செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

ஸ்ரீவைஷ்ணவர்களின் குருபரம்பரை

ஸ்ரீ வ.ந.கோபால தேசிகாசாரியார் எழுதி திருவரசு புத்தக நிலையம் வெளியிட்டுள்ள “திருமால் திருவருள்” என்னும் நூலிலிருந்து

(சுருக்கமாக, வார்த்தைகளில் சிற்சிறு மாற்றங்களுடன்)

வைஷ்ணவ ஸம்ப்ரதாயம்தான் உண்மையான வேதாந்த ஸித்தாந்தம். இதை முன்யுகத்தில் ப்ரசாரம் செய்தவர்கள் பராசரர், வ்யாஸர், போதாயனர் முதலியவர்கள். பராசரர் அருளிச்செய்த விஷ்ணுபுராணம் வைஷ்ணவ விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை திடமாக ஸ்தாபிக்கிறது. பராசரருடைய குமாரர் வ்யாஸர். வ்யாசருடைய வேதாந்த ஸூத்ரத்துக்கு மிக விரிவாக உரை எழுதினவர் போதாயனர். அவருக்குப் பிறகு ப்ரஹ்மநந்தி என்னும் டங்கர், த்ரமிடர், குஹதேவர் போன்றவர்களும் ப்ரஹ்ம ஸூத்ரத்துக்கு விரிவாக உரை எழுதி இந்த ஸித்தாந்தத்தை ஸ்தாபித்தார்கள். ஆனால் அவர்களுடைய நூல்கள் இப்போது நமக்குக் கிடைக்கவில்லை.

முதல் ஆசார்யன்: ஸ்ரீமந்நாராயணன்
இரண்டாம் ஆசார்யன்: ஸ்ரீ மஹாலக்ஷ்மி
மூன்றாம் ஆசார்யன்: ஸ்ரீ விஷ்வக்ஸேனர் (ஸேனை முதலியார்) இவர் ஸ்ரீவைகுண்டத்தில் எம்பெருமானுடைய ஸேனைக்குத் தலைவர்
நான்காம் ஆசார்யன்: நம்மாழ்வார்
ஐந்தாம் ஆசார்யன்: நாதமுனிகள்(இவர் நம்மாழ்வார்க்குப் பிறகு
நீண்டகாலம் கழித்துப் பிறந்தவர். நாதமுனிகளுக்கு நம்மாழ்வார்
யோகமுறையில் உபதேசித்தார்)
ஆறாம் ஆசார்யன்: மணக்கால் நம்பி
ஏழாம் ஆசார்யன்: ஆளவந்தார்   (நாதமுனிகளின் பேரன்)
எட்டாம் ஆசார்யன்: பெரிய நம்பி
ஒன்பதாம் ஆசார்யன்: ஸ்ரீபாஷ்யகாரர் என்று சொல்லப்படும் ஸ்ரீராமானுஜர்.
இவருக்கு யதிராஜர்எம்பெருமானார் என்று பல திருநாமங்களும் உண்டு.

இவர் பூலோகத்தில் 120 வருஷங்கள் எழுந்தருளி இருந்தார். அவருடைய காலம் கி.பி. 1017-1137. இவர் அருளிச்செய்த 9 க்ரந்தங்கள்: ஸ்ரீபாஷ்யம் (ப்ரஹ்ம ஸுத்ரத்துக்கு உரை), கீதாபாஷ்யம்வேதாந்த ஸங்கரஹம் (வேதம், உபநிஷத்துக்களில் முக்கியமான பகுதிகளின் அர்த்தங்கள்), வேதாந்த தீபம் (வ்யாஸரின் ப்ரஹ்ம ஸூத்ரத்துக்குச் சுருக்கமான உரை), வேதாந்த ஸாரம் (ப்ரஹ்ம ஸூத்ரத்துக்கு இன்னும் சுருக்கமான உரை), சரணாகதி கத்யம்ஸ்ரீரங்க கத்யம்ஸ்ரீ வைகுண்ட கத்யம்நித்யம் (ஸ்ரீவைஷ்ணவன் தினமும் அனுஷ்டிக்கவேண்டியவை பற்றி). ஆசார்யர்களாகிற ரத்னங்களால் விளங்கும் குருபரம்பரையான ரத்னமாலையில் நடு நாயகமணியாக விளங்குகிறார் ஸ்ரீபாஷ்யகாரர்.

ஸ்ரீதேசிகன்:  ஸ்ரீதேசிகனின் இயற்பெயர் வேங்கடநாதன். இவருக்கு ஸ்ரீரங்கநாதன் ‘வேதாந்தாசாரியர்’ என்ற திருநாமத்தையும், ஸ்ரீரங்கநாச்சியார் ‘ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர்’ என்ற திருநாமத்தையும் அளித்தார்கள். இவருடைய ஸ்ரீஸூக்திகள் எண்ணற்றவை. வேதாந்த நூல்கள், ரஹஸ்யக்ரந்தங்கள், வ்யாக்யான க்ரந்தங்கள், ஸ்தோத்ரங்கள், காவ்யங்கள், தமிழ்ப் ப்ரபந்தங்கள் என்று இப்படி ஸம்ஸ்க்ருதத்திலும், தமிழிலும், ப்ராகிருதத்திலும் கூட பலபல க்ரந்தங்களை அருளிச் செய்துள்ளார்கள். 101 வருஷங்கள் இப்பூமியில் எழுந்தருளி இருந்தார். கி.பி. 1268 – 1369.
ஸ்ரீதேசிகனுடைய முக்கிய சிஷ்யர்கள் அவருடைய திருக்குமாரராகிய நயினாசார்யர், ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர். ஸ்ரீதேசிகனுக்குப் பிறகுஆசார்ய பரம்பரை பலவகையாகப் பிரிகின்றதுஅவரவர் குருபரம்பரையை தன் ஆசார்யனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆழ்வார்கள்பதின்மர். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாளையும் மதுரகவிகளையும் சேர்த்துக்கொண்டு பன்னிருவர் என்றும் சொல்வர்.

எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களிலேயே எப்போதும் ஆழ்ந்து இருந்ததால், அவர்களுக்கு ஆழ்வார்கள் என்று பெயர் ஏற்பட்டது. ஆழ்வார்களில் நம்மாழ்வார் மிக முக்கியமானவர். தம்முடைய ப்ரபந்தத்தின் மூலமாக ப்ரபத்தியின் பெருமையை விளக்கிக் கூறினார். தாமும் ப்ரபத்தியை அனுஷ்டித்தார். அதனால் ப்ரபத்தி அல்லது பரந்யாஸம் செய்துகொள்பவர் களுக்கு நம்மாழ்வார்தான் தலைவர், மூல புருஷர். (ப்ரபன்ன ஸந்தான கூடஸ்தர்) இவர் அருளிச்செய்த திருவாய் மொழியின் வ்யாக்யானம் பகவத் விஷயம் என்று அழைக்கப்படுகிறது.
ஆழ்வார்களுடைய அவதாரத்தைப் பற்றி வ்யாஸ மஹரிஷியும் பாகவதத்தில் பின்வருமாறு அருளிச் செய்கிறார்:

நாராயணனையே பரம்பொருளாகத் துதிக்கும் மஹான்கள்
கலியுகத்தில் அவதாரம் செய்வார்கள். தமிழ் தேசத்தில்,
தாமிரபரணி, வைகை ஆறு, பாலாறு, காவிரி, மேற்கு
ஸமுத்ரத்தில் விழுகிற மஹாநதி இவற்றின் கரையில்
அவதாரம் செய்வார்கள்.

பாகவதத்தில் கூறப்பட்டவாறே அவதரித்தார்கள்:

தாமிரபரணிக்கரையில் நம்மாழ்வாரும், மதுரகவிகளும்வைகை ஆற்றின் சமீபம் பெரியாழ்வாரும் ஆண்டாளும்பாலாற்றின் கரையில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார்காவிரிக்கரையில் தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார்,மேற்கே மஹாநதியின் கரையில் குலசேகர ஆழ்வார் அவதாரம் செய்தனர்.
முதலாழ்வார்கள் ஆழ்வார்களுக்கெல்லாம் முதலில் அவதரித்தபடியால் இவர்கள் முதலாழ்வார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பொய்கை ஆழ்வார்பூதத்தாழ்வார்பேயாழ்வார் மூவரும் சமகாலத்தில் அவதரித்தார்கள். இம்மூவரும் எம்பெருமானின் கையிலுள்ள தெய்வப் பொருட்களின் அம்சமாக அவதரித்தனர். மூவரும் அயோநிஜர்கள் அதாவது தாயின் கர்ப்பத்திலிருந்து தோன்றாதவர்கள்

பொய்கை ஆழ்வார்: எம்பெருமானுடைய சங்கமான பாஞ்சஜன்யத்தின் அம்சமாக அவதரித்தார். காஞ்சிபுரத்தில் ஒரு பொய்கையில் (குளத்தில்) தாமரைப்பூவில், ஐப்பசி மாதம் திருவோண நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

பூதத்தாழ்வார்: எம்பெருமானுடைய கௌமோதகீ என்னும் கதையின் அம்சமாக அவதரித்தார். அதற்கு அடுத்த நாள் அவிட்ட நக்ஷத்திரத்தில், திருக்கடல் மல்லையில் (மஹாபலிபுரம்) ஒரு மாதவிப்பூவில் அவதரித்தார்.

பேயாழ்வார்: எம்பெருமானுடைய கத்தியான நந்தகத்தின் அம்சமாக அவதரித்தார். அதற்கு அடுத்த நாள் சதய நக்ஷத்திரத்தில் ஒரு கிணற்றில் செவ்வல்லிப்பூவில் அவதரித்தார்.

மற்ற ஆழ்வார்கள்:

திருமழிசை ஆழ்வார் எம்பெருமானின் சக்கரமான ஸுதர்சனத்தின் அம்சம். தை மாதம் மக நக்ஷத்திரத்தில் ப்ருகு மஹரிஷியின் குமாரராக அவதரித்தார். குழந்தை பிறந்தபின் தாயார் அதை ஒரு பிரப்பம்புதரிலே போட்டுவிட்டுப் போய்விட்டார். தந்தையும் தவம் செய்யச் சென்று விட்டார். ஒளிவீசும் அந்தக் குழந்தையை கண்டு எடுத்து வளர்த்தனர் திருவாளன் – பங்கயச்செல்வி தம்பதியர். தாய்ப்பால் குடிக்காமலே அக்குழந்தை ஒளியுடன் வளர்ந்தது. அந்தத் தெய்வக்குழந்தைக்கு ஒரு வேளாள தம்பதி சுத்தமான பாலை தினமும் கொடுத்து மிஞ்சிய பாலை குடித்துவந்தனர். அவர்களுக்கு ஆழ்வார் அருளால் பிறந்த குழந்தைக்கு ‘கணிகண்ணன்” என்று பெயரிட்டு மகிழ்ந்தனர். வளர்ந்தபின் கணிகண்ணனும் ஆழ்வாரோடு கூடவே இருந்து தொண்டுசெய்துவந்தார். திருவெஃகாவில் கோவிலில் பல வேலைகளைத் தன்பாக்கியமாகக் கருதி பணி செய்துவந்த மூதாட்டிக்கு என்றும் இளமையுடன் இருக்க ஆழ்வார் அருள்புரிந்தார். இந்த அதிசயத்தைக் கேள்வியுற்ற அத்தேசத்தை ஆண்டுவந்த பல்லவராயன் என்னும் அரசன் தனக்கும் அவ்வாறே யௌவனத்தை அளிக்கவேண்டும் என்று கணிகண்ணனைக் கேட்க, அவர் மறுத்ததால் தன் தேசத்தை விட்டுப் போகச்சொல்லி கணிகண்ணனுக்கு ஆணையிட்டான். ஆழ்வாரும் வெளியேறுவதாக முடிவுசெய்து அங்கே திருவெஃகாவினில் சயனக் கோலத்தில் இருக்கும் யதோத்காரிப் பெருமானிடம் “நீரும் வந்துவிடும்” என்று ப்ரார்த்திக்க, எம்பெருமானும் போக, மற்ற பரிவார தேவதைகளும் போக, மக்களும் போக, மரங்கள், செடிகொடிகள் வாடி, எல்லோரும் சென்றுவிட்டதால் தேசமே இருள்மயமாகிப் போனது. அதிர்ச்சியடைந்த மன்னன் அவர்களைப் பின்தொடர்ந்து, காஞ்சி யருகே யுள்ள ஓரிரவிருக்கை என்ற ஊரிலே (ஓரிருக்கை அல்லது ஓரிக்கை) கண்டு, அனைவரையும் திரும்பிவருமாறு உள்ளம் உருக வேண்டி எல்லோரும் திரும்பி வந்தார்கள்.

நம்மாழ்வாரும் மதுரகவிகளும் நம்மாழ்வார் விஸ்வக்ஸேனருடைய அம்சமானவர். வைகாசிமாதம் விசாஹ நக்ஷத்திரத்தில் திருக்குருகூரில் (ஆழ்வார் திருநகரி) வேளாள குலத்தில் காரி- நங்கை தம்பதிக்கு மகனாக அவதரித்தார். அழாமல், தாய்ப்பாலுண்ணாமல், இக்குழந்தை மாறுபாடாக இருந்ததனால் மாறன் எனப்பெயர் சூட்டினர். அக்கோவிலில் புளியமரமாக நின்ற ஆதிசேஷனின் நிழலில் பதினாறு வருஷம் வாய்பேசாமலும் கண்திறந்து பார்க்காமலும் இருந்தார். பின்னர் விஷ்வக்ஸேனர் அவருக்கு ஸர்வஸாஸ்த்ரங்களையும் அபதேசித்தார். மிகவும் தேஜஸ்ஸுடன் விளங்கிய அவர் குழந்தைகளுக்கு வரும் சடம் என்னும் வாயுவை வென்றதால் சடகோபர்என வழங்கப்பெற்றார். இப்படி இருக்கையில், திருக்கோளூரில் அந்தணர் குமாரராய் சித்திரை மாதம் சித்திரை நக்ஷத்திரத்தில் ஸ்ரீவைகுண்டத்தில் கணங்களுக்கு அதிபதியாய் இருக்கும் குமுத என்ற நித்யஸூரியினுடைய அம்சமாகப் பிறந்த மதுரகவிகள்எல்லாவற்றையும் கற்று, பல யாத்திரைகள் செய்து, ஒரு சமயம் அயோத்தியில் இருந்தபோது, ராத்திரியில் தென்திசையில் சூரியவெளிச்சம் போல் இருக்கும் ஒரு பேரொளியைக் கண்டு பலவிடமும் தேடி, கடைசியில் ஆழ்வார் திருநகரிக்கும் தென் திசையில் சென்றபோது அந்த ஒளியை வடதிசையில் கண்டு, திரும்பவும் திருநகரி வந்து சோதிக்கையில் அது யோக நிலையில் இருந்த நம்மாழ்வாரிடம் இருந்துதான் வருகிறது என்று உணர்ந்தார். வாய்மூடி கண்மூடி இருந்த ஆழ்வாருக்குப் பேச வருமா என்று சோதிக்கவேண்டி, ஆழ்வாரிடம் “சிறியதின் வயிற்றிலே பெரியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்” என்று மதுரகவிகள் கேட்டார். ஆழ்வாரும் அத்தைத்தின்று அங்கே கிடக்கும்” என்று பதிலிறுத்தார். கண்களைத் திறந்து மதுரகவிகளைக் குளிரக் கடாக்ஷித்தார். அவருக்கு எல்லாவற்றையும் உபதேசித்தார்.

குலசேகர ஆழ்வார்:
எம்பெருமான் திருமேனியில் உள்ள கௌஸ்துபம் என்னும் ரத்னத்தின் அம்சமாக மாசி மாதம் புனர்வஸு நக்ஷத்திரத்தில் வஞ்சிக்களம் எனும் கொல்லி நகரில் த்ருடவ்ரதன் என்னும் அரசனுக்கு மகனாக அவதரித்தார்.

பெரியாழ்வாரும் ஆண்டாளும்:  பெரியாழ்வார் ஆனி மாதம் ஸ்வாதி நக்ஷத்திரத்தில் அந்தணர்குலத்தில் விஷ்ணுசித்தர் என்ற பிள்ளையாக பிறந்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டிருந்த வடபத்ரசாயிக்கு புஷ்பமாலை கட்டி சேவை செய்துவந்தார். “பரதத்வம் எது, உயர்ந்த புருஷார்த்தம் எது” என்று அறியவிரும்பிய மதுரையை ஆண்டுவந்த வல்லபதேவன் என்னும் மன்னன் பலமதங்களையும் சார்ந்த பல்வேறு அறிஞர்களைக் கூட்டி நடத்திய நீண்ட விவாதசபையில் பங்குகொண்டு, பெரியாழ்வார் விரிவாக விவாதம் செய்து, “ஸ்ரீமந் நாராயணனே பரதத்வம். அவனைத் தொழுகின்ற வைஷ்ணவமதமே சிறந்தமதம்” என்று நிரூபித்தார். ஆழ்வாரின் பெருமையை அறிந்து, அவருக்கு பட்டர்பிரான் என்ற திருநாமத்தைச் சாத்தி, அவரை மிக்கமரியாதை யுடன் பட்டத்துயானை மேல் அமரச்செய்து, ஸகலவாத்யங்கள், பரிவாரங்களோடு கோலாகலத்துடன் ஊர்வலமாக அழைத்துச் செல்லும்போது அதைப்பார்த்து ரசிக்கவிரும்பிய எம்பெருமான் பெரிய பிராட்டியுடன் கருடன்மேல் ஏறி நித்யஸூரிகளும் உடன்வர, ஆகாயத்தில் தோன்றி ஆழ்வாரை மகிழ்ச்சியுடன் குளிரக் கடாக்ஷித்தான். சொக்கிப்போன ஆழ்வார் யானையிலிருந்து இறங்கி யானையின் மணிகளையே தாளமாகக் கொண்டு “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு” என்று பாடி மங்களாசாஸனம் செய்தார். திரும்பிவந்து வடபத்ரசாயிக்குப் புஷ்பகைங்கர்யம் செய்துவந்தார். ஆடி மாதம் பூர நக்ஷத்திரத்தில், பூமிப்பிராட்டியின் அம்சமாக, திருத்துழாய் தோட்டத்தில் குழந்தையாக அவதரித்திருந்த ஆண்டாளை கோதை என்ற திருநாமத்துடன் பெரியாழ்வார் வளர்த்துவந்தார். பெருமாளுக்குச் சாத்துவதற்காக தயாரித்த மாலைகளை முதலில் தினமும் ஆண்டாள் போட்டுப்பார்ப்பதை ஒரு நாள் கண்டுபிடித்த ஆழ்வார் அன்று வடபத்ரசாயிக்கு தாம் புதிதாகக் கட்டிய வேறு ஒரு மாலையை அணிவிக்க அன்றிரவு அவர் கனவில் தோன்றிய வடபத்ரசாயி ”கோதை அணிந்த மாலையே நமக்கு மிகவும் உவப்பாக உள்ளது” என்று அருளினான். வியந்துபோன ஆழ்வார் சூடிக்கொடுத்த நாச்சியார் என்று ஆண்டாளைக் கொஞ்சி வளர்த்து, பின் அவளது விருப்பம்கேட்டு அவள் ஸ்ரீரங்கப்பெருமானையே வரிக்க, பெருமானின் ஆணைப்படி, அவளைப் பல்லக்கில் எல்லோரும் புடைசூழ திருவரங்கத்துக்கு அழைத்துவந்து, எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கையில், ஆதிசேஷன் மேல் ஏறி, அரங்கன் திருமேனியில் ஒன்றாகக் கலந்து மறைந்தாள் ஆண்டாள்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார்: கும்பகோணத்துக்கு அருகேயுள்ள திருமண்டங்குடியில் மார்கழி மாதம் கேட்டை நக்ஷத்திரத்தில் அந்தணர்குலத்தில் அவதரித்தவர். பெற்றோர் இட்ட பெயர் விப்ர நாராயணர். தன் குல வேதமான யஜுர்வேதம் மற்றும் மற்ற வேதங்களையும், சர்வ ஸாஸ்த்ரங்களையும் கற்று, திருவரங்கனைச் சேவிக்கச் சென்றவர், அங்கேயே தங்கி பெருமாளுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்துவந்தார். அருகில் உத்தமர்கோயிலில் வசித்துவந்த தேவதேவி என்ற தாசி ஒரு நாள் தன் தோழியுடன் ஆழ்வாரின் நந்தவனத்துக்கு அருகில் ஒரு மரத்தடியில் நின்றிருந்தாள். தன் அழகில் மிகவும் கர்வம் கொண்டிருந்த தேவதேவி, தன்னை ஏறெடுத்தும் பார்க்காமல் தன் கைங்கர்யத்தில் ஆழ்ந்து இருந்த ஆழ்வாரைக் கண்டு இதை ஒரு அவமானமாகக் கருதி. ஆத்திரம் கொண்டு, அவரை தன் காமவலையில் வீழ்த்திவிடுவதாக சபதம் செய்தாள். பட்டாடை, ஆபரணங்கள் இல்லாமல் ஓர் எளிமையான அழுக்குவஸ்த்ரத்தை உடுத்திக்கொண்டு ஆழ்வாரிடம் சென்று அவரிடம் தான் செய்த பாபத்தின் விளைவாக தாசியாக பிறந்திருப்பதையும் தன் பாபங்களைத் தொலைக்க தன்னை தோட்டத்தில் வேலைசெய்து பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்ய அனுமதிக்குமாறு வேண்டி, அவர் அனுமதித்தபின் நல்லவள்போல் நடித்து ஆறுமாதம் ஆகி, ஒரு நாள் அவரும் அவளின் வலையில் வீழ்ந்து அவள் அழகில் சொக்கிப்போய் அவளே கதியென்று கிடக்க, சிலகாலம் இருந்தபின் அவரிடம் பணம் இல்லாததால் பிரிந்து சென்றுவிட்டாள். காமவசப்பட்ட அவர் அவள் ஊருக்குச் சென்று தாசியின் வீட்டுவாசலிலேயே காத்துக்கிடந்தும், பணமில்லாமையால் அவரைத் தாசி உள்ளே விடவேயில்லை.  அவர் நிலைமைக் கண்டு இரங்கிய பெருமாளும் பிரட்டியும் ஆழ்வாரை மறுபடியும் பகவத் கைங்கர்யத்தி ஈடுபடச் செய்ய திருவுள்ளம் கொண்டனர். தன் திருக் கோயிலில் இருக்கும் ஒரு தங்கவட்டிலை எடுத்துக்கொண்டு போய், திருவரங்கன் தாசியிடம் “என் பெயர் மணவாளதாஸன், விப்ர நாராயணர் இந்த வட்டிலைத் தங்களிடம் கொடுக்கச் சொன்னார்” என்று கூறினார். மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட தேவதேவி ஆழ்வாரை உள்ளே கூப்பிட, ஆழ்வாரும் தாசியுடன் சந்தோஷமாக இருந்தார். கோயிலில் வட்டில் காணாமலிருக்கக் கண்ட அதிகாரிகளும் பரிஜனங்களும் பரபரப்படைந்து, பல இடங்களில் தேடி கடைசியில் அது தேவதேவியிடம் இருக்கக்கண்டு அவளை விசாரித்து, பின்னர் ஆழ்வாரை விசாரிக்க அவர் தான் மிகுந்த ஏழை என்றும் தான் யாரையும் தங்கவட்டிலுடன் அனுப்பவில்லை என்று கூற, ஸ்ரீரங்கநாதன் ஒரு அர்ச்சகர் மூலம் தன்னுடைய திருவிளையாடல்தான் இது என்று தெளிவுபடுத்தினார். மிகவும் மனம் வருந்திய ஆழ்வார் ப்ராயச்சித்தமாக புனிதமான பாகவதர்களின் ஸ்ரீபாததீர்த்தத்தை சாப்பிட்டுப் புனிதம் ஆனார். திருவரங்கன் மகிழ்ந்து அவரது ஸ்வரூபத்துக்கு ஏற்றபடி அவருக்கு தொண்டரடிப்பொடியாழ்வார் பெயர்சூட்டினான்.

திருப்பாணாழ்வார்:  ஸ்ரீரங்கத்துக்கு அருகில் உறையூரில் கார்த்திகை மாதம் ரோஹிணி நக்ஷத்திரத்தில் ஒரு வயல் நடுவில் அவதரித்த குழந்தையை ஒரு பாணர் தம்பதி கண்டெடுத்து குழந்தையில்லாத தமக்குக் கிடைத்த பொக்கிஷமாக அவரை வளர்த்தனர். மிக்க தேஜஸ்ஸுடன் வளர்ந்து, தம் குலத்திற்கு ஏற்ப வீணையிலும் பாடலிலும் தேர்ச்சிபெற்றதால் பாணர் என்றே அழைக்கப்பட்ட அவர், தன்குலவழக்கப்படி, உபயகாவேரிக்கும் நடுவில் உள்ள ஸ்ரீரங்க க்ஷேத்திரத்துக்குச் செல்லாமலே, தென் திருக்காவேரியின் கரையில் வீணையும் கையுமாய் பெரிய பெருமாள் ஸந்நிதியைப் பார்த்தவண்ணம் நின்று பெருமான்புகழ் பாடிவந்தார். பக்தர் லோகஸாரங்க மாமுனிவரின் கனவில் அரங்கன் தோன்றி, அவரை திருப்பாணாழ்வாரைத் தன்தோள்களில் ஏற்றிக்கொண்டு தன் ஸந்நிதிக்கு வருமாறு பணித்தான். மறு நாள் காலை முனிவர் ஆழ்வாரிடம் சென்று இதைச்சொல்ல, நடுநடுங்கிப்போன ஆழ்வார் “பாணர் குலத்தில் வளர்ந்த அடியேன் இப்படிச் செய்யமாட்டேன். தேவரீர் மஹாபரிசுத்தமானவர், சிறந்த அந்தணர், பாகவத சிரோமணி, அரங்கனுக்கு மிகவும் பிரியமானவர். தங்களைத் தூரத்தில் நின்று ஸேவிப்பது தான் அடியேனுடைய கடமை. தேவரீர் திருத்தோளில் ஏறும் மஹாபாவத்தை ஒரு நாளும் செய்யமாட்டேன். இதைவிடக் கொடிய பாகவத அபசாரம் வேறு உண்டோ ? ” என்றுகூறி மறுத்துவிட்டார். அரங்கன் கட்டளையிது என்று திரும்ப முனிவர் வலியுறுத்த, செய்வதறியாது கண்மூடி கைகூப்பி அரங்கனையே த்யானித்து நின்றார். தோளில் ஏற்றிச் சென்று அரங்கன்முன் இறக்கிவிட்டார். அரங்கனின் திவ்ய மேனியைத் திருவடியில் ஆரம்பித்து திருமுடிவரை ஒவ்வொரு அங்கமாக ஆழ்ந்து அனுபவித்து ஸேவித்து, திருமேனி அழகை அற்புதமாக வர்ணித்துப் பாடினார். எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கையில் அரங்கன் திருமேனியில் ஒன்றாகக் கலந்து மறைந்தார்.

திருமங்கை ஆழ்வார்: ஆழ்வார்களில் கடைசியாக அவதரித்தவர். சோழ நாட்டில் இருந்த சிறிய நாடான திருமங்கையில், திருவாலி-திருநகரிக்கு அருகில் உள்ள திருகுறையலூரில், வேளாளகுலத்தில் கார்த்திகை மாதம் கார்த்திகை நக்ஷத்திரத்தில் அவதரித்தார். வில்வித்தையில் சிறந்த, எப்போதும் ஆடல்மா என்ற சிறந்த குதிரை வத்திருந்த இவரை ஒரு ஸேனாதிபதியாக்கிய அரசன் இவர் பலபோர்களை வென்றதும், இவருக்கு பரகாலன் என்று பட்டம் சூட்டி, நாளடைவில் திருமங்கை நாட்டிற்கு மன்னன் ஆக்கினான். இவரும் நாட்டை ஆண்டுவந்தார். திருவெள்ளக்குளம் (அண்ணன் கோயில்) என்னும் திருப்பதியில் ஓர் ஆம்பல் குளத்தில் கண்டெடுத்த ஒரு பெண்குழந்தையை குமுதவல்லி என்ற நாமத்துடன் அன்போடு வளர்த்து ஆளாக்கிய வைசியத் தம்பதி, அவளுக்கு நல்ல மணவாளனைத் தேட, ஆழ்வாரும் சென்று விசாரிக்க,  ஆழ்வார் பட்டாடைகள் ஆபரணங்கள் நிறையக் கொடுத்து அப்பெண்ணைத் தனக்கு விவாஹம் செய்துவைக்கும்படி கேட்க, அவளோ “ஸ்ரீவைஷ்ணவராகப் பஞ்சஸம்ஸ்காரம் செய்துகொண்டு பகவானிடம் பக்திகொண்டு பாகவதர்களுக்குத் ததீயாராதனம் பண்ணிக் கொண்டி ருப்பவரைத்தான் நான் திருமணம் செய்துகொள்வேன்” என்று மிக உறுதியாகக் கூற,  அவர் திருநறையூர்  (நாச்சியார்கோயில்) சென்று பெருமாளிடம் வேண்டி நிற்க, பெருமாளே அவருக்கு மற்றவர்களின் கண்களுக்குத் தெரியாதவண்ணம் அவருக்குப் பஞ்சஸம்ஸ்காரம் செய்து பன்னிரண்டு திருமண்காப்பும் ப்ரஸாதித்து அருளினான். குமுதவல்லி யை மணந்துகொண்டு தினம் பாகவதர்களுக்காக ததீயாராதனம் பண்ணிக் கொண்டிருந்தார். அரசாங்க பணத்தை இவ்வாறு தீர்ப்பதாக வந்த புகாரின் பேரில் அவரைப்பிடித்துவர ஸேனையை அனுப்ப அவர் அவர்களைப் போரிட்டுத் தோற்கடிக்க, பிறகு மன்னனே ஸேனையுடன் வந்தும் அவனையும் தோற்கடித்த அவரிடம் மன்னன் நயவஞ்சகமாக அவரை பேசி ஏமாற்றி அழைத்துச்சென்று ஒரு தேவாலயத்தில் சிறைவைத்தான். ததீயாராதன ஸேவை தடைப்பட்டுப் போனதே என்று இவர் மனம்வருந்தி பட்டினிகிடந்து துன்பமுற அதைகாணச் சகியாத காஞ்சீபுரத்து எம்பெருமானான வரதன் ஆழ்வாரின் கனவில் தோன்றி, “காஞ்சீபுரத்துக்கு வாரும். நம்கோயிலுக்கு அருகில் பெருத்த செல்வம் இருக்கிறது. அந்தப் பணத்தை அரசனிடம் கொடுத்து விட்டுக் காவலில் இருந்து வெளியே வாரும்” என்றார். இதைச்சொல்லி காவலாளிகளுடன் வந்து வரதனைச் சேவித்து வேண்டி, அருகில் இருந்த நிதியை எடுத்துச் சேரவேண்டிய பணத்தைக் காவலாள்களிடம் கொடுத்துவிட்டு, மீதியை ததீயாராதனத்துக்கு உபயோகித்தார். இந்நிகழ்வைக் கேள்வியுற்ற அரசன் அவர் பெருமையை உணர்ந்து ஓடோடி வந்து “ஆழ்வாரிடம் அபசாரப்பட்டு விட்டோமோ” என்று நடுங்கி அவர் கொடுத்த பணத்தையும் திருப்பிக் கொடுத்து தன்னை மன்னித்தருளுமாறு வேண்டி நின்றான். ஆழ்வாரும் அவனை வாழ்த்தி அனுப்பினார். கிடைத்த செல்வத்தை எல்லாம் ததீயாராதனத்துக்கே செலவு செய்தார். பின்னர் வழிப்பறி செய்ய ஆரம்பித்து, ஒரு நாள் தன் சகாக்களுடன் ராத்திரி பாதை ஓரம் காத்திருக்க அங்கு ஆபரணங்களுடன் ஒரு புதிதாக மணம்புரிந்திருக்கும் தம்பதியாக பிராட்டியுடன் வந்த பெருமாளை மிரட்டி நிறுத்தி எல்லா ஆபரணங்களையும் ஒரு பெட்டியில் வைத்துத் தூக்கமுயல, தூக்க இயலாமல் போக, ஆழ்வார்  இளைஞனாக நிற்கும் பெருமாளைப் பார்த்து தன் வாளை உருவிக்கொண்டு “ நீ தான் பெட்டியை எடுக்கமுடியாமல் ஏதோ மந்திரம் போட்டிருக்கிறாய். அது என்ன மந்திரம் என்று உடனே எனக்குச் சொல்” என்று மிரட்ட, அவனும் “கலியா, அந்த மந்திரத்தைச் சொல்கிறேன். அருகில் வாரும்” என்றழைத்து அவர்காதில் திருஅஷ்டாக்ஷர மந்திரத்தை ஓதினான், உடனே பெரிய பிராட்டியும் தானுமாகப் பரிஜனங்களுடன் ஆழ்வாருக்கு நேரில் ஸேவை ஸாதித்தான். அந்த இடம் திருமணங்கொல்லை என வழங்கப்படுகிறது. பிறகு ஆழ்வார் திவ்யதேசங்களுக்குச் சென்றுவந்தார். காழிச்சீராம விண்ணகரத்திற்கு (சீர்காழி) வரும்போது அப்போதைய வழக்கப்படி ஆழ்வாருடன் வந்த பரிஜனங்கள் ஆழ்வாருக்கு முன்னால் “ நாலுகவிப் பெருமாள் வந்தார்” என்று பிருதுகளை கோஷம் செய்து கொண்டு செல்ல, அப்போது அங்கிருந்த நாயன்மாரான திருஞான சம்பந்தரின் அடியார்கள் “தமிழ்ப்புலவரான எங்கள் ஞானசம்பந்த நாயனார் இருக்கும்போது நீங்கள் நாலுகவிப் பெருமாள் என்று பிருதூதிச் செல்லக்கூடாது” என்று தடுத்தனர். ஆழ்வாரும் ஞான சம்பந்தரும் வாதம்புரிய, ஆழ்வார் அத்தலத்து எம்பெருமானைப் பற்றி “ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண்வேண்டி” என்று ஆரம்பிக்கும் பதிகம் பாட, திருஞானசம்பந்தரும் ‘இந்தவிருதுகள் யாவும் உமக்கே தகும்” என்று போற்றிப்புகழ்ந்து, தம்முடைய வேல் ஆயுதத்தையும் ஆழ்வாருக்கு அளித்தார். இதை ஆழ்வார் பதிகத்தின் கடைசியில் ”ஆலிநாடன் அருள்மாரி அரட்டமுக்கி அடைவார் சீயம்….கொற்ற வேல் பரகாலன் கலியன்” என்று குறிப்பாகக் காட்டியுள்ளார். ஆழ்வார் ஸ்ரீரங்கத்தில் ஒரு பரமபத வாயில் உண்டாக்கினார். வைகுண்ட ஏகாதசியில் ஆரம்பித்து அத்யயன உத்ஸவத்தைப் பத்து நாள் நடத்தினார். அதற்காக நம்மாழ்வாரையும் (அர்ச்சாவிக்ரஹம்) எழுந்தருளப் பண்ணினார்.

நாதமுனிகள்: ஆழ்வார்களின் காலத்துக்குப்பின் பல நூற்றாண்டு களுக்குப் பிறகு வீரநாராயணபுரத்தில் (காட்டுமன்னார்கோயில்) ஆனி மாதம் அனுஷ நக்ஷத்திரத்தில் அவதாரம் செய்த இவருக்கு யோகதசையில் நம்மாழ்வாருடைய அனுக்ரஹத்தால் அவரிடமிருந்து எல்லா ஆழ்வார்களும் அருளிச்செய்த ப்ரபந்தங்களை உபதேசமாகப் பெற்றார். திருமங்கையாழ்வார் ஆரம்பித்து நடத்தி பின் நின்றுபோய் விட்ட அத்யயன உத்ஸவத்தை மறுபடியும் நடத்த நாதமுனிகள் ஏற்பாடுகள் செய்தார். மார்கழி மாதம் சுக்லபக்ஷப் பிரதமையில் ஆரம்பித்து, தசமி வரை பத்து நாட்கள் முதலாயிரம், பெரிய திருமொழி ஆகிய முதல் இரண்டு ஆயிரங்கள் ஸேவிக்கும்படி ஏற்படுத்தினார். வைகுண்ட ஏகாதசியில் ஆரம்பித்துப் பத்து நாட்கள் நம்மாழ்வாத் திருவாய்மொழியும், அதற்கு அடுத்த நாள் இயற்பாவும் ஸேவிக்கும்படி ஏற்பாடு செய்து இப்படி 21 நாட்கள் அத்யயன உத்ஸவம் நடக்க வழி வகுத்தார். நாதமுனிகளுக்குப் பிறகு, ஆளவந்தார், ராமானுஜர், வேதாந்த தேசிகன் முதலான பல பல ஆசார்யர்கள் அவதாரம் செய்தனர்.

வேதாந்த தேசிகன்:  ஆழ்வார்கள் போற்றிப்பாடிய விஷ்ணுவின் திவ்ய தேசங்கள் 108 ஆகும். இவற்றில் காஞ்சியைச் சுற்றி மட்டுமே 15 திருத்தலங்கள் உள்ளன. (புருஷேஷு விஷ்ணு; நகரேஷு காஞ்சி). காஞ்சிமா நகருக்குள் உள்ள தூப்புல் எனப்படும் திருத்தண்கா திருத்தலம். (தூப்புல்=தூய்மையான புல்= தர்ப்பை). இத்தலத்து எம்பெருமானின் திரு நாமம் விளக்கொளிப் பெருமான் (தீபப்ரகாசர்). விளக்கு ஒளியில் பரவி நிற்கும் தூப்புலில் தோன்றியவர் வைணவத்தின் தலைசிறந்த குருவான வேதாந்த தேசிகர். இதை ஸ்வாமியின் புதல்வரும் சீடருமான நயினாசார்யர் தாம் இயற்றிய பிள்ளையந்தாதியில் “என் இருவல்வினை நீயே விலக்கி இதம் கருதி …. பொன் அருளால் அருளாய் புகழ் தூப்புல் குலவிளக்கே” என்று கூறுகிறார்.  வைணவ மத குருவான ராமானுஜர், தனக்குப் பிறகும் வைணவத்தை வளர்க்க 74 சிம்மாசன அதிபதிகளை நியமித்தார். அவர்களில் ஒருவரான அனந்த ஸோமயாஜி என்ற பெரியாரின் திருப்பேரனார் அனந்தசூரி, தன் மனையாள் தோதாரம்மை யுடன் தூப்புலில் இல்லறம் நடத்திவந்தபோது, ஒருமுறை புனித யாத்திரைக்காகத் திருமலை வந்துவேண்டியபோது வேங்கடேசப் பெருமாள், தன் கோயில் திருமணியை தோதாரம்மையிடம் கொடுத்ததை அவள் அந்தத் திருமணியை விழுங்கியதாகவும் கனாக் கண்டனர். அந்தக் கனவு பலித்து அம்மையார் கருவுற்று, ஸ்வாமி தேசிகனைத் திருவேங்கடமுடையான்  திரு நக்ஷத்திரமான புரட்டாசி மாத திருவோணத்தில் ஈன்றெடுத்தாள். அதனால் திருமலையப்பனின் திருமணியின் அம்சமாகவே தேசிகன் மதிக்கப்படுகிறார். அதனால்தான் இன்றும் திருமலையில் மணி ஒலிக்கப் படுவதில்லை. இந்த ஐதிகத்தை தேசிகனே தனது நூலான ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் “அசுரர்களை விரட்டுகின்ற மலையப்பனுடைய மணியே தேசிகனாகத் தோன்றியதாக அறிஞர்கள் கூறுகின்றனர்” என்று குறிப்பிடுகிறார். தேசிகனுடைய புதல்வரான நயினாசார்யாரும், அவரது சீடரான ப்ரதிவாதி பயங்கரம் அண்ணனும் மற்றும் பலரும் இதைக் குறிப்பிடுகின்றனர். தன் மாமனாகிய அப்புள்ளாரிடம் வேதங்கள் மற்றும் சாஸ்த்ரங்களைக் கற்று அதிமேதாவியாக விளங்கினார். தென் மற்றும் வட நாட்டிலுள்ள புனிதத் தலங்களுக்கு யாத்திரை சென்று, காஞ்சிக்குத் திரும்பிவந்து வாசம் செய்துவந்தார். வடமொழி, தமிழ், ப்ராகிருதமொழி இவற்றில் தோத்திர நூல்கள், காப்பியங்கள், வேதாந்த நூல்கள் இயற்றி அருளினார். உஞ்சவ்ருத்தியை மேற்கொண்டு மிக எளிய வாழ்க்கை நடத்திவந்தார். விஜய நகர ஸாம்ராஜ்யத்தில் மந்திரியாகவும், குலகுருவாகவும் இருந்த தன் இனிய நண்பன் வித்யாரண்யர் அரசவையில் பெரும்பதவி ஏற்றுக் கொள்ளுமாறு அழைப்புவிடுத்தார். தேசிகன் தனக்கு செல்வம் ஒன்றுன் இல்லாவிடினும், பூர்விகச் செல்வமாகிய காஞ்சி வரதராஜப் பெருமாளை விட்டு வர இயலாது என்று கூறி துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். இவரது ஸேவையில் மகிழ்ந்த திருவரங்கன் இவருக்கு “வேதாந்தாசாரியர்” என்ற பிருதையும், ரங்க நாயகி “ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர்” என்ற பிருதையும் வழங்கினர். 120 நூல்களை இயற்றிய தேசிகன், நூறு ஆண்டுகள் நிறைவடைந்தபின் கி.பி. 1369 அம் ஆண்டு கார்த்திகைத் திரு நாளில் அந்தப் பரஞ்சோதியான பெருமானைச்  சேர்ந்தார்.

ஆழ்வார்களில் முதலில் தோன்றிய பொய்கை ஆஷ்வாரின் நக்ஷத்திரம் மஹாவிஷ்ணு அவதரித்த திருவோணம். ஆழ்வார்களில் கடைசியாகத் தோன்றிய ஆச்சார்யரான தேசிகனின் நக்ஷத்திரமும் திருவோணம்தான். இது ஆழ்வார்களும் ஆச்சார்யார்களும் மஹாவிஷ்ணுவின் அம்சமே என்பதைக் காட்டுகிறது.

மேலும் பொய்கையாழ்வார் அவதரித்த ஐப்பசி மாதத் திருவோணம்.
தேசிகன் தோன்றியது புரட்டாசித் திருவோணம். ஐப்பசியில் ஆரம்பித்துப் புரட்டாசியில் முடியும் ஒரு ஞானச் சக்கரம்.

ப்ரபத்தி சாஸ்த்ரம் தைத்திரீய உபநிஷத்தில் நாராயணவல்லியில் ஸத்யம், தமம், சமம், தானம் முதலிய பல தவங்களைச் சொல்லி, ப்ரபத்தி எனும் ந்யாஸத்தைச் சொல்லி, கடைசியில் ப்ரணவத்தைக் கொண்டு நம் ஜீவாத்மாவைப் பரமாத்மாவிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லப் பட்டிருக்கிறது. பல ஆசார்யர்களும் ப்ரபத்தியின் பெருமைய விளக்கியுள்ளனர். எனினும் அதை ஒழுங்குபடுத்தி, எல்லோரும் விளங்கிக் கொள்ளும்படி பல க்ரந்தங்களை ஸம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் அருளிச் செய்தார் தேசிகன். அவர் ப்ரபத்தியைப் பற்றி எழுதிய பல நூல்களில் அவர் முதிர்ந்த வயதில் அருளிச்செய்த ஸ்ரீரஹஸ்யத்ரயஸாரம்  Magnum Opus  ஆகவும், ப்ரபத்தியைப் பற்றிய ஒரு Encylopaedia என்றும் சொல்லலாம்.

ப்ரபத்தியைப் பற்றி நாம் அறிய வேண்டிய விஷயங்களைச் சுருக்கமாக நடாதூர் அம்மாள் (இவர் ஓர் ஆணே, இவர் பெருமாளுக்கு நிவேதனம் செய்யும் பாலை, தினமும் அதிக சூடு இல்லாமலும், ஆறிப்போகாமலும், அதிக இனிப்பு இல்லாமலும், இனிப்புக்குறைவாக இல்லாமலும் ஒரு தாயைப்போல பாலை தனக்கு அளித்ததாலும் நடாதூர் என்ற ஊரைச் சேர்ந்தவராக இருந்ததனாலும் அவருக்கு பெருமாள் சூட்டிய நாமமே நடாதூர் அம்மாள் என்பதாகும்) என்ற குரு “ப்ரபன்ன பாரிஜாதம்” நூலில் சுருக்கமாக 10 அத்தியாயங்களில் அருளிச் செய்தருளியிருக்கிறார்.

ப்ரபத்தியின் விசேஷங்கள்:

அர்த்த பஞ்சகம்: தெரிந்துகொள்ள வேண்டியவை ஐந்து: 1. பரமாத்மா 2. ஜீவாத்மா 3. மோக்ஷத்தை அடையும் உபாயம் 4. பலன் அல்லது உபேயம். 5. பலனுக்கு விரோதியாக இருப்பது.மூன்று தத்துவங்கள்: சேதனம், அசேதனம், ஈச்வரன்உட்பிரிவுகள்: ஸ்வநிஷ்டை, உக்திநிஷ்டை,  ஆசார்யநிஷ்டை, பாகவத நிஷ்டைஐந்து அங்கங்கள்: ஆநுகூல்ய ஸங்கல்பம், ப்ராதிகூல்ய வர்ஜநம், மஹாவிச்வாஸம், கார்ப்பண்யம், கோப்த்ருத்வவரணம்.மூன்று பகுதி: ஸ்வரூப ஸமர்ப்பணம், பர ஸமர்ப்பணம், பல ஸமர்ப்பணம்.
தஞ்சப் பரகதியைத் தந்தருள்வோன் வாழியே

பஞ்ச ஸம்ஸ்காரம்:

ஆசார்யன் பொறித்த சங்கு சக்கரங்களைத் தோள்களில் தரித்தல்.பன்னிரண்டு திருமண்களை நெற்றியிலும் உடலிலும் தரித்தல்.ஆசார்யனால் சூட்டப்பட்ட பெயரை தரித்தல் (தாஸ்ய நாமம்)ஆசார்யனிடமிருந்து மந்த்ரங்கள் உபதேசம் பெறுதல். (முக்கியமாக மூன்று மந்த்ரங்களை உபதேசிப்பார். (அ) திருமந்த்ரம் அல்லது அஷ்டாக்ஷரம், (ஆ) த்வயம் (இரண்டு வாக்யங்களால் ஆன மந்த்ரம்), (இ) சரமச்லோகம் (இது கண்ணன் அர்ஜுனனுக்குத் தேர்த்தட்டில் உபதேசித்த பகவத்கீதையில் உள்ளது. ப்ரபத்தியைச் செய்யும்படி விதிக்கின்ற மந்த்ரம் இது.)எம்பெருமானுக்குத் திருவாராதனம் செய்வதற்கு உபதேசம் பெறுதல்.

க்ரந்த சதுஷ்டயம்பஞ்ச ஸம்ஸ்காரத்துக்குப் பிறகு, ஆசார்யன் ஸந்நிதியில் காலட்சேபம் செய்யவேண்டிய க்ரந்தங்கள் முக்கியமாக நான்கு ஆகும், அவை:

ப்ரஹ்ம ஸூத்ரத்துக்கு வ்யாக்யானமாக ராமானுஜர் அருளிச் செய்த ஸ்ரீபாஷ்யம்.பகவத் கீதைக்கு வ்யாக்யானமாக் ராமானுஜர் அருளிச் செய்த கீதாபாஷ்யம்.தேசிகன் அருளிச் செய்த ரஹஸ்யத்ரயஸாரம்.திருவாய்மொழிக்கு வ்யாக்யானமாக ராமானுஜரின் சிஷ்யரான திருக்குருகைப்பிரான் பிள்ளான் அருளிச் செய்த பகவத்விஷயம்.

அவகாசமோ, சக்தியோ, தகுதியோ இல்லாமற்போனாலும் ஸ்ரீரஹஸ்யத்ரய ஸாரத்தையாவது அவசியம் காலக்ஷேபம் பண்ண வேண்டும். இந்த க்ரந்தத்தில் இல்லாதது, நாம் தெரிந்து கொள்ள வேண்டியது வேறு ஒன்றும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக