புதன், 31 மார்ச், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 288

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எழுபத்து இரண்டாவது அத்தியாயம்

(ஸ்ரீ க்ருஷ்ணன் பீமஸேனனைக் கொண்டு ஜராஸந்தனை வதித்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஒருகால், ஸபையினிடையில் முனிவர்கள், ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்யர்கள், ப்ராதாக்கள், ஆசார்யர்கள், குலவ்ருத்தர்கள் (குலத்துப் பெரியோர்கள்), ஜ்ஞாதிகள் (பங்காளிகள்), ஸம்பந்திகள், பந்துக்கள் இவர்களால் சூழப்பட்ட யுதிஷ்டிரன், இவர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கையில் ஸ்ரீக்ருஷ்ணனைக் குறித்து இவ்வாறு மொழிந்தான்.

யுதிஷ்டிரன் சொல்லுகிறான்:- கோவிந்தனே! ப்ரபூ! யாகங்களில் சிறந்த ராஜஸூய யாகத்தினால் பரிசுத்தமான உன் விபூதிகளான தேவதைகளை ஆராதிக்க விரும்புகிறேன். அதை நீ நிறைவேற்ற வேண்டும். அசுபங்களைப் (தீமைகளைப்) போக்கவல்ல உன் பாதுகைகளை எவர்கள் நல்ல மனமுடையவர்களாகித் தேஹத்தினால் (உடலினால்) ஸர்வ காலமும் உபசரிப்பதும், மனத்தினால் த்யானிப்பதும், வாயால் துதிப்பதும் செய்கின்றார்களோ, அவர்கள் மோக்ஷத்தை அடைகின்றார்கள். 

பரனே (மேலானவனே)! பற்பநாபனே! அவர்கள் எந்தெந்த மனோரதங்களை (மனதின் விருப்பங்களை) விரும்புகிறார்களோ, அவற்றையும் பெறுகின்றார்கள். பரிசர்யை (பணிவிடை) முதலியன செய்யாதவர்கள், சக்ரவர்த்திகளாயினும், அவற்றைப் பெற முடியாது. (நீ பக்தர்களிடத்தில் பக்ஷபாதமுடையவனாகையால் (சார்ந்து இருப்பவனாகையால்), உன் பாதார விந்தங்களைப் பற்றின எங்கள் மனோரதம் (விருப்பம்) எல்லாம் ஸுகமாக நிறைவேறக்கூடுமல்லவா?) 

தேவர்களுக்கும் தேவனே! ஆகையால், இவ்வுலகம் உன் பாதார விந்தங்களைப் பணிதலின் ப்ரபாவத்தைக் (பெருமையைக்) காணுமாக. குருக்கள், ஸ்ருஞ்சயர்கள் இவர்களுக்குள் எவர்கள் உன்னைப் பணிகின்றார்களோ, எவர்கள் பணிகிறதில்லையோ, அவ்விருவர்களின் நிலைமையையும் காட்டுவாயாக. (உன்னைப் பணிகிறவர்கள், க்ஷேமம் பெறுவதையும், பணியாதவர்கள், அதைப் பெறாதொழிவதையும், உலகத்தவர்களுக்கு ப்ரத்யக்ஷமாகும்படி (தெளிவாகும்படி) காட்டுவாயாக) கெட்ட குணங்கள் எவையுமின்றிக் கல்யாண குணங்கள் நிறைந்திருக்கிற பரப்ரஹ்மரூபனான உனக்கு, தன்னுடையவனென்றும், பிறனென்றும் பேதபுத்தி (வேறுபாடு) கிடையாது. 

நீ ஸமஸ்த பூதங்களுக்கும் அந்தராத்மாவாயிருப்பவன். (பல சரீரங்களையுடைய ஒருவனுக்குத் தன் சரீரங்களுக்குள் சிலவற்றில் தன்னுடையவையென்னும் நினைவும், சிலவற்றில் பிறனுடையவையென்னும் நினைவும், உண்டாகாதல்லவா? ஜகத்தெல்லாம் உனக்குச் சரீரமாகையால், அதில் சிலவற்றில் ப்ரீதியும் (அன்பும்), சிலவற்றில் அப்ரீதியும் (அன்பின்மையும்) உண்டாகாது). நீ எல்லாவற்றையும் ஸமமாகப் பார்க்குந் தன்மையன்; தனக்கு அஸாதாரணமாயிருப்பதும், அளவற்றதுமாகிய ஆநந்தத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவன். உனக்கு ராகம் (விருப்பு), த்வேஷம் (வெறுப்பு) முதலியவை எவையும் கிடையாது. ஆயினும், உன்னைப் பணிகிறவர்களிடத்தில் தான் உனது அனுக்ரஹம் (அருள்). அதிலும், பணிகைக்கு உரியபடி தான் பலன் கொடுப்பாய். கல்பவ்ருக்ஷம், தன்னைப் பணிகிறவர்களுக்குப் பலன் கொடுக்குமேயன்றி, தன்னைப் பணியாதவர்களுக்குப் பலன் கொடுக்காது. இதைப் பற்றி அந்தக் கல்பவ்ருக்ஷத்திற்குப் பக்ஷபாதம் (ஓரவஞ்சனை) என்று சொல்லக்கூடுமோ? அவ்வாறே, நீயும் உன்னைப் பணிகிறவர்களின் மனோரதங்களை நிறைவேற்றுவது பக்ஷபாதமாகாது (ஓரவஞ்சனையன்று).

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ராஜனே! சத்ருக்களை அழிப்பவனே! நீ நன்றாக நிச்சயித்தாய். மங்களமான உன்புகழ், இதனால் உலகங்கள் முழுவதும் நிரம்பும். ரிஷிகளுக்கும், பித்ரு தேவதைகளுக்கும், உனது நண்பர்களான எங்களுக்கும், ஆயிரம் சொல்லி என்? ஸமஸ்த பூதங்களுக்கும், யாகங்களில் சிறந்த இந்த ராஜஸூய யாகம் இஷ்டமானது (விருப்பமானது). ஸமஸ்த ராஜர்களையும் ஜயித்து, ஜகத்தையெல்லாம் வசப்படுத்திக் கொண்டு, ஸம்பாரங்களை (யாகத்திற்கு வேண்டியவற்றை) எல்லாம் ஸித்தப்படுத்தி, பெருமையுடைய இந்த யாகத்தை நடத்துவாயாக. 

ராஜர்களை எப்படி ஜயிப்பேனென்று சங்கிக்க வேண்டாம். இதோ இருக்கின்ற உன் ப்ராதாக்களாகிய பீமஸேனாதிகள், லோக பாலர்களான தேவதைகளின் அம்சங்களால் பிறந்தவர்கள். இவர்களால் ஸமஸ்த ராஜர்களையும் அனாயாஸமாகவே ஜயிக்கக்கூடும். மற்றும், இந்திரியங்களை வெல்ல முடியாதவர்களால் வருந்தியும் வெல்ல முடியாத நான், இந்த்ரியங்களை வென்று என்னிடத்தில் பக்தியினால் தாழ்ந்த மனமுடைய உன்னால், வெல்லப்பட்டேன். இனி உனக்கு எது தான் ஸாதிக்க முடியாதது? என்னையே முக்யமாகப்பற்றி, என்னிடத்தில் நிலை நின்ற மனமுடையவனை, எத்தகைய தேவனாயினும் தேஜஸ்ஸினாலாவது (ஆற்றலாலோ), யசஸ்ஸினாலாவது (பெருமையினாலோ), செல்வத்தினாலாவது, ஸைன்யம் (படை) முதலிய ஸம்ருத்திகளாலாவது (ஸொத்துக்களாலோ) இவ்வுலகத்தில் பரிபவிக்க (அவமதிக்க) முடியாது. இனி, மன்னவர்கள் பரிபவிக்க (அவமதிக்க) வல்லரல்லரென்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- யுதிஷ்டிரன் ஸ்ரீக்ருஷ்ண பகவான் மொழிந்ததைக் கேட்டு ஸந்தோஷம் அடைந்து, முகம் மலரப்பெற்று, ஸ்ரீமஹாவிஷ்ணுவின் தேஜஸ்ஸினால் வளர்க்கப்பட்ட பீமஸேனன் முதலிய ப்ராதாக்களைத் திக்விஜயம் செய்ய நியமித்தான். அந்த யுதிஷ்டிரன், ஸ்ருஞ்சயர்களோடு கூட ஸஹதேவனைத் தெற்கு திக்கிலும், நகுலனை மேற்கு திக்கிலும், அர்ஜுனனை வடக்கு திக்கிலும், மத்ஸ்யர், கேகயர், மத்ரகர் இவர்களுடன் பீமஸேனனைக் கிழக்கு திக்கிலும் ஜயித்து வரும்படி நியமித்தான். 

மன்னவனே! வீரர்களான அந்தப் பீமஸேனாதிகள், தங்கள் தேஜஸ்ஸினால் ராஜர்களையெல்லாம் ஜயித்து, திசைகளினின்று அபாரமாகப் பணத்தைக் கொண்டு வந்து, யாகம் செய்யப் போகிற தர்மபுத்ரனிடம் சேர்த்தார்கள். தர்மபுத்ரன், ஜராஸந்தனை ஜயிக்கவில்லையென்று சொல்லக் கேட்டு, அதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், ஸ்ரீக்ருஷ்ணன் அப்பொழுது உத்தவன் சொன்ன உபாயத்தையே (வழியையே) அவனுக்கு மொழிந்தான். 

அப்பால், பீமஸேனன், அர்ஜுனன், ஸ்ரீக்ருஷ்ணன் ஆகிய இம்மூவரும் ப்ராஹ்மண வேஷம் பூண்டு, இந்த்ர ப்ரஸ்தத்தினின்று புறப்பட்டு, ஜராஸந்தன் இருக்குமிடமாகிய கிரிவ்ரஜத்திற்குப் போனார்கள். க்ஷத்ரியர்களும், ப்ராஹ்மண வேஷம் பூண்டவர்களுமாகிய அந்தப் பீமஸேனாதிகள், க்ருஹஸ்த ஆச்ரமத்திலிருந்து கொண்டு அவ்வாச்ரம தர்மங்களைக் குறைவற அனுஷ்டிப்பவனும்,  ப்ராஹ்மணர்களிடத்தில் விச்வாஸமுற்று அவர்கள் விரும்பினவற்றையெல்லாம் கொடுப்பவனுமாகிய ஜராஸந்தனிடம், அவன் அதிதி ஸத்காரம் (விருந்தோம்பல்) செய்யும் வேளையில் சென்று, இவ்வாறு  யாசித்தார்கள்.

பீமாதிகள் சொல்லுகிறார்கள்:- ராஜனே! நாங்கள் வெகு தூரம் கடந்து வந்த அதிதிகளென்று அறிவாயாக. நாங்கள், உன்னிடத்தில் ஒன்று யாசித்துப் பெறவேண்டுமென்று வந்திருக்கிறோம். உனக்கு க்ஷேமம் உண்டாகுக. நாங்கள் எதை விரும்புகிறோமோ, அதை எங்களுக்குக் கொடுப்பாயாக. “நீங்கள் விரும்பினது கொடுக்கக் கூடாததாயிருக்குமாயின் என் செய்வேன்” என்று சொல்ல வேண்டாம். ஏனென்றால், பொறுக்கும் தன்மையர்களுக்கு, எதுதான் பொறுக்க முடியாதது? எதுவும் இல்லை. துஷ்ட ஸ்வபாவமுடையவர்களுக்கு, எதுதான் செய்யத்தகாதது? எல்லாவற்றையும் ஸமமாகப் பார்க்கும் தன்மையர்களுக்கு, எவன்தான் பிறன் (மற்றவன்)? தான சீலர்களுக்கு, எது தான் கொடுக்கத் தகாதது? (பொறுமையுள்ளவர்களுக்குப் பொறுக்க முடியாதது எதுவும் இல்லாதாப் போலவும், துஷ்டர்களுக்குச் செய்யத் தகாத கார்யம் எதுவும் இல்லாதாப் போலவும், ஜகத்தையெல்லாம் பரப்ரஹ்மஸ்வரூபமாகப் பார்க்கும் ஞானிகளுக்கு, ப்ரஹ்ம ஸ்வரூபமல்லாத வஸ்து எதுவும் தோற்றாதாப் போலவும், மிகவும் உதார குணமுடையவர்களுக்கு, கொடுக்கக் கூடாதது எதுவுமே இல்லை. தானசீலர்கள் தேஹத்தையுங்கூட யாசகர்களுக்குக் கொடுத்து விடுவார்கள்).

எவன், தான் ஸமர்த்தனாயிருந்தும், நிலை நின்றிருப்பதல்லாத சரீரத்தைக் (உடலைக்) கொண்டு, ஸத்புருஷர்களால் பாடத்தகுந்ததும், நிலை நின்றிருப்பதுமாகிய புகழை விளைத்துக் கொள்ளாதிருப்பானோ, அவன் நிந்திக்கத்தகுந்தவன். மற்றும், “இவன் என்ன தௌர்ப்பாக்யமுடையவனோ” (பாக்கியம் இல்லாதவனோ) என்று மன இரக்கமுடையவர்களால் சோகிக்கத் தகுந்தவன். நிலையற்ற சரீரத்தினால் நிலை நின்ற புகழைச் சம்பாதித்தவர்கள் உண்டோ என்றால், சொல்லுகிறோம் கேள். 

ஹரிச்சந்திரன் விச்வாமித்ரருடைய கடனைத் தீர்க்கும் பொருட்டு, பிள்ளை, பெண்டிர் முதலியவற்றையும் விற்று, தான் சண்டாளத் தன்மையை அடைந்தும், மன வெறுப்பற்றிருந்து, கடைசியில் அயோத்யையிலுள்ள ஜனங்களுடன் ஸ்வர்க்க லோகம் போய்ச் சேர்ந்தான். ரந்திதேவன், தன் குடும்பத்துடன் நாற்பத்தெட்டு நாள்கள் சோறு, தண்ணீர் இவை கிடைக்கப் பெறாதிருந்து, கடைசியில் கிடைத்ததையும் அதிதிகளுக்குக் கொடுத்து, ப்ரஹ்ம லோகம் அடைந்தான். உஞ்சவ்ருத்தி பண்ணிக்கொண்டிருந்த முத்கலன், ஆறு மாதங்கள் குடும்பத்துடன் வருத்தமுற்றிருந்தும், கடைசியில் அதிதி ஸத்காரம் (விருந்தோம்பல்) செய்து, ப்ரஹ்ம லோகம் அடைந்தான். சிபி சக்ரவர்த்தி, தன்னைச் சரணம் அடைந்த புறாவைக் காக்கும் பொருட்டு, தன் மாம்ஸத்தைப் பருந்துக்குக் கொடுத்து, ஸ்வர்க்க லோகம் அடைந்தான். பலி சக்ரவர்த்தி, ப்ராஹ்மண வேஷம் பூண்டு வந்த விஷ்ணுவுக்குத் தன் ஸொத்தையெல்லாம் கொடுத்து, அவனையே தன் வசம் செய்து கொண்டான். புறா, அதிதியாக வந்த வேடனுக்கு, தன் பேடையுடன் மாம்ஸத்தைக் கொடுத்து, விமானத்தின் மேல் ஏறி, ஸ்வர்க்க லோகம் சென்றது. வேடன், அந்தப் புறாக்களின் கதியைக் கண்டு, தான் மிகவும் மனவெறுப்புற்று, மஹாப்ரஸ்தானம் செய்து (உடலை விட முடிவு செய்து), காட்டுத் தீயில் அகப்பட்டு, தேஹம் எரியுண்டு, பாபங்கள் தீர்ந்து, ஸ்வர்க்கம் அடைந்தான். இவ்வாறு மற்றும் பல மஹானுபாவர்களும், நிலையற்ற சரீரத்தினால் நிலைநின்ற புகழைச் சம்பாதித்தார்கள்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஜராஸந்தன், குரல்களாலும், ஆகாரங்களாலும், நாண் உறைந்த (வில்லை இழுத்துத் தேய்ந்த) புஜங்களாலும், அந்த யாசகர்களை க்ஷத்ரியர்களென்றும், த்ரௌபதீ ஸ்வயம்வராதிகளில் முன்பு நாம் இவர்களைப் பார்த்திருக்கிறோம் என்றும் தெரிந்து கொண்டு, “இவர்கள் க்ஷத்ரியர்கள்; ப்ராஹ்மண வேஷங்களைத் தரித்திருக்கிறார்கள். இவர்கள் துறக்க முடியாத தேஹத்தை யாசிப்பார்களாயினும் கொடுத்து விடுகிறேன். ஸ்ரீமஹாவிஷ்ணு, கபடத்தினால் ப்ராஹ்மண வேஷம் பூண்டு, பலி சக்ரவர்த்தியிடம் வந்து, மூன்றடிகள் வேண்டி, வளர்ந்து, உலகங்களையெல்லாம் அளந்து பெற்றுக்கொண்டு, அவனை மஹத்தான ஐச்வர்யத்தினின்று நழுவச் செய்தான். ஆயினும், அவனுடைய புகழ் நிர்மலமாகி (அழுக்கற்றதாகி), திசைகளெல்லாம் நிரம்பிச் செவிப்படவில்லையா என்ன? 

ஸ்ரீமஹாவிஷ்ணு, இந்திரனுக்கு த்ரிலோக ராஜ்யமாகிற ஐச்வர்யத்தை வாங்கிக் கொடுக்க விரும்பி, ப்ராஹ்மண வேஷம் பூண்டு வந்து, யாசிக்கையில் தைத்ய (அஸுர) ராஜனாகிய பலி, அக்கபடத்தை (சூதை) அறிந்தும், சுக்ராசார்யனால் தடுக்கப்பட்டும், அவனுக்குப் பூமியைக் கொடுத்தான். 

அழியும் தன்மையுடைய க்ஷத்ரிய தேஹம், ப்ராஹ்மணனுக்காக நிர்மலமான பெரும் புகழை விளைக்காது போமாயின், அத்தேஹம் ஜீவித்திருப்பதனால் என்ன ப்ரயோஜனம்? என்று கம்பீரமான மதியுடைய அந்த ஜராஸந்தன் தனக்குள் சிந்தித்து நிச்சயித்துக் கொண்டு, ஸ்ரீக்ருஷ்ணன், அர்ஜுனன், பீமஸேனன் இவர்களைப் பார்த்து “ஓ அந்தணர்களே! உங்களுக்கு இஷ்டமான மனோரதத்தை (விருப்பத்தை) வரிப்பீர்களாக. உங்களுக்கு, என் தலையையாயினும் கொடுக்கின்றேன்” என்றான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ராஜச்ரேஷ்டனே! உனக்கு இஷ்டமாயிருக்குமாயின், எங்களுக்கு த்வந்த்வ (ஒருவரோடு ஒருவர் செய்யும்) யுத்தம் கொடுப்பாயாக. நாங்கள் யுத்தத்தை விரும்பி வந்த க்ஷத்ரியர்கள்; அன்னத்தை விரும்பி வந்த ப்ராஹ்மணர்கள் அல்லோம். இவன் ப்ருதையின் புதல்வனாகிய பீமஸேனன். இவன் அவனுடைய ப்ராதாவான அர்ஜுனன். நான், இவர்களுக்கு அம்மான் பிள்ளையும், உன் சத்ருவுமாகிய ஸ்ரீக்ருஷ்ணனென்று தெரிந்துகொள்வாயாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:– இவ்வாறு ஸ்ரீக்ருஷ்ணனால் அறிவிக்கப்பட்ட அந்த மாகத மன்னவன், உரக்கச் சிரித்துக் கோபாவேசமுற்று, “அறிவில்லாத மூடனே! யுத்தம் விரும்புகிறீர்களா! ஆனால், உங்களுக்கு அப்படியே யுத்தம் கொடுக்கிறேன். நீ யுத்தத்தில் தைர்யமற்ற மனமுடையவன். ஆகையால், பயப்படும் தன்மையனான உன்னோடு நான் யுத்தம் செய்யமாட்டேன். நீ உன் ஸொந்த பட்டணமாகிய மதுரையை விட்டு ஸமுத்ரத்தைச் சரணம் அடைந்தாயல்லவா? இவ்வர்ஜுனனோவென்றால், வயதில் எனக்கு ஒத்தவனல்லன். அதிக பலமுடையவனுமல்லன். ஆகையால், இவன் என்னோடு யுத்தம் செய்யத் தகுந்தவனல்லன். பீமஸேனனோவென்றால், என்னோடொத்த பலமுடையவன். ஆகையால், அவனோடு மாத்ரமே யுத்தம் செய்வேன்” என்று மொழிந்து, பீமஸேனன் கையில் பெரிய கதையைக் கொடுத்து, தானும் மற்றொரு கதையை எடுத்துக்கொண்டு, பட்டணத்தினின்று வெளிப் புறப்பட்டான். 

வீரர்களும், யுத்தத்தில் கொடிய மதமுடையவர்களுமாகிய பீமஸேனன், ஜராஸந்தன் இவ்விருவர்களும் மேடு பள்ளமில்லாத இடத்தில் ஒன்று சேர்ந்து, யுத்த ஸந்நாஹம் (ஆயத்தம்) செய்து கொண்டு, வஜ்ராயுதம் போன்ற கதைகளால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டார்கள். வலமாகவும் இடமாகவும் விசித்ரமான மண்டல கதிகளைச் செய்கின்ற அவ்வீரர்களின் யுத்தம், ரங்கத்தை (விழா மேடையை) அடைந்த யானைகளின் யுத்தம் போன்றிருந்தது. அப்பால், கதைகள் ஒன்றோடொன்று உறைவதனாலுண்டான சடசடவென்னும் சப்தம், வஜ்ரகோஷம் போன்று யானைகளின் தந்தங்கள் ஒன்றோடொன்று உறைவதனாலுண்டாகும் சப்தத்தை நிகர்த்திருந்தது. 

கோபமாகிற அக்னி ஜ்வலிக்கப்பெற்று, யானைகள் போல் சண்டை செய்கின்ற அவ்வீரர்கள், புஜபலத்தினால் ஒருவர்மேலோருவர் வீசியறைகின்ற அக்கதைகள் ஒருவர்க்கொருவருடைய தோள் இடை, பாதம், கை, துடை, கழுத்தடி இவ்விடங்களை அடைந்து எருக்கன் கிளைகள் போல முறிந்து, சூர்ணமாயின (பொடியாயின). இவ்வாறு கோபமுற்று ஒருவரையொருவர் அடிக்கின்ற மனுஷ்ய வீரர்களான அந்தப் பீமேஸேன, ஜராஸந்தர்கள், இரும்பு போல் உறுதியாயிருக்கின்ற முட்டிகளில் கதைகளைச் சூர்ணம் (தூள்) செய்தார்கள். கைகளால் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு யுத்தம் செய்கின்ற அவ்வீரர்களின் உள்ளங்கையடியினால் உண்டான சப்தம், வஜ்ர கோஷம் போல் கடோரமாயிருந்தது (உரத்ததாய் இருந்தது). 

மன்னவனே! அப்யாஸம், பலம், ப்ரபாவம் (பெருமையும்) இவையெல்லாம் ஸமமாயிருக்கப்பெற்ற அவ்வீரர்களிருவரும், பலம் குறையாமல் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டிருக்கையில், அந்த யுத்தம் “இன்னவன் ஜயிப்பான். இன்னவன் தோற்பான்” என்று நிச்சயிக்க முடியாதிருந்தது. சத்ருவாகிய ஜராஸந்தன், இரண்டு துண்டங்களாகப் பிறந்ததையும், ஜரை என்னும் பிசாசத்தினால் ஒன்று சேர்க்கப்பட்டு ஜீவித்ததையும், மீளவும் இரண்டு துண்டங்களாகக் கிழித்துப் போட்டால்தான் அவன் மரணம் அடைவானென்பதையும் அறிந்த ஸ்ரீக்ருஷ்ணன், பீமஸேனனைத் தன் தேஜஸ்ஸினால் உத்ஸாஹமுற்று வளரும்படி செய்து கொண்டு, இவனை வதிக்க வேண்டும் உபாயத்தைப் பீமனுக்கு எப்படி தெரிவிக்கலாமென்று சிந்தித்தான். 

அப்பால், வீணாகாத அறிவுடைய அப்பகவான், இவ்வாறு தெரிவிக்கலாமென்று சிந்தித்து நிச்சயித்துக் கொண்டு, ஒரு கிளையை ஒடித்து, அதைத் தான் வெறுமனே பிளக்கிறவன் போல் இரு பிளவாகப் பிளந்து, “நான் இந்தக் கிளையைப் பிளப்பது போல நீயும் இவனை இரண்டு துண்டங்களாகக் கிழித்துப் போடுவாயாக” என்று பீமனுக்கு ஸங்கேதம் (சைகை) செய்து காட்டி, சத்ருவை வதிக்கும் உபாயத்தை அவனுக்குத் தெரிவித்தான். 

மிகுந்த பலமுடையவனும், யுத்தஞ் செய்பவர்களில் சிறந்தவனுமாகிய அப்பீமஸேனன், அந்த ஸங்கேதத்தை (சைகையை) அறிந்துகொண்டு, சத்ருவைப் பாதங்களில் பிடித்துக் கொண்டு, பூமியில் விழத்தள்ளி, அவனுடைய ஒற்றைக் காலைத் தன் காலால் மிதித்துக் கொண்டு, மற்றொரு காலைத் தன் கைகளால் பிடித்துக் கொண்டு, பெரு யானை கிளையை முறிப்பது போல் மலத்வாரம் (ஆஸன வாய்) துடங்கி அவனை இரண்டு துண்டங்களாகக் கிழித்துப் போட்டான். 

அப்பொழுது, ஜனங்கள் ஒற்றைக்காலும், ஒற்றை வ்ருஷ்ணமும் (விறை), ஒற்றை இடையும், ஒற்றை முதுகும், ஒற்றை ஸ்தனமும், ஒற்றைத் தோளும், ஒற்றைக் கையும், ஒற்றைக் கண்ணும், ஒற்றைப் புருவமும், ஒற்றைக் காதுமுடைய இரண்டு துண்டங்களைக் கண்டார்கள். இவ்வாறு மகதராஜன் மாளுகையில், பெரிய ஹாஹாகாரம் (சப்தம்) உண்டாயிற்று. 

அர்ஜுனனும், ஸ்ரீக்ருஷ்ணனும், பீமஸேனனை அணைத்துக் கொண்டு, அவனைப் பூஜித்தார்கள். பீமஸேனன், ஸ்ரீக்ருஷ்ணனால் அணைக்கப் பெற்று, உடம்பு நோயெல்லாம் தீர்ந்து, ஸுகமுற்றான். ப்ராணிகளுக்கு நன்மை செய்யும் தன்மையனும், அளவிட முடியாத ஸ்வரூப ஸ்வபாவங்களையுடையவனும், மஹானுபாவனும், ப்ரபுவுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன், அந்த ஜராஸந்தனுடைய பிள்ளையாகிய ஸஹதேவனை மகததேசங்களுக்குப் பதியாக (அரசனாக) ஏற்படுத்தினான். ஜராஸந்தனால் சிறையில் அடைக்கப்பட்ட மன்னவர்களையும், அதினின்று விடுவித்தான். 

எழுபத்து இரண்டாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக