வெள்ளி, 2 ஏப்ரல், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 290

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எழுபத்து நான்காவது அத்தியாயம்

(ராஜஸூய யாகமும், சிசுபால வதமும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! யுதிஷ்டிர மன்னவன், இவ்வாறு ஸ்ரீக்ருஷ்ணன் பீமஸேனனைக் கொண்டு நடத்தின ஜராஸந்த வதத்தையும், அவனுடைய அத்தகைய வைபவத்தையும் கேட்டு, ஸந்தோஷம் அடைந்து, அவனைக் குறித்து இவ்வாறு மொழிந்தான்.

யுதிஷ்டிரன் சொல்லுகிறான்:- மூன்று லோகங்களுக்கும் குருக்களான ஸனகாதிகளும், உலகத்திலுள்ள ஸமஸ்த ஜனங்களும், அந்த ஜனங்களுக்கு ப்ரபுக்களான மற்றவர்களும், கிடைக்க அரிதான உன் கட்டளையைப் பெற்று, “நமக்கு இது பாக்யத்தினால் கிடைத்தது” என்னும் பஹூமானத்துடன் (வெகுமதியுடன்) அதைச் சிரஸ்ஸினால் தரிக்கின்றார்கள். 

தாமரைக் கண்ணனே! அளவற்ற மஹிமை உடையவனே! அப்படிப்பட்ட நீ, தங்களை ஸ்வதந்த்ர ப்ரபுக்களாக (தங்கள் விருப்பப்படி செயல்புரியவல்ல தலைவர்கள் என்று) நினைத்துக் கொண்டிருக்கிற ஜனங்களின் கட்டளையைத் தலையால் தாங்கி நடத்துகின்றனையென்பது மனுஷ்ய சேஷ்டையை (செயலை) அபிநயம் செய்வது (வெளி வேஷம்) மாத்ரமேயன்றி, வேறன்று. இல்லாத பக்ஷத்தில், ஸர்வ நியாமகனும் (எல்லோரையும் நியமிப்பவனும்), ஜகத்தின் ஸ்ருஷ்டி (படைப்பு), ஸம்ஹாரங்களைக் (அழித்தல்) கேவல ஸங்கல்பத்தினால் (எண்ணத்தினாலேயே) நடத்துகிறவனுமாகிய உனக்கு, ப்ராக்ருதமான (உலக ஸாதாரணமான) விஜயம் முதலிய செயல்களை நேரே நடத்துவது எவ்வாறு பொருந்தும்? 

நாம ரூபங்களுக்கு இடமல்லாத சேதனா சேதனங்களை (அறிவுடைய ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைச்) சரீரமாகவுடையவனாகி, ஜகத்திற்கு உபாதான காரணமாய் (மண் குடத்திற்கு மண் போல் material causeஆய்) இருப்பவனும், இணை எதிரின்றித் தானே நிமித்த காரணமாய் (மண் குடத்திற்கு குயவன் போல் efficient Cause ஆய்) இருப்பவனும், அதற்கு வேண்டிய ஜ்ஞானம், சக்தி முதலிய கல்யாண குணங்களால் மேன்மையுடையவனும், நித்ய விபூதியென்கிற பரமபதத்தில் வஸிப்பவனும், பரமாத்மனுமாகிய உனக்கு, ப்ராக்ருதமான (மிக ஸாதாரணமான) சத்ரு ஜயம் (எதிரிகளை ஜெயித்தல்) முதலிய கர்மங்களால் ப்ரபாவம் (பெருமை) வளர்வதுமில்லை; அவற்றைச் செய்யாமையால், உன் ப்ரபாவம் (பெருமை) குறைவதுமில்லை. ஸூர்யனுடைய தேஜஸ்ஸு (ஒளி), உதயத்தினால் வளர்வதும், அஸ்தமயத்தினால் குறைவதும் உண்டோ? அவ்வாறே, உனக்கும் இச்செயல்களால் ஒரு மேன்மையாவது, இவை இல்லாமையால் ஒரு தாழ்வாவது கிடையாது. ஆயினும், மானிடர்களை அனுஸரித்து, நீ இவ்வாறு நடக்கின்றாய். 

மாதவனே! ஒருவராலும் வெல்ல முடியாதவனே! ஆஹாரம், நித்ரை, பயம், மைதுனம் (ஆண், பெண் சேர்த்தி) இவற்றை ஒழிய மற்றொன்றையும் அறியாத பசுக்களைப் போன்ற தேஹாத்மாபிமானிகளுக்கு (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கம் உள்ளவர்களுக்கு) நானென்றும், என்னுடையது என்றும், நீயென்றும், உன்னுடையதென்றும், விபரீத புத்திகள் உண்டாவது போல, உன் பக்தர்களுக்கு உண்டாகிறதில்லை. அவர்களுக்கு, அவ்விபரீத புத்தியால் வரும் குறைவு, நிறைவுகள் எங்கிருந்து வரப் போகின்றன? இனி, உனக்கு அவ்விபரீத புத்தியும், அதனால் வரும் குறைவு, நிறைவுகளும் கிடையாது என்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அந்த யுதிஷ்டிர மன்னவன் இவ்வாறு மொழிந்து, யாகத்திற்குரிய காலம், நேரம் பெற்று, ஸ்ரீக்ருஷ்ணனால் அபிநந்திக்கப்பட்டு (அனுமதிக்கப்பட்ட்டு), பிறவி முதலியவற்றால் மேன்மையுற்றவர்களும், வேதங்களை ஓதியுணர்ந்தவர்களுமாகிய த்வைபாயனர், பரத்வாஜர், ஸுமந்து, கௌதமர், அஸிதர், வஸிஷ்டர், சயவனர், கண்வர், மைத்ரேயர், கவஷர், த்ரிதர், விச்வாமித்ரர், வாமதேவர், ஸுமதி, ஜைமினி, க்ரது, பைலர், பராசரர், அகஸ்த்யர், வைசம்பாயனர், அதர்வர், கச்யபர், தெளம்யர், பரசுராமர், ஆஸுரி, வீதிஹோத்ரர், மதுச்சந்தர், வீரஸேனர், அக்ருதவரணர் இவ்வந்தணர்களை, ருத்விக்குக்களாக வரித்தான். மற்றும், பீஷ்மர், த்ரோணர், க்ருபர் முதலியவர்களையும், த்ரதராஷ்டிரனையும், அவன் பிள்ளைகளையும், மிகுந்த மதியுடைய விதுரனையும், அழைத்தான். 

மன்னவனே! ப்ராஹ்மணர்களும், க்ஷத்ரியர்களும், வைச்யர்களும், சூத்ரர்களும், ஸமஸ்த ராஜர்களும், மந்திரி முதலிய ராஜர்களின் பரிகரங்களும் (வேலையாட்களும்) அம்மன்னவனால் அழைக்கப்பெற்று, யாகத்தைப் பார்க்க வந்தார்கள். பிறகு, ருத்விக்குக்களாக வரிக்கப்பட்ட த்வைபாயனர் முதலிய அவ்வந்தணர்கள், யாக பூமியை ஸ்வர்ண மயமான கலப்பையினால் உழுது, சுத்தி செய்து, யுதிஷ்டிரனைத் தீக்ஷிப்பித்தார்கள் (யாக தீக்ஷை (யாக சடங்கு செய்ய உறுதி பூணுதல்) அளித்தார்கள்). முன்பு, வருணனுடைய யஜ்ஞத்தில் ஸ்ருக்கு, ஸ்ருவம் (பலாஸ அல்லது காதிர மரத்தால் செய்யப்பட்ட கரண்டி), முதலிய உபகரணங்களெல்லாம் ஸ்வர்ணமயமாயிருந்தாற் போல், அம்மன்னவனுடைய யஜ்ஞத்திலும், உபகரணங்களெல்லாம் ஸ்வர்ணமயமாயிருந்தன. 

ப்ரஹ்ம, ருத்ரர்களோடு கூடின லோகபாலர்கள், தத்தம் கூட்டங்களோடு கூடின ஸித்தர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள், பெருமையுடைய உரகர்கள் (நாகர்கள்), முனிவர்கள், யக்ஷர்கள், ராக்ஷஸர்கள், பதகர்கள் (கருடன் முதலிய பக்ஷிகள்), கின்னரர்கள், சாரணர்கள், அழைக்கப்பெற்ற ராஜர்கள், ராஜபத்னிகள் ஆகிய அனைவரும் அந்த யாகத்திற்கு வந்தார்கள். எல்லாரும், ஸ்ரீக்ருஷ்ண பக்தனும், பாண்டுவின் புதல்வனுமாகிய அந்த யுதிஷ்டிர மன்னவனுடைய ராஜஸூய யாகத்தைக் கண்டு, சிறிதும் வியப்பின்றி, “இவனுக்கு இது மிகவும் தகுந்தது” என்று நினைத்தார்கள். 

தேவதைகள், வருணனைக் கொண்டு யாகம் செய்வித்தாற்போல, தேவதைகளோடொத்த ஒளியுடைய அந்த ருத்விக்குக்கள், யுதிஷ்டிர மஹாராஜனைக் கொண்டு, ராஜஸூய யாகம் செய்வித்தார்கள். ஸோமலதையை (ஸோமம் என்னும் கொடியை) அபிஷவஞ் செய்யும் (பிழிந்து சாறு எடுக்கும்) தினத்தினன்று யுதிஷ்டிர மன்னவன், மஹானுபாவர்களான ருத்விக்குக்களையும், அத்தகைய ஸபிகர்களையும் (ஸபையினரையும்), மிகவும் சிறந்த பூஜைகளால் பூஜிக்கத் தொடங்கினான். அம்மன்னவன், ஸபையில் முதலில் பூஜிக்கத் தகுந்தவன் எவனென்று ஆராய்ந்து, பலரும் உரியவர்களாயிருந்தமையால், இன்னவனைத்தான் முதலில் பூஜிக்க வேண்டும் என்கிற நிச்சயம் தோற்றப் பெறாதிருந்தான். அப்பொழுது, ஸஹதேவன் எழுந்து மொழிந்தான்.

ஸஹதேவன் சொல்லுகிறான்:- தன்னைப் பற்றினவர்களைக் கைவிடாமல் பாதுகாக்கும் தன்மையனான இவ்வச்சுதன் தான் முதலில் பூஜிப்பதற்குரிய மேன்மை உடையவன். இவன் ஷாட்குண்ய பூர்ணன் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவன்); ப்ரஹ்ம வித்துக்களென்று ப்ரஸித்தர்களான த்வைபாயனாதி மஹர்ஷிகளுக்கும், இவனே ப்ரபு. ஸமஸ்த தேவதைகளும் இவனே. யாகத்திற்குரிய தேசம், காலம், தனம் முதலியவைகளும் இவனே. இந்த ப்ரபஞ்சம் எல்லாம் இவனே. யாகங்களும் இவனே. அக்னி, ஆஹுதிகள், மந்த்ரங்கள், ஆத்மாவின் உண்மையை ஆராய்கையாகிற ஸாங்க்யம் (அறிவு ஆராய்ச்சி), பரமாத்ம உபாஸனமாகிற யோகம் இவையெல்லாவற்றிற்கும் இவனே நிர்வாஹகன் (நியமிப்பவன்). 

இந்த ப்ரபஞ்சம் எல்லாம் இவனையே அந்தராத்மாவாக (உள் இருக்கும் ஆத்மாவாக) உடையது. ஸ்ருஷ்டிக்கு முன்பு, நாம ரூபங்களுக்கிடமல்லாத சேதனா சேதனங்களை (அறிவுடைய ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைச்) சரீரமாகக் கொண்டு இவனொருவனே இருந்தான். இவனுக்கு இணையாவது, எதிராவது கிடையாது. இத்தகையனான இவன், தன்னையே ஆதாரமாகவும், மற்ற உபகரணங்களாகவும் கொண்டு, ப்ரபஞ்சத்தைப் படைப்பதும், காப்பதும், அழிப்பதும் செய்கின்றான். இவன், பிறவி முதலிய விகாரங்கள் (மாற்றங்கள்) எவையும் தீண்டப் பெறாதவன். இவன், இந்த ப்ரபஞ்சத்திற்கு தர்மம் முதலிய நன்மைகளை எல்லாம் விளைக்கும் பொருட்டு, பல செயல்களைச் செய்கின்றான். இவனுக்குத் தன் ப்ரயோஜனத்திற்காகச் (பயனுக்காகச்) செய்ய வேண்டியது ஒன்றுமே இல்லை. ஆகையால், எல்லோரிலும் மேன்மையுடையவனாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்குப் பூஜை செய்வாயாக. இப்படி செய்வாயாயின், ஸமஸ்த பூதங்களுக்கும் பூஜை செய்தாற் போலாகும். தன்னையும் மேன்மைப் படுத்திக்கொண்டதாகும். ஏனென்றால், இவன் ஸமஸ்த பூதங்களுக்கும் அந்தராத்மாவாயிருப்பவன், தன்னைக்காட்டிலும் வேறுபட்ட வஸ்து எதுவும் இல்லாதவன்; ராகம், த்வேஷம் முதலிய தோஷங்கள் எவையும் தீண்டப் பெறாதவன்; இயற்கையில் அவாப்த ஸமஸ்தகாமன் (விருப்பங்களெல்லாம் கைகூடப் பெற்றவன்). ஆகையால், தான் செய்யும் தானம் அளவற்ற பயனை விளைக்க வேண்டும் என்னும் விருப்பம் உளதாயின், இந்த ஸ்ரீக்ருஷ்ணனுக்குத்தான் முதலில் பூஜாதானம் (முதல் மரியாதை) செய்யவேண்டும்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸ்ரீக்ருஷ்ணனுடைய மஹிமையை அறிந்த ஸஹதேவன் இவ்வாறு மொழிந்து, பேசாதிருந்தான். ப்ரஹ்ம ஜ்ஞானிகளில் சிறந்த த்வைபாயனாதிகள் அதைக் கேட்டு, நல்லது நல்லதென்று புகழ்ந்தார்கள். இவ்வாறு ஸபையிலுள்ள அந்தணர்கள், மனவிருப்பத்துடன் நல்லது நல்லதென்று மொழிந்ததைக் கேட்டு, யுதிஷ்டிரன் ஸந்தோஷம் அடைந்து, ஸ்னேஹத்தினால் தழதழத்து, ஸ்ரீக்ருஷ்ணனைப் பூஜித்தான்.

அம்மன்னவன், அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய பாதங்களை அலம்பி, உலகங்களையெல்லாம் புனிதம் செய்யவல்ல அந்த ஸ்ரீபாத தீர்த்தத்தைத் (திருவடி நீரைத்) தன் பார்யைகளோடும், தம்பிகளோடும், மந்திரிகளோடும், மற்றுமுள்ள குடும்பத்தோடும், சிரஸ்ஸினால் மனக்களிப்புடன் தரித்தான். மற்றும், அவன் வஸ்த்ரங்களாலும், பொன் நிறமுள்ள பட்டு வஸ்த்ரங்களாலும், விலையுயர்ந்த ஆபரணங்களாலும், ஸ்ரீக்ருஷ்ணனை ஆராதித்து, ஆநந்த நீர்கள் நிறைந்த கண்களுடையவனாகி, அந்தப் பகவானைப் பார்க்க முடியாதிருந்தான். 

ஸமஸ்த ஜனங்களும், இவ்வாறு  பூஜிக்கப்பட்ட ஸ்ரீக்ருஷ்ணனைக் கண்டு, கைகளைக் குவித்து, “உனக்கு நமஸ்காரம். நீ மேன்மையுடன் விளக்கமுற்றிருப்பாயாக” என்று மொழிந்து, அவனை வணங்கினார்கள். அப்பொழுது, பூமழைகள் பொழிந்தன. 

சிசுபாலன், இவ்வாறு நடந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய குண வர்ணனத்தைக் (குணச் சிறப்புக்களை அவையோர் புகழ்ந்ததைக்) கேட்டு, கோபமுற்று, தன் ஆஸனத்தினின்றும் எழுந்து, கையைத் தூக்கிக் கொண்டு, பொறாமையுற்று, பயமின்றி, பருஷமான (கொடிய) வசனங்களைப் பகவானுடைய செவியில் படுத்த முயன்று, மேல் வருமாறு மொழிந்தான்.

சிசுபாலன் சொல்லுகிறான்:- ப்ரஹ்மாதிகளுக்கும் ப்ரபுவான காலம், ஒருவராலும் கடக்க முடியாது என்னும் பழமொழி உண்மையே. ஏனென்றால், எல்லாம் தெரிந்த வ்ருத்தர்களின் புத்தியும் கூட ஒன்றும் தெரியாத பாலர்களின் வாக்யங்களால் மாறிப் போகின்றதே. ஸபையிலுள்ள பெரியோர்களே! க்ருஷ்ணன் தான் அக்ர பூஜைக்குத் (முதல் மரியாதைக்குத்) தகுந்தவனென்று சொல்லுகிற இந்தப் பாலகன் வாக்யத்தை நீங்கள் ஒப்புக்கொள்ளலாகாது. ஏனென்றால், நீங்கள் தானத்திற்குரிய ஸத் பாத்ரம் (சிறந்தவன்) இன்னது  என்பதை அறிந்தவர்களில் சிறந்தவர்களல்லவா? உபவாஸம் முதலிய தவம், சாஸ்த்ர அப்யாஸத்தினால் (சிறந்த கல்வியால்) விளையும் ஜ்ஞானமாகிய வித்யை, சாந்த்ராயணம் (சந்த்ரனின் பிறை வளர்ச்சி, தேய்வுடன் தொடர்புடைய மத  சம்பந்தமான வ்ரதம்) முதலிய வ்ரதம் இவற்றைத் தவறாமல் விதிப்படி அனுஷ்டிப்பவர்களும், பரமாத்ம உபாஸன ரூப ஜ்ஞானத்தினால் பாபங்களெல்லாம் தீரப்பெற்றவர்களும், பரப்ரஹ்மத்தை ஸாக்ஷாத்கரித்து (நேரில் பர்த்து அறிந்து) அதில் நிலைநின்றவர்களும், லோகபாலர்களால் பூஜிக்கப்பட்டவர்களுமாகிய பரமரிஷிகளை அனாதரித்து (புறக்கணித்து), குலாதமனான (குலப் பெரியோர்களல் இகழப்பட்ட) இந்தக் கோபாலன், காக்கை, புரோடாசத்திற்கு (வேள்வியில் அக்னியில் ஹோமம் செய்யப்படும் மாவினாலான பண்டத்திற்கு) உரியதல்லாதாப் போல், பூஜைக்கு எவ்வாறு உரியவனாவான்? 

ப்ராஹ்மண, க்ஷத்ரியாதி வர்ணங்கள், ப்ரஹ்மசர்யம் முதலிய ஆச்ரமங்கள், குலம் இவற்றினின்று நழுவினவனும், வர்ணாச்ரம தர்மங்களுக்கு வெளிப்பட்டவனும், தோன்றியபடி நடப்பவனும், குணங்களற்றவனுமாகிய இந்த இடைப்பையன் எவ்வாறு பூஜைக்கு உரியவனாவான்? 

இந்த யாதவர்களின் குலம், யயாதியால் சபிக்கப்பட்டு, ஸத்புருஷர்களால் பஹிஷ்காரம் செய்யப்பட்டிருக்கின்றது (ஒதுக்கப்பட்டிருக்கிறது). அத்தகைய குலத்தில் பிறந்த இவன், வீணாகப் பாபத்தில் மனவிருப்பம் கொண்டு, மதித்திருக்கின்றான். இவன் எப்படி பூஜைக்கு உரியவனாவான்? ப்ரஹ்மர்ஷிகள் நடையாடுகிற ஆர்யவர்த்த தேசத்தையும் (இந்த புண்ய இடத்தையும்), ப்ரஹ்மவர்ச்சஸத்தையும் (ப்ரஹ்ம தேஜஸ் ஒளிரும் இந்த மண்ணையும்) துறந்து, ஸமுத்ரத்தின் (கடலின்) இடையிலுள்ள துர்க்கத்தை (நுழையத்தகாத தேசத்தை) அடைந்து, துஷ்ட ஜந்து போல் ஜனங்களைப் பீடித்துக் கொண்டிருக்கிறான்).

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- நன்மை அழியப் பெற்ற அந்தச் சிசுபாலன், இவை முதலிய அமங்கலமான பருஷ (கொடிய) வாக்யங்களை மொழிந்தான். ஸிம்ஹம், நரியின் சப்தத்தைக் கேட்டுப் பேசாதிருப்பது போல, ஸ்ரீக்ருஷ்ணன் அதைக் கேட்டும் ஒன்றும் பேசாதிருந்தான். ஸபையிலிருந்தவர்கள் பொறுக்க முடியாத, பகவானை நிந்திப்பதைக் (திட்டுவதைக்) கேட்டு, காதுகளை மூடிக் கொண்டு, கோபத்தினால் சிசுபாலனைப் பழித்துக் கொண்டே, அப்புறம் சென்றார்கள். 

பகவானை நிந்திப்பதையாவது, அவனிடத்திலூக்கமுற்ற ஜனங்களை நிந்திப்பதையாவது கேட்டு, அவனிடத்தினின்று எவன் அப்புறம் போகாதிருக்கிறானோ, அவனும் ஸுக்ருதத்தினின்று (நற்செயலிலிருந்து) நழுவி, நரகத்தில் விழுவான். அப்பால், பாண்டவர்களும், மத்ஸ்யர்களும், கேகயர்களும், ஸ்ருஞ்சயர்களும், கோபித்துச் சிசுபாலனைக் கொல்ல விரும்பி, ஆயுதங்களை ஏந்திக்கொண்டு, எழுந்திருந்தார்கள். 

பாரதனே! பிறகு சிசுபாலன் சிறிதும் பயமின்றிப் பரபரப்பற்று, ஸ்ரீக்ருஷ்ணனுடைய பக்ஷத்திலுள்ள அரசர்களை எல்லாம் ஸபையில் விரட்டிக் கொண்டு, கத்தியையும், கேடயத்தையும் எடுத்துக் கொண்டான். அவ்வளவில் ஸ்ரீக்ருஷ்ணன் கோபித்து, தன் பக்ஷத்தைச் சேர்ந்த அம்மன்னவர்களைத் தடுத்து, எதிர்த்து வருகின்ற சத்ருவின் தலையைக் கத்தியின் நுனி போன்ற நுனியுடைய சக்ராயுதத்தினால் தானே அறுத்தான். சிசுபாலன், மாண்டு போகையில், பெரிய கோலாஹல சப்தம் உண்டாயிற்று. 

அந்தச் சிசுபாலனைத் தொடர்ந்து வந்த மன்னவர்கள் அனைவரும், ப்ராணன்களோடு தப்பிப் பிழைக்க விரும்பி, ஓடிப் போனார்கள். சிசுபாலனுடைய தேஹத்தினின்று கிளம்பின ஜீவனாகிற தேஜஸ்ஸு (ஒளி), ஆகாயத்தினின்று நழுவின கொள்ளி பூமியில் விழுந்து மறைவது போல, ஸமஸ்த பூதங்களும் பார்த்துக்கொண்டிருக்கையில், வாஸுதேவனிடத்தில் நுழைந்து மறைந்தது. அச்சிசுபாலன், மூன்று ஜன்மங்களாகத் தொடர்ந்து வருகின்ற வைரத்தினால் (பகைமையினால்), நிலைநின்ற புத்தியுடன் ஸ்ரீக்ருஷ்ணனை த்யானித்துக் கொண்டிருந்தானாகையால், அவனோடு ஸாதர்ம்யத்தை (பகவானோடு ஒத்த நிலையை) அடைந்தான். 

பாவமல்லவோ, (மனக்கருத்தல்லவோ) சுப (நல்ல) அசுப (கெட்ட) ஜன்மங்களுக்குக் காரணம். ஆகையால், சுபாச்ரயமான (நன்மையை அளிப்பதும், புகலிடமாயிருப்பதுமான) ஸ்ரீக்ருஷ்ணனுடைய திவ்யமங்கள விக்ரஹத்தில் அவனுடைய பாவம் நிலை நின்றிருந்தமையால், அவன் சுபமான நிலைமையைப் பெற்றான். இணையெதிரில்லாத தனியரசனாகிய யுதிஷ்டிர மன்னவன், ருத்விக்குக்களுக்கும், ஸபிகர்களுக்கும் (ஸபையினருக்கும்) அமிதமான (அளவற்ற) தக்ஷிணையைக் (காணிக்கையைக்) கொடுத்து, எல்லோரையும் விதிப்படி பூஜித்து, அவப்ருத ஸ்னானம் (வேள்வி முடிந்ததும் செய்ய வேண்டிய, நீரில் அமிழ்ந்து நீராட்டம்)  செய்தான்.

யோகேச்வரர்களுக்கும் ஈச்வரனான ஸ்ரீக்ருஷ்ணன், இவ்வாறு யுதிஷ்டிர மன்னவனுடைய ராஜஸூய யாகத்தை நிறைவேற்றி, நண்பர்களால் வேண்டப் பெற்று, சில மாதங்கள் அவ்விடத்தில் வஸித்திருந்தான். அப்பால், ஸர்வேச்வரனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், தான் போவதற்கு ஸம்மதியாதிருக்கிற யுதிஷ்டிர மன்னவனிடத்தினின்று நிர்ப்பந்தமாகவே (வற்புறுத்தி) அனுமதி பெற்றுக் கொண்டு, பார்யைகளோடும், மந்திரிகளோடும் கூடப் புறப்பட்டு,  தன் பட்டணம் போய்ச் சேர்ந்தான். வைகுண்டவாஸிகளான ஜய விஜயர்களுக்கு ஸனகாதி அந்தணர்களின் சாபத்தினால் அடிக்கடி ஜன்மம் உண்டான விஷயத்தைப் பற்றின அந்த உபாக்யானத்தை (கதையை) உனக்கு நான் முன்னமே மிகவும் ஸவிஸ்தரமாக (விரிவாக) மொழிந்தேன். (ஆகையால் ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் மிகுந்த த்வேஷமுடைய சிசுபாலன், அவனுடைய ஸாதர்ம்யத்தை (பகவானோடு ஒத்த நிலையை) எப்படி அடைந்தானென்று சங்கிக்க வேண்டாம்). 

யுதிஷ்டிர மன்னவன், ராஜஸூய யாகத்தை முடித்து, அவப்ருத ஸ்னானம் (வேள்வி முடிந்ததும் செய்ய வேண்டிய, நீரில் அமிழ்ந்து நீராட்டம்) செய்து, ப்ராஹ்மணர்களும், க்ஷத்ரியர்களும் நிறைந்த ஸபையின் இடையில், தேவேந்திரன் போல விளங்கினான். தேவதைகள், மனுஷ்யர்கள், ஆகாசத்தில் திரிபவர்களான மற்ற ஸித்த சாரணாதிகள், ஆகிய அனைவரும் யுதிஷ்டிர மன்னவனால் பூஜிக்கப்பட்டு, ஸ்ரீக்ருஷ்ணனையும் ராஜஸூய யாகத்தையும் புகழ்ந்து கொண்டு மனக்களிப்புடன் தங்கள் இருப்பிடம் போய்ச் சேர்ந்தார்கள். பாபிஷ்டனும், தர்மத்தில் த்வேஷமுடையவனும், குருகுலத்திற்கு ரோகம் (நோய்) போல் நாசத்திற்கு ஹேதுவுமாகிய துர்யோதனனொருவனைத் தவிர மற்றவர் அனைவரும், ஸந்தோஷத்துடன் திரும்பிப் போனார்கள். அவன் மாத்ரம், அந்தப் பாண்டு புத்ரனான யுதிஷ்டிர மன்னனுடைய அத்தகைய ஸம்ருத்தியைக் (சீரும் சிறப்பும்) கண்டு பொறுக்க முடியாமல், வயிற்றெரிச்சலுடன் திரும்பிப் போனான். எவன், சிசுபாலவதம், ராஜர்களை ஜராஸந்த பந்தனத்தினின்று (கட்டிலிருந்து) விடுவித்தது, ராஜஸூய யாகத்தின் சிறப்பு ஆகிய இவை முதலிய இந்த ஸ்ரீக்ருஷ்ண சரித்ரத்தைக் கீர்த்தனம் செய்கிறானோ, அவன் ஸமஸ்த பாபங்களாலும் விடுபடுவான். 

எழுபத்து நான்காவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக