ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – முதல் அத்தியாயம்
(ப்ராஹ்மண சாபத்தினால் யாதவ குலம் க்ஷீணித்த (அழிந்த) வ்ருத்தாந்தத்தைக் (கதையைக்) கூறுதல்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸ்ரீகிருஷ்ணன், பலராமனும் தானுமாகிப் பூதனா, சகட, யமளார்ஜூனாதிகளான ஆஸுர ப்ரக்ருதிகளை வதித்து, யாதவர்களால் சூழப்பட்டு, குரு, பாண்டவாதிகளுக்கு விரைவில் முடிக்கவல்ல கலஹத்தை விளைவித்து, அதர்மிஷ்டர்களை (தர்மத்தை பின்பற்றாதவர்களை) எல்லாம் ஒழித்து, இவ்வாறு பூமியின் பாரத்தை நீக்கினான்.
ஜகதீசனாகிய ஸ்ரீகிருஷ்ணன், சத்ருக்களாகிய துர்யோதனாதிகளால் கபடத்தை (சூதை) உட்கொண்ட சூதாட்டம், அவமதி (அவமானம்), த்ரௌபதியின் தலைமயிரைப் பிடித்திழுக்கை முதலிய பல அபகாரங்கள் (தீங்குகள்) செய்து, கோபமுறும்படி செய்யப்பட்ட பாண்டவர்களை நிமித்தமாகக் கொண்டு, கௌரவர் பக்ஷத்திலும், பாண்டவர் பக்ஷத்திலும் ஸஹாயமாகச் சேர்ந்த மன்னவர்களை ஒருவரையொருவரால் அடித்து முடித்து, இவ்வாறு பூமியின் பாரத்தை நீக்கினான். இவ்வளவென்று அளவிட்டறிய முடியாத ஸ்வரூப ஸ்வபாவங்களையுடைய அப்பரமபுருஷன், தன் புஜங்களால் பாதுகாக்கப்பட்ட யாதவர்களைக் கொண்டு பூமிக்குப் பாரமான ராஜர்களின் ஸைன்யங்களையும், ராஜர்களையும் மடித்து, மீளவும் தனக்குள் அம்மஹானுபாவன், “பூமியின் பாரத்தை இவ்வளவு நீக்கியும் அது நீங்கவில்லையென்றே நினைக்கின்றேன்.
ஏனென்றால், ஒருவராலும் பொறுக்க முடியாத யாதவ குலம் இன்னம் அப்படியே இருக்கின்றதல்லவா? இந்த யாதவ ஸைன்யத்திற்கு மற்றொருவனால் எவ்விதத்திலும் பரிபவம் (அவமானம்) உண்டாகாது. இனி இதை அழிக்க வல்லவன் எவனுமே இல்லை. ஏனென்றால், இந்த யாதவ ஸைன்யம் என்னையே பற்றியிருப்பது. என்னைப் பற்றினவர்களுக்கு ஒருகாலும் கெடுதி உண்டாகாதல்லவா?
அந்த யாதவர்கள் என்னையே கதியாகப் பற்றினமையால், வீர்ய, சௌர்யாதிகள் (வலிமை, பராக்ரமம்) அமைந்து, பெருமை உடையவர்களாய் இருக்கின்றார்கள். ஆகையால், இவர்கள் ஒருவராலும் பரிபவிக்க (அவமதிக்க) முடியாதவர்கள். மூங்கில் புதரில் மூங்கில்கள் ஒன்றோடொன்று இழைத்துக் கொள்கையால் புதர் முழுவதும் அழிந்து போகும்படி நெருப்பு உண்டாவது போல், இந்த யாதவ குலத்தில் தனக்குள் கலஹத்தை உண்டாக்கி, அதை முடித்து, பூமியின் பாரத்தை முழுவதும் நீக்கி, அவதார ப்ரயோஜனம் கைகூடப்பெற்று, பசி, தாஹம் முதலிய ஊர்மிகள் (துன்ப அலைகள்) இன்றி சாந்தமான ஸ்ரீவைகுண்டமென்கிற என் ஸ்தானத்திற்குப் போய்ச் சேருகிறேன்” என்று சிந்தித்தான்.
