திங்கள், 17 டிசம்பர், 2007

பாடல்28

கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம்!

அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்

பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்;

குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு

உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது!

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்

சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே,

இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்


பொருள்: கறவைப்பசுக்களை மேய்த்து, தயிர்சாதத்தை இணைந்து சாப்பிடும் ஆயர்குலத்தில் நீ பிறந்தாய். எங்களை உலக மக்கள் "மாடு மேய்ப்போர்' என கேலி செய்து, சிறிதும் அறிவில்லாதவர்களாக கருதுகிறார்கள். அப்படிப்பட்ட குலத்தில் நீ வந்து பிறப்பதற்கு நாங்கள் என்ன புண்ணியம் செய்தோமோ! குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனே! உன்னோடு எங்களுக்குள்ள உறவை எக்காரணம் கொண்டும் யாராலும் பிரிக்க முடியாது. ஒருவேளை நீயே பிரிக்க நினைத்தாலும் அதுவும் நடக்காது. உலகம் தெரியாத, ஒன்றும்அறியாத சிறுபெண்களான நாங்கள் அன்பின் காரணமாக உன்னை "நீ, வா, போ' என ஒருமையில் அழைக்கிறோம். அதுகுறித்து நீ கோபப்படாதே. நீ எங்களுக்கு உரிமைப்பட்டவன் என்ற முறையிலேயே அவ்வாறு சொல்கிறோம். இதற்காக கோபிக்காமல் எங்களுக்கு அருள் செய்வாயாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக