புதன், 31 மார்ச், 2021

ஶ்ரீராமப் பிரியன் பரதன் - டி.எம்.ரத்தினவேல்

பகவான் மஹாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான ஸ்ரீராமாவதார சரிதத்தின் ஒவ்வொரு நிகழ்வும் அதையே நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. அது போன்ற ஒரு நிகழ்வை இத்தருணத்தில் காண்போம்.


சக்கரவர்த்தி தசரதரிடமிருந்து இரண்டு வரங்கள் பெற்றாள் கைகேயி. ஒரு வரத்தினால் அவள் மகன் பரதன் மன்னனாகப் பட்டாபிஷேகம் செய்துகொண்டு நாடாள்வது என்றும், மற்றொரு வரத்தினால் ஸ்ரீராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும் என்றும் முடிவாயிற்று. அயோத்தி மக்கள் கைகேயியையும் பரதனையும் தூற்றினார்கள். ஸ்ரீராமன் கானகம் செல்வதில் யாருக்கும் உடன்பாடில்லை இச்செய்தியைக் கேள்விப் பட்ட பரதன் சொல்லொணா துன்பத்துக்கு ஆளானான். தன் தாய் கைகேயின் மீது வெறுப்பும் கோபமும் கொண்டான். அயோத்தி மக்களும் அரண்மனைவாசிகளும், ஸ்ரீராமரை காட்டுக்கு அனுப்பியதில் பரதனுக்கும் பங்கு உண்டு என்று குற்றம் சாட்டினார்கள்.


அந்தக் குற்றச்சாட்டை மறுத்த பரதன், அன்னையர்களான கௌசல்யா மற்றும் சுமித்திரையை பாதம் தொட்டு வணங்கி, கபடமில்லாமல், தான் குற்றமற்றவன் என்பதை வலியுறுத்தி சரளமாகப் பின்வருமாறு, உறுதியான குரலில் கூறினான்.


''தாயே! ஸ்ரீராமரை காட்டுக்கு அனுப்பியதில் என் சம்மதம் இருந்தது என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அப்படி என் சம்மதம் இருந்தது என்றால் மாதா, பிதா, புத்திரனைக் கொன்ற பெரும்பாவம் என்னைச் சேரட்டும்.


சாதுவான பசுக்கள் மற்றும் வேத வித்தகர்களான பிராமணர்களைக் கொளுத்திய பாவம் என்னைச் சேரட்டும்.


பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்ற பாவமும், பிரியமான நண்பனுக்கும், நாடாளும் மன்னனுக்கும் விஷம் தந்த பாவமும் என்னைச் சேரட்டும்.


என்னென்ன பாதகங்களும், மனம், சொல், உடலாலும் செய்யப்படுவதாக கவிகளால் கூறப்படுகிறதோ, அந்தப் பாவங்கள் எல்லாம் எனக்கு வந்து சேரட்டும்!


தாயே! ஸ்ரீராமரை காட்டுக்கு அனுப்பிய சதியில் என் சம்மதம் இருந்தது என்றால்... வேதத்தை விற்றவன், தர்மத்தை மறந்தவன், கோள் சொல்பவன், பிறர் பாவத்தை வாயால் சொல்பவன், கபடன், நயவஞ்சகன், சண்டைக் காரன், கோபக்காரன், வேதத்தை இகழ்பவன், உலகுக்கெல்லாம் பகைவன், லோபி, காம வெறியன், பேராசைக்கு அடிமையானவன், பிறர் செல்வம் மற்றும் பிறர் மனைவி மீது கண்ணாக இருப்பவன் - என்று பாவத்தின் மேல் பாவம் செய்யும் இவர்களுக்கு என்ன கதி கிடைக்குமோ, அக்கதியை நான் அடைவேனாக! அவர்களின் அனைத்து பாவங்களும் என்னை வந்து சேரட்டும்!


தாயே! ஸ்ரீராமரை காட்டுக்கு அனுப்பும் சதி எனக்கு முன்பே தெரியும் என்றால், சாது சங்கத்தில் பிரேமை சிறிதும் கொள்ளாதவன், பரமார்த்த வழியை விட்டு எதிராகப்போகும் அபாக்கியவான், மனித உடல் பெற்றும் பகவானை நினைக்காதவன், பகவானை வழிபடாதவன், பகவானைப் போற்றாதவன், அகிலாண்டேஸ்வரனின் புகழ் பிடிக்காதவன், ஆதிசேஷன் மேல் துயிலும் மஹா விஷ்ணுவின் புகழ் பிடிக்காதவன், வேத மார்க்கம் விட்டு வாம மார்க்கம் போகிறவன், ஏமாற்றுக்காரன், பொய் வேடமிட்டு ஏய்ப்பவன் ஆகிய இவர்களுக்கு ஏற்படும் கதியை எனக்கு சங்கரன் தருவாராக! இவர்களின் பாவங்கள் எல்லாம் என்னை வந்து சேரட்டும்!" என்று மனம் வருந்தக் கூறினான்.


கண்களில் கண்ணீர் மல்கப் பேசும் பரதனின் சத்தியமான பேச்சைக் கேட்டு அன்னையர் இருவரும், ''குழந்தாய்! அன்புக்கினிய பரதா! நீ மனதால், வாக்கால், கர்மாவால் முழுக்க முழுக்க ராமப்பிரியனாக இருக்கிறாய். நீ ராமனுக்கு பிராணனை விடப் பிரியமானவன். ராமன் உனக்கு பிராணனுக்குப் பிராணன். இயற்கையே தன் நிலை மாறி, குளிர்ச்சியான சந்திரனிலிருந்து விஷம் கசிந்தாலும், பனிக் கட்டியிலிருந்து தீ உண்டானாலும், நீரில் வாழ்வனவெல்லாம் நீரைத் துறந்தாலும், ஞானம் உண்டான பின்பும் மோகம் அழியாதிருந்தாலும் இருக்கலாமே தவிர, நீ என்றும் ராமனுக்கு எதிரியாக மாட்டாய்.


பரதா, உன் மீது எங்களுக்கு அணுவளவும் சந்தேகம் இல்லை. வருந்தாதே! ராமனைக் காட்டுக்கு அனுப்பியதில் உனக்கு சம்மதம் இருந்தது என்று யாராவது சொன்னால், அவனுக்கு நல்ல சுகமோ, நல்ல புத்தியோ, நற்கதியோ கனவிலும் கிடைக்காது! நீ ஸ்ரீராமனுக்கு அருமையான தம்பி!'' இவ்வாறு கண்களில் கண்ணீர் அருவியாய்ப் பொழிய, அன்னையர் இருவரும் பரதனைப் பாசத்துடன் அணைத்துக் கொண்டனர்.


'பரதன் குற்றமற்றவன்' என்ற இந்த உரையாடலை துளசிதாசர் தமது ‘ராமசரிதமானஸில்' அழகாக எடுத்துக் கூறுகிறார்.


நன்றி - தீபம் ஏப்ரல் 2019


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக