திங்கள், 7 ஜூன், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 309

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – மூன்றாவது அத்தியாயம்

(பகவானுடைய மாயையின் ஸ்வரூபத்தையும், அதைக் கடக்கும் வழியையும், ப்ரஹ்ம ஸ்வரூபத்தையும், பாகவதர் அனுஷ்டிக்க வேண்டிய கர்ம ஸ்வரூபத்தையும் நிமி மன்னவனுக்கு பரதனின் தம்பிகளான கவி, ஹரி, அந்தரிக்ஷன், ப்ரபுத்தன், பிப்பலாயனன், ஆவிர்ஹோத்ரன், த்ரமிலன், சமஸன், கரபாஜனன் ஆகியோர் கூறுதல்)

நிமி மன்னவன் சொல்லுகிறான்:- ஸர்வஸ்மாத்பரனும் (ஸர்வஸ்மாத் - எல்லாவற்றிலும், பரனும் – மேலானவனும்) ஸர்வ நியாமகனுமாகிய (எல்லாவற்றையும் நியமிப்பவனுமாகிய) ஸ்ரீமஹாவிஷ்ணுவின் மாயை மாயாவிகளையும் மதி மயங்கச் செய்யும் திறமையுடையது. அத்தகைய மாயையின் ஸ்வரூபத்தையும், அதன் கார்யத்தையும் அறிய விரும்புகிறேன். மஹானுபாவர்களாகிய நீங்கள் அதை எனக்குச் சொல்வீர்களாக. (நீங்கள் மாயையின் ஸ்வரூபத்தை முன்னமே சுருக்கமாகச் சொன்னீர்கள். ஆயினும் அதை விசதமாகத் (விரிவாகத்) தெரிந்து கொள்ள விரும்புகிறேன்). ஸம்ஸார தாபங்களால் (உலகியல் வாழ்வின் துன்பங்களால்) மிகவும் தபிக்கப்பட்டவனும் (கஷ்டப்பட்டவனும்), மரணம் அடையும் தன்மையனுமாகிய நான், பகவானுடைய கதைகளாகிற அம்ருதத்தை உட்கொண்டிருப்பதும், அந்த ஸம்ஸார தாபங்களைப் (உலகியல் வாழ்வின் துன்பங்களைப்) போக்கும் மருந்துமாகிய உங்கள் வார்த்தையைக் கேட்டுக் கொண்டிருப்பினும், அதில் த்ருப்தி உண்டாகப் பெறாதிருக்கின்றேன்.

அந்தரிக்ஷன் சொல்லுகிறான்:- ஸ்தூல சேதனா சேதன ரூபமான (பெயர் உருவங்களுடன் கூடிய அறிவுடைய ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக் கொண்ட) ஜகத்தாய் (உலகமாய்) விரிய வேண்டுமென்று விரும்பின பகவான், எதைக் கொண்டு இந்த ஜகத்தை எல்லாம் படைத்தானோ, அத்தகையதான இந்தப் பகவானுடைய மாயை ஸத்வாதி குணங்களின் ஸம்பந்தமற்றதும், சரீர ஸம்பந்தமின்றிப் பரிசுத்தமாயிருப்பதும், ஸ்வயம்ப்ரகாசமுமாகிய ஜீவனுடைய ஸ்வரூபத்தில் சரீர ஸம்பந்தம், ஸத்வாதி குணங்களுக்கு உட்பட்டிருக்கை, தேஹாத்மப்ரமம் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம்/மனக்கலக்கம்) முதலிய விபரீதங்களை விளைக்கும் தன்மையது. (பகவானுடைய மாயை, ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களின் ஸமுதாய (கூட்டு) ரூபமும், தேஹம், இந்திரியம் முதலியவைகளாய்ப் பரிணமிக்கும் தன்மையதும், ஜடமுமாயிருக்கும். சுத்த ஸ்வரூபனான ஜீவாத்மாவினிடத்தில், சரீர ஸம்பந்தம், தேஹாத்மப்ரமம் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம்/மனக்கலக்கம்) முதலிய விபரீதங்களை விளைக்கை அந்த மாயையின் கார்யமே. மற்றும், மஹத்து முதல் ப்ருதிவி வரையிலுள்ள ஜகத்தும் அதன் கார்யமே). ஜாக்ரத் அவஸ்தையில் (விழித்துக் கொண்டிருக்கும் பொழுது) மனத்தின் ஸம்பந்தமுடைய இந்திரியங்களால் ஆத்மாவல்லாததும், நிலையற்றதுமாகிய தேஹம் முதலிய வஸ்துக்களில் ஆத்மாவென்றும் நிலைநின்றது என்றும் இது முதலிய ப்ரமம் (மனக்கலக்கம்) உண்டாகின்றது. 

ஸ்வப்னாவஸ்தையில் (கனவு காணும் பொழுது) வெளி இந்திரியங்களோடு ஸம்பந்தப்படாத அந்தக் கரணத்தினால் ப்ரமம் (மனக்கலக்கம்) உண்டாகின்றது. அதுவும் ஸ்வப்னத்தில் (கனவில்) காண்கிற நிலையற்றதான தேஹாதி வஸ்துக்களில் நிலை நின்றதென்னும் இது முதலிய ப்ரமமே (மனக்கலக்கமே). பாஹ்யமான (வெளியில் தெரியும்) ப்ராஹ்மணத்வம் (ப்ரஹ்மணன், க்ஷத்ரியன், வைச்யன், நான்காம் வர்ணத்தவன்) முதலிய தர்மங்களைப் பற்றின அறிவும், ஆந்தரமான (உள் மனதில் ஏற்படும்) ஸுகம், துக்கம் முதலியவற்றைப் பற்றின அறிவுமின்றி அவற்றிற்கு மூலமான கர்ம வாஸனை ஒன்று மாத்ரமே மிகுந்திருக்கும் தசை (நிலை) ஸுஷுப்தி (ஆழ்ந்த உறக்கம்) என்னும் அவஸ்தை (நிலை) என்று கூறப்படும். அதுவும் ப்ரக்ருதியின் கார்யமே. (ஜீவனுக்கு பாஹ்ய (வெளி) இந்திரியங்கள், அந்தர் (உள்) இந்த்ரியமான மனம், அவற்றிற்கு ஆதாரமான தேஹம், அதனால் ஏற்பட்ட ஜாக்ரத் (விழிப்பு) முதலிய அவஸ்தைகள் (நிலைகள்) ஆகிய இவையெல்லாம் மாயை எனப்படுகிற ப்ரக்ருதியின் கார்யமாய் உண்டாயிருப்பவை.) 

ஜீவனுக்கு ஜாக்ரத் (விழிப்பு), ஸ்வப்னம் (கனவு), ஸுஷுப்தி (ஆழ்ந்த உறக்கம்) என்னும் இம்மூன்று அவஸ்தைகளில் (நிலைகளில்) ஏதேனுமொன்று மாறாதிருக்கும். ஆனால் இம்மூன்று அவஸ்தைகளும் (நிலைகளும்) ஜீவனுக்கு எப்பொழுது நிவர்த்திக்கும் (விலகும்) என்றால் ப்ரக்ருதியின் பரிணாமமான சரீரம் விட்டு முக்த (மோட்ச) அவஸ்தை (நிலை) எப்பொழுது நேரிடுமோ, அப்பொழுதுதான் இம்மூன்று அவஸ்தைகளும் (நிலைகளும்) நிவர்த்திக்கும் (விலகும்). தேஹ ஸம்பந்தத்தினால் விளையும் அவஸ்தைகள் (நிலைகள்) மூன்றும் தீண்டப்பெறாத முக்தியே (மோட்சமே) நான்காம் அவஸ்தை (நிலை). (ஜாக்ரத் (விழிப்பு) முதலிய அவஸ்தைகள் (நிலைகள்) மூன்றும் ப்ராக்ருத (முக்குணக்களின் சேர்க்கையான) சரீர (உடல்) ஸம்பந்தத்தினால் விளைபவையாகி, ஒளபாதிகங்கள் (ஒரு காரணத்தை முன்னிட்டு ஏற்படுபவை) ஆகையால் நிலையற்றவை. அவற்றை நிலை நின்றவையென்று நினைப்பது ப்ரமமே (மனக்கலக்கமே)). 

ஜீவ ஸ்வரூபம் (ஜீவாத்மாவின் இயற்கையான தன்மை), ராகம் (விருப்பு), த்வேஷம் (வெறுப்பு) முதலியவை தீண்டப்பெறாமல் பரிசுத்தமாயிருப்பது; ஜாக்ரத் (விழிப்பு) முதலிய அவஸ்தா (நிலைகளின்) பேதங்களின்றி (வேறுபாடின்றி) என்றும் ஒருவாறாயிருப்பது; ஜ்ஞானத்தையே வடிவாக உடையது. ஆயினும், அந்த ஜீவஸ்வரூபம் (ஜீவாத்மாவின் இயற்கையான தன்மை) ப்ரக்ருதியின் பரிணாமமான தேஹ (உடல்) ஸம்பந்தத்தைப் பெற்று, ஸ்வப்னத்தில் (கனவில்) காண்கிற யானை, குதிரை முதலியவை நிலையற்றவையாயினும், நிலை நின்றவையாகத் தோன்றுவது போல், இந்த்ரியம் முதலியவைகளால் ஜாக்ரத் (விழிப்பு), ஸ்வப்னம் (கனவு), ஸுஷுப்தி (ஆழ்ந்த உறக்கம்) என்னும் மூன்று அவஸ்தைகளை (நிலைகளை) உடையது போல் தோன்றுகிறதும், தேஹம் (உடல்), இந்த்ரியம் (புலன்கள்), மனம் இவற்றின் ஸம்பந்தம் உண்டாகப் பெறுவதும் ஆகிய இதெல்லாம் ஜ்ஞான ஸ்வரூபனான ஜீவனுடைய அனாதியான புண்ய பாபரூபமான கர்மத்தின் பலனாய் விளைகின்றது. மாயையின் கார்யமான ஜாக்ரத் (விழிப்பு) முதலிய இம்மூன்று அவஸ்தைகளும் (நிலைகளும்), முக்தி (மோட்ச) அவஸ்தையில் (நிலையில்) தொடராமையாலும், அதற்கு முன்பும் ஓர் அவஸ்தையில் (நிலையில்) மற்றோரு அவஸ்தை (நிலை) தொடராமையாலும், ஜீவனுடைய அனாதியான புண்ய, பாப ரூப கர்மத்தின் பலனாக ஏற்பட்டவையேயன்றி அவனுக்கு இயற்கையில் ஏற்பட்டவையன்று.

ஸ்வப்னத்தில் (கனவில்) அனுபவிக்கிற ஸுகம், நிலையற்றதாகி கர்மத்தின் பலனாக எவ்வாறு விளைகின்றதோ, அவ்வாறே அநித்யங்களான (நிலையற்றதான) இவ்வவஸ்தைகளும் (இந்நிலைகளும்) கர்ம பலன்களே. இவ்வாறு இவ்வுண்மையை ஆராய்ந்தறிவானாயின், அற்ப (மிகவும் குறைந்த) ஸுகங்களுக்காகச் (இன்பங்களுக்காகச்) செய்யும் வ்யாபாரத்தினின்று மீளுவான். ஸர்வ காரணன் (எல்லாவற்றிற்கும் மூல காரணம்) ஆகையால் தான் முன்னமே ஸித்தமாயிருக்கின்ற பரமபுருஷன், ஸமஸ்த பூதங்களுக்கும் (எல்லா ஜீவர்களுக்கும்) அந்தராத்மாவாகி, ப்ரத்யக்ஷாதி ப்ரமாண ஸித்தங்களான (நேராகப் பார்த்து அறியப்படக்கூடியவையான) இந்த ப்ருதிவி முதலிய மஹாபூதங்களைக்கொண்டு தனக்குச் சரீர பூதர்களான ஜீவாத்மாக்களின் புருஷார்த்த ஸித்திக்காக (அவர்கள் அடைய விரும்பும் பொருட்களை அடைவதற்காக) மேன்மையும், தாழ்மையுமான பல பூதங்களைப் படைத்தான். (ஜீவாத்மாக்கள் தன்னை ஆராதிப்பதற்கு உபயோகப்படக் கூடியவைகளான கரண (புலன்கள்) களேபரங்களைப் (சரீரம், உடல்) பெற்று, தன்னை ஆராதித்து, மோக்ஷ ரூபமான சிறந்த புருஷார்த்தத்தைப் பெறவேண்டும் என்று பரமபுருஷன் ஜகத் ஸ்ருஷ்டியைப் பண்ணினான் (உலகைப் படைத்தான்). (ஆனால் கரண களேபரங்களைப் (புலன்களையும், உடலையும்) பெற்ற ஜீவாத்மாக்கள் அனைவரும் பகவானை ஆராதித்து மோக்ஷத்தை ஏன் பெறவில்லை என்றால், சொல்லுகிறேன்.) 

இவ்வாறு ஈச்வரன் பஞ்ச மஹாபூதங்களைக் கொண்டு ஸ்ருஷ்டித்த சரீரங்களில் ஜீவன் ப்ரவேசித்து, ஜ்ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள், அந்தக்கரணம் ஆகிய பதினொரு வழிகளில் தன் ஜ்ஞானத்தைச் செலுத்தி, சப்தாதி விஷயங்களை (உலக விஷயங்களை) அனுபவிக்கிறானன்றி ஈச்வரனை ஆராதிக்கிறதில்லை. அந்த ஜீவன், பரமபுருஷனை ஆராதித்து மோக்ஷத்தைப் பெற வல்லவனாயினும், பகவானால் படைக்கப்பட்ட சரீரத்தை ஆத்மாவாக நினைத்து, அந்தர்யாமியாகிய பரமபுருஷனால் கார்யங்களில் நன்கு முயலும் திறமை அளிக்கப்பெற்ற இந்திரியங்களால் சப்தாதி விஷயங்களை அனுபவித்துக்கொண்டு, மேன்மேலும் இந்த விஷயங்களிலேயே மனப்பற்று செய்கின்றான். 

இந்த ஸம்ஸாரத்தில் ஜீவன் பூர்வ ஜன்மத்தில் ஏற்பட்ட கர்ம வாஸனைகளால் மேன் மேலும் தேஹ (உடல்) ஸம்பந்தத்திற்கு (தொடர்புக்கு) ஹேதுவான (காரணமான) வாஸனைகளோடு (முன் வினைகளின் ஆழ்ந்த பதிவுகளோடு) கூடி, புண்ய, பாப கர்மங்களைச் செய்து கொண்டு, அந்தந்த கர்மங்களின் பலனான ஸுக, துக்கங்களை அனுபவித்துக் கொண்டு, துக்கமே மிகுந்திருக்கப் பெற்றுச் சுழன்று கொண்டிருக்கின்றான். இவ்வாறு ஜீவன் புண்ய, பாப கர்மங்களால் விளைகிறவைகளும், பற்பல துக்கங்களை விளைப்பவைகளுமான தேஹங்களைப் பெற்று, ப்ரக்ருதிக்கு உட்பட்டு மஹாபூத ப்ரளயம் (ஊழிக்காலம் - விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது) வரையில் ஜன்ம, மரணங்களை மாறி மாறி அனுபவிக்கிறான். (மஹாபூத ப்ரளயம் எத்தகையதென்றால், சொல்லுகிறேன், கேள்). 

மஹாபூத ப்ரளயம் (ஊழிக்காலம்) ஸமீபித்திருக்கும் (வரும்) பொழுது, ஆதி அந்தமில்லாத (முதல், முடிவு இல்லாத) காலத்தைச் சரீரமாகவுடைய பரமபுருஷன், பஞ்ச பூதங்களும் சப்தாதி விஷயங்களுமாகிய ஸ்தூல ரூபமான (பெயர், உருவத்துடன் கூடிய, நம் கண்களால் பார்த்து அறியக்கூடிய) ப்ரபஞ்சத்தை, நாம (பெயர்), ரூப (உருவம்), விபாகம் (பிரிவு) இல்லாததும், தமஸ்ஸென்று கூறப்படுவதுமாகிய ஸூக்ஷ்ம (நுட்பமான) ப்ரக்ருதிக்குப் பிடித்திழுக்கிறான் (ஸூக்ஷ்ம ப்ரக்ருதியில் மறையும்படி ஸங்கல்பிக்கிறான்.) அப்பொழுது நூறு வருஷங்கள் வரையில் மிகவும் பொறுக்க முடியாத அனாவ்ருஷ்டி (மழை அற்ற பஞ்சம்) உண்டாகும். அத்தகைய அனாவ்ருஷ்டி (மழை அற்ற பஞ்சம்) காலத்தினால் மிகுதியும் உஷ்ணம் (வெம்மை) வளரப்பெற்ற ஸூர்யன், மூன்று லோகங்களையும் எரிப்பான். ஸங்கர்ஷணனுடைய முகத்தினின்று மேல் நோக்கி எரிகின்ற ஜ்வாலைகளையுடைய அக்னி, காற்றினால் தூண்டப்பட்டு, பாதாளம் முதல் உலகங்களையெல்லாம் தஹித்துக்கொண்டு நாற்புறத்திலும் வளர்ந்து வரும். அப்பால், ஸாம்வர்த்தகம் என்கிற ப்ரளய காலத்து மேகங்களின் கூட்டம் யானை துதிக்கை போன்ற ஜல தாரைகளுடன் நூறு வர்ஷங்கள் வரையில் மழை பெய்யும். அதனால் ப்ரஹ்மாண்டம் ஜலத்தில் மூழ்கிப் போகும். 

மன்னவனே! பிறகு, ப்ரஹ்மாண்டத்திற்குள் இருக்கும் ஜீவ வர்க்கம் ஜலத்தில் மூழ்கின அந்த ப்ரஹ்மாண்டத்தை விட்டு தமஸ் என்கிற ஸூக்ஷ்ம ப்ரக்ருதியில் மறைகின்றது. அப்பொழுது அந்த ஜீவ வர்க்கம் ஞான ஸங்கோசத்தை (குறைவை) அடைந்து, கட்டையில்லாத அக்னி போன்றிருக்கும். பிறகு, ப்ரளய கால வாயுவினால் கந்தம் என்னும் தன் குணம் பறியுண்ட பூமி ஜலமாய் விடும் (ஜலத்தில் மறையும்). அந்த ஜலமும் அந்த ப்ரளய வாயுவினால் ரஸமென்கிற தன் குணம் பறியுண்டு தேஜஸ் (ஒளி) ஆகிவிடும். (தேஜஸ்ஸில் மறையும்). 

பிறகு, ப்ரளயகாலத்திலுண்டான தமஸ்ஸினால் ரூபமென்கிற தன் குணம் பறியுண்ட தேஜஸ்ஸு வாயுவில் மறைகின்றது. தனக்குக் காரணமும் லயம் ஸமீபிக்கப் பெற்றிருப்பதுமாகிய ஆகாசத்தினால் ஸ்பர்சம் என்கிற தன் குணம் பறியுண்ட வாயு ஆகாயத்தில் மறைகின்றது. காலத்தைச் சரீரமாகவுடைய ஈச்வரனால் சப்தமென்கிற தன் குணம் பறியுண்ட ஆகாசம், தன் காரணமான பூதாதியில் (பஞ்ச பூதங்களின் சூக்ஷ்ம நிலையில்) மறைகின்றது. கர்மேந்திரியங்கள், ஜ்ஞானேந்திரியங்கள் ஆகிய பத்து இந்திரியங்களும், மனம், புத்தி இவைகளும் தத்தம் அதிஷ்டான தேவதைகளுடன் தம் காரணமாகிய ஸாத்விக அஹங்காரத்தில் பிரவேசிக்கின்றன. அவ்வஹங்காரம் தன் கார்யங்களுடன் தன் காரணமான மஹத் தத்வத்தில் மறைகின்றது. அந்த மஹத் தத்வத்திற்கும் காரணமாகிய பகவானுடைய இம்மாயை ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களுக்கு (அழித்தல்) உபயோகப்படும் தன்மையது; சிவப்பு, வெளுப்பு, கறுப்பு என்னும் இவ்வர்ணங்களையுடையது (சிவப்பு வர்ணமுடைய ரஜஸ்ஸு, வெளுப்பு வர்ணமுடைய ஸத்வம், கறுப்பு வர்ணமுடைய தமஸ்ஸு ஆகிய இக்குணங்களையே வடிவாகவுடையது.) இவ்வாறு மாயையின் ஸ்வரூபத்தையும், அதன் கார்யத்தையும் உனக்கு மொழிந்தோம். இன்னம் எதைக் கேட்க விரும்புகின்றாய்?

மன்னவன் சொல்லுகிறான்:- மஹர்ஷீ! இந்த்ரியங்களை வெல்ல முடியாதவர்களால் கடக்க முடியாத இத்தகைய ஈச்வர மாயையைப் புத்தி ஸூக்ஷ்மமில்லாத எங்களைப் போன்றவர் எப்படி ஸுகமாகத் தாண்டக் கூடுமோ, அந்த உபாயத்தைச் சொல்ல வேண்டும். (மதியுடையவன் பகவானிடத்தில் பக்தியை வளர்த்திக் கொண்டு அதனால் மாயையைக் கடந்து, அப்பகவானை அடைய வேண்டுமென்று முன்னமே மொழிந்தமையால் பக்தியே இதற்கு உபாயமென்று ஏற்படுகின்றது. ஆயினும், மதியில்லாத மந்தர்களுக்குப் பகவானிடத்தில் பக்தி உண்டாவது அரிதாகையால், ஏதேனும் ஒரு வழியில் அவர்கள் அதைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். ஆகையால், அதற்கு வழி என்னவென்று தெரிந்து கொள்வதற்காக மீளவும் வினவுகிறேன்.) 

ப்ரபுத்தன் சொல்லுகிறார்:- ஆணும் பெண்ணுமாய்க் கலந்திருக்கும் ப்ராணிகள் அனிஷ்ட பரிஹாரத்திற்காகவும் (தீமைகள் விலகவும்), இஷ்ட ப்ராப்திக்காகவும் (வேண்டியவற்றை அடையவும்) பற்பல கர்மங்களைச் செய்து கொண்டிருப்பினும், அவர்களுடைய நினைவுக்கு நேரே விரோதமாக அனிஷ்டமே (விரும்பாதவையே, தீமையே) விளைவதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். துர்லபமும் (கிடைத்தற்கு அரியதும்), மரணாந்தமான (மரணத்தில் முடியும்) ஸாஹஸ (சிரமப்பட்டு செய்யக்கூடிய) கார்யங்களைச் செய்து ஸம்பாதிக்க வேண்டியதாகையால், ம்ருத்யுவைப் (மரணத்தைப்) போன்றதும், என்றும் வருத்தத்தையே விளைப்பதுமாகிய பணத்தையும், அநித்யங்களான (நிலையற்றவையான) வீடு, வாசல், பிள்ளை, நண்பர், பசுக்கள் முதலியவற்றையும் வேண்டிய அளவு ஸாதித்துக் கொள்வானாயினும், அவற்றால் என்ன ஸுகம் உண்டாகும்? ஒரு ஸுகமும் உண்டாகாது. 

இவ்வுலகத்தில் பணம், வீடு, வாசல் முதலியவற்றால் விளையும் ஸுகம் நிலையற்றதும், கடைசியில் துக்கத்திற்கே ஹேதுவுமாய் (காரணமாய்) இருப்பது போல் ஸ்வர்க்கம் முதலிய பரலோக ஸுகமும் நிலையற்றதென்றே அறிய வேண்டும். ஏனென்றால், அதுவும் ப்ராணிகளுடைய கர்மத்தினால் விளையுமல்லவா? மற்றும், அது வர்த்தமான தசையிலும் (நிகழ் காலத்திலும்) துக்க ரூபமாகவே இருக்கும். ஏனென்றால், மண்டல ஈச்வரர்கள் (அரசர்கள்) தன்னைப் போலவே மற்றவர்களும் ஸுகிப்பதைக் கண்டு தத்தம் ஸுகத்தில் அவ்வளவாக ஆதரம் (ஊக்கம்) உண்டாகப் பெறாதிருப்பது போலவே, ஸ்வர்க்காதி லோகங்களிலும் தங்களைப்போல் பிறரும் ஸுகிப்பதைக் கண்டு, தங்கள் ஸுகத்தை ஆதரிக்க மாட்டார்கள். மற்றும், தங்களைக் காட்டிலும் மேற்பட்ட ஸுகம் அனுபவிப்பவர்களைக் கண்டு தங்கள் ஸுகத்தை இதென்ன ஸுகமென்று உபேக்ஷிக்கும்படியாய் (பொருட்படுத்தாதபடியாய்) இருக்கும். இதுவும் நிலை நிற்பது அன்றே என்று நினைக்கில், பரிஹரிக்க (போக்க) முடியாத மஹத்தான பயமும் உண்டாகும்.

ஸ்வர்க்காதி பரலோக ஸுகமும் இவ்வாறு இணையும் (equal) எதிரும் (opposite) அழிவும் உடையதாகையால், துக்க ரூபமாகவே இருக்கும். இவ்வாறு இஹ (இந்த உலக), பர(மற்ற உலக) ஸுகங்களிரண்டும் நிலையற்றதாகையால், அதில் வெறுப்புற்று, நிலை நின்றதாகிய சிறந்த நன்மையை அறிய விரும்பி, வேதங்களை நன்குணர்ந்தவனும், யோகத்தினால் பரப்ரஹ்மத்தின் ஸ்வரூப (இயற்கைத் தன்மை), ரூப (திருமேனி, திவ்ய மங்கள விக்ரஹம்), குண, விபூதிகளை (ஆளுமை) ஆராய்ந்தறிந்தவனும், ராக (விருப்பு), த்வேஷாதிகள் (வெறுப்பு) தீண்டப் பெறாதவனுமாகிய குருவைப் பற்றவேண்டும். அந்த குரு (ஆசான்) ஸந்நிதியில் (அருகில்), அந்த குருவையே தனக்குத் தெய்வமாக நினைத்து, அவனுக்குக் கபடமின்றிப் பணிவிடைகள் செய்து, பாகவத தர்மங்களை அப்யஸிக்க (கற்க) வேண்டும். ஸர்வாந்தராத்மாவும் (எல்லாவற்றையும் உள் இருந்து நியமிப்பவனும்), தன்னைப் பற்றுகிறவர்களுக்குத் தன்னைக் கொடுக்கும் மஹா உதாரனுமாகிய (பெரும் கொடை வள்ளலுமாகிய) பரமபுருஷன், அப்பாகவத தர்மங்களால் ஸந்தோஷம் அடைவான். (அவையாவை எனில், சொல்லுகிறேன்).

முதலில் தேஹம் (உடல்), தேஹானுபந்திகள் (உடலுடன் தொடர்பு உடையவை) ஆகிய அனைத்திலும் மனப்பற்றில்லாமையை அப்யஸிக்க (பயில) வேண்டும். மன வருத்தமுற்ற ப்ராணிகளிடத்தில் தயையையும், தன்னோடொத்தவர்களிடத்தில் ஸ்னேஹத்தையும் (அன்பையும்), தனக்கு மேற்பட்டவர்களிடத்தில் வணக்கத்தையும், அவரவர்களுக்குத் தகுந்தபடி நிஷ்கபடமாக (சூது வாது இன்றி) அப்யஸிக்க (பயிற்சி செய்ய) வேண்டும். ஸ்னானாதிகளால் (குளிப்பதால்) விளையும் பாஹ்ய (வெளி) சுத்தியும், விஷ்ணு சிந்தனத்தினால் (மனது சிந்திப்பதால்) விளையும் அந்தர (உள் மனதின்) சுத்தியும் ஆகிய இரண்டு விதமான சுத்தி, தத்தம் வர்ணாச்ரமங்களுக்கு உரிய தர்மங்களை அனுஷ்டிக்கை, உபவாஸாதி ரூபமான (உண்ணா நோன்பு முதலிய) தவம், ஸுக, துக்காதிகளைப் பொறுக்கை, மனோ (மனது), வாக் (சொல்), காயங்கள் (செயல்) மூன்றும் ஒத்திருக்கையாகிற ஆர்ஜவம் (நேர்மை), ருதுகாலம் (மனைவி கர்ப்பம் தரிக்க ஏற்ற காலம்) தவிர மற்ற காலங்களில் ஸ்த்ரீ ஸங்கமில்லாமை (மனைவியுடன் கூடாமை), ப்ராணிகளுக்கு த்ரோஹம் (தீமை) செய்யாமை, த்வந்தவங்கள் (இரட்டைகள்) என்கிற சீத (குளிர்), உஷ்ண (வெம்மை), ஸுக, துக்காதிகளால் ஸ்வபாவம் மாறப்பெறாமல், அவைகளைத் துல்யமாகப் (ஸமமாகப்) பாவிக்கை, ஸமஸ்த சேதனங்களிலும் ஸமஸ்த அசேதனங்களிலும் ஈசுவரன் ஒருவாறாகவே அமைந்திருக்கிறான் என்னும் பாவனை, ப்ரக்ருதியின் பரிணாமமான தேவ, மனுஷ்யாதி ஸகல சரீரங்களிலும் ஜீவாத்மாக்கள் அனைவரும் ஜ்ஞானத்தையே வடிவாகவுடையவராகையால் ஒருவாறாயிருப்பவரென்னும் பாவனை, அந்த ஜீவாத்மாக்கள் அனைவரிடத்திலும் ஈச்வரன் உள்ளே புகுந்து ஒருவாறாகவே நியமித்துக் கொண்டிருக்கிறான் என்னும் பாவனை, தேஹம் தவிர மற்ற பரிக்ரஹங்கள் (சொத்து, செல்வம்) இல்லாமை, க்ருஹம் முதலியவற்றில் அபிமானமற்றிருக்கை, பரிசுத்தமான மரவுரிகளை உடுத்திக் கொள்தல், ஏதேனும் தெய்வாதீனமாய்க் கிடைத்ததைக் கொண்டு ஸந்தோஷமுற்றிருக்கை, பகவானுடைய ஸ்வரூப (இயற்கைத் தன்மை), ரூப (திருமேனி, திவ்ய மங்கள விக்ரஹம்), குண, விபூதிகளை (ஆளுமை) அறிவிக்கிற சாஸ்த்ரத்தில் மிகுந்த ஆதரம் (மரியாதை), தேவதாந்தர (பகவானான ஸ்ரீமந்நாராயணனைத் தவிர மற்ற தேவதைகள் விஷயமானவற்றில்) ஈடுபாடு இன்மை, ப்ராணாயாமங்களால் மனத்தையும், பொய் பேசாமையால் வாக்கையும், அனீஹையினால் (பலனில் ஆசையின்மையால்) கர்மத்தையும், உபவாஸாதிகளால் சரீரத்தையும் அடக்குகை, ப்ராணிகளுக்கு ஹிதம் செய்கையாகிற ஸத்யம், அந்தக்கரண (மனதை) நிக்ரஹம் (அடக்குதல்), பஹிரிந்த்ரிய (வெளி இந்த்ரியங்களை) நிக்ரஹம் (அடக்குதல்), அற்புதச் செயலுடையவனாகிய பகவானுடைய அவதாரம், செயல்கள், குணங்கள் இவற்றைக் கேட்கை, கீர்த்தனம் செய்கை, த்யானிக்கை, செயல்களை எல்லாம் பகவானுக்காகச் செய்கை (செய்யும் செயல்களையெல்லாம் பகவானிடத்தில் அர்ப்பணம் செய்கை), யாகம், தானம், தவம், குளம், கிணறு முதலியன வெட்டுவிக்கை, மற்றும் தனக்கு இஷ்டமான நடத்தை, மனைவி, மகன், மனை, ப்ராணன் ஆகிய இவற்றையெல்லாம் பகவானிடத்தில் அர்ப்பணம் செய்கை, இவ்வாறு ஸ்ரீக்ருஷ்ணனையே தனக்கு நாதனாகவுடைய மனுஷ்யர்களிடத்தில் ஸ்னேஹம் (அன்பு), ஜங்கம (அசைபவை) ஸ்தாவர (அசையாதவை) ரூபமான மற்ற பூதங்களிடத்தில் வெகுமதி, ஸாதுக்களான பெரியோர்களிடத்தில் பரிசுத்தமான பகவானுடைய புகழைப்பற்றி ஒருவர்க்கொருவர் பேசிக் கொள்கை, அந்தப் புகழை அனுபவிக்கையால் ஒருவர்க்கொருவர் அனுராகமும் (அன்பும்), ஒருவர்க்கொருவர் ஸந்தோஷமும் உண்டாகப்பெறுகை, ஆத்யாத்மிகம் முதலிய தாபங்களினின்று {ஆத்யாத்மிகம் (சரீரத்திற்கு ஏற்படும் தலைவலி, சளி முதலிய நோய்கள் மற்றும் மன நோய்களான காமம், கோபம், பயம் முதலியன)  ஆதிதெய்விகம் (குளிர், சூடு, மழை முதலியவற்றால் ஏற்படும் துன்பங்கள்), ஆதிபௌதிகம் (ம்ருகம், பறவை, மனிதர் முதலியவற்றால் வரும் துன்பங்கள்) என்ற மூன்று வகையான துன்பங்களிலிருந்து மனத்தைத் திருப்பிக் கொள்கை, பாபங்களின் ஸமூஹங்களைப் போக்கவல்ல மஹானுபாவனாகிய பரமபுருஷனைத் தாங்கள் நினைப்பதும், ஒருவர்க்கொருவர் நினைவு மூட்டுவதுமாகி ஸாதன (உபாயமான, வழியான) பக்தியால் ப்ரீதி ருபமான (அன்பு வடிவான) பக்தி உண்டாகப் பெற்று, அதனால் உடம்பெல்லாம் மயிர்க்கூச்சம் உண்டாகப் பெறுகை, உலகத்தவர்களைக் காட்டிலும் விலக்ஷணர்களாகி (வேறுபட்டவர்களாகி) ஒருகால் அச்சுதனைப் பற்றின சிந்தையால் ரோதனம் செய்கை (அழுகை), ஒருகால் சிரிக்கை, ஒருகால் ஸந்தோஷப்படுகை, ஒருகால் அவனைப்பற்றிப் பேசுகை, ஒருகால் நர்த்தனம் (நடனம்) செய்கை, ஒருகால் கானம் செய்கை (பாடுகை), ஒருகால் அந்தப் பகவானுடைய ஸ்வரூப, ஸ்வபாவாதிகளை ஆராய்கை, கர்மத்தினால் விளையும் பிறவியற்ற அப்பரமபுருஷனை மனத்தினால் பெற்று ஸந்தோஷமுற்றிருக்கை, ஆகிய இவ்விதமான பாகவத தர்மங்களை அப்யஸித்துக்கொண்டு (இடைவிடாது பயிற்சி செய்து கொண்டு) ஸ்ரீமந்நாராயணனுடைய ஆராதனத்தில் நிலைநின்று, அந்த ஆராதனத்தினால் உண்டான பக்தியினால் எவ்விதத்திலும் கடக்க முடியாத பகவானுடைய மாயையை அனாயாஸமாகத் (எளிதாகத்) தாண்டுவான்.

ஜனக மன்னவன் சொல்லுகிறான்:- நாராயணனென்று பேர்பெற்றவனும், பரப்ரஹ்மமென்று கூறப்படுகின்றவனுமாகிய பரமாத்மாவின் ஸ்வரூப நிச்சயத்தை (இப்படிப்பட்டவன் என்று உறுதியாக முடிவு செய்யப்பட்டதை) எமக்குச் சொல்வீர்களாக. நீங்கள் பரப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தை நன்றாக ஆராய்ந்தறிந்தவர்களல்லவா?

பிப்பலாயனன் சொல்லுகிறார்:- மன்னவனே! சேதனா சேதன ரூபமான இந்த ஜகத்தின் (உலகின்) ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ப்ரளயம் (அழித்தல்) இவற்றிற்குக் காரணமும், தனக்குத் தானே காரணமன்றி வேறு காரணமற்றதும், ஸ்வப்னம் (கனவு), ஜாகரம் (விழிப்பு), ஸுஷுப்தி (ஆழ்ந்த உறக்கம்) இவற்றைக் காட்டிலும் வேறுபட்டதான முக்த (மோட்ச) அவஸ்தை (நிலை) ஆகிய எல்லா அவஸ்தைகளிலும் (நிலைகளிலும்) ஜீவாத்மாக்களிடத்தில் அந்தராத்மாவாய் அமைந்திருப்பதும், தேஹம், இந்திரியங்கள், ப்ராணன்கள், ஹ்ருதயம் இவை எதனுடைய தூண்டுதலால் முயற்சி கொள்கின்றனவோ அத்தகையதுமாகிய வஸ்துவே பரப்ரஹ்மம் என்று அறிவாயாக. 

மனம், வாக்கு முதலிய கர்மேந்த்ரியங்கள், கண், ஜீவன், ப்ராணன்கள், செவி முதலிய மற்ற இந்தரியங்கள் இவையெல்லாம், அக்னியின் (நெருப்பின்) ஜ்வாலைகள் (கொழுந்துகள்) அக்னியை எப்படி அறிய முடியாதோ அதைப்போல், இப்பரப்ரஹ்மத்தை அறிய வல்லவையல்ல. வேதாந்த ரூபமான சப்தமும் “இப்பரப்ரஹ்மம் கண் முதலிய ஜ்ஞானேந்திரியங்களாலாவது, வாக்கு முதலிய கர்மேந்திரியங்களாலாவது அறியப்படுவதன்று” என்று உலகத்தில் தத்தம் விஷயங்களை அறியவைகளாக ஏற்பட்டிருக்கின்ற சக்ஷுராதி (கண் முதலிய) இந்தரியங்களுக்கு விஷயம் அன்று என்று தெரிவிக்கின்றது. அவ்வழியால் அது பரமாத்ம விஷயத்தில் ப்ரமாணமாகின்றது. “வேதாந்தங்கள் இந்த்ரியாதிகளுக்கு விஷயம் அன்று என்று நிஷேதிக்கிறதாயின் (மறுக்கிறதாயின்), அவை பரப்ரஹ்மத்தை எப்படி அறிவிப்பவையாம்?” என்றால், இந்த்ரியாதிகளுக்கு விஷயம் அன்று என்று நிஷேத ரூபமான (மறுப்பதாகிற) அர்த்தத்தின் மூலமாய் அதை அறிவிக்கின்றன. 

பரப்ரஹ்மம் இல்லாத பக்ஷத்தில், இந்த்ரியாதிகளுக்கு விஷயம் அன்று என்று எதை நிஷேதிக்கும் (மறுக்கும்)? நிஷேதமே (மறுப்பே) ஸித்திக்காது. ஆகையால், நிஷேத ரூபமான (மறுப்பதாகிற) அர்த்தத்தினால் பரப்ரஹ்மம் உண்டு என்று வேதாந்தங்கள் அறிவிக்கின்றன. (இவ்வாறு பரப்ரஹ்மம், ப்ரத்யக்ஷம் (நேரில் பார்த்து அறிதல்) முதலிய மற்ற ப்ரமாணங்களால் அறிய முடியாதது என்றும், வேதாந்த ரூபமான சப்த ப்ரமாணத்தினால் மாத்ரமே அறியக்கூடியதென்றும் ஏற்படுகின்றது.) 

இப்படியாயின், யோக அப்யாஸத்தினால் (த்யானப் பயிற்சியினால்) பரிசுத்தமான மனத்தினால் ப்ரஹ்மத்தை அறியக்கூடுமென்று வேதாந்தங்கள் முறையிடுகின்றனவாகையால், மனமும் ப்ரமாணமாயிருக்க, சப்த ப்ரமாணம் ஒன்றே உள்ளதென்று எப்படி நிர்ணயிக்க முடியுமென்றால், யோக பரிசுத்தமான மனம் (த்யானப் பயிற்சியினால் அழுக்குகள் விலகி தூய்மை அடைந்த மனம்) ப்ரமாணம் என்று அறிவதற்கும், வேதாந்த சப்தமே காரணமாகையால் வேதாந்த சப்தமொன்றே ப்ரமாணம் என்று நிர்ணயிக்கத் தடையில்லை. ஸத்வ, ரஜஸ், தமஸ்ஸுக்களென்கிற மூன்று குணங்களே வடிவாயிருக்கப் பெற்றதும், கார்யங்களுக்கு ஆதாரமாகையால் ஸூத்ரம் (மாலைக்கு ஆதாரமான நூல்) போன்றதும், முதலில் இருப்பதுமாகிய ப்ரதானம் (மூலப்ரக்ருதி), மஹத்து, அஹங்காரம் இவைகளும், மற்றவைகளும் தத்வங்களென்றும், ஜீவன் நன்மை தீமைகளை அறிந்து, கர்மங்களை அனுஷ்டித்து, அவற்றின் பலனான ஸ்வர்க்காதிகளை அனுபவிப்பவனென்றும், ஜ்ஞானேந்த்ரிய, கர்மேந்திரியங்களால் சப்தாதி விஷயங்களைப் பெற்று, அவற்றின் பலனான ஸுக, துக்கங்களை அனுபவிப்பவனென்றும் சொல்லுகிறார்கள். 

இத்தகைய சேதனாசேதனங்களெல்லாம் (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்கள் எல்லாம்) சிந்திக்க முடியாத பற்பல சக்திகளையுடைய பரப்ரஹ்மத்திற்குச் சரீரமாகி, அதனால் நியமிக்கப்பட்டிருக்கின்றன. பரப்ரஹ்மமோவென்றால், அவற்றைக் காட்டிலும் வேறுபட்டு, விலக்ஷணமாயிருக்கும் (அவற்றை விட வேறாய் இருக்கும்). ஜீவன் உத்பத்தி, மரணம், வளர்தல், குறைதல் முதலிய விகாரங்களற்றவன் (மாறுபாடு அற்றவன்). ஏனென்றால், அந்த ஜீவன் வருவதும், போவதுமாயிருக்கின்ற தேஹங்களின் வருங்காலம், போகுங்காலம் முதலிய அந்தந்த காலங்களை அறிந்தவன். (மூன்று அவஸ்தைகளையுடைய வஸ்துக்களை ஸாக்ஷாத்கரிக்கும் தன்மையுடையவன், அந்த அவஸ்தைகளை அடையமாட்டான்). அவன் தேவாதி சரீரங்களில் மோக்ஷம் வரையில் ஸர்வ காலமும் மாறாதிருப்பவன். அவன், கேவல ஜ்ஞான ஸ்வரூபன் (அறிவு வடிவானவன்). ப்ராணவாயு ஒன்றாயினும், ஸ்தான (இருக்கும் இடத்தின்) பேதத்தினாலும் (வேறுபாட்டாலும்), கார்ய (செயலின்) பேதத்தினாலும் (வேறுபாட்டாலும்) பல பிரிவுகளைப் பெறுவது போல, ஜீவனும் ஒருவாறாயிருப்பவனாயினும், இந்திரிய பலத்தினால் “காண்கிறேன், கேட்கிறேன்” என்னும் இவை முதலிய ஜ்ஞான விகற்பங்களுக்கு (அறிவின் மாறுபாடுகளுக்கு) இடமாயிருக்கின்றான். 

அண்டஜம் (முட்டையிலிருந்து தோன்றுபவை – பறவைகள்), ஜராயுஜம் (கருவறையிலிருந்து தோன்றுபவை – மனிதன், விலங்கு), உத்பிஜம் (முளையிலிருந்து தோன்றுபவை - மரம், செடி), ஸ்வேதஜம் (வேர்வையிலிருந்து தோன்றுபவை – புழு, பூச்சிகள்) என்று பலவகைப்பட்ட அந்தந்த சரீரங்களில் ஜீவன் ப்ராண வாயு மூலமாய் ப்ரவேசித்து, அவற்றைத் தரித்துக் கொண்டிருக்கிறான். அவன் விகாரங்கள் (மாறுபாடுகள்) இன்றி என்றும் ஒருவாறாயிருப்பவன். (இத்தகையனான ஜீவன் எல்லார்க்கும் அனுபவ ஸித்தனாயிருப்பானோ என்றால், அது கிடையாது.) இயற்கையில் விகாரங்கள் (மாறுபாடுகள்) அற்றவனாயினும், விகாரங்களுக்கு (மாறுபாடுகளுக்கு) இடமாகி, இருந்தும் இல்லாதவன் போலவே இருப்பான்; ஸ்பஷ்டமாகத் (தெளிவாகத்) தோன்ற மாட்டான். “ஆனால், அந்த ஜீவன் எப்பொழுது ஸ்பஷ்டமாகத் (தெளிவாகத்) தோன்றுவான்? அவ்வாறு தோன்றாமைக்குக் காரணம் என்?” என்றால்; இந்த்ரியங்களின் கூட்டமும், அஹங்காரம் முதலிய மனோவ்ருத்திகளும் (மனதின் எண்ண அலைகளும்) ஒழிந்து, சரீர ஸம்பந்தமும் தொலைகையில், ஜீவாத்மாக்களாகிய நமக்கு நமது உண்மையான ஸ்வரூபம் ப்ரகாசிக்கும்.

மனோவ்ருத்திகளும் (மனதின் எண்ண அலைகளும்), தேஹாத்ம ப்ரமமுமே (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கமுமே) ஆத்ம ஸ்வரூபம் (ஆத்மாவின் உண்மையான தன்மை) தோன்றாமைக்குக் காரணம். தேஹாத்மாபிமானம் (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கம்) நீங்குமாயின், தேஹத்தின் தோற்றமில்லாமல் ஆத்ம ஸ்வரூபம் (ஆத்மாவின் உண்மையான தன்மை) உள்ளபடி ப்ரகாசிக்கும். (ஆனால், “அஹங்காரம் முதலிய மனோ வ்ருத்திகள் (மனதின் எண்ணங்கள்) எப்பொழுது நிவர்த்திக்கும் (விலகும்)? ஆத்ம ஸ்வரூபத்தை (ஆத்மாவின் உண்மையான தன்மையைப்) பற்றின நினைவு எதனால் உண்டாகும்?” என்றால், சொல்லுகிறேன்.)

பணம் முதலியவற்றில் விருப்பங்களைத் துறந்து, பத்மநாபனுடைய பாதார விந்தங்களில் என்றும் மாறாத பக்தி உண்டாகப்பெற்று, அதனால் ஸத்வாதி குணங்கள் மூலமாய் விளைகிற புண்ய, பாப கர்மங்களால் உண்டாகிற ராக (விருப்பு), த்வேஷாதிகளான (வெறுப்பு) மன மலங்களை (மனதின் அழுக்குகளை) அழிக்க வேண்டும். எத்தகைய தோஷங்களும் இன்றி நிர்மலமான கண்களையுடையவனுக்கு ஸூர்யனுடைய வெளிச்சம் தோற்றுவது போல், அவ்வாறு ராக, த்வேஷாதிகள் (விருப்பு, வெறுப்பு) அற்று, பரிசுத்தமாயிருக்கின்ற மனத்தில் தேஹாதி உபாதிகளின்றி, பரிசுத்தமாயிருப்பதும், பகவானுக்குச் சரீரமாயிருப்பதுமாகிய ஆத்ம ஸ்வரூபம் உள்ளபடி தோற்றும். பக்தி, நிர்மலமான மனத்தினால் ஆத்ம ஸ்வரூபத்தின் உண்மையை ஸாக்ஷாத்கரிக்கலாம் (நேராகப் பார்த்து அறியலாம்).

மன்னவன் சொல்லுகிறான்:- ஜீவன் எதை அனுஷ்டித்தால் சீக்ரத்தில் புண்ய, பாப கர்மங்களை உதறி, மனம் பரிசுத்தமாகப் பெற்று, ஸம்ஸார பந்தத்திற்கு (உலகியல் இன்பத்திற்கு) ஹேதுவான ஸமஸ்த கர்மங்களின் நிவ்ருத்திக்குக் (விலகுகைக்குக்) காரணமும் பரபக்தியென்றும் பரஜ்ஞானமென்றும் பெயருடையதுமாகிய ஜ்ஞானத்தைப் பெறுவானோ, அத்தகைய கர்மயோகத்தை எங்களுக்குச் சொல்லுவீர்களாக. முன்பு என் தந்தையாகிய இக்ஷ்வாகுவின் அருகில் ஸனகாதி முனிவர்கள் வந்திருக்கும் பொழுது இவ்வாறே இந்தக் கேள்வியை நான் கேட்டேன். ப்ரஹ்ம புத்ரர்களாகிய அந்த ஸனகாதி முனிவர்கள் அதற்கு மறுமொழி கூறவில்லை. அதற்கு என்ன காரணமோ அதையும் சொல்வீர்களாக.

ஆவிர்ஹோத்ரன் சொல்லுகிறார்:- கர்மம் என்றும், அகர்மம் என்றும், விகர்மம் என்றும், கர்மம் மூன்றுவிதமாக வேதத்தில் வழங்கி வருகின்றது. இது உலகத்தில் வழங்கி வருவதன்று. 

1. அவற்றில் பலனை உத்தேசித்துச் செய்யும் கர்மம் கர்மம் என்றும், 

2. பலனை எதிர்பாராமல் ஜ்ஞானத்தை முன்னிட்டுச் செய்யும் கர்மம் அகர்மம் என்றும், 

3. நிஷித்த (செய்யக்கூடாதது என்று விலக்கப்பட்ட) கர்மம் விகர்மம் என்றும் கூறப்படும். 

வேதம் ஈச்வரனுடைய அபிப்ராய ரூபமாகையால், அதை உள்ளபடி அறிவது அருமை. அதில் வழங்கி வருகின்ற மூன்று வகையான கர்மங்களிலும் அறிய வேண்டிய அம்சங்கள் பலவாகையால், அவற்றை ஆராய்ந்தறிவது எளிதில் ஆகக் கூடியதன்று. ஆகையால் அவ்விஷயத்தில் பண்டிதர்களும் மதி மயங்குகிறார்கள். அதைப்பற்றி நீ பாலனாயிருப்பதை அறிந்து, உனக்குப் பிடிபடாது என்று உன் கேள்விக்கு மறுமொழி கூறவில்லையேயன்றி, வேறில்லை. (பரம புருஷனுடைய ஆராதன ரூபமான கர்மயோகம், வைதிகம் என்றும், தாந்த்ரிகம் என்றும் இருவகைப்பட்டிருக்கும். அவற்றில் வைதிகம், நித்யம் என்றும், நைமித்திகம் என்றும், காம்யம் என்றும் மூன்று வகைப்பட்டிருக்கும்.) 

ஹிதத்தையும் (நன்மையையும்), அஹிதத்தையும் (தீமையையும்) அறிவிக்கும் தன்மையதாகிய இவ்வேதம் ப்ரத்யக்ஷாதி (நேரில் பார்த்து அறிவது, ஊஹித்து அறிவது முதலிய) ப்ரமாணங்களால் அறிய முடியாத அர்த்தங்களை மொழியும் தன்மையது. அது அறியாத மூடர்களுக்கு அவ்வர்த்தங்களைத் தெளிவாக அறிவிக்கின்றது. ஆயினும், அப்பொருள்கள் ப்ரத்யக்ஷாதி (நேரில் பார்த்து அறிவது, ஊஹித்து அறிவது முதலிய) ப்ரமாணங்களுக்கு எட்டாதவையாகையால், அதன் அபிப்ராயத்தை எளிதில் அறிய முடியாது. அவ்வேதம் ஸ்வர்க்காதி பலன்களைக் குறித்து யாகாதி கர்மங்களை விதிக்கினும், அதற்கு அதில் அபிப்ராயமில்லை. உலகத்தில் குழந்தைகளுக்கு ஒளஷதம் (மருந்து) கொடுக்கிறவர்கள் “இதைச் சாப்பிட்டால், உனக்குக் கற்கண்டு கொடுப்பேன்; லட்டு கொடுப்பேன்” என்று ஆசைமூட்டி ஒளஷதம் (மருந்து) கொடுப்பது போல, வேதம் ஸ்வர்க்காதி பலன்களால் ஆசை மூட்டி, புண்ய, பாப கர்மங்களினின்று விடுபடும் பொருட்டு, யஜ்ஞாதி கர்மங்களை விதிக்கின்றது. ஒளஷதம் (மருந்து) சாப்பிடுவதற்குக் கற்கண்டு, லட்டு முதலியவை பலனன்றே. ஆரோக்யமே அல்லவா பலன். அவ்வாறே யஜ்ஞாதி கர்மங்களுக்கு மோக்ஷமே பலனன்றி ஸ்வர்க்காதிகள் பலனன்று.

இவர்களுக்கு அதில் ஆசை உண்டாகும் பொருட்டு ஸ்வர்க்காதி பலன்களைச் சொல்லிற்றே ஒழிய அதில் அபிப்ராயமன்று. ஆகையால், ஸ்வர்க்காதியான அவாந்தர (இடைப்பட்ட) பலன்களைத் துறந்து, மோக்ஷத்தையே பலனாக உத்தேசித்து, காம்ய (பலனுக்கான) கர்மங்களையும் அனுஷ்டிக்க வேண்டும். (நித்ய (ஸந்த்யாவந்தனம், பகவத் ஆராதனம் முதலிய தினமும் செய்ய வேண்டிய செயல்கள்), நைமித்திக கர்மங்களைப் (பித்ரு தர்ப்பணம், ச்ராத்தம் முதலிய அவ்வப்போது செய்ய வேண்டிய செயல்கள்) பலன்களில் அபிஸந்தியின்றிப் (ஈடுபாடின்றி) பக்தி யோகத்தின் அபிவ்ருத்திக்காக அனுஷ்டிக்க வேண்டும்.) ஒன்றும் தெரியாத மூடன் இந்த்ரியங்களை அடக்கி ஆள முடியாமல், வேதங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களை அனுஷ்டிக்காமல், நிஷித்த (செய்யக்கூடாதது என்று விலக்கப்பட்ட) கர்மங்களையும் நடத்திக்கொண்டு வருவானாயின், அவன் வேத விருத்த காமங்களை அனுஷ்டிக்கையும், வேதங்களில் விதித்த கர்மங்களை அனுஷ்டிக்காமையுமாகிற அதர்மங்களால் ம்ருத்யுவினிடத்தினின்று ம்ருத்யுவைப் பெறுவான். ஆகையால், வேதங்களில் விதிக்கப்பட்ட நித்யம், நைமித்திகம், காம்யம் என்கிற மூன்று வகைக் கர்மங்களையும் ஈச்வரார்ப்பணமென்னும் புத்தியுடன் அனுஷ்டித்துக்கொண்டே, அந்தந்த அவாந்தர (இடைப்பட்ட) பலன்களில் மனப் பற்றின்றி இருப்பானாயின், நைஷ்கர்ம்ய ஹேதுவான (ஸம்ஸார பந்தத்திற்குக் காரணமான ஸகல கர்மங்களின் நிவ்ருத்திக்கு (விலகுகைக்கு) ஹேதுவான (காரணமான) ஜ்ஞான ஸித்தியைப் பெறுவான். 

கர்ம யோகம், ஜ்ஞான யோகத்திற்கு காரணம். ஆனால், யஜ்ஞாதி கர்மங்களுக்கு வெவ்வேறு பலன்கள் ஏன் கூறப்பட்டிருக்கின்றன என்றால், அது உண்மையன்று; அர்த்தவாதமே. ஸம்ஸாரிகளுக்கு அவற்றில் முயற்சி உண்டாகும் பொருட்டு வேதங்கள் வேறு பலன்களைக் கூறுகின்றனவேயன்றி, அவற்றிற்கு அதில் கருத்தில்லை. எவன் ஹ்ருதய க்ரந்தியை (ஹ்ருதய முடிச்சாகிற அஹங்கார மமகாராதிகளை) சீக்ரத்தில் போக்கிக்கொள்ள விரும்புகிறானோ, அவன் தாந்திரிகமான (பஞ்சராத்ர தந்தரங்களில் சொல்லப்பட்ட) கர்மத்தினாலும் விதிப்படி பகவானை ஆராதிக்க வேண்டும். (தாந்தரிகம், வைதிகம் என்று இருவகையான கர்ம யோகத்தினாலும் பகவானை ஆராதித்துக்கொண்டு வருவானாயின், சீக்ரத்தில் பக்தியோகம் கைகூடப் பெற்று ப்ரக்ருதி ஸம்பந்தத்தினின்று விடுபடுவான்.) 

ஆசார்யனிடத்தினின்று அனுக்ரஹம் பெற்று, அவ்வாசார்யனால் பகவானை ஆராதிக்க வேண்டிய விதங்களெல்லாம் கற்பிக்கப் பெற்று, தனக்கு இஷ்டமான மூர்த்தியுடன் கூடின பரம புருஷனை ஆராதிக்க வேண்டும். அந்தப் பரம புருஷனுக்கு எதிரே உட்கார்ந்து ப்ராணாயாமம், பூதசுத்தி முதலியவைகளால் தேஹத்தைச் சுத்தி செய்து, சிறந்த அங்க ந்யாஸங்களாலும், கர ந்யாஸங்களாலும், ரக்ஷை பண்ணிக்கொண்டு, அப்பரமபுருஷனை ஆராதிக்க வேண்டும். அர்ச்சா விக்ரஹம் முதலியவற்றிலாவது, ஹ்ருதயத்திலாவது, பகவானைத் தனக்குக் கிடைத்த பூஜா த்ரவ்யங்களால் ஆராதிக்க வேண்டும். 

முதலில், துளஸி, சந்தனம், புஷ்பம் முதலிய பூஜா த்ரவ்யங்களை ப்ரோக்ஷணாதிகளாலும் (புனித நீரைத் தெளிப்பதாலும்), பூமியை விளக்குவது, மெழுகுவது முதலியவைகளாலும் தேஹத்தை அங்க ந்யாஸாதிகளாலும், பகவானுடைய மூர்த்தியை ஜலம் சேர்த்து அலம்புவது முதலியவைகளாலும், ஸம்ஸ்கரித்து (புனிதப்படுத்தி) ஸித்தப்படுத்திக்கொண்டு, பிறகு, ஆராதனத்திற்குத் தொடங்க வேண்டும். பாத்ய பாத்ரம் முதலிய பாத்ரங்களை ஸ்தாபித்து, மனவூக்கத்துடன் மூர்த்தியில் பகவானை ஆவாஹனம் செய்து (அழைத்து), ஹ்ருதயம் முதலிய அங்கங்களில் ஹ்ருதயாதி மந்த்ரங்களாலும் மூல மந்த்ரத்தினாலும் ந்யாஸம் பண்ணிக் கொண்டு, மூல மந்த்ரத்தினால் பகவானை ஆராதிக்க வேண்டும். 

ஹ்ருதயம் முதலிய அங்கங்களோடும், ஸுதர்சன சக்ரம் முதலிய உப அங்கங்களோடும், பரிவாரங்களோடும் கூடிய பகவானுடைய அந்தந்த மூர்த்தியை அந்தந்த மந்த்ரங்களால் பாத்யம், அர்க்யம், ஆசமனீயம் முதலியனவும் ஸ்னானம், வஸ்த்ரம், பூஷணம் (ஆபரணம்) முதலியனவும் ஸமர்ப்பித்துப் பூஜிக்க வேண்டும். கந்தம், புஷ்பம், அக்ஷதை, மாலை, தூபம், தீபம், மதுபர்க்கம், நைவேத்யம் இவை முதலிய உபசாரங்களால் பரிவாரங்களோடு கூடின பகவானை விதிப்படி ஆராதித்து, ஸ்தோத்ரங்களால் துதித்து, நமஸ்காரம் செய்ய வேண்டும். தன்னை அந்த பகவன்மயமாகவே தியானித்துக் கொண்டு, அப்பகவானுடைய மூர்த்தியை ஆராதிக்க வேண்டும். 

பகவானுக்கு அமுது செய்யப் பண்ணின அன்னத்தைப் போஜனத்திற்காக ஸ்வீகரித்து, துளஸி, புஷ்பம் முதலியவற்றைச் சிரஸ்ஸில் (தலையில்) தரித்து, மூர்த்தியில் ஆவாஹனஞ் செய்யப்பெற்ற பகவானைப் பரமபதம் முதலிய அவன் ஸ்தானத்தில் ஸுகமாக எழுந்தருளியிருக்குமாறு உத்வாஸனம் (விடையாற்றி) செய்து, பூஜையை முடிக்க வேண்டும். அக்னி, ஸூர்யன், ஜலம் முதலிய இடங்களிலும், அதிதியிடத்திலும் (விருந்தாளிகளிடத்திலும்), ஹ்ருதயத்திலும், ஸர்வாந்தராத்மாவான ஸர்வேச்வரனை இவ்வண்ணம் எவன் ஆராதிக்கிறானோ, அவன் சீக்ரத்தில் ஸம்ஸாரத்தினின்று விடுபடுவான். 

மூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக