை த்யானிப்பதும், ஓரிடத்தில் வேண்டிய விருப்பங்களையும், மற்றுமுள்ள போகங்களையும் கொடுத்து, குருக்களைப் பூஜித்து, சுச்ரூஷை (பணிவிடை) செய்வதும், ஓரிடத்தில் சிலரோடு கலஹம் (சண்டை) செய்வதும், ஓரிடத்தில் ஸந்தி (ஸமாதானம்) செய்வதும், ஓரிடத்தில் பலராமனோடு கூடி ஸத்புருஷர்களின் க்ஷேமத்தைச் சிந்திப்பதும், ஓரிடத்தில் தகுந்த காலத்தில் பிள்ளைகளுக்கு அவர்கட்குரிய பார்யைகளோடும், பெண்களுக்கு அவர்கட்குரிய கணவர்களோடும் பெரிய விபவத்துடன் சாஸ்த்ரவிதிப்படி விவாஹஞ் செய்விப்பதும், ஓரிடத்தில் புதல்விகள், நாட்டுப் பெண்கள், மணவாளர்கள் முதலியவர்களை அவரவர் க்ருஹங்களுக்கு அனுப்புவது, அவரவர் க்ருஹங்களினின்று வரவழைப்பது இவைகளால் பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும், உலகங்களெல்லாம் வியப்புறும்படி மஹோத்ஸவங்களை நடத்துவதும், ஓரிடத்தில் துணை முதலியவை அமிதமாய் (அளவற்று) இருக்கப் பெற்ற யாகங்களால் தன்னுடைய அம்சங்களான தேவதைகளை ஆராதிப்பதும், ஓரிடத்தில் கிணறு, தோட்டம், தேவாலயம் முதலியன ஏற்படுத்துகையாகிற ஸ்மார்த்த தர்மத்தை அனுஷ்டிப்பதும், ஓரிடத்தில் ஸிந்து தேசத்துக் குதிரையின் மேல் ஏறிக் கொண்டு, வேட்டையாடச் சென்று, யாதவ ச்ரேஷ்டர்களால் சூழப்பட்டு, பரிசுத்தமான ம்ருகங்களை வதிப்பதும், ஓரிடத்தில் மந்திரி முதலியவர்களிடத்திலும், அந்தப்புரத்தில் திரிபவர் முதலியவர்களிடத்திலும், அவரவர்களின் பாவ சுத்தியை (மனக்கருத்தின் நேர்மையை) அறியும் பொருட்டு, தன்னுருவம் தெரியாமல் மறைத்து, மாறுவேஷம் பூண்டு, திரிவதுமாயிருக்கின்ற யோகேச்வரனான ஸ்ரீக்ருஷ்ணனை நாரத முனிவர் கண்டார். அப்பால் அம்முனிவர், மானிட உருவம் பூண்ட அந்த ஸ்ரீக்ருஷ்ண பகவானுடைய யோக மாயையின் பெருமையைக் கண்டு சிரித்துக்கொண்டு, ஹ்ரிஷீகேசனாகிய (இந்த்ரியங்களை நியமிப்பவனான) அம்மஹானுபாவனைக் குறித்து இவ்வாறு மொழிந்தார்.
நாரதர் சொல்லுகிறார்:- யோகேச்வரனே! உன்னுடைய யோகமாயை, யோகிகளுக்கும் கூட அறிய முடியாததாயினும், உன் பாதார விந்தங்களைப் பணிகையின் ப்ரபாவத்தினால் (மகிமையால்), என் மனத்தில் ஸ்பஷ்டமாகத் (தெளிவாகத்) தோற்றின அந்த யோகமாயையை அறிந்தேன். தேவனே! உலகங்களையெல்லாம் பாவனம் (தூய்மை) செய்யவல்ல உன் புகழ்களைப் பாடிக்கொண்டு, உன் புகழ் நிறைந்த உலகங்களில் நாற்புறத்திலும் திரியும்படி, எனக்கு அனுமதி கொடுப்பாயாக.
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- அந்தணனே! தர்மத்தை இவ்வுலகத்திலுள்ள ஜனங்களுக்கு அறிவிக்கும் பொருட்டு, அதை உபதேசம் செய்பவனும், அனுஷ்டிப்பவனும், அனுமோதனம் செய்பவனுமாகி (ஆமோதிப்பவனுமாகி), இம்மானிட உருவத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றேன். பிள்ளாய்! ஸர்வேச்வரனும் கூட ப்ராக்ருதனைப் (ஸாதாரண மனிதனைப்) போல இப்படி ஸாம்ஸாரிக வ்யாபாரங்களில் (உலகியல் செயல்களில்) இழிந்தானே என்று வருந்த வேண்டாம்.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- க்ருஹஸ்தர்களுக்கு விதிக்கப்பட்ட நல்லறங்களை இவ்வாறு அனுஷ்டித்துக் கொண்டு, ஒரே காலத்தில் அனேக தேஹங்களில் ஒருவாறாகவே ஆத்மாவாய் அமைந்திருக்கின்ற ஸ்ரீக்ருஷ்ணனை, நாரத முனிவர் கண்டார். அந்நாரத முனிவர், அளவற்ற கல்யாண குணங்களையுடைய ஸ்ரீக்ருஷ்ணனுடைய ஆச்சர்ய சக்தியின் வைபவத்தை ஆவலுடன் அடிக்கடி கண்டு வியப்புற்றார். அந்நாரதர் இவ்வாறு அர்த்தம், காமம், தர்மம் இவைகளில் மிகவும் ச்ரத்தையோடு கூடின மனமுடைய ஸ்ரீக்ருஷ்ணனால் பூஜிக்கப்பட்டு, ஸந்தோஷம் அடைந்து, அவனை நினைத்துக்கொண்டு சென்றார். தான் ஸர்வேச்வரனான நாராயணனாயிருந்தும், ஸமஸ்த லோகங்களின் க்ஷேமத்திற்காகத் திவ்ய மங்கள விக்ரஹத்தை ஏற்றுக்கொண்டு, மனுஷ்ய பதவியை அனுஸரித்து, குணம் முதலியவைகளால் சிறந்த பதினாறாயிரம் பெண்மணிகளின் வெட்கமும், நட்பும் அமைந்த கண்ணோக்கங்களால் பணியப் பெற்று, க்ரீடித்துக்கொண்டிருந்தான்.
இந்த ப்ரபஞ்சத்தின் (உலகின்) ஸம்ஹார (அழித்தல்), ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதிகளுக்குக் (காத்தல்) காரணனாகிய பரம புருஷன் இவ்வுலகத்தில் அவதரித்து, மற்றொருவர்க்கும் செய்ய முடியாத எந்தெந்த செயல்களைச் செய்தானோ, அவற்றைப் பாடுகிறவனுக்கும், கேட்கிறவனுக்கும், அதை அனுமோதனஞ் செய்பவனுக்கும் (ஆமோதிப்பவனுக்கும்), மோக்ஷம் கொடுப்பவனாகிய அந்தப் பகவானிடத்தில் பக்தி உண்டாகும்.
அறுபத்தொன்பதாவது அத்தியாயம் முற்றிற்று.