ஸத்ய ஸங்கல்பனும் (நினைத்ததை நடத்தி முடிக்கும் திறமை உள்ளவனும்), ஸர்வேச்வரனுமாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன் இவ்வாறு தனக்குள் நிச்சயித்துக் கொண்டு, ஸமர்த்தனாகையால், ப்ராஹ்மண சாபமென்னும் வ்யாஜத்தினால் (சாக்கினால்) தன்னுடையதான யாதவ குலத்தை எல்லாம் ஸம்ஹாரம் செய்தான் (அழித்தான்). அப்பகவான், அளவற்ற லாவண்யமுடைய (அழகுடைய) தன் திவ்யமங்கள விக்ரஹத்தினால் (திருமேனியினால்) உலகத்திலுள்ள லாவண்யத்தை (அழகை) எல்லாம் பறித்து (மூன்று லோகங்களிலுமுள்ள லாவண்யம் (அழகு) எல்லாம் ஸமுத்ரத்தில் குளப்படி (பசுவின் காலடி) போல் அப்பரமனுடைய திவ்யமங்கள விக்ரஹ (திருமேனி) லாவண்யத்தில் (அழகில்) உள்ளடங்கினதாகையால், தன் திருமேனியைக் கண்ட பின்பு, எங்கும் லாவண்யமே (அழகே) இல்லை என்று தோன்றும்படி செய்து) தன் கடைக்கண்ணோக்கத்தினால் பிராணிகளின் கண்ணோக்கத்தையும் பறித்து, தன் மொழிகளால் அவற்றை நினைக்கும் ப்ராணிகளின் மனத்தையும் பறித்து, ஆங்காங்கு அடையாளம் செய்யப்பட்ட தன் அடி வைப்புக்களால் அவற்றைக் காண்கிற ப்ராணிகளின் மற்றோரிடம் போகை முதலிய செயல்களையும் பறித்து (இவ்வாறு அப்பொழுதுள்ளவர்களின் கண் முதலிய இந்திரிய வ்யாபாரங்களையெல்லாம் தன்னிடத்திலேயே நிலைநின்றிருக்கும்படி செய்து) மேல் பிறக்கப்போகிறவர்கள் ஸம்ஸாரத்தைக் கடந்து கரையேறும் பொருட்டுப் பூமியில் நன்கு பாடத்தகுந்த தன் புகழைப் பரப்பி, இதனால் அஜ்ஞான (அறியாமையின்) கார்யமான ஸம்ஸாரத்தை அனைவரும் கடப்பார்களென்று நினைத்து, தன் இடம் போய்ச் சேர்ந்தான்.
பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- யாதவர்கள், ப்ராஹ்மணர்களிடத்தில் மிகுந்த விச்வாஸமுற்று, அவர்களுக்கு வேண்டியவற்றையெல்லாம் ப்ரீதியுடன் நிறைவேற்றிக் கொடுக்கும் தன்மையர்; தானசீலர்களில் சிறப்புடையவர்; என்றும் தவறாமல் பெரியோர்களைப் பணியும் ஸ்வபாவமுடையவர்கள்; மற்றும், ஸ்ரீக்ருஷ்ணனிடத்திலேயே நிலைநின்ற மனமுடையவர்கள். இத்தகையரான யாதவர்களுக்கு ப்ராஹ்மண சாபம் எப்படி உண்டாயிற்று?
ப்ராஹ்மண ச்ரேஷ்டரே! (எப்படியேனும் உண்டாயிருக்குமாயினும்) அது எந்தக் காரணத்தைப்பற்றி உண்டாயிற்றோ அதையும், அது எத்தகையதோ அதையும், ஒருவரோடொருவர் ஒத்த மதியுடைய (ஸமமான புத்தி உடைய) அந்த வ்ருஷ்ணிகளுக்குத் (யாதவர்களுக்கு) தங்களுக்குள் கலஹம் எப்படி உண்டாயிற்றோ அதையும், பரப்ரஹ்ம உபாஸனத்தினால் (த்யானத்தினால்) எல்லாவற்றையும் ஸமமாகப் பார்க்கும் தன்மையரான ரிஷிகளுக்கு யாதவர்களைச் சபிக்கும்படியான பேத புத்தி (வேறுபடுத்திப் பார்க்கும் எண்ணம்) எப்படி உண்டாயிற்றோ அதையும், ஆகிய இவையெல்லாவற்றையும் எனக்கு விவரித்துச் சொல்வீராக.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அழகெல்லாம் அமைந்து மிகவும் மங்களமான திவ்யமங்கள விக்ரஹத்தைத் தரித்துக்கொண்டிருக்கிற ஸ்ரீகிருஷ்ண பகவான், தேவதைகளுக்கும், மனுஷ்யர்களுக்கும் செய்ய முடியாத மங்களமான செயல்களை நடத்திக்கொண்டு த்வாரகையில் இருந்து, விளையாடலுற்று, பெரும் புகழுடையவனாகி, பூமியின் பாரத்தை நீக்குகையாகிற தன் கார்யம் சிறிது குறையாதிருக்கப்பெற்று, தன்னுடையதான யாதவ குலத்தை அழிக்க நினைத்தான்.
புண்யங்களை விளைப்பவைகளும், பாடுகிற ஜனங்களுக்குக் கலியுகத்தினால் நேரும் பாபங்களைப் போக்குபவைகளும், மிக்க மங்களங்களுமான செயல்களைச் செய்து கொண்டு வஸுதேவனுடைய க்ருஹத்தில் வாஸம் செய்பவனும், காலத்தைச் சரீரமாகக்கொண்டு லோக ஸம்ஹாரம் (உலகத்தின் அழிவைச்) செய்பவனுமாகிய அப்பரமபுருஷன், முனிவர்களைத் தன் ஸங்கல்பத்தினால் தூண்ட, விச்வாமித்ரர், அஸிதர், கண்வர், துர்வாஸர், ப்ருகு, அங்கிரஸ்ஸு, கஸ்யபர், வாமதேவர், அத்ரி, வஸிஷ்டர், நாரதர் முதலிய அம்முனிவர்கள், த்வாரகைக்கு அருகாமையிலுள்ள பிண்டாரக என்னும் புண்ய தீர்த்தத்திற்கு வந்தார்கள்.
அந்தப் புண்ய தீர்த்தத்தில் விளையாடிக் கொண்டிருக்கிற யாதவ குமாரர்கள், அம்முனிவர்களிடம் சென்று, பாத வந்தனம் செய்து, தாங்கள் விநயம் (பணிவு) அற்றவராயினும் விநயம் (பணிவு) உடையவர்கள் போல் நடனம் செய்து கொண்டு ஜாம்பவதியின் பிள்ளையாகிய ஸாம்பனுக்குக் கர்ப்பமுடைய பெண்ணின் வேஷம் போட்டு அம்முனிவர்களிடம் கொண்டு போய் நிறுத்தி, “ஓ, அந்தணர்களே! கர்ப்பிணியும் ப்ரஸவ காலம் ஸமீபிக்கப்பெற்றவளும், புதல்வன் பிறக்க வேண்டுமென்று விரும்புகின்றவளுமாகிய இக் கருங்கண்ணி, தான் நேரில் கேட்க வெட்கமுற்று, எங்களைக் கொண்டு கேட்கின்றாள். இவள் பிள்ளையைப் பெறுவாளா? பெண்ணைப் பெறுவாளா? எங்கும் தவறாத நெஞ்சென்னும் உட்கண்ணுடையவர்களே! இதை இவளுக்குச் சொல்வீர்களாக” என்று வினவினார்கள்.
மன்னவனே! இவ்வாறு வஞ்சிக்கப்பட்ட அம்முனிவர்கள், கோபமுற்று, ”மந்த புத்தியர்களே (அறிவற்றவர்களே)! இவள் உங்கள் குலத்தையெல்லாம் பாழ் செய்வதான உலக்கையைப் பெறப் போகிறாள்” என்று மொழிந்தார்கள்.
அந்த யாதவ குமாரர்களும் அதைக் கேட்டு மிகவும் பயந்து, சீக்ரமாக ஸாம்பனுடைய அரைத்துணியை அவிழ்த்து அவன் உதரத்தில் (வயிற்றில்) இரும்பு மயமான உலக்கையைக் கண்டு, “ஆ! மந்த பாக்யர்களாகிய (பாக்கியம் அற்றவர்களான) நாம் என்ன செய்தோம்! நம்முடையவர்கள் நம்மை என்ன சொல்வார்கள்!” என்று தமக்குள் மனவருத்தமுற்று, அவ்வுலக்கையை எடுத்துக்கொண்டு, க்ருஹத்திற்குச் சென்றார்கள். பிறகு, அக்குமாரர்கள், அவ்வுலக்கையை ராஜ ஸபையில் கொண்டு போய், முகவொளி (அதன் பளபளப்பு) மழுங்கப்பெற்று, ஸமஸ்த யாதவர்களும் சேர்ந்திருக்கையில், ராஜனாகிய உக்ரஸேனனுக்குத் தாங்கள் செய்ததையெல்லாம் விண்ணப்பம் செய்தார்கள்.
மன்னவனே! த்வாரகையிலுள்ளவர்கள் அனைவரும் வீணாகாததான விப்ர (ப்ராஹ்மண) சாபத்தைக் கேட்டு, உலக்கையையும் கண்டு, முதலில் வியப்புற்று, உடனே மிகுதியும் பயந்து, பயத்தினால் உடம்பெல்லாம் நடுங்கப்பெற்றார்கள்.
யாதவர்களுக்கு ராஜனாகிய அவ்வுக்ரஸேனன், அவ்வுலக்கையைச் சூர்ணம் (பொடி) செய்வித்து, அந்தச் சூர்ணத்தையும் (பொடியையும்) அதில் மிகுந்த இரும்புத் துணுக்கைகளையும் ஸமுத்ரஜலத்தில் கொண்டு போய்ப் போடுவித்தான்.
அந்த ஸமுத்ர ஜலத்தில் ஒரு மத்ஸ்யம் (மீன்) அந்த இரும்புத் துணுக்கையை விழுங்கிற்று. இரும்புச் சூர்ணங்களோ (பொடிகளோ) என்றால், ஸமுத்ர ஜலத்தின் அலைகளால் ஆங்காங்குக் கரையோரங்களில் தள்ளுண்டு நின்று, நீண்டு பருத்து மூன்று நுனியுடையவைகளுமாகிய கோரைகளாய் முளைத்தன. இரும்புத் துணுக்கையை விழுங்கின மத்ஸ்யம் (மீன்), மற்றும் சில மத்ஸ்யங்களோடு (மீன்களோடு) செம்படவர்களால் வலையில் பிடியுண்டது. அதைப் பிடித்த செம்படவன், அம்மத்ஸ்யத்தின் உதரத்தில் (வயிற்றில்) இருந்த இருப்புத் துணுக்கையைப் பாணத்தின் நுனியில் வைத்தான். வருங்காலம், நிகழ்காலம், கழிகாலம் ஆகிய மூன்று காலங்களிலுமுள்ள விஷயங்களையெல்லாம் அறிந்த மஹானுபாவனாகிய ஸ்ரீகிருஷ்ணன், அந்த ப்ராஹ்மண சாபத்தை வீணாக்கவல்லவனாயினும், அவ்வாறு நினைக்கவில்லை. அவன் கால ரூபியாய்க் (காலத்தின் வடிவாய்க்) கொண்டு, ஸம்ஹரிக்க நினைத்திருப்பவனாகையால், அதை அவ்வாறே நடக்கும்படி அனுமோதனம் செய்தான் (ஆமோதித்தான்).
முதலாவது அத்தியாயம் முற்றிற்று.