புதன், 9 ஜூன், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 310

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – நான்காவது அத்தியாயம்

(விதேஹ மன்னவன் பகவானுடைய அவதார வ்ருத்தாந்தங்களைப் பற்றி வினவுதலும், த்ரமிலன் அதற்கு மறுமொழி கூறுதலும்)

மன்னவன் சொல்லுகிறான்:- பகவான் தன் ஸங்கல்பத்தினால் எந்தெந்த அவதாரங்களால் எந்தெந்த கார்யங்களைச் செய்தானோ, செய்கிறானோ, செய்யப்போகிறானோ, அந்தந்த அவதாரங்களையும், அந்தந்த அவதார சேஷ்டிதங்களையும் (செயல்களையும்) எமக்குச் சொல்வீர்களாக.

த்ரமிலன் சொல்லுகிறார்:- அளவிட முடியாத ஸ்வரூப (இயற்கைத் தன்மை), ஸ்வபாவங்களை (குணங்களை) உடைய பகவானுடைய குணங்களை எவன் கணக்கெண்ண விரும்புகிறானோ, அவன் பால (குழந்தை) புத்தி உடையவனேயாவான். ஏனென்றால், நெடுங்காலமாக மிகவும் ப்ரயத்னப்பட்டுப் (முயற்சி செய்து) பூமியிலுள்ள தூள்களை எண்ணினாலும், எண்ணக்கூடும். பலவகைப்பட்ட விசித்ர சக்திகள் அமைந்த பகவானுடைய குணங்களையோ என்றால், ஒருகாலும் எண்ண முடியாது. 

ஆதிதேவனாகிய நாராயணன், தான் படைத்த ப்ருதிவி முதலிய பஞ்சபூதங்களால் ப்ரஹ்மாண்டமாகிற பட்டணத்தைப் படைத்து, அதில் தன்னுடைய அம்சத்தினால் ப்ரவேசித்து அப்பொழுது புருஷனென்னும் பெயர் பெற்றான். இதை வைராஜ புருஷ அவதாரம் என்பர்கள். இதுவே அவதாரங்களுக்குள் முதலவதாரம்.

இந்த வைராஜ புருஷன், மூன்று லோகங்களும் பாதம் முதலிய அவயவங்களாகப் பெற்ற தேஹம் (திருமேனி) உடையவன். இவனுடைய இந்த்ரியங்களால் வ்யஷ்டி (தனித்தனி) ஜீவர்களென்றும், ஸமஷ்டி (மொத்தமான) ஜீவர்களென்றும் வழங்கி வருகிற இருவகைப்பட்ட ஜீவர்களுடைய இருவகை இந்த்ரியங்களும் உண்டாயின. இவனுடைய ஜ்ஞானம், இந்த்ரியங்களின் மூலமாய் அறிய வேண்டிய நிர்ப்பந்தமின்றி, எல்லாவற்றையும் ஸ்வயமாகவே ஸாக்ஷாத்கரிக்கும் (அறியும்) திறமையுடையது. இவனுடைய ச்வாஸ வாயுவினிடத்தினின்றே ப்ராணிகளின் பலமென்கிற தாரண (தாங்கும்) ஸாமர்த்யமும் (திறனும்), ஓஜஸ் என்கிற ப்ரவ்ருத்தி (செயலில் ஈடுபடும்) ஸாமர்த்யமும் (திறமையும்), ஈஹை (விருப்பம், முயற்சி) என்கிற சேஷ்டையும் (செயலும்) உண்டாகின்றன. அத்தகையனான இவ்வைராஜ புருஷனே, ஸத்வம், ரஜஸ்ஸு, தமஸ்ஸென்கிற ப்ரக்ருதியின் குணங்களால் ஜகத்தின் (உலகின்) ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களுக்கு (அழித்தல்) ஆதிகர்த்தாவாய் இருக்கின்றான் (உபாதான காரணமும் (மண் குடத்திற்கு மண்போல் material cause) நிமித்த காரணமுமாய் (மண் குடத்திற்கு குயவன் போல் efficient cause) இருக்கின்றான்). 

பகவான், ஜகத்தைப் (உலகத்தைப்) படைக்கும் பொருட்டு முதலில் ரஜோகுணத்துடன் கூடி ப்ரஹ்ம தேவனாயிருந்தான் (ரஜோகுணம் தலையெடுத்த ப்ரஹ்ம தேவனென்னும் ஜீவனிடத்தில் அனுப்ரவேசித்து (உள் நுழைந்து) அவனைச் சரீரமாகக் கொண்டு, அவனே என்னும்படி அமைந்திருந்தான்.) ஜகத்தின் (உலகத்தின்) ஸம்ஹாரத்திற்காகத் (அழிவிற்காகத்) தமோ குணத்துடன் கூடி ருத்ரனாயிருந்தான். (ஸம்ஹார காலத்தில் தமோ குணம் தலையெடுத்த ருத்ரனென்னும் ஜீவனிடத்தில் அனுப்ரவேசித்து (உள் நுழைந்து), அவனைச் சரீரமாகக் கொண்டு, அவனே என்னும்படி அமைந்திருந்தான்.) ஜகத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, ஸத்வகுணத்துடன் கூடி, தானே விஷ்ணுவாய் அவதரித்தான். அப்பரமபுருஷன், யஜ்ஞங்களுக்கு நிர்வாஹகன் (நியமிப்பவன்). அவ்விஷ்ணு, ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்யர்களென்கிற மூன்று வர்ணத்தவர்களின் தர்மங்களுக்கு அணை போன்றிருந்தான். இவ்வாறு அவன் ஜகத்திற்கு உபாதான காரணமாய் (மண் குடத்திற்கு மண்போல் material cause) இருக்கிறான்; அத்தகைய பரமபுருஷனிடத்தினின்று ப்ரஜைகளின் ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்கள் (அழித்தல்) உண்டாகின்றன. மற்றும், அப்பரமபுருஷன் தர்மனுடைய பார்யையும், தக்ஷருடைய புதல்வியுமாகிய மூர்த்தியென்பவளிடத்தில் நரனென்றும், நாராயணனென்றும் இரண்டு உருவங்களுடன் அவதரித்து, ஸம்ஸார பந்தத்திற்கு ஹேதுவான ஸமஸ்த கர்மங்களின் நிவ்ருத்தியை விளைவிப்பதாகிய ஜ்ஞான யோகத்தை நாரதாதிகளுக்கு உபதேசித்தான். 

நர, நாராயண ரூபியான அப்பரமபுருஷன், இப்பொழுதும் நாரதர் முதலிய ரிஷி ச்ரேஷ்டர்களால் பணியப்பட்ட பாதார விந்தங்களுடையவனாகி, பதரிகாச்ரமத்தில் இருக்கின்றான். இந்திரன் பதரிகாச்ரமத்தில் தவம் செய்கின்ற நாராயணனைக் கண்டு, “இவன் தவத்தினால் என் ஸ்தானத்தைப் பெற விரும்புகிறான்” என்று பயந்து அவனுடைய தவத்தை அழிக்கும் பொருட்டு, மன்மதனை அவனுடைய பரிவாரங்களுடன் அனுப்பினான். அம்மன்மதன், அப்ஸர ஸ்த்ரீகளின் கூட்டங்களோடும், வஸந்த ருதுவோடும் (இளவேனிற் காலம்), மந்தமாருதத்தோடும் (பசுந்தென்றலோடும்) பதரி என்று ப்ரஸித்தமான அப்பகவானுடைய ஆச்ரமத்திற்குச் சென்று, அவனுடைய மஹிமையை அறியாதவனாகையால், ஸ்த்ரீகளின் கடைக்கண்ணோக்கங்களாகிற பாணங்களால் அவனை அடித்தான். 

ஆதிதேவனாகிய நாராயணன், இந்த்ரன் செய்த அவ்வக்ரமத்தை அறிந்து, ஜிதேந்தரியன் (இந்த்ரியங்களை கட்டுப்படுத்தி வென்றவன்) என்னும் கர்வமின்றிச் சிரித்து, நடுங்குகின்ற அம்மன்மதன் முதலியவர்களைக் குறித்து “ஓ, மன்மத! ஓ மந்தமாருத! ஓ அப்ஸர மடந்தையர்களே! நீங்கள் பயப்பட வேண்டாம். நான் செய்யும் அதிதி ஸத்காரத்தைப் (விருந்தோம்பலைப்) பெற்றுக் கொள்வீர்களாக. இந்த என் ஆச்ரமத்தைச் சூன்யமாகாதபடி (இல்லாமல் போகாதபடி) செய்வீர்களாக. (அதிதிகளில்லாத ஆச்ரமம் சூன்யமேயல்லவா?)” என்றான். 

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! அபயம் கொடுப்பவனாகிய ஸ்ரீமந்நாராயணன், இவ்வாறு மொழிகையில், மன்மதன் முதலிய தேவதைகள் வெட்கத்தினால் தலை வணக்கமுற்று, மன இரக்கத்துடன் மேல்வருமாறு மொழிந்தார்கள்.

காமாதிகள் சொல்லுகிறார்கள்:- நாங்கள் அபராதம் செய்திருப்பினும், நீ எங்களிடத்தில் இவ்வாறு அனுக்ரஹம் செய்வதென்னும் இது ஆச்சர்யமன்று. ஏனென்றால், நீ காமம் (ஆசை), க்ரோதம் (சினம்) முதலிய விகாரங்கள் (மாறுபாடுகள்) அற்றவன்; ஹேயங்களுக்கு (தீயவற்றிற்கு) இடமான ப்ரக்ருதி புருஷர்களைக் காட்டிலும் விலக்ஷணமாய் (வேறாய்) இருப்பவன்; ஆத்ம ஸாக்ஷாத்காரம் (ஆத்மாவை, நேராகப் பார்த்தால் எப்படியோ அப்படி, த்யானத்தினால் மனதால் பார்ப்பது) செய்து அவ்வாத்ம அனுபவத்தினால் ஸந்தோஷமுற்ற ஜிதேந்த்ரியர்கள் (இந்த்ரியங்களை கட்டுப்படுத்தி வென்றவர்கள்) வந்து பணியப்பெற்ற பாதார விந்தங்களுடையவன். (உன் பக்தர்களுக்கே காமாதி (ஆசை, சினம் முதலிய) விகாரங்கள் (மாறுபாடுகள்) உண்டாகிறதில்லையென்றால், உனக்கு அவை எவ்வாறு உண்டாகும்?)

உன்னைப் பணிந்து, அதனால் ஸ்வர்க்காதி லோகங்களைக் கடந்து, பரமபதத்தை அடைபவர்களாகிய உன் பக்தர்களுக்கு, இந்த்ராதி தேவதைகளால் பற்பல விக்னங்களும் (தடை, இடையூறுகள்) உண்டாவது வழக்கமே. (ஏனென்றால், “இவர்கள் நம்மைக் கடந்து நமக்கும் கிடைக்க அரிதான பரமபதத்திற்குப் போகிறார்கள்” என்னும் பொறாமையினால் இந்த்ராதி தேவதைகள் உன் பக்தர்களுக்கு விக்னங்களைச் (தடை, இடையூறுகள்) செய்கின்றார்கள்.) 

உன்னைப் பணியாத மற்றவனோவென்றால், பயிரிடும் (விவசாயம் செய்யும்) குடிகள் (மக்கள்) அரசனுக்குக் கப்பம் கொடுப்பது போல, யஜ்ஞத்தில் இந்த்ராதி தேவதைகளுக்குப் புரோடாசம் (அக்னியில் ஹோமம் செய்யும் வெந்த மாவினாலான பண்டம்) முதலிய அவரவர் ஹவிர்ப்பாகங்களைக் (யாகத்தில் தேவதைகளுக்காக அக்னியில்  கொடுக்கப்படும் பொருள்) கொடுக்கிறானாகையால், அவனுக்கு அவர்களால் விக்னங்கள் (தடை, இடையூறுகள்) எவையும் நேரிடுகிறதில்லை. ஆனால், உன் பக்தனுக்கு விக்னங்கள் (தடை, இடையூறுகள்) நேரிடினும், நீ அவனுக்கு ரக்ஷகனாய் இருக்கின்றாயாகையால், அவன் அந்த விக்னங்களின் (தடை, இடையூறுகள்) தலைமேல் அடி வைத்து நடக்கிறான். இப்படியான பின்பு உனக்கு விக்னங்கள் (தடை, இடையூறுகள்) என்கிற சங்கைக்கும் இடம் உண்டோ? 

சிலர் பசி, தாஹங்களையும், குளிர், வெய்யில், மழை, காற்று, ப்ராணன், நாக்கின் போகங்கள், சின்னத்தின் போகங்கள் இவைகளையும், தவத்திற்கு விக்னம் (தடை, இடையூறுகள்) செய்கையால் கரையற்ற கடல் போல் கடக்க முடியாத எங்களையும் கடந்தும், கடைசியில் பயனற்ற கோபத்திற்கு உட்பட்டு, குளப்படியில் (பசுவின் காலடியில்) முழுகுகிறார்கள்; வருந்தியும் அனுஷ்டிக்க முடியாத தவத்தையும், சாபாதிகளால் அழித்துக் கொள்கிறார்கள். (உன்னிடத்தில் பக்தி இல்லாமல் வெறுமனே தவம் செய்கிறவர்களுக்கு இரண்டு வழிகள் ஏற்பட்டிருக்கின்றன. அவர்கள் எங்களுக்காவது, கோபத்திற்காவது உட்படுகிறார்கள். அதில் எங்களுக்கு உட்படுகிறவர்கள், காம போகங்களையாயினும் (ஆசைப்பட்ட பொருட்களை) அனுபவிக்கிறார்கள். கோபத்திற்கு உட்படுகிறவர்களோவென்றால், மிகவும் மந்த புத்தியர்களே (அறிவு அற்றவர்களே). ஏனென்றால், அவர்கள் போக (இவ்வுலகில் அனுபவித்தல்) மோக்ஷங்கள் இரண்டுமின்றி, வீணாகக் கோபத்திற்குட்பட்டுச் சாபங்கொடுப்பது முதலியன செய்து, அருந்தவத்தை எல்லாம் அழித்துக்கொள்கிறார்கள்.)

த்ரமிலன் சொல்லுகிறார்:- அந்தக் காமன் முதலியவர் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கையில், அவர்களுடைய லாவண்யாதி (அழகு முதலிய) கர்வத்தை அழிக்க விரும்பித் திறமைகள் அமைந்த பகவான், மிகவும் அற்புதமான காட்சியுடையவர்களும், நன்கு அலங்கரித்துக்கொண்டு தனக்குச் சுஷ்ரூஷை (பணிவிடை) செய்பவர்களுமாகிய சில மடந்தையர் மணிகளை அவர்களுக்குக் காண்பித்தான். தேவதைகளின் பணிக்காரர்களான அந்தக் காமாதிகள், அழகிய உருவங்கொண்ட ஸ்ரீமஹாலக்ஷ்மிகள் போன்ற அம்மடந்தையர்மணிகளைக் கண்டு, அவர்களுடைய ரூப ஸௌஷ்டவத்தினால் (உருவ அழகினால்) தங்கள் ஒளி மழுங்கப்பெற்று, அவர்களுடைய மேனியின் (உடலின்) மணத்தை (வாசனையை) மோந்து, மதி மயங்கினார்கள். 

தேவர்களுக்கும் தேவனான ப்ரஹ்ம தேவனுக்கும் நியாமகனான அந்த நாராயணன், மன்மதன் முதலியவர்களைக் கண்டு “இம்மடந்தையர்களுக்குள் உங்களோடொத்த உருவமுடைய ஒருத்தியை அழைத்துக்கொண்டு போவீர்களாக. “எல்லாரும் எங்களுக்கு மேற்பட்டவர்களேயொழிய எங்களோடொத்தவள் ஒருத்தியும் இல்லையே” என்கிறீர்களா? ஆயினும், ஒருத்தியை அழைத்துக்கொண்டு போவீர்களாயின், அவள் உங்கள் ஸ்வர்க்கத்திற்கெல்லாம் அலங்காரமாயிருப்பாள்” என்றான். 

அந்தத் தேவ ப்ருத்யர்கள் (தேவர்களின் பணியாட்கள்) அப்படியேயென்று பகவானுடைய ஆஜ்ஞையை அங்கீகரித்து, அவனை நமஸ்கரித்து, அப்ஸர மடந்தையர்களில் சிறந்த ஊர்வசி என்னும் ப்ரஸித்தி பெற்ற ஒரு மடந்தையர் மணியை அழைத்து, அவளை முன்னிட்டுக் கொண்டு, தேவலோகம் போய்ச் சேர்ந்து, தேவ ஸபையில் இந்திரனுக்கு நமஸ்காரம் செய்து, தேவர்கள் அனைவரும் கேட்டுக்கொண்டிருக்கையில், நாராயணனுடைய பலத்தை மொழிந்தார்கள். இந்திரன் அதைக் கேட்டு, வியப்புற்று பயந்தான். 

தன்னைப் பற்றினவர்களைக் கைவிடாது காக்கும் தன்மையனும், எங்கும் நிறைந்தவனுமாகிய அப்பகவான், ஹம்ஸ (அன்ன) ரூபியாகவும் (உருவினனாகவும்), தத்தாத்ரேயராகவும், ஸனகாதி மஹர்ஷிகளாகவும், எங்கள் தந்தையும் மஹானுபாவனுமாகிய ரிஷபனாகவும், ஜகத்தின் க்ஷேமத்திற்காகத் தன் அம்சத்தினால் அவதரித்து ஜீவாத்ம பரமாத்மாக்களின் உண்மையை அறிவிக்கவல்ல ஜ்ஞானயோகத்தை உபதேசித்தான். அவ்விஷ்ணுவே ஹயக்ரீவனாய் அவதரித்து, வேதங்களைப் பறித்துக் கொண்டு போன மதுவென்னும் அஸுரனைக் கொன்று, அவ்வேதங்களை மீட்டுக்கொண்டு வந்தான். மற்றும், இப்பரமபுருஷன் மத்ஸ்யாவதாரம் செய்து ஸத்யவ்ரதனென்னும் மனுவையும், பூமியையும், ஓஷதிகளையும், ரிஷிகளையும், ரக்ஷித்தான். 

வராஹாவதாரம் செய்து ப்ரளய ஜலத்தினின்று பூமியை மேலுக்குக் கொண்டு வருகின்ற இம்மஹாவிஷ்ணு, ஹிரண்யாக்ஷனை முடித்தான். மற்றும், இவன் கூர்மாவதாரம் செய்து அம்ருதம் கடைவதற்காக மந்தர பர்வதத்தைத் (மலையைத்) தன் முதுகில் தரித்தான். மற்றும் இவன் முதலையிடம் அகப்பட்டு வருந்தித் தன்னைச் சரணம் அடைந்த கஜேந்திரனை, அம்முதலையிடத்தினின்று விடுவித்தான். 

வால்கியரென்னும் ரிஷிகள் கச்யபர்க்காக ஸமித்துக் கொண்டு வரும் பொழுது, மிகவும் அற்ப சரீரர்களும், தவத்தினால் இளைத்தவர்களுமாயிருக்கையால் குளப்படியைக் (பசுவின் காலடியைக்) கடந்து வரமுடியாமல் அதில் மூழ்கி இந்திரனால் பரிஹாஸம் (கேலி) செய்யப் பெற்றுத் தன்னைத் துதிக்கையில் இப்பரமபுருஷன் அவர்களை அந்த ஆபத்தினின்று விடுவித்தான். ப்ரஹ்ம ஹத்யையில் (ப்ராஹ்மணனைக் கொன்ற பாபத்தில்) அகப்பட்டுக்கொண்ட அவ்விந்திரனையும் அதினின்று விடுவித்தான். மற்றும், ஹிரண்யகசிபுவின் க்ருஹத்தில் அடைப்புண்டு அநாதைகளாயிருந்த தேவஸ்த்ரீகளை அவ்வாபத்தினின்று விடுவித்தான். மற்றும், இவன் நரசிங்கமாய் அவதரித்து ஸாதுக்களுக்கு அபயங்கொடுக்க முயன்று, அஸுர ச்ரேஷ்டனாகிய ஹிரண்யகசிபுவைக் கொன்றான். மற்றும், இப்பரமபுருஷன், தேவாஸுரயுத்தத்தில் இந்த்ராதி தேவதைகளுக்கு உபகாரம் செய்ய முயன்று, அஸுரச்ரேஷ்டர்களை வதித்தான். மற்றும், மன்வந்தரங்கள் அனைத்திலும் தன்னுடைய அவதாரங்களால் உலகங்களைப் பாதுகாத்தான். 

வாமனனாய் அவதரித்து, யாசிக்கிற வியாஜத்தினால் (சிறு செயலால்) பலி சக்ரவர்த்தியிடத்தினின்று பூமியைப் பறித்து, அதிதியின் பிள்ளைகளான இந்திரன் முதலிய தேவதைகளுக்குக் கொடுத்தான். ஹைஹயர்களின் (ஒரு க்ஷத்ரிய வம்சம்) குலத்திற்குத் தூமகேதுவாகிய பரசுராமனாய் அவதரித்து, இருபத்தொரு தடவைகள் க்ஷத்ரியர்களை வதித்து, பூமியில் க்ஷத்ரியப் பூண்டே இல்லாதபடி செய்தான். மற்றும், அவ்விஷ்ணு ஸீதாபதியாகிய ஸ்ரீராமனாய் அவதரித்து, உலகங்களின் பாபங்களைப் போக்கவல்ல புகழ்களுடையவனாகி, ஸமுத்ரத்தில் ஸேதுவைக் கட்டி, இராவணனையும் இலங்கையிலுள்ள மற்ற அரக்கர்களையும் வதித்து, இப்பொழுது விளக்கமுற்றிருக்கின்றான். 

கர்மத்தினால் விளையும் பிறவியற்ற இம்மஹாபுருஷன், பூமியின் பாரத்தை நீக்கும் பொருட்டு, யது வம்சத்தில் அவதரித்து, தேவதைகளாலும் செய்யமுடியாத செயல்களை நடத்தப் போகிறான். மற்றும், இவன் புத்தாவதாரம் செய்து, யஜ்ஞம் (யாகம்) செய்யத் தகாதவர்களாயிருந்தும் தங்கள் நிலைமையைக் கடந்து, யஜ்ஞம் (யாகம்) செய்கின்ற தைத்யர்களை (திதியின் புதல்வர்களான அஸுரர்களை) வேத சாஸ்த்ரத்திற்கு இணங்காத வீண்வாதங்களால் மதிமயங்கும்படி செய்யப்போகிறான். மற்றும், கலியுகத்தின் கடைசியில் (கல்கியவதாரம் செய்து) பூமியைக் கைப்பற்றியாள்கின்ற கொடியவர்களை வதிக்கப்போகிறான். 

நீண்ட புஜதண்டங்களையுடையவனே! ஜகத்திற்கெல்லாம் ப்ரபுவான பரமபுருஷனுடைய செயல்களையும் அவதாரங்களையும் உனக்கு நிரூபித்துச் சொன்னேன். இத்தகைய செயல்களும் அவதாரங்களும் அளவற்றவை. அவற்றிற்கு எல்லையே கிடையாது. 

நான்காவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக