செவ்வாய், 5 மே, 2020

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி – 26 – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஸ்லோகம் – 14 – பகுதி - 2

மோக்ஷம் போவது முக்கியமே தவிர சிஷ்யனாயிருந்து போனேனா ஆசார்யனாய் இருந்து போனேனா என்பது முக்கியமல்ல என்றார் உடையவர். இப்படிச் சொன்னார் என்றால் அந்தக் கூரத்தாழ்வானுக்கு எவ்வளவு பெருமை இருக்கணும்.

மஹா குண தேஸிகாக்ர்ய கூராதிநாத - அளவிறந்த கல்யாண குணங்களை உடையவராய், ஆசார்யர்களுக்குள் மிகவும் முக்கியமானவரான கூரத்தாழ்வான்.

கதித அகிலநைச்ய பாத்ரம் – அந்தக் கூரத்தாழ்வான் கூறியிருக்கிற நீசத்தன்மை, அடியேன் எவ்வளவு நீசன் என்று அவர் கூறிக்கொள்கிறார். அந்த நீசமான தன்மை, வரதராஜஸ்தவத்தில் அவரே சொல்லியிருக்கிறார். அவர் என்ன என்ன குற்றங்கள் தனக்கு உண்டு என்று சொல்லியிருக்கிறாரோ அது எதுவும் அவருடையது அல்ல என்று சொல்லுகிறார் மணவாள மாமுனிகள். பின்ன யாருடையது என்றால்,

ஏஷ: அஹமேவ - (எனக்காகத்தான் பாடியுள்ளார்) எல்லாவித நீசத்தன்மைக்கும் கொள்கலமானவன் அடியேனொருவனே ஆவேன். எனக்குப் பாடத் தெரியாது என்று தெரிந்ததால் அவரே எனக்காகப் பாடிப் போந்தார். உலகில் தேடிதேடிப் பார்த்தாகிவிட்டது. ஆளவந்தார், “தான் நீசன்” என்று சொல்லிக் கொண்டார். கூரத்தாழ்வான், தான் நீசன் என்று பலது சொல்லிக் கொண்டார். பட்டரும் அவ்வாறே. சொல்லிக் கொண்டார். நான் கடைசியாய் பிறந்தேன். கடைசியாய்ப் பிறந்த பிள்ளைக்கு எல்லா சொத்தும் சேரும். அவா சொன்ன நீசத்தனமாகிய சொத்து அனைத்தும் என்னிடம் வந்து சேர்ந்துவிட்டது. லோகத்தில் தாழ்ந்தவராக எனக்கு நிகராக மற்றொருவர் இல்லை.

ந புந: ஜகத தத் ஈத்ருஸ: - என்னை மாதிரி இன்னொருத்தனை இந்த உலகில் கண்டு பிடித்துவிடவே முடியாது. எனக்கு நிகர் நானே. பகவானுக்கு அடுத்து நான் ஒரு பெயர் வாங்கியிருக்கிறேன். தன்னிகரற்றவன். அவர் தன்னிகரற்றவர் குணங்களில். நான் தன்னிகறற்றவன் தோஷங்களில்.

ராமாநுஜார்ய கருணைவ து மத்கதிஸ்தே ஹேது – கருணைபுரியும் விஷயத்தில் நிகரற்ற தேவரீருடைய கருணையே அடியேனுக்கு உய்வு பெறுவிக்கும் உபாயமாகிறது. வேறு கிடையாது என்று ஸ்வாமி ஸாதிக்கிறார்.


கூரத்தாழ்வான் பெருமை

வாசாமஹோசர – அப்படி கூரத்தாழ்வானுக்கு என்ன புகழ் என்றால்., வித்யா, தனம், ஆபிஜாத்யம் எல்லாவற்றிலும் ரொம்ப உயர்ந்தவர். பிறப்பால் உயர்ந்தவர். ஹாரீத குல திலகர். படிப்பால் உயர்ந்தவர். போதாயன வ்ருத்தி க்ரந்தத்தை நாலே நாள் பார்த்துவிட்டு ச, து விடாமல் ராமானுஜரிடம் அப்படியே மொத்தத்தையும் திருப்பி ஒப்புவித்தவர். அப்படி ஒரு வித்யா மஹாத்ம்யம். அவர்தான் ஸ்ரீபாஷ்யத்தையே எழுதியவர். ராமானுஜர் சொல்லிக் கொண்டேயிருக்க பட்டோலைக் கொண்டவர் ஸ்வாமி. போதாயன வ்ருத்தி க்ரந்த வாக்யங்களைச் சேர்த்து, சேர்த்து எழுதியிருக்கிறார் என்றால் பெரிய பண்டிதர். ஸம்ஸ்க்ருத ஸ்லோகங்களில் புது புது சொற்களெல்லாம் அவரால் கண்டுபிடிக்க முடியும். அந்த அளவுக்கு பாணினி, பதஞ்சலி அளவுக்கு அவருக்கு ஏற்றம். நடமாடும் பாணினி என்று சொல்வார்கள். 

பணத்திலும் குறைவில்லை. ஒவ்வொரு நாளும் இரவு 10.30 மணி வரைக்கும் ததியாராதனை போடுவாராம். 10.30 மணிக்கு அவர் கதவைப் பூட்டும் போது அதில் உள்ள வெங்கல மணிகளின் ஓசை காஞ்சீபுரம் கோயில் பெருந்தேவித்தாயார் காதில் ஒலித்ததாம். கூரத்திற்கும் காஞ்சீபுரத்திற்கும் தூரம் 10 மைல். அத்தனை தூரம் போய் ஒலித்துள்ளது. தாயார் தேவப் பெருமாளிடம் கேட்கிறார். நம்மளே கதவை 7.45 க்கு சாத்திவிட்டோமே. இவ்வளவு பெரிய கதவு சாத்துகிற சத்தம் கேட்கிறதே என்று ஸாதித்தார். பெருமாள் சொல்கிறாராம், “அவர் ரொம்ப பெரிய தனிகர் தேவி, நாம் எல்லாம் அவரோட போட்டிபோட முடியாது. நமக்கு ஏதோ ஒரு கோயில் இருக்கிறது. அவர் பெரிய தனிகர். தினந்தோறும் ஆயிரம் பேருக்குத் ததியாராதனம் போடுவாராம்” என்று பேசிக்கொண்டிருந்தனர். 

இவர்கள் பேசினார்கள் என்பது மறு நாள் திருக்கச்சி நம்பிக்குத் தேரிந்தது. அவர் பெருமாளுக்குத் திருவாலவட்ட கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். இந்த செய்தியை அவர் கூரத்தாழ்வானிடம் போய், “உம்மைப் பற்றி பெருமாள் பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தார்” என்று சொல்லிவிட்டார். இந்தச் செய்தி காதில் விழுந்ததோ இல்லையோ உடனே கூரத்தாழ்வான் தவியாய் தவித்து துடித்தார் கூரத்தாழ்வான். “தன்னுடைய, ஞானத்தைப் பற்றியோ, பக்தியைப் பற்றியோ, ஆசார்யப் ப்ரேமத்தைப் பற்றியோ பேசி இருந்தால் சந்தோஷப் பட்டிருப்பேன். எப்ப என் சொத்தைப் பற்றிப் பேசி இருக்கிறாரோ, என்னைக் கைவிட முடிவு பண்ணிவிட்டார் என்று அர்த்தம்” என்றார் ஆழ்வான்.

அன்றைக்கே எல்லாவற்றையும் துறந்தார். தன் திருத்தேவியரான ஆண்டாளைக் கைபிடித்துக் கொண்டார். நேரே ராமானுஜர் திருவடியைப்பற்றினார் என்பது சரித்திரம். செய்தியை நன்றாகப் புரிந்துகொண்டார். எந்த நிமிஷம் இவரது செல்வத்தைப் பற்றி பெருமாள் பேசிவிட்டாரோ கைவிடப் போகிறார் என்று அர்த்தம். அதைவிட்டு குணகாரர் என்று பேசியிருந்தால் கண்டிப்பாக ஏத்துக்கப் போறார் என்று அர்த்தம். இந்தப் பெருமை உடையவர்தான் கூரத்தாழ்வார். அவர் தன்னைப் பற்றி என்ன சொல்லிக் கொள்கிறார். 

ஆனா “வித்யா ஜனாபி ஜனஜன்மம் அதேந காமக்ரோதாதிபிஸ் சஹதிதீர்ண .. ப்ரயாமி” பஞ்சஸ்தவம் ஆச்சர்யமாகப் பாடியிருக்கிறார். இந்த வித்யா, காம, க்ரோதம், பணம், அபிஜனம் இவையெல்லாம் என்னைப் படுத்துகிறபாடு தாங்கவில்லை மதம் பிடித்து அலைகிறேன் என்கிறார். ‘ஆத்யம் யதீந்த்ரஸிஷ்யாணாம் அக்ர்யம் வேதாந்தவேதிநாம்’ (யதிராஜருடைய ஸிஷ்யர்களில் முதல்வரும், வேதாந்தமறிந்தவர்களில் முக்யமானவருமான கூரத்தாழ்வானை த்யானிக்கிறோம் என்ற ஸ்லோகம் நினைக்கத்தக்கது) ஒரு மதம்கூட அவருக்கில்லை. முக்குறும்பு அறுத்தவர். ஆனால் காமக் க்ரோதத்தில் இருந்து மீளவே இல்லை என ஸாதிக்கிறார். 

கூராதிநாதகதிதாகிலநைச்யபாத்ரம் - தேவரீரிடம் ஞானம் சக்தி எல்லாம் பூரணமாக இருக்கிறது. என்னிடத்தில் பாபம் நிறைய இருக்கிறது. என்பாபம் ஜயிக்கப் போகிறதா, பகவானே உம் கருணை ஜயிக்கப்போகிறதா? அடியேனுக்கு ஒரு பிரார்த்தனை. நீர் ஜயித்தா பரவாயில்லை. நீ ஜயித்தால்தான் நான் ஜயிக்க முடியும். நீர் ஜயித்துவிட்டால் என் பாபம் தொலைந்து விட்டது. மறுபடி பிறக்கமாட்டேன் என்று அர்த்தம். இப்படி எல்லாம் ஏமாற்றித்தான் பெருமாளிடம் நாம் வாங்கிக் கொண்டிருக்கிறோம். 

ஏஷோஹமேவ ந புநர்ஜகதீத்ருஷஸ்தத் – இப்படிப்பட்ட தாழ்ந்தவன் இன்னொருத்தன் இல்லை. மறுபடி பிறக்கப் போவதுமில்லை. “எனைப் போல் பிழை செய்வாருண்டோ. உனைப் போல் பொறுக்க வல்லாருண்டோ.” ஆர்த்திப் பிரபந்தத்தில் மணவாள மாமுனிகள் பிரார்த்திக்கிறார். எனைப் போல பிழை செய்வார் யாருமில்லை. உனைப் போல பொறுக்க வல்லார் யாருமில்லை. பகவானும் பக்தனும் ஏற்ற ஜோடியாகி விட்டனர். உமது பொறுமைக்குத் தக்கபடி தேடிக் கொண்டிருக்கிறீர். நீர் தேடவே வேண்டாம். அடியேன் இருக்கிறேன் பாபக் குவியலோடு. பிழை செய்வார் யார் என்று கேட்டால் என்னை கைகாட்டிவிடுவர். நேர என்னிடம் வந்துவிடலாம். 

ந சேத் ராமானுஜேத் யேஷா சதுரா சதுரக்ஷரீ
காமவஸ்தாம் ப்ரபந்த்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருஸ:
புண்யாம்போஜ விகாசாய பாபாத்வாந்த க்ஷயாய ச ।

ஸ்ரீமான் ஆவீரபூத் பூமௌ ராமானுஜ திவாகர:
த்ரூணிக்ருத விருஞ்சாதி நிரங்குச விபூதய:
ராமானுஜ பதாம்போஜ சமாஶ்ரயண சாலிந:।

ராமானுஜ என்ற திருநாமத்தைச் சொன்னாலே பகவான் நாராயணன் உடனே மோக்ஷம் கொடுத்துவிடுகிறாராமே. ஆர்யனாக வேறு இருக்கிறீர். அப்ப புலன்களை அடக்கியவர் விஷயாந்தர ப்ராவண்யங்களைப் போக்கி எனக்கு நன்மையே செய்யத்தக்கவர். அதானால் உம்மிடம் பிரார்த்திக்கிறேன். கூரத்தாழ்வான் எப்படிச் சொல்லி ப்ரார்த்திதாரோ அதன் படிக்குப் பிரார்த்தித்தார்.

வாசாமகோசரமஹாகுணதேஸிகாக்ர்ய 
கூராதிநாதகதிதாகிலநைச்யபாத்ரம் |
ஏஷோஹமேவ ந புநர்ஜகதீத்ருஷஸ்தத் 
ராமாநுஜார்ய கருணைவ து மத்கதிஸ்தே 14

14 வது ஸ்லோகம் முற்றிற்று.

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் காலக்ஷேபத்திலிருந்து தொகுத்து தட்டச்சு செய்தவர்,
திருமலை ராமானுஜதாஸன், +919443795772 

நன்றிகள் ஸ்வாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக