செவ்வாய், 30 மார்ச், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 287

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எழுபத்தொன்றாவது அத்தியாயம்

(உத்தவன் யுதிஷ்டிர யாகத்திற்குப் போக வேண்டுமென்று நிரூபிக்கையில், ஸ்ரீக்ருஷ்ணன் அப்படியே அங்கீகரித்துப் போதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மிகுந்த மதியுடைய உத்தவன், தேவ ரிஷியாகிய நாரதர் மொழிந்ததைக் கேட்டு, ஜராஸந்தனை எதிர்க்கையே முக்யமென்கிற ஸபிகர்களின் (ஸபையோர்களின்) அபிப்ராயத்தையும், ராஜஸூயத்திற்குப் போக வேண்டுமென்கிற ஸ்ரீக்ருஷ்ணனுடைய அபிப்ராயத்தையும் அறிந்து, மேல்வருமாறு கூறினான்.

உத்தவன் சொல்லுகிறான்:- தேவனே! “அத்தையின் பிள்ளையாகிய யுதிஷ்டிரன் யாகம் செய்யப் போகிறான். அவனுக்கு நீ ஸஹாயம் (உதவி) செய்யவேண்டும்” என்று நாரத மஹரிஷி மொழிந்தாரல்லவா? அதை அவச்யம் செய்யவேண்டும். சரணம் விரும்புகிற ராஜர்களைக் காக்க வேண்டியதும் அவச்யமே. இரண்டும் முக்யமான கார்யங்களே. 

ப்ரபூ! திக்விஜயம் செய்த பின்பு தான் ராஜஸூய யாகம் நடத்தவேண்டும். ஆகையால், முன்பு திக்விஜயம் செய்யவேண்டும். அதற்கு நீ உதவி செய்ய வேண்டியது அவச்யமாகையால், நாம் இங்கிருந்து முதலில் இந்த்ர ப்ரஸ்தத்திற்குப் போகவேண்டும். அங்கு, யுதிஷ்டிரனால் அனுமதி கொடுக்கப் பெற்று, அவனுடைய ப்ரயோஜனத்திற்காகவே, ஜராஸந்தனை வதிப்பாயாக. அவ்வாறு திக்விஜயத்திற்காக ஜராஸந்தனைக் கொல்வது, ராஜஸூயத்தை நடத்துவது, ராஜர்களை விடுவிப்பது ஆகிய இரண்டு ப்ரயோஜனங்களையும் (பலன்களையும்) நிறைவேற்றும் என்று எனக்குத் தோற்றுகிறது. 

கோவிந்தனே! முதலில் ராஜஸூயத்திற்குப் போவோமாயின், இதனாலேயே நாம் விரும்புகிற பெரிய ப்ரயோஜனமும் கைகூடுகின்றது. ஜராஸந்தனைக் கொன்று ராஜர்களைச் சிறையினின்று விடுவிக்கிற உனக்கு புகழும் உண்டாகும். அந்த ஜராஸந்தன், பதினாயிரம் யானை பலமுடையவன். பிறர்க்குப் பொறுக்கமுடியாத கொடிய பலமுடைய பீமஸேனனைத் தவிர மற்ற பலிஷ்டர்கள் (பலசாலிகள்) அனைவர்க்கும் அவன் வருந்தியும் பொறுக்க முடியாதவன். பீமஸேனன் அவனோடொத்த பலமுடையவனாகையால், அவனை வெல்ல வல்லனே. ஆனால், அவனை த்வந்த்வ (ஒருவரோடு ஒருவர் செய்யும்) யுத்தத்தினால் வெல்ல வேண்டுமன்றி, நூறு அக்ஷௌஹிணி (தேர் 21870; குதிரை 65610; யானை 21870; காலாட் படை 109350 கொண்ட பெரும் படை அக்ஷௌஹிணி ஸைன்யம் எனப்படும்) ஸைன்யங்கள் (படைகள்) போர் செய்தாலும் வெல்ல முடியாது. அளவற்ற ஸைன்யங்களையுடைய அம்மகத ராஜனோடு பீமஸேனனுக்கு த்வந்த்வ (ஒருவரோடு ஒருவர் செய்யும்) யுத்தம் எப்படி நேருமென்றால், அவன் ப்ராஹ்மண விச்வாஸமுடையவன். அவர்கட்கு வேண்டினவற்றை எல்லாம் நிறைவேற்றிக் கொடுக்கும் தன்மையன். அவன், ப்ராஹ்மணர்கள் வேண்டினால், ஒருகாலும் மறுக்கமாட்டான். ஆகையால், பீமஸேனன் ப்ராஹ்மண வேஷம் பூண்டு, அவனிடம் சென்று, த்வந்த்வ (ஒருவரோடு ஒருவர் செய்யும்) யுத்தத்தை யாசிக்க வேண்டும். நீ ஸமீபத்தில் இருப்பாயாயின், த்வந்த்வ (ஒருவரோடு ஒருவர் செய்யும்) யுத்தம் செய்கின்ற அம்மகதராஜனைப் பீமஸேனன் வதித்து விடுவான். 

ப்ரபஞ்சத்தின் (உலகத்தின்) ஸ்ருஷ்டி (படைப்பு), ஸம்ஹாரங்களுக்கு (அழித்தல்) நீயே ஆதிகாரணன். காலத்தை சரீரமாக உடையவனும், ப்ராக்ருத (ஸத்வ, ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களுடன் கூடிய) உருவங்களற்றவனுமாகிய உனக்கு, ப்ரஹ்ம, ருத்ரர்களிருவரும் அம்சங்களே. அவ்விருவர் மூலமாய் நீயே ஸ்ருஷ்டி (படைப்பு), ஸம்ஹாரங்களை  (அழித்தல்) நடத்துகின்றாய். இவ்வாறு நீ ஜராஸந்தனை வதிப்பாயாயின், அவனால் தகையுண்ட (சிறை வைக்கப்பட்ட) ராஜர்களின் பத்னிகள், தங்கள் சத்ருவாகிய ஜராஸந்தனைக் கொன்றதும், தங்களைச் சிறையினின்று விடுவித்ததுமாகிய நிர்மலமான (தூய்மையான) உன் சரித்ரத்தை, தத்தம் க்ருஹங்களில் குழந்தைகளைச் சீராட்டுவது முதலிய ஸமயங்களில் பாடுவார்கள். கோபிகைகளும், உன்னைச் சரணம் அடைந்த முனிவர்களும், நாங்களும், முதலையிடத்தினின்று யானையை விடுவித்தது, ராவணனிடத்தினின்று ஜனகராஜன் திருமகளான ஸீதையை விடுவித்தது, கம்ஸனிடத்தினின்று தாய், தந்தைகளான தேவகி, வஸுதேவர்களை விடுவித்தது, முதலிய உன் வ்ருத்தாந்தங்களைப் (கதைகளைப்) பாடுவது போல, அவர்களும் இந்த வ்ருத்தாந்தத்தைப் பாடுவார்கள். 

ஸ்ரீக்ருஷ்ணனே! ஜராஸந்தனைக் கொல்லுவது, அனேக ப்ரயோஜனங்களையும் நிறைவேற்றிக் கொடுக்கின்றது. (அவனை வதித்துவிட்டால், சிசுபாலாதிகளை அனாயாஸமாக வதிக்கலாம்): ஜராஸந்தனால் தகையப்பட்ட (சிறை வைக்கப்பட்ட) ராஜர்களின் புண்யகர்மம் பலிக்கும்படியான தசையை அடைந்திருக்கின்றமையால், அவர்களை விடுவிக்க வேண்டியது அவச்யமாயிருக்கின்றது. ராஜஸூய யாகம் உனக்கு இஷ்டமானதே. (யுதிஷ்டிரன் அதைச் செய்ய விரும்புகிறானாகையால், அவனுக்கு இஷ்டமென்பதில் ஸந்தேஹமில்லை. ஆகையால், நாம் ராஜஸூய யாகத்தை உத்தேசித்துப் போவதுதான் நலம்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ராஜனே! தன் பக்தர்களைக் கைவிடாமல் பாதுகாக்கும் தன்மையனான ஸ்ரீக்ருஷ்ணனும், தேவரிஷியாகிய நாரதரும், மற்றும் அங்குள்ள யது வ்ருத்தர்களும் (பெரியோர்களும்), பலராமனும், இவ்வாறு உத்தவன் எல்லாவிதத்திலும் மங்களத்தை விளைவிக்குமாறு மொழிந்த உரையைக் கேட்டு, ஸந்தோஷமடைந்து, புகழ்ந்தார்கள். 

அப்பால், தேவகியின் குமாரனும், ஷாட்குண்ய பூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), ப்ரபுவுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன், வஸுதேவன் முதலிய பெரியோர்களிடத்தில் அனுமதி பெற்றுக் கொண்டு, ஜயசீலனான தாருகன் முதலிய ப்ருத்யர்களை (சேவகர்களை) ப்ரயாணப்படும்படி ஆஜ்ஞாபித்தான் (கட்டளையிட்டான்). சத்ருக்களை அழிப்பவனே! புதல்வர்களோடும், மற்றுமுள்ள கருவிகளோடும் தன் பத்னிகளைப் புறப்படச் செய்து, பலராமனிடத்திலும், யதுராஜனான உக்ரஸேனனிடத்திலும் அனுமதி பெற்றுக்கொண்டு, ஸூதன் கொண்டு வந்த கருடக் கொடியுடைய தன் ரதத்தின் மேல் ஏறிக்கொண்டான். 

அப்பால், தேர், யானை, காலாள், குதிரைக்காரர் ஆகிய இவற்றின் தலைவர்களால் பயங்கரமான தன் ஸைன்யத்தினால் சூழப்பட்டு, ம்ருதங்கம், துந்துபி, ஆனகம், சங்கம், கோமுகம் முதலிய வாத்யங்களின் கோஷங்களால் திசைகளெல்லாம் ஒலிக்கும்படி செய்து கொண்டு, பட்டணத்தினின்று புறப்பட்டான். பதிவ்ரதைகளான ருக்மிணி முதலிய ஸ்ரீக்ருஷ்ண பத்னிகள், சிறந்த ஆடை, ஆபரணம், அங்கராகம், பூமாலை இவைகளை அணிந்து, தத்தம் புதல்வர்களோடு கூடி, கத்தி, கேடயம் இவைகளைக் கையிலேந்தின ப்ருத்யர்களால் (சேவகர்களால்) பாதுகாக்கப்பட்டு, தங்களுக்கு ஏற்பட்டிருக்கிற குதிரை, பொற்சிவிகை முதலிய வாஹனங்களின் மேல் ஏறிக்கொண்டு ரதத்தின் மேலேறிப் போகின்ற தங்கள் கணவனான ஸ்ரீக்ருஷ்ணனைத் தொடர்ந்து சென்றார்கள். ப்ருத்யர்களின் (சேவகர்களின்) ஸ்த்ரீகளும், விலை மாதுக்களும் நன்கு அலங்கரித்துக் கொண்டு, பாய், குடிசை, கம்பளி, துணி முதலிய கருவிகளையெல்லாம் எடுத்துக் கட்டிக்கொண்டு, பல்லக்கு, ஒட்டகம், எருது, கிடா, கழுதை, கோவேறு கழுதை, வண்டி, பெண் யானை முதலிய வாஹனங்களில் ஏறிக்கொண்டு சென்றார்கள். 

பெரிய த்வஜபடங்களும் (கொடித்துணிகளும்), சத்ர (குடை) சாமரங்களும் (கவரிகளும்), சிறந்த ஆயுதங்களும், ஆபரணங்களும், கிரீடங்களும், த்வஜங்களும் (கொடிகளும்) அமைந்து பெருங்கோஷமுடைய அந்தப் பெரிய ஸைன்யம், ஸூர்யனுடைய கிரணங்களால் கலக்கமுற்ற திமிங்கலம் முதலிய ஜலஜந்துக்களால் மேலெழுகின்ற அலைகளையுடைய ஸமுத்ரம் போல் பகலில் விளங்கிற்று. 

அப்பால், நாரத முனிவர் ஸ்ரீக்ருஷ்ணனால் வெகுமதிக்கப்பெற்று, அவன் செய்த பூஜையை ப்ரீதியுடன் பெற்றுக் கொண்டு, அவனை மனத்தில் நமஸ்கரித்து, அவனுடைய அபிப்ராயத்தையும் அறிந்து, அவனுடைய காட்சியினால் இந்திரியங்களெல்லாம் ஸந்தோஷம் அடையப் பெற்று, ஆகாச மார்க்கத்தினால் புறப்பட்டுப் போனார். தேவகியின் புதல்வனும், மஹானுபாவனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன், ராஜதூதனைக் குறித்து “நீங்கள் பயப்படவேண்டாம். நான் மகதராஜனைக் கொன்று விடுகிறேன். உங்களுக்கு க்ஷேமம் உண்டாகும்” என்று மொழிந்தான். 

இவ்வாறு சொல்லியனுப்பப்பட்ட அத்தூதன், அம்மன்னவர்களிடம் சென்று, ஸ்ரீக்ருஷ்ணன் சொன்னபடி எல்லாவற்றையும் மொழிந்தான். அவர்களும், மாகதனுடைய (மகத நாட்டு அரசனான ஜராசந்தனுடைய) பந்தனத்தினின்று (கட்டிலிருந்து) விடுபட விரும்பி, ஸ்ரீக்ருஷ்ணனுடைய காட்சியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஸ்ரீக்ருஷ்ணன், ஆனர்த்தம், ஸௌவீரம், குரு, குருக்ஷேத்ரம் இத்தேசங்களைக் கடந்து, இடையிலுள்ள பர்வதங்களையும் (மலைகளையும்), நதிகளையும், பட்டணங்கள், க்ராமங்கள், இடைச்சேரிகள், பொன், வெள்ளி விளையுமிடங்கள் இவற்றையும் கடந்தான். 

அப்பால் ஸ்ரீக்ருஷ்ணன், வ்ருஷத்வதி, ஸரஸ்வதி என்னும் இந்நதிகளையும், பஞ்சால தேசங்களையும், மத்ஸ்ய தேசங்களையும் கடந்து, இந்த்ரப்ரஸ்தம் போய்ச் சேர்ந்தான். யுதிஷ்டிரன், மனுஷ்யர்களுக்குக் கிடைக்க அரிதான காட்சியையுடைய அந்த ஸ்ரீக்ருஷ்ணன் வருவதைக் கேட்டு ஸந்தோஷம் அடைந்து, புரோஹிதர்களோடும், பந்துக்களோடும், நண்பர்களோடும் கூடி, பட்டணத்தினின்று புறப்பட்டான். அந்த யுதிஷ்டிரன், பெரிய வாத்ய கோஷத்தோடும், அத்தகைய வேதகோஷத்தோடும், இந்திரியங்கள் ப்ராணனை எதிர்கொள்வது போல, ஸ்ரீக்ருஷ்ணனை எதிர்கொண்டான். 

அப்பாண்டவன், ஸ்ரீக்ருஷ்ணனைக் கண்டு, மனம் உருகப் பெற்று, கண்டு நெடுநாள் ஆனமையாலும், மிகவும் அன்பிற்கிடமாகையாலும், அவனை அடிக்கடி ஆலிங்கனம் செய்து (தழுவிக்) கொண்டான். அந்த யுதிஷ்டிரன், ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு நிர்மலமான (தூய்மையான) வாஸஸ்தானமாகிய (இருப்பிடமகிய) ஸ்ரீக்ருஷ்ணனுடைய அங்கத்தை இரு புஜங்களாலும் (கைகளாலும்) ஆலிங்கனம் செய்து (அனைத்து), அசுபங்களெல்லாம் (தீமைகளெல்லாம்) தீர்ந்து, கண்களில் ஆநந்த நீர் பெருகவும், உடம்பெல்லாம் மயிர்க்கூச்சம் உண்டாகவும், லோக வ்யாபாரம் (உலகியல் செயல்கள்) மறக்கவும் பெற்று மஹாநந்தம் அடைந்தான். 

பீமஸேனன் புன்னகை செய்து கொண்டே, ப்ரீதியின் மிகுதியாலுண்டான கண்ணீர்களால் கண்கள் மறையப் பெற்று, அம்மான் பிள்ளையாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணனை அணைத்துக் கொண்டு, ஸந்தோஷம் அடைந்தான். நகுல, ஸஹதேவர்களும், அர்ஜுனனும், கண்களில் மேன்மேலென ஆநந்த நீர் பெருகப் பெற்று, மிகவும் அன்பிற்கிடமான அவ்வச்சுதனை அணைத்துக் கொண்டார்கள். ஸ்ரீக்ருஷ்ணன், அர்ஜுனனால் அணைக்கப்பெற்று, நகுல, ஸஹதேவர்களால் அணைத்து, அபிவாதனமும் செய்யப் பெற்று, யுதிஷ்டிரன், பீமன், ப்ராஹ்மணர்கள், மற்றுமுள்ள குல வ்ருத்தர்கள் (பெரியோர்கள்) ஆகிய இவர்களுக்குப் பாத வந்தனம் செய்து (திருவடியை வணங்கி), வெகுமதிக்கப் பெற்று, குருக்களையும், ஸ்ருஞ்சயர்களையும், கேகயர்களையும் வெகுமதித்து, விசாரித்தான். 

ஸுதர்களும் (புராணக்கதை கூறுபவர்களும்), மாகதர்களும் (வம்சப் பெருமை கூறுபவர்களும்), வந்திகளும் (சமயத்திற்கேற்ப நல்வாழ்த்து கூறுபவர்களும்), கந்தர்வர்களும், ஹாஸ்யக்காரர்களும், ப்ராஹ்மணர்களும், மிருதங்கம், சங்கம், படஹம், வீணை, பணவம், வேணு என்னும் இவ்வாத்ய கோஷங்களுடன் தாமரைக் கண்ணனாகிய ஸ்ரீக்ருஷ்ணனைத் துதித்தல், ஆடல், பாடல், இவைகளைச் செய்தார்கள். புண்யமான புகழுடையவர்களுக்குச் சிகாமணியான அந்த ஸ்ரீக்ருஷ்ண பகவான், இவ்வாறு நண்பர்களால் சூழ்ந்து துதிக்கப் பெற்று, அலங்காரம் செய்யப்பெற்ற பட்டணத்திற்குள் நுழைந்தான். 

அப்பட்டணத்தின் வீதிகளெல்லாம் யானைகளின் மதஜலங்களாகிற பரிமளமுள்ள நீர்களால் நனைக்கப்பட்டிருந்தன. மற்றும், அந்நகரம் விசித்ரமான த்வஜங்களாலும் (கொடிகளாலும்), ஸ்வர்ணமயமான (தங்க மயமான) தோரணங்களாலும், பூர்ண கும்பங்களாலும், நன்கு ஸ்னானம் செய்து புதிய வெண்பட்டு வஸ்த்ரங்களை உடுத்து ஆபரணங்களை அணிந்து சந்தனம் முதலிய அங்கராகங்களைப் (திருமேனியில் பூசும் வாசனைப் பொருட்களைப்) பூசிக்கொண்டிருக்கிற புருஷர்களாலும், அத்தகைய மடந்தையர் மணிகளாலும் விளக்கமுற்றிருந்தது. மற்றும், அந்நகரம் வீடுகள் தோறும் நன்கு எரியுமாறு தீபங்களை ஏற்றி, புஷ்பம் முதலிய பலிகளை இட்டு, சாளரங்களின் (ஜன்னல்களின்) வழியாய் வெளி வருகின்ற தூபங்களால் அழகாகித் திகழ்கின்ற பதாகைகளுடையதும், வெள்ளியால் இயற்றின பெரிய சிகரங்களின் நுனியில் பொற்கலசங்கள் இடப்பெற்ற மாளிகைகளால் நிரம்பியதுமாயிருந்தது. இத்தகையதான இந்த்ரப்ரஸ்த நகரத்திற்குள் ஸ்ரீக்ருஷ்ணன் ப்ரவேசித்தான். 

மனுஷ்யர்கள் கண் கொட்டாதபடி பேராவலுடன் பார்ப்பதற்குரிய பேரழகனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன் வருவதைக் கேட்டுப் பட்டணத்து மடந்தையர்கள், அந்த க்ஷணமே வீட்டு வேலைகளையும், படுக்கையில் கணவர்களையும் துறந்து, பார்க்க வேண்டுமென்னும் பேராவலால், தலைச்சொருக்குகளும், அரையிலுடுத்த வெண்பட்டு வஸ்த்ரத்தின் முடியும் அவிழப் பெற்று, ஸ்ரீக்ருஷ்ணனைப் பார்க்க ராஜ மார்க்கத்திற்கு வந்தார்கள். வீடுகளில் உப்பரிக்கைகளின் (மேல் மாடிகளில்) மேல் ஏறிக் கொண்டிருக்கிற யௌவன (இளம்) வயதுடைய பெண்மணிகள், யானை, குதிரை, தேர், காலாட்கள் இவைகளால் மிகவும் நிறைந்திருக்கிற அந்த ராஜ மார்க்கத்தில், பார்யைகளோடு வருகின்ற ஸ்ரீக்ருஷ்ணனைக் கண்டு, அவன் மேல் புஷ்பங்களை இறைத்து, அவனை மனத்தினால் ஆலிங்கனம் செய்து (அணைத்து), புன்னகையோடு கூடின கண்ணோக்கத்தினால் “நல்வரவாகுக” என்று வினவினார்கள். 

அம்மடந்தையர்கள், சந்த்ரனோடு கூடிய நக்ஷத்ரங்கள் போன்றிருக்கிற ஸ்ரீக்ருஷ்ண பத்னிகளைக் கண்டு, “இவர்கள் என்ன புண்யம் செய்தார்களோ? ஏனென்றால், புருஷோத்தமனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், கம்பீரமான புன்னகையோடு கூடின கடைக் கண்ணோக்கத்தினால், இவர்கள் கண்களுக்கு மஹோத்ஸவத்தை விளைக்கிறானல்லவா?” என்று மொழிந்தார்கள். 

பாபங்களெல்லாம் தீரப்பெற்ற பட்டணத்து ஜனங்களும், தொழிலாளர்களில் முக்யர்களும், மங்கள வஸ்துக்களைக் கைகளில் ஏந்திக்கொண்டு வந்து, ஆங்காங்கு ஸ்ரீக்ருஷ்ணனைப் பூஜித்தார்கள். (அதனால் அவர்கள் பாபங்களெல்லாம் தீரப்பெற்றார்கள்). அம்முகுந்தன் ப்ரீதியினால் பரபரப்புற்று, மலர்ந்த கண்களையுடைய அந்தப்புரத்து ஜனங்களால் எதிர்கொள்ளப் பெற்று, ராஜ க்ருஹத்திற்குள் நுழைந்தான். குந்தி, தன்னுடன் பிறந்தவனுடைய பிள்ளையும், மூன்று லோகங்களுக்கும் ஈச்வரனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணனைக் கண்டு மனக்களிப்புற்று, மஞ்சத்தினின்று (கட்டிலிலிருந்து) எழுந்து, தன் மணாட்டுப் பெண்ணாகிய (மருமகளான) த்ரௌபதியுடன் அவனை அணைத்துக் கொண்டாள். யுதிஷ்ட்ர மன்னவன், தேவர்களுக்குத் தேவனான ப்ரஹ்மதேவனுக்கும் நியாமகனாகிய (நியமிப்பவனாகிய) ஸ்ரீக்ருஷ்ணனைத் தன் க்ருஹத்திற்கு ஆதரவுடன் அழைத்துக் கொண்டு வந்து, ஸந்தோஷத்தினால் மெய் மறந்து, அவனைப் பூஜிக்க வேண்டிய விஷயத்தில் செய்யவேண்டிய கார்யம் இன்னதென்று தெரியப் பெறாதிருந்தான். 

ராஜனே! ஸ்ரீக்ருஷ்ணன், தன் தந்தையின் உடன் பிறந்தவளான குந்திக்கும், பெரியோர்களின் பத்னிகளான மற்றுமுள்ள மடந்தையர்களுக்கும் வந்தனம் செய்து, த்ரௌபதியாலும், தன்னுடன் பிறந்தவளான ஸுபத்ரையாலும், வந்தனம் (வணக்கம்) செய்யப் பெற்றான். த்ரௌபதி, தன் மாமியாரான குந்தியால் தூண்டப்பட்டு, ருக்மிணி, ஸத்யை, பத்ரை, ஜாம்பவதி, காளிந்தி, மித்ரவிந்தை, லக்ஷ்மணை, நாக்னஜிதி முதலிய ஸ்ரீக்ருஷ்ண பத்னிகள் அனைவரையும் மற்றும் எவரெவர் வந்தார்களோ அம்மடந்தையர்களையும் வஸ்த்ரங்கள், பூமாலைகள், அலங்காரங்கள் இவை முதலியவைகளைக் கொடுத்துப் பூஜித்தாள். 

தர்மராஜன் ஸ்ரீக்ருஷ்ணனையும், அவனுடைய ஸைன்யங்களையும், அவனோடு கூட வந்தவர்களையும், அவனுடைய பார்யைகளையும், புதிது புதிதாயிருக்கும்படி ஸுகமாக வஸிக்கச் செய்தான். எவன் முன்பு அர்ஜுனனோடு கூடிக் காண்டவ வனத்தினால் அக்னிக்கு திருப்தியை விளைவித்து, அவ்வக்னியினின்று மயனை விடுவித்து, அவனைக் கொண்டு யுதிஷ்டிர மஹாராஜனுக்கு திவ்யமான ஸபையை ஏற்படுத்திக்கொடுத்தானோ, அத்தகையனான ஜனார்த்தனனை, அந்த யுதிஷ்டிர மஹாராஜன் ஆவலுடன் வஸிக்கும்படி செய்து கொண்டு வந்தான். அம்மஹானுபாவன், யுதிஷ்டிரனுக்கு ப்ரியம் செய்ய விரும்பி, அர்ஜுனனுடன் ரதத்தில் ஏறி, படர்களால் (சேவகர்களால்) சூழப்பட்டு, விளையாடிக் கொண்டு, அங்குச் சில மாதங்கள் வஸித்திருந்தான். 

எழுபத்தொன்றாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக