ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – ஐந்தாவது அத்தியாயம்
(பகவானிடத்தில் பக்தியில்லாதவர்களின் கதி எத்தகையதென்றும், யுகங்கள் தோறும் பகவானை எவ்வண்ணம் ஆராதிக்க வேண்டுமென்றும் அரசன் வினவினதற்கு, சமஸன் மறுமொழி கூறுதல்.)
மன்னவன் சொல்லுகிறான்:- ஆத்ம வித்தமர்களே! (ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தவர்களில் சிறந்தவர்களே!) இவ்வுலகத்தில் ப்ராணிகள் தன்னைப்பற்றினவர்களின் ஸம்ஸார பந்தத்தைப் (பிறப்பு, உலகியல் விஷயங்களில் ஈடுபாடு, இறப்பு என்கிற மீண்டும் மீண்டும் வருகிற தாபங்களைப்) போக்கவல்ல மஹானுபாவனாகிய பகவானைப் பெரும்பாலும் பணிகிறதில்லை. இந்திரியங்களை வெல்ல முடியாமையால், விருப்பங்கள் ஓயப்பெறாமல், அவற்றைப் பெறுதற்காகவே அலைகின்றார்கள். அவர்களுடைய நிஷ்டை (திடமான நிலை, ச்ரத்தை) எத்தகையது? (அவர்களுக்கு எதில் ஆஸக்தி (ஈடுபாடு)? எது ப்ராப்யம் (அடையப்படக்கூடியது)? அதற்குக் காரணம் என்ன? இதை விவரித்து மொழிவீர்களாக.)
சமஸன் சொல்லுகிறார்:- நான்முகனைச் சரீரமாகவுடைய பகவானுடைய முகம், புஜம், துடை, பாதம் இவற்றினின்று ப்ராஹ்மணர், க்ஷத்ரியர், வைச்யர், நான்காமவர் என்கிற நான்கு வர்ணத்தவர்களும், ஸத்வாதி குணங்களோடு கூடி ப்ரஹ்மசர்யாதி ஆச்ரமங்களுடன் (ப்ரஹ்மசர்ய, க்ருஹஸ்த, வானப்ரஸ்த, ஸன்யாஸ) தனித்தனியே உண்டானார்கள். நான்கு வர்ணங்களாகவும், நான்கு ஆச்ரமங்களாகவும் பிரிந்திருக்கிற இந்த ப்ராணிகளுக்குள் தங்களுக்கு ஸாக்ஷாத் (நேரிடையான) காரணனும், ஸர்வ நியாமகனுமாகிய (எல்லோரையும் நியமிப்பவனுமான) பரம புருஷனை எவர்கள் பணிகிறதில்லையோ, மற்றும் அவமதிக்கிறார்களோ, (மற்ற தேவதைகளோடு ஸமமாக நினைக்கிறார்களோ), அவர்கள் வர்ணாச்ரமங்களினின்று நழுவி நரகத்தில் விழுகிறார்கள். (ஈச்வரன் தன்னைப் பணிந்து உஜ்ஜீவிக்கும்படி ஆத்மாக்களுக்குக் கரண (இந்த்ரியங்கள்), களேபரங்களை (சரீரம், உடல்) அளிக்க, அவற்றைக் கொண்டு அவனைப் பணியாமல், அவனை அவமதிக்கிறவர்கள் க்ருதக்னர்களே (செய்நன்றி மறந்தவர்களே) அல்லவா?
பரம புருஷன், தங்களுக்குக் காரணனென்றும், அவன் ஸர்வ நியாமகன் (எல்லோரையும் நியமிப்பவன்) என்றும், ஸர்வ ஸ்மாத்பரன் (எல்லோரையும் விட மேலானவன்) என்றும், அறிவு நேரப் பெற்றும் அவனைப் பணியாதவர்கள் க்ருதக்னர்களே (செய்நன்றி மறந்தவர்களே) ஆகையால், அவர்கள் நரகத்தில் விழுகிறார்களென்பது ஸத்யமே (உண்மையே). அத்தகைய அறிவில்லாத கேவல மூடர்களின் கதி என்னென்றால், சொல்லுகிறேன்).
பகவானுடைய கதைகளைக் கேட்பதும், அவனுடைய குணங்களைக் கீர்த்தனம் செய்வதுமாகிய இவற்றிற்கு வெகு தூரத்திலிருக்கிற ஸ்த்ரீகளும், சூத்ராதிகளும், உங்களைப்போன்ற பாகவதர்களால் தயை (கருணை) செய்யத் தகுந்தவர்களே. (இவர்களும் பாகவதர்களின் க்ருபைக்கு விஷயமாகி, ஸம்ஸார பந்தத்தினின்று (பிறப்பு, உலகியல் விஷயங்களில் ஈடுபாடு, இறப்பு என்கிற மீண்டும் மீண்டும் வருகிற கட்டிலிருந்து) விடுபடுகிறார்கள்.)
ப்ராஹ்மணர், க்ஷத்ரியர், வைச்யர் என்கிற மூன்று வர்ணத்தவர்களும் வேதாதிகாரம் (வேதம் ஓதுவதற்குத் தகுதி) உடையவர்களாகையால், தத்வ ஜ்ஞானம் (ஜீவாத்ம, பரமாத்மாவைப் பற்றிய அறிவைப்) பெற்று, பகவானுடைய பாதார விந்தங்களை அடைவதற்கு உரியவர்களாயிருந்தும், வேதங்களில் சொல்லுகிற அர்த்த வாதங்களில் (புகழ்ந்து கூறப்பட்டவற்றில்) மனம் சென்று, ஸ்வர்க்கம் முதலிய பலன்களை விரும்பி, அவற்றிற்காக முயற்சி செய்கிறார்களன்றி, பகவானுடைய பாதார விந்தங்களைப் பணிகிறதில்லை.
ஸம்ஸார பந்தத்திற்கு (பிறப்பு, உலகியல் விஷயங்களில் ஈடுபாடு, இறப்பு என்கிற மீண்டும் மீண்டும் வருகிற கட்டிற்கு) இடமாகாத கர்மமே கர்மம் என்கிற கர்மத்தின் உண்மையை அறியாதவர்களும், அதையறிந்த பெரியோர்களைப் பணிந்து கேட்டுத் தெரிந்துகொள்வதற்குரிய வணக்கமற்றவர்களும், மூர்க்கர்களுமாயிருந்தும் தங்களைப் பெரிய பண்டிதர்களாக நினைத்துக்கொண்டு செவிக்கு இனியவைகளான அர்த்த வாத வாக்யங்களால் (புகழ்ந்து கூறப்பட்ட சொற்களால்) மதி மயங்கி “அப்ஸர மடந்தையர்களோடு கலந்து விளையாடப் போகிறோம்” என்னும் இவை முதலிய சாடு வாக்யங்களைப் (சாடுவாக்யம் - இனிய வசனங்கள், பொருளில்லாமற் போயினும் செவிக்கினிமையாயிருக்கை) பிதற்றுகிறார்கள்; ரஜோ குணத்தினால் கோரமான அபிசாராதி (பிறர்க்குத் தீங்கு இழைக்கும்) ஸங்கல்பமுடையவர்களும், ஸ்வர்க்காதி போகங்களில் விருப்பமுற்றவர்களும், ஸர்ப்பம் போல் கோபமுறும் தன்மையர்களும், துரஹங்காரிகளுமாகி (வீணான கர்வம் உடையவர்களுமாகி) அச்சுதனுக்கு அன்பர்களான பெரியோர்களைப் பரிஹஸிக்கின்றார்கள் (கேலி செய்கின்றார்கள்).
அத்தகைய மூடர்கள், ஸ்த்ரீகளைப் (பெண்களைப்) பணியும் தன்மையர்களாய் இருப்பார்களன்றி பெரியோர்களை அடுத்துப் பணியமாட்டார்கள்; ஆணும் பெண்ணுமாய்க் கலந்தனுபவிக்கும் ஸுகத்தையே முக்யமாகவுடைய இல்லற வாழ்க்கையில் இருந்து, ஒருவர்க்கொருவர் ஆசீர்வாதங்களைச் செய்கிறார்கள்; லோபத்தினால் (கஞ்சத்தனத்தால்) அன்னதானம், வஸ்த்ரதானம் இவை செய்யாமலும், தக்ஷிணைகள் கொடாமலும், கேவலம் ஜம்பத்திற்காக (தற்பெருமைக்காக) யாகம் செய்கிறார்கள்; ஜீவனத்திற்காகப் (வயிற்றுப் பிழைப்புக்காக) பசுக்களை ஹிம்ஸிக்கிறார்கள்; அது ஹிம்ஸையென்று சிறிதும் ஆராய்ந்தறியமாட்டார்கள்.
துஷ்டர்கள், பணம் முதலியன அமைந்திருக்கையாகிற ஸம்பத்து (செல்வம்), க்ராமாதிபத்யம் (தலைமை, ஆளுமை) முதலிய ஐச்வர்யம், நற்குலத்தில் பிறத்தல், கல்வி, கொடை, அழகிய உருவம் அமைந்திருத்தல், தேஹ பலம் (உடல் சக்தி), ச்ரௌத (வேதத்தில் விதித்த) ஸ்மார்த்த (ஸ்ம்ருதிகளில் விதிக்கப்பட்ட) கர்ம அனுஷ்ட்டானம் (செயல்களைச் செய்தல்) ஆகிய இவைகளால் கர்வமுண்டாகப் பெற்று, அதனால் மதிமயங்கி, ஈச்வரனையும், அவனுடைய ஸ்வரூப (இயற்கைத் தன்மை), ஸ்வபாவாதிகளை (குணம், திருமேனி, ஆளுமை இவைகளை) உள்ளபடி அறிந்தவர்களையும், அவனிடத்தில் நிலைநின்ற மனமுடையவர்களையும், அவனுக்கு அன்பர்களுமான பெரியோர்களையும் அவமதிக்கின்றார்கள்.
இவ்வாறு இருக்கின்ற அவர்கள் ஸமஸ்த ஆத்மாக்களிடத்திலும் அந்தராத்மாவாய் அமைந்து அவர்களுக்கு நியாமகனாயிருப்பவனும் (நியமிப்பவனும்), ஆகாசம் போல் அவர்களுடைய தோஷம் தீண்டப் பெறாமல் பரிசுத்தனும், சிறந்த புருஷார்த்த ஸ்வரூபனும் (அடையப்பட வேண்டியவனும்), வேதார்த்தங்களால் அறியக்கூடிய ஸ்வரூப ஸ்வபாவங்களை உடையவனுமாகிய ஈச்வரனைப் பெரியோர்களிடத்தில் கேட்கிறதில்லை. ஆகையால், அவர்கள் வேதத்தினுடைய தத்வார்த்தத்தை (தத்வங்களின் பொருளை) அறிந்தவர்களல்லர்.
பின்னையோவென்றால், தங்கள் மனோரதங்களைப் (மன விருப்பங்களைப்) பற்றின பேச்சுக்களைப் பேசிக்கொண்டு பொழுது போக்குகிறார்கள். ஏனென்றால், அவர்கள் ஒன்றுமறியாத மூடர்களல்லவா? (ஸந்தானத்திற்காக (குழந்தைப்பேறு, பரம்பரையின் தொடர்ச்சிக்காக, வளர்ச்சிக்காக) விவாஹம் (திருமணம்) செய்து கொள்ள வேண்டுமென்றும், ருது காலத்தில் (கர்ப்பம் தரிக்க ஏற்ற காலத்தில்) மனைவியைப் புணர வேண்டுமென்றும், யாகத்திற்காகப் பசுவை வதிக்க வேண்டுமென்றும், ப்ரதிக்ரஹம் (தானம் பெறுவது) முதலியவற்றால் பணம் ஸம்பாதிக்க வேண்டுமென்றும், சாஸ்த்ரங்கள் சொல்லுகின்றனவாகையால் அதன்படி நடக்கிறவர்களை எவ்வாறு பழிக்கலாமென்றால், சொல்லுகிறேன், கேள்.)
உலகத்தில் ஸ்த்ரீகளை (பெண்களைப்) புணர்தல், மாம்ஸம் புசித்தல், மத்யபானம் செய்தல் (கள் குடித்தல்) ஆகிய இவை ப்ராணிகளுக்கு ராகத்தினால் (விருப்பத்தினால்) நித்யமாய் (எப்பொழுதும்) ப்ராப்தங்களாய் (அடையப்படக் கூடியவையாய்) இருக்கின்றன. ஆகையால், சாஸ்த்ரங்கள் அவற்றைச் செய்ய வேண்டுமென்று விதிக்கிறதில்லை. பின்னையோவென்றால், நியமிக்கின்றன. (ஸ்த்ரீகளை (பெண்களை) நினைத்தபடி புணரலாகாது. விதிப்படி மணம்புரிந்து, அவளையே புணர வேண்டும். அதிலும், ருதுகாலம் (கர்ப்பம் தரிக்க ஏற்ற காலம்) தவிர மற்ற காலங்களில் புணரலாகாது. யாகம் தவிர மற்ற காலங்களில் மாம்ஸத்தைப் புசிக்கலாகாது; மத்யபானமும் செய்யலாகாது என்று நியமிக்கின்றன).
ஸ்த்ரீ ஸம்போகம் (மனைவியுடன் சேர்க்கை), மாம்ஸ போஜனம் (புலால் உண்கை), மத்யபானம் (கள் குடித்தல்) ஆகிய இவற்றினின்று மீண்டிருக்கையே சாஸ்த்ரத்திற்கு ப்ரியமாயிருக்கும். (ஆனால் மனைவியைப் புணர்தல், யாகத்தில் மாம்ஸத்தைப் புசித்தல், மத்யபானஞ் செய்தல் ஆகிய இவற்றை நிந்திக்கலாமோவென்றால், அவற்றின் உபயோகத்தை அறியாமல் கேவலம் தேஹ (உடல்) ஸுகத்திற்காகவே (இன்பத்திற்காகவே) உபயோகப்படுத்துவார்களாயின், அவை நிந்திக்கத் தக்கவைகளேயாம்).
தனத்திற்குத் (செல்வத்திற்கு) தர்ம அனுஷ்டானமே (அறச்செயல்களைச் செய்வதே) பலன். (ப்ரதிக்ரஹம் (தானம் பெறுதல்) முதலியவற்றால் ஸம்பாதித்த பணத்தைக் கொண்டு பகவானுடைய ஆராதன ரூபமான தர்மங்களை அனுஷ்டிக்க வேண்டுமன்றி, அதை வேறு விதமாக உபயோகப்படுத்தலாகாது.) தர்ம அனுஷ்டானத்தினால் (அறச்செயல்களைச் செய்வதால்) சேதனா சேதனங்களின் (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களின்) உண்மையைப் பற்றின அறிவும், பகவானுடைய உண்மையைப் பற்றின அறிவும், உண்டாகும். அந்த ஜ்ஞானத்தினால் பசி, தாஹம் முதலிய ஊர்மிகள் (துன்ப அலைகள்) தீண்டப் பெறாமையாகிய சாந்தியும், உண்டாகும். சிலர் இவ்வாறு ஜ்ஞானத்திற்கிடமான தர்ம அனுஷ்டானத்தையே (அறச்செயல்களைச் செய்வதையே) ப்ரயோஜனமாகவுடைய தனத்தின் (செல்வத்தின்) உபயோகத்தை அறியாமல், விஷய போகத்திற்காக (உலக விஷயங்களை அனுபவிப்பதற்காக) உபயோகப்படுத்துகிறார்கள். அவர்கள் தேஹத்திற்கு (உடலுக்கு) எவ்விதத்திலும் தடுக்க முடியாத வீர்யமுடைய ம்ருத்யு (மரணம்) நேருவதை அறிகிறதில்லை. (ஆகையால் அவர்கள் நிந்திக்கத் தக்கவர்களே.)
யஜ்ஞத்தில் மத்யபானமும், பசு மாம்ஸ பக்ஷணமும், ப்ராணனைச் சரீரமாகவுடைய பரமாத்மாவுக்குப் பக்ஷணமாக விதிக்கப்பட்டவை. இவ்வாறே ஸ்த்ரீகளை (பெண்களைப்) புணர்வதும் ஸந்ததிக்காகவே (குழந்தைப்பேறு, பரம்பரையின் தொடர்ச்சி, வளர்ச்சிக்காகவே) அன்றி, கேவல ஸம்போகத்திற்காக (வெறும் சேர்க்கை அனுபவத்திற்காக) அன்று. இந்த அபிஸந்தியோடு (எண்ணத்தோடு) நடத்துவார்களாயின், மத்யபானம் (கள் குடித்தல்), மாம்ஸ பக்ஷணம் (புலால் உண்கை), ஸ்த்ரீ ஸம்போகம் (மனைவியுடன் சேருதல்) ஆகிய இவை நிந்தைக்கிடமாக மாட்டாது; பரிசுத்தங்களேயாம். இப்படியாயின், பசுவை வதிப்பது ஹிம்ஸையாகாது; பின்னையோவென்றால், பசு சரீரம் பெற்ற ஜீவாத்மாவின் உஜ்ஜீவனத்தின் (பெரும் நன்மையின்) பொருட்டேயாம். இவ்வாறு பரிசுத்தமான தங்கள் வர்ணாச்ரம தர்மங்களின் மர்மத்தை மூடர்கள் அறியாமல் போகத்திற்காகவே பசு ஹிம்ஸாதிகளை நடத்துகிறார்கள்.
இவ்வாறு ஏற்பட்டிருக்கிற தர்ம ஸூக்ஷ்மத்தை (அறச்செயல்களின் நுட்பமான அர்த்தங்களை) அறியாத அஸத்துக்கள் (நற்புத்தி அற்றவர்கள்) வணக்கமின்றித் தங்களைத் தாங்களே ஸத்துக்களாக (நல்லவர்களாக) அபிமானித்துக் (நினைத்துக்) கொண்டு, “நமக்கு என்ன வருமோ” என்கிற சங்கை (ஸந்தேஹம்) இல்லாமை மாத்ரமன்றியே “நமக்கு ஒரு கெடுதியும் இல்லை” என்று பெரிய நம்பிக்கையுமுடையவர்களாகி, பசுக்களுக்கு த்ரோஹம் செய்கிறார்கள். அந்தப் பசுக்கள் பரலோகம் சென்று, தங்களுக்கு த்ரோஹம் செய்த அப்புருஷர்கள் அவ்விடம் வர, அவர்களைப் பக்ஷிக்கின்றன. மற்றும், அம்மூடர்கள், பிறருடைய தேஹங்களில் (உடல்களில்) த்வேஷம் (பகைமை) கொண்டு அபிசாரம் (பிறர்க்குத் தீங்கு விளைவித்தல்) முதலிய கொடிய செயல்களைச் செய்கிறார்கள். அந்த த்வேஷம் (பகைமை) தங்களுக்கும் பிறர்க்கும் அந்தராத்மாவாயிருப்பவனும், நியாமகனும் (நியமிப்பவனும்), துக்கங்களைப் போக்கும் தன்மையனுமாகிய பரம புருஷனிடத்திலேயே போய் முடிகிறதாகையால், அவர்கள் அவனையே த்வேஷித்தவர் (வெறுத்தவர்) ஆவார்கள். மற்றும், அவர்கள் பிள்ளை, பெண்டிர் முதலிய அனுபந்தங்களோடு (உடன் வருபவை) கூடியதும், பிணம் போன்றதுமாகிய தேஹத்தில் ஸ்னேஹம் (பாசம்) வேரூன்றப் பெற்று, கடைசியில் நரகத்தில் விழுகிறார்கள்.
இவர்கள் ஜ்ஞான நிஷ்டையையும் அடைந்தவர்களல்லலர்; கேவல மூடத்தனத்திலும் சேர்ந்தவர்களல்லர்; தர்ம, அர்த்த, காமங்களையே ப்ரதானமாகக் கொண்டவர்கள்; ஒரு க்ஷணமாயினும் வ்யாபாரமில்லாமல் ஓய்ந்திருக்கும் தன்மையரல்லர்; தேஹாதிகளை (உடல் முதலியவற்றை) நிலை நின்றிருப்பவைகள் என்று நினைத்து, அவற்றின் க்ஷேமத்திற்காகவே ஓயாமல் கார்யம் செய்து கொண்டிருப்பார்கள். ஒன்றும் தெரியாத மூடர்கள்.
தத்வஜ்ஞர்களுடைய (ஜீவாத்ம, பரமாத்ம தத்வங்களை உள்ளபடி அறிந்தவர்களுடைய) அனுக்ரஹத்தினாலும் உபதேசாதிகளாலும் கரையேறுவார்கள். ஜ்ஞான நிஷ்டர்களோ (ஜீவாத்ம, பரமாத்ம தத்வங்களை உள்ளபடி அறிந்து அதில் நிலை நின்றவர்களோ) வென்றால், தாங்களே கரையேறுகிறார்கள். இரண்டிலும் சேராத இம்மூடர்களோவென்றால், தாங்களாகவும் கரையேற வழியில்லை; பிறரையடுத்தும் கரையேற மாட்டார்கள். பின்னையோவென்றால், தங்களை ஒன்றுக்கும் வழங்காதபடி பாழாக்கிவிடுவார்கள். (கடைசியில் ஸ்தாவர (புல், பூண்டு, மரம், செடி) ஜன்மத்தையே பெறுவார்கள்).
ஆத்மகாதகர்களான (ஆத்மாவையே அழிக்கும் (வீணாக்கும்)) இம்மூடர்கள், பசி, தாஹம் முதலியவைகளால் பீடிக்கப்பட்டு, தாங்கள் அஜ்ஞானிகளாயிருந்தும் (அறிவிலிகளாய் இருந்தும்), தங்களை ஜ்ஞானிகளாகப் (அறிவு ஜீவிகளாக) பாவித்துக்கொண்டு, சிலகாலம் செல்லுகையில் தங்கள் மனோரதங்களெல்லாம் பாழாகப் பெற்று, செய்ய வேண்டிய கார்யத்தைச் செய்யாமல், ஜீவ தசையிலேயே (வாழும்போதே) வருத்தப்படுவார்கள். மற்றும், அவர்கள் தாங்கள் மிகவும் ப்ரயாஸப்பட்டு (சிரமப்பட்டு, முயற்சி செய்து) ஸம்பாதித்த வீடு, வாசல், பிள்ளை, நண்பர், பெண்டிர் முதலிய பரிக்ரஹங்களை (சொத்துக்களை) எல்லாம் துறந்து, வாஸுதேவ பராங்முகர்கள் ஆகையால் (ஸர்வாந்தராத்மாவான பரமபுருஷனிடத்தில் மனம் செல்லப் பெறாதவராகையால்) நரகத்திற்குப் போகவேண்டுமென்னும் விருப்பமற்றவராயினும் நரகத்தை அடைகின்றார்கள்.
வாஸுதேவ பக்தர்களோ என்றால், அவ்வாறு நரகத்தை அடைய மாட்டார்கள்; அவ்வாஸுதேவனுடைய வாஸஸ்தானமான பரமபதத்தையே அடைவார்கள். அவர்கள் என்றும் மீண்டும் ஸம்ஸாரத்தை அடையமாட்டார்கள்.
மன்னவன் சொல்லுகிறான்:- அப்பகவான் எக்காலத்தில் எந்த நிறமுடையவனாயிருப்பான்? எத்தகைய ஆகாரமுடையவனாயிருப்பான்? எந்த நாமத்தைச் சொல்லி எந்த விதியின்படி அவனைப் பூஜிக்க வேண்டும்? இதையெல்லாம் எங்களுக்குச் சொல்வீர்களாக.
த்ரமிலன் சொல்லுகிறார்:- அப்பகவான், க்ருதயுகம், த்ரேதாயுகம், த்வாபரயுகம், கலியுகம் என்கிற நான்கு யுகங்களிலும் பலவகை நிறங்களும், பலவகை நாமங்களும், பலவகை ஆகாரங்களுமுடையவனாகி, பல வகைகளால் பூஜிக்கப்படுவான்.
க்ருதயுகத்தில் வெளுப்பு நிறமும், நான்கு புஜங்களும் உடையவனாகி, ஜடைகள் தரித்து, க்ருஷ்ணாஜினத்தினால் (மான் தோலால்) யஜ்ஞோபவீதம் (பூணூல்) அணிந்து, அக்ஷமாலை, தண்டம், கமண்டலு, இவைகளை ஏந்திக்கொண்டு ப்ரஹ்மசாரி வேஷத்துடன் விளங்குவான். அந்த க்ருதயுகத்தில் பகவானை ஆராதிக்கிற மனுஷ்யர்கள், சாந்தர்களாயிருப்பார்கள். அவர்களுக்கு எவரிடத்திலும் வைரம் (பகைமை) உண்டாகாது. அவர்கள் ஸமஸ்த பூதங்களுக்கும் நண்பர்களாயிருப்பார்கள்; எல்லாவற்றையும் ஸமமாகப் பார்ப்பார்கள்; வெளி இந்த்ரியங்களையும், உள் இந்த்ரியமான மனத்தையும் அடக்கிக் கொண்டு, த்யான யோகத்தினால் பகவானை ஆராதிப்பார்கள். பரிசுத்தனாகையால் ஹம்சம் (அன்னம்) என்றும், அழகிய நிறமுடையவனாகயால் ஸுவர்ணம் (தங்கம்) என்றும், தர்ம நிர்வாஹகன் (அறத்தை நடத்துபவன்) ஆகையால் தர்மனென்றும், யோக நிர்வாஹகனாகையால் (த்யானத்தை நியமிப்பவனாகையால்) யோகேச்வரனென்றும், ஹேய (தீய) குணங்கள் தீண்டப்பெறாதவனாகையால் அமலன் (அழுக்கற்றவன்) என்றும், ப்ரத்யக்ஷாதி (நேரில் பார்த்து அறிதல், ஊஹித்து அறிதல் முதலிய) ப்ரமாணங்களால் அறிய முடியாதவனாகையால் அவ்யக்தன் (வெளிப்படையாகத் தெரியாதவன், அறிய முடியாதவன்) என்றும், மூன்று உலகங்களிலும் உள்ளே புகுந்து நியமித்து தரித்துக் கொண்டிருப்பவனாகையால் பரமாத்மாவென்றும், அப்பொழுது பகவானைப் பாடுவார்கள்.
இப்பகவான் த்ரேதாயுகத்தில் சிவப்பு நிறமும் நான்கு புஜங்களும் உடையவனாகி, முப்புரி (மூன்று வரிகளுடைய) மேகலை (ஒட்டியானம்) அணிந்து, பொன்னிறமுள்ள கேசங்கள் (முடி) அமைந்து, மூன்று வேதங்களைச் சரீரமாகவுடையவனும், வேதங்களால் நிரூபிக்கப்படுகிற யஜ்ஞங்களுக்கு நிர்வாஹகனும் (நியமிப்பவனும்), அந்த யஜ்ஞங்களை மூர்த்தியாகவுடையவனும், ஸ்ருக்கு, ஸ்ருவம் (யாகத்தில் நெய் முதலிய ஹவிர் பாகங்களை அக்னியில் சேர்க்கப் பயன்படும் நீண்ட, மரத்தால் ஆன, கரண்டிகள்) முதலியவற்றை அடையாளங்களாக உடையவனுமாயிருப்பான். தர்மிஷ்டர்களும் (அறத்தைப் பின்பற்றுவர்களும்) ப்ரஹ்மவாதிகளுமான (பரப்ரஹ்மத்தைப் பற்றியே விவாதம் செய்பவர்களுமான) அப்பொழுதுள்ள ஜனங்கள், ஸமஸ்த தேவதைகளையும் சரீரமாக உடையவனாகையால் ஸமஸ்த தேவதா ஸ்வரூபனும் (எல்லா தேவதைகளின் வடிவானவனும்), தன்னைப் பற்றினவர்களின் வருத்தங்களைப் போக்கும் தன்மையனுமாகிய அப்பகவானை வேதங்களில் சொல்லப்பட்ட கர்மத்தினால் ஆராதிப்பார்கள். எங்கும் நிறைந்திருப்பவனாகையால் விஷ்ணுவென்றும், யஜ்ஞங்களுக்கு நிர்வாஹகன் (நியமிப்பவன்) ஆகையால் யஜ்ஞனென்றும், ப்ருச்னியின் புதல்வனாக அவதரிக்கையால் ப்ருச்னிகர்ப்பன் என்றும், ஸமஸ்த தேவதா ஸ்வரூபனாகையால் ஸர்வதேவனென்றும், மூன்றடிகளில் உலகங்களையெல்லாம் அளக்கவல்ல பெரிய அடிகளை உடையவனாகையால் உருக்ரமன் என்றும், விருப்பங்களைப் பெய்கின்றவனும் வருத்தங்களைப் போக்குகின்றவனும் ஆகையால் வ்ருஷாகபி என்றும், எப்பொழுதும் எல்லாரிலும் மேன்மையுற்று விளங்கும்தன்மையனாகையால் ஜயந்தனென்றும், பெரும் புகழுடையவனாகையாலும் பலவாறு பாடப்படுகின்றவன் ஆகையாலும் உருகாயனென்றும் அப்பொழுது பகவானைத் துதிப்பார்கள்.
த்வாபரயுகத்தில் பகவான் பீதாம்பரம் உடுத்து, தனக்கு அஸாதாரணமான ஸுதர்சன சக்ரம் முதலிய ஆயுதங்களைத் தரித்து, ஸ்ரீவத்ஸமென்னும் திருமறுவு முதலிய அடையாளங்களோடும், கௌஸ்துபம் முதலிய மற்றும் பல அடையாளங்களோடும் கூடி விளக்கமுற்றிருப்பான்.
மன்னவனே! அப்பொழுதுள்ளவர்கள் சித் (அறிவுள்ள ஜீவாத்மா), அசித் (அறிவற்ற ஜடப்பொருள்களின் மூலமான முலப்ரக்ருதி), ஈச்வரன் என்னும் மூன்று தத்வங்களின் உண்மையை அறிய விரும்பி, குடை, சாமரம் முதலிய மஹாராஜ லஷணங்கள் அமைந்த அப்பரமபுருஷனை வேதத்திலும் பாஞ்சராத்ரத்திலும் சொல்லப்பட்ட விதியின்படி ஆராதிப்பார்கள். அந்த த்வாபர யுகத்தில் ஜனங்கள் “எங்கும் நிறைந்திருப்பவனும், எல்லாவற்றையும் தன்னிடத்தில் ஏற்றுக் கொண்டிருப்பவனும், அவற்றின் விகாரங்கள் (மாறுபாடுகள்) எவையும் தீண்டப் பெறாமல் விளங்கும் தன்மையனுமாகையால் வாஸுதேவனென்னும் பெயர் பூண்ட உனக்கு நமஸ்காரம்.
ஸம்ஸாரத்தினின்று ஆத்மாக்களை இழுத்துக் கரையேற்றுகையால், ஸங்கர்ஷணன் என்னும் பெயர் பூண்ட உனக்கு நமஸ்காரம். ப்ரத்யும்னனென்றும், அநிருத்தனென்றும் அவதாரங்கள் செய்த மஹானுபாவனும், ஷாட்குண்யபூர்ணனாகையால் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனாகையால்) பகவானென்னும் பெயர் பெற்றவனுமாகிய உனக்கு நமஸ்காரம். ஸமஸ்த வஸ்துக்களுக்கும் தான் ஆதாரமாயிருப்பவனும், ஸமஸ்த வஸ்துக்களிடத்திலும் இருப்பவனும், ஆகையால் நாராயணனென்னும் நாமமுடைய உனக்கு நமஸ்காரம். இந்த்ரியங்களுக்கு எட்டாத விஷயங்களை அறியும் தன்மையனாகையால் ரிஷியென்றும், தன்னைப்பற்றினவர்களுக்கு அமிதமாகக் (அளவற்றுக்) கொடுப்பவனாகையால் புருஷனென்றும், தன்னைப் பற்றினவர்களோடு புரையறக் (இரண்டறக்) கலந்து அவர்களை நித்யஸூரிகளுக்கும், பிராட்டிக்கும் மேலாக நினைத்துப் பரிமாறும் தன்மையனாகையால் மஹாத்மனென்றும், ஸமஸ்த ப்ரபஞ்சங்களுக்கும் நியாமகனாகையால் (நியமிப்பவனாகையால்) விச்வேச்வரனென்றும், அந்த ப்ரபஞ்சங்களை (உலகை) எல்லாம் சரீரமாகக்கொண்டு அவையெல்லாம் தானே என்னும்படி இருக்கின்றமையால் விச்வனென்றும், ஸமஸ்த பூதங்களுக்கும் அந்தராத்மாவாயிருக்கையால் ஸர்வபூதாத்மனென்றும் கூறப்படுகிற உனக்கு நமஸ்காரம்.
மன்னவனே! இவ்வாறு வாஸுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன், பகவான், நாராயணன், ரிஷி, புருஷன், மஹாத்மன், விச்வேச்வரன், விச்வன், ஸர்வபூதாத்மன் என்னும் நாமங்களைச் சொல்லி த்வாபர யுகத்தில் ஜனங்கள் ஜகதீச்வரனை ஆராதிப்பார்கள்.
கலியுகத்திலும் பலவகைத் தந்தரங்களில் சொல்லிய விதியின்படி ஜனங்கள் பகவானை ஆராதிக்கிறார்கள். அதைச் சொல்லுகிறேன், கேட்பாயாக.
விவேகமுடைய ஜனங்கள், கறுப்பு நிறமுடையவனும், இந்த்ர நீலமணி போல் மிகுந்த ஒளியுடன் திகழ்கின்ற அங்கங்களோடும் (உறுப்புக்களோடும்), உப அங்கங்களோடும் (உடல் உறுப்புக்களுக்கு உதவும் சிறு பகுதிகளோடும்), ஸுதர்சனாதி அஸ்த்ரங்களோடும் (ஆயுதங்களோடும்) ஸுநந்த, நந்தாதி (வாயிற் காப்போர்) பரிவாரங்களோடும் கூடி விளக்கமுற்றவனுமாகிய ஸ்ரீக்ருஷ்ண பகவானை நாம ஸங்கீர்த்தனங்கள் நிறைந்த அர்ச்சனாரூப யஜ்ஞங்களால் ஆராதிக்கிறார்கள்.
“தன்னை வணங்கினவர்களைப் பாதுகாப்பவனே! மஹாபுருஷனே! எப்பொழுதும் த்யானம் செய்யத் தக்கதும், குடும்பம், இந்திரியம் இவை முதலியவற்றால் வரும் பரிபவங்களை (அவமரியாதைகளை) அடியோடு போக்குவதும், விரும்பின விருப்பங்களைக் கறப்பதும், கங்காதி புண்ய தீர்த்தங்களுக்கு இடமாகையால் மிக்க பரிசுத்தமும் ருத்ரன் ப்ரஹ்மதேவன் இவர்களால் துதிக்கப்படுவதும், சரணமடைந்தவர்களைக் காக்கவல்லதும், பக்தர்களின் அனிஷ்டங்களைத் (தீமைகளைத்) தடுப்பதும், ஸமஸ்த துக்கங்களுக்கும் காரணமான ஸம்ஸார ஸாகரத்தைக் (உலகியல் வாழ்வாகிற பெரும் கடலைக்) கடப்பதற்கு ஓடம் போன்றதுமாகிய உன் பாதார விந்தத்தைப் பணிகின்றேன்.
தர்மிஷ்டனே! (அறத்தை நிலை நிறுத்துபவனே!) தந்தையாகிய தசரதனுடைய வசனத்தினால், வருந்தியும் துறக்க முடியாததும், தேவர்களும் விரும்பத் தகுந்ததுமாகிய ராஜ்ய லக்ஷ்மியைத் துறந்து, அரண்யம் (காடு) சென்று, உனது அன்பு நாயகியாகிய ஜானகி விரும்பின மாயா ம்ருகத்தைத் தொடர்ந்து ஓடினதுமாகிய உன் பாதார விந்தத்தைப் பணிகிறேன்” என்று கலியுகத்தில் ஜனங்கள் பரம புருஷனுடைய பாதார விந்தங்களைத் துதிக்கின்றார்கள்.
இவ்வாறு அந்தந்த யுகங்களிலுள்ள ஜனங்கள் அந்தந்த யுகங்களுக்குத் தகுந்த நாம ரூபங்கள் அமைந்தவனும், நன்மைகளை அளிப்பவனும், அனிஷ்டங்களை (தீமைகளை) அழிப்பவனும், ஷாட்குண்யபூரணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப் பெற்றவனுமாகிய) பகவானை ஆராதிக்கிறார்கள்.
தோஷங்கள் இருப்பினும் குணங்களையே எடுத்துக் கொள்பவர்களும், ஸாரக்ராஹிகளுமான (முக்கியமான விஷயத்தை உள்வாங்கும் தன்மையர்களுமான) பெரியோர்கள் கலியுகத்தைக் கொண்டாடுகிறார்கள். ஏனென்றால், இந்தக் கலியுகத்தில் பரம புருஷனைக் கீர்த்தனம் செய்த மாத்ரத்தினால் ஜனங்கள் அவரவர் விரும்பும் விருப்பங்களையெல்லாம் பெறுகின்றார்கள்.
இந்த ஸம்ஸாரத்தில் பகவானுடைய நாம ஸங்கீர்த்தனத்தைக் காட்டிலும் மேலான உபாயம் மற்றொன்றும் இல்லை. ஏனென்றால், இந்த நாம ஸங்கீர்த்தன மாத்ரத்தினாலேயே பசி, தாஹம் முதலிய விகாரங்கள் (மாற்றங்கள்) தீண்டப்பெறாமையாகிற மோக்ஷத்தைப் பெறுவான்.
கர்ப்ப (தாய் வயிற்றில் இருத்தல்), ஜன்ம (பிறப்பு), ஜரா (கிழத்தனம்), மரணாதி (இறப்பு) ரூபமான ஸம்ஸாரம் அவனுக்கு அவ்வளவில் நசித்துப்போகும். அவன் மீளவும் ஸம்ஸாரத்தை (இந்த உலகியல் வாழ்வை) அடைய மாட்டான். இவ்வாறு கலியில் மோக்ஷ உபாயம் (மோட்சத்திற்கான வழி) ஸுகரமாய் (எளிதாகச் செய்யக்கூடியதாக) இருக்கையால், க்ருதம் முதலிய மற்ற மூன்று யுகங்களிலுள்ள ஜனங்கள், கலியுகத்தில் பிறக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். விரும்புவதோடு நிற்காமல் நாராயண பராயணர்களாய்ப் (நாராயணனையே சரண் அடைபவர்களாகப்) பிறக்கவும் பிறக்கப் போகிறார்கள். (கலியுகத்தில் ஸ்ரீமந்நாராயணனையே உபாயமாகவும் (மோட்சத்திற்கு வழியாகவும்), உபேயமாகவும் (மோட்சத்தில் அடையப்படும் பொருளாகவும்) பற்றி அவனிடத்தில் ஸர்வ பாரத்தையும் (நமது ஆத்மாவைக் காக்கும் பொறுப்பு முதலான எல்லா பொறுப்புக்களையும்) வைத்து, நிச்சிந்தர்களான (கவலையற்றவர்களான) மஹானுபாவர்கள், ஜகத் உஜ்ஜீவனத்திற்காகப் (இந்த உலகின் மேன்மைக்காக, இந்த உலகை நல்வழிப்படுத்த) பிறக்கப் போகிறார்களாகையாலும், மோக்ஷ உபாயம் (மோட்சத்திற்கான வழி) ஸுகரமாகையாலும் (எளிதில் பின்பற்றக்கூடியதாகையாகையாலும்), க்ருதாதி யுகங்களிலுள்ள ப்ரஜைகளும் கலியுகத்தில் பிறக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள்.)
எங்குப் பிறப்பார்களென்றால், சிற்சில இடங்களில் பிறப்பார்கள். பெரும்பாலும் தமிழ் தேசத்தில் பிறப்பார்கள். அதிலும், தாம்ரபரணி, பயஸ்வினி (பாலாறு), மிகவும் புண்யமான காவேரி, க்ருதமாலா (வைகை), ப்ரதீசி (மேற்கு நோக்கிப் பாயும் நதிகள்) என்னும் இம்மஹாநதிகள் எங்குப் பெருகி வருகின்றனவோ, அவ்விடத்தில் பகவத் பக்தர்கள் விசேஷமாய்ப் பிறப்பார்கள்.
மன்னவனே! அந்த மஹாநதிகளின் ஜலத்தை எவர்கள் பானம் செய்கிறார்களோ, அவர்கள் பெரும்பாலும் ஷாட்குண்ய பூர்ணனான (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனான) வாஸுதேவனிடத்தில் பக்தி உண்டாகப் பெற்று, நிர்மலமான மனமுடையர்களாய் இருப்பார்கள். (எந்த யுகத்தில் நாம ஸங்கீர்த்தனம் செய்த மாத்ரத்தினால் ப்ராணிகளுக்குப் பரம புருஷன் மீளவும் பிறவாமையாகிற மோக்ஷத்தைக் கொடுப்பானோ, அப்படிப்பட்ட கலியுகத்தில், தமிழ் தேசத்தில், தாம்ரபரணி முதலிய மஹாநதிகளின் தீரங்களில், பகவத் பக்தர்கள் பெரும்பாலும் பிறக்கப் போகிறார்கள்)
ராஜனே! எவன் ஸர்வ தர்மங்களையும் துறந்து, சரணம் அடையத் தகுந்த முகுந்தனை எல்லா விதத்தினாலும் சரணம் அடைகிறானோ, அவன் தேவதைகள், ரிஷிகள், பூதங்கள், நண்பர்கள், மனுஷ்யர்கள், பித்ருக்கள் ஆகிய இவர்கள் விஷயத்தில் கடன்பட்டவனாக மாட்டான்; அவர்களுக்குக் கிங்கரனும் (சேவகனும்) ஆகமாட்டான். தன்னைப் பற்றினாருடைய பாபங்களைப் போக்குந் தன்மையனும், ஸர்வஸ்மாத்பரனுமாகிய (எல்லோரையும் விட மேலானவனுமான) பரம புருஷன், தேவதாந்தரம் (மற்ற தேவதைகள்) முதலியவற்றில் ப்ராப்ய புத்தியையும் (மற்ற தேவதைகள் மோட்சத்தில் அடையப்படக் கூடியவர்கள் என்ற என்ணத்தையும்), ப்ராபக புத்தியையும் (மற்ற தேவதைகள் மோட்சத்திற்கு வழி என்ற என்ணத்தையும்) துறந்து, தன் பாத மூலத்தையே ப்ராப்யமாகவும் (மோட்சத்தில் அடையப்படும் பொருளாகவும்), ப்ராபகமாகவும் (மோட்சத்திற்கு வழியாகவும்) நினைத்துப் பணிகின்றவனும், தனக்கு அன்பனுமாகிய தன் பக்தன் ஒருகால் ப்ரமாதாதிகளால் (கவனக் குறைவால்) சாஸ்த்ர விருத்தமான (சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்டவைக்கு நேர் எதிரிடையாகக்) கார்யத்தைச் செய்யினும், அதை அவனுடைய ஹ்ருதயத்தில் இருந்து கொண்டு அடியோடு போக்குகிறான்.
நாரதர் சொல்லுகிறார்:- மிதிலாபுரிக்கு ப்ரபுவாகிய அம்மன்னவன், இவ்வாறு பாகவத தர்மங்களைக் கேட்டு ஸந்தோஷம் அடைந்து, ஜயந்தியின் புதல்வர்களான அம்முனிவர்களை உபாத்யாயர்களுடன் (ஆசார்யர்களுடன்) பூஜித்தான். பிறகு, ஸித்தர்களாகிய அந்தக் கவி முதலிய முனிவர்கள், ஸமஸ்த ஜனங்களும் பார்த்துக் கொண்டிருக்கையில் அந்தரத்தானம் அடைந்தார்கள் (மறைந்தார்கள்).
நிமி மன்னவன் அவர்கள் உபதேசித்த தர்மங்களை அனுஷ்டித்துப் பரமகதியான மோக்ஷத்தை அடைந்தான். மிகுந்த பாக்யமுடையவனே! வஸுதேவ! ஜாயந்தேயர்களுக்கும் (ஒன்பது யோகீச்வரர்களுக்கும்), ஜனக மஹாராஜனுக்கும் நடந்த ஸம்வாத (உரையாடல்) ரூபமான இந்தப் பாகவத தர்மங்களை எல்லாம் என்னிடத்தினின்று நீயும் கேட்டாய். நீ இந்தத் தர்மங்களை அனுஷ்டித்துக்கொண்டு வருவாயாயின், ஸ்ரத்தையுடன் கூடித் தேஹத்திலும், அதைத் தொடர்ந்த மற்றவைகளிடத்திலும் மனப்பற்றைத் துறந்து, கடைசியில் பரமபதம் பெறுவாய். (சாஸ்த்ர மர்யாதை இருக்கும் விதத்தை மொழிந்தேனன்றி, உங்களுக்கு இதை எதிர்பார்க்க வேண்டிய அவச்யமில்லை.) ஏனென்றால், தம்பதிகளாகிய உங்கள் புகழால் உலகம் முழுவதும் நிறைந்திருக்கின்றது. ஷாட்குண்ய பூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), தன்னைப் பற்றினாருடைய பாபங்களைப் போக்கும் தன்மையனுமாகிய ஸர்வேச்வரன், உங்களுக்குப் பிள்ளையாய் வந்து பிறந்தானல்லலா?
ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் புத்ர ஸ்னேஹத்தை விசேஷமாக நடத்திக் கொண்டு வருகிற நீங்கள் அவனைக் காண்கை, ஆலிங்கனம் செய்கை, அவனுடன் பேசுகை, படுக்கை, உட்காருகை, புசிக்கை ஆகிய இந்த வியாபாரங்களால் உங்கள் ஆத்மாவைப் புனிதம் செய்தீர்கள். (பகவானைப் பெறுதற்குத் தடையான பாபங்களையெல்லாம் ஸ்ரீக்ருஷ்ணனுடைய தர்சனம் முதலியவற்றால் போக்கிக் கொண்டீர்கள். இனி நீங்கள் அனுஷ்டிக்க வேண்டிய தர்மங்கள் எவை இருக்கின்றன? எவையும் இல்லை.)
தேஹானுபந்திகளிடத்தில் (உடலோடு தொடர்புடையவற்றில்) செய்யும் ஸ்னேஹம் (அன்பு, பரிவு), ஸம்ஸார பந்தத்தை (உலகியல் வாழ்வாகிற கட்டை) அன்றோ மேன்மேலும் விளைக்கும்? அப்படியிருக்க, நாங்கள் ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் செய்த புத்ர ஸ்னேஹம் (பிள்ளைப் பாசம்) எங்களுடைய பாபங்களைப் போக்கினமை எவ்வாறு பொருந்தும் என்றால், சொல்லுகிறேன்; கேளுங்கள்.
சிசுபாலன், பௌண்ட்ரகன், ஸால்வன் முதலிய மன்னவர்கள் படுத்தல், உட்காருதல் முதலிய ஸமஸ்த காலங்களிலும் ஸ்ரீக்ருஷ்ணனை த்வேஷத்துடன் த்யானித்துக் கொண்டிருப்பினும், அவனுடைய நடையழகு, புருவ நெரிப்பு முதலிய விலாஸங்கள் (அசைவுகள்), கண்ணோக்கம் முதலியவற்றையே எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருக்கையால், புத்தியில் அவையே படியப்பெற்று, அவனோடு ஸாதர்ம்யத்தை (ஒத்த நிலையை) அடைந்தார்கள். அவனிடத்தில் அனுராகம் (அன்பு) நிறைந்த மனமுடைய உங்களைப் போன்றவர்களுக்கு, அவனோடு ஸாதர்ம்யம் (ஒத்த நிலை) உண்டாகுமென்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ?
“ஸ்ரீக்ருஷ்ணன் லோக விலக்ஷணன் (உலகத்தாரை விட வேறானவன்) என்பது வாஸ்தவமே (உண்மையே). அவன் எங்களுக்குப் பிள்ளையாயிருக்கிறானே” என்றால் சொல்லுகிறேன், கேள்.
ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் கேவலம் பிள்ளையென்னும் புத்தியைக் கொள்ளாதே. அவன் யோகீச்வரர்களுக்கும் ஈச்வரன்; (ஸர்வாந்தராத்மாவாய் இருப்பவன். அவனுடைய அமானுஷ (மனித சக்திக்கு அப்பாற்பட்ட) சரித்ரங்களை நீயே கண்டிருக்கின்றாய்) அவன் ப்ரக்ருதி, புருஷர்களைக் காட்டிலும் விலக்ஷணன் (வேறானவன்); அவற்றிற்கு அந்தராத்மாவாயிருப்பினும், அவற்றின் தோஷங்கள் தீண்டப்பெறாமல் பரிசுத்தனாயிருக்கும் தன்மையன். மற்றும், அவன் ஸ்வரூபத்தினாலும் (இயற்கைத் தன்மை), ஸ்வபாவத்தினாலும் (குணங்கள்) விகாரங்களற்றவன் (மாறுபாடுகள் அற்றவன்). “இப்படியாயின் அவனுடைய அஸாதாரண ஆகாரம் (அவனுக்கே உரித்தான வடிவம்) நமக்கு ஏன் புலப்படவில்லை” என்றால், அவன் ஸங்கல்பமாகிற மாயையினால் மானிட உருவம் பூண்டு, தன்னுடைய அஸாதாரண ஆகாரத்தை (அவனுக்கே உரித்தான வடிவத்தை) மறைத்துக் கொண்டிருக்கிறான். “அப்படி மாயா மனுஷ்யனாய் (ஆச்சர்ய சக்தியுடன்) அவதரித்ததற்குக் காரணமென்” என்றால், சொல்லுகிறேன்.
பூமிக்குப் பாரமாயிருப்பவர்களும், அஸுர ஸ்வபாவர்களுமான துஷ்ட ராஜர்களை அழிக்கும் பொருட்டும், ஸாதுக்களைக் காக்கும் பொருட்டும் அவதரித்து, இவ்வுலகத்திற்கெல்லாம் ஸுகத்தை விளைக்கும் பொருட்டுத் தன் புகழை எங்கும் நிரம்பும்படி பரப்பிக் கொண்டிருக்கிறான். அத்தகைய பரம புருஷனான ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் நீ கேவலம் புதல்வனென்னும் புத்தியைக் கொள்ளாதே.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மஹாபாக்யமுடையவனே! வஸுதேவனும், மஹாபாக்யவதியான தேவகியும், இவ்வாறு நாரதர் மொழிந்ததையெல்லாம் கேட்டு மிகவும் வியப்புற்று, ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் தங்கள் புதல்வனென்னும் மோஹத்தைத் துறந்தார்கள். எவன் பரிசுத்தமான இந்த இதிஹாஸத்தை மனவூக்கத்துடன் கேட்டுத் தரித்து, அப்படியே அனுஷ்டிக்கிறானோ, அவன் இந்த ஜன்மத்திலேயே பாபங்களெல்லாம் தொலையப் பெற்று ப்ரஹ்ம (பகவானுக்கு) ஸாதர்ம்யத்தைப் (ஒத்த நிலையைப்) பெறுவான்.
ஐந்தாவது அத்தியாயம் முற்றிற்று.