ஸ்ரீமந்நாராயணன் தர்மத்தை நிலைநிறுத்த எடுத்த அவதாரங்களில், ஆவணி மாதம் சுக்கிலபட்சம் திருவோண நட்சத்திரத்தில் அவதரித்து மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூவடி நிலம் கேட்டு யாசித்த வாமனாவதாரமும் ஒன்று.
ஆனால், வாமனன் கேட்டபடி மகாபலியினால் மூன்றடி நிலம் தர முடிந்ததா என்றால், இல்லையென்றே கூறலாம். அப்படியானால் வாமனனாக வந்த பகவான் மூன்றடி அளக்கவில்லையா என்ற கேள்வி எழலாம். அதற்கு விடை காணும் முன்பாக, பகவானின் வாமனாவதாரம் தோன்றியதன் பின்னணியைப் பார்ப்போம்.
பிரகலாதனின் பேரன்தான் இந்திரசேனன் என்ற மகாபலிச் சக்கரவர்த்தி, அவன் மிக்க வலிமை பெற்றிருந்ததால் மாவலி என்ற பெயரும் பெற்றான். இவனும் இவனைச் சேர்ந்த அசுரர்களும், அமிர்தம் பெறுவதில் தேவர்களுக்கு உதவி செய்தனர்.
அமிர்தம் கிடைக்கப்பெற்றதும், தேவர்கள் மகாபலியையும், அசுரர்களையும் ஏமாற்றி மொத்த அமிர்தத்தையும் அவர்களே எடுத்துக்கொண்டதுடன், மகாபலி உள்ளிட்ட அசுரர்கள் அனைவரையும் கொன்றுவிட்டனர்.
ஆனால், அசுரகுருவான சுக்ராச்சாரியார் தனக்கு மட்டுமே தெரிந்த சஞ்சீவினி வித்தையின் மூலமாக மகாபலியையும், மற்றவர்களையும் உயிர்த்தெழச் செய்தார். பின்னர் விஸ்வஜித் என்ற யாகம் செய்து, அதன்மூலம் மூவுலகையும் தனதாக்கிக்கொள்ள மாவலிக்கு உதவினார். யாகத்திலிருந்து தனது குருவின் அருளால் தனக்குக் கிடைக்கப் பெற்ற திவ்விய ஆயுதங்களுடன் போரிட்டு, அவர்களைத் தோற்கடித்து மூவுலகையும் தனதாக்கிக் கொண்டான்.
மாவலியின் வல்லமை கண்டு தேவர்கள் அஞ்சி ஓடி ஒளிந்தனர். தேவர் தலைவனான இந்திரன் மற்ற தேவர்களுடன் சென்று தேவகுருவிடம் முறையிட்டான். தேவகுரு பிரகஸ்பதி அவர்களிடம், “ஆசார்ய அனுக்கிரகத்தினால் மாவலி பெரும் சக்தி பெற்றுத் திகழ்கிறான். அவனைத் தோற்கடிக்க வேண்டுமென்றால், அது திருமாலினால் மட்டுமே முடியும். எனவே நீங்கள் திருமாலிடம் சரணடையுங்கள்” என்று கூறினார்.
தேவர்கள் திருமாலிடம் சென்று முறையிட, திருமால், “மகாபலி பூரண ஆசாரிய அனுக்கிரகம் பெற்றவன். அவனை இதேநிலையில் வெற்றி கொள்ள இயலாது. ஆசாரியரால் எப்போது சபிக்கப் பெறுகிறானோ அப்போதே அவனை வெல்ல முடியும். எனவே, காலம் கனிந்து வர காத்திருங்கள்” என்று கூறி விட்டார். எனவே, தேவர்கள் மறைந்து வாழ்ந்தனர்.
தேவர்களின் அன்னையான அதிதி தமது மைந்தர்கள் படும் துயரினால் வருத்தமுற்று, தியானத்தில் ஆழ்ந்திருக்கும் தனது பதியான காஸ்யபரின் தியானம் கலையக் காத்திருந்தாள்.
தியானத்திலிருந்து திரும்பிய காஸ்யபர் தமது துணையான அதிதியின் முகவாட்டம் கண்டு நடந்தவற்றைத் தெரிந்து கொண்டார். அதிதியின் வருத்தம் தீரும் விதத்தில், “தேவி! இந்தத் துயரத்திலிருந்து நீ விடுபட ஒரு வழி உண்டு. முன்னர் பிரம்மதேவரால் எனக்கு உபதேசிக்கப்பட்ட பயோவிரதம் என்னும் விரதத்தை மேற்கொள். அதை பக்தியுடனும், சிரத்தையுடனும் அனுஷ்டித்தால் உனக்கு பகவானே குழந்தையாகப் பிறக்கும் பேறு கிடைக்கும். அதன்மூலம் உன் துயரத்துக்கும் முடிவு ஏற்படும்” என்றார்.
அதன்படி அதிதி தேவியும் பக்தி சிரத்தையுடன் பன்னிரண்டு தினங்கள் பயோவிரதத்தை மேற்கொண்டு, பதின்மூன்றாவது நாள் பூர்த்தி செய்தாள். பகவான் அவள்முன் தோன்றி, “நானே உனக்குப் பிள்ளையாகப் பிறந்து, உன் மக்கள் குறையைத் தீர்த்து வைக்கிறேன்” என்று அருளினார்.
அதன்படி ஆவணி மாதம் வளர்பிறை திருவோண நட்சத்திரத்தில் அதிதி தேவி திவ்யசொரூபத்துடன் கூடிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். காஸ்யப முனிவர், ‘ஜயஜய’ என்ற மங்கல ஒலி எழுப்பி, பெருமானை ஸ்தோத்திரம் செய்தார். குழந்தையாக அதிதி தேவிக்குப் பிறந்த பகவான் சற்று நேரத்திலேயே ஐந்து வயது பாலகனாக உருமாறி நின்றான். பகவானுடைய மனம் அறிந்த காஸ்யபர் குழந்தைக்கு உபநயனம் செய்வித்தார். பிரம்மதேவர் பிரம்மபதம் வகிக்க, பார்வதி தேவி பிக்ஷையிட, அன்னை அதிதி கௌபீனம் அளிக்க, சூரியன் காயத்ரி மந்திரத்தை உபதேசிக்க, தேவர்கள் ஒவ்வொருவரும் பலாச தண்டம், மௌஞ்சி, கிருஷ்ணாஜினம், குடை, சமித்துகள், வஸ்திரம் முதலியவற்றைக் கொடுக்க, பிரகஸ்பதி உபநயனம் செய்து வைத்தார். பின்னர் வாமன வடிவிலிருந்த பகவான், நர்மதையின் வடகரையில் பிருகுகச்சம் என்ற இடத்தில் யாகம் இயற்றிக் கொண்டிருந்த மாவலிச் சக்கரவர்த்தியின் யாகசாலைக்குச் சென்றார்.
தூரத்தில் வந்துகொண்டிருந்த அழகிய அருள்வடிவினனாய்த் தோன்றிய வாமனனின் வடிவழகில் மயங்கிய மாவலிச் சக்கரவர்த்தி, வாமனனுக்கு ஆசனம் தந்து அமரச்செய்து, “வேதியர் வேந்தே! தங்களுடைய நல்வரவும், யாகத்தில் தானம் செய்யும் நேரமும் ஒருசேர நேர்ந்துள்ளது. தங்களைப் பார்த்தாலும் ஏதோ வேண்டி வந்தவர் போல் காணப்படுகிறீர். தாங்கள் எது கேட்டாலும் தருகிறேன்’’ என்றான்.
வாமனன் தன் திருவடியால் மூவடி நிலம் கேட்டான்.
மாவலியோ அது தனது தானத்தின் சிறப்புக்கு இழிவு சேர்க்கும் என்றான். வாமனனோ அதுவே தனக்குப் போதுமென்றான். மாவலி அரை மனத்தினனாய் அதற்குச் சம்மதித்தான்.
வந்தவன் மாமாயன், மாலவன் என்றுரைத்த அசுர குரு, மாவலி வாமனனுக்குச் செய்யவிருந்த தானத்தைத் தடை செய்தார். ஆனால் மாவலியோ, தன்னிடம் யாசிப்பது பகவான் என்றால் அது தனக்குப் பெருமை என்று கூறியவனாக வாமனனுக்குத் தாரைவார்த்து தானம் செய்ய முனைந்தான்.
தானம் பூர்த்தியடையும் முன்பு, கண்ணிமைக்கும் நேரத்தில், சாய்க்கப்பெற்ற தங்கக் கிண்டியின் மூக்கை வண்டாக மாறி அடைத்துக் கொண்டார் சுக்கிராச்சாரியார். தாரை வார்த்து தானம் செய்யத் தண்ணீர் வரவில்லை. வாமனன் கையிலே போட்டிருந்த தர்ப்பை பவித்திரத்தின் நுனியினால் கிண்டியின் மூக்கைக் கிளறி நீர் வரச் செய்தான். நீர் வெளிப்பட தானம் பூர்த்தியானதுடன், வண்டின் வடிவம் கொண்டிருந்த சுக்ராச்சாரியார் கண்பார்வை இழந்தார்.
தானத்துக்கு வார்த்த நீர் பூமியைத் தொட்டது தான் தாமதம், வாமனன் நெடிது வளர்ந்து ஏழுலகங்களுக்கும் அப்பால் உயர்ந்து நின்றார். இந்த விஸ்வரூபத்தைக் கண்டு மாவலி வியந்து நின்றான். பகவானுடைய ஒரு திருவடி பூமி, பாதாளம் இவைகளை அளந்தது. மற்றொரு திருவடி எல்லா உலகங்களையும் அளந்துகொண்டு சத்யலோகம் வரை சென்றது. ஆக, ஈரடியினால் லீலாவிபூதி முழுவதும் அவரால் அளக்கப் பெற்றது.
பின்னர் மாவலியை நோக்கிய பகவான், “நீ ஆக்கிரமித்துள்ள மூவுலகங்களையும் எனது ஈரடியால் அளந்து விட்டேன். மூன்றாவது அடி எங்கே என்று கேட்க, மாவலி வெட்கித் தலை குனிந்தவனாய்,
“ஐயனே! நான் தண்டனைக்கு அஞ்சவில்லை. ஆனால், பொய்யன் என்ற அபவாதத்துக்கு அஞ்சுகிறேன். நீர் உமது திருவடியை என் தலை மீது வைத்து அதனை மூன்றாவது அடியாகக் கொண்டு என்னைச் சத்தியத்திலிருந்து மாறாதவன் என்ற பேற்றினை எனக்கு அருள வேண்டும்” என்றான்.
ஆனால், பகவானின் நோக்கமறிந்த கருடன், மாவலியை வருண பாசத்தினால் கட்டினான். தேவர்கள் பூமழை சொரிந்து, “இது பேரதிசயம்! இவன் தன் ஆசாரியன் தடுத்தும் கேளாமல் உயிருக்கு அஞ்சாமல் சத்தியத்தைக் காத்தானே!” என்றனர். அப்போது பாட்டனான பிரகலாதன் அங்கு தோன்றினார். பகவானிடம், “என்னுடைய பேரனுக்கு இந்தத் தண்டனையால் அனுக்கிரகமே செய்திருக்கிறீர்கள்” என்றார்.
மாவலிச் சக்கரவர்த்தி தண்டனை பெற்ற காரணத்தினால் மூன்றடி நிலம் பகவானால் அளக்கப் பெறவில்லை என்பது உறுதிபடுகிறது. ஆனால், இங்கு நமக்கு ஒரு சந்தேகம் தோன்றுகிறது. அதாவது வேதங்கள் யாவும் பகவான் மூன்றடி அளந்தார் என்று சொல்ல, ஆழ்வாரும் ஆண்டாளும், `குறளனாய் வந்த எம்பெருமான் ஈரடி அளந்தான் மூன்றாவது அடி தராத மாவலியைத் தண்டித்தான்’ என்று அருளியுள்ளனரே... இதில் எது சரி என்பதே அந்த சந்தேகம்.
இதே சந்தேகம் தோன்றிய நம்பிள்ளையின் சீடர்கள் அவரிடம், “புராணங்கள் மூவடி அளந்தான் என்று சொல்ல, ஆழ்வாரும், ஆண்டாளும் ஈரடியே அளந்தான் என்கின்றனவே எப்படி?” என்று கேட்க, நம்பிள்ளை அவர்கள், “அவன் ஈரடி அளந்தான் என்பதும் உண்டு. ஈரடி அளந்ததை உலகம் அறியும். மூன்றாவது அடிவைப்பை அவனே அறிவான்’’ என்று கூறி, அதற்குச் சான்றாக, “பெரியோனாய் வளர்ந்த, அளவிடற்கரிய பெருமைகளைக்கொண்ட இறைவனே! உனது இரண்டு அடிவைப்புகளை யாம் அறிவோம். இதற்கடுத்த மூன்றாவது அடி வைப்பை நீயே அறிவாய்” என்னும் விஷ்ணுஸுக்த ஸ்தோத்திரத்தைக் கூறினார்.
ஈரடியை மட்டுமே உலகத்தவர் அறிய முடியுமென்றால் மூன்றாவது அடிவைப்பு எங்கே நிகழ்ந்திருக்க முடியும்?
பகவான் அளந்த இரண்டு அடிகளில்... பூமி உட்பட ஈரேழு பதினான்கு லோகங்களும் அவரின் திவ்ய திருவடி ஸ்பரிசம்பட்டு மகிழ்ந்தனவாம். இவற்றைப் போன்று அளவில் மும்மடங்கு பெரிதாகப் பரந்து விரிந்திருக்கும் வைகுண்ட லோகத்தில் உள்ள பிராட்டிமார்களுக்கும், நித்யசூரிகளுக்கும், வீடுபேறு அடைந்த முக்தி ஆத்மாக்களுக்கும் அருள நினைத்து, அந்த நினைப்பினாலேயே, மாவலிக்குச் சிறிதும் தொடர்பில்லாத வைகுண்ட லோகத்தை மூன்றாவது திருவடியால் அளந்தார் என்று சிலாகித்துச் சொல்வார்கள் பெரியோர்கள்.
எனவேதான் தைத்ரீய உபநிஷதம், “இரண்டு அடிவைப்புகளை இறக்கும் தன்மையுள்ள மனிதன் அறிந்து போற்றுகிறான். அதற்கு மேலுள்ள மூன்றாவது அடிவைப்பை உலகில் எங்கும் உயர்ந்து பரவி வீசுகின்ற வாயுகணங்களோ, அனைத்து இடங்களிலும் செல்ல வாய்ப்புள்ள பறவை இனங்களோ அறிய முடியாது” என்கிறது.
இவ்வாறு எம்பெருமான் லீலாவிபூதியைத் தனது இரண்டு அடிவைப்புகளாலும், அதைப்போல் மும்மடங்கு பெரிய வைகுண்ட லோகத்தை ஓர் அடிவைப்பினாலும் அளந்து, தனது ஸ்பரிசத்தின் பரமானந்தத்தை உலகத்தவர்களுடன் வைகுண்டவாசிகளும் பெறச் செய்தார் என்பதே இதன் தத்துவம்.
நன்றி - சக்தி விகடன்