செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

பிற தேவதாந்தரத்தை ஏன் ஸேவிக்கக் கூடாது? - ஶ்ரீ உ.வே. நாவல்பாக்கம் கண்ணன் ஸ்வாமிகள்

எட்டு காரணங்கள்:

நாராயணனார்க்கே நாம்” என்பது தேசிகர் வாக்கு. இதில் ‘’ என்று ஒரு ஏவகாரம் இருக்கிறது. தேவதாந்தர த்யாகம் இதன் அர்த்தம்.

இதையும் சரிவரப் புரிந்து கொள்ளாதவர் பலர். ஏன் பலருக்கு வேலைக்காரனாக இருந்தால் என்ன? ஒரே நாளில் பல வீடுகளில் பணி புரியும் வேலைக்காரிகள் இல்லையோ? வருஷாவருஷம் உத்தியோகம் மாற்றிக்கொண்டு பல எஜமானர்களிடம் பணி புரியும் படித்தவர்கள் இல்லையோ? என்று வாதிப்பவர்களே பரவாயில்லை, வேறு சிலரோ ஒருவனுக்கே அடிமை என்பது குறுகிய மனப்பான்மை. பரந்த மனப்பான்மை கொண்டவர்கள் எல்லாத் தெய்வங்களையும் வணங்குவார்கள். நம்மை விடத் தெய்வங்கள் உயர்ந்தவை தாமே? என்றெல்லாம் நம் சித்தாந்தத்தைக் குறை கூறிச் சாடுபவர்களும் இருக்கிறார்கள். அதனால் ‘’ என்றதன் பொருள் விளக்கம் நமக்கு மிக முக்கியம் ஆகிறது. நாராயணனுக்கே என்றால் வேறு எந்தத் தேவதைக்கும் நாம் கிடையாது என்று அர்த்தம். சாஸ்திர பரிபாஷையில் இதை ‘அந்ய யோக வ்யவச்சேதம்’ என்பார்கள், வேறொன்றோடு தொடர்பறுத்தல் என்று அர்த்தம்.

மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு உற்றிலேன் உற்றதும் உன்னடியார்க்கடிமை” என்றும், “உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள் அவனையல்லால்” என்றும் ஆழ்வார்கள் போதித்த அறிவுரையை காரணங்களுடன் புரியும்படி அலசுவது இங்கு நோக்கம். எட்டு காரணங்கள்:

1. உறவு 
2. அறிவு 
3. தகுதி 
4. சாயை அழிவு 
5. கற்பு நெறி 
6. துளை 
7. பாவம் 
8. பயனின்மை.


இந்த எட்டு காரணங்கள், ‘ஒருவனுக்கே நாம்’ என்பதில். இவற்றை ஒவ்வொன்றாகக் கேட்போம். முதலில் உறவு என்ற காரணம்.

நமக்கு மற்ற தேவதைகள் உறவினர் கிடையாது. எம்பெருமானோ சர்வவித பந்து. “த்வமேவ மாதா ச பிதா த்வமேவ த்வமேவ பந்துஷ்ச்ச குருஸ் த்வமேவ |” என்று பலவிதங்களில் பந்துவானவன். மேலும் அவனுடன் உறவு நித்ய சித்தம். என்றும் இருக்கும் உறவு. இதை ஆண்டாள், “எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம்” என்பாள். இந்த ஜன்மத்து மாதா பிதாக்கள் அடுத்த ஜன்மத்தில் நமக்கு உறவின்றிப் போகிறார்கள். ஆனால் எல்லா ஜன்மங்களிலும் நம்மோடு உறவு கொண்டிருப்பவன் சர்வேஸ்வரன். அதனால் ஒழிக்க ஒழியாத உறவு. இது முக்கியக் காரணம் ஆகிறது நாம் அவனுக்கு அடிமை செய்வதற்கு. குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது என்று அவனிடம் வாதிக்கலாகும் இந்த உறவைக் காரணம் காட்டி. இந்திரன் வருணன் முதலியவர்களோடு நமக்கு இப்படிப்பட்ட உறவு கிடையாது. அவர்கள் யாரோ நாம் யாரோ. “உறவித்தனை இன்றி ஒத்தார் என நின்ற உம்பரை நாம்” என்று அதிகார சங்கிரஹம். ஒத்தார்: நம்மைப் போல அவர்களும். அவர்களுக்காக நாம் ஏன் ஆகப்போகிறோம்? ஊஹூம். நாராயணனார்க்கே நாம். இது முதல் காரணம்.

இங்கு ஒரு கெட்டிக்காரன் ஆக்ஷேபிக்கிறான். நமக்கும் சிவனுக்கும் ஒரே பிதாவாக நாராயணன் இருந்தால், அதிலிருந்தே நமக்கும் சிவனுக்கும் உறவு வந்துவிடுமே என்று. அந்த வாதம் சரியன்று. குயவனுடைய பிள்ளைக்கும் குயவன் பண்ணுகிற மண்பாண்டத்துக்கும் என்ன உறவு? அது போல, தேவர்கள் மனுஷ்யர்கள், தாவரங்கள், விலங்குகள், என்ற நாலு இனங்கள் வெவ்வேறாக இருக்கும்போது, ஒன்றுக்கொன்று என்ன உறவு இருக்க முடியும்?

அடுத்து இரண்டாவது காரணம், அறிவு என்பது. ப்ரஹ்மாணம்சிதிகண்டம் சயாஸ் சான்யா தேவதாஸ் ஸ்ம்ருதா: | பிரதிபுத்தா ந ஸேவந்தே | என்று பாரதச்லோகம். பிரதிபுத்தா: என்றால் நல்லறிவாளர் என்று அர்த்தம். அறிவால் ஆர்ந்தவர்கள் (இது மும்மணிக்கோவைப் பதம்) நல்ல அறிவை உடையவர்கள் ப்ரஹ்மாவையோ சிவனையோ வேறு தேவதைகளையோ ஸேவிப்பதில்லை. காரணம், அல்பப்பலன் வேண்டாம். அறிவோடு தொடர்பு கொண்டது தேவதாந்திர த்யாகம். மும்மணிக் கோவையிலும் இதே காரணத்தை வெளிப்படையாக அறிவிக்கிறார். நாராயணனார்க்கே நாம்; வேறு எவருக்கும் நாம் கிடையாது. ஏன் என்றால் ஆமறிவால் ஆர்ந்து இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம். புத்தி அறிவு. புத்தர் அறிந்தவர். பிரதிபுத்தர் ஆம் அறிவையும் ஆர்ந்த அறிவையும் கொண்டவர். அவர்கள் ஆராய்ந்து பார்க்கிறார்கள். அதனால் ப்ரஹ்மாவையும் விஷகண்டனையும் மற்ற தேவதைகளையும் ஸேவிப்பதில்லை. 

நாராயணனார்க்கே நாம் என்ற உறுதியுடன் அனன்ய பக்தர்களாக இருக்கிறார்கள். “குன்றம் போல் மணிமாட நீடு திருக்குருகூர் அதனுள் நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே” என்று பிறர்க்கும் போதிக்கிறார்கள் இந்த பிரதிபுத்தர்கள். இது இரண்டாவது காரணம். “மற்றுமோர் தெய்வமுண்டே மதியிலா மானிடங்காள்” என்ற திருமாலைப் பாசுரத்தில் மதியிலா என்ற பதத்தைக் கவனிக்க வேண்டும். அறிவு இருந்தால் அந்நிய தேவதையைத் தொழலாமா?

அடுத்து மூன்றாவது, தகுதி என்பது. பூசிக்கப்படும் தகுதி பரமாத்மாவுக்கு மட்டும் தான் உண்டு. அவன் உண்டுமிழ்ந்த எச்சில் தேவர்களுக்கு அந்தத் தகுதி அடியோடு கிடையாது. இதை நம்மாழ்வார் இப்படி விளக்குவார். “பூவில் நான்முகனைப் படைத்த தேவன் எம்பெருமானுக்கல்லால் பூவும் பூசனையும் தகுமே?” இந்தப் பாசுரத்தின் அர்த்தத்தைக் காட்டியல்லவா திருமலைநம்பிகள் உள்ளங்கை லிங்கம் கொணர்ந்த நாயனார் ஆன கோவிந்தரை மீண்டும் வைணவராக்கிக் கொண்டார்? அவர் (கோவிந்தர்) காளஹஸ்தியில் சிவனுக்குக் கைங்கர்யம் பண்ணிக் கொண்டிருந்த போது அவருக்குத் தாய்மாமன் ஆன ஸ்ரீசைலபூர்ணர் ராமானுஜரின் யோசனைப்படி அவரைத் திருத்த முயன்றாரே, அப்போது இந்தப் பாசுரம் அவருக்குக் கை கொடுத்தது. நம்மை ஆளுடைய தகுதி நாராயணனுக்கு மட்டுமே. தகுமே? என்ற கேள்வியான இதைக் கேட்டு “தகாது, தகாது” என்று சொல்லி கோவிந்தர் ஓடோடி வந்து பெரியவர் காலில் விழுந்து, தன்னுடைய பழைய வைணவக் கூடாரத்துக்குத் திரும்பினார் என்று வரலாறு. இது மூன்றாவது காரணம் நாராயணனார்க்கே நாம் என்பதற்கு.

அடுத்து நாலாவது, நின் சாயை அழிவு என்பது. நாம், வைணவர்களாகிய நாம், தேவதாந்தரங்களை சேவித்தால், அது நம் மூலமாக எம்பெருமானுக்கு அவத்யத்தை ஏற்படுத்தும் முயற்சி ஆகும். நாம் அவனுக்கு இழைக்கும் த்ரோஹம் அபசாரம் ஆகும். ராஜபத்நீகள் சாதாரண பிரஜைகளிடம் பிச்சைக்குப் போகலாமோ? “இனிப் போய் ஒருவன் தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய்” என்கிறார் பெரியாழ்வார். ஏதோ அறியா நாட்களில் அந்தத் தப்பைப் பண்ணினால் மன்னிக்கலாம். இனிப்போய், வைணவ தத்வம் உபதேசம் பெற்ற பிறகு போய், கண்ட இடத்திலும் பணிந்து நின்றால், அது நம்மை மட்டும் சிறுமைப்படுத்திக் கொள்ளாமல் நம் ஸ்வாமியான எம்பெருமானையும் சிறுமைப்படுத்தியதாகும். அது மகாபசாரம் அல்லவோ? எந்த தேவதையையுமே பணியாத நாத்திகனே பரவாயில்லை போல் இருக்கிறதே, கண்ட தேவதையையும் பணிந்து அதனால் பெருமாளின் சாயையை அழிக்க முற்படுவனை விட. வேண்டாம், நம்மால் நம் பெருமானுக்கு சாயை அழிவு ஏற்பட வேண்டாம்.

ஐந்தாவது, இது பாதிவ்ரத்யம் போல். கற்பு நெறி பிறழலாமோ? நமக்குப் பெருமாளோடு ஆத்ம விவாஹம் அல்லவா சரணாகதி என்பது? அவனுக்கு வாழ்க்கைப்பட்ட வதூ ஆன பிறகு பர புருஷனை ஏறெடுத்தும் பார்க்கலாமோ? சரணாகதிக்கு முன்னரும் கூடக் கூடாது. நம் கணவன் ஆகப் போகிறவன் இருக்க, பிற புருஷர்களை சீந்துவது கூடாது.

கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல்” நாம் வாழ வேண்டும். இது குலசேகரர் கூறிய அறிவுரை.

“அஹம் மத்.... ஸ்ரீபதேரேவ” | “என்னுடைய திருவரங்கற்கன்றியும் மற்றொருவருக்கு ஆளாவரே” என்ற ஸூக்திகளையும் காணவும்.

பாவம். ஸப்தர்ஷிஸம்வாதத்திலும்

विष्णुं ब्रह्मण्यदेवेशं सर्वलोकनमस्कृतम्
विहाय स भजत्वन्यं बिसस्तैन्यं करोति यः इतिहाससमुच्चये

விஷ்ணும் ப்ரஹமண்ய தேவேசம் ஸர்வலோக நமஸ்க்ருதம் |
விஹாய ஸ பஜத்வந்யம் பிஸ ஸ்தைந்யம் கரோதி ய: ||

என்று இதிஹாஸ ஸமுச்சயத்தில்.

பிஸம் என்ற தாமரைத்தண்டு பஞ்சக் காலத்தில் மிகவும் தேவையான வஸ்து. அதை யாரோ திருடிவிட்டார்கள். ஏழு ரிஷிகளும் தவிக்கிறார்கள். ஒவ்வொருவரும் தன் மேல் திருட்டுப் பழி வரக்கூடாது என்பதற்காக சூள் உரைக்கிறார்கள். பெரிய பெரிய பாவங்களை வாயால் அடுக்கி, பிஸத்-திருடன் அந்த கோரமான பாவம் பண்ணினவன் ஆவான் என்கிறார்கள். இந்த சாக்கில் மிகப் பெரிய பாவங்கள் உலகில் எவை எவை என்பதை நம் போன்ற பொது மக்களுக்கு அந்த ரிஷிகள் புரியவைக்கிறார்கள். அதில் ஒரு ச்லோகம் இது. தேவதாந்தரத்தை வணங்குவது என்பது கொடிய பாவமாம். விஷ்ணு இருக்கிறாரே, அவர் வைதிகக் கடவுளர்களுக்கெல்லாம் ஈசனானவர். எல்லா உலகங்களாலும் நமஸ்கரிக்கப்பட்டவர். அவரை விட்டுவிட்டு எவரேனும் அந்ய பஜனம் பண்ணினால், மகாபாவம். பிஸத்திருடன் அந்தப் பாவத்தை அடையட்டும் என்கிறார் ஏழு ரிஷிகளில் ஒருவர்.

துளை.அன்யாபிகமனமும் அன்யார்த்த பிரவ்ருத்தியும் அன்யயஜனமும் அந்ய சப்தங்களும் அந்ய சிந்தையும் ஆகிற சித்ரங்கள்” என்று ஐந்து சித்ரங்களை (துளைகளை) விளக்குகிறார் ஸ்வாமி தேசிகன் ரஹஸ்ய த்ரய ஸாரத்தில். சமுத்ரத்தில் தத்தளிப்பவர்க்கு ஒரு படகு கிடைத்தால் அதில் துளைகளைப் போட்டுக்கொண்டு அவஸ்தைப் படலாமோ?

பயனின்மை.யஸ்மாத் பரிமிதம் பலம்” என்ற வசனத்தை ஏற்கெனவே ப்ரஹ்மாணம் என்று ஆரம்பிக்கும் ச்லோகத்தில் கடைசிப் பாதமாகக் கேட்கிறோம்.

திருமழிசை ஆழ்வார் கதை. மஹா யோகி. தியானத்தில் ஆழ்ந்திருக்கிறார். வானத்தில் பார்வதியும் பரமசிவனும் வந்து பார்க்கிறார்கள். அவர்க்கு அருள் புரிய நிச்சயிக்கிறார்கள். இறங்கி வந்து என்ன வரம் வேண்டும் என்று வினவுகிறார்கள். அவர் உங்களிடம் எனக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை என்கிறார். அவர்கள் அதை புரிந்து கொள்ளாமல் அன்புடன் ஏதாவது வரம் கேள் என்றார்கள். அவர் மோக்ஷம் தர முடியுமோ என்று கேட்டார். அது விஷ்ணு ஒருவராலேயே முடியும் என்று பதில் கிடைத்தது. மற்ற பலன்களைத் துச்சமாகக் கருதியதால் ஆழ்வார் பரிஹசித்தார். இந்த ஊசி முனையில் நூலைக் கோர்ப்பது கஷ்டமாக இருக்கிறது. நுழையும்படி வரம் தர வேண்டும் என்றார். எள்ளலைப் புரிந்து கொண்ட பரமசிவனுக்குக் கோபம் வந்தது. நெற்றிக்கண்ணைத் திறக்கும் அளவுக்கு. மீதி கதை இங்கு வேண்டாம்.

பெருமாள் திருமொழியில் ஒரு முழுப் பதிகமும் இந்தக் கருத்தை வலியுறுத்துவதற்காக இருக்கிறது. இதோ சில வரிகள்:

“ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே”
“எங்குப்போய் உய்கேன் உன் இணையடியே அடையலல்லால்”
“நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே”

முழுப் பதிகம் தருதுயரம்.

வேறு ஆழ்வார்களும், “மற்றாரும் பற்றிலேன் என்று அவனைத் தாள் நயந்த” முதலிய வரிகளில் தெளியக் கூறிய கருத்து இது.

இது வரை கேட்ட எட்டு காரணங்கள் என்னவென்றால்:

1. நமக்கு நாராயணனோடு மட்டுமே “ஒழிக்க ஒழியா உறவு” இருக்கிறது.
2. நமக்கு புத்தி இருக்கிறது.
3. நாராயணனுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது.
4. நாம் நாராயணனுக்கு “சாயை அழிவு” பண்ணக் கூடாது.
5. நமக்குக் கற்பு நெறி இருக்கிறது.
6. நமக்குப் பாவம் சேர வேண்டாம்.
7. நமக்கு (பிரபன்னர்களுக்கு) உத்தர க்ருத்யத்தில் துளைகள் வேண்டாம்.
8. முமுக்ஷுவுக்குத் தேவதாந்தரத்தால் ஆகக் கூடிய பயன் ஏதும் இல்லை.


இந்த எட்டு காரணங்களால் நாம் அந்நிய தேவதைகளைத் தவிர்க்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக