ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 292

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எழுபத்து ஆறாவது அத்தியாயம்

(ஸால்வ வத வ்ருத்தாந்தம்)

ஸ்ரீசுகர்சொல்லுகிறார்:- மன்னவனே! விளையாட்டிற்காக மானிட உருவம் பூண்டிருக்கிற பரமபுருஷனான ஸ்ரீக்ருஷ்ணன், ஸௌபமென்னும் விமானத்தையுடைய ஸால்வனைக் கொன்ற அற்புதமான மற்றொரு வ்ருத்தாந்தத்தையும் சொல்லுகிறேன், கேட்பாயாக.

முன்பு சிசுபாலனுக்கு நண்பனாகிய ஸால்வனும், ஜராஸந்தன் முதலிய மன்னவர்களும், ருக்மிணியின் விவாஹத்தின் பொழுது வந்திருந்தார்கள். அப்பொழுது, அந்த ஸால்வனும், ஜராஸந்தாதிகளும், யாதவர்களால் ஜயிக்கப்பட்டார்கள். அவர்களில் ஸால்வன், ஸமஸ்த ராஜர்களும் கேட்டுக் கொண்டிருக்கையில், “பூமியில் யாதவர்களே இல்லாதபடி அழித்து விடுகிறேன். என் பௌருஷத்தைப் (பேராண்மையைப்) பாருங்கள்” என்று ப்ரதிஜ்ஞை (சபதம்) செய்தான். மூடனாகிய அந்த ஸால்வன், இவ்வாறு ப்ரதிஜ்ஞை (சபதம்) செய்து, தினந்தோறும் ஒரு வேளை ஒருபிடி மண் புழுதியைப் புசித்துக் கொண்டு, ப்ரபுவான பசுபதியை (சிவனை) ஆராதித்தான். 

மஹானுபாவனாகிய அவ்வுமாபதி, இவ்வாறு ஸம்வத்ஸரம் (ஒரு வருடம்) நடந்த பின்பு கடைசியில் சிறிது ஸந்தோஷம் அடைந்து, அவனிடம் வந்து, தன்னைச் சரணம் அடைந்த அன்னவனை வரம் வேண்டும்படி தூண்டினான். அந்த ஸால்வனும், தேவர், அஸுரர், மனுஷ்யர், கந்தர்வர், உரகர், ராக்ஷஸர் இவர்களால் பேதிக்க (சிதைக்க) முடியாததும், நினைத்தபடி செல்லும் திறமையுடையதும், வ்ருஷ்ணிகளுக்குப் பயங்கரமுமாகிய ஒரு விமானத்தைக் கொடுக்கும்படி வேண்டினான். அந்தக் கிரீசனும் (மலையரசனான சிவனும்) அப்படியே ஆகட்டுமென்று மயனுக்குக் கட்டளையிட, சத்ருப் பட்டணங்களை வெல்லும் திறமையுடைய அம்மயனும், இரும்பு மயமாயிருப்பதும், பட்டணம் போன்றதுமாகிய ஸௌபமென்னும் பெயருடைய ஒரு விமானத்தை நிர்மித்து (அமைத்து), ஸால்வனுக்குக் கொடுத்தான். 

அந்த ஸால்வன், இருட்டிற்கு இருப்பிடமாயிருப்பதும், நினைத்தபடி செல்லும் திறமையுடையதும், ஒருவராலும் கிட்ட முடியாததுமாகிய விமானத்தைப் பெற்று, வ்ருஷ்ணிகள் செய்த வைரத்தை (பகைமையை) நினைத்து, த்வாரகைக்குச் சென்றான். 

பரதச்ரேஷ்டனே! ஸால்வன் அளவிறந்த தன் ஸைன்யத்தினால் த்வாரகாபுரியைத் தகைந்து, உபவனங்களையும், உத்யான வனங்களையும் முறித்து பாழ் செய்தான். அவன், கோபுரங்களையும், த்வாரங்களையும், உப்பரிக்கைகளையும், கோட்டையின் மேலுள்ள க்ருஹங்களையும், வெளி வாசற்படிகளையும், வீதிகளையும், விளையாடுமிடங்களையும் இடித்து, பாழ் செய்தான். மற்றும், விமானங்களில் சிறந்த அவனுடைய ஸௌப விமானத்தினின்று ஆயுதங்களாகிற மழைகளும், கற்களும், மரங்களும், இடிகளும், ஸர்ப்பங்களும், விடாமழையும், பறற்கற்களும் வந்து விழுந்தன. மற்றும், கொடிய சுழற்காற்று வீசிற்று. தூட்களால் திசைகளெல்லாம் மூடப்பட்டன. ஸ்ரீக்ருஷ்ணனுடைய பட்டணமாகிய த்வாரகை, இவ்வாறு ஸௌப விமானத்தினால் மிகவும் பீடிக்கப்பட்டு, த்ரிபுரத்தினால் பீடிக்கப்பட்ட பூமண்டலம் போலச் சிறிதும் ஸுகத்தை அடையாதிருந்தது. 

மஹானுபாவனாகிய ப்ரத்யும்னன், தன் ப்ரஜைகள் வதிக்கப்படுவதைக் கண்டு, மஹாரதனும் (10000 வில்லாலிகளுடன் தனித்துப் போர் புரியும் திறமை உடையவனும்), வீரனுமாகையால், பயப்படவேண்டாமென்று ப்ரஜைகளுக்கு ஸமாதானம் சொல்லி, ரதத்தின் மேல் ஏறிக் கொண்டு, ஸால்வனை எதிர்த்துச் சென்றான். அவ்வாறே ஸாத்யகி, சாருதேஷணன், ஸாம்பன், அக்ரூரன், அவன் தம்பிகள், ஹார்த்திக்யன், பானுவிந்தன், கதன், சுகன், ஸாரணன் இவர்களும், ரதிகர்களின் கூட்டங்களை அடக்கியாளும் திறமையுள்ள வீரர்களின் கூட்டங்களையும் அடக்கியாள வல்லவர்களான மற்றும் பல மஹாவீரர்களும், கவசங்களை அணிந்து, தேர், யானை, குதிரை, காலாள் இவைகளால் பாதுகாக்கப்பட்டுப் புறப்பட்டார்கள். 

அப்பால், ஸால்வர்களுக்கு யாதவர்களோடு யுத்தம் நடந்தது. அந்த யுத்தம், முன்பு அஸுரர்களுக்குத் தேவதைகளோடு நடந்த யுத்தம் போல் கேட்போர்களுக்கு மயிர்க்கூச்சத்தை விளைப்பதாகித் துமுலமாய் (கூச்சல், ஆரவாரத்துடன்) இருந்தது. ப்ரத்யும்னன், ஸௌப விமானமுடைய ஸால்வன் ப்ரயோகித்த அம்மாயைகளை எல்லாம் ஸூர்யன் ராத்ரியிலுண்டான இருட்டைப் போக்குவது போல் திவ்யாஸ்த்ரங்களால் ஒரு க்ஷணத்திற்குள் நாசம் செய்தான்; மற்றும், பொற்பிடியும், இருப்பு நுனியும் வளைந்த கணுக்களுமுடைய இருபத்தைந்து பாணங்களால் ஸால்வனுடைய ஸேனாபதியை அடித்தான். மற்றும், ஸால்வனை நூறு பாணங்களாலும், ஸேனையிலுள்ள போர் வீரர்களை ஒவ்வொரு பாணத்தினாலும் உதவி ஸேனாபதிகளையும் ஸாரதிகளையும் பத்து பத்து பாணங்களாலும், யானை முதலிய வாஹனங்களை மும்மூன்று பாணங்களாலும் அடித்தான். 

மஹானுபாவனாகிய ப்ரத்யும்னன் செய்த அவ்வற்புதமான செயலைக் கண்டு, அவன் ஸேனையிலுள்ள வீரர்களும், சத்ரு ஸேனையிலுள்ள வீரர்களும் ஆகிய அனைவரும் அவனைப் புகழ்ந்தார்கள். மயனால் நிர்மிக்கப்பட்டதும், பற்பல மாயைகள் சேர்ந்து ஒரு வடிவம் கொண்டிருப்பதுமாகிய அந்த ஸௌப விமானம், ஒருகால் பல உருவங்களுடையதும், ஒருகால் ஒரு உருவமுடையதும், ஒருகால் புலப்படுவதும், ஒருகால் புலப்படாமல் மறைவதுமாகி, சத்ருக்களால் கண்டுபிடிக்க முடியாதிருந்தது. மற்றும், அந்த ஸௌப விமானம், ஒருகால் பூமியிலும், ஒருகால் ஆகாயத்திலும், ஒருகால் பர்வத சிகரத்திலும் (மலையிலும்), ஒருகால் ஜலத்திலும் (நீரிலும்) புலப்பட்டு நின்ற இடத்தில் நிலை கொள்ளாமல் அலாத சக்ரம் (அலாதம் - கொள்ளி. அதைச் சுழற்றினால் சக்ரம் போல் தோன்றும். அதையே அலாத சக்ரமென்பர்கள்) போல் சுழன்று கொண்டிருந்தது. ஸால்வன், ஸௌப விமானத்தோடும், ஸைன்யங்களோடும், எங்கெங்கு புலப்படுகிறானோ, அவ்வவ்விடங்களில், ஸாத்வத (யாதவ) வீரர்கள் பாணங்களை ப்ரயோகித்தார்கள். 

அக்னி, ஸூர்யன் இவர்களோடு ஒத்த ஸ்பர்சமுடையவைகளும், ஸர்ப்பங்கள் போல் அணுக முடியாதவைகளுமான ஸாத்வத வீரர்களின் பாணங்களால் ஸால்வன் தன் விமானமும், ஸைன்யங்களும் பிளக்கப் பெற்று, மதி மயங்கினான். யதுவீரர்கள், ஸால்வனுடைய ஸேனாபதிகளின் ஆயுத ஸமூஹங்களால் மிகவும் பீடிக்கப்பட்டும், மூன்று லோகங்களையும் ஜயிக்க வேண்டுமென்னும் விருப்பமுடையவர்களாகையால், தத்தம் யுத்தத்தை விட்டுப் போகாமல் நிலை நின்றிருந்தார்கள். 

த்யுமானென்று ப்ரஸித்தி பெற்ற ஸால்வனுடைய மந்த்ரி ப்ரத்யும்னனுடைய அஸ்த்ரத்தினால் மிகவும் பீடிக்கப்பட்டு, அவனருகே வந்து, மிகுந்த பலமுடையவனாகையால், பெரும் பளுவுடையதும், எக்கினால் இயற்றப்பட்டதுமாகிய கதையினால் அவனை அடித்து ஸிம்ஹ நாதம் செய்தான். சத்ருக்களை அடக்குந் திறமையுடைய ப்ரத்யும்னன், கதையின் அடியினால் மார்பு விரிந்து, வருத்தமுற்றிருப்பதைக் கண்டு, ஸாரதியாகிய தாருகபுத்ரன் ஸாரதிகள் நடத்த வேண்டும் தர்மங்களை அறிந்தவனாகையால், அவனை யுத்த பூமியினின்று அப்புறம் கொண்டு போனான். ஸ்ரீக்ருஷ்ணனுடைய குமாரனாகிய அந்த ப்ரத்யும்னன், ஒரு முஹூர்த்தத்திற்குள் ப்ரஜ்ஞையை அடைந்து (நினைவு திரும்பி), ஸாரதியைக் குறித்து இவ்வாறு மொழிந்தான்.

ப்ரத்யும்னன் சொல்லுகிறான்:- ஸாரதீ! நீஎன்னை யுத்த பூமியினின்று அப்புறம் கொண்டு போயினையே; இது யுக்தமன்று. ஆ! இப்படியும் செய்யலாகுமா? யாதவர்களின் வம்சத்தில் பிறந்தவன் தைர்யமற்ற மனமுடைய ஸாரதியால் நிந்தையைப் பெற்ற என்னைத் தவிர மற்ற எவனும் யுத்தத்தினின்று நழுவினதாகக் கேட்டதில்லை. தந்தைகளான ராம, க்ருஷ்ணர்களிடம் சென்று, அவர்களால் வினவப் பெற்று, தர்மம் தவறாத யுத்தத்தினின்று ஓடிப்போன நான், எனக்குத் தகுந்திருக்குமாறு என்ன மறுமொழி கூறுவேன்? என் ப்ராதாக்களின் பத்னிகள், யுத்தத்தில் நேர்ந்த என்னுடைய அதைர்யத்தைச் சிரித்துக் கொண்டு, ஒருவர்க்கொருவர் சொல்லப் போகிறார்கள். இது நிச்சயம். வீரனே! மற்றுமுள்ளவர்களும், என்னைப்பற்றி எப்படியெப்படியோ சொல்லுவார்கள்.

ஸாரதி சொல்லுகிறான்:- ப்ரபூ! ஆயுஷ்மன்! (வளர்ந்த வாழ்நாளுடையவனே!) “ஸாரதி, ஆபத்தை அடைந்த ரதிகனை (தேரில் இருப்பவனை) ரக்ஷிக்க வேண்டும். ரதிகனும் (தேரில் இருப்பவனும்) ஆபத்தை அடைந்த ஸாரதியை ரக்ஷிக்க வேண்டும்” என்கிற தர்மத்தை அறிந்த நான், இவ்வாறு செய்தேன். ஆகையால், நான் உன்னை அப்புறம் கொண்டு போனது தர்மமே. நீ சத்ருவினால் கதையால் அடியுண்டு வருந்தி மூர்ச்சை அடைந்திருப்பதை அறிந்து, உன்னை நான் யுத்த பூமியினின்று அப்புறம் கொண்டு போனேன்.

எழுபத்தாறாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக