திங்கள், 4 மே, 2020

ஆழ்வாராசார்யர்கள் காட்டும் வாழ்க்கை நெறிகள் - 23 - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி

மன்னுபுகழ் மணவாள மாமுனிகள்

தென்கலை சம்பிரதாயத்தில் ஆசார்ய வைபவமானது எம்பெருமானான ஸ்ரீரங்கநாதனிடம் ஆரம்பித்து, அவரிடமே நிறைவு பெறுகிறது. அந்த நிறைவினைச் செய்து வைக்கும் பேறு பெற்ற ஆசாரியப் பெருமகனார் ஸ்ரீமந் மணவாள மாமுனிகள்! இவருடைய பெருமையைக் கூறும் ‘ஸ்ரீசைலேச தயாபாத்ரம்’ என்கிற தனியனைப்பாடியே தினசரி வழிபாடு தொடங்குகிறது.

"அடியார்கள் வாழ! அரங்க நகர் வாழ! 
சடகோபன் தண்டமிழ் நூல் வாழ! 
கடல் சூழ்ந்த மன்னுலகம் வாழ! 
மணவாள மாமுனிகளே இன்னுமொரு நூற்றாண்டிரும்" என்று இவருக்குப் பல்லாண்டு பாடியே தென்கலை வழிபாடு நிறைவு பெறுகிறது.

எம்பெருமான் இட்ட பணியை எம் பெருமானார் செய்தார். அந்த எம்பெருமானார் செய்த பணியைச் சுவாமி மணவாள மாமுனிகள் தொடர்ந்து செய்து சிறப்புப் பெற்றார். வைணவத்தில் குறிப்பாக தென்னாசாரிய மரபில் கொண்டாடப்படும் ஸ்ரீமந் மணவாள மாமுனிகளை திருவாய்மொழி அர்த்தத்தை காத்த குணவாளர் என்று வைணவ உலகம் கொண்டாடுகிறது. ஒரு வருட காலத்தின் உத்ஸவாதிகளையெல்லாம் நிறுத்தி விட்டு மணவாள மாமுனிகளின் அமுதத் திருவாக்காம் திருவாய்மொழிப் பேருரையைத் திருவரங்கன் கேட்டான் என்பது வரலாறு.

வைணவ தென்கலை மரபின் நிறைவு நிலை ஆசாரியரான மாமுனிகளின் பெருமைகளையும் அருளிச் செயல்களையும் அவ்வளவு எளிதாக சொல்லி விட முடியாது.

சுவாமி இராமாநுஜரின் மறு அவதாரம் என்றே வைணவர்களால் கொண்டாடப்படுகின்ற இவரின் ஆணைப்படியே திருமலையில் எழுந்தருளியுள்ள திருவேங்கடமுடையான் மீது வட மொழியில் ஸ்ரீவெங்கடேச சுப்ரபாதம் எனும் திருப்பள்ளியெழுச்சியை பிரதிவாதி பயங்கரம் அண்ணன் ஸ்வாமி இயற்றினார். அது இன்றளவும் தினமும் நடைதிறக்கும் போது பாடப்பட்டு வருகிறது. இனி இவரின் அவதார வரலாற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.


திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார் திருநகரியிலே திகழக்கிடந்தான் திருநாவீறுடையபிரான் தாதரண்ணரையருக்கும் ஸ்ரீரங்க நாச்சியார் தம்பதிக்கும் ஆதிசேஷன் அம்சமாக சாதாரண வருஷம் ஐப்பசி மாதம் திருமூல நட்சத்திரத்தில் (24.10.1370) அவதரித்தார். அவருக்குப் பெற்றோர் வைத்த திருநாமம் அழகிய மணவாளப் பெருமாள்.

தம் தந்தையாரிடமே துவக்க நிலையில் வேத வேதாந்தங்களைப் பயின்றார். பின் அவர் தம் ஆசாரியராகத் திகழ்ந்தவர் திருமலையாழ்வார். அவர் திருவாய் மொழியில் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக திருவாய் மொழிப்பிள்ளை என்றே அழைக்கப்பட்டார்.

தம் தந்தையாருக்குப் பிறகு திருவாய்மொழிப் பிள்ளை திருவடிவாரத்தில் ஒதுங்கிய மாமுனிகளுக்கு அன்போடு தமிழ் வேதமான ஆழ்வார்களின் அனைத்து அருளிச் செயல்களையும் முறையே ஓதுவித்தார். மாமுனிகள் வைணவத்தில் முழு ஆற்றலும் ஊற்றமும் பெற திருவாய்மொழிப் பிள்ளையே காரணம். இராமாநுஜரின் பெருமைகளைச் சொல்லி மாமுனிகளை இராமாநுஜரின் திருவடிவாரத்தில் அன்பு கொள்ள வைத்தார். இந்த அன்பின் வெளிப்பாடாகவே யதீந்திரப் பிரவணர் என்று அழைக்கப்பட்டார். திருவாய்மொழிப் பிள்ளை தந்த ஊற்றத்தில் இராமாநுஜர் மீது ‘யதிராஜ விம்சதி’ என்னும் தோத்திரம் பாடினார். தொடர்ந்து வைணவம் வளம் பெற பற்பல நூல்களை தமிழிலும் வட மொழியிலும் அருளிச் செய்தார். 

யதிராஜ விம்சதி, உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, இயல் சாத்து, திருவாராதன கிரமம், ஸ்ரீதேவராஜ மங்களம், ஸ்ரீகாஞ்சி தேவப் பெருமாள் தோத்திரம், ஆர்த்தி பிரபந்தம் என தம் தனிப்படைப்புகளை அருளிய மாமுனிகள், பிள்ளை லோகாசாரியாரின் ரகசிய கிரந்தங்களுக்கும், அருளாள பெருமாள் எம்பெருமானாரின் ஞானசாரம் மற்றும் ப்ரமேய சாரத்திற்கும், பெரியாழ்வார் திருமொழியின் சில பாசுரங்களுக்கும், இராமாநுச நூற்றந்தாதிக்கும் விளக்கவுரை எழுதியுள்ளார்.

ஆழ்வார்களின் அருந்தமிழை தலைமீது வைத்துக் கொண்டாடியவர் மாமுனிகள். இதை மணவாள மாமுனிகள் அருளிய உபதேசரத்தின மாலையின் பாடலில் இருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

“ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி 
தாழ்வாது மில்குரவர் தாம் வாழி 
ஏழ்பாரும் உய்ய அவர்கள் உரைத்த அவைகள் தாம் 
வாழி செய்ய மறை தன்னுடனே சேர்ந்து”

வடமொழி வல்ல மாமுனிகள் இவ்வாறு தமிழில் ஆழங்கால் படக்காரணம் திருவாய்மொழிப் பிள்ளை தான். அவர் தமது மாணவரான மாமுனிகளிடம் சொன்னது இது. “நீர் வடமொழிச் சாத்திரங்களிலே அதிகம் கண் வைக்க வேண்டாம். பிரம்ம சூத்திரங்களுக்கு நம் பிதாமகர் எம்பெருமானார் அருளிய ஸ்ரீபாஷ்யத்தை ஒருக்கால் கேட்டு, நமக்கும், எம்பெருமானார்க்கும் பிரியமான திருவாய்மொழி முதலிய திவ்ய பிரபந்தங்களை பரிசீலனை செய்து கொண்டு, நம் பெருமாளுக்கு மங்களாசாசனம் செய்து கொண்டு, திருவரங்கவாசமே செய்திருக்க வேண்டும்!” தம் வாழ்நாள் முழுதும் இதைக் கடைபிடித்தார் மாமுனிகள். வைணவ நெறியை வகையாகப் பரப்ப எட்டு திக்குகளிலும் பொன்னடிக்கால் ஜீயர், கோயில் அண்ணன், பத்தங்கி பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர், திருவேங்கட ஜீயர், எறும்பியப்பா, அப்பிள்ளை, அப்பிள்ளார், பிரதிவாதி பயங்கரம் அண்ணா முதலிய சீடர்களை நியமித்தார். 

மாமுனிகள் மூன்று விதத்தில் வைணவத்திற்கு அருந்தொண்டு ஆற்றி இருக்கின்றார். முன்னோர்களைப் போற்றி அவர்களுடைய நூல்களுக்கு உரை தந்து வளப்படுத்தி இருக்கிறார். வடமொழியிலும் தமிழ் மொழியிலும் மிகச் சிறந்த நூல்களை யாத்து தமிழ் உலகுக்குத் தந்திருக்கிறார். இதனால் வைணவ சமயத்தின் மிகச் சிறந்த ஆசாரியராகப் போற்றப்படும் ஏற்றத்தைப் பெற்றிருக்கிறார். மாமுனிகளின் வாழ்வில் நடந்ததாகக் குறிப்பிடப்படும் சில சம்பவங்கள் சுவாமியின் குண அனுபவத்தை எல்லோரும் இனிதே புரிந்து கொள்ளும்படி செய்கின்றன. மாமுனிகளின் வைராக்கியத்தையும் எடுத்துக்காட்டுகின்றன.

ஒருமுறை வட தேசத்திலிருந்து ஒருவர் இவரிடம் கொஞ்சம் பொருளை கைங்கர்யத்துக்காகச் சமர்ப்பித்தார். அப்பொருளைப் பற்றியும், தந்தவர் இயல்பைப் பற்றியும் விசாரித்தறிந்த மாமுனிகள் அப்பொருள் நேரான வழியில் சம்பாதித்ததல்ல என்பதைப் புரிந்துக் கொண்டார். எனவே ஏற்றுக் கொள்ள மறுத்து அதனைத் திருப்பித் தந்து விட்டார். நேர்மையற்ற எதையும் அவர் ஏற்றதில்லை. 

மாமுனிகள் வாழ்வு வேறு வாக்கு வேறு அல்ல. இரண்டிற்கும் வேறுபாடு இன்றி வாழ்ந்தவர். வரம் தரும் பிள்ளை என்ற அடியவர், மணவாள மாமுனிகளைத் தனியாக வந்து வணங்கினார். அப்போது மாமுனிகள் “இப்படி தனியாக வணங்கக்கூடாது. எம்பெருமானிடத்திலோ ஆசார்யனிடத்திலோ ஸ்ரீவைஷ்ணவர்கள் தனியே செல்லக் கூடாது” என்று கூறி, எப்போதும் மற்ற அடியாரோடு கூடி இருந்தே குளிர்தல் வேண்டுமென அறிவுறுத்தினார்.

“அழகிய மணவாளப் பெருமாள், அழகிய மணவாள மாமுனிகள், ரம்யாஜாமாத்ரூ முனி, காந்தோ பயந்த்ரு முனி, ரம்யாஜாமாத்ரூ யோகி, வரவரமுனி, யதீந்த்ர ப்ரவணர், இராமாநுசர் பொன்னடி, ஸௌம்ய ஜாமாத்ரூ யோகீந்த்ரர், பெரிய ஜீயர், ஸுந்தர ஜாமாத்ரு முனி” எனப் பல திருநாமங்களால் கொண்டாடப்பட்ட மாமுனிகள் தொடர்ந்து வைணவத்திற்காக உழைத்துக் கொண்டே இருந்தார்.

அவருடைய அந்திமக்காலம். மணவாள மாமுனிகள் வயதின் முதுமையால் பட்டுத் தலையணையின் மேல் சற்றே சாய்ந்த வண்ணம், விளக்கின் ஒளியில், மிகவும் சிரமப்பட்டு ஆசாரிய இருதய வியாக்யானத்தை ஓலையில் எழுதிக் கொண்டிருக்கிறார். அவரது சீடரான கந்தாடை அண்ணன் வருகிறார். “சுவாமி! இந்த நிலையிலும் மிகவும் சிரமப்பட்டு எழுத வேண்டுமா?” மணவாள மாமுனிகள் (சற்றே புன்னகை செய்து) அவருக்குப் பதில் சொல்கிறார். “என்ன செய்வது? எம்பெருமானார் இடைவிடாது கட்டிக்காத்த இந்த தரிசனத்தை நாம் விட்டு விட முடியுமா? குறைவில்லாத் தத்துவத்தை நிறைவாகக் கொண்டு செல்லும் பொறுப்பு நமக்கு இருக்கிறதே! உடல் சிரத்தையைப் பார்த்தால் எதிர் காலச் சந்ததியினருக்கு இந்த நிதியை யார் காட்டிக் கொடுப்பது?”

இப்படிச் சொன்ன அவர் தமக்கு முக்திப் பேற்றினை அருள அரங்கனிடம் வேண்டுகின்றார். “எந்தை திருவாய்மொழிப்பிள்ளை இன்னருளால், பொன்னான எதிராசரின் திருவடித் தொடர்பு பெற்றேன். அந்தத் திருவடிகளைக் காண ஆவல் கொண்டுள்ளேன். அதற்கு எம்மை அவரிடம் சேர்ப்பித்தருள வேண்டும்” என்று விண்ணப்பிக்க அரங்கனும் ஏற்றுக் கொள்கின்றான்.

அடியார்களின் கோரிக்கைக்கு இணங்க, தனது அர்ச்சாரூப விக்ரகம் தந்து விடை பெறுகிறார். மாமுனிகள் அடிக்கடி உயர்ந்த பல கருத்துக்களை அடியார்களுக்குச் சொல்லிக் கொண்டேயிருப்பார். எது தொண்டு எது பாவம் என்பதற்கு மாமுனிகள் கொடுத்த விளக்கம் இது. “ஸ்ரீவைஷ்ணவர்களை வணங்குவதும் உதவுவதும் உயர்ந்த தொண்டு. அவர்களைப் பழிப்பது கொடூரமான பாவம்.” வாக்காலும், நோக்காலும், வண்ணத்தாலும், எண்ணத்தாலும் வாழ்ந்த உன்னதமான ஆசார்யனுக்கு கிடைத்த பெருமை என்ன தெரியுமா? அவரை தமது குருவாக பெரிய பெருமாளே (திருவரங்கனே) வரித்து தனது ‘சேஷ பர்யங்கத்தைச் (ஆதிசேஷ பீடத்தை)’ சமர்ப்பித்தார். இன்றும் மணவாள மாமுனிகள் சேஷ பீடத்திலேயே எழுந்தருளி இருப்பதை நாம் சேவிக்கலாம். 

மணவாள மாமுனிகள் திருவடிகளே சரணம்.

வாழ்க்கை நெறிகள் வளரும்.....

நன்றி - சப்தகிரி நவம்பர் 2019

நன்றி - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி, புவனகிரி +919443439963

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக