செவ்வாய், 1 ஜூன், 2021

குரு பரம்பரை வைபவம் - 10 - கோமடம் மாதவாச்சார்யார்

பகவானுக்கே பல்லாண்டு பாடியவர்


ஸ்ரீவில்லிபுத்தூர், இரண்டு ஆழ்வாரைப் பெற்றுத் தந்த, வடபெருங்கோயிலுடையான் வாசம் செய்யும் ஊர். வடமதுரைக்குச் சமானமான ஊர் என ஆண்டாள் பிராட்டியால் கொண்டாடப்பட்ட ஊர். இந்த ஊரின் பெயரைக் கேட்கும் அத்தருணமே மனம் நெகிழ்ந்து விடுகிறது.


‘‘அறவாழி அந்தணர்க் கல்லால் பிற வாழி நீத்தல் அரிது’’ என திருக்குறளார் போற்றியபடி, பல அந்தணர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்து பற்பல யாகங்கள் செய்து மணம் கமழ் ஸ்ரீவில்லிபுத்தூராக மணக்கச் செய்தனர்.


ஸ்ரீமத் பாகவதத்தில் இவ்வூர் பற்றிய சிறிய செய்தி உண்டு. அதாவது பற்பல நதிக்கரைகளில் பலபல மகான்கள் தோன்றுவார்கள் என்று விவரிக்கும் 11ம் ஸ்கந்தம், ‘க்ருதமாலா’ என்ற ஒரு நதியைப்பற்றி கூறி, ‘இந்த நதிக்கரையில் மகான்கள் அவதரிப்பர்’ என்று தகவல் கூறப்பட்டுள்ளது. ‘க்ருதமாலா’ என்பது வைகை ஆறு; இந்த ஆற்றங்கரையில்தான் சுவாமி பெரியாழ்வாரும் ஆண்டாளும் அவதரித்து பூவுலகை மேன்மையுறச் செய்தவர்கள்.


பகவானை பொதுவாக ‘த்ரியுகன்’ எனப் பகர்வர், பெரியோர். த்ரியுகன் என்றால் மூன்று யுகங்களில் மட்டும் மனிதனாக அவதரிப்பான் என்று பொருள். அப்படியெனில், கலியுகத்தில் தெய்வ அவதாரங்களே இல்லையா என்ற கேள்வி எழலாம். சுகாச்சாரியார், கலியுகத்தில் ‘பகவத் யஷஸா ஸமம் பாகவத’ என்கிறார். அதாவது பகவானுக்குச் சமமான புகழையுடைய மகான்கள் அவதரிப்பார்கள் என்று சுவைப்படக் கூறினார். 


அந்தக் கூற்றுப்படி ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவர்கள்தான் பெரியாழ்வாரும் ஆண்டாளும்.

இந்த ஊருக்கு மற்றுமொரு பெருமையும் உண்டு. இந்த ஊரின் கோபுரம் மிக பிரமாண்டமானது, நேர்த்தியானது. அதனாலேயே தமிழக அரசின் இலச்சினையாக விளங்குகிறது. மேலும் இவ்வூரில் செய்யக்கூடிய அமுதுப் பிரசாதம் (பால்கோவா) உலகப் பிரசித்தி வாய்ந்தது. சில சமயம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தமிழ்நாட்டிற்கு விஜயம் செய்யும்போது மறக்காமல் இந்த பிரசாதத்தை வாங்கிச் செல்வர். அதனால் வெளிநாடுகளுக்கும், சிறிய அளவில் ஏற்றுமதி ஆவதை கேள்விப்படுகிறோம்.


இவ்வளவு பெருமை வாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த மகான் சுவாமி பெரியாழ்வாரின் அவதாரம் பற்றி ஒரு ஸ்லோகம் உண்டு. அது:


‘‘மிதுனே ஸ்வாதிஜம் விஷ்ணோ ரதாம்சம் தந்விந: புரே

ப்ரபத்யே ச்வசுரம் விஷ்ணோ: விஷ்ணுசித்தம் புரச்சிகம்’’.


அதாவது கலியுகத்தில் 46 வருடங்கள் கடந்தபின் ‘க்ரோதன’ என்ற வருடத்தில், ஆனிமாதம் 9ம் தேதியன்று சுக்லபட்ச ஏகாதசியும் ஞாயிற்றுக்கிழமையும் கூடிய சுபதினத்தில் ‘ஸ்வாதி நட்சத்திரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷ்ணுவின் வாகனமான கருடனின் அம்சமாய், பூர்வசிக ஸ்ரீவைஷ்ணவ ப்ராம்மண குலத்தில் அவதரித்தவரான, ரங்கநாதனுக்கு மாமனாரான, விஷ்ணு சித்தர் என்னும் பெரியாழ்வாரை சரணடைகிறேன்’ என்பது மேற்கண்ட ஸ்லோகத்தின் பொருள்.


இவரைப் பற்றி திவ்யஸுரி சரிதம் என்கிற வடமொழி நூல், வாயுவை தேவதையாகக் கொண்ட ஸ்வாதி நட்சத்திரத்தில் அவதரித்தார் என்று வர்ணிக்கிறது. அப்படியானால், மயர்வற மதிநலம் அருளப் பெற்ற இவ்வாழ்வார், வாயுவேகத்தில் பற்பல பகவத் கல்யாண குணங்களை அருளவல்லவர் என்பது விளங்குகிறது.


வேதப் பொருள் வல்லவரான முகுந்தபட்டரும், பத்மா அம்மையாரும் இவரது பெற்றோர். பூர்வசிக குலத்தில் உதித்தவர். அவருடைய பரம்பரையினர் இக்காலத்திலும் முன்குடுமியுடைய சம்பிரதாயத்தை மேற்கொண்டு வேதத்தில் சிறந்து விளங்குபவர்களாக உள்ளனர்.


இந்த ஆழ்வார்க்கு உரிய காலத்தில் ஜாதகர்மம் செய்து விஷ்ணுசித்தர் என்னும் திருநாமமிட்டு, சம்பிரதாயப்படி அந்தந்த காலங்களில் சௌளம், உபநயனம் முதலான அந்தணர்க்குரிய சம்ஸ்காரங்களைச் செய்வித்தார் முகுந்த பட்டர். இவரும் க்ரமேண வேதம் பயின்று, வேதத்தில் வல்லவர் என்ற பட்டத்தையும் பெற்றார். முகுந்த பட்டருக்கு இவர் ஐந்தாவது மகன் ஆவார்.

மேலும் அக்கால வழக்கப்படி உரியகாலத்தில், (பால்யத்திலேயே) புஷ்பவல்லி என்ற சிறுமியை இவருக்குத் திருமணம் செய்வித்து, இல்வாழ்க்கை தர்மத்தில் நிலை நிறுத்தினார். விஷ்ணு சித்தரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் எழுந்தருளியிருக்கும் வடபெருங்கோயிலுடையான் என்ற வடபத்ரசாயி பகவானின் பெருங்கருணையால், அப்பெருமானுக்கு கைங்கர்யம் செய்வதில் பேரார்வம் காட்டினார்.


கைங்கர்யங்களிலே, பகவானுக்கு உவப்பானது எது? கிருஷ்ணாவதாரத்தில் கம்ஸனுக்கு மாலைகட்டி அளித்து வந்த ஸ்ரீமாலாகாரர் இல்லம் தேடிச்சென்று, கண்ணபிரானே அந்த மாலைகளை யாசித்து பெற்றிருக்கிறான் என்றால், இந்த ‘‘மாலா கைங்கர்யமே’’ (மாலை கட்டி அணிவிப்பதான ஊழியம்) மிகவும் உகந்தது என்று தீர்மானித்து, பெரியதொரு நந்தவனத்தை அமைத்தார். 


வடபெருங்கோயிலுடையானுக்கு தினமும் திருமாலை கட்டிச் சாற்றிக்கொண்டு வந்தார்.


வேதம் ஓதும் சமயத்திலும் இக்கைங்கர்யத்தைக் கைவிடாதவர். ஒருநாளும் கோயிலுக்கு சென்று வடபெருங்கோயிலுடையானை தரிசிக்காமல் சாப்பிட மாட்டார். தூங்கவும் மாட்டார். இவருடைய பக்தியின் உயர்வு எப்படிப்பட்டதென்றால், ஒருநாள் கோயிலுக்குச் செல்ல முடியாமல் போனால், அன்றைக்கு அவருக்குப் பட்டினி நாளாகிவிடும்!


சிலசமயம், சொந்தக்காரர்களின் வீட்டில் குழந்தை பிறந்தாலோ அல்லது உறவினர் யாரேனும் மரித்துப்போனாலோ ‘தீட்டின்’ காரணமாக கோயிலுக்குச் செல்ல முடியாமல் போய்விடும். அந்த நாட்களிலும் அவர் பட்டினி கிடப்பார். காய்ச்சல் வந்தாலும் கோயிலுக்குச் செல்வதை நிறுத்தமாட்டார். அப்படிப்பட்ட திடசித்தம் உடையவர்.


அச்சமயத்தில் பாண்டிய குல திலகனான ஸ்ரீவல்லப தேவன் என்னும் அரசன், அறம் வழுவாமலும் எளியோரை வலியோர் வாட்டாதபடியும் கூடல் என்னும் மதுரை மாநகரைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான். அந்த அரசன் ஒருநாள் இரவு நகர சோதனை மேற்கொண்டான். அப்படி வருகையில் ஒரு வீட்டுத் திண்ணையில் அந்தணன் ஒருவன் உறங்குவது கண்டு, அவனை எழுப்பி, ‘‘நீ யார்?’’ என்று வினவினான். அதற்கு அவன், ‘‘நான் திவ்யதேச யாத்திரை செய்து வருபவன். வடநாடெல்லாம் சுற்றி, கங்கையில் நீராடியவன்’’ என்று பதில் கூறினான்.


அவன் சொல்வது உண்மைதானா என்பதைத் தெரிந்துகொள்ள, அரசன் அவனை நோக்கி, ‘‘உனக்குத் தெரிந்த நல்ல சுலோகம் ஒன்றைச் சொல்’’ என்று கேட்டான். 


உடனே அவன், பின்வரும் ஸ்லோகத்தைச் சொன்னான்:

வர்ஷார்த்தமஷ்டென ப்ரயதேத மாஸான்

நிசார்தமர்த்தம் திவஸம் யதேத

வார்த்தக்யஹேதோர் வயஸா ரவேந

பரத்ரஹேதோரிஹ ஜன்மனா ச

அதாவது ‘‘மழை காலமாகிய ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி ஆகிய நான்கு மாதங்களிலும் இன்புற்று வாழ்வதற்காக, பிற எட்டு மாதங்களிலும் முயன்று சம்பாதித்தல் வேண்டும். இரவில் இன்புறுவதற்காகப் பகற்பொழுதில் பாடுபடுதல் வேண்டும். முதிய வயதில் சிரமமில்லாமல் வாழ்வதற்காக வாலிபப் பருவத்தில் கடுமையாக உழைத்தல் வேண்டும். மறுமையில் இன்புறுவதற்காக இம்மையில் இப்பிறப்பில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்று பொருள் அந்த ஸ்லோகத்துக்கு.


அரசன் அந்த ஸ்லோகத்தின் பொருளை ஆழ்ந்து சிந்தித்தான். ‘‘இந்த ஸ்லோகத்தின் முதல் மூன்று வரிகளிலும் சொல்லப்பட்ட குறைகள் நமக்கு இல்லாமையால், அவைப் பற்றி நாம் செய்யவேண்டிய முயற்சி ஒன்றும் இல்லை. நாலாவதாக சொல்லப்பட்ட மறுமை இன்பத்தைக் குறித்து இதுவரை எந்த முயற்சியும் செய்யாமல் இருந்து விட்டோமே’’ என்று கவலையுற்றான். உடனே அரசவையைக் கூட்டி தன் புரோகிதரும், சாஸ்திரங்களில் கரைகண்டவருமான செல்வநம்பி என்கிற குலகுருவைப் பார்த்து, ‘‘மறுமையில் பேரின்பம் பெற யாது வழி’’ என்று கேட்டான். ஆனால், செல்வ நம்பியோ, தாமாக ஒரு அர்த்தத்தையும் சொல்ல வேண்டாம், அப்படிச் சொன்னால், இவ்வரசனுக்கு உறுதியான நம்பிக்கை பிறக்காது என்று கருதினார். ஆகவே, ‘‘நாடெங்கும் பறை அறிவித்து வித்வான்களைத் திரட்டி, வேதாந்தங்களைக் கொண்டு பரம்பொருளைப் பற்றி ஒரு நிர்ணயம் செய்வித்து அவ்வழியாலே பேறு பெறலாம்’’ என்று உபதேசித்தார்.


அரசன் அதற்கு இசைந்து, ஒரு பெரும் பொற்கிழியை சபா மண்டபத்தின் முன்னிலையில் ஒரு தோரணத்தில் கட்டச் செய்தான். ‘‘பரத்வ நிர்ணயம் (யார் பரம்பொருள் என அறுதியிடல்) செய்கின்றாரோ, அவர் இப்பொற்கிழியைப் பரிசாகப் பெறலாம்’’ என்று பறை அறிவித்தான்.


அப்போது வடபெருங்கோயிலுடையான், விஷ்ணுசித்தரைக் கொண்டு வேதாந்த விழுப்பொருளை வெளிப்படுத்தி, உலகை உய்விப்பதற்காக, அவருடைய கனவில் எழுந்தருளினார். ‘‘நீர் போய் பொற்கிழியை அறுத்துக்கொண்டு வாரும்’’ என்று உத்தரவிட்டார்.


அதற்கு ஆழ்வார், ‘‘அது எல்லா சாஸ்திரங்களும் கற்றறிந்த பண்டிதர்கள் செய்ய வேண்டியதன்றோ? சாஸ்திரத்தை முறையாகக் கற்றறியாமல், நந்தவன கைங்கரியத்தில் ஈடுபட்டு, மாலைகட்டிக் கொண்டிருக்கும் நான், மலர் பறிக்க, மரக்கிளைகளைப் பிடித்துப் பிடித்துக் காய்த்துப் போயிருக்கும் என் கைகளால் அப்பொற்கிழியை அறுக்க முடியுமோ?’’ என்று பணிவுடன் வினவினார். அதற்கு பகவான், ‘‘அதைப் பற்றி உமக்கு ஏன் கவலை? உம்மைக் கொண்டு பரத்வ நிர்ணயம் செய்து வைக்கப்போவது நானல்லவா! நீர் அவசியம் அந்த சபைக்கு எழுந்தருள வேண்டும். உம் உள்ளிருந்தபடியே நான் சகாயம் செய்வேன்’’ என்று அவரை நிர்ப்பந்தித்தார்.


விஷ்ணுசித்தரும் விடியற்காலையில் எழுந்திருந்து இக்கனவைப் பற்றி வியப்புடன் சிந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது வடபெருங்கோயிலுடையானுக்குப் பல வகைகளிலும் கைங்கர்யம் செய்பவர்கள் சிலர், கோயில் முழக்கங்களுடன், ஒரு பல்லக்கை அவர்முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். ‘‘தங்களை கூடல் மாநகருக்கு எழுந்தருளச் செய்யுமாறு எம்பெருமான் எங்களை நியமித்திருக்கிறார்’’ என்றும் பவ்யமாக விளக்கிச் சொன்னார்கள். 


உடனே ஆழ்வார் இசைந்தார். கோயில் ஜனங்களுடன் வேத முழக்கங்களும் வாத்ய ஒலி முழக்கங்களும் புடைசூழ பாண்டிய சபைக்கு எழுந்தருளினார் ஆழ்வார். ஏற்கனவே குலகுருவாகிய செல்வநம்பியின் மூலம் இவருடைய பெருமையைக் கேள்விப்பட்டிருந்த வல்லபதேவன் இவருடைய தேஜஸைக் கண்டு, பெரு வியப்படைந்தான். உடனே, செல்வநம்பியோடு சென்று ஆழ்வாரை எதிர்கொண்டழைத்தான். அவர் திருவடியில் விழுந்து, ‘‘பட்டர்பிரான் வந்தார்’’ என்று மகிழ்ந்து சொல்லிக் கொண்டாடினான்.


அங்கு ஏற்கனவே குழுமியிருந்த பல வித்வான்கள் ‘‘எல்லா வேத சாஸ்திரங்களையும் பயின்று தேர்ந்த எங்கள் முன்னிலையில் ஒரு சாஸ்திரமும் பயிலாத இவரைக் கொண்டாடுவது தகாது’’ என ஆட்சேபம் தெரிவித்தனர். அதுகண்ட குலகுரு செல்வநம்பி, விஷ்ணுசித்தரிடம், ‘‘வேதாந்த விழுப்பொருளான பரத்வத்தை நிச்சயித்து அருளிச் செய்யவேண்டும்’’ எனக் கேட்டுக்கொண்டார்.


எம்பெருமானின் அருளால் ராமாயணம் முழுவதும் காணப்பெற்ற வால்மீகி முனிவரைப் போலவும் சங்கத்தின் நுனியால் தீண்டப்பெற்ற துருவன் கடல்மடை திறந்த வேகமாக எம்பெருமானை துதித்தது போலவும் விஷ்ணுசித்தரும் பரந்தாமனின் பேரருள் கொண்டார். ஆட்சேபம் தெரிவித்த பண்டிதர்கள் மட்டுமல்லாது, தேவலோகத்திலிருந்து பண்டித உருவில் வந்திருந்த ப்ருஹஸ்பதியும் கூட வியந்து பிரமிக்கும்படி, தாம் குருவும் தந்தையுமாகிய முகுந்தபட்டர் ஓதிய வேத வாக்கியங்களை மாத்திரமல்லாமல், சொந்த வேதம் அல்லாமல் மற்ற வேத பாகங்களிலிருந்தும் தேவலோகம் முதலான உலகங்களில் புழங்கும் அனந்தமான வேத வாக்கியங்களையும் ‘‘சாரங்கம் உதைத்த சரமழைபோல’’ பொழிந்தார். பரத்வ நிர்ணயம் செய்து, எல்லா வித்வான்களையும் வெற்றி கொண்டார். பகவானின் திருவருளே இதற்கு காரணம். வடபெருங் கோயிலுடையானே, இவ்வாழ்வார் உள்ளத்தமர்ந்து பரம்பொருள் பற்றி நிர்ணயம் செய்து பேசும்போது அவரை யார்தான் எதிர்கொள்ள முடியும்? (இவ்வாறு இவர் வெற்றிகொண்ட பரத்வ வியாக்யானத்தை, திருச்சி மஹாவித்வான், வக்கீல், பண்டிதமேதை புத்தூர் கிருஷ்ணமாச்சாரியார் (வைகுண்டவாசி) ஸ்வாமியாலே புதுப்பிக்கப்பெற்ற ஸ்ரீவிஷ்ணுசித்த விஜயம் நூல் சிறப்புற எடுத்துரைக்கிறது).


பல்லாயிரக்கணக்கான வேதவாக்கியங்களைக் கொண்டும், ஸ்ம்ருதி, இதிகாசம், புராணம் முதலான  ப்ரமாணங்களைக் கொண்டும் எதிர்த்த வித்துவான்கள், தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளும்படி, பெரியாழ்வார் ஸ்ரீமன் நாராயணனே பரம்பொருள் என்று நிர்ணயம் பண்ணி சொன்னார். உடனே அவருக்குப் பரிசாக கல்தோரணத்தில் கட்டப்படிருந்த பொற்கிழி, ‘‘இவருடைய வெற்றி பரம்பொருளாலும் இசையப் பெற்றது’’ என்று விளக்கும்படி இவர்முன் தானே,  தாழ, வளைந்து வந்தது. ஆழ்வாரும் எம்பெருமானுடைய கருணையைக் கண்டு உகந்து ‘‘விரைந்து கிழியறுத்தான்’’ என்று தனியன் பாசுரங்களில் சொல்லியுள்ளபடியே, அந்தப் பொற்கிழியை அறுத்து எடுத்துக்கொண்டார்.


இதைக்கண்ட அரசனும் மகாவித்துவான்களும் ஏனையோரும் பெருவியப்புற்று, இவ்வாழ்வார் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். ஸ்ரீவல்லபதேவன் ஆழ்வாரைத் தன் பட்டத்து யானை மேலேற்றி, ‘‘வேதப்பயன் கொள்ளவல்ல விஷ்ணு சித்தர் வந்தார், மெய்ந்நாவன் வந்தார், மெய்யடியார் வந்தார்’’ என்று ஆரவாரித்துப் பரவசப்பட்டான். கோயில்களில் பகவான் வீதியுலா வரும்போது ஊதுகிற குழலான திருச்சின்னம் இசைக்கப்பட, தானே முன்னின்று நகர்வலம் வரச் செய்தான். அவ்வமயம் மற்ற எல்லா பண்டிதர்களும் தங்களுக்கு விஷ்ணுசித்தரே தலைவர் என்று ஏற்றுக் கொள்ளும்வகையில் ‘பட்டபிரான்’ என்று அவருக்கு திருநாமம் சாற்றினர். அவரைக் கொண்டாடி குடை, கொடி, சாமரம், திருவாலவட்டம் விசிறி முதலான பணிவிடை செய்து உடன் வந்தனர். 


இப்படி ஆழ்வார் நகர்வலம் வருகையில், தனயனின் சிறப்பைக் காணவந்த தந்தைபோலே கருடாரூடனாய், சங்கு சக்ர கதாதரனாய், ஸ்ரீபூமி சமேதனாய், வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கான ஸ்ரீமன் நாராயணன், எல்லா தேவதைகளும் துதித்து நிற்க, பூமியிலுள்ள அனைவரும் காணும்படி ஆகாயத்திலே தோன்றினான்.


இப்படி பகவானின் கிருபையால், மயர்வறமதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார், இப்படி வைகுண்டத்தில் எழுந்தருளியிருக்கும், கல்யாண குணங்களுடன் கூடிய எம்பெருமான் மீது யார் கண்ணும் பட்டு திருஷ்டி ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில், ‘பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூறாயிரம்...’ என்று தொடங்கி, பட்டத்து யானையின் மேலுள்ள இருமணிகளையே தாளமாகக் கொண்டு திருப்பல்லாண்டு பாடத் தொடங்கினார்.


இவருடைய அச்சத்தை நீக்குவதற்காக, எம்பெருமான் தன்னுடைய மல்லாண்ட திண்தோள், வடிவழகு, அசுரரைக் கொன்ற திருவடிகள், மங்களங்களுக்கெல்லாம் காரணமான பெரிய பிராட்டியார், சங்கம், சக்ரம் முதலானவற்றுடன் தன் சுந்தர ரூபத்தைக் காட்டினான்.


ஆழ்வாரும், மேன்மேலும் எம்பெருமானுக்கு திருக்காப்பீட்டு, 10 பாசுரங்கள் செய்தருளினார்.


இவ்விஷயங்களை பாண்டிய பட்டர் என்பவர் ஒரு பாசுரம் மூலமாக விளக்குகிறார்.


பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று 

ஈண்டிய சங்கமெடுத்தூத - வேண்டிய 

வேதங்களோதி விரைந்து கிழியறுத்தான்

பாதங்கள் யாமுடைய பற்று

அங்கு நடந்த சம்பவங்களை நேரில் கண்டவர் பாண்டிய பட்டர். அதனால்தான் இந்தப் பாசுரத்தில் இப்படி உயிர்த்துடிப்பு மிளிர்கிறது.


நன்றி - தினகரன் ஆன்மிகம் டிசம்பர் 2012


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக