ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

கொடை மடம் - முனைவர் இரா.வ.கமலக்கண்ணன்

“கொடை மடம்” என்ற சொல்லுக்கு “வரையாது கொடுத்தல்” என்று பொருள் கூறுகிறது திவாகரம். கண்ணபிரானும் அருச்சுனனும் ஒரு சோலையில் தங்கி இருந்தபோது, அக்கினி பகவான் ஓர் அந்தணர் வேடத்தில் வந்து அவர்களிடம் தான் உண்பதற்கு ஏற்ற உணவளியுங்கள் என்று வேண்டினார். உடனே அவ்விருவரும் “உனக்கு உரிய உணவளிப்போம்” என்றனர். அதைக் குறிப்பிடும் வில்லிபுத்தூர் ஆழ்வார்,

“அரியவாயினும், வழங்குதற்கு ஏற்றன

அல்லவாயினும் தம்மிற் பெரியவாயினும்

அதிதிகள் கேட்டன மறுப்பரோ பெரியோரே”

என்று (காண்டவதகனச் சருக்கம்-3) கூறுகிறார். அதிதிகள் கேட்டன அரிய பொருளாயினும் வள்ளல்கள் வழங்குவர். அதுவும் ஒளவையார் கேட்காமலேயே நீண்ட ஆயுள் தரத்தக்க (அரிய) நெல்லிக்கனியை அதியமான் வழங்கினான்.


தம்மிற் பெரியதை வழங்குதல்: கண்ணபிரான் தூது சென்று அத்தினபுரியில் இருக்கும்போது, இந்திரனை வரவழைத்து, "இந்திரனே! நீ சென்று கர்ணனிடம் கவச குண்டலங்களை தானமாகப் பெற்றுவா'' என்று கூறும்போது,

 “வல்லார், வல்ல கலைஞருக்கும்

 மறை நாவலர்க்கும் கடவுளர்க்கும்

 இல்லாதவர்க்கும் உள்ளவர்க்கும்

 இரந்தோர்தமக்கும் துரந்தவர்க்கும்

 சொல்லாதவர்க்கும் சொல்பவர்க்கும்

 சூழும் சமயாதிபர்களுக்கும்

 அல்லாதவர்க்கும் இரவிமகன்

 அரிய தானம் அளிக்கின்றான்”

 (கிருட்டிணன் தூதுச் சருக்கம்-235)

அவ்வாறே இந்திரன் சென்று பெற்று வந்தான். பின்னர் நடந்த பெரும் போரில் (17-ஆம் நாள் போர்) கர்ணன், விசயன் விட்ட அம்புகளால் உடல் தளர்ந்து, பலவகைத் துன்பத்தோடு இருக்கையில், அவன் செய்த புண்ணியம் அவன் உயிரைக் காத்து நிற்க, உடனே கண்ணபிரான் வேதியர் வேடத்தில் சென்று, “நின்புண்ணியம் அனைத்தையும் உதவுக” என்று கேட்க, உடனே அவன் மகிழ்ந்து, “யான் செய்த புண்ணியம் அனைத்தையும் பெறுக” என்று தாரை வார்த்துக் கொடுத்தான். ஒருவருக்குப் பெரியது அவர் செய்த புண்ணியமே. அதையும் வழங்கிய கர்ணன் “கொடை மடம்” பட வாழ்ந்து சுவர்க்கம் அடைந்தான்.


நன்றி - தினமணி - டிசம்பர் 2019



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக