ஶ்ரீமத் பாகவதம் - 341

த்வாதச (பன்னிரண்டாவது) ஸ்கந்தம் - நான்காவது அத்தியாயம்

(நைமித்திகம் முதலிய நான்குவகை ப்ரளயங்களை நிரூபித்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! பரமாணு (மிகச்சிறிய பொருள்) முதல் த்விபரார்த்தம் வரையிலுள்ள பரமாணு (மிகச்சிறிய துகள் – ஜன்னல் வழியே வரும் ஸூர்ய கிரணங்களில் தெரியும் சிறு தூசியின் 30ல் ஒரு பங்கு பரமாணு) முதல் த்விபரார்த்தம் (ப்ரஹ்மாவின் ஆயுளின் அளவு த்விபரார்த்தம் எனப்படும். 

  1. க்ருத யுகம் 1728000 மனித வருடங்கள்; 

  2. த்ரேதா யுகம் 1296000 மனித வருடங்கள்; 

  3. த்வாபர யுகம் 864000 மனித வருடங்கள்; 

  4. கலி யுகம் 432000 மனித வருடங்கள். 

ஆக இவை நான்கும் சேர்ந்த ஒரு சதுர் யுகம் 4320000 மனித வருடங்கள். 1000 சதுர்யுகம் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு பகல்; அது போல் மற்றுமொரு 1000 சதுர்யுகம் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு இரவு; ஆக 2000 சதுர்யுகங்கள் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு நாள். அதாவது 4320000 * 2000 = 864,00,00,000 மனித வருடங்கள் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு நாள். 864,00,00,000 * 360 = 311040,00,00,000 மனித வருடங்கள் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு வருடம். ப்ரஹ்மாவின் ஆயுள் 100 வருடங்கள்; அதாவது 3,11,04,000 கோடி மனித வருடங்கள். இதுவே த்விபரார்த்தம் எனப்படும்.) காலத்தின் ஸ்வரூபத்தையும், க்ருத, த்ரேதாதி யுகங்களின் பரிமாணத்தையும் உனக்கு முன்னமே மொழிந்தேன். கல்பத்தையும், ப்ரளயத்தையும் விரித்துச் சொல்லுகிறேன்,கேட்பாயாக. (தைனந்தின கல்பமென்றும், மஹா கல்பமென்றும் கல்பம் இரண்டு விதம்). நாலாயிரம் யுகங்கள் சேர்ந்தால் ப்ரஹ்மதேவனுக்கு ஒரு தினம் (ஒரு பகல்) என்று கூறப்படுகின்றது. அதையே (தைனந்தின) கல்பமென்று உணர்வாயாக. 

மன்னவனே! அதில் பதினான்கு மனுக்கள் க்ரமமாக வருவார்கள். அந்த நாலாயிர யுகங்களடங்கிய கல்பத்தின் முடிவில் ப்ரளயம் உண்டாகும். அதுவும் அந்தக் கல்பத்தைப் போலவே நாலாயிரம் யுகங்களடங்கியது. அதையே ப்ரஹ்மதேவனுக்கு ஓரிரவென்று கூறுகிறார்கள். அப்பொழுது, இம்மூன்று லோகங்களும் மறைந்து போகின்றன. இந்த ப்ரளயத்தை நைமித்திக ப்ரளயமென்று சொல்லுவார்கள். இந்த ப்ரளயத்தில், ஜகத் ஸ்ருஷ்டி கர்த்தாவான (உலகைப் படைப்பவரான) ப்ரஹ்மதேவன், ஜகத்தையெல்லாம் தனக்குள் அடக்கிக் கொண்டு, ஆதிசேஷனகிற படுக்கையில் படுத்துக் கொண்டிருப்பான். ப்ரஹ்மதேவனுடைய சயனத்திற்கு நிமித்தமாயிருக்கையால், நைமித்திக ப்ரளயமென்று கூறப்படும். உலகங்களுக்கு எல்லாம் மேற்பட்டதாகிய ஸத்யலோகத்தில் வாஸம் செய்கின்ற ப்ரஹ்மதேவனுடைய வாழ்நாளாகிய இரண்டு பரார்த்தங்கள் கடக்கையில், மஹத்து, அஹங்காரம் இவைகளும், பஞ்ச பூதங்களும் ஆகிய ஏழு ப்ரக்ருதிகளும், மறைகின்றன. 

மன்னவனே! இந்த ப்ரளயமே ப்ராக்ருத ப்ரளயமென்று கூறப்படும். (ப்ரஹ்மாவின் வாழ்நாளாகிய இரண்டு பரார்த்த காலத்தை மஹா கல்பமென்பர்கள்). இந்த ப்ராக்ருத ப்ரளயத்தில், விநாச (அழிவு) நிமித்தம் (காரணம்) நேர்ந்திருக்கையால், மஹத்து முதலிய ஏழு ப்ரக்ருதிகளின் பரிணாமமான ப்ரஹ்மாண்டம் மறைகின்றது. (அதை விவரித்துச் சொல்லுகிறேன்; கேட்பாயாக). 

ராஜனே! பர்ஜன்ய தேவன் பூமியில் நூறு வருஷங்கள் மழை பெய்யாதிருக்கையில், அப்பொழுது அன்னமில்லாமையால், ஜனங்கள் பசியினால் பீடிக்கப்பட்டு, ஒருவரை ஒருவர் பக்ஷிப்பார்கள் (உண்பார்கள்). இவ்வாறு ஒருவர்க்கொருவர் உபத்ரவம் (தீங்கு) செய்து கொண்டு வருந்தி, கால க்ரமத்தில் மெல்ல மெல்ல ஜனங்கள் க்ஷீணித்து (அழிந்து) விடுவார்கள். ப்ரளய காலத்து ஸூர்யன், ஸமுத்ரத்திலும், தேஹங்களிலும், பூமியிலும் உள்ள ரஸத்தையெல்லாம் பொறுக்க முடியாத கிரணங்களால் இழுத்துக் கொள்வானன்றி, இப்பொழுது போல் சிறிதும் விடமாட்டான். பிறகு,  வாயு வேகத்தினால் ஸங்கர்ஷண முகத்தினின்றுண்டான ப்ரளய காலாக்னி (ஊழி நெரிப்பு) ப்ரஜைகளே இன்றிச் சூன்யமாயிருக்கின்ற பாதாளாதி லோகங்களையெல்லாம் தஹிக்கும். இவ்வாறு மேலும் கீழும், இடையில் நாற்புறத்திலும், ஸூர்ய கிரணங்களாலும், அக்னி ஜ்வாலைகளாலும் தஹிக்கப்பட்ட ப்ரஹ்மாண்டம், கொளுத்தப்பட்ட கோமய பிண்டம் (சாணி உருண்டை) போல் தோற்றும். பிறகு, மிகவும் பலிஷ்டமும் (பலம் உள்ளதும்), கொடியதுமான ப்ரளய காலக் காற்று நூறு வர்ஷங்களும், அதற்கு மேல் சில காலமும் ஓயாமல் வீசிக் கொண்டிருக்கும். அப்பொழுது, ஆகாசம் தூள் மூடிப் புகை சூழ்ந்தாற் போலிருக்கும். 

ராஜனே! அதற்குப் பிறகு பலவகை வர்ணங்களையுடைய பற்பல மேகக்கூட்டங்கள் பேரொலியுடன் கர்ஜனைகள் செய்துகொண்டு நூறு வர்ஷங்கள் மழை பெய்யும். பிறகு ப்ரஹ்மாண்டத்தின் இடையிலுள்ள ப்ரபஞ்சமெல்லாம் ஒரே வெள்ளமாய் விடும். இவ்வாறு ப்ரபஞ்சமெல்லாம் நீராய் விடுகையில், அப்பொழுது பூமியின் குணமான கந்தத்தை (வாசனையை) ஜலம் இழுத்துக் கொள்ளும். ஜலத்தினால் தன் கந்த குணம் இழுக்கப் பெற்ற பூமி ஜலத்தில் மறையும். பிறகு, ஜலத்தின் குணமான ரஸத்தை (சுவையை) தேஜஸ்ஸு (நெருப்பு) இழுத்துக்கொள்ளும். அவ்வாறு தன்னுடைய ரஸ குணம் பறியுண்ட ஜலம், தேஜஸ்ஸில் மறையும். பிறகு, தேஜஸ்ஸின் குணமாண ரூபத்தை (உருவத்தை) வாயு இழுத்துக் கொள்ளும். தன் ரூப குணம் பறியுண்ட அந்தத் தேஜஸ்ஸு வாயுவில் மறையும். அந்த வாயுவின் குணமான ஸ்பர்சத்தை (தொடு உணர்ச்சியை) ஆகாசம் இழுத்துக் கொள்ளும். தன்னுடைய ஸ்பர்ச குணம் பறியுண்ட வாயு, ஆகாசத்தில் மறையும். 

ராஜனே! பிறகு ஆகாசத்தின் குணமான சப்தத்தைத் (ஒலியை) தாமஸ அஹங்காரம் இழுத்துக்கொள்ளும். தன்னுடைய சப்த குணம் பறியுண்ட ஆகாசம், அந்தத் தாமச அஹங்காரத்தில் மறையும். பிறகு ஸாத்விக அஹங்காரம், ராஜஸ அஹங்காரத்துடன் கூடி, ஜ்ஞான இந்த்ரியங்களையும் (அறிவு புலன்களையும்) அவற்றின் குணங்களையும் இழுத்துக் கொள்ளும். ஸாத்விகமென்றும், ராஜஸமென்றும், தாமஸமென்றும் மூன்று வகைப்பட்ட அஹங்கார தத்வத்தை மஹத் தத்வம் இழுத்துக்கொள்ளும். (அஹங்காரதத்வம், மஹத் தத்வத்தில் மறையும்). ஸத்வாதி குணங்களே வடிவாகப் பெற்ற ப்ரக்ருதி, அம்மஹத் தத்வத்தை இழுத்துக் கொள்ளும். 

ராஜனே! ஸத்வாதி குணமயமான அந்த ப்ரக்ருதியை, காலத்தினால் தூண்டப்பட்ட அவ்யாக்ருதம் என்னும் ப்ரதானம் இழுத்துக் கொள்ளும். (மஹத்து முதலிய நாம (பெயர்), ரூப (உருவ), விபாகங்கள் (வேறுபாடுகள்) இன்றி ஸத்வாதி குணங்கள் ஸாம்ய அவஸ்தையை (சம நிலையை) அடைந்திருக்கிற ப்ரதானம், அவ்யாக்ருதமென்று கூறப்படும்). அந்த அவ்யாக்ருதத்தைப் பரதேவனான பரமபுருஷன் இழுத்துக் கொள்ளுகிறான். அவன், மற்றொன்றில் மறைபவனல்லன். இப்பரமபுருஷனுடைய ஸ்வரூபத்திற்குக் காலத்தின் அவயவங்களான (அங்கங்களான) அஹோராத்ராதிகளால் (பகல், இரவு) பரிணாமம் முதலிய குணங்கள் உண்டாக மாட்டாது. அது ஆதி (முதல்), அந்தங்கள் (முடிவு) அற்றது; இந்திரியங்களுக்கு எட்டாதது; என்றும் மாறாமல் ஒருவாறாயிருக்கும் தன்மையது; அவ்யக்தம் முதல் ப்ருதிவி (பூமி) வரையிலுமுள்ள ஜகத்திற்கெல்லாம் காரணமாயிருக்கும்; கார்யங்களின் தோஷங்கள் எவையும் தீண்டப் பெறாமல் அழிவற்றிருக்கும். 

பிறத்தல், வளர்தல் முதலிய வாக்குக்களும், அவற்றிற்கு நிதானமான (காரணமான) மனமும், அப்பரமாத்ம ஸ்வரூபத்தைத் தீண்ட வல்லவையாக மாட்டாது. மற்றும், அதில் ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களுக்காவது, மஹத்து முதலியவற்றிற்காவது, ப்ராணன், புத்தி, கர்மேந்த்ரியங்கள், ஜ்ஞானேந்த்ரியங்கள் இவற்றிற்காவது, உலகங்கள் அடங்கிய ப்ரஹ்மாண்டத்திற்காவது, ஸம்பந்தம் கிடையாது. உலகியல் வாழ்வில் கட்டுண்டுள்ள ஜீவன் குணங்களுக்கு உட்பட்டிருப்பது போல், பரமாத்ம ஸ்வரூபம் குணங்களுக்கு உட்பட்டிராது. 

ஜீவனுக்குக் கர்மத்தினால் (புண்ய பாப வினைகளால்) மஹத்து முதலிய தத்வங்களின் பரிணாமமான தேஹங்களின் ஸம்பந்தம் இருப்பதுபோல், பரமாத்மனுக்குக் கிடையாது. அவன், உலகியல் வாழ்வில் கட்டுண்டுள்ள ஜீவனைப்போல் சக்ஷுராதி (கண் முதலிய) கரணங்களைப் பற்றின (புலன்களால் ஏற்படும்) அறிவுடையவனும் அல்லன். ப்ரஹ்மாண்டம் ப்ரக்ருதியின் பரிணாமமேயன்றி, பரமாத்ம ஸ்வரூபத்தின் பரிணாமமன்று). மற்றும், அப்பரமாத்மன் உலகியல் வாழ்வில் கட்டுண்டுள்ள ஜீவனைப்போல் ஸ்வப்னம் (கனவு), ஜாகரம் (விழிப்பு) முதலிய ஸங்கோச (தாழ்ச்சி), விகாஸங்களுக்கு (மலர்ச்சி) உரிய ஞானத்திற்கிடமாகாமல், என்றும் ஸங்கோசமின்றிய (குறைவற்ற) ஞானத்திற்கிடமாய் இருப்பான்.

ஸுஷுப்தி (ஆழ்ந்த உறக்கம்) என்னும் அவஸ்தையும் அவனுக்குக் கிடையாது. அவன் ஆகாசமுமல்லன்; ஜலமுமல்லன்; பூமியுமல்லன்; வாயுவுமல்லன்; அக்னியுமல்லன்; ஸூர்யனுமல்லன்; பின்னையோவென்றால், இவற்றைக் காட்டிலும் விலக்ஷணமாய் (வேறாய்) இருப்பவன். அப்பரமாத்மன், ஸுஷுப்தி (ஆழ்ந்த உறக்கம்) அவஸ்தையை அடைந்த (நன்கு உறங்குகிற) ஜீவனையும், ஆகாசத்தையும் ஒத்திருப்பான். ஜீவனுக்கு ஸுஷுப்தியில் (ஆழ்ந்த உறக்கம்) நான் என்கிற தோற்றம் தவிர ப்ராஹ்மணத்வம், ஸுகம், துக்கம், முதலிய விகாரங்கள் (மாறுபாடுகள்) தோற்ற மாட்டாது. அவ்வாறே, பரமபுருஷன் ப்ராஹ்மணத்வாதி விகாரங்களும், ஸுக, துக்காதி விகாரங்களும், தீண்டப் பெறாதவன். ஆகாசம் எங்கும் நிறைந்திருப்பினும் அவ்வவற்றின் தோஷங்கள் தன்மேல் தீண்டப்பெறாதிருக்கும். அவ்வாறே, பரமபுருஷன் சேதனாசேதன ரூபமான (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக் கொண்ட) ஜகத்திற்கெல்லாம் அந்தராத்மாவாயிருப்பினும், அவ்வவற்றின் தோஷங்கள் எவையும் தன்மேல் தீண்டப் பெறாமல் பரிசுத்தனாயிருப்பான்;

ஜட (அறிவற்ற) பொருட்களோடாவது, அஜடமான (அறிவுடைய) ஜீவனோடாவது ஒத்திட்டு இத்தகையனென்று ஊஹிக்க முடியாதவன்; ஸர்வ காரணமான இத்தகைய இப்பரமாத்ம ஸ்வரூபத்தையே அவ்யக்தத்திற்கு லயஸ்தானமாக (சென்றடையும் இடமாக) வேதாந்தங்கள் கூறுகின்றன. எப்பொழுது புருஷன், அவ்யக்தம் இவைகளுக்கு லயம் (காரணத்தில் சேர்தல், மறைதல்) உண்டாகிறதோ, அப்பொழுது ப்ருதிவி முதல் மஹத்து வரையிலுமுள்ள சக்திகளென்று கூறப்படுகிற தத்வங்கள், காலத்தினால் தூண்டப்பட்டு, தத்தம் செயல்களைச் செய்யும் திறமையற்று, தத்தம் காரணங்களில் மறைகையாகிற லயத்தை அடைகின்றனவோ, இதுவே ப்ராக்ருத லயமாம். (புருஷனுக்கு லயமாவது, மிகுதியும் ஜ்ஞான ஸங்கோசம் உண்டாகப் பெற்று (அறிவு முழுதும் அழிந்து), பரமாத்மனிடத்தில் ஸம்பந்திக்கையேயாம். அவ்யக்தத்திற்கு லயமாவது, அவிபக்த (பிரித்து அறிய முடியாதபடி) தமஸ்ஸாயிருக்கும் தன்மையைப் பெறுகையே. 

ப்ருதிவி முதலிய பதார்த்தங்களெல்லாம் பரமாத்மனை விட்டுப் பிரியாமல், அவனுடைய சக்திகள் போன்றிருக்கையால், சக்திகளென்று கூறப்படுகின்றன. ஜ்ஞான ஸ்வரூபனான பரமாத்மன், புத்தி, இந்த்ரியம் முதலிய ஸகல பதார்த்தங்களையும் சரீரமாக உடையவனாகையாலே, ப்ராமாணிகர்களுக்கு (வேதம் முதலிய ப்ரமாணங்களின் கருத்தை உள்ளபடி அறிந்தவர்களுக்கு) அந்த புத்தி முதலிய ஸகல பதார்த்தங்களுக்கும் ஆதாரமாகத் தோற்றுகிறான். இந்திரியங்கள் முதலிய ஸமஸ்த வஸ்துக்களும் அவனுக்குச் சரீரம் என்றும், அவை அவனை விட்டு ஒரு க்ஷணமும் பிரிந்திருக்க முடியாதென்றும் ப்ரமாணங்கள் கூறுகின்றன. ஆகையால், அவன் அவர்களுக்கு ஸர்வாதாரனாய் (ஆதாரமாய்த்) தோற்றுவது உண்மையே அன்றி வேறன்று. 

அவன் அவற்றைச் சரீரமாகவுடையவனாயினும், சரீரங்களான அவ்வஸ்துக்களுக்கும், சரீரியான பரமாத்மனுக்கும், ஸ்வபாவங்கள் ஒத்திருக்க மாட்டாது. புத்தி, இந்த்ரியம் முதலிய ஸகல பதார்த்தங்களும் பரமாத்ம ஸ்வரூபம் போல் நித்யங்கள் (நிலையானவை) அன்று; பின்னையோ என்றால், ஆதி அந்தங்கள் (முதல், முடிவு) உடையவை. என்றும் ஒருவாறாயிருக்கும் தன்மையுள்ளதற்கே வஸ்துவென்னும் பெயர் அமையுமாகையால், அத்தன்மையுள்ள பரமாத்மனொருவனே வஸ்துவாவானன்றி மற்றவையெல்லாம் என்றும் ஒருவாறாயிருப்பவை அன்றாகையால், உண்மையில் வஸ்துக்களாக மாட்டாது. 

ஆனால், இவற்றை வஸ்துக்களென்று வழங்குவது எவ்வாறு பொருந்தும் என்றால், வஸ்துவாகிய பரமாத்மன் இவையெல்லாவற்றிலும் அமைந்திருக்கிறானாகையால், அவனை உட்கொண்ட இவை வஸ்துக்களென்று வழங்கி வருகின்றன. தீபம், தேஜஸ்ஸின் கார்யம். சக்ஷுரிந்தரியம் (கண்) தேஜஸ்ஸின் உதவியில்லாமல் வஸ்துக்களை க்ரஹிக்க வல்லதன்று. (இந்திரியங்கள் தேஜஸ்ஸின் காரணமான அஹங்கார தத்வத்தின் கார்யங்கள்.) இவையெல்லாம் தேஜஸ்ஸின் நிறம் போல் அதை விட்டுப் பிரிந்திருப்பவையல்ல. 

இவ்வாறே இந்திரியங்களும் அந்தக்கரணமும் (மனதும்) விஷயங்களும் பரமாத்மனால் ஸ்ருஷ்டிக்க (படைக்கப்) பட்டவையாகையாலும், அவனால் உதவி செய்யப் பெற்றவையாகையாலும், அவனையே ஆதாரமாகவுடையவையாகையாலும், இந்த இந்த்ரியாதிகளைக் காட்டிலும் அத்யந்த விலக்ஷணனான (மிகவும் வேறான) அப்பரமாத்மனை விட்டுப் பிரிந்திருக்க மாட்டாது. (இவ்வாறு ஸமஸ்த வஸ்துக்களுடைய ஸத்தா (இருப்பு), ஸ்திதி (நீடிப்பு), ப்ரவ்ருத்திகளும் (செயல்களும்) பரமாத்ம அதீனமென்று ஏற்படுகையில், ஜீவனுடைய அவஸ்தைகளும் பரமாத்ம அதீனமென்பது ஸித்தமே. ஆனால், அதில் விசேஷம் உண்டு. என்னவென்றால்;

ராஜனே! ஜீவனுக்கு தர்ம பூத ஜ்ஞானத்தின் மூலமாய் ஜாகரம் (விழிப்பு), ஸ்வப்னம் (கனவு), ஸுஷுப்தி (ஆழ்ந்த உறக்கம்) என்னும் பல அவஸ்தைகள் (நிலைகள்) வழங்கி வருகின்றனவே; இவ்வவஸ்தைகள், அவனுக்கு ப்ரக்ருதி ஸம்பந்தத்தினால் ஏற்பட்டவைகளே அன்றி, இயற்கையன்று. எவ்வாறு ஆகாசத்தில் மேகங்கள் ஒருகால் தோற்றுவதும், ஒருகால் மறைவதுமாயிருக்கின்றனவோ, அவ்வாறே இந்த ப்ரபஞ்சமெல்லாம் பரமாத்மனிடத்தினின்று உண்டாகி, ஒருகால் புலப்படுவதும், அவனிடத்தில் மறைந்து ஒருகால் புலப்படாமலும் இருக்கின்றது. சேதனாசேதன ரூபமான (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக் கொண்ட) இந்த ப்ரபஞ்சத்திற்கு எல்லாம் அவன் ஆதாரமாயிருப்பினும், இதன் தோஷங்கள் சிறிதும் அவன் மேல் தீண்டுகிறதில்லை. அவன், ஆகாயம் போல் என்றும் நிர்மலனாயிருப்பவன். விகாரங்களெல்லாம் பரமாத்மனுடைய சரீரமாகிய சேதனாசேதனங்களைச் சேர்ந்தவை.

 மன்னவனே! அவயவங்களை (அங்கங்களை) உடைய வஸ்து, அவயவி என்று கூறப்படுகின்றது. அவயவிகளான ஸமஸ்த வஸ்துக்களுடைய அவயவங்களும் உண்மையேயன்றி, இல்லாதவைகளை இருப்பதாக வழங்குவதில்லை. அவயவங்களையுடைய வஸ்து, அவயவங்களைக் காட்டிலும் தனியே பிரிந்திருப்பதன்று. அப்படியிருக்குமாயின், அவயவங்களைக்காட்டில் அவயவி தனியே தோற்ற வேண்டும். அனுபவத்தில் அது கிடையாது. 

நூல்களாகிற பல அவயவங்கள் சேர்ந்து ஆடையாகிற அவயவியான ஓர் வஸ்து ஏற்படுகின்றது. அவ்வாடை, தன் அவயவங்களான நூல்களை விட்டுத் தனியே புலப்படுகிறதில்லை. அவ்வாறே ஜகத்து பரமாத்மனை விட்டுத் தனியே இராது. ஸூக்ஷ்ம சேதன, அசேதன மென்னும் ஸமுதாயம் ஸ்தூல சேதன, அசேதன மென்னும் ஸமுதாய ரூபமான ஜகத்தாகப் பரிணமித்து, கார்யமென்று கூறப்படுகின்றது . ப்ராமாணிகர்களுக்கு ஒவ்வொரு வஸ்துவும், சேதன, அசேதன ஸமுதாய ரூபமாகவே தோற்றுகிறது. ஆகையால், இல்லாத வஸ்து புதிதாய் உண்டாகிறதென்று சொல்லுகிறவர்களின் மதம் ஸரியன்று. 

கார்ய, காரணங்கள் இரண்டும் ஒன்றாயிருக்குமாயின், கார்யமான குடத்தைக் குடமென்றும், காரணமான மண்ணை மண்ணென்றும், வெவ்வேறு பெயர்களால் வழங்குகிறார்கள். மண்ணை மண்ணென்று நினைக்கிறோமன்றி, குடமென்று நினைக்கிறதில்லை. குடத்தைக் குடமென்று நினைக்கிறோமன்றி, மண்ணென்று நினைக்கிறதில்லை. குடம், ஜலம் கொண்டுவர உபயோகப்படுகிறது; மண் அதற்கு உபயோகப்படாது. 

இவ்வாறு கார்ய, காரணங்களைப் பற்றின அறிவும், பெயரும், கார்யமும் வெவ்வேறாயிருக்கின்றமை பொருந்தாதாகையால், கார்ய, காரணங்கள் வெவ்வேறென்றே கொள்ள வேண்டும் என்றால், அது பொருளன்று. அவ்வாறு வெவ்வேறாக நினைப்பது ப்ரமமேயாம் (கலக்கமே). கார்ய, காரணங்கள் இரண்டும் ஒன்றைவிட்டு மற்றொன்று பிரியாதிருப்பவை. அறிவு, பெயர், கார்யம் இவை வெவ்வேறாயிருப்பதற்குக் காரணம் மண் ஓர் வகை மாறுபாட்டை அடைந்திருக்கையே. அதனால், அவை வெவ்வேறாக மாட்டாது. அவ்வாறே சேதன, அசேதன ஸமுதாயத்துடன் கூடிய ஈச்வரனே காரணமும் கார்யமுமாகி, காரணாவஸ்தையிலும் (பெயர், உருவம் அற்ற நுட்பமான சேதன அசேதனங்களுடன் கூடிய பகவான் காரணம்) , கார்யாவஸ்தையிலும் (பெயர், உருவத்துடன் கூடிய சேதன அசேதனங்களுடன் கூடிய பகவான்  கார்யம்), ஒன்றேயன்றி வேறன்று. 

காரண தசையில் ஸூக்ஷ்ம சேதனாசேதனங்களை (பெயர், உருவம் அற்ற நுட்பமான சேதன அசேதனங்களை) சரீரமாக உடைய பரப்ரஹ்மம், கார்ய தசையில் ஸ்தூல சேதனாசேதனங்களை (பெயர், உருவத்துடன் கூடிய சேதன அசேதனங்களை) சரீரமாகவுடைய பரப்ரஹ்மமாய் மாறுகின்றது. ஆகையால், கார்யம் முன்பில்லாமல் புதிதாய் உண்டாகிறதென்பது ஏற்புடையதன்று. அந்த சேதன, அசேதன, ஈச்வரர்கள் மூன்றும் ஸ்வபாவத்தில் ஒன்றோடொன்று ஒத்திருக்க மாட்டாது; விலக்ஷணமாய் (வேறு வேறாய்) இருக்கும். அசேதன பரிணாமமான தேவ, மனுஷ்யாதி சரீரங்களெல்லாம் ஆதி (முதல்) அந்தங்களை (முடிவை) உடையவை. ஆகையால், அவை ஆத்ம வஸ்துக்களாக மாட்டாது.

தேஹத்தையே ஆத்மாவென்று நினைப்பது ப்ரமமே (மனக்கலக்கமே). ஆத்மா தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணனாய் (வேறாய்)  இருப்பவன். ப்ராஹ்மணத்வாதி ஜாதி, ஸத்வாதிகுணம், நடை முதலிய செயல், ஜன்மம், வ்ருத்தி இவை முதலிய விகாரங்கள் (மாறுபாடுகள்) பலவும், தேஹாத்மாபிமானிகளுக்கு (உடலை ஆத்மா என்று எண்ணுபவர்களுக்கு) ஆத்மாவினிடத்தில் இருப்பதாகத் தோற்றிலும், அவை ஆத்மாவைச் சேர்ந்தவையன்று. அவர்கள் அவ்வாறு நினைப்பது ப்ரமமே (மனக்கலக்கமே). ஆத்மாவினிடத்தில் விகாரம் (மாறுபாடு) உளதென்று நிரூபிக்க முடியாது. அவனிடத்தில் சிறிதாயினும் விகாரம் உளதாயின், முக்தி தசையிலும் தோற்ற வேண்டி வரும். முக்தி தசையில் விகாரமே (மாறுபாடு) கிடையாதென்று ப்ரமாணங்கள் முறையிடுகின்றனவன்றி, உளதென்று எங்கும் சொல்லவில்லை. ஆகையால், விகாரங்கள் (மாறுபாடுகள்) தேஹத்தைச் சேர்ந்தவைகளேயன்றி, ஆத்மாவைச் சேர்ந்தவைகளன்று. என்றும் ஒருவாறாயிருக்கும் தன்மையதான பரிசுத்த ஜீவாத்ம ஸ்வரூபத்திற்கு, தேவ, மனுஷ்யத்வாதி ஆகார பேதங்கள் கிடையாது. 

ஒருவன் உளவென்று நினைப்பானாயின், அவன் தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணனான (வேறான) ஆத்மாவின் ஸ்வரூபத்தை அறிந்தவனல்லன்; பின்னையோவென்றால், தேஹத்தையே ஆத்மாவாக ப்ரமித்தவன் (எண்ணி மயங்கியவன்). ஆகாசம் எங்கும் நிறைந்திருப்பினும், அவற்றின் விகாரங்கள் (மாறுபாடுகள்) தீண்டப் பெறாதிருப்பது போலவும், ஸூர்யன் ஜலம் முதலியவற்றில் ப்ரதிபலிக்கினும், அவற்றின் விகாரங்கள் (மாறுபாடுகள்) தீண்டப்பெறாதிருப்பது போலவும், வாயு எல்லாவிடங்களிலும் வியாபித்திருப்பினும் அவற்றின் விகாரங்கள் (மாறுபாடுகள்) தீண்டப்பெறாதிருப்பது போலவும், ஆத்மா தேவ, மனுஷ்யாதி தேஹங்களில் அமைந்திருப்பினும், அந்த தேவ, மனுஷ்யாதி பேதங்கள் தீண்டப் பெறான். மற்றும், கடம் முதலியவற்றிலுள்ள ஆகாயமும், வெளியாகாசமும் ஒன்று போலவும், ஆகாசத்திலுள்ள ஸூர்யனும், ஜலம் முதலியவற்றில் ப்ரதிபலிக்கிற ஸூர்யனும் ஒன்று போலவும், தேஹங்களுக்குள்ளே இருக்கிற வாயுவும் வெளியில் வீசுகிற வாயுவும் ஒன்று போலவும், ஆத்மா ஒரு தேஹத்தை விட்டு மற்றொரு தேஹத்தைப் பெறினும் அவன் ஒருவனேயன்றி வேறன்று. (இவ்வாறு ஆத்மா தேஹத்தைக்காட்டிலும் விலக்ஷணன் (வேறானது) என்று நிரூபித்த மாத்ரத்தினால், தேஹம் ஆத்மாவைக்காட்டிலும் விலக்ஷணமென்ற விஷயம் ஸித்தமே. அவ்விரண்டைக் காட்டிலும் பரமாத்மன் விலக்ஷணன் என்பதுவும் நிரூபிக்கப்பட்டது). 

ஜனங்கள் பொன்னொன்றையே கைவளை, தோள்வளை, கிரீடம், குண்டலம் முதலிய பல ஆபரணங்களாகச் செய்து “இது கைவளை. இது தோள்வளை. இது கிரீடம். இது குண்டலம்” என்று வழங்கி, அவற்றை அணிகை முதலிய ப்ரயோஜனத்தையும் அனுபவிக்கிறார்கள். அந்தக் கைவளை முதலியவை தாரணாதி (அணிதல் முதலிய) ப்ரயோஜனங்களுக்கு இடமாயிருக்கையால், உண்மையேயன்றிப் பொய்யன்று. அவற்றிற்குக் காரணம் பொன்னே. அவை தங்கள் காரணமான பொன்னைக் காட்டிலும் வேறுபட்டவையென்று எவனேனும் நினைக்கக்கூடுமோ? 

ஒருவன் முத்துச்சிப்பியைப் பார்த்து வெள்ளியென்று ப்ரமிப்பானாயின் (மயங்குவானாயின்), அதில் தேஜஸ்ஸின் அம்சம் சிறிது இருப்பதால் பிரகாசித்தாலும், அது வெள்ளியாலாக வேண்டிய ப்ரயோஜனத்தை நிறைவேற்றுமோ? நிறைவேற்றாது. அப்படியன்றி, இவை ஆபரணம் என்கிற ப்ரயோஜனங்களை விளைக்கின்றமையால், உண்மை என்பதில் ஸந்தேஹமில்லை. இவ்வாறே ஸூக்ஷ்ம சேதனாசேதனங்களோடு (பெயர், உருவம் அற்ற நுட்பமான சேதன அசேதனங்களோடு) கூடிய பகவான், லௌகிக வாக்யங்களாலும், வைதிக வாக்யங்களாலும், ஸ்தூல சேதனாசேதனங்களோடு (பெயர், உருவத்துடன் கூடிய சேதன அசேதனங்களோடு) கூடிய பகவானாகிற ஜகத்தாகக் கூறப்படுகிறான். ஆகையால், ஜகத்து உண்மையே அன்றிப் பொய்யன்று; பகவானைக் காட்டிலும் வேறுபட்டதுமன்று. ஆதலால், கார்ய, காரணங்கள் வேறென்பதுவும், “காரணங்களே உண்மை, கார்யங்களெல்லாம் பொய்” என்பதுவும் பொருளாக மாட்டாது. 

ஸூர்யனிடத்தினின்று உண்டான மேகம், ஸூர்யனால் விளங்கச் செய்யப் பெற்று, ஸூர்யனுடைய அம்சமாகிய கண்ணுக்கு ஸூர்யனைப் பார்க்க ஒட்டாமல் மறைவாயிருக்கின்றது. இவ்வாறே பரமாத்மனிடத்தினின்று உண்டான தேஹம், அவனால் விளங்கச்செய்யப் பெற்று, அவனுடைய அம்சமாகிய ஜீவனுக்கு ஆத்ம, பரமாத்ம ஸ்வரூபம் தெரியாதபடி மறைவாயிருக்கின்றது. ஜீவனுக்கு ஆத்ம, பரமாத்ம ஜ்ஞான (அறிவுக்கு) விரோதியான (எதிரியான) இந்த தேஹபந்தத்தையே (உடல் தொடர்பையே) ஸம்ஸாரமென்று சொல்லுகிறார்கள். எப்பொழுது அம்மேகம் காற்றினால் தள்ளுண்டு சிதறிப்போகின்றதோ, அப்பொழுது கண் ஸூர்யனைப் பார்க்கின்றது. அவ்வாறே அஹங்காரத்திற்கிடமான தேஹம், ஆத்ம, பரமாத்ம ஸ்வரூபங்களை உள்ளபடி ஆராய்ந்தறிந்து செய்யும் உபாஸனத்தினால் எப்பொழுது நசிக்கின்றதோ, அப்பொழுது ஜீவன் பரமாத்மனைக் காண்பான். 

இவ்வாறு விவேகம் முதலிய ஸாதனங்களால் உதவி செய்யப் பெற்ற பரமாத்ம உபாஸனமாகிற (த்யானமாகிற) ஆயுதத்தினால் ஆத்மாவுக்குள்ள தேஹ ஸம்பந்தமாகிற பந்தத்தை அறுத்து, தன்னைப் பற்றினவர்களைக் கைவிடாமல் காப்பாற்றும் தன்மையனான பரமாத்மனை அனுபவித்துக் கொண்டிருப்பானாயின், ராஜனே ! அப்பரமாத்மானுபவத்தையே ஆத்யந்திக ப்ரளயம் (மோட்சம்) என்று கூறுகிறார்கள். 

பரந்தபனே! (சத்ருக்களைத் தவிக்கச் செய்பவனே!) ப்ரஹ்மதேவன் முதலிய ஸமஸ்த ஜீவாத்மாக்களுடைய சரீரங்களும் க்ஷணந்தோறும் பரிணமித்துக் கொண்டிருக்குந் தன்மையுடையவை. பரிணமிக்கையாவது முன்னுள்ள நிலைமையை விட்டு வேறு நிலைமையைப் பெறுகை. அவற்றில் மேல்வரும் நிலைமையை உத்பத்தி (உண்டாதல்) என்றும், கீழ்ப்போன நிலைமையை ப்ரளயம் (அழிவு) என்றும் கூறுகிறார்கள். இவையே நித்ய உத்பத்தியும், நித்ய ப்ரளயமுமாம். அவை ஸூக்ஷ்மஜ்ஞர்களுக்கு (நுட்பமான அறிவு உடையவர்களுக்கே) தெரியுமேயன்றி, ஸ்தூல த்ருஷ்டிகளுக்கு (ஸாதாரணமாக பார்ப்பவர்களுக்குத்) தெரியாது. 

ப்ரவாஹத்தின் வேகத்தினால் தள்ளுண்டு போகிற காஷ்டம் (கட்டை) முதலியவைபோல், தேஹங்கள் ஒருநிலையில் இராமல், கால வேகத்தினால் க்ஷணந்தோறும் பரிணாமத்தை அடைந்து கொண்டிருக்கின்றன. க்ஷணந்தோறும் உண்டாகிற அவ்வவஸ்தைகளே அவற்றின் ஜன்ம ப்ரளயங்களுக்கு ஹேதுவாய் (காரணமாய்) இருக்கின்றன. ஆனால் தேஹங்களுக்கு க்ஷணந்தோறும் அவஸ்தைகள் விளைகின்றனவாயின், அவை ஏன் தெரிகிறதில்லை என்றால், ஆதி (முதல்), அந்தங்கள் (முடிவு) அற்றதும், பரமபுருஷனுடைய சரீரமுமாகிய இக்காலத்தின் வேகத்தினால் அவை தெரிகிறதில்லை. ஆகாயத்தில் ஸூர்யன் முதலிய க்ரஹங்கள் ஓரிடத்தில் நிலையாயிராமல் க்ஷணந்தோறும் போய்க் கொண்டேயிருப்பினும், அப்போக்கு நமக்குத் தெரிகிறதில்லையல்லவா? அவ்வாறே இதுவும் என்றுணர்க. 

நித்யமென்றும், நைமித்திகமென்றும், ப்ராக்ருதமென்றும், ஆத்யந்திகமென்றும் நான்கு வகையான ப்ரளயங்களையும் சொன்னேன். காலத்தின் கதி இத்தகையது. ஜகத்ஸ்ருஷ்டி கர்த்தாவும் (உலகைப் படைப்பவனும்), நாராயணனென்று பெயர் பெற்றவனும், ஸர்வாதாரனுமாகிய (எல்லாவற்றிற்கும் ஆதாரமும்) பகவானுடைய லீலாரூபமான சேஷ்டிதங்களை (செயல்களை) உட்கொண்ட கதைகளை உனக்குச் சுருக்கமாகச் சொன்னேன். ஆனால் அவற்றை விரித்துச் சொல்லலாகாதோ என்று வினவவேண்டாம். ப்ரஹ்ம தேவனும் அவற்றை முழுவதும் சொல்ல வல்லனல்லன். “ஆமாம். எல்லாம் சொன்னீர். இதனால் என்ன உபயோகம்?” என்கிறாயோ? சொல்லுகிறேன், கேள். 

பல வருத்தங்களாகிற காட்டுத் தீக்களால் வருத்தமுற்றுக் கடக்கமுடியாத ஸம்ஸார ஸாகரத்தைக் கடக்க விரும்பும் புருஷனுக்கு, பகவானுடைய லீலாரூபமான கதைகளின் ரஸத்தை அனுபவிக்கையைத் தவிர, அதைக் கடத்தும் உபாயம் வேறொன்றும் இல்லை. (ஆகையால் பகவானுடைய லீலைகளை வெளியிடுகிற இக்கதையைக் கேட்பானாயின், அவன் ஸம்ஸார ஸாகரத்தை அனாயாஸமாக (எளிதாகக்) கடப்பான்). ஸர்வஜ்ஞனான (எல்லாம் அறிந்த) நாராயணன், அநிருத்த ரூபியாய்க் கொண்டு (நான்முகன் மூலமாய் சதுச்லோகீரூபமான) இந்தப் புராண ஸம்ஹிதையை முன்பு நாரதருக்கு உபதேசித்தான். அந்த நாரதர், வ்யாஸருக்கு உபதேசித்தார். 

மஹாராஜனே! மஹானுபவராகிய அந்த வ்யாஸர் வேதத்தோடொத்த பாகவதமென்னும் இப்புராண ஸம்ஹிதையை ப்ரீதியுடன் (அன்புடன்) எனக்கு உபதேசித்தார். குருச்ரேஷ்டனே! நைமிசாரண்யத்தில் தீர்க்க ஸத்ரமென்னும் யாகத்தில் தீக்ஷித்துக் கொண்டிருக்கிற சௌனகர் முதலிய ரிஷிகளால் வினவப் பெற்று, சூத புராணிகர், இப்புராண ஸம்ஹிதையைச் சொல்லப் போகிறார். 

நான்காவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துரையிடுக (0)
புதியது பழையவை