ஆடாது அசங்காது வா கண்ணா - மும்பை ராமகிருஷ்ணன்

ஆடாது அசங்காது வா கண்ணா - மும்பை ராமகிருஷ்ணன்

கண்ணனின் பெருமைகளைப் பாடியவர்கள் பலர். ராமபக்தரான தியாகராஜரும் "நௌக சரித்ரா' என்று பல பாடல்களைப் பாடியுள்ளார்.

ஆந்திர க்ஷேத்திரக்ஞரும் "முவ்வகோபால' என்னும் முத்திரையில், கோபியர்மீது மிகப்பரிவு கொண்டு மாதுர்ய ரசத்தில் பாடியுள்ளார்.

12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வங்காள ஐயதேவரும் பூரி ஜகன்னாதரால்  ஆட்கொள்ளப்பட்டு, "கீத கோவிந்தம்' என்ற பெயரில் ராதா- கிருஷ்ண விரக பாவங்களைப் பாடினார். (அதன் தத்துவம் உணர்ந்து பாடுபவர்கள் வெகு சிலரே.)

கிருஷ்ணர் பிறந்த அஷ்டமிக்கு அடுத்த வளர்பிறை அஷ்டமியில், விசாக நட்சத்திரத்தில் உதித்தவள் ராதை. அதை ராதாஷ்டமி என்று வடநாட்டில் கொண்டாடுவார்கள். (இவ்வருடம் 29-8-2017).

தமிழகத்தில் பிரதானமான ஆலயங்களில் ராதையைக் காணமுடியாது. ருக்மிணி, சத்யபாமா, கோதை ஆண்டாள் ஆகியோரே இருப்பர். ஆனால் வடநாட்டு கண்ணன் ஆலயங்களில் ராதையே பிரதானம்.

கிருஷ்ணரைப் பாடிய சங்கீதப் பிதாமகர் புரந்தரதாசர் ராதையைப் பாடவில்லை. ஆழ்வார்களின் பாசுரங்களிலும் ராதையைக் காணமாட்டோம். ஸ்ரீமத் பாகவதமே ராதையை சிந்திக்கவில்லை. ஆனால் ராதாகிருஷ்ணன், ராதா மாதவன் என்று பல பெயர்களில் ராதையை நினைக்கிறோம்.

கேரளாவில் நாராயண பட்டத்ரி தன் வாதநோய் நீங்க, பாகவதத்தின் சுருக்கமாக "நாராயணீயம்' பாடினார்

அதில் ராதை இடம்பெறுகிறாள். அதுபோல கிருஷ்ணலீலா தரங்கமும் ராதையை நினைக்கிறது. சைதன்ய, கௌடீய மட ஆசார்யர்கள் ராதை யையும் பாடுவார்கள்.

சங்கீத மும்மணிகளுக்கு முன் வாழ்ந்த ஊத்துக்காடு வேங்கடகவி கண்ணனைப் பற்றி நானூறுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். அதில் ராதையையும் பாடியுள்ளார். திருமலை அன்னமாச்சாரியார் பாடல்கள் 1950-ஆம் ஆண்டுக்குப் பிறகே வெளிவந்ததுபோல, இவர் பாடல்களும் 1950-க்குப் பிறகே நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி என்பவரால் (வேங்கடகவியின் தமையனார் வாரிசு) "ராஸகானம்' என்ற பெயரில் வெளியிடப் பட்டது. இந்தப் பாடல்கள் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழியில் அமைந்தவை. மேடைக் கச்சேரிகளிலும் பாடப்படு கின்றன. ஆனந்தமான பாடல்கள்.

வேங்கடகவி வாழ்ந்த காலம் 1700 முதல் 1765 வரை என்று கணித்துள்ளனர். இவரது அண்ணன் கிருஷ்ணன் என்பவர், பிரதாப நரசிம்மராஜா ஆட்சிக்காலத்தில் (1740-1763) அரசகவியாக இருந்துள்ளார்.

ராமச்சந்திர வாதூலர்- கமலா நாராயணி தம்பதிக்கு மகனாக, ஆவணி மாத மக நட்சத்திரத்தில் மன்னார்குடியில் பிறந்தார் வேங்கடகவி. (இவ்வாண்டு 22-8-2017). அவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் வேங்கட சுப்பிரமணியன். சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால், மாமா வீட்டில் அன்னையுடன் வாழ்ந்தார். கிருஷ்ணய்யர் என்பவரிடம் முதல்படி சங்கீதம் கற்றார். இந்நிலையில் அவர்கள் குடும்பம் மன்னார்குடியிலிருந்து அருகிலிருந்த ஊத்துக்காடு என்னும் கிராமத்திற்கு குடிபெயர்ந்தது.

(ஊத்துக்காடு காளிங்க நர்த்தனக் கண்ணன் ஆலயம் புகழ்பெற்றது. பஞ்சலோகத்தினால் செய்யப்பட்ட ருக்மிணி, சத்யபாமாவுடன் கூடிய கண்ணனின் உற்சவ விக்ரகம் சிறப்பு வாய்ந்தது. நாகத்தின் தலைமேல் கண்ணன் காலூன்றி நின்றிருப்பான். ஆனால் பாதத்துக்கும் நாகத் தலைக்கும் இடையே ஒரு காகிதத் தாளை செலுத்துமளவு இடைவெளி இருக்கிறது.)

சிறுவனான வேங்கட சுப்பிரமணியன் மேலும் சங்கீதம் பயில ஆவல்கொண்டு தாயாரை தொந்தரவு செய்ய, "அந்த காளிங்க கண்ணனிடமே போய்க் கற்றுக்கொள்' என்று கோபமாகச் சொன்னார். அதுவே வேத வாக்காயிற்று. அதன்பின் நடந்தவற்றைக் காணும்முன், ஊத்துக்காடு என்று இப்பகுதிக்குப் பெயர் வந்த காரணத்தைப் பார்த்துவிடுவோம்.

சங்க காலத்தில் ஊத்துக்காடு கிராமத்திற்கு கோவூர் என்று பெயர். சிவ- வைணவத் தலம். அருகில் ஆவூர் என்ற இடத்தில் கயிலைநாதரைப் பூஜிக்க காமதேனு தன் இரு கன்றுகளான நந்தினி, பட்டியை விட்டுச்சென்றது. இரண்டும் அபிஷேகத்திற்கு பாலும், பூஜை செய்ய மலர்களும் கொணர்ந்து ஈந்தன. எனவே ஆவூர் ஈசனுக்கு பசுபதீஸ்வரர் என்று பெயர். அந்தக் கன்றுகளுக்கு நாரதர் கண்ணன் லீலைக் கதைகளைக் கூறுவாராம். கண்ணனின் காளிங்க நர்த்தனக் கதையைக் கூறும்போது கன்றுகள், "ஆகா, அந்த பாலகிருஷ்ணன் காளிங்கன் எனும் பாம்பால் எவ்வளவு கஷ்டப்பட்டி
ருப்பான்' என்று அழுது அப்படியே மூர்ச்சையாயின. நாரதர் அவற்றை எழுப்பி, "கண்ணனுக்கு எதுவும் ஆகவில்லை; அவனே வென்றான்' என்று கூறி, அங்குள்ள குளத்தில் காளிங்க நர்த்தன தரிசனம், கிருஷ்ண தரிசனம் காட்ட, கன்றுகள் தரிசனத்தால் மகிழ்ந்தன. எனவே அந்த இடம் "தேனுஸ்வாஸபுரம்'. தமிழில் மூச்சுக்காடு. அதுவே ஊற்றுக்காடு என்றாகி பின்னர் ஊத்துக்காடு என்றானது.

தாயின் வாக்குப்படி வேங்கட சுப்பிரமணியன் அழுதுகொண்டே காளிங்க நர்த்தனனிடம் சென்று சங்கீதம் கற்பிக்க வேண்டினான். கண்ணன் கூறினானாம்- (அர்ச்சகரும் கேட்டு வியந்தாராம்)- "உன் வீட்டு முற்றத்தில் துளசி மாடம் அருகே அமர்ந்துகொள். நான் குருவாக இருந்து உனக்கு பாடல் கற்பிப்பேன்.'

அதன்பிறகு விதவிதமான ராகத்தில்- விதவிதமான நடையில் வடமொழியிலும் தமிழிலும் பாடல்கள் பிறந்தன. வேங்கட சுப்பிரமணியன் வேங்கடகவியானார்.

மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் கூறுவார்- "சிவன் அவன் சிந்தையுள் நின்ற அதனால், அவன் அருளாலே அவன்தாள் வணங்கி, சிந்தை மகிழ சிவபுராணந்தனை உரைப்பன் யான்.' 

அவ்விதமே இங்கும் என உணரவேண்டும். மூன்று வயது ஞானசம்பந்தர் எவ்வாறு "தோடுடைய செவியன்' என்று தொடங்கி தலம்தலமாக தேவாரம் பாடினார்? பகவான் அருளால் எதுதான் நடக்காது!

வேங்கடகவியின் சில பல்லவிகளை நினைப்போமா! சங்கீத ரசிகர்கள், கண்ணபக்தர்கள் கேட்டு, பாடி யிருப்பார்கள்.

"ஆடாது அசங்காது வாவா கண்ணா- உன்
ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்து அசைந்தாடுதே!'

"அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்'

"முத்து க்ருஷ்ண மே முதம்
முகுத்த மாதவ ராஸ களேபர'

ப்ருந்தாவன நிலயே- ராதே
பிருத்தஹாரதர க்ருஷ்ண மனோஹரி
நிந்திதேந்து முக பிம்ப கலாதரி'

"ராதே க்ருஷ்ணம் சிந்தயேஹம்'

"கானம் கிருஷ்ண கானம்
காதென்றிரண்டு படைத்தாலிதைக் கேட்க வேண்டும். (கிருஷ்ண).'

கண்ணனை நேருக்குநேர் தரிசிக்க வேண்டுமென்பது வேங்கடகவியின் ஆசை. ஒருநாள் ஆழ்ந்து பாடிக் கொண்டிருந்தபோது, அடுத்த வீட்டுக்குழந்தை மடியில் வந்து உட்கார்ந்தது. தம்புரா ஸ்ருதி மீட்ட அது இடைஞ்சலாக இருந்ததால், குழந்தையைத் தள்ளினார். அது நகரவில்லை. சிறிதுநேரம் கழித்து அவர் கண் திறக்க, குழந்தை எழுந்தது. குழலோசை கேட்டது. கண்ணதரிசனம்! அப்போது பாடிய பாடலே "ஆடாது அசங்காது வாவா கண்ணா'.

ஸ்ரீருத்ரசப்தம் என்று சிவன்மீது ருத்ரபூமியில் (மயானத்தில்) இரவில் பாடினார். இதனை செவியுற்ற நாதஸ்வர வித்வான் ருத்ரபிள்ளை அதனைப் பயின்று ஒரு கல்யாண அழைப்பின்போது வாசிக்க, அதைக்கேட்டு கவி நெகிழ்ந்தார்

தியாகராஜர் பாடல்களை திராட்சை என்பர். சுலபமாகப் பாடலாம். ஸ்யாமா சாஸ்த்ரி பாடல்களை வாழைப்பழம் என்பர். உரித்து சாப்பிடலாம். தீட்சிதர் கிருதியை தேங்காய் என்பர். சுலபமாகக் கிடைக்குமா? சிரமப்பட வேண்டும். வேங்கடகவி பாடல்களை மாம்பழம் என்பர். தோலுடனோ தோல் நீக்கியோ சாப்பிட இனிக்கும். ஆனால் பிரயாசைப்பட வேண்டும்; சுலபமாகப் பாடமுடியாது. அதனால் பலாப்பழம் என்றும் கூறுவர். அவர் பாக்கள் நடனத்துக்கும் உகந்தவை.

சம காலம், மத்யம காலம், துரித காலம், வெகுதுரித காலம் என ஒரு பாட்டிலேயே வினோதங்கள். வடநாட்டு ராகங்களும் உண்டு. ராகமாலிகையும் உண்டு. தஞ்சை அருகே இருந்ததால், மராட்டிய மன்னர் ஆண்டதால் தமிழ்நாட்டு மராட்டிய பாணி யிலும் பாடல்கள் உண்டு.

ஆதிசங்கரரின் ஷண்மதம்போன்று உருவபேதம் பாராமல், தலம்தலமாகவும் பாடினார். விநாயகர், ராமர், சிவன், விஷ்ணு, முருகன், ரங்கனாதர், பார்த்தசாரதி, சரஸ்வதி, அம்பாள், நரசிம்மர், பரசுராமர், வீரபத்ரர், சூரியன், யமுனை, ஆஞ்சனேயர் என பலரூப தெய்வப் பாடல்கள்

வேங்கடகவிக்குப் பின் வந்த முத்துஸ்வாமி தீட்சிதர் கமலாம்பாள் நவாவரணம் பாடினாரென்றால், முன்பே இவர் காமாட்சிமீது நவாவரணம் பாடியுள்ளார். அற்புதமான கீர்த்தனைகள். பஜனை சம்பிரதாயத்திற்கு உகந்த ராதா கல்யாணம், ருக்மிணி கல்யாணம், மீனாட்சி கல்யாணம் பாடியுள்ளார். மணக்கும் பாடல்கள். "ராமஜெயமே ஜெயம்' என்று ராகமாலிகையில் ராமாயணம் முழுவதையும் பாடியுள்ளார். சுலோகங்களும் உண்டு. அவர் பாடல்களில் துருவசரிதம், பிரகலாத சரிதம், காரைக்கால் அம்மையார், பாணாழ்வார், நாமதேவர், துகாராம சரிதம் என பலவும் உண்டு.

"தேரோடும் வீதியிலே' என்று கம்ஸன், தேவகி, வசுதேவர் ஊர்வலம் ஆரம்பித்து, "ருக்மிணி கல்யாணம்' வரை 100 பாக்களில் ஸ்ரீமத் பாகவதமே வருகிறது. கண்ணபக்தர்களுக்கு அமிர்தம்.

வேங்கடகவி பல தல தரிசனத்திற்காகச் சென்று இறுதியில் நர்மதையில் மறைந்ததாகத் தெரிகிறது. பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார்.

கண்ணன் அருளால் வேங்கடகவியின் பாடல்களைக் கேட்டு நெக்குருகும் வாய்ப்பு இன்று நமக்குக் கிடைத்திருப்பது காலம் நமக்குத் தந்த கொடையே!

நன்றி - ஓம் சரவணபவ

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை