வியாழன், 1 ஏப்ரல், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 289

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எழுபத்து மூன்றாவது அத்தியாயம்

(ராஜர்கள் ஸ்ரீக்ருஷ்ணனைத் துதித்தலும், ஸ்ரீக்ருஷ்ணன் அவர்களை அனுக்ரஹித்து, பீமார்ஜுனர்களுடன் இந்த்ரப்ரஸ்தம் சேர்ந்து, தர்மபுத்ரனைக் காணுதலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இருபதினாயிரத்து எண்ணூறு ராஜர்கள் ஜராஸந்தனால் யுத்தத்தில் அவலீலையாக (விளையாட்டாக) ஜயிக்கப்பட்டு மலைச்சாரலில் அடைப்புண்டிருந்தார்கள். அவர்கள், ஸ்னானம் முதலிய ஸம்ஸ்காரங்கள் இல்லாமையால் உடம்பெல்லாம் அழுக்கடைந்து, அழுக்குத் துணியை உடுத்து, பசியினால் இளைத்து, முகம் உலர்ந்து, அடைப்புண்டு இருந்தமையால் வருத்தமுற்றிருந்தார்கள். அம்மன்னவர்கள், அந்த மலைச்சாரலினின்று வெளிவந்து, மேகம் போல் கறுத்துப் பொன்னிறமான பட்டு வஸ்த்ரம் தரித்து, ஸ்ரீவத்ஸமென்னும் அடையாளமும், நான்கு புஜங்களும், தாமரையிதழ் போன்ற கண்களும், தெளிந்தழகிய முகமும் திகழ்கின்ற மகரகுண்டலங்களும், கையில் தாமரை மலரும், கதை, சங்கம், சக்ரம் இவைகளும் அமைந்து, கிரீடம், ஹாரம், கைவளை, அரைநாண் மாலை, தோள்வளை இவைகளை அணிந்து, கழுத்தில் ரத்னங்களில் சிறந்த கௌஸ்துப மணி விளங்கப் பெற்று, வனமாலையைத் தரித்துத் திகழ்கின்ற ஸ்ரீக்ருஷ்ணனைக் கண்டார்கள். 

அவர்கள், அவனைக் கண்களால் பானம் செய்பவர்கள் போலவும், நாக்கால் நக்குபவர்கள் போலவும், மூக்கினால் முகர்கிறவர்கள் போலவும், புஜங்களால் அணைப்பவர்கள் போலவும் கண்டு, பாபங்கள் தொலையப் பெற்று, தலைகளால் அவனுடைய பாதங்களில் விழுந்து வணங்கினார்கள். அம்மன்னவர்கள், ஸ்ரீக்ருஷ்ணனைக் கண்ட ஆநந்தத்தினால் சிறையிலிருந்த வருத்தங்களெல்லாம் தீர்ந்து, கைகளைக் குவித்துக் கொண்டு, அழகிய உரைகளால் அவ்விருடீகேசனைத் துதித்தார்கள்.

ராஜர்கள் சொல்லுகிறார்கள்:- தேவர்களுக்கெல்லாம் தேவனாகிய ப்ரஹ்மதேவனுக்கும் நியாமகனே (நியமிப்பவனே)! உன்னையே சரணம் அடைந்தவர்களின் வருத்தங்களைப் போக்கும் தன்மையனே! விகாரங்களற்றவனே (மாறுபாடுகள் அற்றவனே)! பக்தர்களுக்கு ஸுகத்தை விளைக்கும் பொருட்டு அவதரித்து, ஸ்ரீக்ருஷ்ணனென்னும் பெயர் பூண்டிருப்பவனே! பயங்கரமான ஸம்ஸாரத்தினின்று வெறுப்புற்று உன்னையே சரணம் அடைந்திருக்கின்ற எங்களைக் காப்பாயாக. 

நாதனே! மதுஸூதனா! இந்த மாகதன் (மகத நாட்டு மன்னன்) நம்மைச் சிறையில் அடைத்தானேயென்று நாங்கள் அவன்மேல் தோஷத்தை நினைக்கவில்லை. குணங்களையே நினைக்கின்றோம். ஏனென்றால், ப்ரபூ! நீ ராஜர்களான எங்களை ராஜ்யத்தினின்று நழுவச் செய்து அனுக்ரஹித்தாய். (ஐராஸந்தன் மூலமாய் நீ எங்களை அனுக்ரஹித்தாயென்றே நாங்கள் நினைத்திருக்கின்றோம்). ராஜ்யம் கைசோரப்பெறுதல் (இழப்பது) எவ்வாறு அனுக்ரஹமாகுமென்றால், மன்னவன் ராஜ்யத்தினாலும், ஐச்வர்யத்தினாலும், மதித்துத் (கர்வம் அடைந்து) தடையின்றி நினைத்த வழியெல்லாம் நடக்கத் தொடங்கி, நன்மையைப் பெறுகிறதில்லை. உன் மாயையினால் மதிமயங்கி, நிலையற்ற செல்வங்களை நிலை நின்றவையென்று நினைக்கின்றான். 

தெரியாத மூடர்கள், கானலைக் கண்டு ஜலாதாரமென்று (நீர்நிலை என்று) ப்ரமிப்பது போல, இந்த்ரியங்களை அடக்க முடியாத மந்தர்கள் (புத்தி குறைந்தவர்கள்), சப்தாதி விஷயங்களாகிற (உலகியல் இன்பங்களாகிற) உன் மாயையைச் சாச்வதமென்று (அழிவற்றது என்று) ப்ரமிக்கின்றார்கள். நாங்கள், முன்பு ஐச்வர்ய மதத்தினால் (கர்வத்தினால்) விவேகமற்று, இந்தப் பூமியையெல்லாம் ஜயித்துப் பெற வேண்டுமென்று ஒருவர் மேலொருவர் பொறாமையுற்று, சிறிதும் மன இரக்கமின்றித் தம் ப்ரஜைகளை ஹிம்ஸித்துக் கொண்டு, எதிரேயிருக்கிற ம்ருத்யுவை (மரணத்தை) நினையாமல், கொடிய மதமுடையவர்களாய் இருந்தோம்.

ஸ்ரீக்ருஷ்ணா! அத்தகைய நாங்கள், இப்பொழுது மிகுந்த வேகமுடையதும், அளவற்ற வீர்யமுடையதும், உனக்குச் சரீரமுமாகிய காலத்தினால், ஐச்வர்யமெல்லாம் நழுவும்படி செய்யப் பெற்று, உன் கருணையினால் கொழுப்படங்கி உன் பாதார விந்தங்களை வணங்கி, உன்னையே சரணம் அடைந்தோம். இவ்வாறு ராஜ்யம் இருந்தால், கெடுதியும் அது இல்லாது நீங்கினால், நன்மையும் விளைகின்றனவாகையால், ஸர்வகாலமும் ரோகங்களுக்கு (வியாதிக்கு) இடமாயிருப்பதும், அழியப்போகிறதுமாகிய தேஹத்தினால் கானலோடொத்த ராஜ்யத்தை உபாஸிக்கலாகாது. 

ப்ரபூ! காதுகளுக்கு மாத்ரமே ப்ரீதியை விளைப்பதும், (இதினின்று எப்பொழுது விழுந்து விடுவோமோமென்னும் பயத்திற்கிடமாயிருக்கும் இடமாகையால் துக்கம் தொடர்ந்திருப்பதும்) சரீரத்தைத் துறந்து லோகாந்தரம் (வேறு உலகம்) சென்று அனுபவிக்கத் தக்கதும், யஜ்ஞாதி கர்மங்களின் பலனுமாகிய ஸ்வர்க்காதி ஸுகத்தையும் நாங்கள் விரும்பவில்லை. ஆகையால், நாங்கள் இந்த ப்ரக்ருதி மண்டலத்தில் (உலகத்தில்) ஸம்ஸரித்துக் (உழன்று) கொண்டிருப்பினும், எங்களுக்கு எந்த உபாயத்தினால் (வழியால்) உன் பாதார விந்தங்களில் நினைவு மாறாதிருக்குமோ, அத்தகைய உபாயத்தை (வழியை) எங்களுக்கு அனுக்ரஹிப்பாயாக. 

பக்தர்களுக்கு ஸுகத்தை விளைப்பவனாகையால், ஸ்ரீக்ருஷ்ணனென்றும், வஸுதேவகுமாரனாயிருக்கை ஸமஸ்த ஜகத்திலும் தான் அமைந்து, ஸமஸ்த ஜகத்திற்கும் தான் ஆதாரமுமாகி, அதன் தோஷங்கள் எவையும் தன் மேல் தீண்டப் பெறாமல் திகழ்கை ஆகிய இக்காரணங்களால் வாஸுதேவனென்றும் பெயர்களைப் பெற்றவனும், தன் பக்தர்களின் ஸம்ஸார பந்தத்தைப் (பிறப்பு, இறப்பு என்னும் உலகியல் துன்பத்தைப்) போக்கும் தன்மையனும், பரமாத்மனும், வணங்கினவர்களின் வருத்தங்களைத் தீர்ப்பவனும், கோவிந்தாபிஷேகம் செய்யப் பெற்றவனுமாகிய உனக்கு அடிக்கடி நமஸ்காரம்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மஹானுபாவனும், மன இரக்கமுடையவனும், காக்க வல்லவனுமாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன், ஜராஸந்தனுடைய சிறையினின்று விடுபட்ட மன்னவர்களால் இவ்வாறு துதிசெய்யப் பெற்று, ம்ருதுவான மொழியுடன் மொழிந்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ஓ மன்னவர்களே! நீங்கள் ஆசைப்பட்டபடியே உங்களுக்கு ஸர்வாந்தராத்மாவும், ஸர்வேச்வரனுமாகிய என்னிடத்தில் இன்று முதல் திடமான பக்தி உண்டாகும். மன்னவர்களே! நீங்கள் நன்றாக நிச்சயித்தீர்கள். இது எனக்கு ஆநந்தமாயிருக்கின்றது. நீங்கள் சொல்லுவதெல்லாம் உண்மையே. 

செல்வத்தினாலும், ஐச்வர்யத்தினாலும் உண்டாகும் மதம் (கர்வம்) தலையெடுத்திருக்குமாயின், அது மதி மயக்கத்தை விளைத்து, கெடுத்து விடும் என்றே நானும் நினைக்கின்றேன். கார்த்த வீர்யார்ஜுனன், நஹுஷன், வேனன், ராவணன், நரகன் மற்றும் பல தேவர்களும், அஸுரர்களும், சக்ரவர்த்திகளும், செல்வக் கொழுப்பினால் தத்தம் பதவியினின்று நழுவும்படி செய்யப்பட்டார்கள். ஆகையால், நீங்கள் பிறவியுள்ள தேஹம் முதலியவையெல்லாம் நம் வரங்களென்று தெரிந்து, மன ஊக்கத்துடன் யஜ்ஞங்களால் என்னை ஆராதித்துக் கொண்டு, தர்மம் தவறாமல் ப்ரஜைகளைப் பாதுகாத்து வருவீர்களாக. 

பிள்ளை, பேரன் முதலிய ஸந்ததிகளை வளரச்செய்து கொண்டு, ஸுக, துக்கங்களையும், ஜன்ம, மரணங்களையும், அவ்வவை நேரும் பொழுது ஸமமாகவே அனுபவித்துக் கொண்டு, என்னிடத்தில் நிலை நின்ற மனமுடையவர்களாகி, காலத்தைக் கழிப்பீர்களாக. தேஹத்திலும், தேஹத்தைத் தொடர்ந்த வீடு முதலியவற்றிலும், அஹங்கார (நான்), மமகாரங்கள் (எனது) இன்றி ஆத்ம, பரமாத்மாக்களின் உண்மையை ஆராய்வதில் ஊக்கமுற்று, என்னிடத்தில் நன்றாக மனத்தை நிலை நிறுத்தி, ப்ராரப்த கர்ம (பலன் தர ஆரம்பித்துள்ள முன்வினையின்) அவஸானத்தில் (முடிவில்) பரப்ரஹ்மமாகிய என்னைப் பெறுவீர்கள்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஷாட்குண்ய பூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), ஜகதீச்வரனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன், அம்மன்னவர்களுக்கு இவ்வாறு கட்டளை அளித்து, அவர்களுக்கு ஸ்னானஞ் செய்விக்கும்படி புருஷர்களையும், ஸ்த்ரீகளையும் நியமித்தான். அப்பரமன், மன்னவர்களுக்குரிய ஆடையாபரணங்களாலும், புஷ்பசந்தனாதிகளாலும், ஸஹதேவனைக் கொண்டு அம்மன்னவர்களுக்குப் பூஜை செய்வித்தான். நன்றாக ஸ்னானஞ் செய்து நன்கு அலங்கரித்துக் கொண்டிருக்கின்ற அம்மன்னவர்களுக்கு, சிறந்த அன்னம் அளித்துப் புசிப்பித்து, மன்னவர்கட்குரிய தாம்பூலம் முதலிய பலவகைப் போகங்களையும் (உபசாரங்களையும்) நடப்பித்தான். 

அம்மன்னவர்கள், ஸ்ரீக்ருஷ்ணனால் வருத்தத்தினின்று விடுவித்து, பூஜிக்கப்பட்டுத் திகழ்கின்ற குண்டலங்களுடையவர்களாகி, சரத்ருதுவில் (மழைக்கால இறுதியில்) சந்திராதி க்ரஹங்கள் விளங்குவது போல விளங்கினார்கள். அப்பகவான், அம்மன்னவர்களை ரத்னங்களாலும், ஸ்வர்ணத்தினாலும், அலங்கரிக்கப்பட்டு, சிறந்த குதிரைகள் கட்டப் பெற்றவைகளுமான ரதங்களில் ஏற்றி, உண்மையும், ப்ரியமுமான உரைகளால் ஸந்தோஷப்படுத்தி, தத்தம் தேசங்களுக்கு அனுப்பினான். அம்மன்னவர்கள், இவ்வாறு மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணனால் வருத்தத்தினின்று விடுவிக்கப்பட்டு, அவனையும் ஜகதீச்வரனான அவனுடைய சரித்ரங்களையுமே த்யானித்துக் கொண்டு சென்றார்கள். 

அவர்கள் தத்தம் தேசங்களுக்குச் சென்று, தங்கள் மந்திரி முதலியவர்களுக்கு மஹாபுருஷனாகிய ஸ்ரீக்ருஷ்ணனுடைய செயலைச் சொன்னார்கள்; மற்றும், அவன் எப்படி நியமித்தானோ, அப்படியே சோம்பலின்றி அனுஷ்டித்துக் கொண்டு வந்தார்கள். ஸ்ரீக்ருஷ்ணனோவென்றால், பீமஸேனனைக் கொண்டு ஜராஸந்தனைக் கொல்வித்து, ஸஹதேவனால் பூஜிக்கப்பட்டு, பீமார்ஜுனர்களுடன் புறப்பட்டுப் போனான். சத்ருவை வென்ற அம்மூவரும், இந்த்ரப்ரஸ்தம் சேர்ந்து, தங்கள் நண்பர்களுக்கு ஸந்தோஷத்தையும், சத்ருக்களுக்கு மன வருத்தத்தையும் விளைத்துக் கொண்டு, சங்க நாதங்களைச் செய்தார்கள்.

இந்த்ர ப்ரஸ்தத்திலுள்ளவர்கள் அனைவரும் அச்சங்கநாதத்தைக் கேட்டு, மனக்களிப்புற்று, மாகதன் (மகத அரசன் ஜராஸந்தன்) முடிந்தானென்று நினைத்துக் கொண்டார்கள். யுதிஷ்டிர மன்னவனும், தன் மனோரதம் கைகூடப் பெற்றான். அப்பால், பீமஸேனன், அர்ஜுனன், ஸ்ரீக்ருஷ்ணன் ஆகிய இம்மூவரும் ராஜனாகிய யுதிஷ்டிரனுக்கு நமஸ்காரம் செய்து, தாங்கள் செய்ததையெல்லாம் அவனுக்குச் சொன்னார்கள். தர்மபுத்ரனோவென்றால், அதையெல்லாம் கேட்டு, ஸ்ரீக்ருஷ்ணனால் அருள் புரியப்பெற்று, ஆநந்தத்தினால் கண்ணீர்த் துளிகளைப் பெருக்கிக் கொண்டு, ப்ரீதியின் மிகுதியால் ஒன்றும் பேச முடியாதிருந்தான்.

எழுபத்து மூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக