சனி, 3 ஏப்ரல், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 291

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எழுபத்து ஐந்தாவது அத்தியாயம்

(யுதிஷ்டிர மன்னவனுடைய சிறப்பும், அதைக் கண்டு துர்யோதனன் பொறாமையால் பரிபவப்பட்டதும் (அவமானப்பட்டதும்))

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- ப்ரஹ்மரிஷீ! யுதிஷ்டிர மன்னவனுடைய அத்தகைய ராஜஸூய யாகத்தின் பெரும் சிறப்பைக் கண்டு, ராஜனாகிய துர்யோதனனைத் தவிர, யாகத்திற்கு வந்திருந்த மனுஷ்யர்கள், தேவதைகள், ரிஷிகள், ஸித்த, சாரணாதி உபதேவர்கள் ஆகிய அனைவரும் களித்தார்களென்று நாங்கள் கேட்டிருக்கிறோம். அதற்குக் காரணம் என்னவோ அதைச் சொல்வீராக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:– மஹானுபாவனும், உன் பாட்டனுமாகிய யுதிஷ்டிர மன்னவனுடைய ராஜஸூய யாகத்தில் பந்துக்கள் அனைவரும் அவனிடத்தில் ப்ரீதியினால் கட்டுண்டு, பரிசாரகர்களைப் (வேலைக்கரர்களைப்) போல வேண்டிய கார்யங்களைச் செய்தார்கள். பீமஸேனன், யாகசாலையில் கார்யங்களை நிர்வஹித்தான். ஸஹதேவன், வந்தவர்களை விசாரித்து, வெகுமதிக்கும் கார்யத்தை நடத்தினான். நகுலன், வேண்டிய பலவகை வஸ்துக்களைச் சேகரிப்பதில் ஊன்றியிருந்தான். அர்ஜுனன், பெரியோர்களுக்குச் சுச்ரூஷை (பணிவிடை) செய்யும் கார்யத்தை ஏற்றுக் கொண்டான். ஸ்ரீக்ருஷ்ணன், பாதங்களை அலம்புவதில் முயன்றிருந்தான். த்ருஷ்டத்யும்னன், அவரவர்களுக்குப் பக்ஷ்ய போஜ்யாதிகளைப் (உணவு) பரிமாறும் கார்யத்தையும், தாராளமான மனமுடைய கர்ணன், தானாதிகாரத்தையும் (தானம் செய்வதையும்) நடத்தினார்கள். ஸாத்யகி, விகர்ணன், ஹார்த்திக்யன், விதுரன், பாஹ்லீக புத்ரர்கள் இவர்களும் பூரிச்ரவஸ்ஸு முதலியவர்களும், ஸந்தர்த்தனன் முதலியவர்களும், அம்மஹாயாகத்தில் பற்பல கார்யங்களில் தூண்டப்பட்டு, ராஜனுக்கு ப்ரியம் செய்ய விரும்பி, அந்தந்தக் கார்யங்களை நடத்தினார்கள். 

ருத்விக்குக்கள், ஸபிகர்கள் (சபையோர்கள்), பண்டிதர்கள், நண்பர்கள் ஆகிய இவர்கள் அனைவரும், நல்வார்த்தைகள் சிறந்த பூஜைகள், தஷிணைகள் இவைகளால் நன்கு பூஜிக்கப்பட்டிருக்கையில், சிசுபாலனும் ஸ்ரீக்ருஷ்ணனுடைய பாதார விந்தங்களை அடைகையில், கங்கா நதியில் அவப்ருத ஸ்னானத்தை (வேள்வி முடிந்ததும் செய்ய வேண்டிய, நீரில் அமிழ்ந்து நீராட்டம்) நடத்தினார்கள். அந்த அவப்ருத மஹோத்ஸவத்தில், ம்ருதங்கம், சங்கம், பணவம், துந்துபி, ஆனகம், கோமுகம் முதலிய விசித்ரமான பல வாத்யங்களும் முழங்கின. நர்த்தகர்கள் ஸந்தோஷத்துடன் ஆடினார்கள். காயகர்கள் ஸந்தோஷமுற்று, கூட்டங் கூட்டமாய்ப் பாடினார்கள். வீணை வாசிப்பதும், புல்லாங்குழல் ஊதுவதும், கைத்தாளமிடுவதுமாய் இருக்கின்ற அங்குள்ள ஜனங்களின் சப்தம், ஆகாயம் முழுவதும் அளாவிற்று. அப்பொழுது, பொற்சங்கிலி முதலிய அலங்காரங்களை அணிந்திருக்கிற மன்னவர் விசித்ரமான த்வஜங்களும், சிறந்த பதாகைகளுமுடைய கஜச்ரேஷ்டங்களோடும் (கஜ ச்ரேஷ்டம் - சிறந்த யானை)  தேர்களோடும், குதிரைகளோடும், நன்கு அலங்கரித்துக் கொண்டிருக்கிற யோதர்களோடும் (யோதன் – யுத்தவீரன்) கூடிப் புறப்பட்டார்கள். 

யதுக்களும், ஸ்ருஞ்சயர்களும், கம்போஜர்களும், குருக்களும், கோஸலர்களும், கேகயர்களும், யஜமானனான யுதிஷ்டிர மன்னவனை முன்னிட்டு, தங்கள் ஸைன்யங்களால் பூமியை நடுங்கச் செய்து கொண்டு, புறப்பட்டுப் போனார்கள். ஸபிகர்களும் (ஸபையோர்களும்), ருத்விக்குக்களும், ப்ராஹ்மண ச்ரேஷ்டர்களும், பெரிய வேத கோஷத்துடன் சென்றார்கள். தேவதைகளும், ரிஷிகளும், பித்ருக்களும், கந்தர்வர்களும், புஷ்பங்களைப் பெய்து கொண்டு துதித்தார்கள். புருஷர்களும், ஸ்த்ரீகளும், ஆடையாபரணம், புஷ்பம், சந்தனம் முதலியவைகளால் நன்றாக அலங்கரித்துக் கொண்டு, பலவகை ரஸங்களால் பூசுவதும், இறைப்பதுமாகி விளையாடினார்கள். விலைமாதுகள், எண்ணெய், பால், தயிர், நெய், கந்தஜலம், மஞ்சள், குங்குமம் இவைகளைக் கொண்டு புருஷர்களால் பூசப்பட்டு, தாங்களும் அவற்றைக் கொண்டு அவர்கள் மேல் பூசிக்கொண்டு, விளையாடினார்கள். தெய்வ மடந்தையர்கள் விமானங்களின் மேல் ஏறி ஆகாயத்தில் புறப்படுவது போல, ராஜபத்னிகள் படர்களால் பாதுகாக்கப் பெற்று, ரதம் முதலிய வாஹனங்களில் ஏறிக்கொண்டு, இந்த அவப்ருதஸ்னானத்தைப் பார்க்க விரும்பிக் கிளம்பினார்கள். 

அம்மாதரசிகள், மாமன் பிள்ளைகளாலும், ஸகிகளாலும், சந்தன ஜலம் முதலியவைகளால் நனைக்கப் பெற்று, வெட்கத்தோடு கூடின மந்தஹாஸத்தினால் (புன்னகையால்) மலர்ந்த முகமும் உடையவர்களாகி, விளங்கினார்கள். கந்த ஜலம் முதலியவைகளால் ஆடைகள் நனைந்து, அங்கங்களும், கொங்கை, துடை, இடை இவைகளும் துலங்கப் பெற்ற அம்மடந்தையர் மணிகள், ஜலம் இறைக்கும் யந்த்ரங்களால் மைத்துனன்மார்களையும், ஸகிகளையும் நனைத்தார்கள். 

அவர்கள், யந்த்ரங்களால் கந்த ஜலாதிகளை எடுத்து இறைக்கும் குதூஹலத்தின் (மகிழ்ச்சியின்) மிகுதியால், தலைச் சொருக்குகள் அவிழ்ந்து, பூமாலைகள் நழுவப் பெற்று, அழகிய விலாஸங்களால் (விளையாட்டுகளால்) காமுகர்களுக்கு மனக்கலக்கத்தை (மன்மத விகாரத்தை) விளைத்தார்கள். 

அந்த யுதிஷ்டிர மஹாராஜன், நல்ல குதிரைகள் கட்டி, பொற்சங்கிலிகளால் அலங்காரம் செய்யப் பெற்றிருப்பதுமாகிய ரதத்தில் ஏறிக்கொண்டு, தன் பத்னிகளோடு கூடி, ப்ரயாஜம் (யாகத்தின் ஒரு அங்கம்) முதலிய க்ரியா கலாபங்களோடு (செயல்களோடு) கூடிய ராஜஸூய யாகம்போல் விளங்கினான். ருத்விக்குக்கள், பத்னீஸம்யாஜம் என்கிற சில யாக விசேஷங்களையும், அவப்ருதத்திற்கு அங்கமான கர்மத்தையும் அனுஷ்டித்து, ஆசமனம் செய்த அம்மன்னவனுக்கும், த்ரௌபதிக்கும், கங்கையில் ஸ்னானம் செய்வித்தார்கள். அப்பொழுது, ஒரே ஸமயத்தில் தேவதுந்துபிகளும், மனுஷ்ய துந்துபிகளும் முழங்கின. தேவதைகளும், ரிஷிகளும், பித்ருக்களும், மனுஷ்யர்களும், பூமழைகளைப் பொழிந்தார்கள்.

மஹா பாதகம் (ப்ராஹ்மணனைக் கொல்லுதல், கள் குடித்தல், திருடுதல், ஆசர்யனின் மனைவியைப் புணர்தல், இப்பாபங்களைச் செய்தவர்களோடு சேருதல் என்கிற ஐந்தும் மஹாபாதகங்கள் – மிகப் பெரும் பாபங்கள்) செய்தவனும், அவப்ருத ஸமயத்தில் ஸ்னானம் செய்வானாயின், அப்பொழுதே அந்தப் பாபத்தினின்று விடுபடுவானாகையால், ப்ராஹ்மணாதி வர்ணங்களும், ப்ரஹ்மசர்யம் முதலிய ஆச்ரமங்களுமாகிய வ்யவஸ்தைகளை (நிலைகளை) உடைய ஸகல ஜனங்களும் ஸ்னானம் செய்தார்கள். அப்பால், யுதிஷ்டிர மன்னவன் புதிய வெண்பட்டு வஸ்த்ரங்களை உடுத்துக் கொண்டு, நன்கு அலங்காரங்களையும் அணிந்து, ருத்விக்குக்கள், ஸதஸ்யர்கள் (ஸபையோர்கள்), ப்ராஹ்மணர்கள் முதலியவர்களை ஆபரணம், அம்பரம் முதலிய ஸம்மானங்களால் (வெகுமதிகளால்) பூஜித்தான். 

ஸ்ரீமந்நாராயணனையே முக்யமாகப் பற்றின அம்மன்னவன், எல்லாம் அவனுடைய சரீரங்களே என்னும் புத்தியுடையவனாகையால், பந்துக்களையும், ஜ்ஞாதிகளையும் (பங்காளிகளையும்), நன் மனமுடைய ராஜர்களையும், நண்பர்களையும், மற்றுமுள்ள அனைவரையும், அடிக்கடி பூஜித்தான். அங்குள்ள ஸமஸ்த புருஷர்களும், தேவதைகளோடொத்த ஒளியுடையவர்களும், ரத்னமயமான குண்டலங்கள், பூமாலைகள், தலைப்பாகை, கஞ்சுகம், வெண்பட்டு வஸ்த்ரங்கள், விலையுயர்ந்த ஹாரங்கள் (மாலைகள்), ஆகிய இவற்றையுடையவர்களுமாகி விளங்கினார்கள். ஸ்த்ரீகளும், இரண்டு குண்டலங்களோடும், முன்னெற்றி மயிர்களோடும் கூடின முகங்களால் சோபையுடையவர்களாகி, ஸ்வர்ணமயமான அரைநாண் மாலையுடன் விளங்கினார்கள். 

மன்னவனே! அனந்தரம் சிறந்த நல்லொழுக்கமுடைய ருத்விக்குக்களும், ப்ரஹ்மவாதிகளான ஸபிகர்களும் (ஸபையோர்களும்), ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்ய, சூத்ரர்களும், மற்றும் யாகத்திற்காக வந்திருந்த ராஜர்களும், தேவதைகள், ரிஷிகள், பித்ருக்கள் மற்ற பூதங்கள், லோகபாலர்கள், அவரவர்களுடைய பரிஜனங்கள் ஆகிய அனைவரும் அம்மன்னவனால் பூஜிக்கப்பட்டு, அவனிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, தத்தம் இருப்பிடம் போய்ச் சேர்ந்தார்கள். 

மனுஷ்யன் அம்ருதத்தைப் பருகி த்ருப்தி அடையாதிருப்பது போல, அனைவரும் ஸ்ரீக்ருஷ்ணனுடைய தாஸனும், ராஜர்ஷியுமாகிய யுதிஷ்டிரனுடைய, ராஜஸூய மஹோத்ஸவத்தைப் புகழ்ந்து, சிறிதும் திருப்தி அடையாதிருந்தார்கள். அப்பால், யுதிஷ்டிர மன்னவன் தத்தம் இருப்பிடங்களுக்குப் போக முயன்ற நண்பர்களையும், ஸம்பந்திகளையும், பந்துக்களையும், ஸ்ரீக்ருஷ்ணனையும் விட்டுப் பிரியப் பொறாமையாலும், ஸ்னேஹத்தினாலும், போகவொட்டாமல் தடுத்தான். 

ஸ்ரீக்ருஷ்ணன், அந்த யுதிஷ்டிரனுக்கு ப்ரியம் செய்ய விரும்பி, ஸாம்பன் முதலிய யது வீரர்களை த்வாரகைக்கு அனுப்பி, தான் அங்குச் சிலநாள் வஸித்திருந்தான். இவ்வாறு தர்மபுத்ரன் மிகவும் கடக்க முடியாத மனோரதமாகிற மஹாஸமுத்ரத்தை, ஸ்ரீக்ருஷ்ணனுடைய அனுக்ரஹத்தினால் கடந்து, மனக்கவலை தீரப் பெற்றான். தன் பக்தர்களைக் கைவிடாமல் பாதுகாக்கும் தன்மையனான பகவானிடத்தில் நிலைநின்ற மனமுடைய யுதிஷ்டிரனுடைய அந்தப்புரத்திலுள்ள ஸம்பத்தையும், ராஜஸூயம் நடந்த பெருமையையும் கண்டு, துர்யோதனன் ஒருகால் பரிதபித்தான் (வருந்தினான்). 

அம்மன்னவனுடைய அந்தப்புரத்தில், பூலோகத்திலுள்ள மன்னவர்கள், அஸுரச்ரேஷ்டர்கள், தேவேந்திரன் முதலிய லோக பாலர்களாகிய இவர்களுக்குள்ள ஸம்ருத்திகளெல்லாம் (செல்வச் செழிப்பெல்லாம்) அமைக்கப்பட்டு விளக்கமுற்றிருந்தன. த்ரெளபதி அத்தகைய ஸம்ருத்திகளுடன் (செல்வச் செழிப்புடன்) தன் கணவனைப் பரிசரித்து (பணிவிடை செய்து) வந்தாள். துர்யோதனன், அந்த த்ரௌபதியிடத்தில் மிகவும் மன விருப்பமுற்றுப் பரிதபித்தான். மற்றும், அப்பொழுது அவ்வந்தப்புரத்தில் நிதம்பத்தின் (இடுப்பின்) பாரத்தினால் மெல்ல மெல்ல ஒலிக்கின்ற சிலம்பு தண்டைகளோடு கூடிய பாதங்களால் சோபையுடன் திகழ்பவரும், இடையில் மிக்க அழகியர்களும், கொங்கைமேல் அணிந்த குங்குமங்களால் சிவந்த ஹாரங்களுடையவர்களும், மிகவும் அழகிய முகமுடையவர்களும், அசைகின்ற குண்டலங்களும், முன்னெற்றி மயிர்களும் அமைந்து விளங்குபவர்களுமாகிய, ஸ்ரீக்ருஷ்ண மஹிஷிகள் (பட்டத்தரசிகள்) அனேகமாயிரக்கணக்கில் உலாவிக் கொண்டிருந்தார்கள். அதுவும் அந்தத் துர்யோதனனுக்குப் பரிதாப (வருத்தத்திற்குக்) ஹேது (காரணம்) ஆயிற்று. 

மயனால் தன் திறமைகளெல்லாம் தோன்றும்படி நிர்மிக்கப்பட்ட ஸபையில், மஹாராஜனாகிய தர்மபுத்ரன், தம்பிகளோடும், பந்துக்களோடும், தனக்குக் கண்ணைப்போல் ஹிதாஹிதங்களை (நன்மை தீமைகளை) அறிவிக்கின்ற ஸ்ரீக்ருஷ்ணனோடும் கூடி, ஓரிடத்தில் ஸ்வர்ணமயமான ஸிம்ஹாஸனத்தில் ப்ரஹ்மதேவனுடைய செல்வத்தோடொத்த செல்வத்துடன் ஸ்துதி பாடகர்களால் துதிக்கப்பெற்று, தேவேந்த்ரன் போல உட்கார்ந்திருந்தான். 

அப்பொழுது, துரஹங்காரமுடையவனும் (வீணான கர்வம் உடையவனும்), கையில் கத்தியைத் தரித்தவனும், கிரீடம், பூமாலை இவை அணிந்தவனுமாகிய துர்யோதனன், ப்ராதாக்களால் (உடன் பிறந்தவர்களால்) சூழப்பட்டு, த்வாரபாலர்களைக் கோபத்துடன் பழித்துக் கொண்டு, அவ்விடம் வந்தான். (சத்ருக்கள் ஜலத்தைத் தரையாகவும், தரையை ஜலமாகவும், ப்ரமிக்கச் செய்யும் தன்மையுடைய அச்சபையுள் நுழைகின்ற) அத்துர்யோதனன் மயனுடைய மாயையினால் மதி மயங்கி, தரையைக் கண்டு ஜலமென்று ப்ரமித்து, அரையாடையைத் தூக்கிக்கொண்டு நடந்தான்; மற்றும், ஓரிடத்தில் ஜலத்தைத் தரையாக ப்ரமித்து, தரையில் நடப்பது போல நடந்து இடரி விழுந்தான். பீமஸேனனும், ஸ்த்ரீகளும் மற்றுமுள்ள ராஜர்களும், அந்தத் துர்யோதனனைக் கண்டு, யுதிஷ்டிர மன்னவனால் வேண்டாமென்று தடுக்கப்பட்டும், ஸ்ரீக்ருஷ்ணனால் அனுமோதனம் (அனுமதி) செய்யப் பெற்றுச் சிரித்தார்கள். அத்துர்யோதனன், வெட்கமுற்றுத் தலையைக் கவிழ்த்துக் கோபத்தினால் ஜ்வலித்துக்கொண்டே, ஒன்றும் பேசாமல் புறப்பட்டு, ஹஸ்தினாபுரத்திற்குப் போனான். 

அப்பொழுது  “ஆ! ஆ! துர்யோதனன் அவமதிக்கப்பட்டான்” என்று பெரிய கோஷம் உண்டாயிற்று. அதற்கு யுதிஷ்டிரன், மன வருத்தமுற்றான். ராஜனே! நீ என்னை எதைப்பற்றி வினவினையோ, அதற்கு இவ்வாறு மறுமொழி கூறினேன். துர்யோதனன், யுதிஷ்டிரனுடைய செல்வப் பெருக்கைக் கண்டு பொறுக்க முடியாமல், பரிதபித்தமையாகிற துர்ப்புத்தித் தனத்தினால் (கெட்ட புத்தியால்) அவமதி அடைந்த விஷயத்தை விசதமாக (விரிவாக) மொழிந்தேன். 

எழுபத்தைந்தாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக