பெருமாளுடன் பேசும் அருள்பெற்ற திருக்கச்சி நம்பியிடம் தாம் கேட்டுத் தெளிய வேண்டிய ஆறு விஷயங்கள் உள்ளன என்றும் அவற்றிற்கு விளக்கம் கேட்டு தகவல் பெற்றுத்தரவும் இளையாழ்வார் என்ற திருநாமம் பெற்றிருந்த இராமாநுஜர் வேண்டினார். பெரிய நம்பியை ஆசார்யராகப் பின்பற்று என்பது அந்த ஆறாவது விளக்கமாகும். "மஹாபூர்ண ஸமாச்ரயணம்' என்பதே அந்த ஆறாவது வார்த்தையின் வடமொழியாக்கம் ஆகும். அந்த ஆறாவது வார்த்தை உலக அரங்கில் ஒரு மாபெரும் புரட்சி உருவாக மூலகாரணமாக அமைந்த வார்த்தையாகும்.
இளையாழ்வார் அருளாளன் கட்டளைப்படி பெரிய நம்பியை ஆசார்யனாக ஏற்று, பஞ்ச சம்ஸ்காரங்களை அவரிடம் பெற ஸ்ரீரங்கம் நோக்கிப் புறப்பட்டார். பெரிய நம்பியோ அவரைச் சந்திக்க காஞ்சி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
"பஞ்ச சமஸ்காரம்' என்பது வழிப்படுத்தும் ஐந்து வகையான நெறிமுறை ஆகும்.
1)பெருமாளின் சங்கு, சக்கரம் ஆகியவற்றை நிரந்தரமாக உடலில் தரித்துக்கொள்ளும் தாபசம்ஸ்காரம்.
2) நெற்றியில் மட்டுமின்றி உடலில் பன்னிரு இடங்களில் பன்னிரு மூர்த்திகளை தியானித்து திருமண் காப்பு அணியத் துவங்குதல் புண்ட்ர சம்ஸ்காரம் ஆகும்.
3) பெற்றோர்கள் வைத்த பெயரைத் தவிர ஆச்சார்யன் (குரு) சூட்டும் நாமமாக ஒன்றை வைத்துக் கொள்ளுதல் நாம சம்ஸ்காரம் ஆகும்.
4) எட்டெழுத்தான நாராயண மந்திரத்தையும் மறை பொருளோடு த்வயம், சரம ஸ்லோகம் (மோட்சத்துக்கான வழி) ஆகியவற்றையும் ஆச்சாரியன் மூலம், வலது செவியில் உபதேசமாகப் பெறுதல் மந்திரசம்ஸ்காரம் ஆகும்.
5) எம்பெருமானின் மூர்த்தியை, அமைத்துக் கொடுத்து யஜ்ஞம் என்னும் திருவாராதணை, பூசை செய்யும் முறைமைகள் ஆகியவற்றை முறையாக ஆச்சாரியனிடம் கற்றுக்கொள்ளல் யாகசம்ஸ்காரம் ஆகும்.
இவை அனைத்தும் ஒரு நன்னாளில், ஒரே வேளையில் நடத்தப்படும்.
இருவரும் ஒருவருக்கொருவர் தண்டனிட்டுக் கொண்டார்கள். நலம் விசாரித்தனர். பின்னர் இருவரும் தங்களின் நோக்கங்களைக் குறித்து பேசத்தொடங்கினார்கள். இளையாழ்வார் அங்கேயே அப்போதே தனக்கு திருவிலச்சினைகளை சமாஸ்ரன்யம்- அருளி பஞ்ச சமஸ்காரத்துடன் திருமந்திரம் உபதேசம் செய்ய வேண்டும் என்று பெரிய நம்பிகளை வேண்டினார்.
"ஆக்கப் பொறுத்த நீங்கள் ஆறப் பொறுங்கள்; அத்திகிரி அருளாளன் திருமுன்பு சமஸ்காரம் மற்றும் உபதேசத்தினை வைத்துக் கொள்ளலாம்'' என்றார். " நீர்க்குமிழி போன்றது இவ்வாழ்வு. இப்பூத உடல், நற்கதி அடைய வழி இப்போதே அருள வேண்டும்'' என்ற இளையாழ்வார் பஞ்ச சமஸ்காரம் உடனே செய்துவிட வேண்டுமென்ற குறிக்கோளில் விடாப்பிடியாக இருந்தார். அவ்வாறு செய்வது சரியாயென ஒருகணம் சிந்தித்தார். ஆனாலும் இந்த சூழலில் இளையாழ்வார் வேண்டுவதை செவிக்கொள்வது சரியென உணர்ந்தார்.
முடிவாக, இன்றைக்கு 987 ஆண்டுகளுக்கு முன்னர் ஆவணி மாதம், சுக்ல பக்ஷம் ( வளர்பிறை) பஞ்சமி திதியில் வகுளாரண்ய க்ஷேத்ரமான மதுராந்தகத்தில், ஏரிகாத்தராமன் - கருணாகரப் பெருமாள் சந்நிதியின் பின்புறம், நம்மாழ்வாரின் அம்சமாகத் திகழும் மகிழ மரத்தினடியில், பெரிய நம்பிகள் ராமாநுஜருக்கு "பஞ்ச ஸம்ஸ்காரம்' (சமாச்ரயணம்) செய்து, ராமாநுஜர் என்ற பெயரையும் சூட்டினார். முதலில் திருமந்திர உபதேசம் செய்து, பிறகு மந்திர ரத்னம் என்னும் துவயத்தை முறைப்படி ராமாநுஜருக்கு உபதேசித்தார். அதனால் இத்திருத்தலம் "த்வயம் விளைத்த திருப்பதி' எனப்படுகிறது. அந்த மகிழ மரம் இன்றளவும் இத்திருக்கோயிலில் உள்ளது. இவை நிகழ்ந்தது அனைத்தும் காஞ்சிப்பேரருளாளன் சொன்ன அந்த ஆறாவது வார்த்தையான மஹாபூர்ண ஸமாச்ரயணம்: என்பதால் விளைந்த பயனாகும். இதனால் இளையாழ்வாருக்கு முதன்முதலில் ராமாநுஜர் என்ற பெயர் சூட்டப்பட்டது.
மதுராந்தகத்தில் இந்நிகழ்வு நடந்த பிறகு வைணவம் ராமாநுஜர் வரவால் பல்கிப்பெருகியது. தமிழகத்தின் வரலாற்று திருமால் நெறி வளர்ந்து செழித்து ஓங்கியது.
இந்நிகழ்ச்சியை கொண்டாடும் விதமாக வருடந்தோறும் ஆவணி சுக்ல பஞ்சமியன்று "பஞ்ச ஸம்ஸ்கார உத்ஸவம்' கொண்டாடப்படுகிறது.
நன்றி - தினமணி