ஶ்ரீமத் பாகவதம் - 308

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – இரண்டாவது அத்தியாயம்

(நாரதமஹர்ஷி வஸுதேவனுக்குப் பாகவத தர்மங்களைக் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- கௌரவ குலத்தை மேன்மைப்படுத்தும் தன்மையனே! நாரத மஹர்ஷி ஸ்ரீக்ருஷ்ணனைப் பணிவதில் பேராவலுடையவராகி, அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய புஜங்களால் (தோள் வலிமையால்) பாதுகாக்கப்பட்ட த்வாரகாபுரியில் நிரந்தரமாக வாஸம் செய்து கொண்டிருந்தார். (ஜ்ஞானாதிகாரான (பரதத்வமான பகவானைப் பற்றிய அறிவு உடையவரான) அத்தேவர்ஷி பரமாத்ம ஸாக்ஷாத்காரமுடையவராகையால் (பகவானை த்யானத்தில் நேராகப் பார்த்தவராதலால்), அவருக்கு ஸ்ரீக்ருஷ்ணனைப் பணிவதில் அத்தகைய பேராவல் உண்டாயிருக்க வேண்டிய அவச்யம் என்னென்று சங்கிக்க (ஸந்தேஹப்பட) வேண்டாம்). 

ராஜனே! கண்களைப் படைத்தவன் எவன்தான் தன்னைப் பணிகிற ஸகல ஜனங்களின் ம்ருத்யுவையும் போக்கவல்லவைகளும், ஜ்ஞானாதிகர்களான (ஆத்ம, பரமாத்மாக்களைப் பற்றிய அறிவு உடைய) ப்ரஹ்ம, ருத்ராதி, தேவ ச்ரேஷ்டர்களால் பணியப் பெற்றவைகளுமாகிய ஸ்ரீக்ருஷ்ணனுடைய பாதார விந்தங்களைப் பணியாதிருப்பான்? வஸுதேவன் ஒருகால் தேவர்ஷியாகிய நாரதர் தன் க்ருஹத்திற்கு வர, அவரைப் பூஜித்து, ஸுகமாக உட்கார்ந்திருக்கின்ற அம்முனிவரை நமஸ்கரித்து இவ்வாறு மொழிந்தான்.

வஸுதேவன் சொல்லுகிறான்:- மஹானுபாவரே! நீர் மூன்று லோகங்களையும் ஸஞ்சரித்துக் கொண்டிருப்பது என்னைப் போன்ற ஸமஸ்த ப்ராணிகளின் க்ஷேமத்திற்காகவேயன்றி, வேறு காரணத்திற்காகவன்று. உத்தம ச்லோகனான (மிகுந்த சிறப்புடைய) பகவானுடைய ஸ்வரூப (இயற்கைத் தன்மை), ஸ்வபாவாதிகளை (குணங்களை) அறிவிக்கும் த்வாரமாய் (வழியாய்) இருப்பவர்களான உம்மைப் போன்ற பெரியோர்களின் யாத்ரை, ஸம்ஸார தாபங்களால் பீடிக்கப்பட்ட ப்ராணிகளின் க்ஷேமத்திற்காகவே அல்லவா? தாய், தந்தைகள் வருவது பிள்ளைகளின் ஸுகத்திற்காக அல்லவா? (எங்களுடைய யாத்ரையை விசேஷித்துப் புகழ்கின்றாயே. தேவாதிகளுடைய யாத்ராதி கார்யங்களும் கர்மலோகங்களின் க்ஷேமத்திற்காகவே அல்லவா. அவற்றை விட்டு இதைப் புகழ்வது ஏனோ? என்றால்) பர்ஜன்யன் (மழை தேவதை) முதலிய தேவதைகளின் நடத்தை ப்ராணிகளின் துக்கத்திற்கும், ஸுகத்திற்கும் பொதுவாயிருக்கின்றது. (ஒருகால் துக்கத்தையும், ஒருகால் ஸுகத்தையும் கொடுக்கும்.) அச்சுதனிடத்தில் நிலைநின்ற மனமுடைய உம்மைப் போன்ற ஸாதுக்களின் நடத்தையோ என்றால் எப்பொழுதும் ஸுகத்தையே கொடுக்கும். தேவதைகளை எவர்கள் எப்படி பணிகின்றார்களோ, அவர்களை அத்தேவதைகள் அப்படியே அனுஸரிப்பார்கள். ஏனென்றால், அந்தத் தேவதைகள் நிழலைப் போன்று ப்ராணிகளின் பணிதலுடைய தாரதம்யத்தை (ஏற்றத்தாழ்வை) அனுஸரித்துப் பலன் கொடுப்பார்கள். ஸாதுக்களோ என்றால், ஸம்ஸார தாபங்களால் (உலகியல் வாழ்வின் துன்பங்களால்) வருந்தின ஸமஸ்த ப்ராணிகளிடத்திலும், அவர்களுடைய துக்கங்களையெல்லாம் போக்க வேண்டுமென்னும் விருப்பமுடையவர்கள். 

ப்ரஹ்மர்ஷியே! இவ்வாறு வஸ்து ஸ்திதி இருக்கையால் உம்முடைய வரவு மாத்ரத்தினாலேயே நாங்கள் க்ருதார்த்தர்களானோம். (ப்ரயோஜனங்களெல்லாம் கைகூடப் பெற்றோம்). நீர் எந்த தர்மங்களை அனுஷ்டித்ததனால் பகவான் உம்மிடத்தில் அருள்புரிந்தானோ, அத்தகைய பாகவத தர்மங்களை அறிய விரும்புகிறேன். இந்தப் பாகவத தர்மங்களைக் கேட்பானாயின், அவன் ஸர்வவிதமான ஸம்ஸார பயத்தினின்றும் விடுபடுவானல்லவா? (பரமபுருஷனைப் புதல்வனாகப் பெற்ற நீ, மற்றொருவனைப்போல ஏன் இவ்வாறு வருந்துகிறாய்? என்கிறீரோ, சொல்லுகிறேன். கேளும்) 

நான் பகவானுடைய மாயையினால் மதி மயங்கிப் பிள்ளையைப் பெற வேண்டும் என்னும் விருப்பத்துடன் மோக்ஷம் கொடுக்க வல்லனாகிய அனந்தனை ஆராதித்தேனாம். மோக்ஷத்திற்காக ஆராதிக்கவில்லை. (அதனால் நான் பகவானைப் புதல்வனாகப் பெற்றேனன்றி வேறில்லை. நான் மோக்ஷத்திற்காக ஆராதனம் செய்யாமையைப் பற்றி வருந்துகிறேன்) நல்லொழுக்கமுடையவரே! ஆகையால், விசித்ரமான துக்கங்களை விளைப்பதாகிய ஸம்ஸார ஸாகரத்தினின்று நான் எப்படி ஸுகமாக விடுபடுவேனோ, அவ்வாறு உண்மையாக நீர் என்னைக் கற்பிக்க வேண்டும்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ராஜனே! இவ்வாறு மிகுந்த மதியுடைய வஸுதேவனால் வினவப் பெற்ற தேவர்ஷியாகிய நாரதர், தான் சொல்ல வேண்டியவைகளான பகவானுடைய குணங்களால் பகவானைப் பற்றி நினைவு மூட்டப்பெற்று, மனக்களிப்புற்று, அவ்வஸுதேவனைக் குறித்து மொழிந்தார்.

நாரதர் சொல்லுகிறார்:- ஸாத்வத ச்ரேஷ்டனே (யாதவர்களில் சிறந்தவனே)! நீ நன்றாக நிச்சயித்தாய். (இதுவே பரமார்த்தமென்னும் நிச்சய புத்தியுடையவன் நீயே). ஏனென்றால், ஜகத்திற்கெல்லாம் க்ஷேமத்தை விளைப்பவைகளான பாகவத தர்மங்களை அறிய விரும்புகின்றாய் அல்லவா? பாகவத தர்மம் கேட்கிலும், வாயால் சொல்லிலும், நெஞ்சால் நினைக்கிலும், ஆதரம் (மரியாதை) செய்யிலும், அதில் முயன்றவர்களை அனுமோதனம் செய்யிலும் (ஆமோதித்தலும்), தேவதைகளுக்கு த்ரோஹம் (கெடுதி) செய்தவர்களையும், ஸமஸ்த ப்ராணிகளுக்கு த்ரோஹம் (கெடுதி) செய்தவர்களையும், உடனே அது புனிதம் செய்யும். (நீ எனக்கு மஹோபகாரம் (பெரிய உதவி) செய்தாய். ஏனென்றால், பகவானைக் காதால் கேட்கிலும், வாயால் சொல்லிலும், அவன் அவர்களுக்குப் புண்யத்தை விளைவிப்பான். அவன் மிகவும் மங்கள (நன்மை) ஸ்வரூபன்; அமங்களங்களை (தீமைகளை) எல்லாம் போக்கும் தன்மையன்; ஷாட்குண்யபூர்ணன் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவன்); கர்மத்தினால் விளையும் விகாரங்களின்றி (வேறுபாடன்றி) என்றும் விளங்கும் தன்மையன். அத்தகையனான ஸ்ரீமந்நாராயணனை நீ இப்பொழுது எனக்கு நினைவு மூட்டினாய். நீ கேட்ட இவ்விஷயத்தில் மஹானுபாவனுமாகிய விதேஹராஜனுக்கும் ருஷப குமாரர்களுக்கும் நடந்த பழையதான ஸம்வாதத்தை (உரையாடலை) உத்தரமாகச் சொல்லுகிறார்கள். (உன் கேள்வி விதேஹராஜனுடைய கேள்வியைப் போன்றதாகையால், அதற்கு என்ன உத்தரமோ அதுவே உன் கேள்விக்கும் உத்தரம்) 

ஸ்வாயம்புவ மனுவுக்கு ப்ரியவ்ரதனென்னும் புதல்வன் இருந்தான். அவன் பிள்ளை நாபி. அவன் பிள்ளை ருஷபன். மோக்ஷ தர்மங்களைச் சொல்ல விரும்பி அவதரித்த வாஸுதேவாம்சமென்று அவனைச் சொல்லுகிறார்கள். அவனுக்கு நூறு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்கள் எல்லோரும் வேதத்தையும் அதன் பொருளான பரப்ரஹ்மத்தையும் உள்ளபடி அறிந்தவர்கள். (சிலர் வேதத்தின் கரையறிந்தவர்கள். சிலர் வேதம், வேதத்தின் பொருளான பரப்ரஹ்மம் ஆகிய இரண்டின் கரையும் அறிந்தவர்கள்). அவர்களுக்குள் பரதனென்பவன் முதல்வன். அவன் ஸ்ரீமந்நாராயணனையே ப்ராப்யமும் (அடையப்படும் பொருளாகவும்), ப்ராபகமுமாகப் (அடைவதற்கு வழியாகவும்) பற்றினவன். அஜநாபவர்ஷம் என்று வழங்கி வருகிற இவ்வர்ஷம் அந்தப் பரதனுடைய ஆட்சிக்குட்பட்டு அவன் பெயரால் பாரத வர்ஷமென்று அற்புதமாய் ப்ரஸித்தி பெற்றது. 

(குறிப்பு:- அஜநாபவர்ஷம் பற்றிய கதை ஐந்தாவது ஸ்கந்தம் நான்காவது அத்யாயத்தில் ருஷபனுடைய சரித்திரத்தில் உள்ளதைக் காண்க)

அப்பரதன், போகங்களெல்லாம் அனுபவிக்கப் பெற்றதும், தன் வசத்திலிருப்பதுமாகிய இப்பூமண்டலத்தையெல்லாம் துறந்து, க்ருஹத்தினின்றும் புறப்பட்டு, தன் வர்ணாச்ரமங்களுக்குரிய தர்மங்களை அனுஷ்டித்துப் பரமபுருஷனை உபாஸித்து மூன்று ஜன்மங்களால் அப்பரமபுருஷனுடைய பதவியைப் பெற்றான். அப்பரதன் தம்பிகளான மற்ற தொண்ணூற்றொன்பது பேர்களில் இலாவர்த்தன் முதலிய ஒன்பது பேர்கள் இப்பாரதவர்ஷத்தின் கண்டங்களான ஒன்பது த்வீபங்களுக்கு ப்ரபுக்களாயிருந்தார்கள். மற்றவர்களில் எண்பத்தோரு பேர்கள் த்விஜாதிகளாய் (ப்ராஹ்மணர்களாய்) கர்ம தந்திரத்திற்கு (வேதத்தில் சொல்லப்பட்ட யாகம் முதலிய கர்மங்களுக்கு) ப்ரவர்த்தகர்களானார்கள் (நடத்திச் செல்பவர்களாய் இருந்தார்கள்). மற்ற ஒன்பது பேர்கள் ஜ்ஞானம், வைராக்யம் முதலிய பாக்யமுடையவர்களும், பரமார்த்தத்தை நிரூபிக்கும் திறமையுடையவர்களும், அத்யாத்ம வித்யையில் நன்கு க்ரமப்பட்டு (ஊன்றி) அவ்வாத்ம வித்யையில் ஸமர்த்தர்களும் (நிபுணர்களும்), திகம்பரர்களுமான (திசையையே ஆடையாக உடைய அதாவது உடல் மேல் ஆடை அணியாதவர்களுமான) முனிவர்களாயிருந்தார்கள். 

அவர்கள் கவி, ஹரி, அந்தரிக்ஷன், ப்ரபுத்தன், பிப்பலாயனன், ஆவிர்ஹோத்ரன், த்ரமிலன், சமஸன், கரபாஜனன் என்னும் பெயருடையவர்கள். அத்தகையர்களான இவர்கள், பகவானுக்குச் சரீரமும், சேதனா சேதன ரூபமுமாகிய (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக் கொண்ட) ஜகத்தையெல்லாம் பரமாத்மாவைக்காட்டிலும் பேதப்படாததாகவே பார்த்துக் கொண்டு, பூமண்டலம் முழுவதும் திரிந்தார்கள். அவர்கள் எங்கெங்குப் போக வேண்டுமென்று விரும்புகிறார்களோ, அங்கங்கெல்லாம் அவர்களுக்குத் கதி (வழி) தடைபடாது இருந்தது. அவர்கள் எங்கும் மனப்பற்று இல்லாதிருந்தவர்கள். அவர்கள், தேவர், ஸித்தர், ஸாத்யர், கந்தர்வர், யக்ஷர், மனுஷ்யர், கின்னரர், நாகர் இவர்களின் லோகங்களையும் முனிவர், சாரணர், பூதனாதர், வித்யாதரர், த்விஜர், கோக்கள் இவர்களின் ஸ்தானங்களையும் இஷ்டப்படி சுற்றிக்கொண்டிருந்தார்கள். இவ்வாறு ஆங்காங்கு திரிந்து கொண்டிருக்கிற அந்தக் கவி முதலியவர் ஒருக்கால் பாரத வர்ஷத்தில் ரிஷிகளால் அனுஷ்டிக்கப்படுகிற மஹானுபாவரான ஜனக மஹாராஜனுடைய ஸத்ர யாகத்திற்குத் தற்செயலாய்ப் போய்ச் சேர்ந்தார்கள். 

மன்னவனே! யஜமானனாகிய நிமி மஹாராஜன், ப்ராஹ்மணர்கள் உருவங்கொண்ட ஆஹவனீயம் முதலிய அக்னிகள் (இல்லறத்தில் இருப்பவன் வேதத்தில் விதிக்கப்பட்ட ஹோமம் முதலிய அக்னி கார்யங்களைச் செய்வதற்கு மூன்று அக்னிகளை எப்பொழுதும் இல்லத்தில் வைத்து வளர்த்து பூஜிக்க வேண்டும். கார்ஹபத்ய அக்னி என்பது மேற்கு திசையில் இருக்கும் அக்னி; ஹோமம் செய்யும் போது மனைவி கார்ஹபத்ய அக்னியின் அருகில் அமர்ந்து கொள்ள வேண்டும்; ஆஹவனீய அக்னி என்பது கார்ஹபத்ய அக்னியிலிருந்து எடுக்கப்பட்டு புனிதப்படுத்தப்பட்ட, ப்ரதான ஹோமம் செய்வதற்கான, கிழக்கு திசையில் இருக்கும் அக்னி; தக்ஷிணாக்னி என்பது தெற்கு திசையில் இருக்கும் அக்னி) ஆகிய அனைவரும் ஸூர்யன் போல் திகழ்கின்ற மஹா பாகவதர்களான அந்த ருஷபகுமாரர்களைக் கண்டு எதிர்கொண்டார்கள். 

விதேஹ மன்னவன், அவர்கள் நாராயண பராயணர்கள் (பகவானான ஸ்ரீமந்நாராயணனையே சரண் புகுந்தவர்கள்) என்று அடையாளங்களால் அறிந்து ஸந்தோஷமுற்று, அவர்களுக்கு ஆஸனம் அளித்து, அதில் உட்கார்ந்திருக்கின்ற அம்மஹானுபாவர்களை உரியபடி பூஜித்தான். மிகவும் ஸந்தோஷமுற்றிருக்கிற அவ்விதேஹ மன்னவன், தங்கள் தேஜஸ்ஸினால் ப்ரகாசிப்பவர்களும், ப்ரஹ்ம புத்ரர்களான ப்ருகு முதலியவர்கள் போன்றவர்களுமாகிய அம்மஹானுபாவர்களை வணக்கத்துடன் வினவினான்.

விதேஹ மன்னவன் சொல்லுகிறான்:- நீங்கள் ஷாட்குண்ய பூர்ணனாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) பகவானுடைய பார்ஷதர்கள் (சேவகர்கள்) என்று (பார்ஷதர் போன்றிருக்கையால் பார்ஷதர்களேயென்று) நினைக்கிறேன். விஷ்ணு பக்தர்கள் உலகங்களைப் புனிதம் செய்யும் பொருட்டு முழுவதும் திரிகின்றார்களல்லவா? (ஆகையால் விஷ்ணு பக்தர்களாகிய நீங்களும், உலகங்களைப் புனிதம் செய்யும் பொருட்டுத் திரிகின்றீர்கள்.) 

கர்ம வசத்தினால் பற்பல சரீரங்களைப் பெறுகின்ற ஜீவாத்மாக்களுக்குப் பற்பல சரீரங்களுக்குள் மனுஷ்ய சரீரம் கிடைப்பது அரிது. அதுவும் ஒரு க்ஷணத்தில் அழியும் தன்மையது. மிகுந்த ஸுக்ருதத்தினால் (நற்செய்கையால்) கிடைக்கக் கூடியதாகையாலும், எல்லா விதத்திலும் பகவானை ஆராதிப்பதற்கு உபயோகப்படுவதாகையாலும், மனுஷ்ய சரீரம் சிறப்புடையது. ஆகையால் அது பெரும்பாலும் துர்லபம் (அரிது). அவ்வாறு துர்லபமான (அரிதான) அம்மனுஷ்ய ஜன்மம் பெற்றாலும், ஸர்வேச்வரன் ப்ராப்யனென்று (அடையப்பட வேண்டியவன்) அவனைப் பெறுகைக்கு அனுரூபமாயிருக்கும் (உதவியாய் இருக்கும்) உபாயத்தைப் பரிக்ரஹிக்க (கைப்பற்ற) வேண்டும் என்னும் ருசி (விருப்பம்) ஒருவர்க்கும் பிறவாது. இது உண்டாகிலும் உண்டாம்.

பகவானுக்கு அன்பர்களான உங்களைப்போன்ற பெரியோர்களின் தர்சனம் கிடைப்பது மிகவும் துர்லபம் (அரிது) என்று நான் நினைக்கின்றேன். இந்த ஸம்ஸாரத்தில் ப்ராணிகளுக்கு அரை க்ஷண காலமாயினும் ஸத்புருஷர்களுடைய ஸஹவாஸம் (தொடர்பு) நேருமாயின், அது நிதியைப் போல் புருஷார்த்தங்களை எல்லாம் ஸாதித்துக்கொடுக்கும். கர்மத்தினால் விளையும் பிறவி முதலிய விகாரங்களற்ற (வேறுபாடற்ற) பகவான், எந்த தர்மங்களால் அருள்புரிந்து, தன்னைச் சரணம் அடைந்தவனுக்குத் தன்னையும் கொடுப்பானோ, அப்படிப்பட்ட பாகவத தர்மங்களை நாங்கள் கேட்கக்கூடுமாயின் அவற்றை எங்களுக்குச் சொல்வீர்களாக.

நாரதர் சொல்லுகிறார்:- வஸுதேவனே! இவ்வாறு மஹானுபாவனாகிய நிமியால் வினவப்பட்ட அந்த ருஷபகுமாரர்கள், ஸதஸ்யர்களோடும் (ஸபையோர்களோடும்), ருத்விக்குக்களோடும் கூடின அந்த நிமி மன்னவனை ப்ரீதியுடன் பூஜித்து மொழிந்தார்கள்.

கவி சொல்லுகிறார்:- இங்கு பிழைத்திருக்கும் பொழுது, என்றும் தவறாமல் அச்சுதனுடைய பாதார விந்தங்களைப் பணிகையே எவ்விதத்திலும் பயமில்லாததென்று நினைக்கிறேன். (எல்லாவற்றிலும் சிறந்த நன்மை முக்தியே. அதைப் பெறும் உபாயம் பகவானுடைய பாதார விந்தங்களைப் பணிகையே. அதுவே பாகவத தர்மம்). 

ப்ரக்ருதியின் பரிணாமம் (மாறுபாடு) ஆகையால் பொய்யென்று சொல்லத்தக்கதாகிய தேஹத்தில் ஆத்மாபிமானத்தினால் (உடலையே ஆத்மா என்ற தவறான எண்ணத்தால்) பயந்த மதியுடைய புருஷன், சேதனாசேதன ரூபமான (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக் கொண்ட) ஜகத்திற்கெல்லாம் அந்தராத்மாவான பரமபுருஷனைப் பணிவானாயின், அவனுக்கு எல்லாவிதத்திலும் பயம் நீங்கி, மோக்ஷம் உண்டாகின்றது. 

பகவான், அறிவில்லாத புருஷர்கள் அனாயாஸமாகத் (எளிதாகத்) தன்னை அடையும் பொருட்டுப் பஞ்சராத்ரம் முதலிய சாஸ்த்ரங்கள் மூலமாய் ச்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாதஸேவனம், அர்ச்சனம் முதலிய எந்த உபாயங்களைச் சொன்னானோ, {ஸ்ரீமஹாவிஷ்ணுவின் குணங்களைக் கேட்பது (ச்ரவணம்), அவன் நாமங்களை வாயாரப்பேசுவது (கீர்த்தனம்), அவனை நெஞ்சார நினைப்பது (ஸ்மரணம்), அவன் பாதங்களைப் பணிவது (பாதஸேவனம்), அவனைப் பூஜிப்பது (அர்ச்சனம்), அவனை நமஸ்கரிப்பது (வந்தனம்), அவனுக்கு அடிமையாயிருப்பது (தாஸ்யம்), அவனிடத்தில் நட்பு செய்வது (ஸக்யம்), அவனிடத்தில் ஆத்ம ஸமர்ப்பணம் - சரணாகதி செய்வது (ஆத்ம நிவேதனம்) ஆகிய ஒன்பது லக்ஷணங்கள் அமைந்த பக்தியோகத்தை} அவையே பாகவத தர்மங்களென்று அறிவாயாக. 

ராஜனே! இந்தப் பாகவத தர்மங்களை நன்றாக அனுஷ்டிக்கிறவன், எவ்விதத்திலும் நல்ல வழியினின்று நழுவமாட்டான். (உபாயாந்தரங்களை (வேறு வழிகளைப்) அனுஷ்டிப்பவர்களுக்கு (பின்பற்றுபவர்களுக்குக்) கெடுதி வருவது போல், பகவத் தர்ம நிஷ்டர்களுக்கு எவ்விதக் கெடுதியும் உண்டாகாது). இந்தப் பாகவத தர்மங்களில் கண்ணை மூடிக்கொண்டு ஓடுவானாயினும், அவன் நடை தடைபடாது; அவன் விழவும் மாட்டான். (ஒருவன் நல்ல ராஜமார்க்கத்தில் கண்ணை மூடிக் கொண்டு ஓடுவானாயினும், அவனுக்குத் தடுக்காது. அவன் அதில் தவறி விழவும் மாட்டான். மற்ற உபாயங்களை அனுஷ்டிப்பவர்கள் சிறிது ஊக்கம் தவறினும், தடைபடுவார்கள்; அதினின்று விழவும் விழுவார்கள்). ஸம்ஸார வாஸணா ரூபமான (முன் பிறவிகளில் செய்த புண்ய, பாப வினைகளின் ஆழ்ந்த பதிவுகளின்) ஸ்வபாவத்தைத் தொடர்ந்த ஜீவன், சரீரம், வாக்கு, மனம் மற்ற ஜ்ஞானேந்தரிய, கர்மேந்திரியங்கள், புத்தி, மதி இவைகளால் என்னென்ன செய்கிறானோ, அவற்றையெல்லாம் ஸ்ரீமந்நாராயணாய என்று அவன் திருவடிகளில் அர்ப்பணம் செய்ய வேண்டும். 

ஆத்மா, பரமாத்மாவுக்கு உட்படாமல் ஸ்வதந்த்ரனாய் இருப்பவன் (தன் இச்சையாகச் செயல்படும் வல்லமை உடையவன்) என்னும் துரபிமானத்தினால் (வீணான கர்வத்தினால்) பயம் உண்டாகின்றது. இவ்வாறு பகவானிடத்தில் விமுகனாய் (விலகி) இருப்பவனுக்குத் தேஹாத்மப்ரமமும் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணமும்), அதைப்பற்றின நினைவும், தான் பரமாத்மாவுக்குச் சரீர பூதன் (ஜீவன் பகவானால் தாங்கப்படுபவன், அவனால் நியமிக்கப்படுபவன், பகவானுக்கு உடைமை, அடிமை) என்னும் நினைவில்லாமையும் உண்டாகின்றன. இந்த ஸ்வதந்த்ராத்மப்ரமம் (நாம் பகவானது கட்டளைக்கு உட்படாது தன்னிச்சைப்படி செயல்படும் வல்லமை உடையவர்கள் என்ற மனக்கலக்கம்), தேஹாத்மப்ரமம் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம் – மனக்கலக்கம்) முதலியவை அவனுடைய மாயையினால் விளைகின்றன. ஆகையால், வேதாந்தங்களை ஓதியுணர்ந்தவன், குருவே தெய்வமென்னும் புத்தியுடையவனாகி, என்றும் மாறாமல் அனன்ய ப்ரயோஜனமான (வேறு ப்ரயோஜனங்களை எதிர்பாராத) பக்தியுடன் அந்த ஜகதீசனையே பணிய வேண்டும். 

தேஹம் (உடல்) ஆத்மாவல்லாததாயினும், ஆத்மா ஸ்வதந்த்ரன் (பகவானது கட்டளைக்கு உட்படாது தன்னிச்சைப்படி செயல்படும் வல்லமை உடையவன்) அல்லாதவனாயினும், அவ்வாறு அபிமானிக்கிற (நினைக்கிற) ஜீவனுடைய மனத்தினால் தேஹம் (உடல்) ஆத்மாவாகவும், ஆத்மா ஸ்வதந்த்ரனாகவும் (பகவானது கட்டளைக்கு உட்படாது தன்னிச்சைப்படி செயல்படும் வல்லமை உடையவனாகத்) தோன்றுகின்றன. ஸ்வப்னத்தில் (கனவில்) அனுபவிக்கிற மனோரதங்களெல்லாம் நிலையற்றவையாயினும், நிலை நின்றவையாகத் தோன்றுவது போலவே, தேஹம் (உடல்) ஆத்மாவாகவும், ஆத்மா ஸ்வதந்த்ர வஸ்துவாகவும் தோன்றுகின்றன. ஆகையால், அனாதி (ஆரம்பம் இது என்று சொல்ல முடியாத) கர்மாவின் (புண்ய, பாப வினைகளுக்கு) அனுகுணமாகத் (ஏற்ப) தேஹத்தை (உடலை) ஆத்மாவாகவும், பரமாத்மாவுக்கு மிகவும் பரதந்த்ரமாயிருக்கையையே ஸ்வரூபமாகவுடைய ஆத்மாவை ஸ்வதந்த்ர வஸ்துவாகவும் நினைக்கச் செய்கின்ற மனத்தைத் தேஹ (உடல்), ஆத்மாக்களின் (ஜீவாத்மாக்களின்) உண்மையை நிச்சயிக்கும் புத்தியால் தடுக்க வேண்டும். அதனால் அபயம் (எவ்விதத்திலும் பயமில்லாத மோக்ஷம்) உண்டாகும். 

சக்கரக்கையனாகிய பகவானுடைய அவதாரங்களும், மிகவும் மங்களமான அவ்வவதாரங்களில் செய்த செயல்களும், எவ்வெவை உண்டோ, அவைகளைக் கேட்பதும், மற்றும் அப்பகவானுடைய ஸ்வரூப (இயற்கைத் தன்மை), ரூப (திருமேனி), குண, விபூதிகளை (ஆளுமை) வெளியிடுகிற பாட்டுக்களையும், திருநாமங்களையும் வெட்கமின்றி ப்ரேமத்துடன் பாடுவதும் செய்து கொண்டு சரீரத்தில் ஆஸக்தி (பாசம்) இன்றித் திரிய வேண்டும். 

இப்படி செய்வானாயின், அவனுடைய மனம் பகவானிடத்தில் ஊக்கமுற்று, மெல்ல மெல்ல அவனிடத்தில் நிலைப்படும்). இவ்வாறு பகவானுடைய அவதாரங்களையும், செயல்களையும், உட்கொண்ட பாட்டுக்களையும், திருநாமங்களையும் பாடுவதும், கேட்பதுமாகிற வ்ரதத்தில் நிலைநின்று, தனக்கு அன்பனாகிய பகவானுடைய நாம ஸங்கீர்த்தனத்தினால் அனுராகம் (பக்தி, அன்பு) வளர்ந்து, மனம் உருகப் பெற்று, விலக்ஷணனாகிப் (மற்றவர்களை விட வேறுபட்டவனாகி) பித்தம் பிடித்தவன் போன்று உலகத்தவர்களைக் காட்டிலும் விலக்ஷணனாகி (மற்றவர்களை விட வேறுபட்டவனாகி) ஒருக்கால் பக்தர்களுக்குத் தோற்கும் தன்மையனான பகவானை நினைத்துச் சிரிப்பதும், ஒருக்கால் அவனுடைய அனுபவத்திற்கு விச்சேதம் (இடையூறு, தடை) வருகையில் “இத்தனை காலம் என்னை உபேக்ஷித்தாயே (ஒதுக்கினாயே)” யென்று அழுவதும், ஒருக்கால் ஆவலின் மிகுதியால் நேரே கண்டனுபவிக்க விரும்பி உரக்க முறையிடுவதும், ஒருக்கால் ஸந்தோஷத்தின் மிகுதியால் பாடுவதும் ஆடுவதுமாயிருப்பான். 

ஆகாசம், காற்று, அக்னி, ஜலம், பூமி, தேஜஸ்ஸு, மக்கள், ஜந்துக்கள், திசைகள், மரம் முதலியவை, நதிகள், ஸமுத்ரங்கள், மற்றுமுள்ள ப்ராணிகள் இவையெல்லாம் பகவானுடைய சரீரங்களென்னும் எண்ணத்துடன் அவற்றையெல்லாம் வணங்குவான். தன்னையும் பகவானுக்குச் சரீரமாகவும் ஆனது பற்றியே தன்னை அவனைக் காட்டிலும் வேறுபடாதவனாகவும் பாவிப்பான். (மனத்தை அடக்குவதற்கு வேண்டிய உபாயங்களை அனுஷ்டிப்பதிலேயே ஆயுளெல்லாம் முடிந்து போகும் போலிருக்கிறதே. பிறகு மன அடக்கம் எப்பொழுது உண்டாகும்? பிறகு எப்பொழுது தான் பகவத் பக்தி உண்டாகுமென்று சங்கிக்க (ஸந்தேஹப்பட) வேண்டாம்). போஜனம் செய்பவனுக்குப் போதுமென்னும் புத்தியும், சரீர புஷ்டியும் (செழுமையும்), பசியின் அடக்கமுமாகிய இம்மூன்றும் ஆஹாரம் புசித்தவுடனே ஒரே காலத்தில் உண்டாவது போல், பகவானைச் சரணம் அடைந்தவனுக்கு அந்தப் பகவானுடைய ஸ்வரூப (இயற்கைத் தன்மை), ரூப (திருமேனி), குண, விபூதிகளைப் (ஆளுமை) பற்றின தத்வ ஜ்ஞானமும் (உண்மையான அறிவும்), ப்ரீதிரூபமான பக்தியும், சப்தாதி விஷயங்களில் (உலக விஷயங்களில்) வைராக்யமும், ஆகிய இம்மூன்றும் ஒரே காலத்தில் உண்டாகின்றன. 

ராஜனே! பிறகு பசி, தாஹம் முதலிய ஊர்மிகள் (துன்ப அலைகள்) தொலையப் பெறுகையாகிற ஒன்றான மோக்ஷத்தைப் பெறுவான். ப்ராணிகளுக்கு த்ரோஹம் (கெடுதி) செய்யும் தன்மையைத் துறந்து, ஸமஸ்த ப்ராணிகளிடத்திலும் ஸ்னேஹம் உண்டாகப்பெற்று, இந்த்ரியங்களால் விளையும் அறிவுகளுக்கு எட்டாத பகவானிடத்தில் மிகவும் நிலை நின்ற மனமுடையவனும், சுத்த ஸ்வபாவனுமாகி (நற்குணம் உடையவனுமாகி), ஸூர்யன் உதித்துத் தன் கிரணங்களால் உலகங்களைப் புனிதம் செய்வதுபோல், தன் பாத தூளிகளால் மூன்று லோகங்களையும் புனிதம் செய்வான்.

மன்னவன் சொல்லுகிறான்:- பகவானைச் சரணம் அடைந்த பாகவதனைப் பற்றிச் சொல்வீர்களாக! அவன் எத்தகைய தர்மங்களை அனுஷ்டிப்பான்? மனுஷ்யர்களுக்குள் அவன் எத்தகைய ஸ்வபாவமுடையவனாயிருப்பான்? அவனுடைய ஆசாரம் (நடத்தை) எத்தகையதாயிருக்கும்? அவன் பேச்சு எத்தகையதாயிருக்கும்? (எந்த அடையாளங்களால் அவன் பாகவதனென்று அறியலாமோ அத்தகைய அடையாளங்களைச் சொல்வீர்களாக). 

ஹரி சொல்லுகிறார்:- ப்ரஹ்மதேவன் முதல் பூச்சி புழு வரையிலுள்ள ஸமஸ்த பூதங்களிலும், தன்னிடத்திலும் பகவான் அமைந்திருக்கிறானென்றும், ஸமஸ்த பூதங்களும் தானும் பகவானுக்குச் சரீரங்களென்றும், பரமாத்மாவான அப்பகவானிடத்தில் ஸமஸ்த பூதங்களும் அமைந்திருக்கின்றனவென்றும் எவன் ஆராய்ந்து அறிகிறானோ, அவன் பாகவத உத்தமன் (சிறந்தவன்). (இதுவே பாகவதன் அனுஷ்டிக்கும் தர்மம்). ஈச்வரன் ஸர்வாந்தராத்மாவென்றும், எங்கும் நிறைந்தவனென்றும் அறியாமல் அவனிடத்தில் கேவலம் தெய்வமென்னும் புத்தியையும், அவனுக்கு உட்பட்ட பாகவதர்களிடத்தில் ஸ்னேஹத்தையும் (நட்பையும்), ஒன்றும் அறியாத மூடர்களிடத்தில் தயையையும் (இரக்கத்தையும்), த்வேஷிகளிடத்தில் (பகைவர்களிடத்தில்) உதாஸீன (பொருட்படுத்தாத) புத்தியையும் எவன் செய்கிறானோ, அவன் பாகவதர்களில் மத்யமன் (சற்று தாழ்ந்தவன்). 

எவன் ப்ரதிமையில் (பொம்மையில்) மாத்ரம் பகவானுக்குப் பூஜை செய்கிறானோ, எவன் பக்தர்களிடத்திலும், பசுக்கள், ப்ராஹ்மணர், அக்னி முதலியவைகளிடத்தில் அந்தப் பகவானுக்குப் பூஜை செய்கிறதில்லையோ, அவன் ப்ராக்ருத பக்தன். (பாகவதர்களில் அதமன் - அப்பொழுது தான் புதிதாகப் பகவானிடத்தில் பக்தி செய்ய ஆரம்பித்தவன்). இவ்வுலகத்திலுள்ள விஷயங்களெல்லாம் பகவானுடைய மாயையின் பரிணாமமே (மாற்றமே) என்று நிச்சயித்து, இஷ்டமான விஷயங்களையாவது, அனிஷ்டமான (விருப்பம் இல்லாத) விஷயங்களையாவது, இந்திரியங்களால் க்ரஹித்தும் (பற்றியும்) எவன் இஷ்ட விஷயங்களை (வேண்டியவற்றை) விரும்புவதும், அனிஷ்ட (விரும்பாத) விஷயங்களை த்வேஷிப்பதும் (வெறுப்பதும்) செய்யாதிருக்கிறானோ, அவன் பாகவத உத்தமன். 

எவன் பகவானிடத்தில் மனம் செல்லப் பெற்றுத் தேஹத்தின் ஜன்ம, மரணங்கள், ப்ராணன்களின் வாட்டமாகிற பசி, என்ன வருமோ என்று மனத்தின் கலக்கமாகிற பயம், புத்தி விஷயங்களில் இவற்றைப் பெற வேண்டுமென்று செல்லுகையாகிற ஆசை, இந்திரியங்கள் ப்ரமப்படுகையாகிற (மோஹத்தை, கலக்கத்தை அடையக்கூடிய) வருத்தங்கள் ஆகிய ஸம்ஸார தர்மங்களால் (உலகியல் வாழ்வின் நிகழ்வுகளால்) எவன் மோஹியாது (கலங்காது) இருக்கிறானோ, அவன் பாகவதர்களில் சிறந்தவன். 

காமம் (ஆசை), காமத்திற்கு விதைகள் போன்ற கர்மங்கள் (வினைகள்), கர்ம வாஸனைகள் (முன் வினைகளின் ஆழ்ந்த பதிவுகள்) ஆகிய இவை எவனுடைய மனத்தில் சிறிதும் உண்டாகாதிருக்கின்றனவோ, ஜகத்திற்கெல்லாம் ஆதாரனும், ஜகத்தை ஆதாரமாக உடையவனுமாகிய வாஸுதேவனையே எவன் ஆச்ரயித்திருக்கிறானோ, அவன் பாகவதர்களில் சிறந்தவன். (இவையே பாகவதனுடைய ஆசாரங்களாம் (நடத்தைகளாம்)). 

ஜன்மம் (பிறப்பு), கர்மம் (புண்ய, பாப வினை), ப்ராஹ்மணன் முதலிய வர்ணம் (ஜாதி), ப்ரஹ்மசர்ய முதலிய ஆச்ரமம், தேவத்வ மனுஷ்யத்வாதி ஜாதிகள் ஆகிய தேஹ (உடலின்) தர்மங்களால் (நிகழ்வுகளால்) எவனுக்குத் தேஹத்தில் (உடலில்) அஹம்பாவம் (நானென்னும் புத்தி - ஆத்மாபிமானம்) உண்டாகாதிருக்கின்றதோ; அவன் பகவானுக்கு மிகவும் அன்பனாயிருப்பான். “இவன் பந்து (உறவினன்). இவன் சத்ரு (எதிரி)” என்னும் பேதபுத்தியும், பணங்களிலும், தேஹத்திலும் “இது என்னுடையது. இது பிறனுடையது” என்னும் பேதபுத்தியும் இன்றி எவன் ஸமஸ்த பூதங்களிடத்திலும் ஸமனாகி இந்த்ரியங்களை அடக்கிக் கொண்டிருக்கிறானோ, அவன் பாகவதர்களில் சிறந்தவன். 

மூன்று லோகங்களுக்கும் ப்ரபுவாயிருக்கையாகிற ஐச்வர்யத்தை உனக்குக் கொடுக்கிறேனென்று சொல்லினும், அதைப் பொருள் செய்யாமல் பகவானுடைய பாதார விந்தங்களைக் காட்டிலும் ஸாரமானது (சிறந்தது) மற்றொன்றும் இல்லையென்னும் நினைவு எப்பொழுதும் மாறப்பெறாமல், ஒருவராலும் வெல்ல முடியாத மஹானுபாவனாகிய அப்பரமபுருஷனிடத்தில் நிலைநின்ற மனமுடைய ப்ரஹ்மாதி தேவர்களுக்கும் தேடத் தகுந்தவையாகிய அந்தப் பகவானுடைய பாதார விந்தங்களைப் பணிகையினின்று எவன் மீளாதிருக்கிறானோ, அவன் விஷ்ணு பக்தர்களில் சிறந்தவன். 

பகவானைச் சரணம் அடைந்த பாகவதர்களின் ஹ்ருதயம், பெரிய அடிவைப்புக்களுடையவைகளான (ஓரடியில் உலகங்களையெல்லாம் அளக்கவல்ல பெருமையுடையவைகளான) பகவானுடைய பாதார விந்தங்களின் கிளைகள் போன்ற விரல்களிலுள்ள நகங்களாகிற ரத்னங்களின் குளிர்ந்த ஒளிப்பெருக்கினால் தாபங்களெல்லாம் தீரப்பெற்றிருக்கும். அத்தகையதான பாகவதர்களின் ஹ்ருதயத்தில் மீளவும் தாபங்கள் எவ்வாறு உதிக்கும்? 

சந்த்ரன் உதித்திருக்கும் பொழுது, ஸூர்யகிரணங்களால் விளையும் தாபம் (வெம்மை, துன்பம்) உண்டாகுமோ? (இவ்வாறு தாபமே உண்டாகப் பெறாதவர்கள் பகவானுடைய பாதார விந்தங்களினின்று எவ்வாறு சலிப்பார்கள்?) 

மன்னவனே! பாகவதர்களின் ஸ்வபாவம் இத்தகையதாயிருக்கும். மனோபாவமின்றி அவசமாகச் (சொல்ல வேண்டும் என்ற எண்னம் இன்றி) சொன்ன போதிலும், பாப ராசிகளைப் போக்கவல்ல மஹானுபாவனாகிய பரம புருஷன் தானே நேரில் வந்து ப்ரீதியின் பெருக்காகிற சங்கிலியால் கட்டுண்ட பாதார விந்தங்களுடையவனாகிய எவனுடைய ஹ்ருதயத்தை எப்பொழுதும் விடாதிருக்கிறானோ, அவன் பாகவதோத்தமனென்று சொல்லப்படுவான். 

இரண்டாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துரையிடுக (0)
புதியது பழையவை