திங்கள், 17 டிசம்பர், 2007

பாடல்29

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்

பொற்றா மரையடியே போற்றும் பொருள்கேளாய்;

பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்துநீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;

இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே ஆவோம்; உனக்கேநாம் ஆட்செய்வோம்;

மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்


பொருள்: கதிரவன் உதிக்கும் உதய நேரத்தில் உன் இல்லத்திற்கு வந்து உன்னை வணங்குகிறோம். உன் அழகிய திருவடிகளை பல்லாண்டு பாடி வாழ்த்துகிறோம். இதற்குரிய காரணத்தை கேள். பசுக்களை மேய்த்து உண்ணும் ஆயர்குலத்தில் நீ பிறந்தாய். அப்படிப்பட்ட நீ, நாங்கள் உனக்காக இருந்த இந்த விரதத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை மறுப்பது எவ்வகையிலும் தகாது. நீ இன்றே எங்களுக்கு அருள் செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காகவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். கோவிந்தனே! எப்போது நீ எந்தப்பிறவி எடுத்தாலும், எந்த அவதாரத்தில் வந்தாலும், நாங்கள் உனக்கு உறவினர்களாகவே இருப்போம். உனக்கு மாத்திரமே நாங்கள் சேவை செய்வோம். உன் சேவையைத் தவிர வேறு எந்தத் தேவையும் எங்களுக்கு இல்லை. அப்படி ஒரு சில விருப்பங்கள் எங்களுக்குள் ஏற்பட்டாலும் அதையும் நீதான் மாற்றி அருள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக