ஶ்ரீமத் பாகவதம் - 286

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எழுபதாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணனுடைய தினசர்யையும் (அன்றாட வாழ்க்கை முறை), அவன் ஸபையிலிருக்கும் பொழுது ஜராஸந்தனால் தகையப்பட்ட (முற்றுகை இடப்பட்ட) ராஜர்களிடத்தினின்று தூதன் வருதலும், நாரதர் வருகையும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பரீக்ஷித்து மன்னவனே! மேல் பகவானுடைய தினசர்யையைச் (அன்றாட வாழ்க்கையை) சொல்லுகிறேன்; கேட்பாயாக. விடியற்காலம் ஸமீபித்திருக்கையில், பற்பல உருவங்கொண்ட ஸ்ரீக்ருஷ்ணனாகிற கணவர்களால் கழுத்தில் அணைக்கப்பட்ட அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய பத்னிகள், மேல்வருகிற விரஹத்தை (பிரிவை) நினைத்து வருந்தி, கூவுகின்ற கோழிகளைச் சபித்தார்கள். 

மந்தார வனத்தினின்று வீசுகின்ற காற்றுக்களால் உறக்கம் தொலையப்பெற்ற வண்டுகள் பாடிக்கொண்டிருக்கையில், மற்றும் பல பறவைகள் ஸ்துதி பாடகர்கள் போல் ஸ்ரீக்ருஷ்ணனை எழுப்பின. அன்பிற்கிடமான ஸ்ரீக்ருஷ்ணனுடைய மார்பை அடைந்திருக்கின்ற ருக்மிணி முதலிய மடந்தையர்கள், அந்த விடியற்கால முஹூர்த்தம் (நேரம்) மிக்க மங்களமாயினும், அன்பனுடைய ஆலிங்கனத்திற்கு (அணைப்பிற்கு) விகடனத்தை (விலக்கை - கடனம் - சேர்த்தி. அதில்லாமை – விகடனம்) விளைக்கையால், அதைப் பொறுக்க முடியாதிருந்தார்கள். 

ஸ்ரீக்ருஷ்ணன், ப்ராஹ்ம முஹூர்த்தத்தில் (ஸூர்ய உதயத்திற்கு 1 மணி 36 நிமிடம் முன்பு ஆரம்பித்து, ஸூர்ய உதயத்திற்கு 48 நிமிடம் முன்பு வரை உள்ள 48 நிமிட மிக நல்ல நேரம்) எழுந்து, சுத்த ஜலத்தை ஆசமனம் செய்து, தெளிந்த இந்திரியங்கள் (புலன்கள்) உடையவனாகி, ப்ரக்ருதியைக் (அறிவற்ற ஜடப்பொருட்களின் மூலமான மூலப்ரக்ருதியைக்) காட்டிலும் விலக்ஷணனும் (வேறானவனும்), இணையெதிர் இல்லாதவனும், ஸ்வயம்ப்ரகாசனும் (தானே தோன்றுபவனும்), தனக்குச் சரீரமாகாத வஸ்து எதுவுமே இல்லாதவனும், ஜாதி முதலிய ஏற்பாடுகளற்றனும், தன்னிடத்தில் தான் விகாரம் (மாறுபாடு) அற்றிருக்கையாகிற நிலைமையினால் புண்ய பாபங்களாகிற கல்மஷங்கள் (அழுக்கு) என்றும் தீண்டப்பெறாதவனும், பரப்ரஹ்மமென்னும் பெயருடையவனும், இந்த ப்ரபஞ்சத்தின் (உலகத்தின்) ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களுக்குக் (அழித்தல்) காரணமாயிருக்கையாகிற சக்தியினால் வெளியிடப்பட்ட ஆனந்தமயமான ஸ்வரூபமுடையவனுமாகிய தன்னை த்யானித்தான். 

அனந்தரம் (பிறகு) ஸத்புருஷர்களில் ச்ரேஷ்டனாகிய (சிறந்தவனான) பகவான், ஜலத்தில் ஸ்னானம் செய்து, வஸ்த்ரங்களை உடுத்து, ஸந்தியாவந்தனம் முதலிய க்ரியாகலாபத்தைச் (செயல்களைச்) செய்து, அக்னியில் ஹோமம் செய்து, மௌன வ்ரதத்துடன் காயத்ரீ ஜபம் செய்தான். அப்பால், உயர்கின்ற ஸூர்யனைப் பூஜித்து, தன்னுடைய அம்சங்களான தேவதைகளுக்கும், ரிஷிகளுக்கும், பித்ருக்களுக்கும் தர்ப்பணம் செய்து, குல வ்ருத்தர்களான (பெரியோர்களான) அந்தணர்களை ச்ரத்தையுடன் ஆராதித்து, பொன் கொப்பி (தங்கப் பூண்) இடப் பெற்றவைகளும், ஸாதுக்களும், முத்து மாலைகள் இடப்பெற்றவைகளும், மிகுந்த பாலுடையவைகளும், முதல் ஈற்றாயிருப்பவைகளும் (தாய் வயிற்றிலிருந்து முதலில் ப்ரஸவித்தவைகளும்), நல்ல கன்றுடையவைகளும், நல்ல வஸ்த்ரத்தினால் அலங்கரிக்கப்பட்டவைகளும், குளம்புகளில் வெள்ளி அலங்காரம் செய்யப் பெற்றவைகளுமாகிய பசுக்களை, வெண்பட்டு மான்  தோல், எள்ளு இவற்றுடன் நன்கு அலங்காரம் செய்யப் பெற்ற அந்தணர்களுக்கு, பத்மம் (பத்மமென்பது ஒரு பெரிய கணக்கு) பத்மமாகக் கொடுத்தான். 

அப்பகவான் இவ்வாறு தினந்தோறும் நடத்தி வந்தான். மற்றும் அப்பரமன், பசுக்களையும், ப்ராஹ்மணர்களையும், தேவதைகளையும், குல வ்ருத்தர்களையும் (பெரியவர்களையும்), குருக்களையும், தன் விபூதிகளான (சொத்துக்களான) ஸமஸ்த பூதங்களையும் நமஸ்கரித்து, மங்கள த்ரவ்யங்களை ஸ்பர்சித்தான். அனந்தரம் (பிறகு) மனுஷ்ய லோகத்திற்கெல்லாம் அலங்காரமான தன்னைத் தனக்கு அஸாதாரணமான பீதாம்பரம், கௌஸ்துபம் முதலிய ஆடையாபரணங்களாலும், திவ்யமான பூமாலைகளாலும், அத்தகைய அங்கராகங்களாலும் (திருமேனியில் பூசும் வாசனைப் பொருட்களாலும்) அலங்கரித்துக் கொண்டான். ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்ய, சூத்ரர்களென்கிற ஸமஸ்த வர்ணத்தவர்களுக்கும், அந்தப்புரத்து ஜனங்களுக்கும், அவரவர்க்கு வேண்டிய விருப்பங்களைக் கொடுப்பித்து, மந்திரி முதலியவர்களையும் அவர்க்கு வேண்டிய விருப்பங்களைக் கொடுத்து ஸந்தோஷப்படுத்தி, தானும் ஸந்தோஷம் அடைந்தான். அவன் எதிரில் உட்கார்ந்திருக்கின்ற அந்தணர்களுக்கு, பூமாலை, தாம்பூலம், அங்கராகம் இவை கொடுப்பித்து, நெய், கண்ணாடி, பசு, எருது, ப்ராஹ்மணர், தேவதை இவைகளைத் தர்சனம் செய்து, அப்பால் தான் நண்பர்களையும் மந்த்ரி முதலியவர்களையும், பார்யைகளையும், அவரவர்க்கு உரியபடி அனுஸரித்தான். 

அவ்வளவில் ஸாரதி, ஸுக்ரீவம் முதலிய குதிரைகள் பூட்டப் பெற்று மிகவும் அற்புதமாயிருக்கின்ற ரதத்தைக் கொண்டு வந்து நிறுத்தி, நமஸ்கரித்து முன்னே நின்றான். அப்பால் அந்த ஸ்ரீக்ருஷ்ண பகவான், ஸாத்யகி, உத்தவன் இவர்களுடன் கூடி, தன் கையினால் ஸாரதியின் கையைப் பிடித்துக்கொண்டு, ஸூர்யன் உதய பர்வதத்தின் மேல் ஏறுவது போல, ரதத்தில் ஏறிக்கொண்டான். 

அவன் அந்தப்புரத்திலுள்ள மடந்தையர்களின் வெட்கமும், ப்ரீதியும் அமைந்த கண்ணோக்கங்களால் பார்க்கப்பட்டு, மந்தஹாஸம் (புன்னகை) செய்து, அவர்கள் மனத்தைப் பறிப்பவனாகி, அவர்களால் வருந்தி விடப்பெற்று, வெளிக் கிளம்பினான். அவன், ஸமஸ்த வ்ருஷ்ணிகளாலும் சூழப்பட்டு, எங்கு நுழைந்தவர்களுக்கு ஊர்மிகள் (துன்ப அலைகள்) எனப்படுகிற பசி, தாஹம் முதலிய ஆறு விகாரங்கள் உண்டாகிறதில்லையோ, அத்தகைய ஸதர்மை என்னும் ஸபையில் ப்ரவேசித்தான். யாதவ ச்ரேஷ்டனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன், அங்குச் சிறிய ஸிம்ஹாஸனத்தில் உட்கார்ந்து, மனுஷ்யர்களில் சிறந்த யாதவர்களால் சூழப்பட்டு, ஆகாயத்தில் நக்ஷத்ரங்களோடு கூடிய சந்திரன் போல், தன்னொளியால் திசைகளையெல்லாம் விளங்கச் செய்து கொண்டு, ப்ரகாசித்தான்.

மன்னவனே! அந்த ஸபையில் ஹாஸ்யம் (சிரிப்பு) செய்பவர்கள், ரஸமுள்ள பலவகையான ஹாஸ்யங்களால் (கேலி நிகழ்ச்சிகளாலும்) ஸ்ரீக்ருஷ்ணனை ஆராதித்தார்கள். நாட்ய ஆசார்யர்களும், நர்த்தகிகளும் (நடன மாதுகளும்) தத்தம் கூட்டங்களோடு கூடி, தாண்டவங்களால் ஸ்ரீக்ருஷ்ணனைப் பணிந்தார்கள். மற்றும், மத்தளம், வீணை, தவல், வேணு, தாளம், சங்கம் இவற்றின் சப்தங்களோடு ஆடல் பாடல்களை நடத்தினார்கள். புராணாதிகள் படிக்கிற ஸுதர்களும், வம்சாவளி படிக்கிற மாகதர்களும், ஸ்துதி பாடகர்களான வந்திகளும், அவனைத் துதித்தார்கள். வேதங்களை ஓதி உணர்ந்து உபதேசிக்கும் திறமையுடைய அங்குள்ள சில அந்தணர்கள், உட்கார்ந்து பரிசுத்தமான புகழுடைய பூர்வராஜர்களின் கதைகளை மொழிந்தார்கள். இவ்வாறே தினந்தோறும் நடந்து கொண்டு வந்தது. 

இப்படியிருக்கையில், ஒரு நாள் ஸ்ரீக்ருஷ்ணன் ஸபையில் வீற்றிருக்கும் பொழுது, ஒருநாளும் புலப்படாத ஒரு புருஷன் அவ்விடம் வந்து, த்வார பாலர்களால் (வாயிற்காப்போர்களால்) பகவானுக்கு விண்ணப்பம் செய்யப்பெற்று, அவனுடைய அனுமதியால் உள்ளே ப்ரவேசிக்கப்பட்டான். அவன் பரமபுருஷனாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கு நமஸ்காரம் செய்து, அஞ்சலி செய்து கொண்டு ராஜர்களுக்கு ஜராஸந்தனுடைய தகைவினால் (சிறை வைத்ததால்) உண்டான துக்கத்தை அறிவித்தான். 

அந்த ஜராஸந்தன் திக்விஜயம் செய்யும் பொழுது, அவனுக்கு எவரெவர் வணங்கி வரவில்லையோ, இருபதினாயிரம் கணக்குடைய அம்மன்னவர்களையெல்லாம் அவன் கிரிவ்ரஜமென்னும் துர்க்கத்தில் (கோட்டையில்) பலாத்காரமாகத் தகைந்து (சிறை) வைத்திருந்தான்.

மன்னவர்கள் சொல்லுகிறார்கள்:- ஸ்ரீ க்ருஷ்ண! ஸ்ரீக்ருஷ்ணா! அளவிடக்கூடாத ஸ்வரூபமுடையவனே! உன்னைச் சரணமடைந்தவர்களின் பயத்தை அழிப்பவனே! ஸம்ஸாரத்தினின்று பயந்து, அதினின்று மீளுவதற்கு மற்றொரு உபாயத்தையும் அறியாத நாங்கள், உன்னைச் சரணம் அடைகின்றோம். இவ்வுலகத்திலுள்ள ஜனங்கள் சப்தாதி விஷய ஸுகங்களை விரும்பி, அவற்றைப் பெறுதற்காக, பற்பல கர்மங்களில் இழிந்து, பாஞ்சராத்ரம் முதலியவற்றின் மூலமாய் உன்னால் உபதேசிக்கப்பட்டதும், நன்மையை நிறைவேற்றிக் கொடுப்பதும், தங்களுக்கு அனுரூபமுமாகிய (ஏற்ற) உன்னுடைய ஆராதன ரூபமான கர்மத்தில் எதுவரையில் ஊக்கமற்றிருக்கிறார்களோ, அதுவரையில் அவர்களுக்கு வ்யாதி முதலிய வருத்தங்களை விளைவித்து, ஜீவிக்க வேண்டுமென்னும் விருப்பத்தை உடனே வலிவுடன் அறுத்து விடுகின்றாய். ப்ராணிகளின் க்ஷேமத்தில் ஏமாற்றமின்றி இமை கொட்டாதிருக்கிற அத்தகைய உனக்கு நமஸ்காரம். 

ஜகதீசனே! ஆதிகாரணனான நீ, ஸத் புருஷர்களைக் காக்கும் பொருட்டும், துஷ்டர்களை நிக்ரஹிக்கும் (தண்டிக்கும்) பொருட்டும், உன்னுடைய அம்சமான பலராமனுடன் இவ்வுலகில் அவதரித்தாய். துஷ்டர்களை நிக்ரஹிக்காமல் (தண்டிக்காமல்) சிஷ்டர்களைக் (நல்லவர்களைக்) காக்கமுடியாமையால், அதுவும் சிஷ்ட (நல்லோர்களைக்) பரிபாலனத்திற்காகவே (காப்பதற்கே) யாகையால், நீ ஹிதத்தையே (நன்மையையே) செய்பவனென்பதில் ஸந்தேஹமில்லை. துஷ்டர்களை நிக்ரஹிப்பதும் (தண்டிப்பதும்) அவர்களுக்குக் கடைசியில் ஹிதமாகவே (நன்மையாகவே) முடிகிறதாகையால், அதுவும் ஹிதமே (நன்மையே). 

ஆனால், ஒருவன் துக்கிப்பானேனென்றால், ஒருவன் உன்னுடைய ஆஜ்ஞையைக் (கட்டளையைக்) கடந்து, பிறரை வருத்துகையால் அவர்கள் வருந்துகிறார்களோ? அல்லது, அவனவன் தன்னுடைய பாப கர்மத்தின் பலனான துக்கத்தை அனுபவிக்கிறானோ? இன்னதென்று நாங்கள் நிச்சயித்தறியோம். (அவரவர் கர்மங்களுக்குத் தகுந்தபடி ஸுக, துக்கங்களைக் கொடுக்கின்றாயாகையால், உனக்குப் பக்ஷபாதமாவது (ஓரவஞ்சனையாவது), மன இரக்கமில்லாமையாவது கிடையாது). 

ப்ரபூ! ராஜர்களுக்கு ராஜ்ய போகத்தினாலுண்டாகும் ஸுகம், ஸ்வப்னத்தில் (கனவில்) அனுபவிக்கும் ஸுகத்தோடொத்தது. அது கர்மாதீனமாய் விளையும் ஸுகமல்லவா? (ஆகையால், ஜராஸந்தனால் கட்டுண்பதற்கு முன்பு, ராஜ்யத்திலிருக்கும் பொழுதும் கூட ஸுகமென்பது கிடையாது). மங்களமான ராஜ சரீரம் பெற்றமை ஸுகமல்லவா? என்றால், அதில் ஸுகமில்லை. ஸர்வ காலமும் சத்ருக்களிடத்தினின்று பயம் நேரக்கூடியதும், சவம் (பிணம்) போன்றதுமாகிய இச்சரீரமாகிற பாரத்தை, சுமந்து கொண்டிருக்கிறோம். பிணத்தைச் சுமக்குகிறவர்களுக்கு அது ஸுகமாயிருக்குமோ? அவ்வாறே இதுவும் ஸுகமன்று. 

ஜகதீசனே! உன்னுடைய அனுக்ரஹத்தினால், எதிலும் விருப்பமில்லாத யோகிகளுக்கு நேரக்கூடிய உன்னை அனுபவிக்கையாகிற மஹாநந்தத்தைத் துறந்து, உன் மாயையால் மதிமயங்கி, மன இரக்கத்திற்கிடமாகி, இவ்வுலகில் வருந்துகிறோம். வணங்கினவர்களின் சோகத்தைப் போக்கவல்ல பாதங்களையுடையவனே! இப்பொழுது கட்டுண்டிருக்கிற எங்களை மகதராஜனென்னும் பெயருடைய கர்ம பாசத்தினின்று (முன் வினைக் கட்டிலிருந்து) விடுவிப்பாயாக. பதினாயிரம் யானைகளின் பலமுடைய இவனொருவனே, ராஜர்களாகிய எங்களனைவரையும் ஸிம்ஹம் ஆடுகளைத் தகைவது (சுற்றி வளைப்பது) போல் தன் க்ருஹத்தில் தகைந்திருக்கிறான் (சிறை வைத்திருக்கிறான்). ஆகையால், அவனிடத்தினின்று நாங்களே எங்களை விடுவித்துக் கொள்ள வல்லமையற்றிருக்கிறோம். 

சக்ராயுதம் தரித்தவனே! இவன் உன்னோடு பதினெட்டு தடவைகள் யுத்தம் செய்து, பதினேழு தடவைகள் உன்னால் தோற்பிக்கப்பட்டானல்லவா. அவன், பிறகு அளவற்ற வீர்யமுடையவனாயினும், மனுஷ்ய சேஷ்டையை அனுஸரித்திருக்கிற உன்னை ஒரு தடவை ஜயித்து, கொழுப்புற்று, உன் ப்ரஜைகளாகிய எங்களைப் பீடிக்கிறான். (தூதன் சொல்லுகிறான்). மகதராஜனால் தகையப்பட்ட (சிறை வைக்கப்பட்ட) மன்னவர்கள் உன் காட்சியை விரும்பி இவ்வாறு உன் பாத மூலத்தைச் சரணம் அடைந்தார்கள். மன இரக்கத்திற்கிடமான அம்மன்னவர்களுக்கு ஸுகத்தை விளைப்பாயாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ராஜதூதன் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கையில், பொன்னிறமுள்ள ஜடாபாரம் (சடை) தரித்தவரும், மிகுந்த ஒளியுடையவரும் தேவ ரிஷியுமாகிய நாரதர், அன்பனாகிய ஸ்ரீக்ருஷ்ணனுடைய அற்புத சரித்ரங்களையும், பிறவியையும் பாடிக்கொண்டு, அந்தப் பாட்டின் இனிமையால் அந்த ஸ்ரீக்ருஷ்ணனையும், ஸபையிலுள்ள ஜனங்களையும், உருகின மனமுடையவர்களாகச் செய்து கொண்டும், மற்றவர்களை மனக்களிப்புறச் செய்து கொண்டும், ஸூர்யன்போல அவ்விடம் வந்து தோன்றினார். 

ஸமஸ்த லோகங்களுக்கும் ப்ரபுக்களான ப்ரஹ்மாதிகளையும் அடக்கியாள்பவனும், ஷாட்குண்ய பூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) ஸ்ரீக்ருஷ்ணன், அம்மஹர்ஷியைக் கண்டு, ஸபிகர்களோடும் (சபையோர்களோடும்), தன்னைத் தொடர்ந்தவர்களோடும், ஸந்தோஷமுற்று ஆஸனத்தினின்று எழுந்து, தலையை வணக்கி, வந்தனம் செய்தான். ஸ்ரீக்ருஷ்ணன், அம்முனிவரை விதிப்படி பூஜித்து, ஆஸனத்தில் உட்கார்ந்திருக்கின்ற அவரைத் தன் ச்ரத்தையினால் ஸந்தோஷப் படுத்திக்கொண்டு, இனிய உரைகளுடன் இவ்வாறு மொழிந்தான்.

ஸ்ரீக்ருஷ்ணன் சொல்லுகிறான்:- மஹர்ஷீ! இப்பொழுது மூன்று லோகங்களும் எவ்விதத்திலும் பயமில்லாதிருக்கின்றனவா? உலகங்களையெல்லாம் சுற்றுகின்ற உம்மால் எங்களுக்குப் பெரிய லாபம் உண்டாகின்றது. ஸமஸ்த லோக வ்ருத்தாந்தங்களும் எங்களுக்கு உம்மால் தெரிகின்றனவல்லவா? ஈச்வரனால் படைக்கப்பட்ட உலகங்களில் உமக்குத் தெரியாதது ஒன்றுமே இல்லை. ஆகையால், பாண்டவர்கள் என்ன செய்ய நினைத்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி உம்மை வினவுகிறேன்; அதைச் சொல்வீராக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ப்ரபூ! அளவற்ற மஹிமைகளுடைவனே! ஜ்ஞான சக்த்யாதி குணங்களோடு கூடவே நீ ஸமஸ்த பூதங்களிலும் அந்தராத்மாவாயிருக்கின்றாய். அந்தராத்மாவாயிருப்பினும், பஸ்மத்தினால் மறைக்கப்பட்ட ஒளியுடைய அக்னி போல ஒருவர்க்கும் புலப்படுகிறதில்லை. ஆகையால், உனக்குத் தெரியாதது ஒன்றுமே இல்லை. பாண்டவர்களின் நினைவு உனக்குத் தெரியாததன்று. நீ ப்ரபஞ்சங்களையெல்லாம் படைத்த விச்வ கர்த்தாவான (உலகைப் படைப்பவரான) ப்ரஹ்மதேவனையும் மதிமயங்கும்படி செய்பவன். உன் மாயை பெரும்பாலும் கடக்க முடியாதது. அத்தகைய உன் மாயையை, நான் பலகாலும் கண்டிருக்கிறேன். 

“பாண்டவர்கள் என்ன செய்ய நினைக்கிறார்கள்?” என்று என்னை வினவினதும், மாயையே. என்னை ஏமாற்றுவதற்காக இவ்வாறு வினவுகின்றனையே அன்றி, உண்மையில் உனக்குத் தெரியாதது ஒன்றுமே இல்லை. நீ அந்தப்புரத்தில் பல க்ருஹங்களிலும் ஒருவாறான உருவத்துடன் பல செயல்களைச் செய்து கொண்டு, ஒரே ஸமயத்தில் புலப்பட்டு, உன் யோக மாயையைக் காட்டினாற் போல், இதுவும் ஒரு மாயையே. ஆகையால், நீ இவ்வாறு வினவுவது எனக்கு அற்புதமன்று. 

தன் ஸங்கல்பத்தினால் இவ்வுலகங்களையெல்லாம் படைத்து, அவற்றிற்கு அந்தராத்மாவாகி நியமித்துக் கொண்டிருக்கிற உன்னுடைய அபிப்ராயத்தை உன்னால் படைக்கப்பட்டு நியமிக்கப்படுகிற இவ்வுலகத்திலுள்ளவன் எவன்தான் நன்றாக அறியவல்லனாவான்? ஆகையால், உன்னுடைய அபிப்ராயத்தை என்னால் நிச்சயித்தறிய முடியாது. உன்னுடைய அஸாதாரண ஸ்வபாவத்தினால் எல்லாவற்றிலும் விலக்ஷணமான (வேறான) ஸ்வரூபமுடைய உனக்கு நமஸ்காரம். (உனக்கு வெறுமனே நமஸ்காரம் செய்ய வேண்டுமேயன்றி உன் அபிப்ராயத்தை நிச்சயிக்க வல்லனல்லேன்) 

ஜன்ம, மரணாதி ரூபமான ஸம்ஸாரத்தில் அழுந்தி, அனர்த்தங்களை விளைக்கின்ற சரீரத்தினின்று விடுபடும் உபாயத்தை அறியாதிருக்கிற ஜீவனுக்கு, உன் புகழாகிற பெரிய தீபத்தை லீலா (விளையாட்டான) அவதாரங்களால் ஏற்றிக் கொடுத்தாய். அத்தகையனான உன்னை நான் சரணமடைகின்றேன். நீ எல்லாமறிந்தவன். உனக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. ஆயினும், மனுஷ்ய உருவத்தை ஏற்றுக் கொண்டு, மனுஷ்ய ரீதியை அனுஸரித்திருக்கின்ற நீ வினவுகின்றாயாகையால், உன்னுடைய அத்தையின் பிள்ளையும், உன் பக்தனுமாகிய யுதிஷ்டிர மன்னவன் செய்ய நினைத்திருப்பதைச் சொல்லுகிறேன்; கேட்பாயாக. 

பாண்டவனான யுதிஷ்டிர மன்னவன், உன்னோடு ஸாரூப்யம் (ஒரே மாதிரியான உருவத்தைப்) பெறுகையாகிற மேன்மையை விரும்பி, ராஜஸூயமென்னும் சிறந்த யாகத்தினால் உன்னை ஆராதிக்கப்போகிறான். அதை நீ அனுமோதனம் செய்ய வேண்டும் (ஆமோதிக்க வேண்டும்) (அருகே இருந்து நீ அதை நடத்த வேண்டும்.) பெரும் புகழுடைய சிசுபாலாதி ராஜர்களும், அந்த யாகத்தைப் பார்க்க விரும்பி, அவ்விடம் வருவார்கள். சண்டாளாதிகளும் கூட உன்னுடைய நாமத்தைக் கேட்பது, கீர்த்தனம் செய்வது, நினைப்பது, இவைகளில் ஏதேனுமொன்று செய்யினும், பாபங்களெல்லாம் தீர்ந்து பரிசுத்தராவார்கள் (தூயவர்கள் ஆவார்கள்). உன்னைக் கண்ணால் காண்பார்களாயின், அவர்கள் பரிசுத்தராவார்கள் என்பதைப் பற்றிச் சொல்லவேண்டுமோ? 

உன்புகழ், திசைகளுக்கெல்லாம் மேற்கட்டு போல் அலங்காரமாகி, ஆகாயத்திலும், பாதாளத்திலும், பூமியிலும் நிறைந்து, ஜகத்தை எல்லாம் புனிதம் செய்கின்றது. மற்றும், உன் ஸ்ரீபாத தீர்த்தம் (திருவடியிலிருந்து விழுந்த நீர்), ஆகாயத்தில் மந்தாகினி என்றும், பாதாளத்தில் போகவதியென்றும், இவ்வுலகத்தில் கங்கையென்றும் ப்ரஸித்தி பெற்று, உலகங்களையெல்லாம் புனிதம் செய்கின்றது.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- தன் பக்ஷத்தைச் சேர்ந்த அந்தச் சபையிலுள்ள யாதவர்கள், இவ்வாறு ராஜ  வ்ருத்தாந்தத்தையும் (கதையையும்), யுதிஷ்டிர வ்ருத்தாந்தத்தையும் (கதையையும்) கேட்டு, மாகதனை (ஜராஸந்தனை) ஜயிக்க வேண்டுமென்னும் விருப்பத்தினால் தூண்டப்பட்டு, “முதலில் மாகதனை (ஜராஸந்தனை) எதிர்த்துப்போவது தான் முக்யம்” என்று சொல்லிக் கொண்டிருக்கையில், ஸ்ரீக்ருஷ்ணன் புன்னகை செய்து கொண்டு, ம்ருதுவான உரைகளுடன், உத்தவனைக் குறித்து மொழிந்தான். 

ஸ்ரீக்ருஷ்ணன் சொல்லுகிறான்:- நீர் எமக்குச் சிறந்த கண்ணாயிருக்கின்றீர். (கண்போல எல்லா விஷயங்களையும் தெரியப்படுத்த வல்லராயிருக்கின்றீர்). கண் மறைவிலிருப்பதைத் தெரிவிக்க வல்லதன்று. நீர் எல்லாவற்றையும் தெரிவிக்க வல்லராகையால், சிறந்த கண்ணாயிருக்கின்றீர். மற்றும், எமக்கு நண்பர்; மற்றும், மந்த்ராலோசனையால் ஸாதிக்கக்கூடிய கார்யங்களின் உண்மையை அறிந்தவர். ஆகையால், இப்பொழுது எதைச் செய்யவேண்டுமோ, அதை நிரூபித்துச் சொல்வீராக. நீர் சொல்லுவதை நாங்கள் நம்புகிறோம். அப்படியே செய்யவும் செய்கிறோம்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ப்ரபுவாகிய ஸ்ரீக்ருஷ்ண பகவான், தான் ஸர்வஜ்ஞனாயினும் ஒன்றுமறியாதவன் போல் ஆலோசனை சொல்லும்படி தூண்டுகையில், உத்தவன் அப்பகவானுடைய ஆஜ்ஞையைத் (கட்டளையைத்) தலையால் வஹித்து (ஏற்று) மறுமொழி கூறினான்.

எழுபதாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துரையிடுக (0)
புதியது பழையவை